- Joined
- Sep 16, 2024
- Messages
- 747
- Reaction score
- 4,462
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் - 24
இன்றைய எபிசோட் சற்று பெரியது. அதனால் இரண்டாகப் பிரித்துப் போட்டிருக்கிறேன்... எபிசோடின் தொடர்ச்சி கீழே இருக்கும். அதையும் சேர்த்துப் படித்துவிடுங்கள்.
இன்றைய எபிசோட் சற்று பெரியது. அதனால் இரண்டாகப் பிரித்துப் போட்டிருக்கிறேன்... எபிசோடின் தொடர்ச்சி கீழே இருக்கும். அதையும் சேர்த்துப் படித்துவிடுங்கள்.
அமைதியின் உருவமாய்த் தன்முன் அமர்ந்திருந்த அஞ்சலியைப் பார்த்த பிரதாப்பால் இன்னும் நம்பமுடியவில்லை.
தன் வருங்கால மனைவியின் தோழியாக வலம்வந்த அஞ்சலிதான் அத்தனை அரக்கத்தனமான கொலைகளைச் செய்தாளா?
நம்பித்தான் ஆக வேண்டும் என்பதைப்போல், சில மணி நேரங்களுக்குமுன் அவள் வீட்டில் கிடைத்த மருத்துவக் குறிப்புகளும், வீட்டின் பின்னால் மறைவாய் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பைக்கும், அவள் கணவன், குழந்தையின் புகைப்படங்களும், அதனுடன் மனநல மருத்துவர் ரகோத்தமன் கொடுத்த அவளின் சைகோபதி என்ற மனப்பிறழ்வு குறைப்பாட்டின் விளக்கமும் அவள்தான் குற்றவாளியென உறுதிப்படுத்த உதவியிருந்தது.
ஒரு பெண்! கீரையை ஆய்வதுபோல் கொலைகளைச் செய்துவிட்டு, தங்களை இத்தனை நாட்களும் நாயாக அலைய வைத்திருக்கிறாள். மூத்த அதிகாரிகளுக்கும், பத்திரிகைகாரர்களுக்கும், மக்களுக்கும் பதில்
சொல்ல முடியாமல் திணற வைத்து, தன் கண்முன்னே சாதுவாய் நடமாடிக்கொண்டிருந்திருக்கிறாள்.
பிரேஸ்லெட்டை கேட்டு தனக்கே மிரட்டல் விடுத்து, அவனின் சரிபாதியாக வரப்போகிறவளை கடத்தி, தனக்குச் சவால்விட்டதை நினைக்கும்போது, அந்தக் காவல்காரனின் இரத்தம் சூடேறியது. தாடை இறுக, கையை முறுக்கி தன் கோபத்தைக் கட்டுப்படுத்தினான் ஏசிபி பிரதாப் சக்கரவர்த்தி.
விசாரணை அறையில் அவனுடன் திலீப்பும், ஆரவியும் இருக்க, அந்த அறையில் நடக்கப்போகும் விசாரணையை வெளியே இருந்து பார்த்தவாறு பார்த்திபன், கதிரவன், திவாகர், கேசவன், அவர்களுடன் விஷயமறிந்து உடல்நிலை இன்னும் சீராகாத நிலையிலும் வந்திருந்த சிவராமும் நின்றிருந்தனர்.
“எதுக்காக இந்த எட்டுக் கொலைகள் அஞ்சலி?” தன் சொந்த கோபங்களை ஒதுக்கி வைத்துவிட்டு விசாரணையை ஆரம்பித்தான் பிரதாப்.
“எட்டா? கணக்குத் தப்பா சொல்றீங்க ஏசிபி சார். பத்துக் கொலைகள்! காவல்காரர் கணக்கில் கரெக்டா இருக்கணும். உங்க போலீஸ் ரெக்கார்டில் குறிச்சு வச்சுக்கோங்க. அஞ்சலி மாதேஷ் என்பவர் செய்த கொலைகளின் எண்ணிக்கை பத்து என்று!”
சிறு பிள்ளைக்குப் பாடம் நடத்துவதுபோல், தன்னைத் திருத்தியவளை, கனல் கண்களால் கண்டான்.
கலிவரதன், பொன்னியின் வழக்கு விபரம் தெரிய வந்தபோதே, அவன் அனுமானித்ததுதான். அதிலும் கலிவரதனின் வீட்டில்தான் மாதேஷூம் குடியிருந்து, தற்கொலை செய்து இறந்திருக்கிறான் என்று அறிந்த தகவல்களை எல்லாம் ஒன்றோடு ஒன்று முடிச்சுப்போட்டு இணைக்க, அந்தக் காவல்காரனுக்குப் போதுமானதாக இருந்தது.
அவளின் வாயிலிருந்தே உண்மையை அறிந்துகொள்ள அவன் போட்ட கணக்கு தப்பவில்லை.
“சோ, கலிவரதன், பொன்னிதான் உன் முதல் கொலை கணக்கு. அவங்கதான் நீ சைகோபதியா உருமாறக் காரணமா இருந்தவங்க. என் கெஸ் உண்மைனா உன் மாதேஷும், உன் குழந்தையும் இறந்துபோகக் காரணம் அவங்கதான், கரெக்ட் கீதாஞ்சலி மாதேஷ்?” உன் ஆணிவேர் வரை நான் ஆராய்ந்து வைத்திருக்கிறேன் என்பதை அவளுக்குப் புரிய வைத்தான்.
மாதேஷ் பற்றிய விவரம் தெரிய வந்தபோது, அவனின் மனைவியின் பெயர் ‘கீதா’ என்றே இருந்தது. அதனால்தான் ஆரம்பத்தில் உடனே அஞ்சலியின் மீது சந்தேகம் வந்திருக்கவில்லை. ஆனால், நைனிகாவை காணவில்லை என்ற தகவல் அறிந்து அவளைத் தேடிக்கொண்டிருந்தபோதுதான், மீண்டும் மனோகரின் டைரியை நன்றாகப் படித்துப் பார்த்த கதிரவனிடமிருந்து, மாதேஷின் மனைவி பெயர் “கீதாஞ்சலி” என்று மனோகர் ஒரு இடத்தில் எழுதி இருப்பதாகத் தகவல் வந்தது. அந்தக் கீதாஞ்சலி ஒருவேளை டியூஷன் சென்டரில் வேலை பார்க்கும் அஞ்சலியாக இருக்குமோ? என்று பிரதாப்பிற்குச் சந்தேகம் வந்தது. அந்த டீ கடைக்காரர் அஞ்சலியுடன்தான் நைனிகா சென்றாள் என்று சொன்ன தகவலில், அஞ்சலியின் மீதான சந்தேகம் வலுக்க, உடனே அவளின் வீட்டிற்குச் சென்றான். அவனின் சந்தேகம் சரிதான் என்பதுபோல் அங்கே நைனிகாவை கட்டிப்போட்டு வைத்திருந்தாள் அஞ்சலி. அனைத்திற்கும் காரணம் அஞ்சலி என்று பிடிபட, உடனே அவளின் கழுத்தைப் பிடித்திருந்தான்.
