உதிரா நேசம்
அனைவருக்கும் தைத் திருநாள் நல்வாழ்த்துக்கள்



எனது அடுத்த கதையிலிருந்து ஒரு சின்ன டீசர்

அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது பெருமழை! எங்கோ ஒரு மூலையில் பளிச்சென்று வெட்டியது மின்னல்! அதைத் தொடர்ந்து உறுமலாய் ஓர் இடிமுழக்கம்!
அம்மின்னல் வெளிச்சத்தில் தெரிந்தது ஓர் உருவம்!
அவ்வுருவத்தை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள் ஒரு பெண்.
பெருமழையில் தொப்பல் தொப்பலாக நனைந்தபடி தனது இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்திருந்த அந்த ஆடவனின் பார்வையும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த பெண்ணிலவின் மீது படிந்தது.
அப்பெண்ணிலவனின் கண்களில் கலக்கமும், கோபமும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது.
ஆடவனின் கண்களில் எவ்வித உணர்வும் பிடிபடவில்லை என்று சொல்லலாமா? அல்லது அக்கண்களில் இருந்தது பிடிவாதம் என உரைக்கலாமா? என்று வரையறுக்க முடியா பார்வை அது!
அப்பெண்ணின் உதடுகள் மெல்ல அசைந்து ஏதோ முணுமுணுப்பதை உணர்ந்தான்.
அடுத்தச் சில நொடிகளில் கதவை திறந்து குடையைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அவன் கண்களில் சிறிதும் சலனமில்லை.
மேலே தொடையளவு குர்தியும், கீழே முழங்காலளவு ஜீன்ஸூம் அணிந்திருந்தாள்.
மழையில் நனையாமல், குடைக்குள் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு விறுவிறுவென்று அவனை நோக்கி நடந்து அவனின் அருகில் வந்தவள், “இது உங்களுக்கே நல்லா இருக்கா? இப்ப எதுக்கு இப்படி மழையில் நனைஞ்சிட்டு நிக்கிறீங்க?” என்று கேட்டுக் கொண்டே அவனுக்கும் சேர்த்து குடைபிடித்தாள்.
குடையை விலக்கிவிட்டவன் மீண்டும் மழையில் நனைந்தான்.
“யுகேன்…” என அவள் சூடாக அழைக்க, அந்தச் சூடு எல்லாம் அவனை நெருங்கவே இல்லை.
“ஏன் இந்தப் பிடிவாதம் யுகேன்?” சலிப்புடன் கேட்டாள்.
‘ஏன் உனக்குத் தெரியாதா?’ என்று கேட்டது அவன் பார்வை.
அவளுக்குத் தெரியும் தான். ஆனாலும்… என்று நினைத்தவள், “பெரிய மழையா பெய்து யுகேன். இப்ப எப்படி முடியும்?” என்று இயலாமையுடன் கேட்டாள்.
அவனோ அவளின் முகத்தையே ஊடுருவி பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீங்க சரியில்லை யுகேன். இந்த மழையில் ஏன் தான் இப்படி ஒரு பிடிவாதமோ… இப்ப நீங்க வீட்டுக்கு போங்க. நாளைக்குப் பார்க்கலாம். ப்ளீஸ், சொன்னா கேளுங்க யுகேன்…” என்றாள் கெஞ்சலாக.
அவனின் முகத்தில் சிறிதும் மாற்றமில்லை. இருசக்கர வாகனத்தின் மீது இலகுவாக அமர்ந்திருந்தவன், இப்போது கைகளைக் கட்டிக் கொண்டு அழுத்தமாக அமர்ந்திருந்தான்.
அதுவே அவனின் பிடிவாதத்தின் அளவை சொல்ல, “அப்ப நீங்க இங்கிருந்து கிளம்ப மாட்டிங்க, அப்படித்தானே?” என்று கேட்டாள்.
‘ஆமாம்’ என்று உரைப்பது போல் முகத்தை எங்கோ திருப்பிக் கொண்டான்.
மழை சத்தத்தையும் மீறி ஒலித்தது அவளின் பெருமூச்சின் சத்தம்.
அடுத்த நொடி, அவனின் தோளை பிடித்தபடி பைக்கில் அவனின் பின்னால் ஏறி அமர்ந்தாள்.
அப்பக்கம் திரும்பியிருந்தவனின் உதடுகளில் மென்புன்னகை ஒன்று தவழ்ந்தது.
“வண்டியை எடுங்க!” என்று அவள் சிடுசிடுப்புடன் உரைக்க, இருசக்கர வாகனத்தை எடுத்தவன் உதடுகளில் பூத்த புன்னகை குறையவே இல்லை.
