Writer✍️
- Joined
- Sep 18, 2024
- Messages
- 370
- Reaction score
- 566
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 10
நவநீதமணி-மோகனசுந்தரம் இருவரும் காதல் திருமணம் செய்தவர்கள்.அதனால் இரண்டு குடும்பத்திலும் அவர்களை சேர்த்துக்கொள்ளவில்லை. திருமணம் முடிந்ததும் சென்னையில் போய் புது வாழ்க்கை தொடங்கினார்கள் அவர்கள்.
நவநீத மணிக்கு ஒரே அண்ணன் சேவகப்பெருமாள்.அவர்களின் பூர்வீகம் தேனி மாவட்டம் ஆகும்.காலங்காலமாக தந்தையின் வழியில் மத்திய அரசில் ஏதாவதொரு அமைச்சர் பதவியில் இடம் பிடித்துக் கொள்வார்கள். நவ நீதமணியின் தந்தை கூட அப்படி தான்.மத்திய அமைச்சருக்கு சேலம்,ஏற்காடு,சென்னை,மும்பை என்று நாடு முழுவதும் சொத்துக்கள் இல்லாத இடமே இல்லை.
மகள் நவநீதம் ஒரு சாதாரண போஸ் மாஸ்டரான மோகனசுந்தரத்துடன் ஓடி போனதும் இருவரையும் தேடி பிடித்து கொலை செய்ய பார்த்தார்கள்.அதனால் அடிதடி, போலீஸ் கேஸ் என்று பல குளறுபடிகள் நடந்து முடிந்தது.கணவனுடன் தான் போவேன் என்று நவநீதம் உறுதியாக நின்று காரியம் சாதித்துக் கொண்டார்.
இதனால் தன் சொத்தை எல்லாம் மகன் சேவகப் பெருமாளுக்கு எழுதி வைத்துவிட்டார் பெற்றவர்.அத்துடன் மோகன சுந்தரத்தின் போஸ்ட் மாஸ்டர் வேலையை கூட பறித்து விட்டார்கள்.ஆனால் தளர்ந்து போகாமல் தனியார் கம்பெனியில் வேறு வேலை தேடிக்கொண்டார் மோகனசுந்தரம்.
ஆனாலும் இன்று வரை பெற்றவரின் தொந்தரவு நவநீத மணியை துரத்திக் கொண்டு தான் இருக்கிறது.அப்படி தான் சேவகப் பெருமாள் பல வருடம் வேலை பார்த்து வந்த எக்ஸ்போர்ட் கம்பெனியில் இருந்த வேலையும் இல்லாமல் போயிருந்தது.
உறவினரான சுந்தரம் தான் சேலத்தில் இருக்கும் தோட்டத்தை பார்த்துக் கொண்டு வேலை தேடி கொள் என்று இங்கு அனுப்பி வைத்து உதவி செய்தார்.இப்படி தான் நவநீதம் குடும்பத்தினர் இப்போது சேலம் வந்து சேர்ந்திருக்கிறார்கள்.
காலங்கள் வேகமாக உருண்டோடியது. புரட்டாசி மாதம் பெருமாளுக்கு தளிகை போடும் போதெல்லாம் அன்னக்கொடியின் குடும்பம் ராஜன் வீட்டுக்கு வந்துவிடும்.நவநீதமும் தேனாம்பாளும் நல்ல நட்புடன் பழக,சண்முகம் கொஞ்சம் தள்ளி தான் நிற்பார்.ஆனால் அவரையும் விடாமல் அண்ணாச்சி என்று தங்களுடன் சேர்ந்துக் கொள்வார் நவநீதம்.
“உன் ரெண்டு பொண்ணுகளையும் என் ரெண்டு பசங்களுக்கு கட்டி கொடுத்துடு தேனாம்பாள்….”என்று வேடிக்கையாக கோரிக்கை வைத்தார் நவநீதம்.
