Writer✍️
- Joined
- Sep 18, 2024
- Messages
- 372
- Reaction score
- 568
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 14
அன்னக்கொடியின் உடல்நிலை மெல்ல மெல்ல சரியானதும் திரும்ப கல்லூரி போக வேண்டும் என்ற எண்ணம் அவளை ஏதோ செய்தது. இன்னும் இறுதி வருட படிப்பை தொடர வேண்டி இருக்கிறது. நடந்து விட்ட காரியங்களால் ஊரில் பல பேச்சுக்கள் சுற்றிக் கொண்டிருக்கிறது.அவற்றை எல்லாம் கடந்து கல்லூரி போய் வர வேண்டுமா என்ற கவலை அவளுக்கு.
“அப்பா எனக்கு இங்க இருக்க வேணாம். தாத்தா பாட்டி கூட பெங்களூர் போகட்டா….?
“சரிம்மா…. ஆனா பைனல் இயர் படிக்கிறப்போ காலேஜ் அங்க மாத்தி தருவாங்களா தெரியலையே? என்றார் தந்தை.
அக்காவை வேண்டாம் என்று சொன்னவர்கள் வீட்டுக்கு போக மாட்டேன் என்று சொன்னவள் , இன்று அவர்களிடமே போகிறேன் என்கிறாளே என்ற யோசனை அவருக்கு.
அன்னம் பெங்களூர் போய் கல்லூரியில் சேர போகிறாள் என்று சொன்னதும் மீனாவும் கேசவனும் அவளுடன் சேர்ந்து கிளம்ப போவதாக சொன்னார்கள்.மூவரும் ஒன்றாக இறுதி வருடத்தில் கல்லூரி மாறி போவது ஒன்றும் சாதாரண காரியமில்லை. மாணிக்கம் தாத்தா மூலம் கட்சி ஆள் ஒருவரை பிடித்து தான் எல்லாம் செய்து கொள்ள முடிந்தது.
மறுபுறம் ராஜன் அவுஸ்ரேலியா கிளம்பி இரண்டு வாரங்கள் ஆகிவிட்டிருந்தது.புறப்பட முன் கேசவனுக்கு வீடியோ காலில் அழைத்து அன்னக்கொடியை பார்த்த பின் தான் விமானம் ஏறினான் அவன். கண் விழிக்காமல் படுக்கையில் கிடந்த அன்னக்கொடிக்கு தன்னை பார்த்து விட்டு தான் ராஜன் கிளம்பி போனான் என்று தெரிந்திருக்கவில்லை.
நடந்தது எல்லாவற்றையும் கேசவன் மூலமாக தியாகு அறிந்து கொண்டான்.அவனால் தன்னை பெற்ற தாயை மன்னிக்க முடியவில்லை.தாயா இப்படி நடந்து கொண்டார் என்று திகைத்து போனான்.
மூன்று மாதங்களின் பின் ஊருக்கு வந்தான் தியாகு. தம்பியிடம் கடுமையாக நடந்து கொண்ட மாமா வீட்டில் பெண் எடுக்க சுத்தமாக விரும்பவில்லை அவன்.ஆனால் நிச்சயதார்த்தம் வரை வந்துவிட்ட ஏற்பாட்டை வேண்டாம் என்று சொல்வதா என்ற எண்ணத்தில் சுற்றிக் கொண்டிருந்தான்.சுகந்தியிடம் நடந்தவரை எல்லாம் சொல்லி, உன் அப்பாவின் செயலில் என் தம்பி வாழ்க்கை வீணாய் போய்விட்டதாக சொல்லி தான் திருமணம் செய்ய ஒத்து கொண்டான்.
அண்ணனை துணைக்கு வைத்துக் கொண்டு இத்தனை குழப்பத்தையும் செய்து வைத்த மனைவியுடன் மோகனசுந்தரம் பேசுவதை நிறுத்திவிட்டார்.என்னிடம் பேசாமல் எங்கே போக போகிறார் என்ற நினைப்பில் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை நவநீதம்.
