பூவிதழ் மலரே!
பூவிதழ் மலரே! — Preview
“என்னடி சுபா, திருமண வாழ்க்கை எப்படிப் போகுது?” என்று மெல்ல விசாரித்தாள்.
“எப்படிப் போகணும்னு நீ எதிர்பார்க்கிற?” என்று திருப்பிக் கேட்ட தங்கையை இயலாமையுடன் பார்த்தாள்.
“என்னடி, இப்படிப் பேசுற?”
“என்னை வேற எப்படிப் பேச சொல்றக்கா? எல்லாரும் சேர்ந்து என்னை இந்த வாழ்க்கைக்குள்ள தள்ளி விட்டுட்டு எப்படி எப்படின்னு என்கிட்ட கேட்டுக்கிட்டே இருந்தால், நான் என்ன சொல்லணும்னு எதிர்பார்க்கிறீங்க? எனக்கு இந்த வாழ்க்கை பிடிக்கலைன்னு சொன்னால், சரின்னு நீங்க எல்லாம் ஏற்றுக்கொள்ளப் போறீங்களா?” என்று வெடுக்கென்று கேட்டாள்.
“சுபா…” என்று சித்ரா கோபமாக அதட்ட,
“ஏன், இதே கேள்வியை அந்த மனுஷன்கிட்ட கேட்க வேண்டியது தானே? கேட்க மாட்டீங்களே. ஊருக்கு இளைச்சவன் ஆண்டிங்கிற மாதிரி, பொண்ணு தானே உங்களுக்கு எல்லாம் இப்படிக் கேள்வி கேட்க சரியான ஆளு. சந்தோஷமா வாழ்ந்தாலும் அவள்தான் பதில் சொல்லணும். வாழலைனாலும் அவள்தான் பதில் சொல்லணும்…” என்று சுபா அலுப்பாகச் சொல்ல,
“என்னடி நீ இப்படி விரக்தியா பேசுற. அப்படி என்ன நான் தப்பா கேட்டுட்டேன்? புதுசா கல்யாணம் ஆனவர்களிடம் வழக்கமா கேட்கும் கேள்வி தானே?” சித்ரா சொல்ல,
“அதைச் சந்தோஷமா கல்யாணம் செய்தவங்ககிட்ட கேட்கணும்…” என்றாள் சுபா.
இப்படி வெடுக் வெடுக்கென்று பேசும் தங்கையிடம் அதற்கு மேல் என்ன கேட்பதென்றே சித்ராவிற்குப் புரியவில்லை.
கல்யாணம் முடித்து வைத்தால் போதும். அவர்கள் வாழ்ந்து விடுவார்கள் என்று வீட்டின் பெரியவர்கள் நினைத்தது போல்தான், அவளும் நினைத்துக் கொண்டிருந்தாள்.
அதற்குப் பின், சம்பந்தப்பட்ட பெண் படும் கஷ்டங்களையும், காயங்களையும் அவர்கள் உணர்வதே இல்லை.
அதுபோல்தான், சுபரூபாவின் மனவலி மற்றவர்களுக்குப் புரியவே இல்லை. புரிந்து கொள்ளாமல் கேள்வி மேல் கேள்வி கேட்பவர்கள் மேல் அவளுக்குக் கோபம்தான் வந்தது. தன் கோபத்தை யாரின் மேலும் காட்டக் கூடாது என்று அமைதியாக இருந்தாலும், அவளைப் பேச தூண்டுபவர்களை அவளும் என்ன செய்வாள்?
****
கலங்கிய கண்களை வேகமாகத் துடைத்துக் கொண்டவள், “இப்ப மட்டும் நீங்க ரொம்ப உத்தமரோ? என்னை எவ்வளவு கேவலமா பேச முடியுமோ அவ்வளவு பேசிட்டு, இப்ப ஏன் என்கிட்ட வரணும்? அதுவும் எனக்கு விருப்பமான்னு கூடக் கேட்காமல்…” என்று ஆதங்கமாகக் கேட்டாள்.
“உனக்கு ஏன் விருப்பம் இல்லாமல் போகப் போகுது? உனக்குத்தான் என்னைப் பிடிக்குமே. அப்புறம் என்ன?” என அசட்டையாகச் சொன்னான்.
“இல்லை, எனக்கு உங்களைப் பிடிக்காது. சுத்தமா பிடிக்காது…” எனக் குரலை உயர்த்திக் கத்தினாள்.
“பொய் சொல்லாதே! பிடிக்காமல்தான் ஒரு காலத்தில் என் பின்னால் சுத்தினாயா?” என்றவன் அவளை நம்ப மறுத்தான்.
“சும்மா அதையே சொல்லாதீங்க. அந்த வயசில் உங்களை நல்லவர்னு நம்பி ஏதோ ஆசைப்பட்டேன். அது எவ்வளவு பெரிய முட்டாள்தனம்னு இப்பத்தான் புரியுது. இப்ப உங்களை எனக்குச் சுத்தமாகப் பிடிக்கலை. அதுவும் என்னோட மனசை பத்தி கொஞ்சம் கூட யோசிக்காமல், உடல் சுகத்துக்கு மட்டும் என்னைத் தேடி வரும் உங்களைச் சுத்தமா பிடிக்கவே இல்லை…” என்று அவள் வெறுப்புடன் சொல்ல, அவன் முகம் மாறியது.
