• New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

தாமரையாள் கேள்வன் - 34

  • Thread starter Thread starter Admin
  • Start date Start date
  • Replies Replies 0
  • Views Views 870
Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
804
Reaction score
4,619
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 34

"என்னது வெளிநாட்டுக்கு விக்கிறாங்களா?" என அதிர்ச்சியுடன் கேட்டிருந்தாள் தாமரை.

"ஆமா மா. பத்து வருஷமா இவங்க ஆட்சி தான் இங்கே! அதுக்கு முன்னாடி இருந்த அமைச்சர் கொஞ்சமே கொஞ்சம் நல்ல மனசுக்காரன். நம்ம சாமி சிலை நம்ம நாட்டுலயே இருக்கட்டும்னு நினைச்சி வெளிநாட்டுக்கு விக்காம இந்தியாலயே வித்துட்டான். அடுத்து வரப் போற அமைச்சர் வெளிநாட்டுக்கு விக்கிறவனா இருப்பான்னு தெரிஞ்சனால, அதுக்கு முன்னாடி இருந்த அமைச்சரையே களவாட வச்சி இந்தியாக்குள்ளேயே வேற இடத்துக்கு மாதவன் சிலையை அனுப்பிட்டேன்" என்று சிரித்தவராய்,

"முக்கியமான விஷயம் சொல்ல மறந்துட்டேன். காலம் மாறவும், எல்லா தெய்வீகத் தன்மைக் கொண்ட பொருள்களும் அதோட முழு இறைச்சக்தில இந்தக் காலத்துல இயங்காதுன்ற பெருமாளின் வாக்குனால, இப்ப அந்தச் சிலைல இருக்கும் பஞ்சேந்திரக் கல்லில் அந்த ஒளி எல்லாம் வரது இல்ல கருப்பா. அதோட அந்தக் கல், சிலையோட ஒரு அங்கமாவே மாறிப்போய்டுச்சு. அதை உன் முன்னோர்கள் பொதிச்சு வச்ச மாதிரி இப்ப அந்தச்சிலைல இருந்து கல்லை தனியா பிரிக்க எல்லாம் முடியாது. அந்தக் கல்லை யாரும் தனியா திருடிடக் கூடாதுனு நான் தான் பெருமாள்கிட்ட தவம் இருந்து சிலையோட அங்கமா அந்த கல் மாறிடனும்னு கேட்டு மாற வச்சேன்! அதனால சிலைக்கழுத்துல கல் இருந்தாலே அது நம்ம மாதவப் பெருமாள் சிலை தான்னு நீ கண்டுபிடிச்சிடலாம்" என்றார்.

"ஓ அப்ப அந்தக் கல் இப்ப அதே ஜொலிப்போட இல்லையா? ஆனா அது தானே அந்தக் கல்லோட ஸ்பெஷாலிட்டி" என்று தாமரை சோகமாய் கேட்கவும்,

"இல்லமா! அப்படி ஒளி வீசும் கல் இந்தக் காலத்துல இருந்தால், எப்பவும் யாராவது அந்தக் கல்லைத் திருடப் பார்த்துட்டே இருப்பாங்க. அந்தக் கல்லுக்காக பெருமாள் சிலையை உடைச்சி சேதப்படுத்தவும் வாய்ப்பு அதிகம்" என்று விளக்கமாய் உரைத்தார்.

அவரின் கூற்றை ஆமோதித்தவளாய், "நீங்க சொல்றதும் சரி தான்! அந்தக் கல்லுக்காக பெருமாளை எதுவும் செஞ்சிடக் கூடாது. அதுக்கு அந்தக் கல் சாதாரணக் கல் மாதிரி தென்படுறது தான் நல்லது" என்றாள்.

"ஒரிஜினல் சிலை இந்தியால இப்ப எங்கே இருக்கு?" என்று மாதவன் கேட்கவும்,

"தலைநகரம்ல இருக்கு! இப்ப நாட்டின் சூழல் உங்களுக்குச் சாதகமானதா தான் இருக்கு. தலைமை உனக்குத் துணையா இருக்கும். இப்ப கேஸ் போடு கருப்பா! வெற்றி உங்களுக்குத் தான் கிடைக்கும். என் பொறுப்பை நான் நிறைவேற்றிட்டேன். எனக்கு விடைக் கொடுங்கள்! இதற்கு மேலும் இந்தப் பூமியில் என்னால் உலவ முடியாது" என்றவராய் அவர்களின் பதிலுக்குக் கூடக் காத்திராமல் சர்ரெனப் பறந்து வானத்தில் காற்றோடு கலந்திருந்தார்.