“அட! சபாஷ் ஏசிபி சார்! நீங்களும் உங்க டீமும் சுறுசுறுப்பாகத்தான் வேலை பார்த்திருக்கீங்க. எஸ், கீதாஞ்சலி மாதேஷ் நான்தான். ஆனால், பாருங்க… இத்தனை கண்டுபிடிச்ச நீங்க, உண்மையான குற்றவாளியான என்னை விட்டுட்டு ஒரு அப்பாவியைப் பிடித்து உங்க கஸ்டெடியில் வச்சிருக்கீங்களே. அது சரியில்லையே சார். மனோகர் அண்ணா எந்தத் தவறும் செய்யாதவர். அவரை வெளியே விட்டுருங்க. எல்லாக் கொலைகளையும் நான் மட்டும்தான் தனியா செய்தேன்”
“பத்துக் கொலைகளைத் தனியொருத்தியா செய்தியா? அதுவும் மூன்று இரட்டை கொலைகள்? நம்ப முடியலையே கீதாஞ்சலி. இப்ப நான் சொல்ற கணக்கு சரியா இருக்கா பார். நீயும், மனோகரும் சேர்ந்துதான் எல்லாக் கொலைகளையும் செய்திருக்கீங்க. அதனால்தான் மனோகர் ‘நான்தான் கொலைகளைச் செய்தேன்’னு கமிஷ்னர் முன்னிலையில் வாக்குமூலம் கொடுத்திருக்கான். கொலை செய்யப் பயன்படுத்திய பொருட்கள் எல்லாம் மனோகருக்கு உரிமையான ட்யூசன் சென்டரில் கிடைத்தது. உன்னைக் காப்பாத்த அவன் உண்மையை ஒப்புக்கொண்டான். அவனைக் காப்பாத்த நீ சரண்டராகியிருக்க. இது எங்கோ இடிக்குதே கீதாஞ்சலி. உனக்காக அவன்… அவனுக்காக நீ…”
“பிரதாப்!” அவ்வளவு நேரம் காட்டிய நிதானத்தைப் பறக்கவிட்டு, கண்களில் கொலைவெறி தாண்டவமாட, ஆக்ரோஷமாகக் கத்தினாள் கீதாஞ்சலி.
“நீயும் ஒரு சாதாரண ஆண்னு நிரூபிச்சுட்ட பிரதாப். அண்ணன், தங்கை மாதிரியான உறவை தப்பா பேசிய… உன்னை… சும்மா விடமாட்டேன் பிரதாப். இப்படிப் பேசுற வாயை அப்படியே தைச்சு… உதிரம் சொட்ட சொட்ட உன் உயிரை உருவி எடுத்தால்தான் நீ இப்படிப் பேச மாட்ட…” தன்னிலையை மறந்து வெறிவந்தவள் போலக் கத்தி, அவனை நோக்கி எழுந்து வர முயன்றாள் கீதாஞ்சலி.
ஆனால், அவளால் இருக்கையை விட்டு அசைய கூட முடியவில்லை. தன் விசாரணையை ஆரம்பிக்கும் முன்பே அவளின் கைகளை நாற்காலியோடு இணைத்து கை விலங்கை போட்டுவிடச் சொல்லியிருந்தான் பிரதாப். சைக்கோத்தனமாக அத்தனை பேரை கொன்றவளிடம் சர்வசாதாரணமாக விசாரணையை நடத்திவிட முடியாதே.
அதேநேரம், குடும்பமாக வாழ்ந்த ஒருத்தி கணவன், குழந்தையை இழந்தபின் இவ்வளவு வெறியோடு கொலைகளைச் செய்திருக்கிறாள் என்றால், அவளின் ஆரம்பப்புள்ளி பாதிப்புப் பலமானதாக இருந்திருக்கும் எனப் பிரதாப் அனுமானித்தான். மற்ற கொலைகளுக்குக்கூட, அவள் இலகுவாக உண்மையைச் சொல்லிவிடலாம். ஆனால், அவள் நேரடியாகப் பாதிக்கப்பட்ட உண்மையான காரணத்தைச் சொல்லாமல்கூட மறைக்கலாம். அதனாலேயே மனோகரை வைத்தே அவளை ட்ரிக்கர் செய்திருந்தான் பிரதாப்.
அவளைப் பேச வைக்கும் சிறு முயற்சி அது! அதற்கே அவள் இவ்வளவு வெறிக் கொண்டு தன்னைத் தாக்க நினைக்கிறாள் என்றால், அவளின் மனநிலை பாதிப்பு அவளுக்கு எந்தளவு இருக்கிறது என்பதைப் புரிய வைப்பதாய்!
அவனை வந்து தாக்க முடியாத ஆத்திரத்தை அடக்க முடியாமல் போராடியபடி, “நல்லா கேட்டுக்கோ பிரதாப், எனக்காக என் மாதேஷ்! மாதேஷுக்காக நான்! எங்களோட பொக்கிஷமா எங்க நிலா பாப்பா! நாங்க எவ்வளவு சந்தோஷமா வாழ்ந்தோம்னு உனக்குத் தெரியுமா? என் மாதேஷ் எவ்வளவு நல்லவர் தெரியுமா?” என்று கண்கள் பளபளக்க ஆவேசமாகக் கத்தியவள் கடந்த காலத்தை நோக்கி பயணித்தாள்.
*****
வீட்டு வாசலில் அமர்ந்திருந்த மனோகர் அந்தக் காம்பவுண்டுக்குள் நுழைந்த பைக்கின் சத்தம் கேட்டு திரும்பிப் பார்த்தான்.
ஜீன்ஸ், சட்டையில், கேசம் பறக்க, பைக்கை ஓட்டி வந்துகொண்டிருந்தாள் கீதா. அவளின் பின்னால் ஒரு கையில் குழந்தையை அணைவாகப் பிடித்தவாறு, இன்னொரு உள்ளங்கையில் கட்டுடன் அமர்ந்திருந்தான் மாதேஷ்.
அவளை வியந்து பார்த்த மனோகர், மாதேஷின் கையில் கட்டை பார்த்ததும் எழுந்து அருகில் வந்தான்.
“கையில் என்னாச்சு மாதேஷ்?” கேட்டவாறு கீழே இறங்க சிரமப்பட்ட மாதேஷின் கையிலிருந்து குழந்தையை வாங்கினான்.
“வர்ற வழியில் ஒரு வண்டிக்காரன் இடிச்சிட்டான். மாதேஷ் புறங்கையில் அடிப்பட்டுருச்சு அண்ணா. அதான் ஹாஸ்பிடலில் கட்டு போட்டு கூட்டி வர்றேன்” என்றாள் கீதா. அவளின் முழுபெயர் கீதாஞ்சலி என்றே சான்றிதழ்களில் இருந்தாலும், கீதா என்றே அனைவராலும் அழைக்கப்பட்டாள்.
“உனக்குப் பைக் நல்லா ஓட்டத் தெரியுதே கீதா, எப்ப கத்துக்கிட்ட?”
“நாங்க இரண்டு பேரும் லவ் பண்ணும்போது மாதேஷ்தான் எனக்குக் கத்துக்கொடுத்தார்”
“எனக்குத் தெரியவே இல்லையே”
“எப்பவாவது ஓட்டுவதுதான் அண்ணா”
“நானும்தான் லவ் பண்ணேன். இதெல்லாம் பாவனாவுக்குக் கத்துக்கொடுக்கணும்னு எனக்குத் தோணலை பாரு”
“எனக்குப் பைக் ஓட்ட ஆசை என்பதால் நானே கேட்டுக் கத்துக்கிட்டேன் அண்ணா. அதையே பாவனாவும் பழகணும்னு இல்லையே” என்றவாறு குழந்தையை அவனிடமிருந்து வாங்கிக்கொண்டாள்.
