Writer✍️
- Joined
- Sep 18, 2024
- Messages
- 373
- Reaction score
- 570
- Points
- 93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 15
9
ராஜன் ,அன்னக்கொடி இருவரின் தனிக்குடித்தனமும் சண்டை சச்சரவின்றி அமைதியாகச் சென்று கொண்டிருந்தது.இருவரும் தனி தனி அறைகளில் தங்கி இருக்க அவர்களுக்குள் என்ன சண்டை வந்துவிட போகிறது.காலையில் நேரத்துக்கு எழுந்து, வேண்டிய உணவை சமைத்துக் கொண்டு, கணவனும் மனைவியும் வேலைக்கு கிளம்பி விடுவார்கள்.மாலையில் வேலை முடிந்து வந்ததும் இரவு உணவை சமைத்துக் கொள்வார்கள்.முடியாவிட்டால் வெளியில் வாங்கி கொள்வார்கள்.இப்படி இருக்கையில் மோகனசுந்தரமும் சண்முகமும் சேர்ந்து இவர்கள் ரிசப்ஷனுக்கு ஏற்பாடு செய்து விட்டார்கள்.
அதுவும் ராஜன் இப்போது வசிக்கும் கோயம்புத்தூரில் தான் மண்டபம் பார்த்தாகி விட்டது. உறவினர்களை எல்லாம் பஸ் வைத்து கூட்டி வர ஏற்பாடு செய்யப்பட்டது.திருமணம் என்று முன்னர் ஊரில் நடந்த கசப்புக்களால் தான் இந்த ஏற்பாடு.நடப்பவற்றை எல்லாம் அமைதியாக பார்த்துக் கொண்டிருந்தார் நவநீதம்.
இரண்டு பக்கத்து ஆட்கள் யாரும் இல்லாமல் ராஜனும் அன்னக்கொடியும் போய் தேவையானவற்றை எல்லாம் வாங்கி வந்தார்கள்.தன் குடும்பத்துடன் சேர்த்து கேசவன், மீனா என்று எல்லோருக்கும் தேவையான ஆடைகளை வேகமாக தெரிவு செய்தாள் அன்னம்.
கணவனின் குடும்பத்துக்கு வேண்டியதை அவனையே வாங்க சொல்லிவிட்டாள்.அதிலும் மாமியாரின் புடவை தெரிவின் போது தள்ளி தான் நின்றிருந்தாள்.
தான் வாங்கியவற்றுக்கு எல்லாம் தனியாக பில் பண்ண சொல்லி விட்டாள்.ரிசெப்ஷன் செலவுக்கு என்று மகளுக்கு தனியாக பணம் போட்டிருந்தார் சண்முகம்.மனைவியின் செய்கைகள் எல்லாவற்றையும் முறைத்தபடி பார்த்துக்கொண்டிருந்தான் ராஜன்.
“ஏன் எல்லாத்துக்கும் சேர்த்து நான் பணம் கொடுத்தா என்னடி பிரச்சனை உனக்கு….?
“நீங்கெல்லாம் பெரிய கோடீஸ்வரங்க தான் ஒத்துக்கிறேன்.ஆனா ட்ரெஸ் வாங்க சொல்லி அப்பா பணம் போட்டிருந்தார்.அவருக்கு என்ன கணக்கு சொல்ல….”
“நல்லா சமாளிக்கிற தங்கம்….. தள்ளி போ….”என்ற படி தன் பொருட்களுக்கு பணத்தை செலுத்தினான் அவன்.
“தங்க நிற புடவையில உன் தங்க பொண்டாட்டி தக தகன்னு மின்னுறாடா சின்னவனே….” ரிசப்ஷன் அன்று மகனிடம் சொன்ன அன்னையை ஆச்சரியத்துடன் பார்த்தான் ராஜன்.
“என்னடா வாயை பிளக்குற…..?
“இல்லம்மா…..இவளை தங்கம் என்று சொல்லுறீங்க…. அது தான் நம்ப முடியல….”
‘என்னையா சொன்னார்…’ என்ற ஆச்சரியம் அன்னக்கொடிக்கு.
