அத்தியாயம் 25
கீதாஞ்சலியையும் மனோகரையும் குற்றவியல் நீதித்துறை நீதிபதி முன்பு ஆஜர் படுத்த அரசு காவல் வாகனத்தில் அழைத்து வந்து கொண்டிருந்தனர் பிரதாப், திலீப் மற்றும் ஆரவி.
வாகனம் கிளம்பிய வேளையில், “ஏசிபி, அதான் நான் சரணடைஞ்சுட்டேனே. அப்புறம் ஏன் மனோகர் அண்ணாவை கூட்டிட்டு வரீங்க?” என்று கீதாஞ்சலி பதற்றத்துடன் வினவ,
“மனோகரும் குற்றவாளிதான். நீதான் குற்றவாளின்னு தெரிந்தும் மறைச்சதுதான் அவன் செய்த குற்றம்.” என்றான் பிரதாப் நிதானமாக.
“இல்ல இல்ல... மனோகர் அண்ணா எந்தத் தப்பும் செய்யல. நான்தான் எல்லாமே பண்ணேன். அவருக்கு ஏன் தண்டனை கொடுக்குறீங்க?” என்று அவள் நிதானமின்றி கத்த ஆரம்பிக்க, அவளை ஆரவி பிடித்துக் கொண்டாள்.
“அஞ்சலி, காம் டவுன்.” என்று பிரதாப் கூற,
மனோகரும், “எப்படியும் எனக்கு குறைந்தபட்ச தண்டனைதான் கிடைக்கும் கீதா. நீ கவலைப்படாத. உன்னையும் குறைந்தபட்ச தண்டனையுடன் வெளியே கொண்டு வர நம்ம வக்கீல் பார்ப்பார்.” என்றான்.
பிரதாப், “மனோகருக்கான தண்டனை, நீதான் குற்றவாளின்னு மறைச்சதுக்காக. அதையும் நீயேதான் உன் வாக்குமூலத்துல சொல்லியிருக்க.” என்றான்.
அதைக் கேட்டதும் கீதாஞ்சலி சட்டென்று அமைதியாகி விட்டாலும், அவள் எதையோ தீவிரமாக சிந்திப்பதை உணர்ந்து கொண்டான் பிரதாப்.
அதன் பிறகு விவாதங்கள் இன்றி நீதிமன்றத்திற்கு வந்தனர்.
இந்த வழக்கிற்காக நியமிக்கப்பட்ட சிறப்புப் புலனாய்வுக் குழுவைச் சேர்ந்த மற்றவர்களுடன் கமிஷனர் ஜார்ஜும் நீதிமன்றத்திற்கு வந்திருந்தார்.
என்னதான் குற்றவாளிகளை ஆஜர் படுத்தப்போகும் விவரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தாலும், நீதிமன்றத்திற்கு வெளியே சிலர் கேமராவுடனும் மைக்குடனும் நின்று கொண்டிருந்தனர்.
வாகனத்தை விட்டு இறங்கிய பிரதாப் ஆரவிக்கு சைகை செய்ய, அஞ்சலியின் முகத்தை துப்பாட்டாவை கொண்டு மூடியபடி வெளியே அழைத்து வந்தாள் ஆரவி.
அவர்கள் பின்னே, மனோகரை அழைத்து வந்தான் திலீப்.
உடனே, அவர்களைச் சூழ்ந்து கொண்ட ஊடகவியலாளர்கள்,
“இத்தனை கொலைகளை செஞ்சது ஒரு பொண்ணா?”
“இவ்ளோ கொடூரமான கொலைகளை செஞ்சவங்களோட மனநிலை ஸ்டேபில்லாதான் இருக்கா?
என்று மாறி மாறி கேள்விகளைக் கேட்க, “நோ கமெண்ட்ஸ்…” என்று தீர்க்கமாக உரைத்த பிரதாப், மற்ற இருவருக்கும் சைகை செய்தபடி முன்னேறியவன், பார்த்திபனிடம், “பிரெஸுக்கு எப்படி நியூஸ் போச்சு? இதை எல்லாம் முன்னாடியே சமாளிக்க மாட்டியா?” என்று அடிக்குரலில் வினவினான்.
“விஷயம் ரொம்ப சென்சிட்டிவ் பிரதாப். எங்களால எதுவும் செய்ய முடியல.” என்று பார்த்திபன் கூறிக்கொண்டிருக்கும் போதே, “ஜட்ஜ் வந்தாச்சு பிரதாப். சீக்கிரம் அக்யூஸ்ட்டை கூட்டிட்டு உள்ள வாங்க.” என்றார் ஜார்ஜ்.
*****
குற்றவியல் நீதித்துறை நீதிபதியின் முன் அனைவரும் குழுமியிருந்தனர்.
காவலர்கள் கண்டுபிடிக்கப்பட்ட ஆதாரங்கள் அனைத்தும் நீதிபதியிடம் முன்பே சமர்ப்பித்த நிலையில், இன்று வழக்கைப் பற்றிய முன்-விளக்கம் அளிக்கப்பட்டதும்,
பிரதாப்பிடம் குற்றவாளியை எப்படி கைது செய்தனர் என்பது பற்றிய விளக்கம் கேட்கப்பட்டது.