ஆனாலும், உடனே சமாளித்துக் கொண்டவன், “சும்மா ஏதாவது உளறாதே. கல்யாணம் ஆனவங்க புருஷன், பொண்டாட்டியா வாழ்வதற்கு எதையும் எதுக்கு யோசிச்சிட்டு இருக்கணும்? கல்யாணம் ஆனால், இதெல்லாம் நமக்குள் இயல்பா நடப்பது தானே? எல்லாருக்குமே பிடிச்ச வாழ்க்கையா கிடைச்சிடுது? கிடைச்ச வாழ்க்கையைத்தான் வாழ்ந்துட்டு போறாங்க.
இப்ப நான் அந்த மனநிலையில் தான் இருக்கேன். இப்ப கூட உன் மூஞ்சியைப் பார்த்தால் எனக்குப் பிடிக்கலை தான். அதுக்காக என்ன பண்ண முடியும்? இனி நீதான் என் பொண்டாட்டி. உன் கூடத் தான் காலமெல்லாம் வாழ்ந்தாகணும். அதுக்கு எதுக்கு நாளை தள்ளிப் போட்டுட்டே இருக்கணும்? இப்ப இருந்தே வாழ ஆரம்பிப்போம். நம்ம வீட்டு பெரியவங்களும் அதைத் தானே எதிர்பார்க்கிறாங்க…” என்றான் இலகுவாக.
எப்படி இப்படி இலகுவாகப் பேசுகிறான்? என்று சுபரூபாவால் நினைக்காமல் இருக்க முடியவில்லை.
ஆனால், அவளால் அப்படி இந்த விஷயத்தை இலகுவாக எடுத்துக் கொள்ள முடியவில்லை. அவன் வார்த்தைகளால் காயமடைந்தவள் அவள். இதோ இப்போது கூடத் தன் முகம் பார்க்க பிடிக்கவில்லை என்பவனுடன், எப்படி வாழ முடியும்?
உன் முகம் பிடிக்காது, உன் உடல் பிடிக்கும் என்றால் அவளை என்னவென்று நினைத்தான்?
இப்போதும் கூட அவன் அவளை முகம் பிடிக்காது என்று வார்த்தையால் அடித்திருக்கிறான். அவனுடன் போய் அவளால் எப்படி உடலை பகிர்ந்து கொள்ள முடியும்?
தன் மனத்தை, அதில் அவன் ஏற்படுத்திய காயத்தைப் பொருட்படுத்தாமல் காம இச்சைக்கு மட்டும் தன்னைத் தேடி வருபவனை எப்படி அவளால் இலகுவாக ஏற்றுக் கொள்ள முடியும்?
திருமணம் முடிந்து விட்டது. இனி கணவன், மனைவி பந்தத்தில் வாழ ஆரம்பிக்கலாம் என்று கடமைக்கு வாழவும், பெரியவர்கள் விருப்பம், அதனால் தாங்கள் வாழ்ந்தே ஆக வேண்டும் என்று வாழவும் செய்தால், அதில் அவளின் மனத்திற்கு எங்கே மதிப்பு உள்ளது?
அதிலும் தன்னைப் பிடிக்கவில்லை என்று சொன்னவனுடன் வாழ்க்கையைத் துவங்க, அவளுக்குச் சிறிதும் விருப்பமில்லை.
“இல்லை, முடியாது…” என்று உறுதியாக மறுத்தாள்.
“என்ன முடியாது?” என்று நெற்றியைச் சுருக்கிக் கேட்டான்.
“என்னால் உங்களோட அப்படி ஒரு வாழ்க்கையை வாழ முடியாது…”
“வேற எப்படி வாழப் போறீயாம்?” நக்கலாகத்தான் கேட்டான்.
அவன் நக்கல் அவளைச் சீண்டியது.
“உங்களோட எனக்கு எப்படியும் வாழப் பிடிக்கலை. போதுமா?” என்று ஆத்திரமாகக் கேட்டாள்.
முகத்தில் அடித்தது போல் பேசியவளை, முறைத்துப் பார்த்துக் கொண்டிருந்தான் ரகுநந்தன்.
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
அழகு என்பது நிலையற்றது! முகத்தில் அழகை தேடி அகத்தைக் காயப்படுத்தினால், அந்தக் காயம் விரைவில் ஆறுவதில்லை. நாயகனால் காயப்பட்ட நாயகி அதிலிருந்து மீண்டாளா?
அழகையும் தாண்டி நாயகியின் அகத்தை நாயகன் புரிந்து கொண்டானா? என்பதை இந்தக் கதையில் காணலாம்.
இந்தப் பக்கத்தில் உள்ள கதை / புத்தகம் ©Ezhilanbu அவர்களின் முழு காப்புரிமைக்கு உட்பட்டது.
❌ அனுமதி இல்லாமல் நகலெடுக்க, Screenshot எடுக்க, PDF / Audio / Video வடிவில் பகிர கடுமையாகத் தடை செய்யப்படுகிறது.
⚖️ மீறல் கண்டறியப்பட்டால், Copyright Act படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Related products
-
வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!
Rated 5.00 out of 5 -
என்னிதய தாள லயமாய் நீ
Rated 5.00 out of 5


ALAMELU –
Ok
Ezhilarasi ragukumar –
Super
gomathi parthiban –
Super. Nice flow and Happy reading