• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

EK 27

அத்தியாயம் 27

சகாயன், நறுமுகை மற்றும் மித்ரன், யாழினி நால்வரும் சென்னை எழும்பூரில் மூணாருக்குச் செல்லும் அந்த ஸ்லீப்பர் பேருந்தில் ஏறி அமர்ந்த போது, இரவு மணி பத்தைத் தாண்டியிருந்தது.

ஜன்னல் வழியே குளிர்ந்த காற்று முகத்தில் அடிக்க, நறுமுகை சகாயனின் தோளில் மெதுவாகத் தலைசாய்த்துக் கொண்டாள். அவளது கைகளைத் தன் கைகளுக்குள் பொதிந்து கொண்ட சகாயனுக்கு, அவளது அந்த மென்மையான தொடுதல் ஒரு பெரிய நிம்மதியைத் தந்தது.

அதன் பிறகு, சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்தவர்கள், குளிர்ந்த காற்று முகத்தில் அடித்த வேகத்திற்குத் தூக்கம் கண்ணைச் சொக்க... கல்யாண வேலைகளினாலும், அடுத்தடுத்து நடந்த மனப் போராட்டங்களினாலும் ஏற்பட்ட அத்தனை அசதியும், அலுப்பும் மொத்தமாகச் சேர்ந்து கொள்ள, அந்தப் பதினொரு மணி நேரப் பயணமும் அவர்களுக்கு எப்படிக் கழிந்தது என்றே தெரியாத அளவுக்கு ஒரு நல்ல தூக்கமாக மாறிப்போனது.

மித்ரன் காலையில் வந்து, "அண்ணா... மூணார் வந்தாச்சு!" என்று தட்டி எழுப்பவும் தான் சகாயனுக்குக் கண்ணில் விழிப்பே வந்தது. பேருந்திலிருந்து கீழே இறங்கியவுடன் சகாயன் தன் தம்பி மித்ரனைப் பார்த்து, "டேய் மித்ரா... நீ என் தம்பியாகவே இருக்கலாம், அதுக்காக 'அண்ணா... அண்ணா...'ன்னு பத்துத் தரம் வந்து என் அறைக்கதவைத் தட்டுற வேலையை வச்சுக்கக் கூடாது, சொல்லிட்டேன்! நீங்க ரெண்டு பேரும் உங்க ஹனிமூனைக் கொண்டாடுங்க. என்னையும் என் ஹனிமூனைக் கொண்டாட விடுங்க..." என்று செல்லமாக, பொய்யாக மிரட்டுவது போலச் சொன்னான்.

அவன் பேசியதைக் கேட்டு முகத்தைச் சுளித்த நறுமுகை, "என்னங்க இது... என்ன பேச்சு பேசுறீங்க?" என்று அவனை அதட்டினாள்.

சகாயன் அவளைத் தன் பக்கமாக இழுத்து, "பின்ன என்னடி... நீ இங்கேயும் 'அக்கா அத்தான்'னு அவங்களையே ஒட்டிக்கிட்டு இருந்தா, நான் எப்படி அப்புறம் 'அப்பா' என்ற புரமோஷனை வாங்குறது? இப்போதைக்கு என்னோட ஒரே குறிக்கோள் என்னன்னு கேட்டா... அது சீக்கிரமா அப்பா ஆகிறது மட்டும்தான்!" என்றான் அத்தனை உரிமையோடு.

அவன் சொன்னதைக் கேட்டு நறுமுகைக்குள் ஒரு மெல்லிய சிரிப்பு எட்டிப்பார்த்தது. இருந்தாலும், "அங்கே உங்க அப்பா உங்களுக்காகத்தானே பாவம், காசுக்காக அலைஞ்சு திரிஞ்சுட்டு இருக்கார்... நீங்க என்னன்னா இப்படியா பேசுறது?" என்றாள் லேசான கவலையுடன்.