பிரதாப், ஆதாரங்களை திரட்டியது முதல், கிடைத்த ஆதாரங்களைக் கொண்டு மனோகரைக் கைது செய்தது, முதலில் குற்றத்தை மறுத்த மனோகர், அஞ்சலியைக் காப்பாற்ற வேண்டி ஒப்புக்கொண்டது, பின்பு அஞ்சலியைக் கைது செய்து விசாரித்தது என்று அனைத்தையும் விளக்கினான்.
அடுத்து அரசு பிரேத பரிசோதனை மருத்துவர் வைஷ்ணவி, அரசு தடயவியல் குழு தலைவர் சாரங்கன், அரசு தடயவியல் உளவியலாளர் செந்திலதிபன், முக்கிய சாட்சி நைனிகா என்று ஒவ்வொருவராக விசாரிக்கப்பட்டனர்.
பின்பு அரசு வழக்கறிஞர், கிடைத்த ஆதாரங்கள், சாட்சியங்கள் மற்றும் கீதாஞ்சலியின் வாக்குமூலம், என்று அனைத்தையும் அடிப்படையாக கொண்டு, கீதாஞ்சலிக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை வழங்குமாறு வாதிட்டார்.
எதிர்க்கட்சி வழக்கறிஞர், மனநல மருத்துவர் ரகோத்தமனை விசாரிக்க அழைத்தார். ரகோத்தமன் கூறியதை அடிப்படையாக கொண்டு கொலை செய்தபோது கீதாஞ்சலி சைக்கோபதி மனப்பிறழ்வில் பாதிக்கப்பட்டு இருந்ததாகவும், தற்போதும் அதே நிலையில் இருப்பதாகவும் கூறி, கீதாஞ்சலிக்கு தண்டனை வழங்க முடியாது என்றும், அவளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும் என்றும் வாதிட்டார்.
அடுத்து ரகோத்தமனை விசாரித்த அரசு வழக்கறிஞர், கீதாஞ்சலி முதல் இரண்டு கொலைகளை செய்தது பழிவெறியில் என்றும் அவர் அப்போது சாதாரண மனநிலையில்தான் இருந்தாள் என்றும், அந்த கொலைகளை செய்த பிறகே சிகிச்சைக்கு வந்ததால் மருத்துவரால் அந்த நேரத்தில் கீதாஞ்சலியின் மனநிலையை சரியாக கணிக்க முடிந்து இருக்காது என்றும் வாதிட, ஒரு கட்டத்தில் ரகோத்தமனும் அதனை ஒப்புக்கொண்டார். அதில் எதிர்க்கட்சி வழக்கறிஞரின் விவாதம் பலனின்றி போனது.
தனது இறுதி வாதமாக அரசு வழக்கறிஞர் பழிவெறி என்ற நோக்கத்துடன், சாதாரண மனநிலையில் திட்டமிட்டு செய்த முதல் இரண்டு கொலைகளை கருத்தில் கொண்டு கீதாஞ்சலிக்கு அதிகபட்ச தண்டனையான மரண தண்டனையை வழங்க வேண்டுமென்று முடித்தார்.
எதிர்க்கட்சி வழக்கறிஞர், கீதாஞ்சலி முதலில் சாதாரணமாக வாழ்ந்தாலும் உயிருக்கு நிகரான இரண்டு உறவுகளான கணவர் மற்றும் குழந்தையை இழந்த பிறகு முற்றிலும் உடைந்து சைக்கோபதி மனப்பிறழ்வுக்கு தள்ளப்பட்டதாலேயே கொலைகளை செய்தாள் என்று வாதிட்டு, ரகோத்தமனின் அறிக்கையை அடிப்படையாக கொண்டு கீதாஞ்சலிக்கு தண்டனை வழங்காமல், சிகிச்சைக்காக மனநல மருத்துவமனையில் அனுமதிக்க பரிந்துரை செய்யுமாறு முடித்தார்.
நீதிபதி கீதாஞ்சலியை விசாரிக்க, அவளோ பதிலளிக்கவில்லை. அவளது மௌனத்தையும், சுற்றுப்புறம் மறந்த நிலையில் இருந்த மனநிலையையும் குறித்துக் கொண்ட நீதிபதி, இரண்டாவது குற்றவாளியான மனோகர் பற்றிய விவாதத்தை தொடங்க கூறினார்.
அரசு வழக்கறிஞர், குற்றவாளி யாரென்று தெரிந்தும், அதை மறைத்த குற்றத்திற்காக, இரண்டாம் குற்றவாளியான மனோகருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை வழங்குமாறு வாதிட, எதிர்க்கட்சி வழக்கறிஞர் தண்டனை காலத்தை குறைக்குமாறு வாதாடினார்.
நீதிபதி மனோகரை விசாரித்தபோது, அவன் அதை ஒப்புக்கொண்டதை குறித்துக் கொண்டார்.
இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, முதல் குற்றவாளியான கீதாஞ்சலியின் மனநிலையை பற்றி எதிர்தரப்பு வழக்கறிஞர் கூறியதை உறுதிபடுத்த, அவளை காவல்துறையின் தீவிர கண்காணிப்புக்கு கீழ் அரசு மனநல மருத்துவமனையில் தற்காலிகமாக சேர்க்க வேண்டும் என்றும், கீதாஞ்சலியின் மனநிலையில் முன்னேற்றம் ஏற்படும் வரை, தீர்ப்பு ஒத்தி வைக்கப்படுகிறது என்றும் கூறினார்.