“அச்சச்சோ…..பூங்கொடியை சரவணனுக்கு கொடுக்கிறதா அண்ணனுக்கு வாக்கு கொடுத்திருக்கோம் நவநீதம்.வேணும்னா அன்னத்தை உங்க வீட்டு மருமகள் ஆக்கிக்கோ….” என்று சிரித்தபடி பதில் சொன்னார் தேனாம்பாள்.
“அதுவும் சரிதான்…. அன்னத்தோட வாயை சமாளிக்க சின்னவன் ராஜன் தான் சரியா வருவான்…..”என்று அம்மா சொல்வதை தள்ளி நின்று கேட்டுக்கொண்டிருந்தான் ராஜன்.அவன் பார்வை வயிறு முட்ட சர்க்கரை பொங்கலை உண்டு விட்டு தங்கள் வீட்டு ஹாலில் தூங்கிக்கொண்டிருந்த அன்னக்கொடியை தான் சுற்றி வந்தது.
அவன் இப்போது பத்தாவது எழுதிவிட்டு ரிசல்ட் வரும் வரைக்கும் கம்ப்யூட்டர் கிளாஸ் போகிறான்.தியாகு,பூங்கொடி,சரவணன் மூவரும் காலேஜ் போகிறார்கள்.
இப்படி இருக்கையில் பதின்மூன்று வயதான அன்னக்கொடி ஒரு நாள் காலையில் பூப்பெய்திவிட்டாள். சுற்றியுள்ள பெண் குழந்தைகள் எல்லாம் பதினோரு வயதில் வயதுக்கு வந்திருக்க தன் பெண்ணுக்கு மட்டும் இன்னும் ஒரு நல்லது நடக்கவில்லை என்று தவித்து போயிருந்தார் தேனாம்பாள்.அன்னையின் மனக்குறையை போக்குவது போல அந்த வருடம் உட்கார்ந்து விட்டாள் அன்னம்.
பதினாறாம் நாள் சின்னதாக சடங்குக்கு ஏற்பாடு செய்துவிட்டார் பெண்ணை பெற்றவர்.
“என்னடி அன்னம் புடவை கட்டினதும் காலேஜ் படிக்கிற பொண்ணு போல இருக்க….”என்று தங்கையின் அழகை ஆச்சரியத்துடன் பார்த்தாள் அக்கா பூங்கொடி.
“போக்கா….நானே வெளிய போகவிடாமல் வீட்டுக்குள்ள புடிச்சு வச்சிருக்காங்க என்று எரிச்சல்ல இருக்கேன்….”
பேத்தியின் சடங்குக்கு தாத்தாவும் பாட்டியும் பெங்களூரில் இருந்து சேலம் வந்திருந்தார்கள்.இத்தனை காலம் கழித்து மகன் வீட்டுக்கு இப்போது தான் முதன் முதலில் வந்திருக்கிறார்கள் பெரியவர்கள்.
வந்தவர்கள் மூத்தவள் பூங்கொடியிடம் தள்ளி தான் நின்றார்கள்.அவளும் அதை சரியாக புரிந்து கொண்டு தங்கையின் அருகில் மட்டும் இருந்து கொண்டாள்.
சண்முகம் பிறந்து வளர்ந்தது எல்லாம் பெங்களூரில் தான்.அண்ணன் திருமணத்தின் போது ஏற்பட்ட குழப்பத்தில் பெற்றவர்களிடம் கோபித்துக்கொண்டு சேலத்தில் வந்து தங்கிவிட்டார்.
சண்முகத்துக்கு ஒரே அண்ணன் திருமுருகன்.பெங்களூரில் மூன்று சூப்பர் மார்க்கெட் அவர்களுக்கு சொந்தமாக இருந்தது அப்போது. பணத்துக்கு எப்போதும் குறைவில்லை. அப்படியிருக்கும் போது வீட்டில் டிரைவர் வேலை பார்த்தவரின் மகளை காதலித்து திருமணம் செய்து கொண்டார் திருமுருகன்.பெற்றவர்களுக்கு பயந்து காதலியுடன் மும்பைக்கு ஓடி போய் விட்டார் அவர்.அவ்வப்போது தம்பியிடம் மட்டும் போனில் பேசிக் கொள்வார் அண்ணன் .
