Writer✍️
- Joined
- Sep 18, 2024
- Messages
- 371
- Reaction score
- 568
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 13
தாயின் சொல் கேட்டு அம்மன் திருக்கல்யாணத்திற்கு புடவையில் தயாரானாள் அன்னக்கொடி .அதை பார்த்து மீனாவும் புடவை கட்டிக் கொண்டாள்.இவர்களுடன் கேசவனும், அவன் குடும்பமும் சேர்ந்து கொண்டது.கோவிலில் மூன்று குடும்பத்து பெற்றவர்களும் வந்து சேர எல்லோரும் ஒன்றாக உட்கார்ந்து கொண்டார்கள்.
அப்போது தந்தையுடன் கோவிலுக்கு வந்து சேர்ந்தான் ராஜன்.கல்யாணத்துக்கு கிளம்பி வந்தவன் போல பட்டு வேட்டி சட்டையில் ஜோராக வந்திருந்தான் அவன்.
“ஏதோ உங்களுக்கு கல்யாணம் போல கலக்கலாக கிளம்பி வந்திருக்கீங்க அண்ணா ?சாமிக்கு தான் கல்யாணம் தெரியுமில்ல..." என்றான் கேசவன்.
“உனக்கு சொன்னா புரியாது கேசவா..... எனக்கும் இன்னைக்கு தான் கல்யாணம்….”என்று சொன்னவன் பார்வை முழுவதும் அன்னக்கொடியை தான் சுற்றி வந்தது.
அவள் தன் தொலைபேசி அழைப்புகளை எல்லாம் நிராகரிக்கிறாள் என்ற கோபம் அவனுக்கு.
அம்மனுக்கு தாலி கட்டும் நேரம் நெருங்கும் போது அன்னக்கொடியின் பக்கத்தில் வந்து அவளை இடித்துக் கொண்டு உட்கார்ந்தான் ராஜன்.
“இடிமாட்டுக்கு பிறந்தவனா நீ….தள்ளி உட்கார மாட்டியா…?
“நீ மட்டும் இத்தனை நாளா என் போனை எடுத்தியாடி….எங்கம்மா பண்ணத்துக்கு எதுக்குடி என்னை பிளாக் பண்ணி வச்சிருக்க? இன்னும் நாலு நாள்ல அவுஸ்ரேலியா கிளம்பணும் நான்.அதாவது தெரியுமாடி உனக்கு ?
“அது எனக்கு தெரியாது பாரு….”
“நான் திரும்பி வர மூணு, நாலு வருஷம் ஆகும் போல.பேசாம நாமளும் இன்னைக்கு கல்யாணம் பண்ணிக்கலாமாடி தங்கம் ….”
“எப்ப பாரு விளையாட்டு தானா உனக்கு…?.முதல்ல தள்ளி உட்காரு ப்ளீஸ்….”சொல்லியபடி அவனை முறைத்தாள் அன்னம்.
“எங்கம்மா பண்ணதுக்கு எல்லார்கிட்டயும் சாரி சொல்லிட்டேன்.நீ மட்டும் தான் பாக்கி.எல்லாத்துக்கும் சாரிடி.இப்ப சொல்லு தாலி காட்டவா…?நீ நோ சொன்னாலும் நமக்கும் இன்னைக்கு தான் கல்யாணம்.அப்புறம் என்னை கேட்காம எதுக்கு தாலி கட்டினன்னு சண்டைக்கு வர மாட்ட தானே…நீ தான் என் பொண்டாட்டி. அது எப்பவும்,யாருக்காகவும் மாறாது தங்கம்…”என்று தன் மனதை அவளுக்கு சொல்லி வைத்தான் .
“பைத்தியமா உனக்கு…உளறாமல் சாமிய பாரு…..” நடக்க போவது தெரியாமல் சாவகாசமாக அமர்ந்திருந்தாள் அன்னக்கொடி.