“நீ உன் இடம் விஷயமா இன்னைக்கு யாரையோ பார்க்க போகணும்னு சொன்னியே, என்னாச்சு மனோ?” மாதேஷ் கேட்க,
“அது ஒன்னும் வேலைக்காகலை மாதேஷ். நம்ம ஹவுஸ்ஓனர் அங்கிள்தான் ஹெல்ப் செய்றதா சொல்லியிருக்கார்” என்றான் மனோகர்.
மாதேஷ், மனோகர் இருவரும் திருமணம் ஆவதற்கு முன் ஒரே வீட்டில்தான் பேச்சுலராகத் தங்கியிருந்தனர். மாதேஷ் முதலில் திருமணம் செய்ய, அருகிலே இருந்த போர்ஷனுக்குத் தனியாகக் குடிபோயிருந்தான் மனோகர். சில மாதங்களுக்கு முன்தான் மனோகரும் அவன் காதலித்த பெண்ணான பாவனாவை வீட்டினரின் எதிர்ப்பை மீறி மணந்திருந்தான். அவனின் காதல் திருமணத்தில் உறவும், நட்புமாக மாதேஷும், கீதாவும்தான் கலந்துகொண்டு நடத்தி வைத்திருந்தனர்.
அவர்கள் பேசிக்கொண்டிருக்கும்போதே குழந்தை சிணுங்க, கீதா வீட்டை நோக்கி சென்றாள்.
அந்தக் காம்பவுண்டுக்குள் நடுவில் ஒரு வீடு ஒய்யாரமாக இருக்க, அதன் இருபக்கமும் இரண்டு இரண்டு போர்ஷன் வீதம் இருந்தன. நடுவில் இருந்த வீட்டில் அந்த வீடுகளின் உரிமையாளர் கலிவரதனும், அவரின் மனைவி பொன்னியும் இருந்தனர்.
அந்த வீட்டுடன் இணைந்திருந்த வீட்டின் கதவை கீதா திறந்தபோது, பொன்னி தொலைக்காட்சியில் நாடகம் பார்த்துக்கொண்டிருந்த சத்தம் வெளியே கேட்டது.
“என்ன கீதுமா குழந்தை ரொம்ப அழறா? பசிக்குதா? ஃபீட் செய்தியா?” மாதேஷ் வீட்டிற்குள் வந்தபோது குழந்தையின் அழுகை சத்தம் அதிகமாகியிருக்க, வினவினான்.
“வந்ததும் ஃபீட் பண்ணேன். அப்புறமும் அழறா”
“வண்டிக்காரன் இடிச்சபோது பயந்துட்டாளோ? நான் கவனமாத்தான் வண்டி ஓட்டினேன். அப்படியிருந்தும்… நல்லவேளையா உங்க இரண்டு பேருக்கும் எதுவும் ஆகலை. ஆனால், பாப்பா பயந்திருப்பா. அவளை என்கிட்ட குடு.” மகளை வாங்கித் தோளில் போட்டு தட்டிக் கொடுத்தவாறு நடந்தான் மாதேஷ்.
ஆனாலும் குழந்தை கத்தி அழ, “ஏய் கீதா, பிள்ளையை ஏன் இப்படிக் கத்த விடுற? நிம்மதியா டிவி பார்க்க முடியாம ஒரே சத்தமா இருக்கு. உன் மகளை வாயை மூட சொல்லு” ஜன்னல் வழியாகப் பக்கத்து வீட்டிலிருந்து கத்தினார் பொன்னி.
இரண்டு வீட்டையும் ஒரே சுவர்தான் இணைத்திருந்தது. ஜன்னலை திறந்து வைத்தால், அவர்கள் பேசிக்கொள்ளும் சத்தம் நன்றாகக் கேட்கும்.
குழந்தை அழுதுகொண்டே இருந்ததால் வெளிக்காற்று வரட்டும் என்று சற்று முன்புதான் கீதா ஜன்னலை திறந்து வைத்திருந்தாள்.
உடனே பொன்னிக்கு மூக்கில் வியர்த்திருந்தது. பொன்னி எதற்கெடுத்தாலும் சத்தம் போட்டுக்கொண்டே இருப்பார். அவரின் சத்தத்தைத் தவிர, மற்ற குடித்தனக்காரர்களின் வீட்டிலிருந்து சிறு சத்தமும் அவருக்குக் கேட்டு விடக்கூடாது. அவரின் குரல்தான் அங்கே ஓங்கி ஒலிக்க வேண்டும்.
கலிவரதன் பொன்னி தம்பதியருக்குக் குழந்தைகள் இல்லை. குழந்தை இல்லாதவர்களுக்கு மற்ற குழந்தைகளின் மீது பிரியம் உண்டாகும். பொன்னியோ முற்றிலும் வேறுவிதம். அவருக்குக் குழந்தை இல்லை என்பதாலே மற்றவர்களுக்குக் குழந்தை இருப்பதைப் பார்த்து வயிறெரிவார்.
“குழந்தைன்னா அழத்தான் செய்யும். பச்சக்குழந்தையோட வாயை எப்படி மூடுவது? நீங்க வேணா உங்க காதை மூடிக்கோங்க” இங்கிருந்து ஜன்னல் வழியாகப் பதிலுக்குக் கத்தினாள் கீதா.
“அவங்கதான் புரியாம சத்தம் போடுறாங்கன்னா நீயும் ஏன்மா இப்படி? அமைதியா இரு!” அவளைத்தான் அடக்கினான் மாதேஷ்.
“இல்லை மாதேஷ், வரவர ஹவுஸ் ஓனரோட அட்டூழியம் அதிகமாகிட்டே போகுது. நமக்கு கல்யாணமாகி நான் இங்கே வந்தபோது என்கிட்ட நல்லாத்தான் பேசினாங்க. நம்ம நிலா பாப்பா பிறந்ததிலிருந்து அவங்க நடந்துக்கிறது ஒன்னும் சரியில்ல. பிள்ளை அழுதால்கூட அதைப் பெரிய குறையா சொல்லி இப்படித்தான் சத்தம் போடுறாங்க”
“ஹவுஸ் ஓனர்னா அப்படித்தான் கீதுமா. நாமதான் அனுசரிச்சு போகணும். நீ முதலில் ஜன்னலை மூடு!” என மாதேஷ் சொல்லிக்கொண்டிருக்கும்போது, “ஏய் கீதா… வெளிய வாடி!” பொன்னி வாசலில் நின்று கத்தினார்.
இருவரும் அழுதுகொண்டிருந்த குழந்தையுடன் வெளியே வர, “என்ன சொன்ன, என் காதை மூடணுமா? என் வீட்டில் குடியிருந்துகிட்டு என்கிட்டயே எகத்தாளமா பேசுவியா? ஒரு குட்டிச் சாத்தானை பெத்துப் போட்டிருக்க. அது எந்த நேரம் பார்த்தாலும் வீல்வீல்னு கத்திக்கிட்டே கிடக்கு. மனுஷ மக்கா நிம்மதியா பக்கத்துல இருக்க முடியலை. வீட்டை வாடகைக்கு விட்டுட்டு உங்களோட பெரும் போராட்டமா இருக்கு எங்களுக்கு. ஒழுங்கு மரியாதையா இருக்கணும்னா இருங்க. இல்லனா வீட்டை காலி பண்ணிட்டு போய்க்கிட்டே இருங்க. இங்க நான் வச்சதுதான் சட்டம். வாயை மூடுன்னு நான் சொன்னா மூடியாகணும், புரியுதா?” கடுமையாக எச்சரித்தார் பொன்னி.