“ எல்லோருக்கும் முன்னம் நான் தான் அவளை தங்கம் ன்னு கூப்பிட்டு வச்சேன். நீ தான்டா என்னை பார்த்து காப்பி அடிச்ச….” என்றவரை வியந்து பார்த்தாள் அவள்.
“என்னடி பாக்குற…? இதெல்லாம் எனக்கு எப்படி ஞாபகம் இருக்குன்னு பாக்குறியா என்ன ?ஏன் வாங்க அத்தை என்னு ஒரு வார்த்தை சொன்னா குறைஞ்சுடுவியா நீ …..? என்று மருமகளை முறைத்தார்.
“வாங்க…..”மெதுவாக வந்தது அவள் குரல்.
“என்னம்மா சத்தம் போடுறீங்க….? கேட்ட படி அங்கே வந்தான் தியாகு.
“என்னாச்சு அன்னம்….அதுக்கு அம்மா சத்தம் போட்டாங்க…?
“அது…….”என்று தடுமாறினாள் அன்னம்.
“அம்மா ஒன்னும் சத்தம் போடல….அவ கிட்ட சும்மா பேசிட்டு இருந்தாங்க என்று அவன் கிட்ட சொல்லு தங்கம்….”என்றான் ராஜன்.
“என்ன அன்னத்துக் கிட்டயா….? நம்பாமல் தாயை பார்த்தான் தியாகு.
“என்னடா நான் அவகிட்ட பேச கூடாதா…. தங்கம் நீ சொல்லுடி? அன்னக்கொடியின் கையை பிடித்து இழுத்து தன்னை பார்க்க வைத்தார் நவநீதம்..
“இல்ல….அப்படி இல்ல பேசுங்க …..”தடுமாறினாள் அவள்.
மனைவி ஏதோ கலாட்டா செய்வதாக நினைத்து வேகமாக வந்தார் மோகனசுந்தரம்.
“என்னம்மா அன்னம் என்னாச்சு….?
“ஒன்னும் இல்ல மாமா….”
தன்னால் தான் இப்படி பதறிக் கொண்டு தியாகுவும் கணவனும் வந்திருக்கிறார்கள் என்று சரியாக கண்டு கொண்டார் நவநீதம்.
“ஏங்க உங்க மருமக ஜோடியா நம்ம கிட்ட ஆசீர்வாதம் வாங்க மாட்டாளா…..?
“அதெல்லாம் இல்ல…வா வரதா….….” சொல்லியபடி கணவன் கையை பிடித்து இழுத்துக்கொண்டு போய் அத்தை ,மாமா இருவர் காலிலும் விழுந்தாள் அன்னக்கொடி.
மாமியாரின் பேச்சிலிருந்து ஏதோ கொஞ்சம் மனம் மாறி இப்படி நடக்கிறார் என்று சரியாக புரிந்து கொண்டாள் அவள்.
“நூறு வருஷம் ரெண்டு பேரும் நல்லா இருங்க…..”என்றார் மாமன்.
தன் கழுத்தில் கிடந்த தடித்த சங்கிலியை கழட்டி அன்னக்கொடி க்கு போட்டு விட்டார் மாமியார்.நவநீதம் கழுத்தில் பூட்டிக்கிடந்த பல வித நகைகளில் ஒன்று குறைந்திருக்கிறது என்று யாருக்கு தெரிய போகிறது.அப்படி நகை கழுத்து நிறைய நகை அடுக்கி வந்திருந்தார் அவர்.
சட்டென்று கண் கலங்க தலை குனிந்து கொண்டாள் அன்னக்கொடி.சின்ன வயதில் அத்தை அத்தை என்று ஆசையுடன் நவநீதத்தை சுற்றி வருவாள் அன்னம். அவர் மஞ்சள் கயிற்று தாலியுடன் கூட போட்டிருக்கும் முத்து வைத்த ஒற்றை செயினை அன்னக்கொடி ஆசையாய் பார்த்து வைப்பாள்.
உடனே அந்த சங்கிலியை கழட்டி அன்னத்தின் கழுத்தில் போட்டு அழகு பார்ப்பர் நவநீதம்.உடனே தேங்க்ஸ் அத்தை என்று அவரை கட்டி முத்தம் வைப்பாள் சின்னவள்.இப்படியான செயலால் பல முறை தாயிடம் பிரம்படி வாங்கியிருக்கிறாள் அன்னக்கொடி என்பது ஊறி அறிந்த ரகசியம்.