அப்படியிருக்கும் போது ஒருநாள் மனைவியின் பிரசவத்திற்கு ஹாஸ்பிட்டல் வந்திருப்பதாக சண்முகத்துக்கு கூப்பிட்டு சொன்னார் திருமுருகன்.யார் துணையும் இல்லாமல் பிரசவத்தை நினைத்தது கலக்கத்துடன் பேசினார் திருமுருகன்.
அண்ணின் வருத்தத்தை கண்டு மும்பைக்கு கிளம்பினார் சண்முகம்.போக வேண்டாம் என்ற பெற்றவர்களின் எதிர்ப்பையும் மீறி அண்ணனை காண புறப்பட்டு போனார் அவர்.ஹாஸ்பிட்டல் வந்து சேரும் போது சில மணித்தியாலங்களுக்கு முன்பு தான் பெண் குழந்தை பிறந்திருப்பதாக சொல்லி குழந்தையை தூக்கி கொண்டு வந்து காட்டினார் திருமுருகன்.
பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலில் மனைவியை இன்னும் கண்ணில் காட்டவில்லை என்று உடைந்து போயிருந்தார் திருமுருகன்.அண்ணிக்காக கடவுளை வேண்டியபடி குழந்தையை கையில் வைத்திருந்தார் சண்முகம்.
அப்போது நர்ஸ் வந்து மருந்து வாங்கி வர சொல்லவும் குழந்தையை கொடுத்துவிட்டு வெளியே வந்தார் சண்முகம்.அவருக்கு அப்போது வயது இருபத்தைந்து. எம்பிஏ படிப்பை முடித்து விட்டு தந்தையின் சூப்பர் மார்க்கெட்டை பார்த்துக்கொண்டிருந்தார்.அண்ணனுக்கு கொடுக்கவென்று வீட்டிலிருந்து யாருக்கும் தெரியாமல் ஒரு தொகை பணத்தையும் எடுத்துக் கொண்டு வந்திருந்தார்.
மருந்துடன் திரும்பி வந்த சண்முகம் கண்டது ஹாஸ்பிடல் காரிடார் சுவரில் ஓய்ந்து போய் சாய்ந்திருந்த அண்ணனை தான்.பதறிப்போய் வேகமாக கிட்ட வந்தார்.
“இவரோட வைஃப் பிரசவத்துல ஏதோ சிக்கலாகி தவறிட்டாங்க.விஷயம் தெரிந்ததும் அப்படியே உட்காந்துட்டார்….” என்றார் அங்கிருந்த நர்ஸ்.
அண்ணன் அருகில் வந்து அவரை தொட்டதும் உயிரற்ற கூடாய்தரையில் சரிந்து விழுந்து கிடந்தார் திருமுருகன்.
அண்ணனும் அண்ணியும் ஒரே நேரம் உயிரை விட்டிருக்க, பிறந்திருந்த பச்சை குழந்தையை பார்த்தபடி பெருங்குரலெடுத்து கதறி அழுதார் சண்முகம்.திருமணமாகி அண்ணனையும் மனைவியையும் ஒரு நாளும் ஜோடியாக காணவில்லை அவர்.இருவரின் இறந்த உடல்களை ஒன்றாக கண்டதும் பித்து பிடித்தது போல ஆனது அவருக்கு.
அண்ணனின் மனைவியாவதற்கு முன் சுமித்ராவை இரண்டு தடவைகள் ஊரில் பார்த்திருக்கிறார். அவ்வளவு தான் அவரை பற்றி தெரியும். தனியாக வாழ ஆரம்பித்து ஒரு வருடம் ஆவதற்கு முன் ஒன்றாக இந்த உலகை விட்டு போயிருந்தார்கள் இருவரும்.