“என்ன, எங்க பாப்பா உங்களுக்குக் குட்டிச் சாத்தானா? என்ன இப்படி எல்லாம் பேசுறீங்க? உங்க வீட்டில் வாடகைக்கு இருந்தா எங்க பிள்ளையைத் தப்பா பேசுவீங்களா?” குரலை உயர்த்தி கோபத்தைக் காட்டினாள் கீதா.
“கீதுமா, பிரச்சினை வேணாம்”
மாதேஷ் தடுக்க, “என்ன மாதேஷ், நம்ம நிலா பாப்பாவை குட்டிச் சாத்தான்னு சொல்றாங்க. கேட்டுட்டு சும்மா இருக்கச் சொல்றீங்க?” அவனிடமும் கோபப்பட்டாள்.
“என்ன பொன்னி, நாடகத்தைப் பார்க்காம இங்க நின்னுட்டு இருக்க?” வெளியே சென்றுவிட்டு வந்த கலிவரதன் மனைவியிடம் கேட்க, பொன்னி விஷயத்தை சொன்னார்.
“இதுக்கா அவங்களை வீட்டை காலி செய்யச் சொன்ன? குழந்தை இருக்கும் வீடு அப்படித்தான் இருக்கும். பிரச்சினை பண்ணாம போய் நாடகத்தைப் பாரு. நீயும் கீதாவை உள்ளே கூட்டிட்டு போ மாதேஷ்” நடுவராக நின்று பிரச்சினையை முடிவுக்குக் கொண்டுவந்தார் கலிவரதன்.
வீட்டிற்குள் வந்த கீதா கணவன் மேல் கோபமாக இருந்தாள்.
“கீதுமா” மாதேஷ் சமாதான அழைப்புவிடுக்க, கடுமையாக அவனை முறைத்தாள்.
“கோபப்படாதேடாமா. அவங்க அப்படித்தான்னு தெரியும். நாமும் பதிலுக்குப் பதில் பேசினால் பிரச்சினைதானே வளரும்? அதான் உன்னை அமைதியா போகச் சொன்னேன்”
“அவங்க எப்ப பார்த்தாலும் நம்ம பிள்ளையைக் கரிச்சு கொட்டிட்டே இருக்காங்க மாதேஷ். குட்டிச் சாத்தான்னு சொல்றாங்க. அப்புறமும் கேட்டுட்டு சும்மா இருக்கச் சொல்றீங்களா? எல்லாத்துக்கும் அமைதியா போகணும்னு அர்த்தமில்லை மாதேஷ். பேச வேண்டிய இடத்தில் பேசித்தான் ஆகணும்.” என்றாள் வெடுக்கென்று.
“சரி, பேசலாம். இப்ப பாப்பாவை கவனி, விடாமல் அழறாள் பாரு” பேச்சை மாற்றிப் பிள்ளையை அவளிடம் கொடுத்தான்.
கோபம் குறையாமல் மகளைக் கவனிக்க ஆரம்பித்தாள்.
அமைதியான குணமுடைய மாதேஷ் எந்த வம்பிற்கும் செல்லமாட்டான். எதிர் எதிர் குணங்கள் ஈர்ப்பதுபோல் அவனை அறிந்துதான் கீதா காதலித்தாள்.
இருவருமே ஒருவர் மீது ஒருவர் அபரிமிதமான அன்பு கொண்டவர்கள்தான். கீதா கல்லூரியில் படித்துகொண்டிருந்தபோது ஒரு விபத்தில் பெற்றவர்களை இழந்தபின், அவளின் வாழ்வில் வந்தவன்தான் மாதேஷ். அவளுக்கு அனைத்துமே அவனாகிப் போய், காதலில் கசிந்துருகி, கணவன் மனைவியாகி, இப்பொழுது ஒரு பெண் குழந்தைக்குப் பெற்றவர்களும் ஆகியிருந்தனர்.
அவர்கள் வாழ்வு எந்தவித இன்னல்களும் இல்லாமல் இனிமையாகத்தான் நகர்ந்துகொண்டிருந்தது. கணவன் மனைவிக்குள் ஊடல் வரும்போது கூட, கீதாதான் கோபத்தைக் காட்டுவாள். மாதேஷ் அவளை அமைதியாக எதிர்கொள்வான்.
இணைக்கு இணையாக இணையரும் கத்தினால், அங்கே சண்டை வலுக்கவே செய்யும். ஆனால், சாந்த சொரூபியாக மாதேஷ் அவளிடம் அன்பை மட்டுமே திருப்பித் தரும்போது அவள் எப்படிக் கோபத்தைக் காட்டுவதாம்?
அன்றும் அதுவே நடந்தது.
குழந்தை உறங்கியதும், ஊடலில் கீதா திரும்பிப் படுத்துக்கொள்ள, அவளைப் பின்னாலிருந்து நெருங்கிய மாதேஷ், “கீதுமா” இரகசிய அழைப்புவிடுத்தான்!
பதிலில்லை அவளிடம்!
“நம்ம நிலா பாப்பா பிறந்து எட்டு மாதமாகியும், அவளுக்கு இதுவரை எதுவுமே தங்கமா வாங்கிப் போடலைன்னு செயினும், நம்ம நிலாவுக்குப் பொருத்தமா முழுநிலவு டாலரும், அதில் ஒரு பக்கம் என் இன்ஷியலும், இன்னொரு பக்கம் உன் இன்ஷியலும் பதித்து, இன்னைக்குத்தான் ஆசையா வாங்கிட்டு வந்தோம். வரும் வழியிலேயே சின்னதா ஆக்ஸிடென்ட், அடுத்தடுத்துப் பிரச்சினை... இன்னைக்கு எதுவுமே சரியில்லை. வீட்டுக்கு வந்ததும், பாப்பாக்கு அந்தச் செயினைப் போட்டு, அவள் கூட நாமும் விதவிதமா போட்டோ எடுக்கணும்னு ஆசையா இருந்தேன், நடக்கலை. மனசுக்கு கஷ்டமா இருக்கு கீதுமா” மாதேஷ் வருத்தமாகப் பேச, கணவனின் சோகம் பொறுக்கவில்லை மனைவிக்கு.
கோபத்தை இழுத்து பிடிக்க முடியாமல் கணவனின் பக்கம் திரும்பிப் படுத்தவள், “நிலா பாப்பாக்கு நாளைக்குச் செயின் போட்டு நாம போட்டோ எடுக்கலாம் மாதேஷ்மா. இதுக்கெல்லாம் வருத்தப்படலாமா? ஓனரம்மா பேசியது தப்பு! அதுதான் எனக்குக் கோவம் வந்துருச்சு” என்றாள் கீதா.
“ஓனரம்மா கொஞ்சம் அப்படி இப்படி இருந்தாலும், கலிவரதன் அங்கிள் ரொம்ப நல்லவர் கீதுமா.”
“அதனால்தான் அவர் வந்து பேசியதும் நான் அமைதியா வந்துட்டேன். ஆனால், அதுக்காக எப்பவும் அமைதியா இருக்க மாட்டேன் மாதேஷ். எனக்குச் சப்போர்டா பேசலைனாலும் என் வாயை மூட சொல்லாதீங்க”
“சரி, சரி… நான் வேறவிதமா உன் வாயை மூட வைக்கிறேன்” என்றவன் மனைவியின் இதழில் அழுத்தமாய் முத்தம் வைத்து சமாதான உடன்படிக்கைக்கு அச்சாரம் வைத்தான்.