மேலும், தீர்ப்பு வரும் வரை இரண்டாம் குற்றவாளியான மனோகர் காவல்துறையின் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்றும் நீதிபதி கூறினார்.
அதைக் கேட்ட கீதாஞ்சலியிடம் எவ்வித எதிர்வினையும் இல்லை. மனோகர் அவளிடம் பேச முயற்சித்த போதும் அதே மௌனத்தையே பதிலாக தந்தாள்.
வெளியே மீடியா கூட்டம் கூடிவிட்ட தகவல் தெரிய வந்ததும், மனோகரையும் அஞ்சலியையும் பாதுகாப்பாக அழைத்துச் செல்ல வேண்டிய நடவடிக்கைகளில் இறங்கி விட்டான் பிரதாப்.
அவன் கணித்தது போலவே, இறந்தவர்களின் குடும்பத்தினர் சிலர், “இத்தனை கொலைகளை செய்தவளுக்கு தூக்கு தண்டனைதான் தரனும், ஹாஸ்பிட்டலுக்கு அனுப்ப கூடாது. இதெல்லாம் அநியாயம்.” என்று கோபமாக பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தனர்.
அப்போது முகத்தை மூடி அழைத்து வரப்பட்ட கீதாஞ்சலியைக் கண்டதும் அனைவரும் அவர்களை சூழ்ந்து விட, அந்த இடமே பரபரப்பானது.
பிரதாப்பும் மற்ற காவலர்களும் கூட்டத்தை விலக்கி குற்றவாளிகளை அழைத்துச் செல்வதில் தீவிரமாக இருந்தனர். பிரதாப்பின் பாதுகாப்பு நடவடிக்கையை மீறி, எங்கிருந்தோ வந்த ஒருவன் கீதாஞ்சலியின் முகத்தை மூடியிருந்த துப்பட்டாவை இழுக்க முயன்றான்.
அவனைப் பின்பற்றி வேறு சிலரும் கீதாஞ்சலியை தாக்க வர, அதை அறிந்து பிரதாப் அவர்களை தடுக்க, சில நிமிடங்கள் அவ்விடமே போர்க்களம் போல காட்சியளித்தது.
மற்ற காவலர்களின் உதவியுடன் நிலைமையை கட்டுக்குள் கொண்டு வந்த பிரதாப், இருவரையும் காவல் வாகனத்தில் ஏற்றி அனுப்பி வைத்தான்.
பின்பு, ஊடகத்தை சந்தித்தவன், அவர்களின் சில கேள்விகளுக்கு பதிலளித்து, “இன்னும் இந்த கேஸ் முடியல. ஃபைனல் ஜட்ஜ்மெண்ட் வரும். அதுவரை பொறுமையா இருங்க.” என்றவன், ஜார்ஜிடம் கண்ணசைவில் விடைபெற்று, மற்ற வேலைகளை பார்க்கச் சென்று விட்டான்.
*****
அதன்பிறகான நாள்கள் வேகமாக கடக்க, ஏசிபி பிரதாப் சக்கரவர்த்திக்கும் நைனிகாவிற்கும் உற்றார் உறவினருடன் காவலர்களும் புடைசூழ திருமணம் நடந்து முடிந்திருந்தது.
காவலன் அவனின் மனைவியானவளுக்கு ‘பிளீஸ்’ என்ற வார்த்தைக்கு புது அர்த்தம் கற்பித்திருந்தான்.
மனோகரின் உழைப்பான குட்வில் டியூஷன் சென்டரை, நைனிகா மற்றும் கௌரியை பார்த்துக் கொள்ளுமாறு மனோகர் கேட்டுக் கொண்டதற்கு இணங்க, இருவருமே அதை திறம்பட கவனித்து வருகின்றனர்.
வழக்கின் விவரம் அறிந்த பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை சென்டருக்கு அனுப்பத் தயங்கினர்.
நைனிகாவும் கௌரியும் பெற்றோர்களிடம் பேச முயற்சித்தாலும், சில மாணவர்கள் அங்கே வருவதை நிறுத்தி இருந்தனர்.
குறைவான மாணவர்களே என்றாலும், நம்பி படிக்க வந்தவர்களுக்காக டியூஷன் சென்டர் இப்போதும் நன்முறையில் இயங்கி வருகிறது.
டியூஷன் சென்டரில் மட்டுமல்லாது, சமூக ஊடங்கங்களிலும் இப்போதும் மனோகரின் பெயரும், கீதாஞ்சலியின் பெயரும் கிசுகிசுக்கப்பட்டபடியே இருந்தது.
அதுவும் கையில் ஒற்றை அலைபேசியை வைத்துக் கொண்டு, வழக்கைப் பற்றி அடி முதல் நுனி வரை அனைத்தும் தெரிந்தது போல வாயாடிக் கொண்டிருக்கும் சமூக ஊடக பிரபலங்களின் பங்களிப்பே அதிகம்!
எப்படியோ கீதாஞ்சலியின் வரலாறே அங்கு பேசு பொருளானாது.
அது எதுவும் தெரியாத சம்பந்தப்பட்டவளோ மனநல மருத்துவமனையில் தனிமையில் வெந்து கொண்டிருந்தாள்.
