Writer✍️
- Joined
- Sep 18, 2024
- Messages
- 367
- Reaction score
- 563
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 8
கருத்து சொல்லி உற்சாகப்படுத்திய எல்லோருக்கும் நன்றி மக்களே!!
நடந்த எல்லாவற்றையும் மறந்து விட்டு எப்படி இவனோடு இந்த வீட்டில் வந்து உட்கார்ந்திருக்கிறேனே என்று நினைத்தபடி அந்த அறைக்குள் அமர்ந்திருந்தாள் அன்னக்கொடி.
ஊரிருந்து வந்தவர்கள் எல்லோரும் மாலை ஆறு மணியளவில் கிளம்பி போய் விட கடைசியாக எஞ்சியது அவளும் கணவனும் மட்டும்தான்.
ராஜன் அடிக்கடி போய் வந்த ஒரு அறைக்குள் போகாமல் சமையலறைக்கு பக்கத்தில் இருந்த ஒரு அறைக்குள் புகுந்து கொண்டாள் அவள். ராஜன் குளிக்கிறான் என்று அவன் அறைக்குள் இருக்கும் குளியலறையில் கேட்ட தண்ணீர் சத்தத்தை கொண்டு தெரிந்து கொண்டாள்
பெங்களூரில் இருந்து அவளின் பொருட்கள் எல்லாம் வந்து சேர்ந்து விட்டது.ஹாலில் ஒரு ஓரமாக இருந்த பெட்டிகளை அந்த அறைக்குள் கொண்டு வந்து வைத்துவிட்டு இந்த தாங்கிக் கொள்ளலாம் என்று முடிவு செய்து கொண்டாள்.
அதிகாலையில் பால் காய்ச்ச எழுந்த களைப்பு வேறு அவளைச் சோர்வடையச் செய்தது.கடகடவென்று பெட்டியை திறந்து வேண்டிய ஆடைகளை எடுத்துக் கொண்டு போய் வேகமாக குளித்து வந்தாள்.
அப்படியே சமையலறைக்குள் நுழைந்து காபி போடும் வேலையை பார்த்துக் கொண்டிருந்தாள் .
‘இவ்வளவு நேரம் குளிக்கிறானா? அவனுக்கும் சேர்த்து காபி போட வேண்டுமா என்று யோசிக்கும் போது உள்ளே வந்தான் ராஜன்.
“ காப்பியா போடுற தங்கம்…. எனக்கும் சேர்த்து போடுறியா ப்ளீஸ்….”
அவனுக்கு பதில் சொல்லாமல் பிரிட்ஜில் இருந்த பாலை எடுத்து இரண்டு பேருக்கு அளவாக கொதிக்க வைத்தாள்.
“இப்ப தான் குளிச்சியா….?என்றான் அவள் ஆடையை கண்களால் அளவெடுத்துக்கொண்டு.
“மற்ற ரூமில தான் உன் பெட்டி எல்லாம் வச்சிருக்கியா என்ன…? அங்கதான் தங்க போறியா?
பதில் சொல்லாமல் மேல் செல்பில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த இரண்டு கப்புகளை எடுத்து கழுவினாள் அவள்.
“பதில் சொல்லுடி எதுக்கு இப்போ உம்மணா மூஞ்சியா இருக்க?
“சரிடி நீ அந்த அறையில் தங்கிக்கோ . உனக்கு நாளைக்கு வேலைக்கு போகணும் இல்ல. உன்னோட ஸ்கூட்டி பெங்களூரில் இருந்து நாளைக்கு வந்துடும். நாளைக்கு மட்டும் நான் கொண்டு போய் விடுகிறேன் சரியா?
அவள் பதில் சொல்லாமல் இருக்க தான் பேச வேண்டிய எல்லாவற்றையும் சொல்லிவிடும் நோக்கத்தோடு பேசிக் கொண்டிருந்தான் அவன்.
“காலத்துக்கும் இப்படித்தான் இருக்க போறியாடி…? சண்டை போட வாச்சும் வாயைத் திறந்து பேசேன்?