“இன்னைக்கு எவ்வளவு ஆசையா இருந்தேன் தெரியுமா? ஆனால், இந்தக் கை…” கட்டுப்போட்ட கையை மாதேஷ் காட்ட, “ஹாஸ்பிடலில் வச்சு கழற்றிய உங்க பிரேஸ்லெட் என் பேக்கில் இருக்கு மாதேஷ். அது இல்லாம உங்க கை வெறுமையா இருக்கு. கை சரியானதும் மறக்காமல் போட்டுக்கோங்க” என்றாள் கீதா.
“நான் என்ன சொன்னால், நீ…” மாதேஷ் கேட்க, அவனைப் பார்த்து குறும்புடன் கண்சிமிட்டிய கீதா, “ஆசைக்கு அணை போடக்கூடாது மாதேஷ்மா” குழைவாகச் சொன்னவள், தானே கணவனை நெருங்கினாள்.
மறுநாள் குழந்தைக்கு வாங்கிய செயினை அவளுக்குப் போட்டு அழகுப் பார்த்து அவளுடன் விதவிதமான புகைப்படங்களும் எடுத்துக்கொண்டனர்.
*****
“கவிதையான குடும்பம்தான் உன்னோடது கீதாஞ்சலி. ஆனால், பொன்னிதான் உங்கள் வாழ்க்கையில் பிரச்சினையை உண்டாக்கியதுபோல் தெரியுது. நல்லவராக இருந்த கலிவரதனை ஏன் நீ கொல்லணும்? அதுவும் ஆசிட்டை அவர் கண்ணில் ஊத்தி, உடலில் பல இடங்களில் குத்தி?” யோசனையுடன் கேட்டான் பிரதாப்.
“இந்த உலகத்தில் என் மாதேஷ், மனோகர் அண்ணா மாதிரி வெகு சிலரை தவிர, எவனுமே நல்லவன் இல்லை பிரதாப். நீ உட்பட!” இகழ்ச்சியாகச் சொன்ன கீதாஞ்சலியின் கண்களிலிருந்து திடீரெனக் கண்ணீர் வெளியேற ஆரம்பித்தது.
“உயிருக்கு உயிரான இரண்டு உயிர்களை ஒரே நேரத்தில் இழந்து நிர்க்கதியா நிற்பது எவ்வளவு பெரிய வலி தெரியுமா பிரதாப்? அதுவும் சந்தோஷமான வாழ்க்கை சிதைந்து, திடீரென எல்லாம் மாறி அதன் காரணம் ஏன் எதுக்குன்னு தெரியாமல் குழம்பி தவித்து, உண்மை தெரியவரும்போது எதுவுமே செய்யமுடியாமல், கண் முன்னாடி அவங்க உயிர் கொஞ்ச கொஞ்சமா போவதை பார்ப்பது… நரகம் பிரதாப்! அந்த நரகத்தை நான் கண்முன்னால் பார்த்தேன் பிரதாப்!” கீதாஞ்சலியின் குரலொலி உடைந்து சிதறியது.
****
“நிலா பாப்பாக்கு நான் ஃபீட் செய்வதில் உங்களுக்கு என்னதான் பிரச்சினை மாதேஷ்? எதுக்கு நீங்க இப்படியெல்லாம் பேசிட்டு இருக்கீங்க?”ஆதங்கமாகக் கீதா கேட்க,
“நான் சொன்னதைச் செய்வதில் உனக்கு என்ன பிரச்சினை கீதா? பாப்பாவுக்கு ஒரு வயசு ஆகப்போகுது. இன்னும் ஏன் அவளுக்கு ஃபீட் செய்யணும்னு பிடிவாதம் பிடிக்கிற? நிறுத்துன்னு சொன்னால் நிறுத்தேன்” சிடுசிடுப்புடன் சொன்ன கணவனை நம்ப முடியாமல் பார்த்தாள் கீதா.
அவனுக்கு இப்படிக்கூடப் பேசத்தெரியும் என அவளுக்கு இப்போதுதான் தெரியும். காதலித்த காலத்திலிருந்து ‘கீதுமா’ என அன்பாக அழைத்து, அன்பை மட்டுமே பிரதிபலிப்பவனின் பேச்சிலும், செயலிலும் கடந்த சில நாட்களாகப் பெரும் மாற்றம். எப்போதும் பதற்றத்துடனே இருந்தான். அவள் விசாரித்தால் கோபப்பட்டான். ‘அலுவலகத்தில் பிரச்சினையா?’ எனக் கேட்டால் மௌனம் சாதித்தான்.
ஏன் எதற்காக இப்படி இருக்கிறான் ஒன்றும் புரியவில்லை அவளுக்கு.
“பாப்பா பிறந்து பத்து மாதங்கள்தான் ஆகுது மாதேஷ். ஒரு வயசுவரை ஃபீட் பண்ணலாம்னு நாம பேசியதுதானே? இப்ப ஏன் இப்படி மாத்தி பேசுறீங்க?” கீதா கேட்க,
“நான் சொன்னதை மட்டும் செய் கீதா. சும்மா என்னை எதிர்த்துப் பேசாதே!” கோபமாகச் சொல்லிவிட்டுச் சென்றான்.
ஒரே நாளில் நிறுத்த முடியாதே? மெல்லத்தானே நிறுத்த முடியுமென, குழந்தை அழுதபோது கீதா படுக்கையறையில் அமர்ந்து அமுதூட்ட, அப்போது உள்ளே வந்த மாதேஷ், “கீதா நான் அவ்வளவு சொல்லியும் என்ன பண்ற?” கத்தியவாறு அருகில் வந்து வெடுக்கென்று அவளின் மடியிலிருந்த பிள்ளையைத் தூக்கியவன், அவளின் முந்தானையை நேராக இழுத்துவிட்டு, குழந்தை அழுததையும் பொருட்படுத்தாமல் வெளியே தூக்கிச் சென்றான்.
மார்பில் வலி எடுக்கத் திகைத்து அமர்ந்திருந்த கீதா, குழந்தை இன்னும் அழுதுகொண்டிருக்கவும் வெளியே வந்தாள்.
“ஸாரி பாப்பா. உனக்கு அப்பா பால் காய்ச்சி தர்றேன். அதைக் குடிக்கலாம்” மகளைச் சமாதானம் செய்தவாறு அடுப்பில் பாலை காய்ச்சிக்கொண்டிருந்தான்.
“உங்க மனசில் என்ன நினைச்சுட்டு இருக்கீங்க மாதேஷ்? குழந்தைக்கு ஃபீட் செய்யும்போது இப்படித்தான் பிடுங்கிட்டு வருவீங்களா? அவளை என்கிட்ட கொடுங்க, நான் பார்த்துக்கிறேன்” கீதா கோபமாக மகளைக் கேட்க,
“கொடுக்க முடியாது கீதா. நான் திரும்பத் திரும்பச் சொல்லிட்டே இருக்கேன். நீ என்னடா சொல்வது, நான் என்னடா கேட்பதுபோல ஃபீட் பண்ற. அவளுக்கு நான் பாலைக் காய்ச்சி கொடுத்துக்கிறேன். நீ போ!” முகம் சிவக்க மகளை அவளிடம் தர மறுத்தான்.
“நீங்க நடந்துகொள்வது எதுவும் சரியில்லை மாதேஷ்!” மனைவி குற்றம்சாட்டியதை பொருட்படுத்தாமல் மகளுக்குக் காய்ச்சிய பாலை கொடுப்பதில் கவனமாகியிருந்தான்.
அன்று இரவு கூடத்தில் மாதேஷ் இரண்டு படுக்கைகளை விரித்து, ஒன்றில் குழந்தையைப் படுக்க வைத்து, அருகில் சாய்ந்தான். சமையலறை வாசலில் நின்று அவனை முறைத்துக்கொண்டிருந்தாள் கீதா.
