Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
88
Reaction score
93
Points
18
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 4

கணவர் வீட்டுக்கு வந்ததும் வராததுமாக, தனக்கும் பிள்ளைகள் இருவருக்கும் நடந்த உரையாடலைச் சொல்லிவிட்டார் ஆனந்தி.

‘ஆனந்தி சூப்பர் மார்க்கெட்’ எனும் ஒரு பெரிய வணிக வளாகத்தையே தனியாக நடத்தி வரும் நடராஜன் மனைவி சொல்வதைப் புருவச் சுழிப்புடன் கேட்டவர், சற்று யோசனையுடன், "ரெண்டு பசங்க கல்யாணத்தையும் ஒண்ணாவே முடிச்சுட்டு, அவங்களைத் தனிக்குடித்தனம் வச்சுடுவோம். பொண்ணு நம்ம கூடப் படிச்சு முடியற வரைக்கும் நிம்மதியாக இருக்கட்டும், அப்புறம் அவளுக்கு வரன் பார்ப்போம்" என்று சொன்னார்.

தன் கணவன் கழற்றிக் கொண்டிருந்த சட்டையைத் தன் கையில் வாங்கியபடி, "இவங்க ரெண்டு பேரையும் பார்த்தா, சகாயன் முகத்துல முழிக்காம அவனைத் தனிச்சு விட்டுடுவாங்களோன்னு தோணுது" என்று தன் உள்ளக் கிடக்கையின் அலைப்புறுதலைக் கணவனிடம் சொன்னபடி, அந்தச் சட்டையைக் கொண்டு போய் ஹேங்கரில் மாட்டினார் ஆனந்தி.

தன் பிள்ளைகள் இறுதிக்காலத்தில் தன் கூடவே இருக்க வேண்டும் என்பதுதான் எல்லாப் பெற்றோரினதும் பேராசையாக இருக்கும். அப்படியிருக்க, தன் மூத்த மகனின் காதலால் குடும்பமே ஒருவித இறுக்கத்தில் இருப்பதை அவரும் உணர்ந்திருந்தார். அவரும் ஒரு சராசரித் தந்தைதான் எனினும், நடைமுறைவாதி மற்றும் தீர்க்கமானவர். அதனால் அந்தச் சூழலைச் சாமர்த்தியமாகக் கையாண்டார்.

"நாம உருவாக்கிக் கொடுக்கிற வாழ்க்கைன்னா பலதையும் யோசிச்சுச் செய்யலாம். ஆனா, இது அவன் முடிவு செய்த கல்யாணம். சாதக பாதகங்களை அவன்தான் யோசிக்கணும்" என்று சற்று கண்டிப்பும் கவலையும் கலந்த குரலில் சொன்னவர், "நீ ஒரு நாலு மணி போல பசங்க ரெண்டு பேரையும் கிளம்பி கல்யாணத்துக்கு வரச் சொல்லு. இன்னைக்கே பொண்ணு பார்க்கிற விஷயத்தை முடிச்சுடுவோம்" என்றார் நடராஜன்.

பெண் ஜாதகம் பொருந்தியிருக்கிறது என்று மட்டுமே சொன்ன கணவரிடம், அந்தப் பெண்ணைப் புகைப்படத்தில் கூடப் பார்த்திராத ஆனந்தி, "பொண்ணும் கல்யாணத்துக்கு வருமா?" என்று ஆர்வமாகக் கேட்டார்.


"நம்ம ஆடிட்டரோட ஃப்ரெண்ட் மகளைத்தான் கேட்டிருக்கு. அவரும் ஒரு ஆடிட்டர்தான். மகள் யாழினி இப்ப சி.ஏ கடைசி வருடம் படிக்கிறா. நம்ம ஆடிட்டர்கிட்டதான் பயிற்சியும் எடுத்துக்கிறா. நான் அங்கே அடிக்கடி போறப்ப அவளைப் பார்ப்பேன். குணத்துல அப்பழுக்கில்லாத பிள்ளை.

எனக்கு அவ மித்ரனுக்குச் சரியா இருப்பான்னு தோணுச்சு. அதான் நம்ம ஆடிட்டர்கிட்ட விசாரிச்சு, அவரிட்ட இருந்து ஜாதகம் வாங்கினேன். அவங்க அப்பாவும் பிள்ளை படிச்சு முடிச்சதுக்கு அப்புறம்தான் கல்யாணம்னு சொல்லி வச்சிருக்கார் போல. நான் ஜாதகம் கேட்ட உடனே கொடுத்தாலும், கல்யாணம் படிப்பு முடிஞ்சதும் தான்னு சொல்லிட்டார்.

