ஈடில்லா எனதுயிரே!
ஈடில்லா எனதுயிரே! — Preview
பிரபஞ்சன் பாதிச் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, வெளியே ஏதோ சலசலவென்று சப்தம் கேட்டது.
“என்ன சத்தம் அது?” என்று தன்னருகில் இருந்த நந்திதாவிடம் கேட்டான் பிரபஞ்சன்.
“தெரியலையே?” என்று அவள் உதட்டை பிதுக்க,
அப்போது, “அத்தான்…” என்று பதறி அங்கே ஓடி வந்தாள் ராகவர்தினி.
“என்னாச்சு, இவள் ஏன் இப்படி ஓடி வர்றா?” என்று அவன் புரியாமல் பார்த்துக் கொண்டிருந்த போது அவளின் பின் மூன்று பெண் காவலர்கள் வந்து கொண்டிருந்தனர்.
போலீஸ் எதற்கு இங்கே வந்திருக்கிறார்கள் என்பது போல் கேள்வியாகப் பார்த்துக் கொண்டே தன் இருக்கையை விட்டு எழுந்தான் பிரபஞ்சன்.
அவனின் எதிரே வந்த ஒரு பெண் போலீஸ், “நீ தானே பிரபஞ்சன், *** ஸ்கூல் வாத்தியார்?” என்று கேட்டார்.
“ஆமா மேடம். என்னாச்சு? என்ன பிரச்சனை?” என்று கேட்டான்.
“நீ தான் பிரச்சனை. ஏன்யா நீ எல்லாம் ஒரு வாத்தியாரா? பிள்ளைங்க படிக்க வந்தால் படுக்க வாவென்று கூப்பிடுவியோ?” என்று கோபமாக அந்தப் பெண் போலீஸ் கேட்க, பிரபஞ்சன் தன் தலையில் இடி விழுந்தது போல் அவரைப் பார்த்தான்.
நந்திதா அதிர்ந்து அவனையும், போலீஸையும் பார்த்தாள்.
பிரபஞ்சனுக்கு உலகமே இருண்டு போனது போல் இருந்தது. அந்தப் போலீஸ் சொன்னதை நம்ப முடியாமல் உறைந்து போய் நின்றான் பிரபஞ்சன்.
“மேடம், நீங்க ஏதோ தப்பா புரிஞ்சிக்கிட்டு பேசுறீங்கன்னு நினைக்கிறேன். என் அத்தான் அப்படிப்பட்டவர் இல்லை…” என்று பதறி மறுத்தாள் ராகவர்தனி.
“ஏய், நீ யாருமா? எங்களுக்குக் கம்பளைண்ட் வந்திருக்கு. இவன் வாத்தியார் என்ற போர்வையில் அவன் கிட்ட படிக்க வந்த பொண்ணுங்களுக்கு எல்லாம் செக்ஸுவல் டார்ச்சர் கொடுத்திருக்கான். போ அந்தப் பக்கம்…” என்று ராகவர்தினியை விரட்டிய போலீஸ்,
“இந்தா வாத்தி, நீயே போலீஸ் ஸ்டேஷன் வர்றியா? நாங்க இழுத்துட்டு போகவா?” என்று கோபமாகப் பிரபஞ்சனைப் பார்த்து இரைந்தார்.
அவரின் கத்தலில் தான் நினைவு வந்தது போல் தலையைக் குலுக்கி அவரைப் பார்த்தான்.
“மேடம், நான் எந்தத் தவறும் செய்யலை. என்னை நம்புங்க…” என்றான்.
“எங்களுக்கு வந்திருக்கிற ஆதாரத்தை நம்பித்தான் வந்திருக்கோம். கிளம்பு ஸ்டேசனுக்கு என்ன இருந்தாலும் அங்கே எங்க விசாரணையில் வந்து பேசு…” என்று அதட்டினார்.
அவ்வளவு நேரம் அவன் அருகில் நின்றிருந்த நந்திதா சட்டென்று அவனை விட்டு விலகி நின்று அவனை அருவருப்பாகப் பார்த்தாள்.
