mayil
Writer✍️
அத்தியாயம் 18
நவநீதம் மகன் வீட்டுக்கு வந்து சேர காலை எட்டு மணியாகிவிட்டது.
“எதுக்கும்மா காலையில அலைஞ்சுட்டு….”என்றான் மகன்.
“வாங்க அத்தை…” என்று இப்போது சத்தமாக கூப்பிட்டாள் அன்னம்.
“நீங்க ரெண்டு பேரும் ஊருக்கு வருவீங்கன்னு உங்கப்பா சொன்னார்.ஆனா எங்க அந்த பக்கமே காணோம்.என்னடா வாடிப்போய் தெரியுற….”சொல்லியபடி மருமகளை தான் பார்த்தார்.
‘இவங்க மகன் என்ன செம்பருத்தி பூவா சட்டுன்னு வாடி போக.இந்த அத்தைக்கு சும்மா எதையாவது சொல்ல வேண்டியது….’
“என்ன…. என்ன உன் மண்டைக்குள்ள ஓடுது….?என்றார் மாமியார் அன்னக்கொடியின் முகத்தை பார்த்துக்கொண்டே.
அவருக்கு தெரியாதா மருமகளின் நினைப்பு எப்படி போகும் என்று.சின்ன வயதிலிருந்து அன்னக்கொடியின் ஒவ்வொரு அசைவும் நவநீதத்துக்கு அத்தனை அத்துப்படி என்று அன்னமும் அறிவாள்.
“அது….இல்ல…. ஒண்ணுமில்ல அத்த….”சொல்லிய படி தலையை குனிந்து கொண்டாள் பெண்.
“என்ன ராஜன் மேலுக்கு முடியாதவன் போல இருக்க….”மகனிடம் ஏதோ ஒரு வித்தியாசம் தெரிவதைக் கண்டு கொண்டார் அன்னை.
“ஒன்னும் இல்லம்மா…..”சொல்லியபடி எதுவும் சொல்லி விடாதே என்று மனைவிக்கு கண்ணை காட்டினான்.
“அது சரி உன் பொண்டாட்டிய பெங்களூரில் இருந்து இழுத்துட்டு வந்தா போதுமா….உன் உடம்ப நல்லா பாத்துக்க வேணாமா …என்னமோ இளைச்சு தெரியுற….”
“அப்படி எல்லாம் இல்லம்மா….. “என்று தாயின் பையை வாங்கிக் கொண்டு உள்ளே வந்தான் ராஜன்.
“என்னவோ உங்க ரெண்டு பேரையும் சேர்த்து ஏதோ கெட்ட கனவு.அது தான் காலைல கிளம்பினேன்….”என்று இருவரின் தலையிலும் கை வைத்து வாஞ்சையோடு தடவிக் கொண்டார்.
“இந்தா வழியில சாப்பிடு வாங்கிட்டு வந்தேன் பிடி.நீ ஏதாவது பண்ணி வச்சியா என்ன….?இதுல மசாலா தோசையும் பூரியும் இருக்கு.சின்ன பையில ஆப்பம் கொடுத்தான் பாரு….." சொல்லியபடி சாப்பாட்டு பையை அன்னத்தின் கையில் கொடுத்தார்.
“நான் இட்லி பண்ணேன்….”
“அதுக்கென்ன எல்லாத்தையும் எடுத்து வை பசிக்குது.கை கால் கழுவிட்டு வரேன்…” சொல்லியபடி குளியலறைக்குள் நுழைந்து கொண்டார் மாமியார்.
இருவரையும் பற்றி கனவு கண்டு பயந்து போய் அதிகாலை நாலு மணிக்கு எழுந்திருக்கிறார்.அத்தோடு சேலத்தில் இருந்து கோயம்புத்தூருக்கு வேறு தேடி வந்திருக்கிறார் மாமியார். அவரிடம் ஹாஸ்பிடல் போனதை சொல்லாமல் மறைக்க பார்க்கும் கணவனின் செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை அன்னக்கொடியால்.
“அது வந்து… வரதனுக்கு நேற்று உடம்பு சரியில்லாமல் மயக்கம் போட்டுட்டான். ஆபிஸில இருந்தவங்க உடனே ஹாஸ்பிட்டல்ல சேர்த்துட்டாங்க.உங்க மகன் நேற்று முழுக்க ஹாஸ்பிட்டல் தான் இருந்து வந்திருக்கான்.அது தான் பார்க்க இப்படி காய்ச்சல் காரன் மாதிரி தெரியுது.அது தான் உங்களுக்கு கனவு வந்திருக்கு போல… ”என்று விஷயத்தை போட்டுடைத்தாள் அன்னம்.
“அட பாவி மவனே ஒரு வார்த்த அம்மாகிட்ட சொன்னியாடா….?என்ன புள்ள நீ .பாரு அவளாச்சும் உள்ளதை மறைக்காமல் சொன்னாளே….” புலம்பியவர் கையோடு போன் போட்டு இரண்டு வீட்டுக்கும் விஷயத்தை சொல்லி விட்டார்.
