👁️ 1283 Views
அத்தியாயம் – 2
“எனக்கு என் விக்ரமைத்தான் பிடிச்சிருக்கு. எல்லாரும் சேர்ந்து என் விக்ரமை ஏதோ செய்துட்டாங்க. அவர் எனக்கு வேணும். நான் அவரைத்தான் கல்யாணம் பண்ணிப்பேன். அவர் கிடைக்கலைனா செத்தாலும் சாவானே தவிர, உங்களைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டேன்…”
செவிப் பாறையில் மீண்டும் மீண்டும் அவ்வார்த்தைகள் எதிரொலித்து அதிர்வலைகளை எழுப்பிக் கொண்டே இருக்க, அதற்கு மேல் படுத்திருக்க முடியாமல் பட்டென்று இமைகளை மலர்த்தினான் மயூரன்.
அவ்வார்த்தைகளை அவனின் முகத்திற்கு நேராக மதுமதி சொல்லி இரண்டு நாள்களைக் கடந்திருந்தன. ஆனால், அச்சொற்களின் வீரியத்தைக் கடக்க முடியாமல் கனமாய்க் கணங்களை நெட்டித் தள்ளிக் கொண்டிருந்தான் அவன்.
இருட்டாய் இருந்த அறையில் விளக்கைப் போட்டுவிட்டு, படுக்கையில் எழுந்தமர்ந்து மணியைப் பார்த்தான்.
மணி அதிகாலை நான்கு என்றது சுவர் கடிகாரம்.
மீண்டும் படுத்தாலும் உறக்கம் வரும் போல் தெரியவில்லை.
எழுந்து ஓய்வறைக்குச் சென்றுவிட்டு, ஈர முகத்தைத் துவாலையால் துடைத்தபடி வெளியே வந்தான்.

இரவு படுக்கும் போது கையில்லாத உள்பனியனும், முழங்காலுக்கு மேல் நின்றுவிடும் ஷார்ட்ஸும் அணிவதுதான் அவனது வழக்கம்.
அணிந்திருந்த உடையுடன் அறையை விட்டு வெளியே வந்தான்.
கீழே இரண்டு படுக்கை அறைகளும், அதனுடன் ஒரு சமையலறையும் இருக்க, மாடியில் இரண்டு அறைகள் இருந்தன. அதில் ஒன்று அவன் படுக்கையறையாகவும், மற்றொன்று அலுவலக அறை போன்றும் இருந்தது.
படுக்கையறையிலிருந்து வெளியே வந்தான் மயூரன். வீடு வெகு அமைதியாக இருந்தது. இன்னும் விடியலை காணாத அந்த நேரத்தில் அமைதியாக இருப்பது இயல்பே!
ஆனால், நான்கு அறைகள் இருந்தாலும், அத்துணைப் பெரிய வீட்டில் அவன் ஒருவன் மட்டுமே இருக்கும் போது வீட்டில் எப்படி வேறு சத்தம் கேட்கும்?
ஆம்! அந்தப் பெரிய கூட்டில் அவன் மட்டுமே வசித்து வந்தான்.
அவனின் பெற்றோர் அவசர அவசரமாய் ஒருவர் பின் ஒருவராக விண்ணகம் சென்று சேர்ந்திருந்தனர்.
அவனின் தந்தை இருக்கும் போதே கட்டிய வீடு அது.
அவனின் அன்னை மயூரனுக்குப் பத்து வயது இருக்கும் போது, குளியலறையில் இருந்து வெளியே வந்தவர், ஈரத்தில் கால் வைத்து, மட்ட மல்லாக்கில் விழுந்தவரின் தலை, பாத்ரூம் நிலைபடியில் பலமாக மோதி அடிபட, அந்த நேரத்தில் அவரின் கணவர் வேலைக்கும், மகன் பள்ளிக்கும் சென்றிருந்ததால் உதவிக்கு யாரும் இல்லாமல் அப்படியே மயக்கநிலைக்குச் சென்றவரின் தலையிலிருந்து வெளியேறிய அதிகமான இரத்தத்தால் இறப்பை தழுவியிருந்தார்.
