• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

அத்தியாயம் -19

mayil

Writer✍️

அத்தியாயம் -19

கருத்து தெரிவித்து உற்சாகப்படுத்தியவர்களுக்கு நன்றி நண்பர்களே!
poth-new.webp

எப்பவும் போல அதிகாலை நாலு மணிக்கு கண் முழித்து விட்டாள் அன்னம்.அன்றைக்கு ஞாயிற்றுக்கிழமை.வேலை நாளில் பத்து மணி வரை இழுத்து போர்த்துக் கொண்டு தூங்க வேண்டும் போல இருக்கும். ஆனால் லீவு நாளில் மட்டும் அலாரம் வைத்தது போல நாலு மணிக்கு தானாக விழிப்பு வந்து தொலைக்கிறது என்ற எரிச்சல் அவளுக்கு.


ஒரு வாரம் மகன் வீட்டில் தங்கி இருந்த நவநீதம் நேற்று மாலை தான் ஊருக்கு கிளம்பி போயிருந்தார்.மகனை வீட்டிலிருந்து வேலை பார் என்று சொன்னவர் மருமகள் வேலைக்கு போய் வர எதுவும் சொல்லவில்லை.


இதற்கிடையில் ஹாஸ்பிட்டலில் ராஜனுக்கு முழு உடல் பரிசோதனை முடிந்து விட்டது.பயப்படும் படி பெரிதாக எதுவும் இல்லை.ஆனால் நல்ல தூக்கமும், உடல் பயிற்சியும்,நல்ல ஆரோக்கியமான உணவும் எடுத்துக் கொள்ள சொல்லியிருந்தார் டாக்டர்.பிளட் பிரசர்க்கு மருந்து கொடுத்திருக்கிறார்கள்.


கண்விழித்த அன்னம் குளியலறைக்குள் போய் முகம் கழுவி விட்டு வந்தாள்.அமைதியாக பால்கனியில் போய் நின்று கொண்டு வெளியே பார்த்துக் கொண்டிருந்தாள் அவள்.


அப்போது கணவன் எழுந்து பாத்ரூம் போவது தெரிந்தது அவளுக்கு.


இவனுக்கும் தூக்கம் போயிடுச்சா என்று நினைத்தபடி காபி போடலாம் என்று சமயலறைக்குள் நுழைந்தாள்.


“எங்க போற….வா தூங்கலாம்…..”சொல்லியபடி அவளை இழுத்துக் கொண்டு வந்து கட்டிலில் தள்ளி பக்கத்தில் தானும் படுத்துகொண்டான்.


“என்ன பாக்குற….”என்றான் மனைவியிடம்.


“முகம் கழுவினா துடைக்க மாட்டியா…”சொல்லியபடி பக்கத்து சோபாவில் இருந்த துண்டை எடுத்து வந்து அவன் முகத்தை துடைத்து விட்டாள்.


“நான் என்னடி பேஷண்டா….? இப்படி பாத்துக்கிற….” என்றவனை முறைத்தவள் அவன் முகத்தை துடைப்பதை நிறுத்தவில்லை.


நடந்த எல்லாவற்றையும் மறந்து விட்டு கண்ணும் கருத்துமாக தன்னை கவனித்துக் கொள்ளும் மனைவியை தான் விழி அகற்றாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ராஜன் .ஹாஸ்பிட்டலில் படுத்திருக்கும் போது தான் மனைவிக்கு தன் மேல் இருக்கும் அன்பை புரிந்து கொண்டான் அவன்.தன்னை படுக்கையில் பார்த்ததும் அதை தாங்க முடியாமல் கண்கலங்க தலை குனிந்தது அமர்ந்திருந்தாள் என்று அவனுக்கு தெரியும்.டாக்டரிடம் தனியாக போய் பேசிவிட்டு வந்து தான் கொஞ்சம் உயிர்ப்போடு நடமாடிக் கொண்டிருந்தாள்.


என் மேல் எத்தனை அன்பு இருந்தால் நான் கலங்கும் போதெல்லாம் இறுக கட்டி அணைத்து ஆறுதல் படுத்தி இருப்பாள் என்ற எண்ணம் தான் அவனுக்கு. அப்படி என்றால் நான் அவளை காதலிப்பதை போல் தங்கமும் தன்னை காதலிக்கிறாள் என்று சரியாக புரிந்து கொண்டான் இப்போது.