அன்னக்கொடி ஊரில் தான் இருக்கிறாள் என்று நினைத்துக் கொண்டிருந்தான் ராஜன்.அவள் போன் நம்பர் மாற்றியதும் கேசவனிடம் கெஞ்சி மன்றாடி தான் அவள் நம்பரை பெற்றுக் கொண்டான்.அன்னத்தை பற்றி எதையும் என்னிடமோ மீனாவிடமோ கேட்க வேண்டாம் என்று கோபத்துடன் சொல்லி போனை வைத்துவிட்டான் கேசவன். அவள் போன் நம்பர் கிடைத்ததே போதும் என்ற ஆறுதல் ராஜனுக்கு.தான் சொல்ல நினைப்பதை எல்லாம் மனைவிக்கு மெசேஜ் செய்து விடுவான்.ஆனால் அன்னக்கொடியின் பக்கமிருந்து அவனுக்கு எந்த பதிலும் வராது.
வரதன் பிளஸ் கொடி என்ற இன்ஸ்டாகிராம் பக்கத்தை அவுஸ்ரேலியாவில் இருக்கும்போது உருவாக்கி கொண்டான் ராஜன். நிச்சயம் தன்னை கவனிப்பாள் என்று நம்பினான் அவன்.அதுபோல பேக் ஐடியில் அவனை பின்தொடர்ந்தாள் அன்னம் என்பது வேறு கதை .
மூவரும் பெங்களூர் வந்து கல்லூரி போக தொடங்கினார்கள். நான்கு மாதங்கள் கடந்த போது தாத்தா திடீரென்று நோய்வாய் பட்டு இறந்து விட்டார். அதன் பின் பெங்களூரில் இருந்த பல சொத்துக்கள் சண்முகம் பெயருக்கு மாறியது.இப்படி வந்த பணத்தில் தான் புது வீடும், சூப்பர் மார்கெட்டும் கட்டி கொண்டார்கள் அன்னக்கொடி வீட்டினர்.
இப்படியாக பழைய நினைவுகளில் இருந்து மீண்டாள் அன்னக்கொடி.
இரவு உணவு வந்து விட்டது. தனி அறைக்குள் போய் கதைவடைத்துக் கொண்ட கணவனை சாப்பிட அழைப்பதா வேண்டாமா என்ற யோசனையுடன் ஹாலில் உட்கார்ந்திருந்தாள் அவள்.
மறுபக்கம் அறைக்குள் அமர்ந்திருந்த ராஜனுக்கு போனில் அழைத்தாள் மீனா.
“சொல்லு மீனா…..”
“அண்ணா அது வந்து…. அன்னம் ரொம்ப யோசிச்சா சட்டுன்னு மயக்கம் போட்டுடுவா.அவளை தனியா விடாதீங்க.அப்படி ஏதாவது யோசிச்சா வெறிச்சு பாத்துட்டு உட்கார்ந்துப்பா.அவளை கொஞ்சம் பாத்துக்கோங்க ப்ளீஸ்.அப்பப்ப சம்பந்தமில்லாமல் கத்தி வேற வைப்பா.அது தான் சொல்லலாம் என்று கூப்பிட்டேன்.இப்பெல்லாம் சும்மா பசிக்கு தான் சாப்பிட்டு வைக்கிறா.அவளை நல்லா சாப்பிட வைங்கண்ணா. உங்களை தொந்தரவு பண்ணி இருந்தா சாரிண்ணா…..” தயங்கியபடி சொன்னாள் மீனா
“எனக்கு ஒன்னும் தொந்தரவு இல்ல மீனா.என் பொண்டாட்டிய பற்றி எதுவுமே எனக்கு தெரியல பாரேன்….” கவலையோடு வந்தது அவன் குரல்.