அதிலேயே அவளின் எண்ணம் புரிந்து அடிபட்டது போல் அவளைப் பார்த்தான் பிரபஞ்சன். அவளின் அருவருப்பு பார்வை அவனைக் கொல்லாமல் கொன்றது.
“மேடம், என் அத்தான் ரொம்ப நல்லவர். அவர் பொண்ணுங்களைத் தவறா கூடப் பார்க்க மாட்டார். அவரை விட்டுடுங்க…” என்று கதறினாள் ராகவர்தினி.
“இப்ப நீ அந்தப் பக்கம் போறீயா இல்லையா?” என்று அதட்டியவர்,
“உன்கிட்ட படிக்கிற பொண்ணுக்கு பாலியல் டார்ச்சர் கொடுத்ததால் உன்னைப் போஸ்கோ சட்டத்தில் அரெஸ்ட் பண்றேன் பிரபஞ்சன். நட, போலீஸ் ஸ்டேஷனுக்கு…” என்று பிரபஞ்சனை அழுத்தமாக அழைத்தார் அந்தப் பெண் காவல்துறை அதிகாரி.
*****
அப்போது தான் வந்து நின்றிருந்த அரசு பேருந்திலிருந்து பள்ளி மாணவ, மாணவிகள் இறங்கிக் கொண்டிருந்தனர்.
ஒருவர் இருவர் அல்ல, பலர்! சொல்லப் போனால் பேருந்து முழுவதுமே மாணவர்கள் தான் நிரம்பி இருந்தனர்.
அவர்கள் உடுத்தியிருந்த பள்ளி சீருடையைக் கண்ட ராகவர்தினி வியந்து போனாள்.
ஏனெனில் அவர்கள் பிரபஞ்சன் வேலை பார்க்கும் பள்ளி மாணவர்கள் உடுத்தும் சீருடை.
இவர்கள் இத்தனை பேர் ஏன் இங்கே வந்திருக்கிறார்கள் என்று அவள் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் காவல் நிலைய வாயிலில் கூடினார்கள்.
முன்னால் நின்ற மாணவர்கள் அவர்களுக்குள் ஏதோ கலந்துரையாடிக் கொண்டிருக்க, பின்னால் வந்த ஒரு மாணவியை அழைத்தாள் ராகவர்தினி.
“நீங்க எல்லாம் ****** அந்த ஸ்கூல் ஸ்டூடண்ட் தானே? இங்கே எதுக்கு எல்லாரும் வந்திருக்கீங்க?” என்று விசாரித்தாள்.
“எங்க கெமிஸ்ட்ரி சாரை போலீஸ் அரெஸ்ட் பண்ணிட்டாங்க அக்கா. அவரை வெளியே விடச் சொல்லி போராட வந்திருக்கோம்…” என்றாள் அந்த மாணவி.
“கெமிஸ்ட்ரி சார்னா யார், பிரபஞ்சன் சாரா?” என்று கேட்க,
“ஆமாம் அக்கா, உங்களுக்கு அவரைத் தெரியுமா?” என்று கேட்டாள் மாணவி.
“அவர் என்னோட அத்தான்…” என்று ராகவர்தினி சொன்னதும்,
“அப்படியாக்கா?” என்று ஆச்சரியமாகக் கேட்ட மாணவி, “சார் ரொம்ப நல்லவர் அக்கா. எங்க எல்லாருக்கும் அவரை ரொம்பப் பிடிக்கும். அவர் மேல போய் யாரோ தவறா கேஸ் கொடுத்திருக்காங்க. நாங்களும் அவர்கிட்ட தானே அக்கா படிக்கிறோம். எங்களை எல்லாம் அவர் தவறாகக் கூடப் பார்த்தது இல்லை. அவர் மேல போய் இப்படி ஒரு கம்பளைண்ட் கொடுத்துருக்காங்க அக்கா. அதான் போராடி அவரை வெளியே கொண்டு வரப் போறோம்…” என்றாள் மாணவி.
“உங்க ஸ்கூல் பொண்ணு தான் அவர் மேல கம்பளைண்ட் கொடுத்தது. அந்தப் பொண்ணு யாருன்னு உனக்குத் தெரியுமா?” என்று கேட்டாள்.
