இன்றைக்குத் தன் எதிரே நடந்து வராமல் இருந்ததால் அந்தத் தாவணிக்குரியவள் நங்கையாகத் தான் இருக்கும் என்று அறிந்தவன் ‘என்னதான் செய்யப் போகின்றாள் என்று பார்ப்போம்’ என்று நினைத்து மோட்டார் அறையைத் திறந்து கொண்டு உள்ளே சென்று கதவை ஒருக்களித்துச் சாற்றிவிட்டு வேலை செய்வது போலப் பாவனைக் காட்டி தன் காதுகளை வெளியே கூர்மையாக உணர வைத்தான்.
சற்று நேரத்தில் லேசாகக் கொலுசின் மணிகள் சிணுங்க அவள் ஓடி வரும் சத்தம் கேட்டது. கொலுசு சத்தம் கேட்டு ‘சரியான லூசு, எதுவோ பண்ணனும் நினைக்கிறவ ஊருக்கே கேட்குற கொலுசு போட்டுட்டா ஓடி வருவது? ஒரு தப்பை கூடச் சரியா பண்ண தெரியல. இந்த லட்சணத்தில் என்னைப் பழி வாங்குறேன்னு அப்ப, அப்ப கிளம்பிடுறா’ என்று மனதிற்குள் திட்டிக் கொண்டான்.
அவள் போட்டிருந்தது அதிகம் சலங்கைகள் இல்லாத கொலுசு தான் என்றாலும் அந்த அமைதியான நேரத்தில் அது கொஞ்சம் பெரிதாகவே கேட்டது.
அவனைப் பூட்ட வேண்டும் என்று நினைத்து மட்டுமே ஓடிக் கொண்டிருந்தவளுக்கு அந்தச் சத்தமே கருத்தில் இல்லை.
அவள் வந்து கதவை பூட்டவும் ‘அட அல்பம்…! இதுக்குத் தான் இந்தப் பாடா?’ என்று தன் தலையில் லேசாகத் தட்டிக் கொண்டவன் அவள் நம்புவதற்காக ‘யாரு?’ என்று சத்தம் கொடுத்தான்.
அவன் சத்தத்தை நம்பி அவள் சந்தோசமாகச் செல்ல “அந்த ஆளை போலவே மூளை சரியா வளராத பிள்ளையைப் பெத்து வச்சிருக்காரு. அப்பாவும், மகளும் எப்படித் தான் இப்படி இருக்காங்களோ?” என்று திட்டியவன் தன் போனை எடுத்து மாறன் எங்கே இருக்கிறான் என்று கேட்போம் என நினைத்து அவனை அழைக்கப் போக, அதற்குள் கதவு திறக்கும் சத்தம் கேட்டது.
‘யாரு அது? ஒருவேளை போனவ திரும்பி வந்து திறக்குறாளோ?’ என்று நினைத்து கவனிக்க “டேய் தமிழரசா…!” என்று சத்தம் கொடுத்துக் கொண்டே கதவை திறந்து விட்டான் மாறன்.
“என்னடா இன்னைக்கு இந்தப் பழிவாங்கும் படலமா? ஆனாலும் அந்தப் புள்ள உன்னை ரொம்பத் தான் பழிவாங்குதுடா. ஆனா என்ன ரொம்பச் சின்னப் பிள்ள தனமா இருக்கு” என்று மாறன் நக்கலுடன் சொன்னான்.
“ஹ்ம்ம்…! எல்லாம் அவ அப்பா புத்தி அதான் இப்படி” என்று சலித்த அரசு, “சரி, நீ எப்படிக் கதவை திறந்துவிட வந்த?” என்று விசாரித்தான்.
“நான் வீட்டுக்கு கிளம்பிட்டு இருந்தேன்டா. அப்பதான் அந்த இரண்டு பிள்ளைங்களும் உன் வயல் பக்கமா நடக்க ஆரம்பிச்சுதுங்க. என்னடா அதிசயமா உங்க வயலுக்குப் போகுதுங்களேனு பார்த்துட்டு இருந்தா, மோட்டார் ரூம் பின்னாடி போய் ஒளியவும், சரி அப்படி என்னதான் பண்றாங்க பார்ப்போம்னு வெய்ட் பண்ணிட்டு இருந்து உன்னைப் பூட்டிட்டுப் போனதும் திறக்குறேன்” என்றவன்,
“சரி…சரி… வா. அவங்க முன்னாடி போய் நின்னு, நங்கை ரியாக்ஷன் என்னனு நான் பார்க்கணும். ஆனாலும் இந்த விளையாட்டும் நல்லா தாண்டா இருக்கு. இந்தக் காட்டுக்குள்ள நல்ல எண்டர்டென்மெண்ட் தான் போ” என்ற மாறன் அரசுவை அழைத்துக் கொண்டு வந்தான்.