“அப்படி இல்லண்ணா…..ஹாஸ்பிடல் ட்ரீட்மென்ட் க்கு பிறகு தான் அன்னம் இப்படி எல்லாம் பணி வைக்கிறா. அது தான் உங்களுக்கு எதுவும் தெரியல.இனி அவ பக்கத்துல இருந்து எல்லாம் தெரிஞ்சுக்கோங்க.நான் பேசினதா அவ கிட்ட காட்டிக்காதீங்க.சரிண்ணா வைக்கிறேன்…..”
“தங்கம் சாப்பாடு ஆர்டர் போடுறதா சொன்னியே வந்திருச்சா……” என்று கேட்டபடி கதவை திறந்து கொண்டு வெளியே வந்தான் ராஜன்.
“ஆமா வந்துருச்சு…..” என்ன என்னையே பாத்திட்டு இருக்க ?
“அதொன்னுமில்ல….நைட்டுக்கு ஆப்பமும் ஆட்டுக்கால் பாயாவும் இல்லாமல் தூங்க மாட்டேன்னு அடம்பிடிப்ப.இப்ப என்ன வெறும் இட்லியும் இடியாப்பமும் அடர் பண்ணியிருக்க….”
“புதுசா குடிவந்த வீட்டில் உடனே நான் வெஜ் சாப்பாடா? அதெல்லாம் நாளைக்கு தானே வாங்க சொன்னாங்க. நீ சொன்னதெல்லாம் இப்ப சாப்பிடணும் என்று தோணுறதில்ல….”
“ஏன் உனக்கு பிடிச்ச எதையும் சாப்பிட கூடாதுன்னு வேண்டிக் கிட்டியா என்ன?
“அப்படி எல்லாம் இல்லை….”என்று சொல்லவளின் குரலில் என்ன இருந்தது என்று அவனுக்கு தெரியவில்லை.
‘உங்கம்மா கோடீஸ்வர வீட்டு பையனை கட்டிகிட்டா காலத்துக்கும் சொகுசா கலாட்டிட்டு திங்கலாம் என்று சொன்ன பின்னாடி தான் இப்படி ஆகிவிட்டேன் ‘என்று கணவனிடம் சொல்லவா முடியும்.
“எங்கம்மா சொன்னதெல்லாம் தான் உன்னை இப்படி ஆக்கிடிச்சா? மெதுவாக வந்தது அவன் குரல்.
“அதெல்லாம் இல்லை….”என்று அவள் வேகமாக மறுக்கும் போதே அது தான் காரணம் என்று சரியாக கண்டு கொண்டான் அவன்.
“என் கூட இருக்குறப்போ உன்னையும் என்னையும் மட்டும் நினை.மத்த யாரும் நமக்கு வேணாம் ….. புரியுதா?
“ஓஹ் இது எப்ப இருந்து…? அவனை நம்பாமல் பார்த்தாள்.
“எப்ப இருந்துன்னா இந்த நிமிஷத்துல இருந்து தான்.உன்னையும் என்னையும் தவிர இப்போதைக்கு வேற யாரும் வேணாம் சரியா….”
‘நீ என்ன லூசா’ என்று தான் அவனை பார்த்தாள் அன்னம்.
“ஹேய் நான் ஒன்னும் லூசு இல்லடி…..சாப்பிடலாமா போன் பேசி பேசி பசி எடுக்குது….”
“அப்படி யார் கூட பேசினீங்க சார்….?
“அதெல்லாம் சொல்ல முடியாது….”என்றான் உடனே.
“யாரு கேசவனா….? இல்ல மீனாவா….? என்று சரியாக கேட்டாள் அவள்.
“அவங்க இல்ல….இது ஆபிஸ் போன்….”சொல்லியபடி இடியப்பத்தை சாப்பிடுவதில் கவனமானான் அவன்
இப்படி இருக்கையில் தியாகுவின் மகன் குமரனின் முதலாவது நாளில் நடந்தவற்றை நினைத்து பார்த்துக் கொண்டிருந்தார் நவநீதம். அண்ணன் குடும்பத்துடன் சேர்ந்து தன் வீட்டில் சிறப்பாக விழாவுக்கு ஏற்பாடு செய்திருந்தார் அப்போது.விழா சிறப்பாக முடிந்ததும் எல்லோரும் சாப்பிட்டு விட்டு கிளம்பி இருந்தார்கள்.மனைவி,மகனுடன் அன்னக்கொடியின் வீட்டுக்கு போய்விட்டு வந்து தான் கேக் வெட்டினார் தியாகு என்பது ஒருபுறம்.