“நான் ப்ளஸ் ஒன் படிக்கிறேன் கா. ப்ளஸ் டூ படிக்கிற பொண்ணு தான் கம்ளைண்ட் கொடுத்ததாகச் சொன்னாங்க. ஆனாலும் இன்னும் எனக்கு யாருன்னு தெரியலைக்கா. ப்ளஸ் டூ பொண்ணுங்ககிட்ட கேட்டால் தெரியும்…” என்றாள்.
“ப்ளஸ் டூ படிக்கிற பொண்ணுங்களும் வந்திருக்காங்களா?”
“ஆமாக்கா. கொஞ்ச பேர் வந்திருக்காங்க, மீதி பேர் பின்னால் அடுத்தப் பஸ்ஸில் வரப் போறாங்க. கொஞ்ச பேர் அவங்கவங்க சைக்கிளிலும் வந்துட்டு இருக்காங்க. ப்ளஸ் ஒன், ப்ளஸ் டூ படிக்கிற எல்லாரும் சேர்ந்து தான் கா போராட்டம் பண்ணப் போறோம்…” என்றாள்.
“சரிம்மா, உனக்கு அந்தப் பொண்ணு யாருன்னு தெரிந்தால் என்கிட்ட வந்து சொல்றியா?” என்று கேட்டாள்.
“சரிக்கா…” என்று அந்த மாணவி சென்று விட,
“நீங்களே பார்த்தீங்களா சார். என் அத்தான் தவறாக நடந்து கொள்பவராக இருந்தால் அவருக்காக ஏன் இந்தப் பொண்ணுங்க எல்லாம் போராட வரப் போறாங்க?” என்று வழக்கறிஞரிடம் கேட்டாள்.
“உண்மை தான் மா…” என்று அவர் சொல்ல,
“இப்ப பிரபா மேல எனக்கு முழு நம்பிக்கையும் வந்திருச்சுமா ராகா…” என்றார் மாதவன்.
“போங்கப்பா, நீங்க கூடத் தவணை முறையில் தான் அத்தானை நம்பியிருக்கீங்க. அதுவும் அத்தையும், மாமாவும் சுத்தமா அவரை நம்பலை…” என்றாள் கோபமாக.
“என்னமா செய்வது? காலம் அப்படி இருக்கு. பிறந்த பச்சை குழந்தைகளைக் கூட விட்டு வைக்க மாட்டேங்கிறாங்க. சின்னப் பொண்ணுகளுக்கு நடக்கிற கொடுமைகளை எல்லாம் தினமும் பேப்பரில் பார்த்துட்டுத் தானே இருக்கோம். இப்ப நம்ம வீட்டிலேயே ஒரு பையன் மேல அப்படிப் புகார் வரவும் சட்டுன்னு அவனையும் குற்றவாளியாகத்தான் பார்க்க வேண்டியதாக இருக்கு…” என்றார் மாதவன்.
அவர்கள் பேசிக் கொண்டிருக்கும் போதே அடுத்தப் பேருந்திலிருந்தும் மாணவ, மாணவிகள் வந்து இறங்கி காவல்நிலைய வாசலில் குவிந்தார்கள்.
ஏற்கனவே வந்தவர்களிடம் என்னவென்று விசாரித்து அவர்களைப் போகச் சொல்லி போராடிக் கொண்டிருந்த காவல் துறையினர், இன்னும் கூட்டம் சேரவும் திண்டாடித்தான் போனார்கள்.
“வெளியே விடு… வெளியே விடு… எங்கள் பிரபஞ்சன் சாரை வெளியே விடு…” என்று மாணவர்கள் குரல் கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அவர்கள் குரலை கேட்டு உள்ளே இருந்த பிரபஞ்சன் வியந்து போனான்.
“என்ன மேடம் இது? இந்த வாத்தியார்கிட்ட படிக்கிற பிள்ளைங்க எல்லாம் சேர்ந்து போராட்டம் பண்ணிட்டு இருக்காங்க. போகச் சொன்னாலும் போக மாட்டேங்கிறாங்க…” என்று ஒரு பெண் கான்ஸ்டபிள், இன்ஸ்பெக்டரிடம் சொல்லிக் கொண்டிருந்தார்.