*****
கீதாஞ்சலியின் உடல், மன முன்னேற்றத்தைக் கண்காணிக்க, ஏசிபி பிரதாப்பும் தற்போது இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு பெற்ற சிவராமும் அரசு மனநல மருத்துவமனைக்குச் சென்றனர்.
“ரவீந்தர் கீதாஞ்சலியை இன்டர்வியூ செய்ய அனுமதி கேட்டுட்டு இருந்தாரே சார், அது என்னாச்சு?” செல்லும் வழியில் சிவராம் கேட்க,
“மனோகர் வெளியே வரணும்தான் போலீஸ்கிட்ட சரணடைந்து வாக்குமூலம் கொடுத்தேன். கண்டவனுக்கு எல்லாம் பேட்டி கொடுக்க இல்லைன்னு மூர்க்கத்தனமா கத்த ஆரம்பிச்சிட்டா சிவா. அதைப் பார்த்ததும், இனி அவளிடம் பேச முடியாதுனு புரிந்து ரவீந்தரே அமைதியா போயிட்டார்.” என்றான் பிரதாப்.
அவர்களுக்காக, மனநல மருத்துவமனையில் சிகிச்சை பெறும் கைதிகளுக்குப் பொறுப்பாளரான ஜெயிலரும் மருத்துவரும் காத்திருந்தனர்.
கீதாஞ்சலியை சந்திக்க வேண்டிய ஆவணங்களில் கையெழுத்திட்ட பிரதாப், “கீதாஞ்சலி இப்ப எப்படி இருக்காங்க டாக்டர்?” என்று வினவினான்.
“கீதாஞ்சலி, ஃபர்ஸ்ட் இங்க வந்தப்போ ரொம்ப அமைதியாதான் இருந்தாங்க.” என்று மருத்துவர் கூற, “ஹ்ம்ம், கோர்ட்ல இருந்து கிளம்பும் போது நானும் நோட்டீஸ் பண்ணேன். மேபி, மனோகருக்கும் தண்டனை கிடைக்குகிறதால, உண்டான குற்றவுணர்வா இருக்கும்னு நினைச்சேன்.” என்றான் பிரதாப்.
“மேபி… ஆனா, அடுத்த கொஞ்ச நாள்ல, மத்தவங்களை தாக்குறது, தன்னைத்தானே தாக்கிக்கிறதுன்னு ரொம்ப மூர்க்கத்தனமா நடந்துகிட்டாங்க. எங்களால கண்ட்ரோல் பண்ண முடியாம, செடேடிவ்லதான் வச்சுருந்தோம்.” என்றார் மருத்துவர்.
அதைக் கேட்ட பிரதாப், “சைக்கோபதி?” என்று வினவ, “ம்ம்ம், ஆரம்ப நிலையை எல்லாம் கடந்துட்டாங்க. ரீசண்ட்டா எடுத்த டெஸ்ட் ரிசல்ட்ஸும் அதைத்தான் சொல்லுது.” என்றார் மருத்துவர்.
“எப்படி திடீர்னு இந்தளவுக்கு சேஞ்?” என்று வினவிய பிரதாப், அதற்குப் பதிலாக, “டோபமைன் ஸ்பைக்!” என்று அவனே கூறினான்.
“எஸ், வெளிய இருந்தவரை அவங்களோட டோபமைன் ஆசைகளை நிறைவேத்திக்க நிறைய வாய்ப்புகள் இருந்துச்சு. ஆனா, இங்க ஒரு கிளோஸ்ட் ஸ்பேஸ்ல, அவங்களால அதை சேட்டிஸ்ஃபை பண்ண முடியல. அதனால, ட்ரிக்கராகி ஒரு கட்டத்துல தன்னைத்தானே தாக்க ஆரம்பிச்சுட்டாங்க. அதுக்கப்புறம், கொஞ்ச நாள் அவங்களை மயக்கத்துல வச்சுருந்து அப்சர்வ் பண்ணப்போ சில நேரம் வயலண்ட்டா பிஹேவ் பண்ணவங்க, மீதி நேரம் அமைதியா இருந்தாங்க. எதுக்கும் ரெஸ்பாண்ட் பண்ணாம, பண்ண விரும்பாம, தனக்குத்தானே பேசிக்க ஆரம்பிச்சாங்க.” என்றார் மருத்துவர்.
“ஹாலுசினேஷனா?” என்று பிரதாப் அதிர்ச்சியுடன் வினவ, “சீம்ஸ் லைக் ஆடிட்டரி ஹாலுசினேஷன். அதாவது, அவங்களுக்கு மட்டும் ஏதோ குரல்கள் கேட்கிற மாதிரி ஒரு தோற்றத்தை அவங்களே கற்பனை பண்ணிக்கிறாங்க. அவங்களோட ரூம்ல இருக்க கேமரா வழியா பார்த்தப்போ, அவங்களோட ஹஸ்பண்ட் அண்ட் பேபியோட குரல்களைத்தான் அவங்க அஸ்யூம் பண்ணிக்கிறாங்கன்னு கன்ஃபார்ம் பண்ணோம்.” என்றவர், ஒரு காணொளிக் காட்சியைக் காட்டினார்.