கண்முன் கண்ட இக்காட்சியினை மூச்சுக் கூட விடாமல் அதிர்ச்சியுடன் பார்த்திருந்தனர் மாதவனும் தாமரையும்.

திக் பிரமை பிடித்தவர்கள் போல் இருவரும் அப்படியே அமர்ந்திருந்தனர்.

முழுதாய் ஐந்து நிமிடங்கள் கழித்து ஏதோ கனவு கண்டது போல் அவரிடம் பேசிய காட்சிகள் எல்லாம் தோன்றியது அவர்களுக்கு.

"என்னப்பா நடக்குது இங்க? இந்தச் சாமியார்க்கும் நமக்கும் இப்படி ஒரு சம்பந்தம் இருக்கும்னு கனவுல கூட நினைக்கலையே! எவ்ளோ ஆச்சரியங்கள் நிறைஞ்சிருக்கு இந்த ஊருல" என்று தாமரை இன்னுமே அதிர்ச்சி மாறாமல் கூற,

"அதே யோசனை தான் எனக்கும் தாமரை! நான் கூட இங்கே மலைல உலவுற சித்தரா இவர் இருப்பாருனு நினைச்சேன்" என்றவன்,

"அடுத்து என்ன செய்யலாம் தாமரை?" எனக் கேட்டான்.

"நேத்து நான் சக்தி அண்ணாகிட்ட சொன்ன மாதிரி, இன்னிக்கு ஆபிஸ்ல மாதவப் பெருமாள் சம்பந்தப்பட்ட சாட்சியங்கள் எதுவும் இருக்கானு பார்க்கிறேன் கண்ணா. ஒரிஜினல் சிலையோட எவிடன்ஸ் கிடைச்சதும் மொத வேலையா நீங்க கம்ப்ளைண்ட் கொடுக்கனும். நானும் அறநிலையத் துறை அமைச்சர்கிட்டயே இந்த விஷயத்தை நேரடியாக எடுத்துட்டுப் போக முடியுமானு பார்க்கிறேன்! கண்டிப்பாக இப்ப பெரிய ஆளோட தலையீடு இருந்தா மட்டும் தான் இந்த அமைச்சர் மேல கேஸ் கொடுத்துட்டு நாம உயிரோட இருக்க முடியும்" என்றாள்.

"ஆமா சிலை ஏதோ தலைநகரம்ல இருக்குனு சொன்னாரே! தலைநகரம்னா சென்னையா? தமிழ்நாட்டுக்குத் தலைநகரம் அது தானே" எனக் கேட்டான் மாதவன்.

"அப்படித் தான் இருக்கும்னு நினைக்கிறேன்" என்றாள்.

"தலைநகரம்னா எந்த ஊருனு நான் அவர்கிட்டயே கேட்கலாம்னு நினைக்கிறதுக்குள்ள விடைக்கொடுங்கள்னு பதில் கூட எதிர்பார்க்காம விர்ருனு போய்ட்டாரு" என்று மாதவன் கூற,

"மனுஷனா இருக்க நாமளே எப்படா இந்த உலகத்தை விட்டு போவோம்னு யோசிக்கும் போது, பாவம் அவரு! ஆவியா தனியா எத்தனை ஜென்மங்களா சுத்தினாரோ! எங்கே நாம அவரை இங்கேயே இருக்க வச்சிடுவோமோனு பயந்து விர்ருனு பறந்துட்டாரு" என்று சொல்லி மென்னகைப் புரிந்தாள் தாமரை.

அவனும்‌ மெல்லச் சிரிக்க, அவ்வமயம்

நான் உனை பார்த்தது
பூர்வ ஜென்ம பந்தம்
நீண்ட நாள் நினைவிலே
வாழும் இந்தச் சொந்தம்

என்று அவளின் கைப்பேசி அலறியது.

அந்தப் பாடலைக் கேட்டதும் அவனின் மனத்திற்குள் இனம்புரியா இன்பச் சாரல் வீசியது.

"என்ன அதிசயமா இருக்கு? இந்த இடத்துல கூடப் போன் சிக்னல் இருக்குதா என்ன?" என்று உரைத்தவளாய் அழைப்பைப் பார்த்தவள், "அய்யோ சர்வேஷ் போன் செய்றாரு" என்றாள்.

அழைப்பை ஏற்கும்படி அவன் சொல்லவும், அழைப்பையேற்று பேசினாள்.