சரியாக சாமிக்கு தாலி கட்டும் நேரம், செயினில் கோர்த்திருந்த தாலியை எடுத்தபடி அன்னக்கொடியை நெருங்கி அமர்ந்து, அவள் கழுத்தில் தாலியை போட்டு அவளை தன் மனைவி ஆக்கி கொண்டு விட்டான் ராஜன்.
சுற்றியிருந்த பெண்கள் எல்லோரும் மஞ்சள் பூசிய தாலிக்கயிற்றை மாற்றி கொள்ளும் நேரம் தன் திருமணத்தை நடத்தி முடித்திருந்தான் வரத ராஜன்.தன் பெற்றவர்களும், ராஜனின் தந்தையும் தங்கள் மீது பூ தூவும் போது தான் தன் கழுத்தில் தாலி போட்டிருப்பதை உணர்ந்து கொண்டாள் அன்னக்கொடி.சாமியின் திருமணத்தை தீவிரமாக பார்த்துக் கொண்டு இருந்தவளின் கவனம் தனக்கு நடந்த கல்யாணத்தில் இருக்கவில்லை.
மார்பில் விழுந்த தாலியுடன் கோர்த்திருந்த சங்கிலியை பார்த்ததும் அதிர்ந்து போய் எழுந்து நின்று விட்டாள் அவள்.
“எதுக்குடா இப்படி பண்ண….” தடுமாறியபடி கண்கள் கலங்க ராஜனை முறைத்தாள்.
“எனக்கு வேற வழி தெரியல….சாரிடி….”சொல்லியபடி அவள் கண்களை உற்றுப் பார்த்தான்.
“மாமா நீங்க இங்க இருந்தும், எதுக்கு இப்படி பண்ண விட்டீங்க….”கோபமாக வந்தது அன்னத்தின் குரல்.
“அது தான் அவனுக்கு வேற வழி தெரியல ன்னு சொல்றானே மா…” என்று தயக்கமாக சொன்னார் மோகனசுந்தரம்.
வேகமாக எழுந்து போய் தள்ளி நின்றவளின் கையை பிடித்து விடும் நோக்கத்தோடு அவளை நெருங்கி வந்தான் ராஜன்.
வேகமாக அங்கிருந்து நகர்ந்து கோவில் மண்டபத்தை விட்டு வெளியே வந்தாள் அன்னம். எல்லோரும் அவள் பின்னால் வேகமாக வந்தார்கள்.
அப்போது சரியாக அண்ணனையும், அவர் ஆட்களையும் கூட்டிகொண்டு காரிலிருந்து இறங்கி வந்தார் நவநீதமணி. அவர்கள் வந்த வேகத்தில் விஷயம் எப்படியோ அவர்களுக்கு தெரிந்து விட்டது என்று எல்லோருக்கும் புரிந்தது.
“எங்க வீட்டு பையனை மயக்கி உன் பொண்ணுக்கு கட்டி வச்சிருக்கியா.... சரியான ஆளுயா நீ ….? என்று கோபத்துடன் சண்முகத்தின் சட்டையை பிடித்திழுத்து தள்ளிவிட்டார் ராஜனின் மாமன் சேவகப்பெருமாள்.
“மாமவ விடுங்க ….” சத்தமாக கத்தினான் ராஜன்.
“இவன் உனக்கு மாமான்னா அப்ப நான் யாருடா உனக்கு…? என்று ராஜனை பார்த்து பதிலுக்கு கத்தினார் சேவகப்பெருமாள்.
தந்தை தடுமாறி விழுவதை கண்டு அவரை நோக்கி விரைந்து வந்தாள் பூங்கொடி.அதற்குள் சேவகப்பெருமாளின் அடி ஆட்கள் அவளுக்கு குறுக்கே வந்துவிட்டார்கள்.வந்தவர்கள் பூங்கொடியை பிடித்தது தள்ளி விட்டார்கள். நான்கு மாத குழந்தையை சுமந்திருந்த பூங்கொடி வயிறு நிலத்தில் பட அடி தாறுமாறாக கீழே விழுந்தாள்.