மனதுக்குள் இத்தனை அன்பை வைத்துக் கொண்டு முகத்தை மட்டும் விறைப்பா வச்சிருக்க இவளால மட்டும் தான் முடியும் .தன் மனதை ஏன் என்னிடம் சொல்ல மாட்டேன் என்கிறாள் இவள்.மறுபக்கம் தன் செயல்களை மூலம் ஒட்டு மொத்த அன்பையும் கொட்டி கொண்டிருக்கிறாள் என்று தான் அவன் யோசனை போனது.


“என்ன சார் ரொம்ப பலமா யோசனை போகுது….”


“இத்தனை அன்போட என்னை நீ பாத்துகிட்டா நான் என்னடி பண்ண…? ஏன்டா என்னை விட்டு போனடா என்று என் கிட்ட சண்டை போடு.அப்ப தான் உன்னை விட்டு ஓடி போன என்னோட குற்ற உணர்ச்சி கொஞ்சமாவது போகும்…..”


“இதை சொல்ல தான் காலங்காத்தால எந்திரிச்சு முகம் கழுவி வந்தியா.பேசாமல் படு….”என்று சொல்லியபடி அவன் ஒற்றை காதின் தோட்டில் எம்பி முத்தம் வைத்தாள்.


“நீ இப்படி முத்தம் கொடுத்து என்னை ஏத்தி விட்டா என்னடி பண்ண…? சொல்லியபடி அவள் முகம் எங்கும் வேகமாக முத்தம் வைத்தான் கணவன்.


“வரதா என்ன பண்ற…..?கணவனின் செயல்கள் எல்லாம் அடுத்து என்ன வரப்போகிறது என்று சரியாக சொல்லியது அவளுக்கு.




“ஏன் ஹாஸ்பிட்டலில் கிடந்தது வந்தவனால எதுவும் முடியாதுன்னு நினைக்கிறியா….எனக்கு எல்லாம் முடியும்….”என்று கண்ணடித்தான்.
“ச்சீ….என்னடா பேச்சு இதெல்லாம்…..”

“இதை எல்லாம் உன்கிட்ட மட்டும் தான் பேச முடியும். எல்லாத்தையும் நினைச்சு நினைச்சு தான் என்னோட டென்ஷனை இன்னும் ஏத்தி கிட்டேன்….என் பொண்டாட்டி கிட்ட ஆசையா எப்படி எல்லாம் நடந்துக்கணும் என்று ஆயிரம் கனவு கண்டவன்டி நான்….”


பதில் சொல்லாமல் அவன் வாயில் மெதுவாக அடித்து வைத்து என்ன பேச்சு இது என்று தான் பார்த்தாள் அவள்.


“என்ன பாக்குற…. கல்யாண வயசுல இருக்கிற எல்லா பயலுக்கும் வரபோற பொண்டாட்டிய பற்றி மனசுக்குள்ள பல கோடி ஆசை இருக்கும்.அதை எல்லாம் ஆசை பட்டு கட்டிகிட்ட பொண்ணுகிட்ட தான் ட்ரை பண்ணி பார்க்க முடியும்….”என்று காரியத்தில் கண்ணாக இருந்தான் அவன்.


அவனை ஏன் மறுக்க போகிறாள் மனைவி.பருவ வயதில் அவன் காதல் சொன்ன நொடியிலிருந்து அவன் மேல் தோன்றிய காதலை தன் மனதில் பொத்தி வைத்து கொண்டிருக்கிறாள் என்பது ரகசியமாக அவளுக்குள் மட்டுமே புதைந்து போயிருக்கிறது.



அந்த நாளின் அழகான காலை பொழுதில் இரண்டு காதல் பறவைகளின் இனிமையான சங்கமம் அந்த நாளில் நடந்து முடிந்தது.தான் சொல்லாமலே தன் காதலை கணவன் கண்டு கொண்டானே என்ற பெரு மகிழ்ச்சிஅவளுக்கு.தன் காதலியும் காதலும் திரும்ப கிடைத்த பேரானந்தம் வரதராஜனுக்கு என இருவரின் உள்ளமும் துள்ளல் போட்டது.



அடுத்த நாளும் லீவு போட்டு தங்கள் அன்பை ஒருவருக்கு ஒருவர் எடுத்தும், கொடுத்தும் கொண்டாடி தீர்த்தது இந்த காதல் ஜோடி.அடுத்து வந்த நாட்களில் எல்லாம் தன் திருமண வாழ்வு இத்தனை இனிமையாக மாறிவிட்டதா என்று நம்ப முடியாமல் சுற்றி கொண்டிருந்தாள் அன்னக்கொடி.