“படுத்து தூங்கு கீதா” அவளின் தனிப்படுக்கையைச் சுட்டிக்காட்டினான்.
“இந்த வீட்டில் என்னதான் நடக்குது மாதேஷ்? நானும் பார்த்துட்டே இருக்கேன், பத்து பதினைந்து நாளா நீங்க செய்வது எல்லாமே ரொம்பக் குழப்பமாகவும், புரியாத புதிராகவும் இருக்கு. பெட்ரூமில் கட்டில் இருக்கும்போது நாம ஏன் இப்ப இங்கே வந்து தரையில் படுக்கணும்? அதுவும் தனித் தனியா?” கேட்டவளுக்குப் பதில் சொல்லாமல் கண்களை மூடிக்கொண்டான் அவளின் கணவன்.
கீதாக்குக் கோபமாக வந்தது. அழுகையும் வந்தது. இப்படி மௌனமே பதிலாகத் தருபவனின் மீது எதையாவது தூக்கி எறிய வேண்டும்போல் இருந்தது. கண்களை இறுக மூடி, இழுத்து இழுத்து மூச்சை விட்டுத் தன்னைக் கட்டுப்படுத்த போராடியவள், அப்படியும் கோபத்தைக் குறைக்க முடியாமலே தனியாகக் கிடந்த படுக்கையில் சென்று படுத்துக்கொண்டாள்.
அவள் கோபம் கொண்டால் சமாதானம் செய்ய வரும் மாதேஷ் வரவே இல்லை. அன்று மட்டுமல்ல, அடுத்தடுத்த நாட்களும் அதுவே தொடர, வீட்டில் நிம்மதியின்மை நிலவியது. கண்ணீரால் கீதாவின் தலையணை நனைந்தது.
“மாதேஷ் உங்ககிட்ட எதுவும் சொன்னாரா அண்ணா?” ஒரு நாள் கீதா கேட்க, சோக முகமாக இருந்தவளைக் குழப்பமாகப் பார்த்தான் மனோகர்.
திடீரென அவள் இப்படிக் கேட்டது புரியவில்லை அவனுக்கு.
“என்ன விஷயமா கீதா?” என்று கேட்டவனிடம் என்ன சொல்வாள்? வீட்டில் கணவன் தன்னிடம் வேறுபாடாக நடந்துகொள்கிறான் என்பதை இவனிடம் அவளால் சொல்ல முடியவில்லை.
“அது… வேலை விஷயமா? அவர் வேலை பார்க்குமிடத்தில் எதுவும் பிரச்சினையான்னு” நண்பனிடம் எதுவும் மனம்விட்டு பேசியிருப்பானோ எனக் கேட்டாள்.
“இல்லையே கீதா. அவன் என்னிடம் சரியா பேசியே ஒரு வாரத்துக்கு மேல இருக்கும். நான் என் இடம் விஷயமா கலிவரதன் அங்கிள் கூட அலைஞ்சிட்டு இருக்கேன். நைட்டும் மாதேஷை நான் பார்க்கலையே. நான் வேணா அவனை விசாரிக்கிறேன்.”
“இல்லைண்ணா… நான் சும்மாதான் கேட்டேன். நீங்க மாதேஷிடம் எதுவும் கேட்க வேணாம்ணா” என்று சொல்லிவிட்டுக் கீதா சென்றுவிட்டாலும், என்றும் இல்லாமல் கீதா கேட்டபின் அப்படியே விட்டுவிடாமல், நண்பனை சந்தித்து விசாரித்தான்.
“என்ன மாதேஷ், வேலை எல்லாம் எப்படிப் போகுது?”
“அதெல்லாம் நல்லாத்தான் போகுது மனோ”
“அப்படியா? அப்ப வேற என்ன பிரச்சினை?
“என்ன? என்ன பிரச்சினை? எனக்கு எதுவும் பிரச்சினை இல்லையே” மாதேஷ் சட்டென்று பதற்றமடைந்திருந்தான்.
“எதுக்கு நீ இவ்வளவு டென்சனாகுற? நான் நார்மலாத்தானே கேட்டேன்?” மனோகர் சந்தேகத்துடன் கேட்க,
“ஒன்னுமில்லையே… ஆனா நீ ஏன் என்ன பிரச்சினைன்னு கேட்ட?”
“அது கீத்…” ஆரம்பித்து, சட்டென்று பேச்சை நிறுத்தியவன், “உன் முகமே சரியில்லையே. அதான் கேட்டேன்.” என்றான்.
“இல்லை, நீ கீதான்னு ஏதோ சொல்ல வந்த. என்ன சொல்ல வந்த? கீதா பத்தி என்ன தெரியும் உனக்கு?” அவனை உலுக்கி கேள்வி கேட்டான்.
மாதேஷ் வித்தியாசமாக நடந்து கொள்வதைப் பார்த்து மனோகர் அதிர்ச்சியானான். என்னாச்சு இவனுக்கு?
“மாதேஷ், என்னடா? கீதா முகமும் சரியில்லை, நீயும் எப்படியோ இருக்க. அதைக் கேட்டால்…”
“அவ்வளவுதானா? வேற இல்லையே?” தளர்ந்து கேட்டான்.
“வேற என்ன இருக்கு?” சந்தேகம் துளிர்க்க மனோகர் கேட்க,
“வேறெதுவும் இல்லையே…” என்ற மாதேஷ் அங்கிருந்து நகர, அவனை நிறுத்திய மனோகர், “எதுவும் பிரச்சினைனா சொல்லு மாதேஷ். பார்த்துக்கலாம், நான் இருக்கேன் உன் கூட” என்றான்.
கண்கள் கலங்கின மாதேஷூக்கு. உடனே மறைத்துக்கொண்டவன், “எதுவும் இல்லை மனோ” என்று சொல்லிவிட்டு சென்றவன் ஏதோ யோசித்ததுபோலத் திரும்பி வந்து, “நீ… நீ ஏன் வேற வீடு மாறிப் போகக் கூடாது மனோ? இங்கேயே எவ்வளவு நாள் இருப்ப? வேற நல்ல வீடு பார்த்துப் போயேன்” என்றான்.
“இதென்னடா இப்படிச் சொல்ற? இங்கேயே வசதியாத்தானே இருக்கு. இப்ப ஏன் வீடு மாறணும்?”
“அது… உன் நல்லதுக்குத்தான் சொல்றேன். இங்கே இருக்காதே மனோ! சீக்கிரம் காலி செய்து இங்கிருந்து போயிடு” அங்கேயே நின்றால் இன்னும் கேள்வி கேட்பானோ எனச் சொல்லிக்கொண்டே அங்கிருந்து சென்றிருந்தான் மாதேஷ்.
“இவனுக்கு என்னாச்சு? திரும்ப இன்னொரு நாள் விசாரிக்கணும்” தனியாக நின்று புலம்பினான் மனோகர். ஆனால், அப்படி விசாரிக்கக் கூடிய சந்தர்ப்பத்தையே மாதேஷ் அவனுக்குக் கொடுக்கப் போவதில்லை என்பதை அவன் அறியவில்லை.
இரண்டு மூன்று நாட்கள் சென்ற நிலையில் இரவு உறங்கிக்கொண்டிருந்த கீதாக்கு ஏதோ சத்தம் கேட்பது போலிருக்க, விழித்துப் பார்த்தாள். உறங்காமல் இங்கே அங்கே என அறைக்குள் ஏதேதோ தேடிக்கொண்டிருந்தான் மாதேஷ்.