அவளை கண்டு பதறிப் போய் ஓடி வந்தான் கணவன் சரவணன்.
“தூக்குங்க ஹாஸ்பிடல் போகலாம்…..”என்று சொன்ன ராஜனை கை நீட்டி தடுத்து விட்டான் சரவணன். உறவினர்கள் உதவியுடன் பூங்கொடியை தூக்கி கொண்டு கிளம்பி விட்டான் அவன்.
“என்ன பண்ணி வச்சிருக்க…?கர்ப்பமா இருக்கிற பொண்ணை உன் முட்டாள் அடியாளுங்க தள்ளி விட்டிருக்காங்க.அவ குழந்தைக்கு மட்டும் ஏதாவது ஆகட்டும்.... எல்லாரையும் போலிஸில பிடிச்சு கொடுத்துடுவேன்…..” என்று சேவக பெருமாளிடம் சத்தம் போட்டார் மோகனசுந்தரம்.
அன்னக்கொடியின் தந்தையை தூக்கி நிறுத்தியிருந்தான் கேசவன்.கிட்ட வந்த ராஜனை கோபத்துடன் பார்த்தார் தேனாம்பாள்.
கணவனின் பேச்சை கேட்டு கோபத்துடன் அன்னக்கிளியின் அருகில் வந்த நவநீதமணி அவள் கன்னத்தில் பளார் என்று ஓங்கி அறைந்தார்.
“என் அண்ணனை போலிஸில பிடிச்சு குடுக்கிறதா என் புருஷனையே சொல்ல வச்சிட்டியேடி பாவி.எத்தனை நாளா திட்டம் போட்டு இப்படி ஒரு காரியம் பண்ண? கோடீஸ்வர வீட்டு பையனை கட்டிகிட்டா காலத்துக்கும் சொகுசா கலாட்டிட்டு திங்கலாம் என்று உங்கம்மா சொல்லி குடுத்தாளா?உங்க சகவாசமே வேண்டாம் என்று தான் தெற்கு தெருவில பங்களா வச்சிருக்கவங்க கூட போய் இருக்கோம்…..விடாமல் அங்கேயும் வந்து ஒட்டிகிட்டா என்ன பண்ண….” என்று வார்த்தைகளை சாட்டையாக சுழற்றினார் நவநீதம்.
“அம்மா வார்த்தையை அளந்து பேசுங்க… ”கோபத்துடன் இரைந்தான் ராஜன்.
“வாய மூடுடா….உன் அண்ணன் கல்யாணத்துக்கு முன்னாடி உனக்கு பொண்டாட்டி தேடுறியா….” என்று சொல்லியபடி அண்ணனுக்கு கண்ணை காட்டினார் அவர்.
பத்து மேற்பட்ட அடியாட்கள் ராஜனை சூழ்ந்து கொண்டு அன்னக்கொடியின் பக்கத்தில் நின்றிருந்தவனை தனியாக தள்ளி கொண்டு வந்தார்கள்.
அதிர்ச்சியில் சிலையாய் உறைந்துபோய், பேச்சற்று நின்றிருந்த அன்னக்கொடியின் கழுத்தில் கிடந்த தாலியை வேகமாக கழட்டி எடுத்த நவநீதம் கோபத்துடன் அவளை பிடித்து தள்ளி விட்டார்.
“என் பையன் உனக்கு தாலிய போட்டு விட்டா எல்லாம் சரியா போச்சா…இனி என்ன பண்ண போறன்னு நானும் பார்க்கிறேன்….” என்று சொல்லியபடி காரில் போய் ஏறி உட்கார்ந்து கொண்டார் அவர்.அந்த காருக்குள் மயக்க மருந்தின் தாக்கத்தால் சுயநினைவு இல்லாமல் மயங்கி கிடந்தான் வரதராஜன்.