மழையின் தீவிரம் அதிகமாக இருந்ததே தவிர, குறையவே இல்லை. குடையை இருவருக்கும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு வந்தாள்.
சாலையில் இரண்டு மூன்று கார்கள் சென்றனவே தவிர, வேறெந்த வாகனமும் இல்லை. மின்னல் வெட்டியதில் கண்கள் கூச கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
அவனோ கருமமே கண்ணாக வண்டியை செலுத்தினான். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு கடையின் முன் வண்டியை நிறுத்தினான்.
வண்டி நின்றதும் கண்களைத் திறத்தவள் அந்தக் கடையின் பெயரை பார்த்தாள்.
‘**** ஐஸ்கிரீம்’ என்று ஒரு புகழ் பெற்ற கடையின் பெயர் பலகை மின்னியது.
அதைப் பார்த்துக் கொண்டே பெருமூச்சுடன் பின்னாலிருந்து இறங்கினாள்.
குடையை மீறி தெறித்த மழைத்துளிகளின் புண்ணியத்தில் அவளும் இப்போது பாதி நனைந்திருந்தாள்.
பைக்கை நிறுத்திவிட்டு அவனும் இறங்கியவன், அவளின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு அந்த ஐஸ்கிரீம் கடைக்குள் நுழைந்தான்.
மழையால் கடையை மூடிவிட்டு கிளம்ப முடியாமல், மழை விடக் காத்திருந்த ஒரே ஒரு ஊழியன் உள்ளே வந்த இருவரையும் வியப்புடன் பார்த்தான்.
“என்ன சார் மழைக்கு ஒதுங்க வந்தீங்களா? நல்லா நனைஞ்சிட்டீங்களே… இப்படி உட்காருங்க சார், மழை விட்டதும் போகலாம்…” என்று அவர்கள் வந்த காரணத்தை தவறாக ஊகித்துக் கொண்டு உரைத்தான்.
“ஐஸ்கிரீம் வேணும். ஒரு பட்டர் ஸ்காட்ச், ஒரு பிஸ்தா…” என்று உரைத்தவளை அலங்க மலங்க பார்த்தான்.
வெளியே சோவென்று பொத்து ஊற்றிக் கொண்டிருந்த மழை. ஒருவன் தொப்பலாக நனைந்திருக்க, ஒருத்தி பாதி நனைந்திருந்தாள். இப்படி வந்து நின்று ஐஸ்கிரீம் கேட்ட ஒரே ஒரு… இல்லை… இல்லை… ஒரு ஜோடி இவர்கள் தான் என்று நினைத்தவன், அவர்களை வினோதமாகப் பார்க்க மாட்டானா என்ன?
“நீங்க ஆதி ஃபேமிலியா சார்?” என்று கேட்டவனின் குரலில் நிச்சயமாகக் கேலி இருந்தது.
யுகேன் நெற்றியை சுருக்கி அவனைப் பார்க்க, “ஆக்டர் விஜய் படம் சார், ஆதி. அதில் அவரும் திரிஷாவும் மழையில் நனைஞ்சிட்டே ஐஸ்கிரீம் சாப்பிடுவாங்க. அதான் நீங்களும் அந்த ஃபேலிமியான்னு கேட்டேன்…” என்றவன் கிண்டலாகச் சிரிக்க,
“ஹான், நாங்க அவங்க பக்கத்து வீட்டு ஃபேமிலி…” என்று எரிச்சலுடன் உரைத்தாள் அவள்.
“கோபப்படாதீங்க மேடம், சட்டுன்னு தோனுச்சு, சொன்னேன். நீங்க உட்காருங்க. நான் ஐஸ்கிரீம் எடுத்துட்டு வர்றேன்…” என்று சமாதானமாக ஊழியன் சொல்ல,
“ஒரே ஈரம்… இதோட எப்படி உட்காருவது?” என்று எரிச்சலுடன் முணுமுணுத்தாள்.
அவனோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிறிய வட்டமேஜையின் முன் கிடந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான்.
அவனை முறைத்துக் கொண்டே எதிரே அமர்ந்தவள், “நினைச்சதை சாதிச்சுக்கிறீங்க?” என்று பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டாள்.
அவனோ பற்கள் தெரிய சிரித்தான்.
“எனக்கு வரும் ஆத்திரத்துக்கு அப்படியே அந்தப் பல்லை தட்டி கையில் கொடுக்கணும் போல இருக்கு…” என்றாள்.
தோளை அலட்சியமாகக் குலுக்கிக் கொண்டான்.