நேற்று நங்கை முகம் போன போக்கையும், அதையும் சமாளித்துத் தங்களையே கிண்டல் அடித்துச் சென்றதும் இப்போது நினைவில் வந்து பைந்தமிழரசனின் அதரங்களைப் புன்சிரிப்பில் விரிய வைத்தது.
நங்கை ஏன் தன்னிடம் இப்படி இன்னும் குழந்தைத்தனமாக விளையாடுகிறாள் என்று அவனுக்கு நன்றாகவே தெரியும்.
அவளை இப்படி விளையாடவிடாமல் தடுக்க அவனால் மட்டுமே முடியும் என்றும் தெரிந்தாலும் அதைச் செய்ய ஏனோ அவனுக்குத் தோன்றியதே இல்லை.
தோன்றியது இல்லை என்பதை விட அவளைத் தடுக்க மனதில்லை.
தான் ஒரு வார்த்தை அவளின் முகம் பார்த்து நேரடியாகப் பேசிவிட்டால் அவளின் விளையாட்டுத் தனம் அனைத்தும் அவளை விட்டு போய்விடும் என்று நன்றாகவே உணர்ந்தவன் அவன்.
ஆனால் அதைச் செய்யாமல் இருப்பதற்குக் காரணம், நிற்பது விளையாட்டுதனம் மட்டும் இல்லை. அவளின் உயிர்ப்பும் அதில் போய்விடும் என்பதால் தான் அவளின் சிறுபிள்ளை தனத்தைக் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகிறான்.
*****
‘என்ன? என் அப்பாவை அடிக்கக் கை ஓங்கினா? அய்யோ…! இது கூடத் தெரியாம தான் அவன் பின்னாடி சுத்திக்கிட்டு திரிஞ்சேனா?’ என்று தன் தலையில் ஒரு அடி அடித்துக் கொண்டவள் முகத்தில் கோபம் தான் வந்து போனது.
இன்னும் வெளியே பேச்சு நடந்து கொண்டிருந்தது. “விட்டுறலாம் மாமா! ஆனா நீங்க இன்னும் என்னை மருமகன்னு கூப்பிடலையே ஏன்?” என்று தமிழ், மருதனிடம் கேட்டுக் கொண்டிருந்தான்.
அவன் பேச்சின் காரணம் புரிய “இவ்வளவு தானா? நான் கூட என்னமோ? ஏதோனு நினைச்சுப் பயந்துட்டேன்” என்ற மருதன் தொடர்ந்து “என் மகளைக் கட்டிக்கிறேன்னு சொல்லுங்க… இப்பயே மருமகனேன்னு வாய் நிறையக் கூப்பிடுறேன்” என்று பட்டென விசயத்தைப் போட்டுடைத்தார்.
அவர்களின் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த நங்கைக்கு இது என்ன கனவா? என்றுதான் தோன்றியது. இருவரும் உரிமையாகப் பேசிக் கொள்வது அவளுக்கு வியப்பாக இருந்தது. அதோடு தன் தந்தை இப்படி விஷயத்தைப் பட்டெனப் போட்டுடைப்பார் என்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை.
அவளின் தந்தை இப்படிப் பேசக் கூடியவர் இல்லை என்றே அவள் நினைத்தாள். ஆனால் இதுயெல்லாம் ஒரு அதிர்ச்சியா என்பது போல அடுத்து கேட்ட வார்த்தையில் ஸ்தம்பித்துப் போனாள் பவளநங்கை.
ஏன்னென்றால் “நாளைக்கே கூடக் கட்டிக்கிறேன் மாமா!” என்று சொல்லிக் கொண்டிருந்தான் பைந்தமிழரசன்.
என்ன? என்ன? நிஜமாகவே அவன் சம்மதம் சொன்னானா? தன் காதில் விழுந்த வார்த்தைகள் உண்மையா? என்று அதிர்ந்து போனவளின் கைகள் அந்தரத்தில் நின்றன.
எப்படி…? எப்படி…? இது சாத்தியம்? தன்னை வேறு ஒருவனுக்கு மணம் முடித்து வைக்க நினைத்தவன் எப்படிச் சம்மதம் சொன்னான்? என்று தனக்குள் பல கேள்விகள் கேட்டுக் கொண்டாள்.
இவள் இங்கே குழம்பிக் கொண்டிருக்க வெளியே பெற்றவர்கள் அவனின் பதிலில் குளிர்ந்து போய்ச் சந்தோஷமாக இருந்தார்கள்.
அவன் சம்மதம் கிடைத்ததும் சந்தோசமாக உள்ளே ஓடி வந்தார் ஈஸ்வரி.
“பவளம், தமிழு சம்மதம் சொல்லியாச்சுடி! இப்ப உன் பதிலை சொல்லு!” என்ற படி எதிரே நின்றார்.
தன் அன்னையை எந்தச் சலனமும் இல்லாமல் பார்த்து “எனக்குச் சம்மதம் இல்லம்மா” என்று நிதானமாகச் சொன்னாள் பவளநங்கை.
மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
Reviews
There are no reviews yet.