நவநீதம் தள்ளி விட்ட வேகத்தில் மண்டபத்தின் தூணில் பின்பக்க தலை அடிபட்டு ரத்தம் கசிய மயங்கி சரிந்தாள் அன்னக்கொடி.
தன் கண் முன்னே கணவனுக்கும்,தன் இரண்டு பெண்களுக்கும் இப்படி ஆகிவிட்டதே என்ற அதிர்ச்சியில் நின்ற இடத்தில் மயங்கி சரிந்தார் தேனாம்பாள்.
கேசவனின் பெற்றவர்களின் உதவியுடன் மயக்கமாகி கிடந்த அன்னக்கொடியையும் அவள் அன்னையையும் காரில் ஏற்றி விட்டு, சண்முகத்தை முன் சீட்டில் அமர வைத்தார் மோகனசுந்தரம்.ராஜனுக்கு என்னாச்சு.... எங்கே போனான்...? என்ற குழப்பம் அவருக்கு.
ஏதோ சினிமா பார்ப்பதை போல அந்த சில நொடிகளில் எல்லாம் நடந்து முடிந்து விட்டிருந்தது அந்த கோவிலில். அதுவே ஊரெல்லாம் பேசு பொருளாகி கதை பரவத் தொடங்கிவிட்டது.
மனைவியும் அவர் அண்ணனும் ஆடிய ஆட்டத்தை பார்த்து அதிர்ந்து போனார் மோகனசுந்தரம்.தன் திருமணத்தில் நவநீதத்தின் தந்தை செய்த கலாட்டா தான் அவர் கண்முன் வந்து போனது.
“உங்க சம்சாரம் போன காருக்குள்ள ராஜன் மயக்கமா கிடந்ததை பார்த்தேன்….” என்று அவரிடம் வந்து சொன்னார் மீனாவின் தந்தை.
காருக்குள் மயங்கி போய் கிடந்த மகனை தான் பார்த்துக் கொண்டிருந்தார் நவநீதம்.அவர் கையில் அன்னக்கொடியின் கழுத்தில் கட்டிய தாலி இருந்தது.தனக்கு தெரியாமல் இத்தனை பெரிய வேலை பார்க்க துணிந்து விட்டானே சின்னவன் என்ற கோபம் இன்னும் ஆறவில்லை அவருக்கு.அண்ணனோடு சேர்ந்து தேனியை நோக்கி அந்தக் காரில் கிளம்பினார் அவர்.கணவரை பற்றிய நினைப்பு சுத்தமாக இல்லை அவருக்கு அப்போது.
மறுபக்கம், ஹாஸ்பிட்டல் வந்தும் தலையில் பலமான அடி வாங்கிய அன்னக்கொடியின் மயக்கம் தெளியவில்லை.பூங்கொடியின் குழந்தை வேறு அபார்ஷன் ஆகிவிட்டது.ஒரே நல்ல விஷயம் தேனாம்பாள் மயக்கம் தெளிந்து எழுந்து விட்டார் என்பதுதான்.சண்முகத்துக்கு தரையில் வேகமாக விழுந்ததால் கை காலெல்லாம் அங்கங்கே தோல் உரிந்து போயிருந்து.
அன்னக்கொடியின் நிலையோ இன்னும் மோசமாக இருந்தது.கண் மூடியபடி இருக்க, உடல் விட்டுவிட்டு நடுக்கம் போட்டது. சத்தமாக ஏதேதோ புலம்பினாள்.நொடிக்கு நொடி அவள் பிளட் பிரஷர் கூடுவதும் குறைவதுமாக இருந்தது.
உயிர் தோழியை இப்படி பார்க்க முடியாமல் கேசவனும் மீனாவும் கலங்கி போனார்கள்.எதிர்பாராத அதிர்ச்சியில் தான் இப்படி ஆகிறது என்று ஆறுதல் சொன்னார் அங்கிருந்து நர்ஸ்.மயக்கம் தெளிந்த தேனாம்பாள், பூங்கொடியின் நிலை அறிந்து அவளை கட்டி கொண்டதும் பெருங்குரலெடுத்து கதற தொடங்கிவிட்டாள் அவள்.
