👁️ 1780 Views
அத்தியாயம் – 1
பறவைகள் தங்கள் வீடுகளை நோக்கிப் பறக்க ஆரம்பித்திருந்த நேரமது! சூரியன் மெல்ல மெல்ல மேற்கில் சாய்ந்து கொண்டிருந்தான்!
பின்னாலிருந்து யாரோ தன்னைத் துரத்துவது போல் அதிவிரைவாகத் தன் இரு சக்கர வாகனத்தைச் சாலையில் பறக்க விட்டான் மயூரன்.
சற்றுமுன் அவனுக்குக் கிடைத்த செய்தி அவனின் கைகளுக்கு வேகத்தைக் கொடுத்திருக்க, ஆக்ஸிலேட்டரை முறுக்கினான்.

அவ்வேகத்தின் விளைவாக, அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் கரூரிலிருந்த ஒரு மருத்துவமனையின் முன் விருட்டென்று தன் இருசக்கர வாகனத்தை நிறுத்தினான்.
வாகனத்தை விட்டு இறங்கி, அவன் தன் தலையில் மாட்டியிருந்த தலைகவசத்தைக் கழற்றியதும், அவனின் அடர்ந்த சுருள் சுருளான கேசம் அடங்காமல் சிலிர்த்துக்கொண்டு திமிறியது.
வழக்கமாக அதைக் கையால் நீவி அடக்கி சரி செய்பவன், இன்று அதைச் செய்ய மறந்து போனான். நினைவுக்கு வந்தாலும், அதைச் சரி செய்யும் மனநிலையில் அவன் இல்லை.
அந்தளவுக்குப் படபடப்பும், பரபரப்பும் அவனைத் தொற்றிக் கொண்டிருந்தன.
கால்களை எட்டிப் போட்டு நடந்து மருத்துவமனைக்குள் விரைந்தான்.
ஒரு மாதத்திற்கு முன் அவனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் மதுமதி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தாள். அவளைக் காணவே ஓடோடி வந்திருந்தான்.
“அது… தம்பி… பாப்பாவை ஹாஸ்பிடலில் சேர்த்திருக்காங்க. ஐயாவும், அம்மாவும் அங்கேதான் இருக்காங்க…” என்று சற்றுமுன் வேலைக்காரப் பெண்மணி சொன்ன தகவல்தான் அவனை இங்கு இழுத்து வந்திருந்தது. எந்த மருத்துவமனை என்று கேட்ட அடுத்தக் கணமே கிளம்பிவிட்டான்.
ஆனால், அவனது மூளையோ பல கேள்விகளை எழுப்பிக் கொண்டிருந்தது.
மதுமதியை மருத்துவமனையில் அனுமதித்திருக்கும் அளவிற்கு அவளுக்கு உடல்நிலை சரியில்லாமல் போயிருக்கிறது. ஆனால், இதுவரை அவனுக்கு எந்தத் தகவலும் சொல்லப்படவில்லை. ஏன்? என்ற கேள்வி எழுந்தது.
வேலைக்கார பெண்மணியிடமே கேட்டபோது அவர் ஏதோ மழுப்பலாகத்தான் பதில் சொன்னாரே தவிர, அவனுக்குச் சரியான தகவலை தெரிவித்திருக்கவில்லை. அவரின் மழுப்பலான பதில் ஏன் என்றும் அவனுக்குப் புரியவில்லை.
யோசனையின் விளைவாகத் தனது அடர்ந்த புருவத்தை ஒற்றை விரலால் நீவி கொண்டே நடந்தான்.
“மதுமதி… அந்தச் சூசைட் கேஸ் தானே? வெயிட் பண்ணுங்க சார். இன்னும் ஒரு மணி நேரத்தில் பெரிய டாக்டர் ரவுண்ட்ஸ் வருவார். அப்போ உங்ககிட்ட தெளிவா பேசுவார்…” என்ற ஒரு பெண்ணின் குரல் கேட்டு சட்டென்று அவனின் நடை நின்று போனது.