அதில் கீதாஞ்சலி யாருமில்லாத அறையில் தனியே பேசுவதும், சிரிப்பதும் தெரிந்தது.
தனிமையில் இருக்கும்போது, அந்த முகத்தில் கோபமோ, ஏமாற்றமோ, துக்கமோ வேறு எந்த உணர்வுகளும் இல்லை. சிரிப்பு மட்டுமே!
இதுவரை யாரிடமும் வெளிப்படுத்தியிராத சிரிப்பு!
“மாதேஷ்மா… நிலா பாப்பா… என்னை ஏன் தனியா விட்டுட்டுப் போனீங்க?” என்று ஏதேதோ பிதற்றிக் கொண்டிருந்தவள், குழந்தைக்கு ஊட்டுவதாக எண்ணி, சாப்பாடு கொடுக்கப் போன பணியாளரின் வாயில் உணவை திணித்தாள்.
பின் அது பணியாளர் என்பதை உணர்ந்ததும் மூர்க்கமாக அவரைத் தள்ளிவிட்டு, “நான் என் குடும்பத்தோட நேரம் செலவிடுறப்போ நீ எதுக்கு வந்த? உன்னை அந்த கலிவரதன்தான் அனுப்பினானா? அவனை மாதிரியே உன்னையும் கொன்னாதான் சரியா வரும்.” என்று கழுத்தை நெறிக்க ஆரம்பித்தாள்.
சத்தம் கேட்டு வந்த மற்றவர்கள் அந்த பணியாளரை கீதாஞ்சலியிடமிருந்து பிரித்தனர்.
அப்போதும் அமைதியாக இல்லாமல், “யாரும் இங்க வரக்கூடாது. இங்க நான், மாதேஷ், நிலா பாப்பா மட்டும்தான் இருப்போம்.” என்று கர்ஜித்தவள், அடுத்த நொடியே சாதுவாக மாறி, “ஹையோ நிலா பாப்பா, அம்மா கத்துனதுல பயந்துட்டியா? இனிமே, அம்மா கத்த மாட்டேன் சரியா? நீ ஜோஜோ தூங்குறியா?” என்று தூளியை ஆட்டுவது போல சைகை செய்தாள்.
மேலும், “மாதேஷ்மா, இங்க ரொம்ப டிஸ்டர்பன்ஸா இருக்குல.” என்று அவள் குழைவான குரலில் பேசுவதுடன் அந்த காணொளி முடிந்திருந்தது.
அதைக் கண்டவர்களின் முகம் பரிதாபத்தையே வெளிப்படுத்தியது.
“ஐ திங்க், தனிமையும், தனக்கு யாருமில்லங்கிற நினைப்பும் அவங்களை சிவியர் டிப்ரெஷன்ல தள்ளியிருக்கு. அதை ஃபேஸ் பண்ண முடியாம, இப்படி ஒரு மாயையை அவங்களே உருவாக்கி இருக்கணும்.” என்று அந்த மருத்துவர் கூறினார்.
“இப்போ நாங்க அவங்களை மீட் பண்ணலாமா டாக்டர்?” என்று பிரதாப் வினவ, ஜெயிலருடன் அவர்களை அனுப்பி வைத்தார் மருத்துவர்.
ஜெயிலர் கீதாஞ்சலியின் அறை வாயிலுடன் சென்றுவிட்டார்.
க்ஷண பித்தம் க்ஷண சித்தம் என்பதை மெய்ப்பிப்பது போல், கீதாஞ்சலி சில நேரம் சாதுவாகவும் சில நேரம் ஆக்ரோஷமாகவும் நடந்து கொள்வதால், தன்னிலை அறியாது மூர்க்கமாய் நடந்து கொள்ளும் மனநோயாளிகளை சந்திப்பதற்கென்றே பிரத்யேகமாக இடுப்பளவு சுவரில் கண்ணாடித் திரை அமைக்கப் பட்டிருந்த அந்த அறைக்குள் மூவரும் நுழைந்து இருக்கைகளில் அமர்ந்து கொண்டனர்.
அறையின் எதிர்ப்புறம் இருந்த கதவின் வழியே இரு பெண் காவலர்களின் நடுவே நுழைந்த கீதாஞ்சலியின் பார்வை, சிவராமைக் கண்டு கொள்ளாது, பிரதாப்பைத் துளைத்தது.
மெலிந்நிருந்தாள். ஏதோ மயக்கத்திலும், மோனத்திலும் இருப்பவளைப் போல் கண்கள் இரண்டும் நிலையின்றி அலைபாய்ந்தன.
பாதுகாப்பிற்காக அவளது தலைமுடி, நகம் அனைத்தும் வெட்டப்பட்டு, மருத்துவமனை தந்த பட்டன்கள் இல்லாத சட்டையும், நாடா இல்லாது, எலாஸ்டிக் தைத்த கால் சராயும் அணிந்திருந்தாள்.
“எப்படி இருக்க அஞ்சலி?” என்று உரையாடலை ஆரம்பித்தான் பிரதாப்.
தொடக்கத்தில் அமைதி காத்து, பிறகு மெதுவாகப் பேசத் தொடங்கிய கீதாஞ்சலி, “நைனி எப்படி இருக்கா?” என்று வினவ, “நல்லா இருக்கா. எங்களுக்குக் கல்யாணம் ஆகிடுச்சு.” என்றான் பிரதாப்.