கலங்கிய கண்களை யாரும் அறியாமல் சரவணன் துடைத்துக் கொள்வதை கண்டு கொண்டார்கள் மீனாவும் கேசவனும்.
மயக்கம் தெளியாமல் எல்லாரையும் கலங்கடித்துக் கொண்டிருந்தாள் அன்னக்கொடி.தலையில் பலமான அடி.அதனால் தான் இப்படி கண் திறக்காமல் கிடக்கிறாளோ,என்ன வர போகிறதோ என்ற பதட்டம் தான் எல்லோருக்கும்.காயத்துக்கு மருந்து போட தலையின் பின்பக்க முடியை வேறு எடுத்து விட்டிருந்தார்கள்.
மறுபக்கம் தேனியில் உள்ள கிளினிக்கில் மயக்கம் தெளிந்தது ராஜனுக்கு.ஆனால் கண்ணை மூடியபடி சுற்றி நடப்பதை அவதானிக்க தொடங்கினான்.மயக்க மருந்து கொடுத்து தன்னை கடத்தி வந்திருக்கிறார்கள் என்று சரியாக புரிந்து கொண்ட அவன் எச்சரிக்கை உணர்வோடு செயற்பட்டான்.
தாயும் ,மாமனும் தன் திருமணத்தை சுமதியுடன் நடத்திவிடும் எண்ணத்துடன் பேசிக்கொண்டிருப்பதை கேட்டபடி படுத்திருந்தான்.இத்தனை தூரம் போய்விட்ட தாயின் செயலை அவனால் மன்னிக்க முடியவில்லை. ராஜன் மயக்கமாக இருக்கிறான் என்று நினைத்து வெளியே வராண்டாவில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார்கள் அவர்கள். அறைக்குள் ஒரு நர்ஸ் மட்டும் உட்கார்ந்திருந்தார்.
மயக்க மருந்தின் வீரியம் குறைந்து, கண் விழிக்கும் நேரம் கடந்தும் மகன் இயல்புக்கு வரவில்லை என்றதும் பதறிப்போனார் நவநீதம்.உடனே பக்கத்தில் இருக்கும் கிளினிக்கில் அவனை சேர்த்துவிட்டார்.நண்பர்கள் விளையாட்டுக்கு பண்ணிய மயக்க மருந்தால் இப்படி ஆகிவிட்டது என்று தான் சொல்லி வைத்தார் அந்த கிளினிக்கில்.
இன்னும் இங்கிருப்பது சரியில்லை என்று நினைத்த ராஜன் சட்டை பாக்கெட்டில் போனை தேடினான்.அது அங்கிருந்த சிறிய மேஜையில் கேட்பாரின்றி கிடந்தது .மயக்கமாக கிடப்பவன் எப்படி போன் பேசுவான் என்ற அலட்சியம் தான் அங்கிருப்பவர்களுக்கு.கூட இருந்த நர்ஸிடம் உண்மையை சொல்லி உதவி கேட்டான் அவன்.
நர்ஸின் உதவியுடன் பின்பக்க வாசல் வழியாக வெளியேறி தந்தைக்கு போன் போட்டான். அன்னக்கொடியின் தாலியை கழட்டி,மகனுக்கு மயக்க மருந்து கொடுத்திருக்கிறார்கள் என்றால் ஏதோ பெரிதாக செய்ய திட்டமிடுகிறார்கள் என்று சரியாக புரிந்து கொண்டார் மோகனசுந்தரம்.
உடனே மகனுக்கு உதவ தேனியில் இருந்த தன் நண்பனை தொடர்பு கொண்டார்.தந்தையின் நண்பர் ஏற்பாடு செய்திருந்த வண்டியில் ஏறி மதுரை வந்துவிட்டான் ராஜன்.