“உங்களை அப்படியே…” என்றவள், அவனின் கழுத்தை நெரிக்கக் கையைக் கொண்டு வந்தாள். அதற்குள் அவர்கள் கேட்ட ஐஸ்கிரீமுடன் கடை ஊழியன் வந்துவிட, தன் கையைக் கீழே இறக்கிக் கொண்டாள்.
ஆனாலும் கோபம் குறையாமல் தனது பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீமை தொடாமல் இருந்தாள்.
‘சாப்பிடு!’ என்பது போல் கண்ணைக் காட்டியவன், தன்னுடைய பிஸ்தா ஐஸ்கிரீமை தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.
“இந்த ஈரத்தோட ஐஸ்கிரீம் சாப்பிட்டு நாளைக்குக் காய்ச்சல் வந்தது… உங்களைச் சும்மா விடமாட்டேன்…” என்று கறுவினாள்.
அதற்கும் அவனின் தோள் குலுக்கலே பதிலாகக் கிடைக்க, “இப்ப நான் என் ஐஸ்கிரீமை சாப்பிடலைனா என்ன செய்வீங்க?” என்று புருவத்தை ஏற்றி, இறக்கி கேட்டாள்.
பட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்தவன் வெளியே செல்ல முயன்றான்.
அவனின் கையைப் பிடித்து நிறுத்தியவள், “உடனே கோபம் பொத்துக்கிட்டு வந்துடுமே. சாப்பிட்டு தொலையிறேன், உட்காருங்க…” என்றாள் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு.
அவன் மீண்டும் அமர்ந்து அவளையே பார்க்க, தனது ஐஸ்கிரீமை எடுத்து வேண்டா வெறுப்பாக உண்ண ஆரம்பித்தாள்.
அவன் விட்டு செல்ல மாட்டான் என்று தெரியும். ஆனால், மீண்டும் மழையில் சென்று நின்று ஆர்ப்பாட்டம் செய்வான் என்பதால், ஐஸ்கிரீமை அள்ளி தன் வாய்க்குள் திணித்தாள்.
அதன்பிறகே அவனும் உண்ண, “இதெல்லாம் எவ்வளவு பெரிய அராஜகம் தெரியுமா?” என்று கேட்டாள்.
யுகேனோ கண்டு கொள்ளாமல் ஐஸ்கிரீமை உண்டான்.
அவனின் இந்த முரட்டுப் பிடிவாதத்தை அறிந்தவள் தான் என்பதால், அதன்பின் எதுவும் பேசாமல் அமைதியாக ஐஸ்கிரீமை உண்டுவிட்டு எழுந்தாள்.
ஐஸ்கிரீமிற்கான பணத்தை யுகேன் கொடுத்துவிட்டு வர, அவனுடன் வெளியே வந்தவள் கடை வாசலில் நின்று, “இப்ப சந்தோஷமா? இனியாவது பேசலாமே?” என்று கேட்டாள்.
அவளுக்குப் பதிலுரைக்காமல் கடைக்குள் திரும்பி பார்த்தவன், கடைக்காரனின் கவனம் தங்கள் மீது இல்லை என்பதை அறிந்ததும், அவளின் புறம் திரும்பி உதட்டை குவித்துக் காட்டினான்.
“விளையாடாதீங்க யுகேன்… இங்கே எப்படி முடியும்?” என்று அதட்டினாள்.
சுற்றி முற்றி பார்த்தான். மழையால் ஒருவரும் சாலையில் நடமாடவில்லை. சில கடைகளும் மூடியிருந்தன. திறந்திருந்த கடைகளிலும் ஒருவரும் வெளியே இல்லை என்றதும், அவளின் கையைப் பிடித்து அருகில் மூடியிருந்த கடையின் பக்கம் அழைத்துப் போனான்.
“யுகேன், யாரும் பார்த்தால் நல்லாருக்காது, வேண்டாமே!” என்று தயக்கத்துடன் உரைத்தாள்.
அவளைத் தன் எதிரே நிறுத்தி, கண்களையே தீர்க்கமாகப் பார்த்தான். சில நொடிகளில் அவளின் மறுப்புக் காணாமல் போயிருக்க, அவளின் கன்னத்தைப் பற்றித் தன் அருகில் நெருங்க வைத்து, மெல்ல தன் முகத்தைச் சாய்த்து, அவளின் இதமான இதழில், தனது முரட்டு அதரங்களைப் பதித்தான்.
அவ்வளவு நேரமிருந்த அவனின் மீதான அவளின் கோபம் காணாமல் போக, அவனிட்ட முத்தத்தில் கரைந்து கொண்டிருந்தாள் அவள்.