“என்ன தேடுறீங்க மாதேஷ்?”
“ஒன்னுமில்லையே” திடுக்கிட்டு விரைந்து படுக்கைக்கு வந்து படுத்துக்கொண்டான்.
தன் படுக்கையிலிருந்து எழுந்து அவனின் அருகில் வந்தமர்ந்த கீதா, “உங்களுக்கு என்னதான் ஆச்சு மாதேஷ்? என்கிட்ட சொல்லுங்களேன். உங்க கீதுமா தானே நான். நீங்க நடந்துகொள்வதை எல்லாம் பார்த்தால் எனக்கு ரொம்பப் பயமா இருக்கு மாதேஷ். உங்களுக்கு எதுவும் பிரச்சினை இருந்தால் சொல்லுங்க. நாம இரண்டு பேரும் சேர்ந்தே அதைச் சமாளிப்போம்.” மனம் கலங்க சொன்னாள்.
“ஏன் ஆளுக்கு ஆள் என்ன பிரச்சினைனே கேட்கிறீங்க? அதான் ஒன்னுமில்லைன்னு சொல்றேனே. இப்ப எதுக்கு நீ இங்கே வந்து உட்கார்ந்திருக்க? உன் படுக்கைக்குப் போ…” கோபத்துடன் விரட்டினான்.
அதிர்ந்து பார்த்த கீதாக்கு மூளை கலங்கும்போல் இருந்தது. மாறும் வானிலையாகக் கணவனின் நடவடிக்கைகள் அவளை மேலும் மேலும் குழப்பத்திலும், கவலையிலும் தள்ளின.
ஒருவேளை உடல் ரீதியாக எதுவும் பிரச்சினையோ? அதனால்தான் தன்னிடம் சொல்ல முடியாமல் தனியாகத் தவிக்கிறானோ? தான் அவனைத் தவறாக நினைப்போம் என மறைக்கிறானோ? என யோசித்தாள். ஆனால், இதுநாள்வரை அவனுடன் வாழ்ந்த அந்தரங்க வாழ்க்கை ‘இல்லை, அப்படி இருக்காது’ என்பதை மனம் எடுத்துச் சொன்னாலும், ஒருவேளை அதனால்தானோ தன்னைத் தனியாகப் படுக்கச் சொல்கிறான் என நினைத்தவள், பட்டென்று அவனின் மீது சாய்ந்து படுத்து அணைத்திருந்தாள்.
“உங்களுக்கு எதுவும் ‘அந்த’ மாதிரி பிரச்சினைனா கூட என்கிட்ட தயங்காமல் சொல்லுங்க மாதேஷ். நான் தப்பா நினைக்க மாட்டேன். இப்ப எத்தனையோ ட்ரீட்மெண்ட் இருக்கு. சரி பண்ணிடலாம்” என்றாள் ஆறுதலாக.
அவனோ, சட்டென்று அவளை உதறியவாறு எழுந்து தள்ளிப் போனான். “ஏய், என்ன பண்ற? இங்கிருந்து போ! என் பக்கத்தில் வராதே! இப்ப எதுக்கு நீ என் பக்கத்தில் வந்து கட்டிப்பிடிச்ச? தள்ளிப்போ” ஆவேசமாகக் கத்தியவன் பரபரவெனக் கண்களால் இருட்டில் அந்த அறையில் எதையோ தேடினான்.
அவன் உதறி தள்ளியதிலேயே உயிரற்றவள் போல் உறைந்து போனாள் கீதா. அவளின் மாதேஷிடமிருந்து இப்படிப் புறக்கணிப்பை அவள் எதிர்பார்க்கவில்லை. அவளின் கண்களிலிருந்து சரசரவெனக் கண்ணீர் வெளியேறியது.
“இன்னும் என்ன இங்கேயே உட்கார்ந்திருக்க? எழுந்து போ” விரட்டினான்.
அத்தனை நாட்கள் அவர்கள் வாழ்ந்த அன்னியோன்யமான வாழ்க்கை அவளைப் பார்த்துக் கேலியாகச் சிரிப்பது போலிருந்தது.
வீட்டில் நிலவிய அசாதாரண நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போக, கணவனும், மனைவியும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க அஞ்சியவர்கள்போல் விலகி நின்றனர். அவர்களுக்கு நடுவிலிருந்த குழந்தையால் கூட அவர்களை இணைக்க முடியவில்லை.
மாதேஷின் மாற்றத்தால் உண்டான மனக்குழப்பத்தால் மட்டுமில்லாமல், திடீரெனத் தாய்ப்பாலை நிறுத்தியதால் இரண்டு மூன்று நாட்களாகவே கீதாக்கு உடல்நிலை வேறு படுத்தியது. அதிலும் அன்று எழுந்துகொள்ளக் கூட முடியாமல் காய்ச்சலாக இருக்க, படுக்கையில் சுருண்டு கிடந்தாள்.
அன்று மாலையளவில் வெளியே சென்றுவிட்டுவந்த மாதேஷ் நிதானமாகவே இல்லை. இன்னும் அலைக்கழிப்புடன் இருந்தான். காய்ச்சலாகக் கிடந்த மனைவியைப் பார்த்தாலும் அவளுக்கு எதுவும் உதவி செய்யாமல் ஏதோ யோசனையிலேயே இருந்தான். இருவரும் தன்னைக் கவனிக்காததால் குழந்தை வீறிட்டு அழ, குழந்தையை வெறித்துப் பார்த்தான்.
“மாதேஷ், என்னால் முடியலை. ரொம்பக் காய்ச்சலா இருக்கு. என்னைப் பார்க்கலைனாலும் பரவாயில்லை. நம்ம பாப்பாவை கவனிச்சுக்கோங்க, ப்ளீஸ்!” என்று கெஞ்சிய மனைவியையும் விழியகலாமல் பார்த்தான்.
எதுவும் பேசாமல் எழுந்து குழந்தையைத் தூக்கியவன், சமையலறைக்குச் சென்றான்.
சிறிது நேரத்தில் சுடச்சுட ஒரு பாத்திரத்துடன் வந்து, “கீதுமா, எழுந்திரி சூடா கஞ்சி வச்சேன். குடிக்கலாம்” என்று மென்மையாக அழைத்தான் மாதேஷ்.
யுகங்களாய் தோன்றிய நாட்களுக்குப்பின் அவனின், ‘கீதுமா’ என்றழைப்பு அவளை உடைத்துப்போட்டது. கண்ணீருடன் அவனையே பார்த்தாள்.
குழந்தையுடன் அவளின் எதிரே அமர்ந்து, கண்ணீரை துடைத்துவிட்டவன், “அழாதே கீதுமா! ஸாரி, நான் உங்கிட்ட அப்படிக் கோபப்பட்டிருக்கக் கூடாது! நீ என்ன பண்ணுவ? பாவம்! நான்தான் புரியாமல் ஏதோ தப்புப் பண்ணிட்டேன். உன்னைத் திட்டியிருக்கக் கூடாது, உதறியிருக்கக் கூடாது, கத்தியிருக்கக் கூடாது! ஏதோ புரியாம பண்ணிட்டேன், மன்னிச்சுடு. இனி அப்படிப் பண்ண மாட்டேன், காட் பிராமிஸ்!” என்றான் கெஞ்சலாக.
கீதா பதில் பேசாமல் அமைதியாக இருந்தாள். இவ்வளவு நாட்கள் ஏன் அப்படி நடந்துகொண்டான். இப்போது எப்படி இப்படி மாறினான்? எதுவும் புரியவில்லை.