"என்னது?" என்றவளாய் பேச்சைத் தொடர்ந்தவள், மறுபுறம் கூறியதற்கு எல்லாம், "ஓ ஓகே சார்! சரி சார்" என்றே கூறிக் கொண்டு வந்தாள்.

"சரிங்க சார். வந்துடுறேன்" என்றவளாய் இணைப்பைத் துண்டித்தவளுக்கு முகம் வெளிரிப் போய் இருந்தது.

"என்னாச்சு தாமரை?" எனக் கேட்டான்.

"அந்த வெளங்காத மேலதிகாரி சர்வேஷ் என்னை உடனே ஆபிஸ்க்கு வரச் சொல்லிருக்கான் மாதவன். ஆத்மநல்லூர் மாதவப் பெருமாள் கோவில் கஜானா அறைல ஏதோ சிலையைக் காணோமாம். அதைப் பத்தி என்கிட்ட ஏதோ விசாரணை செய்யப் போறானாம்" என்றவள் சொன்னதைக் கேட்டு அதிர்ந்து போனான் மாதவன்.

"ஓ மை காட்! அப்ப நீ என்னை அந்த ரூமுக்குள்ள கூட்டிட்டுப் போனதை அவன் பார்த்துட்டானா? இதுல ஏதோ சதித்திட்டம் இருக்கு தாமரை" என்றான்.

"ஆமா அவன் என் மேல ஏதோ பழிப் போட தான் வரச் சொல்றான் கண்ணா" முகத்தில் கலக்கத்தைத் தேக்கி அவள் உரைக்க,

"உன் வேலையே போனாலும் உனக்குப் பக்கபலமா நான் நிப்பேன் தாமரை! உனக்கான நியாயத்தை வாங்கித் தரப் போராடுவேன். அதனால டோண்ட் வொர்ரிமா" என்றவனாய் அவளின் தோளைச் சுற்றிக் கைகளைப் போட்டுச் சமாதானம் செய்தவன், சக்தீஸ்வரனுக்கும் ராஜாவிற்கும் அழைத்துச் சர்வேஷ்வரன் உரைத்ததைத் தெரிவித்து விட்டு, ஆத்மநல்லூர் அறநிலையத்துறை அலுவலகத்தில் அவளை இறக்கி விட்டான்.

அலுவலகத்திற்குள் மேலாளர் சர்வேஷ்வரனை தவிர எவரும் இல்லாமல் இருக்க, 'போன ஜென்மத்துல தைரியமா வாள் சண்டைப் போட்டு பாம்பையும் மனுஷங்களையும் கொன்னவ இப்ப என் மேனேஜரைப்‌ பார்க்க போறதுக்கு இந்தப் பயம் பயப்படுறானு சொன்னா ஊர் உலகம் நம்புனா' என்று தனக்குள்ளாகவே பேசிக் கொண்டவளாய் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு சர்வேஷ்வரனின் அறைக்குள் நுழைந்தாள் தாமரை.

"வாங்க தாமரை! உட்காருங்க" இறுகிய தாடையுடன் சற்று கோபமாய் அவளை முறைத்தவாறு உரைத்தவன் அவள் அமர்ந்ததும், அவளை நோக்கி தனது கணிணியைத் திருப்பியவனாய் அதில் ஓர் காணொளியை ஓட விட்டான்.

தாமரையும் மாதவனும் மாதவப் பெருமாள் கோவிலின் கஜானா அறைக்குள் நுழையும் அக்காணொளியைக் கண்ட நொடி, அங்கமெல்லாம் வியர்த்துக் கரங்கள் நடுங்க ஆரம்பித்தது அவளுக்கு.

'நான் கேமராலாம் ஆஃப் செஞ்சிட்டு தானே போனேன். எப்டி இது ரெக்கார்ட் ஆச்சு' என்று மனத்திற்குள் யோசித்தவளாய் அதனைப் பார்த்திருந்தவளை கண் சிமிட்டாது முறைத்துப் பார்த்திருந்தான் சர்வேஷ்வரன்.

"நீங்க உள்ளே நுழைஞ்சதுமே நீங்க ஆஃப் செஞ்ச கேமராவை நான் ஆன் செஞ்சிட்டேன் தாமரை" அவள் மனத்தினுள் நினைத்ததற்குப் பதிலுரைத்தான் சர்வேஷ்வரன்.