அதனாலதான் நான் அதுவரைக்கும் அவசரப்படாம இருந்தேன். ஆனா, இப்ப சூழ்நிலை வேற மாதிரி இருக்கு. கேட்டுப் பார்ப்போம்... அவங்களுக்குக் கஷ்டம்னா நாம வேற பொண்ணைத்தான் பார்க்கணும்" என்றார் நடராஜன்.

தன் கணவர் ஒரு பெண்ணைப் பற்றி இவ்வளவு உயர்வாகச் சொல்கிறார் என்றால், அவள் நிச்சயம் குணவதியாகத்தான் இருப்பாள் என்ற நம்பிக்கை ஆனந்திக்கு வந்தது. இன்று கல்யாணமே ஆடிட்டர் மகளுக்கு எனும் பொழுது, நிச்சயம் அந்த நண்பர் குடும்பம் அங்கேயேதான் இருப்பார்கள். நாட்களைக் கடத்திக் கொண்டிருக்காமல் அங்கேயே வைத்துப் பெண் பார்த்துவிடலாம் எனத் தன் கணவர் நினைப்பது ஆனந்திக்குப் புரிந்தது.

"சரிங்க, நீங்க சாப்பிட வாங்க. மித்ரா படிக்கப் போயிருக்கா, நான் அவளை வரச் சொல்றேன்" என்று சொல்லிவிட்டு அறையிலிருந்து வெளியேறினார் ஆனந்தி.

ஆடிட்டர் மகளுக்கு விடியற்காலைதான் கல்யாண முகூர்த்தம். அதற்கு உறவினர்களையும் நண்பர்களையும் மட்டுமே அழைத்தவர், மாலை வரவேற்பு நிகழ்ச்சிக்கே தன்னுடைய வாடிக்கையாளர்களை அழைத்திருந்தார்.

இப்பொழுது மகளின் திருமணம் முடிந்து, மதிய உணவு வேளை பரபரப்பில் இருப்பார் என்று தெரிந்தாலும், தாங்கள் பெண்ணைப் பார்க்க மாலை வருகிறோம் என்ற தகவலை அவர் காதில் போட நடராஜன் அவரை அழைத்தார்.

அவரோ, "பொண்ணு இங்கேதான் இருக்கு. நீங்க பார்த்துப் பிடிச்சதுன்னா மட்டும் சொல்லுங்க, அப்புறம் அவகிட்ட பேசுவோம்" என்றார்.

அதுவும் நல்ல யோசனையாகப் பட, "சரி" என்று சொல்லிப் போனை வைத்துவிட்டு மதிய உணவு உண்பதற்காக டைனிங் டேபிளுக்கு நடந்தார் நடராஜன். அங்கே தந்தைக்காக மித்ராவும் மித்ரனும் காத்துக் கொண்டிருந்தார்கள்.

"நீ தூங்கலையாப்பா?" என்று மித்ரனிடம் நடராஜன் கேட்க,

"இந்த வெயில் சூட்டுக்கு ஏசியைப் போட்டாலும் புழுங்குது அப்பா. அதான் எழுந்து இவளோட தீசிஸ் ஒன்னை சேர்ந்து டைப் பண்ணிக்கிட்டு இருந்தோம். அம்மா சாப்பிடக் கூப்பிட்டாங்க அதான் வந்திட்டோம்" என்று மித்ரன் சொல்ல,

"இன்னைக்கும் உனக்கு இரவு வேலை இல்லடா... தூக்கம் கெட்டா எப்படி வேலை பார்ப்பாய்?" என்று அக்கறையாய்க் கேட்டார் நடராஜன்.

"இவளோட தீசிஸை இன்னும் ரெண்டு நாள்ல முடிக்கணும் அப்பா. கடைசி வரைக்கும் வச்சுக்கிட்டு இருந்துட்டு, இப்ப என்கிட்ட ‘ப்ளீஸ்’ போட்டு என்னை வேலையிலிருந்து ரெண்டு நாள் லீவு எடுக்க வச்சிருக்கா" என்று பக்கத்திலிருந்த மித்ராவின் தலையில் ஒரு தட்டு தட்டி அலுத்தபடி சொல்ல,

சாப்பாடுகளை மேசைக்கு கொண்டு வந்து வைத்துக்கொண்டிருந்த ஆனந்தி "டேய்... படிக்கிறது அவள்டா.." என்று புன்னகையுடன் சொன்னார்.