சகாயனோ, "நானும் அதுக்காகத்தான்டி சீக்கிரமா அப்பா ஆக ஆசைப்படுறேன். நானும் என் பையனோட என் அப்பா மாதிரியே இருக்கணும். அவனுக்கு என்ன ஒரு சின்னப் பிரச்சனை வந்தாலும், என் அப்பா மாதிரி நான் முன்னாடி போய் நின்னு, அவனை எந்த ஒரு ஆபத்திலும் சிக்காமல் காக்கணும்" என்று தன் தந்தை நடராஜன் மீதுள்ள அத்தனை மரியாதையையும் பாசத்தையும் கொட்டிச் சொன்னான்.

அவனது அந்தப் பேச்சைக் கேட்டு நறுமுகை, யாழினி, மித்ரன் என மூன்று பேருமே வியப்பாக அவனைப் பார்த்தார்கள்.

அண்ணனின் இந்த எமோஷனல் பேச்சைக் கேட்ட மித்ரன், சூழலை லேசாக்க நினைத்து, "உங்க பேச்சைக் கேட்டு நான் அப்படியே மெர்சல் ஆகிட்டேன் அண்ணா!" என்று சகாயனைக் கிண்டல் பண்ணினான்.

"போடா போடா... நீ உன் வேலையைப் பாரு! வாடி நறுமுகை, நாம போய் நம்ம குடும்பத்தைப் பெருசாக்குற வேலையைப் பார்ப்போம்" என்று நறுமுகையின் கையை அத்தனை உரிமையோடு பிடித்து இழுத்துக் கொண்டு தன் அறையை நோக்கிப் போய்விட்டான் சகாயன்.

"வெட்கம் கெட்டவன்..." என்று மித்ரன் தன் தமையனைப் பார்த்துப் பொய்யாகச் சலித்துக் கொண்டான்.

அதை கவனித்த யாழினி, தன் கணவனை வம்புக்கு இழுக்கும் தொனியில், "சார்... அப்போ சாமியாராகப் போற ஐடியாவில் இருக்கீங்களா?" என்று நக்கலுடன் அவனைக் கலாய்த்தாள்.

அவளுக்கு எப்படித் தெரியும்? வரும் பஸ்ஸில் தன் அழகிய மனைவியைப் பக்கத்தில் அமர வைத்துக் கொண்டு, அவளைத் தொடக்கூட முடியாமல் ஏங்கி ஏங்கியே மித்ரனுக்கு இரவு முழுதும் தூக்கமே வரவில்லை என்பது!

அப்படியிருக்க அவளது இந்தக் கேள்வியைக் கேட்டதும் மித்ரனுக்குள் இருந்த காதல் வேகம் எடுத்தது. அவன் யாழினியை அப்படியே விழுங்குவது போலப் பார்த்து, "நான் ஒன்னும் சாமியார் இல்லைடி... நானும் பக்கா சம்சாரியாகத்தான் போகப்போறேன்" என்று ரகசியக் குரலில் சொல்ல... அப்புறம் என்ன? "வாங்க..." என்று அவள் வெட்கத்துடன் புன்னகைத்து முன்னால் செல்ல, மித்ரன் அவளுக்குப் பின்னால் ஆசையோடு சென்றான்.

இப்படியாக அந்த நான்கு பேரின் இரண்டு வாரத் தேன்நிலவுக் காலமும் நொடிப்பொழுதில் கரைந்து போனது. மூணாரிலிருந்து கிளம்பி ஆனந்தியின் சொந்தக் கிராமத்திற்கு வந்திருந்தார்கள். அங்கே ஒருநாள் யாழினி நறுமுகையிடம் தனியாக, "நறுமுகை... எனக்கு இந்த மாசம் நாட்கள் தள்ளிப் போயிருக்குடி..." என்று தயங்கித் தயங்கிச் சொல்லத்தான், நறுமுகைக்கே தன் நாட்களும் பிந்தியிருப்பது சட்டென்று ஞாபகத்திற்கு வந்தது.