நாட்கள் விரைந்தோட தியாகராஜன் குடும்பத்துடன் ஜெர்மனி கிளம்பிவிட்டான்.அதற்கு முன் இரண்டு நாட்கள் தம்பி வீட்டில் வந்து தங்கி இருந்துவிட்டு தான் போனான் அண்ணன்.


மூத்த மகன் திரும்பி வெளிநாட்டுக்கு போவான் என்று நினைத்தும் பார்க்கவில்லை நவநீதம்.அதுவே அவருக்கு பெரிய அதிர்ச்சியை கொடுத்திருந்தது.இரண்டு மகன்கள்,அவர்களின் மனைவிமார், பேரப்பிள்ளைகள் என்று எல்லோரும் ஒன்றாக வாழ தான் அத்தனை பெரிய மாளிகை போல வீடு கட்டி குடி போனார் நவநீதம்.இப்போது எல்லாம் கனவாகி போன கவலை அவருக்கு.


மறுபக்கம் சின்னவன் வரதராஜன் மனைவியுடன் கோயம்புத்தூர் போனது தான்.அதன் பின் ஊர் பக்கம் எட்டியும் பார்க்கவில்லை என்ற கலக்கமும் சேர்ந்து கொண்டது இப்போது.


“அம்மாவும் மாமாவும் உனக்கு பண்ணது அநியாயம் தான்.ஆனா இப்படியே இருந்திடாத ராஜன்.அப்பப்ப ஊருக்கும் போய் வா.அவங்களை உன்னை நம்பி தான் விட்டுட்டு போறேன் பாத்துக்கடா…”என்று தம்பியிடம் சொல்லி விட்டு தான் கிளம்பியிருந்தான் அண்ணன்.


ராஜனும் அன்னக்கொடியும் மீனாவின் திருமணத்துக்கு தேனிக்கு வந்திருந்தார்கள்.மீனாவின் மாப்பிள்ளை அந்த ஊரை சேர்ந்தவன் தான்.அந்த திருமணத்துக்கு ராஜனின் தந்தை மட்டும் தான் வந்திருந்தார்.


“ஏன் மாமா அத்தை வரல….”சாப்பிட்டு விட்டுஉட்கார்ந்து இருந்தவர் அருகில் வந்து கேட்டாள் அன்னம்.


“தெரியலம்மா வரேன்னு தான் சொன்னா.ஆனா கடைசியில நீங்க மட்டும் போயிட்டு வாங்க என்று சொல்லிட்டா உங்க அத்தை….”


“ஊர்ல இருந்து பஸ் ஏற்பாடு பண்ணி இருந்தாங்க தானே.அதுல ஏறி வர முடியலையா அவங்களுக்கு…”என்றான் ராஜன்.


“அது வந்து….மாப்பிள்ளை….” என்று சொல்லியபடி அங்கே வந்தார் அன்னக்கொடியின் அன்னை.


“என்னம்மா…..”என்றாள் அன்னம்.


“நானும் அம்மாவும் நேற்று வெள்ளிக்கிழமை நம்ம ஊர் கோவிலுக்கு போயிருந்தோம்.அங்க நவநீதம் அத்தையும் வந்திருந்தாங்க….”என்றாள் பூங்கொடி தாயை இடைமறித்து.


“அதுக்கு என்ன….”என்றான் ராஜன்.


“பூசை எல்லாம் முடிஞ்சு வெளிய வர்றப்போ பக்கத்துக்கு ஊர் சாரதா பாட்டிய பாத்தோம்…”என்றாள் பூங்கொடி.


“என்ன நவநீதம் ஊர்ல இல்லாத அண்ணன் வீட்டில பொண்ணு எடுத்ததா பீத்திக்கிட்ட.இப்ப உன் பெரிய பையன் வெளிநாடு கிளம்பி போயிட்டான்.மாமன் வீட்டு உறவை விலக்கி வைக்க தான் போனான் என்று ஊரெல்லாம் பேசிக்கிறாங்க.சின்ன பையனும் உன்னை விட்டுட்டான் போல….”என்று நவநீதத்தை முகத்துக்கு நேராக கேட்டதும் கண்கலங்க தெய்வநாயகியின் கையை பிடித்துக் கொண்டார் நவநீதம்.