“அதென்ன பொண்டாட்டி கூட இருக்கிறவன் பிள்ளை உண்டாகி அவளை மயக்கம் போட வைக்காமல் ,நீ மயக்கம் போட்டு விழுந்து கிடக்கிற… என்ன புள்ளையோ போடா….”
‘நான் இங்க வந்து ரெண்டு மூணு வாரம் இருக்குமா…அதுக்குள்ள குழந்தையா ….ஐயோ இவங்களோட முடியல….’ மனதோடு புலம்பினாள் அன்னம்.
“அதென்னடா புருஷனை அவன் இவன் என்று சொல்றா உன் பொண்டாட்டி.இதெல்லாம் கேக்க மாட்டியா சின்னவனே….”
“விடும்மா அவ இஷ்டபடி இருக்கட்டும்….”சட்டென்று பதில் கொடுத்தான் மகன்.
‘இதையெல்லாம் நான் கேட்டு அவள் திரும்ப பெங்களூருக்கு கிளம்பவா…?அப்பிடியாவது என்கிட்ட பேசுறாளேன்னு இந்த அம்மாவுக்கு எங்கே தெரியப் போகுது….’என்று அவனால் வெளியே சொல்லவா முடியும் .
‘பார்றா அம்மாவுக்கு எதிரா குரல் எல்லாம் உயருது இந்த இத்துபோல பயலுக்கு.ரொம்ப துணிவு தான் போல….’ என்று தான் பார்த்து வைத்தாள் அன்னக்கொடி.
அவளுக்கு தெரிந்த வரை அம்மாவின் முந்தானையை பிடித்து கொண்டு சுற்றும் வரதராஜனை மட்டும் தானே அவள் அறிந்திருக்கிறாள்.
மயக்க மருந்து கொடுத்து ராஜனை கடத்தி வைத்த நிகழ்வுக்கு பின்னர், வந்துவிட்ட அவனது மன மாற்றம் பற்றி எல்லாம் அவளுக்கு எங்கே தெரியப் போகிறது.
நவநீதத்தின் போன் போனது தான் தாமதம் ,அடுத்து வந்த சில மணி நேரத்தில் இரண்டு குடும்பமும் மொத்தமாக கோயம்புத்தூர் வந்து சேர்ந்துவிட்டது.
“என்னடா சின்னவனே பொண்டாட்டின்னா அது தங்கம் மட்டும் தான். இல்லன்னா ஆயுசுக்கும் இப்படியே இருந்துப்பேன் என்று வாய் சவடால் விட்ட. இப்ப என்ன மயக்கம் போட்டு விழுந்து வச்சிருக்க….”என்று எல்லோர் முன்னும் கேட்டு வைத்தார் நவநீதம்.
‘இது எப்போ ‘என்று தான் கணவனை பார்த்தாள் அன்னம்.
‘ஐயோ இந்தம்மா எதுக்கு இப்ப இதெல்லாம் சொல்லி வைக்குது…’ நினைத்தபடி மனைவியை தான் பார்த்தான் ராஜன்.
‘எனக்கு மயக்கு மருந்து கொடுத்த நீயெல்லாம் என்ன அம்மா’ என்று ஊருக்கு வந்ததும் தாயிடம் சண்டை போட்டிருந்தான் கணவன் என்று அன்னக்கொடி அறியமாட்டாள்.உன்னையும் உன் அண்ணனையும் பொலிசில் பிடிச்சு கொடுக்கவா என்று அப்போது தாய்க்கு பயம் காட்டி இருந்தான் என்று அண்ணன் தியாகு மட்டுமே அறிவான்.
“என்னடி இப்படி ஆயிடிச்சு அன்னம்.உன் புருஷன் கிட்ட மனம் விட்டு பேசி சந்தோஷமா இருடி. மயக்கம் போட்டு ஹாஸ்பிடல்ல படுக்கிற வயசா ராஜனுக்கு.கவனமா இருடி….”என்று தங்கையை தனியாக கூப்பிட்டு புத்தி சொன்னாள் பூங்கொடி.
“அவங்க பையனை பாத்துக்கிற லட்சணத்தை பாருன்னு பேச்சு வராமல் புத்தியோட புழச்சுக்க.…” என்று தெய்வநாயகி ஒரு புறம் மகளுக்கு அறிவுரைகள் அள்ளித் தெளித்தார்.
நடப்பதை எல்லாம் கண்டு ராஜனுக்கு தான் ஒரு மாதிரி இருந்தது.தான் உடம்புக்கு இழுத்து வைத்து கொள்ள அது இப்போது அன்னக்கொடியின் பக்கம் திரும்புகிறது என்று சரியாக கண்டு கொண்டான்.