பத்து வயதிலேயே அன்னையை இழந்து, தந்தையின் அரவணைப்பில் வளர ஆரம்பித்தான் மயூரன்.
மனைவியின் இழப்பிலிருந்து மீள முடியாமல் மனம் தவித்துக் கிடந்தாலும், மகனுக்காகச் சற்றுத் தன்னைத் தேற்றிக் கொண்ட அவனின் தந்தை, தனது சிட்பண்ட் தொழிலையும் கவனித்துக் கொண்டு, மகனையும் வளர்த்தார். வேறு பெண் துணையை நாடவில்லை அவர்.
மனைவியுடன் வாழ்ந்த நினைவுகள் மட்டும் எனக்குப் போதும் என்றுவிட்டார் மனிதர்! மனைவியின் மீது அத்துணைக் காதல்! பிரியம்!
அப்படிப்பட்ட மனிதருக்கு விரைவிலேயே மனைவியின் அண்மையைத் தேடி மனம் துடித்ததோ என்னவோ, ஒரு நாள் அதிகாலையிலேயே அவரின் இதயம் தன் துடிப்பை நிறுத்திக் கொண்டது.
தன் காதல் மனைவியுடன் காதல் வாழ்க்கையைத் தொடர சென்றுவிட்டார் அவர்.
அதன்பின் தனித்துப் போனான் மயூரன்.
அத்துணைக் காதல் கொண்ட பெற்றோரின் மகனான அவனுக்கும் ஒரு பெண்ணைப் பிடித்தது.
அவள்தான் மதுமதி!
ஒரு உறவினர் விசேஷத்தில் அவளைப் பார்த்தவனுக்கு, ‘அவளே தன் மணவாட்டியாக வந்தால்’ என்ற ஆசை துளிர்த்தது.
காதல் என்று பினாத்திக் கொண்டு அவள் பின்னால் அலைய வேண்டும் என்றெல்லாம் அவனுக்குத் தோன்றவில்லை. வீட்டில் முறைபடி பேசிப் பார்க்கலாம் என்றே தோன்றியது.
அவன் இல்லத்தில் தனியாக வாழ்ந்தாலும், உறவுகளின் ஆதரவு கொண்டவன் தான். அவனின் அம்மாவின் அக்கா குடும்பமும், அப்பாவின் தங்கை குடும்பமும் அவன் நலம் நாடுபவர்கள்தான். அவனுக்காக எப்போதும் வந்து நிற்பவர்கள்.
அவனின் அத்தைக்கும், பெரியம்மாவிற்கும் இப்படி என்று கோடிட்டுக் காட்டினான். திருச்சியில் இருக்கும் அவனின் பெரியம்மாவும், பாளையங்கோட்டையில் இருக்கும் அவனின் அத்தையும் தான் வந்திருந்து, மதுமதியின் பெற்றோரிடம் பேசினர்.
அந்தப் பக்கம் இருந்தும் சம்மதம் வந்தது. அதன் பின்பே அனைத்தும் பேசி முடிவெடுக்கப்பட்டது. பெரியவர்கள் மூலமாக அனைத்தையும் பேசி முடிவெடுத்தாலும் மதுமதியின் சம்மதத்தையும் கேட்டு அறிந்து கொண்டார்கள். அப்போது அவளும் சம்மதம் தெரிவித்தாள். அதன் பின்பே இருவருக்கும் நிச்சயம் நடந்தது.
அப்போது சம்மதித்தவள்தான், இப்போது இன்னொருவனுக்காகச் சாகத் துணிந்திருக்கிறாள்.
அதை நினைத்துக் கொண்டே அந்தக் கருக்கலில் வீட்டின் பக்கவாட்டில் இருந்த இடத்தில் மிதமான வேகத்தில் ஓடிக் கொண்டிருந்தான்.
மதுமதியின் வார்த்தைகளும் அவனைத் துரத்திக் கொண்டு வந்தன.