“பாட்டி அதெல்லாம் ஒன்னும் இல்ல.நாங்க கிளம்புறோம்…”என்று சொல்லிய பூங்கொடி அவரை தங்கள் வீட்டுக்கு கூட்டிக்கொண்டு வந்துவிட்டாள்.


அதன் பின் மோகனசுந்தரம் வந்து தான் மனைவியை வீட்டுக்கு அழைத்துக்கொண்டு போனார் என்று நடந்ததை சொல்லி முடித்தாள் பூங்கொடி.


யோசனையுடன் அமர்ந்திருந்த மகனை தான் பார்த்தார் தந்தை.


“விடு ராஜன் உங்கம்மா கொஞ்ச ஆட்டமா போட்டா. இப்ப யாராவது ஏதாவது சொன்னதும் கண்ணீர் விட்டா எல்லாம் சரியாயிடுமா….”


“அம்மாவை தனியா விடாமல் பாத்துக்குங்க அப்பா….”என்றான் மகன்.


“சரிடா நான் பாத்துக்குறேன்.அங்க பாரு கேசவன் வரான்.நீங்க அவன் கிட்ட பேசுங்க….”என்று மகனையும் மருமகளையும் கேசவனிடம் பேச விட்டு மற்றவர்களுடன் எழுந்து போனார் ராஜனின் தந்தை.


மாலை மண்டபத்திலிருந்து எல்லோரும் கிளம்ப ராஜனும் மனைவியும் கோயம்புத்தூருக்கு கிளம்பினார்கள்.திருமணத்துக்கு அணிந்திருந்த புடவையை மாற்றாமல் பையை தூக்கி கொண்டு வந்து காரில் ஏறிய மனைவியை பார்த்தபடி வண்டியை கிளப்பினான் ராஜன்.



“நாங்க ஒருவாட்டி ஊருக்கு போய் வரலாமா …? என்றாள் அமைதியாக வந்த கணவனை பார்த்து.வண்டி கிளம்பி ஒரு மணி நேரம் கடந்து விட்டிருந்தது. கணவன் ஏன் அமைதியாக இருக்கிறான் என்ற யோசனை அவளுக்கு.அவன் உடல் நலனில் மட்டுமே அவள் கவனம் போனது.


“என்ன திடீர்னு இப்படி கேக்குற தங்கம்.உங்க அத்தை தனியா இருக்காங்க என்று உனக்கு இரக்கம் வருதோ….”


“அப்படி இல்லை…..”என்று சொன்னவள் குரலில் இருந்த தயக்கமே அப்படி தான் என்று சொல்லியது.


“நாங்க ரெண்டு பேரும் சேர்ந்து ஊருக்கு போக இன்னும் நேரம் வரல.செய்த தப்புக்கு எல்லாம் தண்டனை கிடைக்க வேணாம்….” சொல்லியபடி வழியில் இருந்த டீ கடையில் வண்டியை நிறுத்தினான்.


இருவரும் டீ குடித்துக் கொண்டிருக்கும் போது காற்று பலமாக வீசியது.வேகமாக டீ யை வாய்க்குள் ஊற்றி விட்டு காருக்குள் வந்து வந்து உட்கார்ந்து கொண்டார்கள் அவர்கள்.


தன்னையே திரும்பி திரும்பி பார்க்கிறான் கணவன் என்று கண்டுகொண்டாள் அன்னம்.


“என்னையே பார்க்காமல் வண்டியை எடு வரதா…”


திறந்திருந்த கார் ஜன்னல் வழியாக வேகமாக வந்த காற்றினால் அன்னக்கொடியின் முன்புற முடிகள் எல்லாம் அங்கும் இங்கும் ஆட்டம் போட்டு கொண்டு பறந்தது.


“பரவாயில்லைடி தங்கம் காத்து பலமா அடிச்சா எனக்கு சாதகமாக சில பல சங்கதி எல்லாம் நடக்குது பாரேன்…..”என்றான் அங்கங்கே விலகியிருந்த அவள் புடவையின் பக்கம் பார்வையை செலுத்திக்கொண்டு.


“நடுரோட்டில வச்சு பேச்சை பாரு….கொன்னுடுவேன்…..வண்டியை எடுடா...." என்று கணவனை முறைத்தாள் அன்னக்கொடி.

தொடரும்......
 
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Latest threads

Back
Top Bottom