“அதான் நானும் யோசிச்சுட்டு இருக்கேன். இவங்க போராடும் அளவுக்கு இந்த வாத்தியார் அவ்வளவு நல்லவரா என்ன?” என்று கேட்ட இன்ஸ்பெக்டர் அங்கே இருந்த பிரபஞ்சனை ஆராய்ச்சியாகப் பார்த்தார்.
“இந்த வாத்தியாரும் நம்ம விசாரணையில் நான் எந்தத் தப்பும் செய்யலைன்னு சொன்னதைத் தவிர வேற பேசவே இல்லையே மேடம். அவர் போனிலிருந்து யாருக்கும் ஆபாச மெசேஜ் போன ஆதாரமும் இல்லை. போன் நம்பர் வழியாகவோ, வாட்ஸ்அப் வழியாகவோ போன் பேசிய ஹிஸ்ட்ரியும் இல்லை…” என்றார்.
“ம்ம், வாத்தியார் போனில் ஆதாரம் இல்லை. ஆனால் கம்பளைண்ட் கொடுத்த பொண்ணு போனில் வாட்ஸ்அப் வழியாகப் போட்டோ அனுப்பியதும், வாட்ஸ்அப் கால் செய்த ஆதாரமும் இருக்கே. ஒருவேளை வாத்தி அந்தப் பொண்ணுக்கு மெசேஜ், கால் செய்துட்டு அதை டெலிட் செய்திருக்கலாமே?” என்றார் இன்ஸ்பெக்டர்.
“இருக்கலாம் மேடம். ஆனாலும் இத்தனை ஸ்டூடெண்ட்ஸ் அவருக்கு ஆதரவா இருக்காங்கன்னா அதையும் யோசிக்கணும் மேடம். அதுவும் அவர்கிட்ட படிக்கிற பொண்ணுங்க எல்லாருமே வந்திருக்கிற மாதிரி இருக்கு. கம்பளைண்ட் கொடுத்த பொண்ணைத் தவிர…” என்றார் கான்ஸ்டபிள்.
“அப்படித்தான் தெரியுது. சரி, இங்கே கூட்டம் போட விடாம நீங்களும் சேர்ந்து அவங்களை இங்கிருந்து போகச் சொல்லுங்க…” என்றார் இன்ஸ்பெக்டர்.
“எஸ் மேடம்” என்ற கான்ஸ்டபிள் வெளியே சென்றார்.
அவர்கள் பேசியது பிரபஞ்சன் காதிலும் விழுந்தது. அவனின் மாணவர்கள் அவனுக்காகப் போராட வந்தது அவனின் மனதை நெகிழ வைத்தது.
ஏற்கனவே அவனிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தியிருந்தனர்.
ஒன்றுமே செய்யாத தவறுக்கு அவனும் தான் என்ன பதில் சொல்லியிருக்க முடியும்?
அவன் தான் எந்தத் தவறும் செய்யவில்லை. யாருக்கும் ஆபாசமான குறுந்தகவல் அனுப்பவில்லை, யாரிடமும் தவறாகப் பேசவில்லை என்று சொல்லி ஓய்ந்து போனான்.
ஆனால் அந்த மாணவி கைபேசியில் அதற்கான ஆதாரம் இருப்பதாகச் சொல்லி காவல்துறையினர் அவன் பேச்சை நம்பத் தயாராக இருக்கவில்லை.
தான் அனுப்பாமல் எப்படி இருக்க முடியும்? என்ற கேள்வி தான் அவனைக் குடைந்து கொண்டிருந்தது.
*****
ராகவர்தினி தன் வண்டியை எடுத்த போது தான் கவனித்தாள், சக்கரத்தில் காற்று இல்லை என்று.
“என்ன ராகா?” பிரபஞ்சன் கேட்க,
“காத்து இல்லை அத்தான்…”
“நேத்து நல்லாதானே இருந்தது?”
“அதான் என்னன்னு தெரியலை அத்தான். இப்ப நான் காலேஜ் எப்படிப் போக?”