"இப்ப இதுக்கு என்ன சொல்ல போறீங்க தாமரை! நீங்க ரூமுக்குள்ள போய்ட்டு வந்த பிறகு அங்க இருந்த கோதை உற்சவ சிலை காணோம்னு அந்தக் கோவிலோட அறங்காவலர் உங்க மேல கம்ப்ளைண்ட் செஞ்சிருக்காரு! இப்ப உங்க மேல கேஸ் போட்டு உங்களை என்னால சஸ்பென்ட் செய்ய முடியும். ரிமார்க்கோட அதாவது கெட்டப் பெயர் ஏற்படுத்தி வேலையை விட்டே தூக்க முடியும். என்னமோ நேர்மையான ஆபிசர் மாதிரி ஓடியோடி சிலைக் கணக்கை எல்லாம் எடுத்தீங்களே! உங்க காதலனோட சேர்ந்து இப்படிச் சிலையைத் திருடி விக்கத் தானே? இப்படிச் சொல்லி உங்களைக் காலம் பூரா ஜெயில்ல தள்ளவும் முடியும்" என்று எகத்தாளமாய்க் கூறினான் சர்வேஷ்வரன்.

அவனின் பேச்சு தூண்டி விட்ட கோபத்துடன், "சார் இதெல்லாம் அநியாயம். நான் நியாயமான முறையில் தான் வேலைச் செய்றேன். என்னைப் பழி வாங்கனும்னு யாரோ சதி செய்ற மாதிரியே தோணுது சார்" என்றாள்.

"இப்ப கூட ஒன்னும் கெட்டுப் போகலை தாமரை‌. நான் சொல்றதை நீங்க செஞ்சீங்கனா உங்க மேல எந்தக் கெட்டப் பெயரும் வராம இந்தப் பிரச்சினையைக் கிளோஸ் செஞ்சிடலாம்" என்றவன் சொன்னதைக் கேட்டு,

'இவன் என்கிட்ட என்ன எதிர்பார்க்கிறான்' என்று உள்ளுக்குள் யோசித்தவளாய்,

"நான் என்ன செய்யனும்னு எதிர்பார்க்கிறீங்க சார்?" என நேரடியாகக் கேட்டிருந்தாள்.

"இந்த ஊரை விட்டு டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டு போய்டுங்க!" என்றான்.

"ஏன்.. ஏன் நான் டிரான்ஸ்ஃபர் வாங்கிட்டுப் போகனும்" என்று கேட்டாள்.

"நீங்க கண்டுபிடிச்ச மாதிரி இங்கே உள்ளே ஐம்பொன் சிலைகளை எல்லாம் எப்பவோ நாங்க வித்திட்டோம். எங்க மேல நீங்க ஆக்ஷன் எடுக்கனும்னு நினைச்சா உங்க மேல நாங்க ஆக்ஷன் எடுப்போம். அதான் உங்களுக்கும் பாதகம் இல்லாம எங்களுக்கும் பாதகம் இல்லாம உங்களைத் தப்பிக்க வைக்க இந்த வழியைச் சொல்றேன்" நல்லவன் போலவே பேசும் அவன் பேச்சில் கோபம் கொண்டவளாய்,

"என் மேல என்ன கேஸ் வேணும்னாலும் போட்டுக்கோங்க. நீங்க செஞ்ச குற்றத்தை எல்லாம் அம்பலத்துல ஏத்தாம சாக மாட்டேன்" வெறிக் கொண்டவளாய் கத்தியவள் எழுந்து நின்று வெளியே செல்ல எத்தனித்த போது,

"செல்வம், இவ நமக்குப் படிஞ்சி வர மாதிரி தெரியலை. உடனே கிளம்பி வாங்க. இவளை சொர்க்கத்துக்கு அனுப்பி வச்சிடுங்க" குரூரமான பார்வையுடன் உரைத்திருந்தான்.

அவன் பேச்சில் உறைந்து போய் அவள் நிற்க, அடுத்த நொடி அறைக்குள் வந்தவனாய் அவள் முன் நின்றிருந்தான் செல்வம்.

வந்த உடனேயே, "உங்களோட கடைசி ஆசை என்ன மேடம்" எனக் கேட்டுச் சிரித்தான் செல்வம்.

"நீங்க தனியா போக விருப்பப்பட மாட்டீங்களே. உங்க காதலரையும் கூட்டிட்டு வந்துடவா! சேர்த்தே உங்களைச் சொர்க்கத்துக்கு அனுப்பிடுறோம்" என்றவனாய் தன்னுடன் வந்த இரண்டு அடியாட்களை வைத்து அவளை நாற்காலியில் தள்ளி அமர வைத்தனர். தனது இருபுறமும் ஆள்கள் வந்து கையினை இறுக்கிப் பிடிக்கவுமே, "விடுங்கடா என்னை" என்று திமிறினாள் தாமரை.