திடீரென குரலை உயர்த்திய கீதாஞ்சலி “தப்பே செய்யாத மனோ அண்ணாவை ஜெயிலுக்கு அனுப்பி, கௌரியையும் அண்ணாவையும் பிரிச்சுட்டு நீ மட்டும் கல்யாணம் கட்டிக்கிட்டு சந்தோஷமா இருப்பியோ?” என எதிரே இருந்த இருவரையும் அதிரச் செய்தாள்.
பொறுமையை வரவழைத்துக்கொண்ட பிரதாப், “அமைதியா இரு, அஞ்சலி. உன் நல்லதுக்குத்தான் சொல்றேன்.” என்று கூற, “எதுடா நல்லது, எனக்கு என் மாதேஷும் நிலா பாப்பாவையும் தவிர எதுவுமே நல்லது இல்ல. ஆமா, எனக்கு நல்லது சொல்ல நீ யாரு? நீ ஏசிபின்னா இருந்துட்டுப் போ. உன்னைக் கொல்லாம விட்டுருக்கறதே அந்த பயந்தாங்கோலி நைனிகாவுக்காகத்தான் ” என்று நிதானமிழந்து ஆக்ரோஷமாக உறுமினாள்.
ஆவேசம் வந்தவளைப் போல் கண்கள் அங்குமிங்கும் அலைபாய, உடலை எக்கி சற்றுத் தள்ளி பிளாஸ்டிக் பாட்டில் குடி நீரின் அருகில் இருந்த எவர்சில்வர் தம்ளரை எடுத்தவள், கண்ணிமைக்கும் நேரத்தில், மனோ வேகத்தில் அந்த தம்ளரின் விளிம்பைத் தன் இடது கை மணிக்கட்டு நரம்பில் சரியாகக் குறுக்கு வெட்டில் பாய்ச்ச, ஒரு கணம் தாமதித்துக் கொப்பளித்தது ரத்தம்.
தன்னுடலிலிருந்து செந்நிறத் திரவம் குபுக்கென்று பெருகி வெளியேறுவதை கோபம் மறந்த பைசாசச் சிரிப்புடன் கண்டவள், “நானும் உங்க கிட்ட வரப்போறேன் மாதேஷ்… நிலா பாப்பா…” என்று கிசுகிசுத்தாள்.
வலியை உணர்வதை எப்போதோ கடந்திருந்தாள் அவள்.
அவளின் மனம் முழுவதும், கணவன் மற்றும் மகளிடம் செல்லப் போகிறோம் என்ற உற்சாகம் பெருக்கெடுத்து ஓட, அது அவளின் டோபமைன் பசிக்குப் பெருந்தீனியாகிப் போனது.
அவளின் செய்கையில் ஒருநொடி திகைத்து நின்று விட்டனர் பிரதாப்பும் சிவராமும்.
முதலில் நிகழ்விற்கு வந்த பிரதாப், “சப் இன்ஸ்பெக்டர், கான்ஸ்டபிள்ஸ், டாக்டர், அஞ்சலியைப் பாருங்க, க்விக்” என்று கத்தியபடி பின்பக்கக் கதவை நோக்கி ஓடினான்.
கீதாஞ்சலியை அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதித்து ட்ரீட்மென்ட்டைத் தொடங்கினார் அரசு மருத்துவர்.
“ஷிட், இதுக்கு வேற என்னென்ன பதில் சொல்லணுமோ, சரியான கழுத்தறுப்பு கேஸுடா சிவா.” என அலுத்துக் கொண்ட பிரதாப், கமிஷனருக்கு அழைத்து விஷயத்தை சொன்னான்.
“இப்போதான் தகவல் வந்துச்சு பிரதாப். காட், இந்தக் கேஸ் இப்படி முடியும்னு எதிர்பார்க்கல. ஃபர்தர் டீடெயில்ஸ் எனக்கு அப்டேட் பண்ணிட்டே இரு.” என்றார் ஜார்ஜ்.
சில மணி நேரங்கள் கழித்து வெளியே வந்த மருத்துவர், “இப்போதைக்கு உயிரை காப்பாத்தி இருக்கோம். ஆனா, அவங்களுக்கு உயிர் வாழணும்னு ஆசை இல்ல போல. அவங்க கோ-ஆப்பரேட் செய்யலைன்னா உயிரோட இருக்க வாய்ப்பில்ல.” என்று கையை விரித்தார்.
அனுமதி கேட்டு உள்ளே சென்று பார்த்தான் பிரதாப்.
உடலாலும் மனதாலும் சிறிதும் ஒத்துழைப்பு கொடுக்க விரும்பாமல், ஒருவித பிடிவாதத்துடன் கீதாஞ்சலி இருப்பது போல தோன்றியது பிரதாப்பிற்கு.
இரத்தம் இழந்த சோர்வு அவளின் முகத்தில் தெரிந்தாலும், அதைத் தாண்டிய ஏதோவொரு நிறைவும் அங்கு தென்பட்டது.
அவளின் இடது கரத்தை நோக்கியவனுக்கு, ‘இது அவளோட ஆழ்மனசுல பதிஞ்சுருக்கணும். அதான், தற்கொலை செய்யும் போது கூட அதையே உபயோகிச்சுருக்கா!’ என்ற எண்ணம் வந்து போனது.