“ஆட்டோ பிடிக்கட்டுமா?”
“அதுக்கு மெயின் ரோடு போகணுமே அத்தான். பேசாம இன்னைக்கு ஒரு நாள் நீங்களே கொண்டு போய் விடுங்களேன்…”
“நானா? எனக்கு ஸ்கூலுக்கு டைமாச்சு ராகா…”
“ப்ளீஸ்! ப்ளீஸ்! அத்தான் இன்னைக்கு ஒரு நாள். உங்களுக்கு இன்னைக்கு முதல் பீரியட் இல்லை தானே?”
“இல்லை தான். அதுக்காக நான் ஸ்கூலுக்கு லேட்டா போக முடியாது ராகா…”
“நீங்க வாத்தி தானே? என்னவோ ஸ்கூல் பையன் போலப் பயப்படுறீங்க. நீங்க லேட்டா போனால் வெளியே முட்டி எல்லாம் போட வைக்க மாட்டாங்க அத்தான்…”
“உனக்குக் கொழுப்பு கூடி போச்சு. வாத்தியார்னா லேட்டா போகலாம்னு யார் சொன்னா? நாங்களே டிசிபிளின் பாலோ பண்ணாம பிள்ளைங்களை எப்படிப் பாலோ பண்ண சொல்ல முடியும்?”
“உங்க டிசிபிளின் ஒரே நாளில் கப்பலில் போய்க் கவிழ்ந்திடாது அத்தான். இப்ப பேசி பேசி நீங்க தான் நேரத்தை வேஸ்ட் பண்றீங்க. இந்த நேரம் என்னைக் காலேஜிலேயே விட்டிருக்கலாம்…” என்றாள் குறையாக.
கடிகாரத்தைப் பார்த்தவன், “வாயாடி… சீக்கிரம் வா…” என்று அவளையும் அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
வண்டியில் ஏறி இரண்டு பக்கம் கால் போடு அமர்ந்தவள், அவனின் வயிற்றைச் சுற்றி கையைப் போட்டுக் கொண்டாள்.
“ஏய் ராகா… என்ன பண்ற? கம்பியை பிடி!” என்று நெளிந்த படி அதட்டினான்.
“கம்பியை பிடிக்க நான் என்ன யாரோவா? கம்பியை இல்லை உங்களைக் கட்டிப்பிடிக்கவே ஏக போக உரிமையுள்ள உடைமைக்காரியாக்கும்…” நொடித்துக் கொண்டாள் ராகவர்தினி.
“உடைமையை எல்லாம் அப்புறம் பார்க்கலாம். இப்ப கையை எடு. இல்லனா நடந்து போன்னு இறக்கி விட்டு போய்டுவேன்…”
“இறங்கி வீட்டுக்கு வேணா போறேன். காலேஜ் எல்லாம் போக முடியாது…” என்றாள்.
“சேட்டை பண்ணாதே ராகா…” என்றவனுக்கு இப்போது கோபமே வந்து விட, முகத்தைச் சுருக்கிக் கொண்டு கையை எடுத்து அவனை விட்டு விலகியும் அமர்ந்து கொண்டாள்.
அவள் முகமே வாடி போனது.
அதைக் கண்ணாடி வழியாகக் கண்டவன் மனம் வருந்தினாலும் இறுக்கமாகவே இருந்தான்.
அதன் பிறகு அவனிடம் பேசாமல் அமைதியாக வந்தாள்.
அவளின் அமைதி அவனைப் பாதித்தது.
“வெளியில் அப்படிப் போவது எனக்குப் பிடிக்கலை ராகா. சொன்னா புரிஞ்சிக்கோ…” என்று அவளைச் சமாதானம் செய்ய முயன்றான்.
“வெளியில் மட்டுமா? வீட்டிலும் தானே? என்னவோ வீட்டில் மட்டும் ஒட்டிக்கிட்டே திரியுற மாதிரி…” அவனுக்கும் கேட்கும்படியாகவே முணுமுணுத்தாள்.