அப்போதும் எதுவும் பேசாமல் கப்பில் காபியை ஊற்றி தனக்கு வேண்டியதை எடுத்துக் கொண்டு சமையலறையை விட்டு வெளியே போனாள் அவள்.
“எனக்கும் காபி போட்டு தந்ததுக்கு தேங்க்ஸ்…”என்றான் பால்கனியில் உட்கார்ந்து கவனமாக காபியை குடித்துக்கொண்டிருந்தவளிடம்.
“அப்போ நீ பேசமாட்ட….சரி பார்ப்போம் விடு . அப்புறம் டின்னருக்கு ஏழு மணிக்கு பிறகு ஆர்டர் போட்டுக்கலாம். நாளைல இருந்து வீட்டில் சமைச்சுக்கலாம் சரியா?
தலையை மட்டும் ஆடினாள் அவள்.
‘பரவாயில்லை அந்த காபியை என் தலையில ஊத்தாமல் பொறுமையா சொன்னதெல்லாம் கேட்டுக்கிறா என் பொண்டாட்டி…’
“காலைல லுஞ்சும் சேர்த்து சமைத்து ஆபிசுக்கு எடுத்துட்டு போயிடலாம். இரவுக்கு வேணும்னா ஆர்டர் போட்டுக்கலாம் இல்லண்ணா சமைச்சுக்கலாம். நான் உன் கூட ஹெல்ப் பண்ணுறேன். எனக்கும் சேர்த்து சமைச்சு தருவியா…?இல்ல சமையலுக்கு ஆள் பார்க்கவா?
“ஆள் எல்லாம் இப்ப வேணாம் .தேவை வந்தா வச்சுக்கலாம்.நீயும் ஹெல்ப் பண்ணு. ரெண்டு பேரும் சேர்த்து சமைச்சுக்கலாம்….”
“அப்பாடா ஒரு வழியா என்கிட்ட பேசிட்ட…”என்றான் புன்னகையுடன்.
“பேசு பேசுனா என்ன பேச? கோபமாக வந்தது அவள் குரல்.
“இத்தனை நாள்ல என்கிட்ட பேசணும் என்று ஒரு வாட்டி கூட தோணலையா உனக்கு?இத்தனை வருசத்துல எவ்வளவு வாட்டி உனக்கு போன் போட்டேன் தெரியுமா…? ஏக்கமாக வந்தது அவன் குரல்.
“ இல்லை எனக்கு பேச தோணல….” என்று முறைத்தாள்.
“அதுவும் சரிதான்.எங்கம்மா உன் தாலியை கழட்டி எடுத்து உன்னை ஹாஸ்பிடல்ல படுக்க வைக்கிற போல பண்ணி வெச்சா நீ என்ன பண்ணுவ? நானும் உன்னை கவனிக்காம விட்டுட்டேன் என்ற கோபம் தானே உனக்கு….சாரி…” மனைவியின் முகம் பார்த்து வருத்தத்துடன் சொன்னான்.
“அப்படி எல்லாம் இல்லை….”என்று உடனே பதில் சொன்னாள்.ஏனென்று தெரியவில்லை அவன் வருந்துவதை தாங்க முடியவில்லை அவளால்.
“அப்ப வேற எப்படி ?எல்லாத்தையும் விடு… இவ்வளவு நடந்த பிறகு நான் வந்து கூப்பிட்டதும் நீ என் கூட நீ கிளம்பி வந்ததால தான் இன்னைக்கு எல்லாம் சரியா செய்ய முடிஞ்சுது. இப்போதைக்கு அதுவே எனக்கு போதும்.ரொம்ப தேங்க்ஸ் தங்கம். மிச்சம் எல்லாம் மெல்ல மெல்ல சரியாகும் என்று நினைக்கிறேன்….”