“அத்தை,மாமா நான் தான் புது ஆபிஸ் ,வேலை என்று ரெஸ்ட் இல்லாமல் ஓடி இப்படி எல்லாம் நடந்துருச்சு.இனி கவனமா இருக்கேன்.தங்கத்தை எதுவும் சொல்லாதீங்க.அவளுக்கு ஒன்னும் தெரியாது….”
“பாருடா தியாகு உன் தம்பியை, எப்படி பொண்டாட்டியை தாங்குறான்.இதையெல்லாம் நீயும் கத்துக்க டா….”என்றார் அன்னை.
அசடு வழிய மனைவியை பார்த்தான் தியாகு.இப்படி எல்லாம் பேச தியாகுவுக்கு சுட்டு போட்டாலும் வராது என்று சுகந்திக்கு தெரியாத என்ன.
வந்தவர்கள் எல்லாம் ஒரு வழியாக மாலையில் ஊருக்கு திரும்ப நவநீதம் மட்டும் இங்கே தங்கி விட்டார்.
“மாமியார் கூட இருக்காங்க பாத்து நடந்துக்க அன்னம் புரியுதா….”என்று மகளின் காதில் ரகசியமாக சொல்லிவிட்டு தான் கிளம்பினார் அன்னக்கொடியின் அன்னை.
இரவு உணவை முடித்துவிட்டு படுக்கைக்கு வந்தார் நவநீதம்.
மகனும் மருமகளும் ஒரே அறையில் தங்கி இருக்கிறார்கள் என்பதே பெரும் நிம்மதியாக இருந்தது அவருக்கு.ஆனால் வாய் மூடாமல் பேசிக்கொண்டிருக்கும் அன்னக்கொடி இப்போது தன்னிடம் அளந்து தான் பேசுகிறாள் என்று அவருக்கு புரியாமல் இல்லை. நம்ம அன்னம் தானா இது என்று அவள் மாற்றத்தை நம்ப முடியாமல் பார்த்து வைத்தார் மாமியார்.
“சாரி டி தங்கம் என்னால உனக்கு எல்லாரும் அட்வைஸ் பண்ணுற போல ஆயிடுச்சு….”என்றான் கணவன் மனைவியின் அருகில் நெருங்கி பார்த்துக்கொண்டே.
பதில் சொல்லாமல் அவனை தான் பார்த்தாள்.
“என்ன சொல்லு…”
“அவங்க சொல்றதும் சரி தான். உன்கிட்ட மனம் விட்டு பேசி இருந்தா இப்படி ஆகி இருக்காது தானே….”
“இல்லடி தங்கம்….நான் தான் தப்பு விடு ப்ளீஸ்….”என்று அவளை நெருக்கி வந்து படுத்துக்கொண்டான்.
அவன் காதில் கிடந்த ஒற்றை பக்க சின்ன தோடு அவளை சுண்டி இழுத்தது.
அவள் ஆசைப்பட்டாள் என்று தான் காது குத்திக் கொண்டான் என்று அவளுக்கு நன்றாக தெரியும்.
ஊர் திருவிழாவிற்கு இரண்டு நாட்களுக்கு முன் போனில் பேசும் போது தான் காது குத்தி கொள்கிறாயா என்று கேட்டதற்கு முடியவே முடியாது என்று மறுத்து விட்டான்.
“என்ன என் காதையே பாத்துட்டு இருக்க….?ஒரு காதுல தோடு போட்டுக்க சொல்லி என் ஆளு ரொம்ப ஆசைப்பட்டா.ஆனா அன்னைக்கு அவளுக்கு காட்ட முடியாமல் என்னென்னமோ ஆகிப்போச்சு….” என்றான் வருத்தமாக.
“அது யாரு உன் ஆளு…..? உனக்கு லவ் எல்லாம் இருக்கா….? என்றாள் எதுவும் தெரியாதவள் போல.
“இதென்னடி கேள்வி எனக்கு லவ் எல்லாம் வரதா என்ன….? அவ ஒரு ஏஞ்சல் என்னையே சுத்தி சுத்தி வருவா…”என்று சொல்லும் போது அவன் கண்கள் பளிச்சிட்டு மின்னல் அடித்தது.
“ஓஹோ அப்புறம்….? என்றாள் கதை கேட்கும் பாவையோடு..
“அப்புறம் ஒரு சூனியக்கார கிழவி உள்ள புகுந்து எல்லாத்தையும் கலைச்சு விட்டு என் வாழ்க்கையில கும்மி அடிச்சிட்டு போயிடுச்சு….”என்றான் குரல் கலங்க.
“அப்படி யாரும் உன்னையும் என்னையும் பிரிக்க முடியாது வரதா…” சொல்லிய படி கணவனை இறுக்கி அணைத்துக் கொண்டாள் அன்னக்கொடி.
தொடரும் ............
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
Last edited:
Previous thread