“அன்னைக்கு நானா ஒன்னும் உங்களைக் கல்யாணம் செய்யச் சம்மதம் சொல்லலை. என் அப்பாதான் விக்ரமை கொன்னுடுவதா மிரட்டி கட்டாயப்படுத்திச் சம்மதிக்க வைத்தார். அவர்கிட்ட என் காதலுக்காக எவ்வளவு போராடினேன்னு உங்களுக்குத் தெரியுமா? அன்னைக்கு விருப்பம் இல்லாமல்தான் அந்த நிச்சயத்தில் நின்னேன். அதன்பிறகும் எப்படியாவது கல்யாணத்தை நிறுத்தி, என் விக்ரம் கூடச் சேரணும்னு போராடினேன். ஆனால், அதுக்குள்ள என் அப்பா விக்ரமை அந்தச் செல்வராஜ் மூலமா ஆளுங்களை ஏற்பாடு பண்ணி மிரட்டி எங்கயோ அனுப்பிட்டார். இப்ப விக்ரம் எங்க இருக்கார்னே தெரியலை. எனக்கு அவர்தான் வேணும்…” என்று அன்று வெறி வந்தவள் போலக் கத்தியிருந்தாள் மதுமதி.
விருப்பத்துடன் அவன் திருமணம் செய்ய இருந்தவள், இன்னொருவன் தான் வேண்டும் என்று பிடிவாதம் பிடித்து ஆர்ப்பாட்டம் செய்ததை இன்னும் ஜீரணிக்க முடியாமல் அவனின் நெஞ்சில் பெரும் பாராங்கல்லை தூக்கி வைத்தது போல அழுத்திக் கொண்டிருந்தது.
மனம் கனக்க, அவனின் கால்களோ இறக்கை முளைத்தது போல் வேகத்தைக் கூட்ட, வெறி வந்தவன் போல ஓடினான்.

“வவ்… வவ்…” என்று சத்தம் கேட்டு, அப்போதுதான் குரைத்துக் கொண்டே அவன் வளர்க்கும் நான்கு கால்கள் ஜீவனும் அவனுடனே ஓடி வருவதைக் கவனித்தான்.
அவன் சீரில்லாமல் ஓடுவதைக் கண்டு என்னவோ என்று நினைத்து அவனின் செல்ல ‘பெப்பி’ குரைத்த பின்தான் அவனுக்கு அந்த ஜீவன் நினைவே வந்தது.
உடனே தன் கால்களைத் தளர்த்தி வேகத்தைக் குறைத்தவன், “ஹேய் பேப்… என்னடா, நீயும் எதுக்கு என் பின்னால் இப்படி ஓடி வர்ற?” என்று மிதமான ஓட்டத்தைத் தொடர்ந்தபடி கேட்டவனுக்கு மூச்சு வாங்கியது.
“வவ்… அவ்…” என அது தீனமாக ஏதோ சொல்ல,
“பயந்துட்டியாடா பேப்?”
“வவ்… வ்வ்…”
“ஓகே… ஓகே… ஐயம் ஆல்ரைட்-ரா பேப். யூ டோன்ட் வொர்ரி மேன்…” என்று சிறு முறுவலுடன் சொல்லிவிட்டு மீண்டும் ஓட்டத்தைத் தொடர்ந்தான்.
கால்கள் தளர்ந்து ஓய்வுக்குக் கெஞ்சிய பிறகும், அவனால் தன் ஓட்டத்தை நிறுத்த முடியவில்லை. அவனின் உடல் எல்லாம் முத்து முத்தாக வியர்த்து வடிய ஆரம்பித்தது.
அவனுடன் சிறிது நேரம் ஓடிவந்த பெப்பி, ஒரு கட்டத்தில் முடியாமல் அந்தப் பாதையிலேயே ஓர் ஓரத்தில் படுத்துவிட்டது.
“உங்க பொண்ணு ஏற்கெனவே ஒருத்தனை விரும்பியிருக்கா. அதை ஏன் என்கிட்ட மறைச்சி நிச்சயம் பண்ணி வச்சீங்க?” அன்று ஜெயராமனை நிற்க வைத்துக் கேள்வி கேட்டிருந்தான்.
“மாப்பிள்ளை, அவள் ஏதோ தெரியாம…” மழுப்பலாகப் பதில் சொல்ல முயன்ற ஜெயராமனின் வாய் அவன் பார்த்த தீர்க்கமான பார்வையில் அடுத்த வார்த்தைகள் கிடைக்காதது போலத் திணறி நின்று போனது.
