இரண்டு படுக்கை இருக்கும் சீட் அது. ஜன்னல் பக்கமாக அமர்ந்த யுவஸ்ரீ கால் நீட்டி சாய்ந்து அமர்ந்து கொண்டாள். சூர்யாவும் அவள் அருகில் சாய்ந்து அமர்ந்தவன் தன் கைபேசியை எடுத்து நோண்ட ஆரம்பித்தான்.
‘இவனுக்குப் பொண்டாட்டின்னு ஒருத்தி பக்கத்தில் இருப்பதே மறந்து போயிடும். எப்போ பார் போனை நோண்டிக்கிட்டு…’ என்று மனதிற்குள் சலித்துக் கொண்டவள், ஜன்னல் வழியாக வெளியே வேடிக்கை பார்க்க ஆரம்பித்தாள்.
பேருந்து கிளம்ப ஆரம்பித்ததும், ஜன்னல் ஸ்கிரீனை இழுத்து விட்டு மூடினாள்.
சூர்யாவின் பக்கம் ஏற்கெனவே அவன் மூடியிருந்தான் என்பதால் அந்தப் பக்கம் இருந்து அவர்களைப் பார்க்க முடியாது.
“படுப்போமாங்க? உட்கார்ந்து வருவது ரொம்பக் குலுங்குது…” என்றாள்.
“நீ படு! நான் என் ஃபிரண்ட்ஸ் கூடச் சேட் பண்ணிட்டு இருக்கேன். டிஸ்டர்ப் பண்ணாதே!” என்றான்.
அவனை முறைத்துப் பார்த்தவள், ‘உன்னை இன்னைக்கு என்ன பண்றேன் பார். இப்ப உன்னை என் பக்கம் திரும்ப வைக்கிறேன்!’ என்று நினைத்துக் கொண்டவள் படுத்துக் கொண்டாள்.
“ஏய்! என்னடி?” என்று வியப்பாகக் கேட்டான்.
பின்னே அவன் மடியில் அல்லவா தலை வைத்து படுத்திருந்தாள். அதோடு இல்லாமல் அவன் வயிற்றில் முகத்தை வைத்து அழுத்தி அவன் இடுப்பை சுற்றி கையையும் போட்டு அணைத்து கொண்டாள்.
எப்போதும் அவளாக அப்படிப் படுத்ததே இல்லை. அவன் தான் தன் தேவைக்கு அவளிடம் நெருக்கத்தைக் காட்டுவான்.
அவன் அதற்கு மட்டும் தன்னிடம் வருகிறானோ? என்ற நினைப்பில் அவளால் கணவனிடம் இயல்பாக ஒன்ற முடியாது. ஆனால் இன்றோ கோவிலில் நடந்தது அவனிடம் இணக்கமாக இருக்கச் சொல்லி அவளைத் தூண்டி விட்டது.
“என்னடி, என்னைக்கும் இல்லாத அதிசயமா இருக்கு?” என்று கேட்டான்.
“ஒரு அதிசயமும் இல்லை. நான் ஒன்னும் உங்களை டிஸ்டெப் பண்ணலை. நீங்க உங்க ஃபிரண்ட்ஸ் கூடச் சேட் பண்ணுங்க…” அவனின் வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கொண்டே முனங்கினாள்.
அவள் அப்படிப் பேசியது அவனுக்கு வயிற்றில் குறுகுறுப்பூட்டியது.
“கூசுதுடி…” என்றவன் மேனி சிலிர்த்துப் போனது.
கணவனின் மடியில் தலை வைத்துப் படுத்திருப்பது அவளுக்கும் இதமாக இருக்க, அவளின் மேனியும் புதுவித உணர்வில் சிலிர்த்துக் கொண்டு தான் இருந்தது.
***
“இன்னைக்குப் பத்து மணிக்கு மீட்டிங் இருக்குன்னு தெரியுமா, தெரியாதா?” என்று கடுமையாகக் கேட்டான்.
“தெரியும்…” என்றாள்.
“அப்புறம் ஏன் லேட்?”
“கிளம்பும் போது வண்டி பஞ்சர் ஆயிடுச்சு. அதனால் ஆட்டோ பிடிச்சிட்டு வர நேரம் ஆகிடுச்சு…” என்றாள்.