வீட்டின் பின்புறம் அண்ணியும், மருமகள் சுகந்தியும் தனியாக உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்த போது அந்த இடத்தை கடந்து போனார் நவநீதம்.அப்போது அவர்கள் பேசுவது தப்பாமல் அவர் காதில் விழுந்து வைத்தது.
“உங்கத்தையும் உங்கப்பாவும் இப்பெல்லாம் ரொம்ப தான் ஆட்டம் போடுறாங்க சுகந்தி.உங்கத்தை ஓடி போய் கல்யாணம் பண்ணிட்டதா சொல்லி ஆளுங்கள வச்சு அவங்களை படுத்தி எடுத்தார் உங்க தாத்தா.
“ஆனா தாத்தா போனதும் உங்கத்தைய மறுபடியும் வீட்டில சேர்த்துகிட்டார் உங்கப்பா.கோடி கோடியா சொத்து, பணம் வந்ததும் எல்லாத்தையும் மறந்து வந்து ஒட்டிக்கிட்டா.நானா இருந்த நாண்டுக்கிட்டு செத்திருப்பேன்.உங்க அத்தை குடும்பத்தை கொஞ்ச பாடா படுத்தினாங்க.அப்பிடியானவங்க கிட்ட திரும்ப போகணுமா என்று ஒரு ரோசம் வேண்டாம்.என்ன இருந்தாலும் உங்க மாமா யார் கூடவும் இன்னும் ஒட்டல.அவர் மனுஷன்.இந்தம்மாவ என்ன சொல்ல?
“தன்னைக்கு தான் இப்படி நடந்துச்சு. கூட கோயில்ல வச்சு பெத்த பையன் கட்டின தாலிய கழட்டி ,அந்த பொண்ணை தள்ளி விட்டு ஹாஸ்பிட்டல்ல படுக்க வைச்சது உங்கத்தை. இதெல்லாம் என்ன பொம்பிளையோ தெரியல.நீயும் பாத்து சூதானமா இருந்துக்க.இந்த லட்சணத்துல சுமதிய வேற இந்த வீட்டுல கொடுப்போம் என்று கனவு கண்டுகிட்டிருக்கு அந்தம்மா….அதுக்கு ராஜன் ஒத்துபானா முதல்ல…”என்று எரிச்சலோடு மகளிடம் சொன்னார் சுகந்தியின் அன்னை.
அண்ணியின் பேச்சில் இருந்த உண்மை நவநீதிமணியின் நெஞ்சை சுட்டது.கணவன் தன்னிடம் பேசுவதில்லை என்று கவலையில் இருந்தவருக்கு இப்போது இதுவும் சேர்ந்து ஒரு மாதிரி ஆனது.
அழுதபடி ராஜனுக்கு அழைத்தார்.வெளிநாடு போனதிலிருந்து ராஜன் அன்னையிடம் பேசுவதில்லை.பல வருடங்கள் கழித்து அழுதபடி அண்ணனின் போனிலிருத்து பேசியவரிடம் பட்டும் படாமல் பேசிவிட்டு வைத்து விட்டான் அவன்.
இப்போது நவநீதத்தின் மனதில் கொஞ்சம் மாற்றம் வந்திருந்தது.அதனால் தான் ராஜன் அன்னக்கொடியின் கழுத்தில் திரும்ப தாலியை போட்டு விட்ட போது எதுவும் சொல்லாமல் ஒதுங்கிக் கொண்டார் என்பது தான் உண்மை.
தொடரும்................
Last edited:
Previous thread





