"என்ன செய்யறது? நான் உன் கூடப் பிறந்த பிறப்பு... எனக்குச் செய்யாம யாருக்குச் செய்யப்போறன்னு செண்டிமெண்ட்டா கெஞ்சுறா, அதான் ஓகே சொல்லிட்டேன்" என்றான் மித்ரன்.

"அவளுக்கு உன்னை நல்லாக் காக்கா பிடிச்சுக் காரியம் சாதிக்கத் தெரிஞ்சிருக்குடா" என்று நடராஜனும் சொல்ல,

மகளுக்குப் படிப்பதில் ஆர்வம் இருந்தாலும், இப்படி 'தீசிஸ்' என்று வந்துவிட்டால் அந்த ஆர்வம் சட்டெனக் குறைந்துவிடும். அதனால் கடைசி நிமிடம் வரை நாட்களை இழுத்தடித்துவிட்டு, இனியும் நாள் கடத்த முடியாத நிலை வந்தவுடன், குடும்பத்திலுள்ள ஆட்களின் காலில் விழுந்துதான் வேலையை முடிப்பாள் என்பது ஊரறிந்த விஷயம்.
என்பதால், "விடுங்க, அவளும் பாவம். யார்கிட்ட உதவி கேட்பா?" என்று ஆனந்தி தன் மகளுக்கு ஆதரவாகப் பேசினார்.

"உன் பெரிய பையனை விட்டுட்டியே!" என்று ஆனந்தியை நக்கல் பார்வையால் அளந்தபடி மித்ரன் கிண்டல் செய்தான்.

சகாயனும் ஒரு காலத்தில் தம்பி, தங்கைக்காக அவர்களின் அசைன்மென்ட், பிரசன்டேஷன் என எல்லா உதவிகளும் செய்தவன்தான். எப்பொழுது அதெல்லாம் நின்றது என்று தெரியாத அளவுக்கு, ஒரு கண்ணுக்குத் தெரியாத விலகல் அவனிடம் இருப்பதால், "முதல்ல சாப்பிடுடா... ஏங்க, நீங்களே அந்த விஷயத்தை இவன்கிட்ட சொல்லுங்க" என்றார் ஆனந்தி.

மித்ரன் 'என்ன?' என்கிற ரீதியில் தந்தையைப் பார்க்க, நடராஜனும், "இன்னைக்கு உனக்குப் பொண்ணு பார்க்கப் போகலாம்டா. பெரியவன் எப்படியும் வரமாட்டான், அதனால நாம மட்டும் போயிட்டு வருவோம்" என்றார்.

சகாயனுக்கு என்ன திட்டம் போடுவதென்றாலும் ஒரு வாரத்திற்கு முன்பே சொல்லிவிட வேண்டும். கடைசி நேரத்தில் கேட்டால் "முடியாது" என்று ஒரே சொல்லில் முடித்துவிடுவான். அதையே இப்போதும் சொன்னார் நடராஜன்.

பெரிய மகனை விட்டுவிட்டுப் போக மனமில்லாத ஆனந்தி, "எதுக்கும் ஒரு வார்த்தை கேட்டுடுவோம்" என்று பக்கத்திலிருந்த தன் போனை எடுத்து அழைக்க, அந்தப் பக்கம் அழைப்பை ஏற்கவே இல்லை. ஆனந்தி நிராசையுடன் போனைப் பார்த்துக்கொண்டிருக்க, அழைப்பு ஏற்கப்படாமல் பிசியாக இருந்தது.

"விடும்மா... இது அண்ணா ரிதன்யாவோட பேசுற நேரம். அவன் எத்தனை மணிக்கு விடிய எழும்பிப் பல் தேய்ச்சது, என்ன சாப்பிட்டதுன்னு சொல்லிக்கிட்டு இருப்பான்" என்றாள் மித்ரா.

"அவன் இல்லாம நாம மட்டும் எப்படிடி போறது?" என்று ஆனந்தி கேட்க, "அம்மா, நாம சும்மா பார்க்கத்தானே போறோம். பிடிச்சிருந்தா அண்ணாகிட்ட சொல்லுவோம்" என்றான் மித்ரன்.

இப்படியாகத் தன் மூத்த மகன் இல்லாமல், தன் கணவரின் வார்த்தைக்காகவும், மித்ரனின் ஆர்வத்தையும் பார்த்த பிறகு, அரைமனதுடன் திருமண வரவேற்பிற்குச் செல்லத் தயாரானார் ஆனந்தி.
 
Previous thread
Next thread

Latest threads

Top Bottom