• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

Joined
Sep 25, 2025
Messages
114
Reaction score
138
Points
43
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 23

நறுமுகை கீழே என்ன நடக்கிறது என்று தெரியாமல், தானும் போக தவித்துக் கொண்டிருந்த சில நிமிடங்களிலேயே, சகாயனும் மித்ரனும் மீண்டும் மேடைக்கு ஏறி வந்தார்கள்.

இருவரினதும் முகமே சரியில்லை. அங்கே ஏதோ அவர்களுக்குப் பிடித்தமில்லாதது பேசப்பட்டிருக்கிறது என்பதை அவர்களின் முகங்களே காட்டிக் கொடுத்தன.

அவர்களின் முகத்தைக் கண்ட நறுமுகை, "என்னாச்சுங்க? ஏன் ரெண்டு பேரோட முகமும் ஒரு மாதிரி இருக்கு?" என்று சகாயனிடம் கேட்டாள்.

சகாயன் தன் அதிருப்தியை மறைக்க முடியாமல், "பெரியவங்க எல்லாரும் சேர்ந்து என்ன முடிவு பண்ணியிருக்காங்க தெரியுமா நறுமுகை? என்னையும் தம்பியையும் இன்னைக்கே ஹனிமூன் என்ற போர்வையில இங்கிருந்து கிளம்பி எங்கேயாவது தலைமறைவாக இருக்கச் சொல்றாங்க.

அவங்க இங்கே ரிதன்யாவோட கடனுக்குப் பணத்தை அரேஞ்ச் பண்ணி எல்லாப் பிரச்சினையையும் முடிச்சதுக்கு அப்புறமா, நாங்க திரும்ப வந்தா போதுமாம்!" என்று தன் தந்தை பேசியது தனக்குக் கொஞ்சம் கூடப் பிடிப்பதில்லை என்பதை சொன்னான்.

அண்ணன் சொல்லி முடித்ததும் மித்ரனும் தன் பங்கிற்கு, "ஆமா அண்ணி... அப்பாவையும் மாமாவையும் இங்கே இவ்வளவு பெரிய பிரச்சினையில தனியா விட்டுட்டு, நாம மட்டும் எப்படி அண்ணி தப்பிச்சுப் போறது? ஆனா, அவங்க நாங்க சொல்றதை எதையுமே காது கொடுத்துக் கேட்க மாட்டேங்குறாங்க… நான் இங்கே இருக்கிறேன் அண்ணா மட்டும் போகட்டும் என்று சொல்லவும், கல்யாணமான புதுத் தம்பதிகள் இந்தப் பிரச்சனைக்குள் இழுபடவேண்டமாம்." என்று அத்தனை ஆதங்கத்தோடு சொன்னான்.

மித்ரன் தன்னை முதன்முதலாக 'அண்ணி' என்று கூப்பிட நறுமுகையின் நெஞ்சுக்குள் ஒரு மெல்லிய திகைப்பை ஏற்படுத்தியது. தான் இந்த வீட்டிற்குள் மருமகளாக, சகாயனின் மனைவியாக வந்துவிட்டதை அந்த ஒரு சொல் அவளுக்கு உணர்த்தியது.

அண்ணாவின் மனைவி அண்ணி தானே… தான் இவ்வளவு நாளும் அக்காவின் புருசன் என்ற ஒரு உறவில் அத்தான் என்று மித்ரனைக் கூப்பிட, தான் மித்ரனை விட வயது குறைந்திருந்தாலும், இப்பொழுது சகாயனின் மனைவியை அண்ணி என்று அவன் கூப்பிடுவது தானே முறை எனச் சட்டென்று தன்னைச் சமாளித்துக் கொண்டு, "ஏனாம்... எதுக்காக நம்மளை இப்போதே கிளம்பச் சொல்றாங்க?" என்று புரியாமல் கேட்டாள் நறுமுகை.

"அண்ணா இங்கேயே இருந்தால், நாளைக்கே ரிதன்யா நேராக வீட்டுக்கு வந்து காசை வை என்று சண்டை பிடிப்பாளாம். அப்படிக் கேட்டால் நமக்குத்தான் அசிங்கம். அதுமட்டுமில்லாம, அவங்களுக்கும் அந்தப் பெரிய தொகையைப் புரட்டுறதுக்குக் கொஞ்சம் கால அவகாசம் வேணும் இல்லையா? அதுக்காகத்தான் எங்களை இங்கிருந்து நகர்த்தப் பார்க்கிறாங்க..." என்று மித்ரன் விளக்கினான்.