“நமக்குள்ள எதுவும் எப்பவும் சரியாகாது… அதுக்கு ஒன்னும் நான் செத்துப் போகணும். இல்ல எனக்கு ஏதாவது நோய் வந்து பழசெல்லாம் மறந்து போகணும்…” என்று சொன்னவளின் கண்களைத் தாண்டி கீழே வழிந்தது கண்ணீர்
அவள் சொன்னதை கேட்டு அதிர்ச்சி மட்டுமல்லாது மொத்தமாக உடைந்து போனது ராஜனின் உள்ளம்.
“சாரிடி…..நீ இந்த வீட்டில இருக்கிறதே போதும். எனக்கு முன்னாடி கண்ணுல தண்ணி விடாத ப்ளீஸ். ஒரு மாதிரி ஆகுது….” அருகே வந்து கண்ணீரை துடைத்து விட்டபடி அவள் கைகளைப் பிடித்துக் கொண்டான் அவன்.
“விடு…உன் சாரி எதுவும் எனக்கு தேவையில்லை….” என்று மெதுவாக வந்து அவள் குரல்.
“பழசை எல்லாம் விட்டுடு ப்ளீஸ்.இனி உனக்கு ஒரு கஷ்டமும் வராமல் பார்த்துக்கிறேன்…. ப்ளீஸ் என்னை நம்பு…”
‘உன்னை நம்புறதா…. போடா….’ என்று கண்களால் உணர்த்தியபடி அவனை முறைத்துப் பார்த்தாள் அவள்.
“போடி நீ என்னை நம்ப வேண்டாம். இனி நடக்கப் போறதை பார்த்தாவது என் மேல கொஞ்சம் நம்பிக்கை வராதா உனக்கு…? அதையும் தான் பார்ப்போம்…” என்ற படி குடித்து முடித்த காபி கப்பை எடுத்துக் கொண்டு போய் கழுவி வைத்துவிட்டு வந்தான்.
‘பரவாயில்லை காபி குடிச்சதும் கப்பை எல்லாம் கழுவி வைக்கிற நல்ல பழக்கம் எல்லாம் இருக்கு இவனுக்கு…’என்று பார்த்து வைத்தாள் அன்னம்.
தானும் போய் தன் கப்பை கழுவி வைத்துவிட்டு திரும்பவும் வந்து பால்கனியில் நின்று கொண்டாள்.
அங்கே ஒரு மல்லிகை செடி ஒரு ரோஜா செடியும் பூத்துக் குலுங்குவதை பார்க்க மனதுக்கு அத்தனை மகிழ்ச்சியாக இருந்தது அவளுக்கு .
இங்கு ஒரு ஊஞ்சல் இருந்தா ரொம்ப நல்லா இருக்கும் என்றுதான் தோன்றியது அவளுக்கு.
எதுவும் சொல்லாமல் வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள். ஆறாவது மாடியில் இருந்த அந்த வீட்டின் பால்கனியில் இருந்து பார்க்கும் போது தொலைவில் தெரிந்த மலையும்,அதை சுற்றி இருந்த பசுமை நிறைந்த வயல்களும் பார்ப்பதற்கு அத்தனை அழகாக தெரிந்தன.
“தேர்ட் ப்ளோரில தான் என் பிரண்ட் ரமேஷ் வீடு. அவன் ஃபேமிலிய காலைல பாத்தியே. ரமேஷும் , சரண்யாவும் ரெண்டு நாள்ல குடி வந்துடுவாங்க. அவங்களுக்கு ரெண்டு வயசு பையன் இருக்கான்.அஸ்வின். அவங்க வந்தா சரண்யாவோட நீ டைம் பாஸ் பண்ணலாம்….”
‘யாரு…? என்பது போல அவனைப் பார்த்தாள் அன்னம்.காலையில் ஆஃபீஸ் திறப்பு விழாவுக்கு அவன் நண்பர்கள் பலரும் வந்திருந்தார்கள்.சத்தியமாக அவளுக்கு யாரையும் ஞாபகம் இல்லை என்பது தான் வேடிக்கை.