“நான்தான் ஸாரி சொல்றேன்ல? உன் மாதேஷை நீ மன்னிக்க மாட்டியா?” உருக்கமாகக் கேட்டான்.
“எனக்குன்னு உங்களையும், நம்ம பாப்பாவையும் தவிர வேற யார் இருக்கா மாதேஷ்? எனக்கு எல்லாமே நீங்க மட்டும்தானே! உங்களை மன்னிக்காம நான் என்ன பண்ண போறேன்? ஆனா, இனி இப்படி நடந்துக்காதீங்க மாதேஷ்! வலிக்குது மாதேஷ்! உங்க கீதுமாவுக்கு ரொம்ப வலிக்குது!” என்று அவனின் மார்பில் சாய்ந்து கதறினாள் கீதா.
அவனின் உடல் விறைத்து உடனே தளர்ந்தது. ஒரு கையால் குழந்தையையும், மறு கையால் மனைவியையும் அணைத்துக்கொண்டான், சற்று அழுத்தமாகவே!
அதில் குழந்தை சிணுங்க, அவளோடு மனைவியையும் சமாதானம் செய்தான்.
“சரி, சரி அழாதே கீதுமா! என் கீதுமாவுக்கு எந்த வலியையும் தர மாட்டேன், வர விடவும் மாட்டேன்! அவளுக்கு நிம்மதியை மட்டும்தான் தருவேன். இந்த மாதேஷை நீ நம்புற தானே?” என்று கேட்டான்.
“கண்டிப்பா மாதேஷ்!” என்றாள் கீதா.
அவளின் கன்னத்தில் அழுத்தமாக முத்தம் வைத்தவன், மகளையும் உச்சி முகர்ந்தான்.
“உனக்கு ரொம்பக் காய்ச்சலா இருக்கு போலிருக்கே கீதுமா. முதலில் கஞ்சியைக் குடி!” என்று அவளுக்குக் கொடுத்தவன், தானும் ஒரு டம்ளரில் எடுத்துக்கொண்டான்.
“நீங்களும் ஏன் கஞ்சி?”
“நம்ம மூனு பேருக்கும் ஒரே சாப்பாடுதான், குடி கீதுமா” என்றவன் அவள் குடிப்பதை பார்த்துக்கொண்டே, குழந்தைக்கும் கொஞ்சம் கொடுத்து, தானும் குடித்தான் மாதேஷ்.
கீதாக்கு கஞ்சியைக் குடிக்கும்போதே உமட்டிக்கொண்டு வந்தது. அவள் ஓங்கரிக்க, “என்னாச்சு கீதுமா?” பதறி கேட்டான்.
“குடிக்கவே முடியலை மாதேஷ். வாந்தி வர்ற மாதிரி இருக்கு.” என்றாள்.
“காய்ச்சலினால் இருக்கும். இன்னும் கொஞ்சம் குடிச்சுடுமா, ப்ளீஸ்!” என்றான் கெஞ்சலாக.
முயன்று கீதா குடிக்க, மீண்டும் குழந்தைக்குக் கொடுத்து மீதி இருந்ததை மொத்தமாக வாயில் சரித்துக்கொண்டான் மாதேஷ்.
கீதாவால் ஓங்கரிப்பை கட்டுப்படுத்தவே முடியவில்லை. இருந்த இடத்திலேயே கடகடவென அவள் வாந்தி எடுக்க ஆரம்பித்தபோது, மாதேஷின் கையிலிருந்த குழந்தை மயங்கி தந்தையின் கைகளிலேயே சரிந்தாள்.
“நி…லா… பா…ப்பா… என்னாச்சு?” வாந்தி எடுத்ததும் கீதா பிள்ளையைப் பார்த்து பதற, “நம்ம நிலா பாப்பா நிம்மதியா தூங்க ஆரம்பிச்சிட்டா கீதுமா” என்ற மாதேஷின் கண்களும் சொருக ஆரம்பித்தன.
“மாதேஷ்… நிலா… என்னாச்சு உங்களுக்கு?” இருவரையும் பார்த்துக் கீதா துடிக்க, “நீ… நீயும் கஞ்சியைக் குடிச்சிட்டு எங்களோட வந்துடு கீதுமா. இந்த உலகத்தில் இருக்காதே. வந்துடு… உனக்காகத்தான்… நான்… விஷம்… இந்த முடிவு…” அவன் திணற,
“ஐயோ! என்ன பண்ணீங்க மாதேஷ்? நிலா பாப்பா…” கதறியபடி தலைச்சுற்ற தள்ளாடி எழுந்தவள் சமையலறைக்குச் சென்றாள். அங்கே விஷப்பாட்டில் இருக்க, அதைப் பார்த்து அழுதபடி, தண்ணீரில் உப்பை அதிகமாகப் போட்டு கரைத்து எடுத்து வந்து, மயக்கமாக இருந்த குழந்தையின் வாயிலும், கணவனின் வாயிலும் ஊற்றினாள். அவனோ குடிக்க மாட்டேன் என மறுத்தவன், அவளையும் கஞ்சிக் குடிக்கச் சொல்லி மன்றாடினான்.
“மாதேஷ்… குடிங்க மாதேஷ்! ஏன் இப்படிச் செய்தீங்க மாதேஷ்? பாப்பா…” கணவனைப் பார்ப்பதா? குழந்தையைப் பார்ப்பதா? புரியாமல் தவித்து இரண்டு பேரையும் அடுத்தடுத்து கவனித்து உப்பு நீரை புகட்டினாள். ஆம்புலன்ஸுக்கும் அழைத்தாள்.
அவளுக்கும் தலையைச் சுற்றியது. உடனே அவள் வாந்தி எடுத்தால் அவளுள் விஷம் வீரியத்துடன் இறங்கியிருக்கவில்லை.
குழந்தைக்கு உப்பு நீர் உள்ளே இறங்காமல் வெளியேற… அவளின் துடிப்பை பரிசோதித்த கீதாவின் இதயத்துடிப்பு நின்று துடித்தது.
“ஐயோ நிலா பாப்பா போய்ட்டியே!” எனக் கத்தினாள், கதறினாள், துடித்தாள்.
அதற்குமேல் தொடர்ந்து பிள்ளைக்காக அழக்கூட முடியாமல், மயங்கி தரையில் கிடந்த கணவனைக் கவனித்தாள். அவளுக்குத் தெரிந்த இன்னும் சில முதலுதவிகளைச் செய்தாள். அதன் பலனாய் லேசாகக் கண்ணைத் திறந்து பார்த்தான் மாதேஷ்.
“ஏன் மாதேஷ் இப்படிப் பண்ணீங்க? நம்ம பாப்பா நம்மை விட்டு போயிட்டா. ஏன் அவளைக் கொன்னீங்க?” அவனைப் பிடித்து உலுக்கினாள்.
அவனின் கண்களிலிருந்து கண்ணீர் வெளியேறியது.
“நீ… நீயும்… எங்களோட…”
“ஏன் மாதேஷ் இப்படி?”
“அது… அது… அந்தக் கலிவரதன்… ரொ…ம்ப ரொ…ம்ப மோ…சம்… அவன் என்று திணறியவாறு நடந்ததைச் சொன்னான்.
***எபிசோடின் தொடர்ச்சி கீழே உள்ளது தொடர்ந்து படியுங்கள்
Previous thread
Next thread





