மதுரைக்கு வந்ததும் தனக்கு வேண்டிய ஆடையை வாங்கி மாற்றிக் கொண்டான்.காலையில் கோவிலுக்கு கிளம்பிய பட்டுவேட்டி சட்டையில் தான் இத்தனை மணி நேரத்தை கடந்து வந்திருந்தான்.மறுபக்கம் வேண்டியவற்றை எடுத்துக்கொண்டு மகனை தேடி வந்து விட்டார் தந்தை.
“அன்னக்கொடி இன்னும் கண் முழிக்கவில்லை.நீ இங்கிருக்க வேண்டாம். சென்னை போய் அங்கிருந்து அவுஸ்ரேலியா கிளம்பி விடு.....” என்று மகனை விமானத்தில் ஏற்றி சென்னைக்கு அனுப்பி வைத்தார் தந்தை.
விமானம் ஏற போனவன் திரும்பி வந்து கண்கலங்க தந்தையை இறுக கட்டிக் கொண்டான்.
“தங்கத்தை சரியா பாத்துக்குங்க…..எத்தனை வருடமானாலும் அவ தான் என் பொண்டாட்டி….கிளம்புறேன்.எங்கம்மா இப்படி மாறுவாங்கன்னு கனவிலயும் நினைக்கலப்பா….அதுவும் நான் கட்டின தாலிய கழட்டி எடுத்துட்டதா அவங்க அண்ணன் கிட்ட பெருமை பேசுறாங்கப்பா முடியல…. ” குரல் கலங்க சொல்லிக்கொண்டு விமானம் ஏறிய ராஜனின் மனம் முழுவதும் தன்னவளை தான் சுற்றி வந்தது.
அவளுக்கு இப்படி ஒரு கொடுமை நடக்கும் போது எதுவும் தெரியாமல் மயங்கி போய் கிடந்திருக்கிறேனே என்ற குற்ற உணர்ச்சி அவனை கொன்று போட்டது.
மறுபக்கம் நள்ளிரவு கடந்து இரண்டு மணிக்கு தான் மெதுவாக கண் விழித்தாள் அன்னக்கொடி. அவளுக்கு வேண்டிய டெஸ்ட் எல்லாம் செய்து முடிக்க மறு நாள் காலை ஆகிவிட்டது.அவள் கூடவே இருந்தது எல்லாம் பார்த்துக் கொண்டது கேசவனும் மீனாவும் தான்.
நான் இப்படி கிடக்க எங்கே போய் தொலைந்தான் இந்த வரத ராஜன் என்ற கோபம் அவளுக்கு.அதுவே நாளாக நாளாக அவன் மேல் வெறுப்பாக வளர்ந்து கொண்டு போனது.ராஜனுக்கு நடந்த எதுவும் அவளுக்கு தெரிந்திருக்கவில்லை.
பத்து நாட்கள் ஹாஸ்பிடல் வாசம் முடிந்து வீடு திரும்பினாள் அன்னக்கொடி.பூங்கொடியும் அங்கே தான் தங்கியிருந்தாள்.அக்காவை இப்படி பார்க்கும் போது ராஜன் குடும்பத்தின் மீது கொலைவெறி ஆனது அவளுக்கு.
பணமும் செல்வாக்கும் தான் வெற்றி பெற்றது என்ற மமதையுடன் அண்ணன் அருகில் உட்கார்ந்திருந்தார் நவநீதமணி.அன்னக்கொடியின் தாலியை கழட்டி வந்த குற்ற உணர்ச்சி சிறிதும் இல்லை அவருக்கு.
அங்கிருப்போர் கண்ணில் மண்ணை தூவி மகன் கெட்டித்தனமாக தப்பித்து விட்டான் என்று அவருக்கு இன்னும் தெரியவில்லை.
தொடரும்............
Last edited:
Previous thread





