“ரமேஷும் நானும் தான் இந்த ஆபீஸ் பார்ட்னர்ஸ் . இன்னொரு பார்ட்னர் ஆஸ்திரேலியா இருக்கான் . இப்போதைக்கு நம்ம கம்பெனியில் முப்பது பேரை தான் வேலைக்கு எடுத்திருக்கோம்.நாங்க மெடிக்கல் பீல்டுக்கு தேவையான சாப்வேயர்ஸ் எல்லாம் பண்ணி தருவோம்… ”என்று தன் வேலையை பற்றி மனம்விட்டு பேசினான் ராஜன்.
‘பரவாயில்லையே முப்பத்து பேருக்கு வேலை கொடுக்கும் கம்பெனின்னா நல்லா தான் இருக்கும் போல …’ என்று ஆச்சரியப்பட்டு போனாள் அவள்.
“பியூச்சர்ல இன்னும் பெருசா பண்ணனும். அப்படியே எல்லாம் சரியா வந்தா நீ கூட நம்ம கம்பெனிக்கு மாறிக்கலாம்….”
“நான் எதுக்கு மாறப் போறேன்….?
“அதுவும் சரிதான் நீ வாங்குற சம்பளத்துக்கு எங்க கம்பெனிக்கு கட்டுப்படியாகாது. நீ உன் கம்பெனிலயே வேலை பார்….”
‘இவன் குடும்பத்துக்கிட்ட இல்லாத காசா பணமா?ஒண்ணுமே இல்லாத மாதிரி ஏதோ அளந்து விடுறான் பக்கி….’
“என்ன எங்க கிட்ட இல்லாத பணமா என்று யோசிக்கிறியா. அது எல்லாம் அம்மா அப்பா பேருல தான் இருக்கு.எனக்கும் அண்ணனுக்கும் எதுவும் இல்லை .கம்பெனி கூட லோன் வாங்கித்தான் ஸ்டார்ட் பண்ணி இருக்கேன்….”
‘பார்றா கோடீஸ்வரி நவநீதம் வீட்டு பையன் லோன் வாங்கி கம்பெனி தொடங்கறதை நம்பலாமா வேண்டாமா என்று தான் அவள் யோசனை போனது.
“எப்பயும் நைட் பேண்ட் தான் போடுவியா என்ன ?என்றான் சட்டென்று பேச்சை மாற்றி.
“ஆமா எதுக்கு கேக்குற….? என்றவள் தன் ஆடையில் நிலைத்திருந்த அவன் பார்வையைக் கண்டு கொண்டாள்.
“இல்ல இந்த டிரஸ்ல உன்னை பார்க்க பத்தாங்கிளாஸ் படிக்கிறப்போ இருந்த போல இருக்க. ஆனா காலையில புடவைல பார்த்தப்போ சும்மா சொல்லக்கூடாது அப்பிடியே…..”
“ஹேய் நிறுத்து என்ன ரொம்ப ஓவரா பேசுற?
“அதில்லடி….”சொன்னபடி அவளை நெருங்கி பின்னிருந்து அணைத்து கொண்டான்.
“தப்பா நினைக்காத தங்கம் நீ என்கிட்ட வந்துட்ட என்று என்னோட மனசு இப்பவும் நம்ம மாட்டேங்குது. ப்ளீஸ் டூ மினிட்ஸ் ஆடாமல் நில்லுடி…” என்று சொல்லி கொண்டு அவளை பின்னாலிருந்து இறுக்கி கட்டிக் கொண்டான்.
“தேங்க்ஸ்….” என்று வேகமாக விலகி தன் அறைக்குள் போய் கதவடைத்து கொண்டான் ராஜன்.
அதிர்ந்துபோய் அப்படியே நின்றிருந்தாள் அன்னக்கொடி.
தன்னை நெருங்கி வரும் போது அவன் கண்கள் சொன்ன சேதி என்ன என்று அவளுக்கு சுத்தமாக புரியவில்லை.
அவனின் நெருக்கம் தந்த குழப்பத்தில் பழைய நினைவுகள் எல்லாம் மனதில் தோன்றுவதை அவளால் தடுக்க முடியவில்லை.
தொடரும்............
Last edited:
Previous thread
Next thread





