அப்போது அவனின் அலைபேசி வைப்ரேஷன் மோடில் ஒலிக்க, அவசர சிகிச்சைப் பிரிவிலிருந்து வெளியே வந்தான்.
அழைத்தது பிரதாப்பின் மனைவி நைனிகா.
கீதாஞ்சலியை பார்த்துவிட்டு, நைனிகாவுடன் வெளியே செல்வதுதான் பிரதாப்பின் திட்டம்.
நடந்த களேபரத்தில், அதை சுத்தமாக மறந்திருந்த பிரதாப், நெற்றியை நீவியவாறே அழைப்பை ஏற்றான்.
அழைப்பு ஏற்கப்பட்டதும், “என்ன போலீஸ்கார், திரும்ப பிளீஸ் சொல்லப் போறீங்க, அதான?” என்று நைனிகா வினவ, “சாரி நைனி. எதிர்பார்க்காத சிசுவேஷன்…” என்றவனுக்குள் கீதாஞ்சலியைப் பற்றி மனைவியிடம் கூறலாமா வேண்டாமா என்ற குழப்பம்.
பின், ‘இப்போது சொல்லி, அவளின் மனநிலையையும் கெடுக்க வேண்டாம். நேரில் பார்த்து சொல்லிக் கொள்ளலாம்.’ என்ற முடிவிற்கு வந்தவன், ஒருநொடி தாமதித்து, “உனக்கு வருத்தமா இல்லல நைனி?” என்று வினவினான். குடும்பஸ்தனாகி விட்டான் அல்லவா!
“போலீஸ்காரனுக்குக் கழுத்தை நீட்டினா எப்படி இருக்கும்னு கல்யாணத்துக்கு முன்னாடியே ட்ரையல் காட்டிட்டீங்களே… இப்போ பழகிடுச்சு.” என்று கேலியாகக் கூறிய நைனிகா, “நீங்க போய் உங்க வேலையை பாருங்க. நான் நெட்ஃபிளிக்ஸ்லேயே படம் பார்த்துக்குறேன்.” என்று சிரித்த முகத்துடனேயே கூறினாள்.
திருமணத்திற்கு முன் சிறிது சருக்கினாலும், இப்போது தெளிந்து விட்டாள் பிரதாப்பின் நைனிகா.
புரிந்து கொள்ளக் கூடிய வாழ்க்கைத்துணை கிடைத்தால் அதுவல்லவோ பேரின்பம்?
அதை அனுபவித்தவாறே, அடுத்த வேலைகளை பார்க்கச் சென்றான் அந்தக் காவலன்.
*****
சிகிச்சைக்கு கீதாஞ்சலி சரியாக ஒத்துழைக்காத காரணத்தினால், இரவு காய்ச்சல் கண்டது.
மறுநாள் மதியம் மூன்று மணியளவில், ஜூர வேகம் தாளாது, “மாதேஷ்… நிலா பாப்பா…” என்ற உதட்டசைவுடன் கீதாஞ்சலியின் உயிர் அவளின் உடலை விட்டுப் பிரிந்தது.
தகவல் கேள்விப்பட்ட பிரதாப் கீதாஞ்சலியைக் காண வந்திருந்தான்.
கீதாஞ்சலியின் இரத்தப்பசையற்ற முகத்தைக் கண்டவனின் அலைபேசி ஒலிக்க அதை ஏற்று காதில் வைத்தான்.
மறுமுனையில் இருந்தவரோ, “ஹலோ சார், நான் சக்தி நகர் இன்ஸ்பெக்டர் பேசுறேன். இங்க ஒரு வீட்டுல ரெண்டு பேர் கொல்லப்பட்டிருக்காங்க சார். கொலை செஞ்ச விதம், ரீசண்ட்டா நடந்த சீரியல் கில்லிங் மாதிரியே இருக்கு.” என்று பரபரப்புடன் பேசினார்.
அதைக் கேட்ட பிரதாப்பிற்கு, இப்போது கீதாஞ்சலி தன்னைப் பார்த்து தெனாவெட்டாகச் சிரிப்பது போலிருந்தது.
ஒரு பெருமூச்சுடன் அங்கிருந்து நகர்ந்த பிரதாப், சிவாவிடம் இங்கிருங்கும் வேலைகளை ஒப்படைத்து விட்டு, அவனின் அடுத்த வழக்கை கவனிக்கச் சென்றான்.
கொலையாளி இல்லாமல் போனாலும், கொலைகளுக்கான காரணங்கள் மட்டும் குறைவதாக இல்லை.
அதுவரை உதிரமும் உறையாது!
###****###
எங்களின் இந்த கூட்டு முயற்சி வெற்றிகரமாக முடிந்ததில் பெரும் மகிழ்ச்சி!
இந்தத் தொடர்கதை போட்டியில் கலந்துகொண்ட எழுத்தாளர்களுக்கும், ஆர்வமாக கதை பற்றிய தங்கள் கருத்துக்களையும், ஆசிரியர்கள் பெயர்களை கெஸ் செய்ய ஆர்வம் காட்டிய வாசகர்களுக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இப்பொழுது நீங்கள் எல்லாரும் ஆர்வமாக கேட்ட எழுத்தாளர்களின் பட்டியலை பார்க்கலாம்.