திமிறிக்கொண்டிருந்தவளின் கரங்களை நாற்காலியோடு கயிற்றினால் கட்டி வாயைப் பொத்திய நொடி, கையிலிருந்த கைப்பேசியில் அங்கு நடப்பவைகளைக் காணொளி எடுத்தவராய் உள்ளே நுழைந்தார் பெரிய தொந்தியும் மீசையுமாய் ஐம்பது வயது மதிக்கத்தக்க ஆசாமி ஒருவர்.

சர்வேஷ்வரனும் செல்வமும் அவரைப் பார்த்தவர்களாய், "யார்யா நீ? உன் இஷ்டத்துக்கு உள்ளே நுழையுற?" என்று பரபரப்புடன் கேட்டிருந்தனர்.

தனது கையிலிருந்த கைப்பேசியைத் தன்னை நோக்கித் திருப்பியவராய், "மக்களே ஒரு லைவ் கொலையைப் பார்க்கனுமா? இதோ இந்த ஃபேஸ்புக் நேரலையில் பார்க்கலாம்" என்றவர் பேசியதைக் கேட்டு கடுப்பானவனாய் அவரின் கைப்பேசியைப் பறித்துக் கன்னத்தில் பளாரென அறைந்திருந்தான் செல்வம்.

"யாராண்ட ஃபிலுமு காட்டினு இருக்க நீ! ஊர்க்கார பய பம்மிட்டு போவனு நினைச்சியா? சென்னை பையன் நானு" என்று மேலும் அவரை அவன் அறைய முயலும் போது, "சர்வேசு இதுக்கு மேல இவன் கை என் மேல பட்டா உன் சீட்டைக் கிழிச்சிடுவேன்" என ஆங்காரமாய்ச் சொன்னதைக் கேட்டு அதிர்வுடன் அவரைப் பார்த்து, "யார் நீங்க?" எனக் கேட்டான் சர்வேஷ்வரன்.

"நான் தான் அறநிலையத் துறையின் ஹெட் ஆபிசர் (தலைமை அலுவலர்) ராமானுஜம்!" என்றவராய் தனது ஐடியை அவர் காண்பிக்கவும்,

"ஆறு மாசமா ஹெட் ஆபிசர் யாரையும் அரசு நியமிக்காம தானே இருந்தாங்க" என்று கேள்வியுடன் அவரைப் பார்த்தான்.

"கடந்த ஆறு மாசமா உங்களை மாதிரி கல்பிரிட்டை பிடிக்கிறதுக்காகவே அண்டர்கிரவுண்ட்ல வேலைப் பார்த்துட்டு இருந்தேன்" என்றவர் சொல்லவும்,

"நீ எந்த ஆபிசரா இருந்தாலும் என் அப்பனுக்குக் கீழ தான்டா! ஆமாம்டா நாங்க தான்டா இங்கே காணாம போன சிலை எல்லாத்தையும் கடத்தி வெளிநாட்டுக்காரனுக்கு வித்தோம். உன்னால என்னடா பண்ண முடியும் எங்களை" என்று செல்வம் தெனாவெட்டாய் உரைத்த நொடி, அறைக்குள்ளே நான்கைந்து காவலர்கள் நுழைந்து செல்வத்தைக் கைது செய்ய, அவனது இரு கன்னத்திலும் பளார் பளாரென அறைந்திருந்தார் ராமானுஜம்.

"இதுக்கும் சேர்த்து உங்கப்பனை ஆக்ஷன் எடுக்கச் சொல்லு தம்பி" என்றவராய் சர்வேஷ்வரன் பக்கம் திரும்பியவர், "இனி ஆயுசுக்கும் ஜெயில்ல உங்களுக்குக் கலி தான் ஆபிசர். இந்த ஆபிசரையும் கையோட அரெஸ்ட் செஞ்சிட்டு போங்க ஆபிசர்!" என்று நக்கலாக உரைத்திருந்தார்.

'என்னடா நடக்குது இங்கே' என்று மைண்ட் வாய்ஸில் பேசியவளாய் இதையெல்லாம் பேயறைந்த முகத்துடன் பார்த்திருந்தாள் தாமரை.
 

Latest threads

Top Bottom