“ஏன்டா சின்னவனே எனக்கு தேங்க்ஸ் சொல்ல மாட்டாளா உன் பொண்டாட்டி…” என்று மகனை முறைத்தார் அன்னை.
“ரொம்ப தேங்க்ஸ் அத்தை….”என்று குரல் கலங்க மாமியாரின் முகத்தை இப்போது தான் நேராக பார்த்தாள் அன்னக்கொடி.
“நல்ல நாள் அதுவுமா எதுக்கு கண் கலங்குற….சிரிம்மா….”என்றார் மாமனார்.
ரிசப்ஷனில் புருஷன் வீட்டு ஆட்களை, குறிப்பாக மாமியாரை எப்படி சமாளிக்க போறேனோ என்று கலக்கத்துடன் தான் கிளம்பி வந்திருந்தாள் அன்னக்கொடி.ஆனால் இப்போது நடப்பதை பார்த்தால் எப்படி இந்த மாற்றம் என்று அவளுக்கு எதுவும் புரியவில்லை.
தன் அண்ணியின் பேச்சை கேட்டதிலிருந்து நவநீதம் தன் தவறுகளை பற்றி யோசிக்க தொடங்கிவிட்டார் என்று அன்னக்கொடி எப்படி அறிவாள்.விழாவில் கூட மூத்த மருமகளை தன் அருகில் வைத்து கொண்டவர்,அண்ணன் அண்ணியிடம் கொஞ்சம் இடைவெளி விட்டு தான் பழகினார்.
அண்ணன் குடும்பத்தினர் எல்லாம் நவநீதத்தை தான் வேடிக்கை பார்த்தார்கள்.இந்தம்மா தான் கோவிலில் வைத்து இந்த பெண்ணின் தாலியை கழட்டி எடுத்ததா என்ற ஆச்சரியம் அவர்களுக்கு.
மறுபக்கம் நடப்பவற்றை எல்லாம் நம்ப முடியாமல் பார்த்துக் கொண்டிருந்தனர் அன்னக்கொடியின் குடும்பத்தினர்.
“என்னம்மா நகை உங்க சின்ன மருமகளுக்கு மட்டும் தானா…..அப்போ எனக்கு….? என்றான் ராஜன்.
“உனக்கும் உன் பொண்டாட்டிக்கும் உங்கண்ணன் கை சங்கிலி பண்ணிட்டு வந்தான்.ஏன்டா தியாகு நீ இன்னும் குடுக்கலையா? என்று பெரிய மகனை பார்த்தான் அன்னை.
“சுகந்தி வா….” என்று மனைவியை அழைத்து அவள் ஹேண்ட் பேக்கில் இருந்த நகையை எடுத்து கணவன் மனைவி இருவருக்கும் கொடுத்தான்.
“என்ன எங்கம்மாவையே பாத்திட்டிருக்க….? என்று மனைவியிடம் கேட்டான் ராஜன்.
“ஒன்னுமில்லையே…..” என்று சமாளித்தாள் அன்னம்.
“ஏன் எனக்கு தெரியாது பாரு.எங்கம்மா சட்டுன்னு எப்படி இப்படி மாறினாங்க என்று எதுவும் புரியல.இத்தனை வருஷம் ரொம்ப கோபமா இருந்தாங்க.என்னாச்சுன்னு தெரியல.லேசுல மனம் மாற மாட்டாங்க.உனக்கு ஏதாவது தெரியுமா….?
“எனக்கு தெரியல.நடக்குறதை எல்லாம் நம்பவும் முடியல….”
இத்தனை வருடம் ஏதோ வேண்டாதவர்கள் போல தள்ளி நின்ற மாமியார் சபையில் எல்லோர் முன்னாடியும் நல்ல விதமாக காட்டி கொள்ள இப்படி எல்லாம் நடக்கிறாரோ என்ற ஒரு சின்ன சலனம் அவளுக்கு.
“ஏன் எங்கம்மா நடந்துக்கிறதை நம்ப முடியலையா….”