“அதுக்காக வேலைக்குப் போகாமல் எத்தனை நாளுக்குத்தான் இப்படித் தப்பிச்சு இருக்க முடியும்?” என்று யாழினி கேட்டாள்.

அதற்கு மித்ரன், “நானும் அண்ணாவும் கல்யாணத்துக்காக முதலே இரண்டு வாரம் லீவு போட்டுட்டுத்தான் இருக்கோம். உனக்கும் பஞ்சு அங்கிள் லீவு கொடுக்கிறாராம். அண்ணிக்கு இப்போதானே காலேஜ் முடிஞ்சது, அதனால் எல்லோருக்குமே இரண்டு கிழமை லீவு பிரச்சனை எதுவும் இல்லை. அதுக்குப் பிறகுதான் என்ன செய்யுறது என்று தெரியலை” என்று விளக்கினான்.

‘இரண்டு கிழமையில் மொத்தச் சொத்தையும் வைத்துக் காசு புரட்டமுடியாதே’ என்று யாழினி யோசனையில் ஆழ்ந்து கொள்ள,

“அப்பாக்கு தங்கள் வீட்டுக்கு மருமகள்கள் வந்த உடனே எந்தப் பிரச்சினையிலும் உழல்றதுல இஷ்டம் இல்லை யாழினி... உங்க அப்பாவும் சேர்ந்து நாம எல்லாரும் நிம்மதியா, சந்தோஷமா வாழணும்னுதான் அவங்க இவ்வளவு பெரிய ரிஸ்க்கை அவங்க தலைமேல எடுத்துக்கிறாங்க" என்றான்.

பெரியவர்கள் சொல்லும் காரணம் இப்போது நறுமுகைக்கு முற்றிலும் சரியாகத்தான் பட்டது. ரிதன்யா எப்படியும் சகாயனின் நிம்மதியைக் குலைக்க வேண்டும் என்றுதான் கங்கணம் கட்டிக் கொண்டிருப்பாள். அவனை நிம்மதியாக வாழவும் விட மாட்டாள் என்பது அவளுக்கு நன்றாகவே புரிந்தது.

இருந்தாலும், இந்த இக்கட்டான சூழ்நிலையில் வீட்டிலிருக்கும் இரண்டு இளம் ஆண்மகன்களும் இல்லாமல், வயது முதிர்ந்த நடராஜனும் நெடுமாறனும் மட்டுமே தனியாக நின்று எதை எப்படிச் செய்வார்கள் என்ற யோசனையும், கவலையும் அவளுக்குள் மீண்டும் ஒருமுறை எழ, "காரணம் சரியா இருந்தாலும்... மாமாவும் அப்பாவும் மட்டுமே இதை எப்படிச் சமாளிப்பாங்க? காசு விஷயத்துக்காகப் பேங்க், ஆபீஸ்னு நிறைய இடத்துக்கு அலைஞ்சு திரிஞ்சு போயிட்டு வரவேண்டி இருக்குமே? அத்துடன் மாமியை என்ன செய்வது?" என்று கவலையுடனும் யோசனையுடனும் கேட்டாள் நறுமுகை.

அவளது கேள்வியைக் கேட்ட மித்ரன், இப்பொழுதும் கீழே மண்டபத்தில் நடராஜனோடும் நெடுமாறனோடும் நின்றிருந்த... சற்றுமுன் மித்ரா கூட்டிச் சென்ற அந்த நெடியவனைக் கைகாட்டி, "அதைப்பத்தி நீங்க கவலைப்படாதீங்க அண்ணி... அங்கே அப்பாவோட நிக்கிறான் பாருங்க ஒருத்தன், அவன் எங்க கூடப் பள்ளிக்கூடத்துல படிச்சவன்தான். இப்போ வக்கீலாக இருக்கான். அவன்தான் இந்த விஷயத்துல நமக்கு முழுசா ஹெல்ப் பண்ணுறேன்னு சொல்லியிருக்கான். சட்டப்படி ரிதன்யாவை எப்படிச் சமாளிக்கணும்னு அவனுக்குத் தெரியும்!" என்றான் மித்ரன் சற்றே நிம்மதியான குரலில்.