“தெரியாம செய்ததா? அவன்தான் வேணும்னு போராடி செத்து பிழைச்சு வந்திருக்கா உங்க பொண்ணு. நீங்க இன்னும் என்கிட்ட மறைக்கப் பூசி மொழுகாதீங்க…” என்று எரிச்சலை குரலில் மட்டும் இல்லாமல் முகத்திலும் காட்டினான்.
“அவ புத்தி கெட்டுப் போய்ச் செய்துட்டா மாப்பிள்ளை. நான் புத்தி சொல்றேன்…” ஜெயராமன் நயந்து சொல்ல,
“நீங்க உங்க பொண்ணுக்கு புத்தி சொல்வது இருக்கட்டும். முதலில் என்னை மாப்பிள்ளைன்னு கூப்பிடுவதை நிறுத்திட்டு, அந்த விக்ரமை உங்க பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிற வழியைப் பாருங்க…”
“என்ன பேசுறீங்க மாப்பிள்ளை? நீங்க பேசுவது சரி கிடையாது. அவன் எங்கோ ஓடிப் போயிட்டான். எவனோ ஒருத்தனை எல்லாம் என் பொண்ணுக்குக் கல்யாணம் செய்து வைக்க முடியாது. அவளுக்கு நான் எடுத்து சொல்றேன் மாப்பிள்ளை. இனி இந்த மாதிரி கிறுக்குத்தனம் எல்லாம் செய்ய மாட்டாள். நாம சொன்ன தேதியில் கல்யாணம் நடக்கட்டும்…”
“என்ன விளையாடுறீங்களா? உங்க பொண்ணு மனசு நிறைய இன்னொருத்தனை வச்சுக்கிட்டு ஹாஸ்பிடலில் வந்து படுத்துக் கிடக்குறா… அப்படி இருக்கும் போது, நான் எப்படி இந்தக் கல்யாணத்துக்குச் சம்மதம் சொல்வேன்னு நினைக்கிறீங்க? நிச்சயித்த கல்யாணம் இனி நடக்காது…” என்றான்.
“மாப்பிள்ளை!” என்று அதிர்ந்து அழைத்தவர், “என் பொண்ணு செய்தது தப்புதான் மாப்பிள்ளை. அதுக்காகக் கல்யாணத்தை நிறுத்தணும்னு எல்லாம் சொல்லாதீங்க…”
“என்னங்க இது இப்படிப் பேசிட்டு இருக்கீங்க? இத்தனைக்குப் பிறகும்…” என்று சலிப்பாய் தலையை அசைத்தவன், திருமணத்தை நிறுத்துவதாகக் கண்டிப்புடனே சொன்னவன், “காதலிச்சவங்களைச் சேர்த்து வைக்கக் கூடாதுன்னு வீம்பு பிடிக்காம, உங்க பொண்ணுக்கு பிடிச்சவனைக் கல்யாணம் பண்ணி வைக்கிற வழியைப் பாருங்க…” என்றான் முடிவாக.
“ச்சே… ச்சே… போயும் போயும் அவனை என் பொண்ணுக்குக் கல்யாணம் பண்ணி வைக்கிறதா? அவன் நம்ம ஜாதி இல்லை மாப்பிள்ளை. எந்தப் பயலோ…” என்று பற்களைக் கடித்துக் கொண்டு ஏதோ சொன்னவர், “நம்ம அந்தஸ்து என்ன… அவன் அந்தஸ்து என்ன? இவளுக்குக் காதலிக்கப் போயும் போயும் அந்தப் பையன் தான் கிடைச்சானா? அவனை எல்லாம் எப்பவும் என்னால் என் வீட்டு மாப்பிள்ளையா நினைச்சு பார்க்க முடியாது மாப்பிள்ளை…” என்றார் அசூசையுடன்.
அவரை விநோதமாகப் பார்த்தவன், “உங்க பொண்ணை விட, உங்களுக்கு உங்க ஜாதி பற்று முக்கியமா போச்சா சார்?” என்று கடுமையுடன் கேட்டான்.
©nandhavanamnovels.com