உடனே படபடப்புடன் தன் கணவன் சகாயனிடம் ஓடிச்சென்று இந்த விஷயத்தைச் சொன்னாள் நறுமுகை. அதைக்கேட்ட சகாயனோ, துளியும் வெட்கமே இல்லாமல், "பின்ன என்னடி... நான் அப்படிக் கடுமையாக உழைச்சிருக்கேண்டி!" என்று தன்னை நினைத்தே பெருமையோடும் கர்வத்தோடும் மார்பைத் தட்டிக் கொண்டான்.

அவனது அல்பத்தனமான பேச்சைக் கேட்டு முகத்தைச் சுளித்த நறுமுகை, "ரொம்பத்தான் பெருமை உங்களுக்கு! முதல்ல போய் மெடிக்கல் ஷாப்பில் பிரெக்னன்சி கிட் வாங்கிட்டு வாங்க... போகும் போது அப்படியே அத்தானையும் கூடவே கூட்டிட்டுப் போங்க. அக்காவுக்கும் இந்த மாசம் நாள் தள்ளியிருக்காம்" என்று அவசரப்படுத்தினாள்.

"ஓஹோ! அப்போ நம்ம வீட்ல ஒரே நேரத்துல ரெண்டு 'குவாக் குவாக்' சத்தமா? சூப்பரோ சூப்பர்!" என்று அவனால் தன் சந்தோஷத்தைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. துள்ளிக் குதித்துக் கூச்சலிடப் பார்த்தான்.

அவனை அடக்கிய நறுமுகை, "மெதுவாப் பேசுங்க... முதல்ல நாம டெஸ்ட் பண்ணிப் பார்த்துட்டு உறுதி செய்வோம். அதுக்கப்புறம் வீட்டில் விஷயத்தைச் சொல்லுவோம்" என்று அவனது வாயைப் பொத்தினாள்.

இருந்தாலும், அடுத்த சில மாதங்களில் தன் கைகளில் தவழப்போகும் அந்தப் பிஞ்சு வாரிசை நினைத்து, அவனால் தன் சந்தோஷத்தை மனதுக்குள்ளேயே பூட்டி வைக்க முடியவில்லை. முகம் முழுக்கப் பிரகாசமாய் ஜொலிக்க நின்றான் சகாயன்.

அதன்பின், பிரெக்னன்சி கிட்டில் ரிசல்ட் பார்த்து பாசிட்டிவ் என்று தெரிந்து கொண்டதற்குப் பிறகுதான் வீட்டில் விஷயத்தைச் சொன்னார்கள். விஷயத்தைக் கேள்விப்பட்டதும் அந்தக் கிராமத்து வீட்டில் இருந்த சொந்த பந்தங்கள் அனைவருக்கும் அத்தனை மகிழ்ச்சி! உடனடியாக நடராஜனுக்கு போன் செய்து இந்த இரட்டிப்புச் சந்தோஷத்தைச் சொல்லியபோது, அவரோ மறுமுனையில் இன்னும் பெரிய நிம்மதியோடு பேசினார்.

"சகாயா... நம்ம ரிதன்யா பிரச்சினைக்கான காசு முழுவதையும் நான் இப்போ ரெடி பண்ணிப் புரட்டியாச்சுடா! நீங்க யாரும் இனி அங்கே இருக்க வேண்டாம், என் இரண்டு மருமகள்களையும் பத்திரமாக இப்போவே வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வாங்க" என்று அவர் சொல்லிவிட... அதனால்தான் நேற்றிரவே கிளம்பி சென்னைக்கு வந்து சேர்ந்திருந்தார்கள்.

ரிதன்யாவுக்காகக் காத்திருந்த அந்தப் பதற்றமான நேரத்திலும், தன் வாழ்வின் ஆகச்சிறந்த ஒரு மாத காலமாக நடந்த அந்த அத்தனை அழகான, சந்தோஷமான நினைவுகளையும் தன் மனதிற்குள் ஓட்டிப் பார்த்துத் தனியாக புன்னகைத்துக் கொண்டாள் நறுமுகை.
 
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
Last edited:
Previous thread
Next thread

Latest threads

Back
Top Bottom