‘மதுமதி! சூசைட் கேஸ்!’
யாரைச் சொல்கிறார்கள்? தன் மதுமதியைவா? அவளா சூசைட் கேஸ்? என்ற கேள்வி அவனிடம் துளிர்க்க, படபடப்புடன் பார்வையைக் குரல் வந்த பக்கம் திருப்பினான்.
அங்கே அந்தச் செவிலியர் எதிரே நின்றிருந்தவர் மதுமதியின் தந்தை ஜெயராமன் தான். அவரைப் பார்த்ததும் அவனின் இதயத்துடிப்பு அதிவேகமாகத் துடித்தது.
தற்கொலைக்கு முயன்றவள் மதுமதிதான் என்பது உறுதியாகிவிட, அவனால் அந்த உண்மையை ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.
இன்னும் ஒரு மாதத்தில் தன் வாழ்க்கை துணையாக வரப்போகிறவள், தன்னைத்தானே மாய்த்துக் கொள்ளத் துணிந்தாள் என்பதை அவனது மனம் ஏற்க மறுத்தது.
ஆனாலும், இப்போது அவளின் நிலை என்ன என்பதை அறிந்துகொள்ள மனம் துடித்தது.
இரும்பு குண்டைக் கட்டி வைத்தது போல் கனத்தக் கால்களை மெல்ல நகர்த்தி ஜெயராமனை நோக்கி சென்றான்.
கவலை தோய்ந்த முகத்துடன் செவிலியரிடம் விசாரித்துவிட்டு திரும்பிய ஜெயராமனின் கண்களில் அவன் விழ, திடுக்கிட்டுப் போனார் மனிதர்.
‘மாப்பிள்ளை!’ என்று அதிர்ச்சியுடன் அவரின் முரட்டு உதடுகள் மெல்ல அசைந்தன.
அடுத்த நொடி வேகமாக மயூரனை நோக்கி விரைந்து வந்தார்.
“மாப்பிள்ளை… நீங்க… இங்க… எப்படி?” என்று தடுமாற்றத்துடன் கேட்டார்.
அவருக்கான பதிலை சொல்லாமல், “அந்த நர்ஸ் சொன்னது உண்மையா? மது… மதுமதி… சூசைட்? ஏன்?” என்று தொண்டை அடைக்க, கரகரத்த குரலில் கேட்டான்.
“மா… ப்பிள்ளை…” என்று திணறியவருக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை.
“சொல்லுங்க, மதுமதி சூசைட் அட்டெம்ப்ட் பண்ணினாளா? எதுக்காக?” என்று கடின குரலில் கேட்டான்.
அவனின் கண்கள் சிவந்து இரத்த நிறம் கொண்டது. அது ஆதங்கத்தாலா? ஆத்திரத்தாலா என்பதைப் பிரித்தறிய முடியவில்லை.
“அது… மாப்பிள்ளை…” என்று அவர் தடுமாறிக் கொண்டிருந்த போது, அங்கே விறுவிறுவென வந்த ஒருவர், “அண்ணே… பெரிய டாக்டர் உள்ளே மதுவை பார்க்க போயிருக்கார். டாக்டர் வெளியே வந்ததும் பேசுவார். நீங்க அங்க பாருங்க. நான் மாப்பிள்ளைகிட்ட பேசுறேன்…” என்றார் அவர்.
“நா… நான் இதோ வந்துடுறேன் மாப்பிள்ளை….” என்று தப்பித்த உணர்வில் ஜெயராமன் விரைந்து அங்கிருந்து நகர்ந்தார்.
“நீங்களாவது சொல்லுங்க… மது ஏன் இப்படிப் பண்ணினா?” என்று மயூரன் வந்தவரிடம் கேட்க,
“மாப்பிள்ளை, வாங்க… இப்படி வந்து உட்காருங்க. எல்லாம் சொல்றேன்…” என்று அவனை அழைத்துச் சென்று ஒரு இருக்கையில் அமர வைத்தார் செல்வராஜ்.