“ஸ்கூல் பிள்ளைங்க மாதிரி காரணம் சொல்ல இது ஒன்னும் ஸ்கூல் இல்ல…” என்றான் முறைப்பாக.
“ஸாரி, இனி இப்படி நடக்காது. கரெக்ட் டைமுக்கு வர முயற்சி செய்றேன்…” என்றாள் மெதுவான குரலில்.
அவளுக்குப் பேச கூட வலு இல்லை. பசி ஒரு பக்கம், வயிறு வலி ஒரு பக்கம், தலை சுற்றல் ஒரு பக்கம் என்று மிகவும் சோர்ந்து போயிருந்தாள்.
அவள் முகத்தை ஒரு நொடி கூர்ந்து பார்த்தவன், “போய் வேலையை ஆரம்பிங்க…” என்றான்.
விட்டால் போதும் என்று ஓட வேண்டும் போல் தான் இருந்தது.
ஆனால் வேகமாக நடந்தால் கூட விழுந்து விடுவோம் என்பது போல் ஆகிப் போனவள், தலையை அசைத்து விட்டு மெல்ல திரும்பி நடந்தவள் அடுத்த நொடி தொப்பென்று கீழே விழுந்தாள்.
“ஏய் யுவா, என்னடி?” பதட்டமாக அவளின் அருகில் வந்தான் அவளின் கணவனும், தற்போதைய அவளின் டீம் லீடருமான சூர்யக்கண்ணன்.
தரையில் மயங்கி விழுந்து கிடந்தவளின் அருகில் சென்றவன், அவள் கன்னத்தில் கை வைத்து தட்டி, “யுவா, எழுந்திரு. என்னாச்சு உனக்கு?” என்று கேட்டான்.
மயங்கி கிடந்தவள் என்னவென்று பதில் சொல்வாளாம்?
சில நொடிகள் அவள் கன்னத்தைத் தட்டியவன், அப்போது தான் ஞாபகம் வந்தவன் போல், வேகமாக மேஜை மீதிருந்த ஒரு வாட்டர் பாட்டிலை திறந்து தண்ணீரை அவள் முகத்தில் தெளித்தான்.
தண்ணீர் பட்டதும் விழிகளை மலர்த்தினாள் யுவஸ்ரீ.
கண்ணுக்கு முன் தெரிந்த கணவனின் முகத்தைப் பார்த்தவள், புரியாத பாவனையில் எழுந்து அமர்ந்தாள்.
“என்னாச்சுடி பொண்டாட்டி? ஏன் திடீர்னு மயங்கி விழுந்த?” என்று கவலையான குரலில் கேட்டான்.
நிஜமாகவே அவனிடம் கவலை இருந்ததா என்ன? எனக்காக இவன் கவலை கூடப் படுவானா? என்று தான் அவளின் சிந்தனை போனது.
“ஏய், என்னன்னு சொல்லுடி…” அவள் பதில் சொல்லாமல் ஏதோ யோசித்துக் கொண்டிருக்கவும் லேசாக அதட்டினான்.
“எனக்கு ஒன்னுமில்லை. நான் என் சீட்டுக்குப் போறேன்…” என்று எழுந்தவள் தடுமாறினாள்.
அவளின் கையைப் பிடித்து நிறுத்தியவன், “ஒன்னுமில்லையா? என்னைக்கும் இல்லாம மயங்கி விழுந்திருக்க. இது ஒன்னுமில்லையா? இப்ப என்னன்னு சொல்ல போறீயா இல்லையா? இல்லைனா வா, ஹாஸ்பிட்டல் போகலாம்…” என்றவனை விநோதமாகப் பார்த்தாள்.
“ம்ப்ச், இன்னைக்கு என்ன புதுசா என் மேல் அக்கறை? என்னைப் பார்த்துக்க எனக்குத் தெரியும்…” என்றவள் தன் தோளை பிடித்திருந்த அவனின் கையை விலக்கி விட்டு மேஜையில் இருந்த தண்ணியை எடுத்துக் குடித்தவள், சற்று நிதானத்துடன் மீட்டிங் அறையை விட்டு வெளியேறினாள்.
சென்றவளையே வெறித்துப் பார்த்தான் சூர்யா.
மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
Akila –
எப்பொழுதும் இவருடைய கதைகள்❤️❤️❤️