பதில் சொல்லாமல் அமைதியானாள் அன்னம்.
“ ஏதோ கொஞ்சம் மாறி இருந்தா நல்லது தானே விடு….”
அப்போது பாட்டியுடன் அன்னத்தின் குடும்பம் மேடைக்கு வந்தது.அவர்களுடன் கேசவனும் மீனாவும் சேர்ந்து கொண்டார்கள்.தன் கையிலிருந்த பெரிய கவரை மணமக்களிடம் கொடுத்தார் பாட்டி.
“என்ன பாட்டி பெரிய கவர் தர்றீங்க…?என்றான் ராஜன்.
“பெங்களூர்ல இருக்கிற வீட்ட பேத்தி பேருக்கு எழுதி வச்சிருக்கேன்.அந்த பத்திரம் தான் இது…..”
“என்ன பாட்டி.... எதுக்கு இப்படி எல்லாம் பண்றீங்க….” தடுமாறினாள் அன்னம்.அந்த வீட்டின் மேல் பாட்டிக்கு எத்தனை பிரியம் என்று அவளுக்கு தெரியும்.அப்படி இருக்க எதற்கு இந்த வேலை பார்த்தார் என்று கோபம் தான் வந்தது.
‘ஒண்ணு இல்லாதவங்க சம்பந்தம் என் பிள்ளைக்கு எப்படி சரியாய் வரும்’ என்று நவநீதம் தாலியை கழட்டி வந்த நாளாக ஊரில் பேசி வைத்தது எல்லோருக்கும் தெரியும்.அதனால் தான் இப்படி எல்லாம் செய்கிறார்கள் என்று சரியாக கணித்தாள் அன்னம்.
அது போல தான் மண்டபத்தில் இரவு ஒரு பக்கம் சீர்வரிசை பொருட்களை எல்லாம் பரப்பி வைத்தார் சண்முகம்.வந்தவர்கள் எல்லாம் பரப்பியிருக்கும் பொருட்களை நிறைவோடு பார்த்து போன கதை எல்லாம் அக்கா மூலம் அறிந்திருந்தாள் அன்னம்.மறுநாள் எல்லா பொருட்களும் நவநீதத்தின் வீட்டுக்கு போய் சேர்ந்து விட்டது. அடுக்கி வைக்கும் சீர் சாமான்களை பார்க்க என்றே மண்டபத்தை சுற்றி ஒரு நடை நடப்பார்கள் அவர்கள் பக்கத்து ஆட்கள்.
“பாட்டி அப்போ இனி அன்னத்துக்கு தான் நான் வாடகை கொடுக்கணுமா.அவ கணக்கு எல்லாம் எகிறி அடிக்கும்.அதெல்லாம் எனக்கு எப்படி கட்டுப்படியாகும்….? என்று சிரிப்போடு கேட்டான் கேசவன்.
“அதொன்னும் பிரச்சனையில்லை…..மாசம் ஒரு லட்சம் மட்டும் என் அக்கவுண்டுக்கு போட்டுடு கேசவா….” என்றாள் அன்னம்.
“அடிப் பாவி….அண்ணா இதெல்லாம் நீங்க கேட்க மாட்டீங்களா….? ராஜனை கேட்டான் அவன்.
“ஏன் அவ சொல்றதுல என்ன தப்பு…..அப்படியே போடுடா….” என்று பதில் சொன்னான் ராஜன்.
“உங்களை நம்பி சொன்னேன் பாருங்க .எனக்கு இது வேணும் தான்…”என்று சோகமாக சொன்ன கேசவன்.
அவன் முகத்தை பார்த்து எல்லோரும் கொல் என்று சிரித்து வைத்தார்கள்.மகளின் புன்னகை முகத்தை நிறைவோடு பார்த்தார் தேனாம்பாள்.
“தேனாம்பா வா எல்லோரும் சேர்ந்து போட்டோ எடுக்கலாம்….”என்று சொல்லிக்கொண்டே அவரின் கையை பிடித்தார் நவநீதம். திகைப்போடு புது சம்பந்தியை திரும்பி பார்த்தார் தேனாம்பாள் .
தொடரும்..............
Previous thread