மும்பை ஹாஸ்பிட்டலில் சேலத்தை சேர்ந்த ஒருவர் வேலை பார்த்தார்.அவரின் உதவியுடன் குழந்தையை பார்த்துக் கொள்ள ஆயாவை ஏற்பாடு செய்து,இறந்த இருவருக்கும் இறுதி சடங்குகளை முடித்,து பத்து நாட்களில் குழந்தையை தூக்கிக்கொண்டு பெங்களூருக்கு வந்து சேர்ந்தார் சண்முகம்.
பிறந்த குழந்தையை திரும்பியும் பாராது சண்டைக்கு வந்துவிட்டார்கள் பெற்றவர்கள்.இந்த குழந்தையை ஏன் கொண்டு வந்தாய் என்று ஆடி தீர்த்துவிட்டார்கள்.பெற்றவர்களுக்கு செய்த துரோகம் தான் திருமுருகன் உயிரை குடித்து விட்டது என்பது தான் அவர்களின் வாதம்.
பத்து லட்சத்துக்கு செக் எழுதி மகனிடம் கொடுத்து குழந்தையை கொண்டு போய் ஏதாவது ஆசிரமத்தில் சேர்த்து விடு என்று சொல்லி கதவை பூட்டிக் கொண்டார் பெற்றவர்.
தனக்காக இல்லாவிட்டாலும் இந்த குழந்தையை வளர்க்க பணம் தேவை என்று செக்கை எடுத்துக் கொண்டு பிறந்த ஊரை விட்டு கிளம்பிய சண்முகம் வந்து நின்றது சேலத்தில் தான்.மும்பை ஹாஸ்பிட்டலில் அவருக்கு உதவியது மனைவி தேனாம்பாளின் சொந்த அண்ணன் தான்.அவரின் உதவியுடன் தான் பிள்ளையுடன் தனியாக சேலத்துக்கு துணித்து வந்தார்.
இருபத்தைந்து வயதில் திருமணம் செய்யாமல் கையில் குழந்தையுடன் இருந்தவருக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை.முதலில் வாடகைக்கு வீடு பார்த்து குடியேறி,குழந்தையை பார்த்துக் கொள்ள ஒரு பெண்ணை ஏற்பாடு செய்து கொண்டார். குழந்தைக்கு ஒரு வயது முடிந்ததும் ஒரு சிறிய மளிகை கடையும் திறந்து கொண்டார்.
காலங்கள் உருண்டோட நான்கு வயது பூங்கொடியை மடியில் வைத்துக் கொண்டு தேனாம்பாள் கழுத்தில் தாலி கட்டி மனைவி ஆக்கிக்கொண்டார் சண்முகம்.
பூங்கொடியை பற்றி அண்ணன் சொல்லி தெரிந்து கொண்ட தேனாம்பாள் அவளை கண்ணும் கருத்துமாகப் பார்த்துக் கொண்டார்.
இயல்பிலேயே நல்ல குணம் கொண்ட தேனாம்பாள் கணவனையும், சின்ன பெண்ணையும் தன் பால் ஈர்த்துக்கொண்டார் என்பது தான் உண்மை.இப்படி தான் அந்த வீட்டின் மூத்த பெண் என்று ஆனாள் பூங்கொடி.
அன்னக்கொடியின் சடங்கு வீட்டில் எல்லா வேலைகளையும் இழுத்து போட்டுக்கொண்டு செய்து முடித்தார்கள் ராஜன் குடும்பத்தினர்.இதனால் இரண்டு குடும்பங்களும் இன்னும் உறவினர்கள் போல நெருங்கி விட்டார்கள்.
எல்லோரும் வரதராஜனை ராஜன் என்று அழைக்க, அன்னக்கொடி மட்டும் வரதன்,வரதா என்று தன் இஷ்டப்படி கூப்பிட்டு கொள்ளுவாள். அதை மறுத்து யாரும் எதுவும் சொல்வதில்லை.அன்னக்கொடி தன்னை புதிதாக இப்படி ஒரு பெயர் சொல்லி அழைப்பதை மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொண்டான் வரதராஜன்.
தொடரும்......
Last edited:
Previous thread
Next thread





