எபிசோட் எழுதிய எழுத்தாளர் வரிசைபடி இல்லாமல், கலைத்துப் போட்டுத்தான் பெயர்களை கொடுக்கப் போகிறேன்.
அதிலிருந்து நீங்கள் சரியான எபிசோட் எழுதிய எழுத்தாளரை கண்டுபிடிக்க வேண்டும்.
பதிலை பகிர்ந்துகொள்ள உங்களுக்கு செப்டம்பர் 30 வரை நேரம் இருக்கிறது.
அக்டோபர் ஒன்றாம் தேதி வெற்றிப்பெற்றவர்களின் பெயர்கள் அறிவிக்கப்படும்.
1 பார்கவி முரளி
2 கார்த்திகா சக்கரவர்த்தி
3 கவிதாஞ்சலி
4 வேதாவிஷால்
5 கோமதி அருண்
6 கார்த்தி சொக்கலிங்கம்
7 பிரவீணா தங்கராஜ்
8 நித்யா மாரியப்பன்
9 துமி
10 எழிலன்பு
11 மயில் நாவல்
12 தீபா செண்பகம்
13 பிரியதர்ஷினி.எஸ்
14 அனுஷா டேவிட்
15 லதா பைஜூ
16 ஜீனத் சபிஹா
17 நர்மதா சுப்ரமணியம்
18 அனிதா குமார்
19 பாலதர்ஷா
20 கவி ரகு
21 ஹேமா கோபால்
22 நிம்மி நாவல்ஸ்
23 ஆண்டாள் வெங்கட்ராகவன்
24 ????? பெயர் மறைத்து எழுதிய எழுத்தாளர்(இவரை நீங்கள்தான் கண்டுபிடிக்க வேண்டும்)
என்னடா 25 எழுத்தாளர்கள் எழுதிய கதைன்னு சொன்னாங்க. இப்ப லிஸ்டில் ஒரு பெயர் குறையுதேன்னு பார்க்கிறீங்களா? ஒரு நல்ல விஷயம் செய்யும்போது சில தடங்கல்கள் வருவது இயல்பு தானே.
ஒரு எழுத்தாளர் விலக வேண்டிய சூழ்நிலை.
அதனால் 24 எழுத்தாளர்களும் கலந்து பேசி, கதைக்கு எந்த மாதிரியான நிறைவை கொடுக்கலாம் என நாங்கள் ஒன்றாக முடிவு செய்தோம்.
அதை எங்கள் அனைவரின் ஒப்புதலுடன் நிறைவு அத்தியாயத்தை எங்களில் ஒருவரே எழுதியிருக்கிறார். அவர் யார் எனக் கண்டுபிடியுங்கள்.
அதோடு பெயர் மறைத்து எழுதிய எழுத்தாளர் யார் என இப்போது சொன்னால், நானே சரியான பதிலை சொன்னதுபோல் ஆகிவிடும். அதனால் உங்களுக்கு இப்பொழுது ஒரு க்ளூ மட்டும் கொடுக்கிறேன்.
எழுத்தாளரின் பாதி பெயர் இந்தக் கதையில்தான் மறைந்துள்ளது. அது என்ன பெயர் எனக் கண்டுபிடித்து எழுத்தாளரின் முழுப்பெயர் சொல்லுங்கள்.
அத்தியாயத்தை எழுதிய எழுத்தாளர்களின் பெயர்களை எத்தனை பேர் சரியாக சொல்லப் போகிறீர்கள் என அறிய காத்திருக்கிறோம்.
முக்கிய குறிப்பு : அந்தந்த எபியில் மட்டுமே நீங்கள் கெஸ் செய்த ஆசிரியரின் பெயரை சொல்ல வேண்டும்.
ஒரே அத்தியாயத்தின் கீழ் இவர் அல்லது அவர் என்று இரண்டு மூன்று பதில்களை சொல்லக்கூடாது. ஒரு ஆசிரியரின் பெயரை மட்டும் சொல்ல வேண்டும்.
தளத்தில் சொல்லப்படும் பதில்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.
இன்னொரு குறிப்பு : அத்தியாயம் படித்தபோதே பதில் சொன்னவர்களுக்கு மட்டும் இந்த சலுகை. இப்பொழுது பெயர் லிஸ்ட் கொடுத்தபின் உங்களுக்கு எல்லாம் இன்னொரு வாய்ப்பு. மீண்டும் நீங்கள் முதல் அத்தியாயத்தில் இருந்து உங்கள் கணிப்பை சொல்லலாம்.
ஒரு அத்தியாயத்திற்கு ஒரு ஆசிரியர் பெயர்!
புதிய கணக்காக அது எடுத்துக்கொள்ளப்படும். முன்பு சரியாக சொல்லி... இப்பொழுது தப்பாக சொன்னால், முன்பு சரியாக சொன்ன பதிலை மட்டும் எடுத்துக்கொள்ளப்படும்.
(எபிசோட் போட்டதும் ஆர்வத்துடன் கலந்துகொண்ட வாசகர்களுக்காக மட்டுமே இந்தச் சிறப்பு சலுகை.)
சரியான பதிலை சொல்லி பரிசை வெல்ல அனைவருக்கும் வாழ்த்துகள்.