மேடையில் தங்களோடு நின்றிருந்த இரண்டு ஆண்மகன்களும் திடீரெனக் கீழே இறங்கிச் சென்றதால், வரவேற்புக்கு வந்திருக்கும் விருந்தினர்கள் ஒருவேளை தவறாக ஏதேனும் நினைப்பார்களோ என்று யாழினிக்கு உள்ளுக்குள் கவலையாகத்தான் இருந்தது. இருந்தாலும் சூழ்நிலை அப்படி இருக்கிறதே!

அத்தோடு ஆனந்தியின் மென்மையான மனம் பாதிக்காமல் இந்த விசயத்தைக் கையாளனும் என்று நடராஜன் விரும்ப, தன் தாய் பூங்குழலி அறைக்குள் கூட்டிக்கொண்டு போன மாமியார், இப்போதைக்கு வெளியே வந்துவிடக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்த யாழினி, தன் பார்வையை அந்த அறை வாசலிலேயே பதித்திருந்தபடியே தான் இங்கே பேசிக் கொண்டிருப்பதிலும் தன் கவனத்தைச் செலுத்தியிருந்தாள்.

அப்போது, அறையிலிருந்து ஆனந்தியின் தலை லேசாகத் தெரிவதைக் கண்டதும் யாழினி சட்டென்று சுதாரித்து, "எல்லோரும் இப்போ இந்தக் கதையை அப்படியே விட்டுட்டுப் பேசாமல் சும்மா நில்லுங்க... மாமி அறைக்குள்ள இருந்து வெளிய வந்திட்டாங்க! நாம இப்படிக் கூட்டமாக நின்னு தீவிரமாப் பேசிக்கிட்டு இருந்தா, இப்பவே இங்கே ஏதோ பெரிய பிரச்சனை ஓடுதுன்னு அவங்க ஈஸியாகக் கண்டுபிடிச்சிடுவாங்க" என்று கிசுகிசுப்பான குரலில் எச்சரித்தாள் யாழினி.

அவள் சொன்னதைக் கேட்டு அனைவரும் இயல்பு நிலைக்குத் திரும்ப முயல, மித்ரன் மெல்லிய குரலில், "அண்ணி... அப்பா இப்போதைக்கு அம்மாக்கிட்ட, நம்ம சூப்பர் மார்க்கெட்டில் ஆடிட்டிங் விஷயமா ஏதோ சின்னப் பிரச்சனை போயிட்டு இருக்குன்னு சும்மா பொய் சொல்லிச் சமாளிச்சு வச்சிருக்கார். அதுமட்டும் இல்லாம, அப்பாவே அம்மாவையும் மித்ராவையும் கூட அம்மாவோட சொந்த ஊர் கோயிலுக்கு உடனே கிளம்பிப் போகச் சொல்லப் போறாராம். அவங்க கூட உங்க அம்மாவும் அப்படியே போயிட்டு வரட்டும்னு அப்பா நினைக்கிறார்." என்றான்.

மித்ரன் சொன்னதைக் கேட்ட நறுமுகைக்குள் ஒரு மெல்லிய சிரிப்பு அரும்பியது.

அவள் சகாயனைப் பார்த்து, "ஏதோ முட்டைப்பூச்சிக்குப் பயந்து வீட்டைக் கொழுத்தின கதையா... இந்த ரிதன்யாவுக்குப் பயந்துட்டு நம்ம குடும்பத்துல இருக்கிற எல்லாரும் இப்படி ஆளுக்கு ஒரு பக்கமா தலைமறைவாகப் போறீங்களா?" என்று அந்த இக்கட்டான சூழலிலும், லேசான கிண்டலோடு, விளையாட்டாகக் கேட்டாள்.

"எதிரியை எப்பவும் லேசா எடைபோடக்கூடாதுடி" என்று சகாயன் அத்தனை சீரியஸாகச் சொல்ல, அவனது முகத்திலிருந்த தீவிரத்தைக் கண்டு அவளது சிரிப்பு சட்டென்று மறைந்தது.

நேற்றுவரை தன் கணவனின் காதலி என்ற பெயரில் இருந்த ரிதன்யா, இன்று ஒரே நாளில் எதிரியாக மாறி நின்ற அந்த விந்தையை நினைத்தபடி, ஆனந்தியும் தங்களை நோக்கிப் பக்கத்தில் வருவதைக்கண்டு, அவனிடம் மேற்கொண்டு எதுவும் வாதாடாமல், "சரிங்க..." என்று மட்டும் அமைதியாகச் சொல்லித் தலையசைத்தாள் நறுமுகை.
 
Previous thread
Next thread

Latest threads

Top Bottom