காஃபியை ஒரே மூச்சில் குடித்துவிட்டுக் கப்பை ஓரமாக வைத்த முரளி மனோகர், “என்ன விளக்கம் சொல்லப் போற திலோ? என்ன விளக்கமாக இருந்தாலும் அது எனக்கு வேண்டாம் திலோ. நீ என்ன விளக்கம் சொன்னாலும், நீ என்னை அவாய்ட் பண்ற இந்த வலி போகாது. நான் என் பிள்ளையைப் பார்க்க வந்தேன். உன்னோட விளக்கத்தைக் கேட்க இல்லை…” என்று சூடாகச் சொன்னவன், எழுந்து கதவைத் திறந்து வெளியே சென்றான்.
திலோத்தமா பேச மறந்தவள் போல உறைந்து நின்றிருந்தாள்.
அவன் மீண்டும் வந்தபோது அவன் கையில் சின்ன பேக் இருந்தது. அதிலிருந்து அவனின் மாற்றுடையை எடுத்துக் கொண்டு குளிக்கச் சென்றான்.
இன்னும் உறைந்து போய் நின்றிருந்த மனைவியை அவன் பொருட்படுத்தவே இல்லை.
திலோத்தமாவின் கண்களிலிருந்து தன்னையறியாமல் கண்ணீர் வழிந்தது.
அதைத் துடைக்காமலே தன் கைப்பேசியை எடுத்துப் பார்த்தாள்.
அடுத்த நொடி, அவளின் கண்களில் தேங்கியிருந்த கண்ணீர் கடகடவென வழிய ஆரம்பித்தது. தொடுதிரையைக் கண்ணீர் மறைக்க, அதைத் துடைத்துக் கொண்டே மீண்டும் பார்த்தாள்.
கணவனின் கோபம் ஏன் என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
கிட்டத்தட்ட ஐம்பது அழைப்புகள் அவனிடமிருந்து வந்திருந்தன. எதையுமே அவள் ஏற்காத கோபத்தைத் தான் கொட்டி விட்டுச் சென்றிருக்கிறான் எனப் புரிந்து கொண்டவளுக்கு, என்ன சொல்லி அவனைச் சமாதானம் செய்வது என்று புரியவில்லை.
அவன் குளித்து விட்டு வருவதற்கு முன்பே பிள்ளை சிணுங்க ஆரம்பிக்க, வேகமாகப் பிள்ளையைத் தூக்கிக் கொண்டாள்.
பிள்ளை பசியில் தொடர்ந்து அழ, கணவன் சற்று நேரத்தில் அறைக்குள் வந்து விடுவான் என்பதால் கட்டிலில் சுவர் பக்கமாகத் திரும்பி அமர்ந்து இரவு உடை ஜிப்பைத் திறந்து பிள்ளைக்கு அமுதூட்டியவள், கட்டில் மேல் கிடந்த ஒரு துவாலையை எடுத்து நன்றாகப் போர்த்திக் கொண்டாள்.
சில நொடிகளில் குளித்து விட்டு வெளியே வந்த முரளி மனோகர், திரும்பி அமர்ந்திருந்த மனைவியைப் பார்த்து ஒரு நொடி நின்றான்.
“தங்கக்குட்டி எழுந்துட்டீங்களாடா? அப்பா வந்திருக்கேன்…” என்று பிள்ளையிடம் ஆசையுடன் பேச்சுக் கொடுத்தான்.
துண்டை மட்டும் இடையில் கட்டியிருந்தவன், பிள்ளையைப் பார்க்கும் ஆர்வத்தில் கட்டிலில் வந்து அமர்ந்து மனைவியின் மடியில் நீட்டிக் கொண்டு தெரிந்த பிள்ளையின் பாதத்தை மென்மையாக வருடினான்.
தந்தையின் ஸ்பரிசம் உணர்ந்ததும், குழந்தை பால் அருந்துவதை நிறுத்தி விட்டிருந்தாள் போலும்.
“பாப்பா பால் குடிக்க மாட்டிங்கிறா…” என்று முனகினாள் திலோத்தமா.
“என்னாச்சு? நேத்துப் போலப் பால் குடிக்கத் திணறுறாளா?” பதறிப் போய்க் கேட்டான் தகப்பன்.
“இல்லை, இல்லை. நீங்க தொட்டதும்…” என்றாள்.
“ஓ… பிள்ளைக்குக் கூசுதா? தங்கக்குட்டி அப்பா தொட்டது கூசுதாடா? சரி… சரி… நீ பாலைக் குடி. அப்பா உன்னைத் தொந்தரவு செய்யலை…” என்று குரல் கனியச் சொன்னவன் கையை எடுத்து விட்டான்.
“அதுக்குப் பிறகு பால் நல்லா குடிக்கிறாளா? இல்ல, நேத்துப் போல எதுவும் பிரச்சினை இருக்கா?” என்று மனைவியிடம் விசாரித்தான்.
“நேத்து மதியம் வரை அழுது பால் குடிக்க மாட்டேன்னு அடம் பிடித்தாள். அதுக்குப் பிறகு பரவாயில்லை…” எனப் பதிலுரைத்தாள் திலோத்தமா.
மனைவியிடம், மகளைப் பற்றி விசாரித்துக் கொண்டே, எழுந்து செல்லாமல் அங்கேயே அமர்ந்திருந்தான் முரளி மனோகர்.
மகளைத் தொந்தரவு செய்யாமல் அமர்ந்திருந்தவனுக்கோ, இப்போது மனைவியின் அண்மை தொந்தரவு செய்தது.
இளம் தாய்க்கே இருக்கும் வாசம் அவள் மீது. பிள்ளைப் பிறப்பிற்கு முன் இருந்த மனைவியின் வாசமும் அறிந்தவன் அல்லவா!
இரண்டிற்கும் இருந்த வித்தியாசத்தை உணர்ந்தவனின் உணர்வுகள் மெல்ல மெல்ல மேலெழும்பித் தளும்பின.
மனைவியின் மீதிருந்த கோபத்தில், அவளின் மீது பட்டுக் கொள்ளாமல் சற்று விலகியே அமர்ந்திருந்தவனுக்கு இப்போது அப்படி இருக்க முடியவில்லை.
மனைவியின் வாசம் அவனை ஈர்த்து இழுக்க, மெல்ல நகர்ந்து தன் மேலாடை அணியா மேனியை அவளின் முதுகில் உராய விட்டான்.
சில மாத இடைவெளிக்குப் பிறகான மனைவியின் அண்மை அவனைத் திணற வைக்க, அப்படியே அள்ளி அணைக்க ஆசை கொண்டு உடல் மோகத்தில் குழைய, தாபத்துடன் மனைவியின் புஜத்தை அழுத்தமாகப் பற்றினான்.
அடுத்த நொடி, அவன் உடல் குழைந்ததற்கு நேர் எதிராகத் திலோத்தமாவின் உடல் இறுக்கம் கொண்டது.
அவன் அவளை உணரும் முன், “ச்சீ, என்ன பண்றீங்க? தள்ளிப் போங்க…” என்று வெறுப்புடன் அவளின் வார்த்தைகள் சூடாகத் தெறித்து விழுந்தன.
மோக உணர்வுகள் சடசடவென்று சரிந்து விழ, பட்டென்று கையை எடுத்து விட்டவன் முகமோ மனைவியின் சுடுசொற்களைத் தாங்க முடியாமல் தகித்துப் போனது.
மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
Reviews
There are no reviews yet.