அவனின் உதட்டோரம் சிரிப்பில் துடித்தது. ஆனாலும் காட்டிக் கொள்ளாமல் அடக்கிக் கொண்டான்.
“வாயாடி! வாயை அடக்கு! படிப்பு முடியாம ஏதாவது பேசினன்னு வச்சுக்கோ… கொண்டு போய் உங்க அம்மா வீட்டுல விட்டுட்டு வந்துடுவேன். அப்புறம் படிப்பு முடியுற வரை நீ அங்கே தான் இருந்தாகணும்…” என்று மிரட்டினான்.
“அம்மா வீடா இருந்தா என்ன? ஆத்துக்காரு வீடா இருந்தா என்ன? எல்லாம் ஒன்னு தான்! நோ ஒட்டிங், நோ கட்டிங், நோ கிஸ்ஸிங்…” என்று சலித்துக் கொண்டாள்.
“அடிப்பாவி! இப்படியெல்லாம் எங்கே பேச கத்துக்கிட்ட?”
“என் வாத்தி புருஷன் கூட இருந்தால் இன்னும் பேச கத்துக்கலாம். பேச மட்டும்!” என்றாள்.
“வர வர விவகாரமா பேச கத்துக்கிட்ட. இப்படியெல்லாம்…” என்று அவன் ஏதோ அறிவுரை சொல்ல ஆரம்பிக்க,
“அத்தான், வெயிட்! வெயிட்! எனக்கு ஒரு டவுட் இருக்கு. அதைக் கிளியர் பண்ணிட்டு உங்க அறுவையை ஆரம்பிங்க…” என்று அவன் பேச்சை நிறுத்தினாள்.
“என்ன டவுட்?” தன் பேச்சை நிறுத்தி விட்டாளே என்று விறைத்துக் கொண்டு கேட்டான்.
“வாயாடின்னு சொன்னீங்களே, அப்படினா என்ன? வாயில் அடிப்பதா? ஆமா… வாயில் அடிப்பதுனா எப்படி? ஐ மீன் லிப் டு லிப்?” என்று கேட்டுக் கண்ணாடியில் தெரிந்த அவன் முகம் பார்த்து கண்சிமிட்டி சிரித்தாள்.
“ராகா…” என்று டென்ஷனாகக் கத்தியவன், அடுத்து ஆற்றிய அறிவுரை மழையில் தொப்பல் தொப்பலாக நனைந்தே கல்லூரியில் இறங்கினாள் ராகவர்தினி.
அத்தனையும் கேட்டுவிட்டு, “நீங்க என் டவுட் கிளியர் செய்யவே இல்லை அத்தான். பரவாயில்லை. காலேஜ் விடும் போது கூப்பிட வந்துடுங்க. அப்போ என் டவுட் கிளியர் செய்துகிறேன். டாட்டா…!” என்று கூலாக டாட்டா காட்டி விட்டு போனாள் ராகவர்தினி.
மேலும் படிக்க ப்ரீமியம் பிளான் வாங்கவும்.
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
நேர்மையான பள்ளி ஆசிரியனான நாயகன்.
குடும்பத்தாரின் ஏற்பாட்டில் அவனின் திருமணம் நடைபெற இருந்தபோது, அவனிடம் படிக்கும் பள்ளி மாணவிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு கொடுத்தான் என்று வழக்குப் பதியப்பட்டு காவல்துறையினரால் கைது செய்யப்படுகிறான்.
அக்குற்றச்சாட்டில் அவனின் திருமணம் நிற்க, அவனின் பெற்றோரே அவனை நம்பாமல் போக, ஒரே ஒருத்தி மட்டும் அவனை நம்புகிறாள்.
அந்த ஒருத்தி யார்? அவளின் நம்பிக்கைக்கு உரியவனாக நாயகன் இருந்தானா? அவனின் மீது சாட்டப்பட்ட குற்றம் உண்மைதானா? கதையைப் படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை ரேட்டிங், ரிவ்யூ மூலம் தளத்தில் தெரிவியுங்கள்.
Related products
-
யுத்தம் செய்தாய் என்னுள்ளே
Rated 5.00 out of 5


Reviews
There are no reviews yet.