ஜெயராமின் சகலை முறை உள்ளவர்தான் செல்வராஜ்.
ஜெயராமனின் மனைவி திலகாவின் சித்தப்பா மகள் ராதாவின் கணவர் தான் செல்வராஜ்.
ஒன்றுவிட்ட முறையாக இருந்தாலும், ஜெயராமனுக்கும், செல்வராஜுக்குமிடையே நல்ல பழக்கம் இருந்தது.
செல்வராஜ் கரூரில் ஆளுங்கட்சி அமைச்சர் ஒருவரிடம் பணிபுரிந்து வருகிறார். அவர்களின் பக்க சொந்த பந்தங்களுக்கு இடையே செல்வராஜ் சற்று முக்கியமானவர். அதுவும் அரசியல்வாதியிடம் வேலை செய்வதால் செல்வராஜ் மூலம் அவரின் சொந்த பந்தங்கள் சில காரியங்களுக்காக அவரை அணுகுவார்கள். அவரும் அதை முடித்துக் கொடுப்பார்.
அந்த வகையில் ஜெயராமனும் செல்வராஜிடம் சில உதவிகளைக் கேட்பதுண்டு.
இப்போது ஜெயராமனின் மகள் மருத்துவமனையில் உயிருக்கு போராடிக் கொண்டிருக்க, அவருக்குத் துணையாக அங்கே வந்திருந்தார் செல்வராஜ்.

“இந்தக் காலத்துப் பிள்ளைகளுக்கு, பொறுமையோ நிதானமோ கொஞ்சமும் இல்லை மாப்பிள்ளை. கொஞ்சம் குரலை உயர்த்தி அதட்டி பேசினாலே, மனசொடிஞ்சு போய்த் தப்பான முடிவு எடுத்துடுறாங்க. அப்பாவுக்கும், மகளுக்கும் ஏதோ சின்னதா பிரச்சினை. கல்யாணம் ஆகப்போகுது. போன இடத்தில் நல்ல பெயர் வாங்கணும். இந்தக் காலத்து பொண்ணுங்க போல வீட்டு வேலை ஒன்னும் தெரியாம புருஷன் வீட்டில் போய் நிக்கக் கூடாது. வீட்டு வேலை எல்லாம் கத்துக்கோன்னு ஜெயராம் அண்ணன் மகளைத் திட்டியிருப்பார் போல. அதுல அப்பாவுக்கும் மகளுக்கும் வாக்குவாதம்… உடனே இந்தப் பொண்ணு இப்படிப் பண்ணிடுச்சு மாப்பிள்ளை…” என்று அவர் சொன்ன காரணத்தை அவனால் நம்ப முடியவில்லை.
இதற்காகவெல்லாம் ஒருத்தி தற்கொலைக்கு முயல்வாளா? என்ற கேள்வி அவனின் கண்ணில் தொக்கி நின்றது.
அவனின் கண்களில் இருந்த கேள்வி புரிந்தாலும் செல்வராஜ் அதற்கு மேல் எந்த விளக்கமும் சொல்லவில்லை. அவனும் வேறு எதுவும் கேட்கவில்லை.
“இப்ப மதுமதி எப்படி இருக்கா?” என்று மட்டும் விசாரித்தான்.
“அதைத் தெரிஞ்சிக்கத்தான் டாக்டருக்காகக் காத்திருக்கோம்…” என்றார்.
அப்போது மருத்துவருடன் பேசிக்கொண்டே ஜெயராமன் வர, இருவரும் எழுந்து அவர்களிடம் சென்றனர்.
“உங்க பொண்ணு கையை ரொம்ப ஆழமா வெட்டியிருக்காங்க மிஸ்டர் ஜெயராமன். ஹாஸ்பிடலுக்குக் கொண்டு வரும்போதே அதிகமான இரத்தம் வெளியேறியிருக்கு. நாங்க அஞ்சு யூனிட் இரத்தம் ஏத்தியிருக்கோம். ஆனால், வெட்டப்பட்ட இடத்தில் இரத்தம் உறைவதில் சிக்கல் ஏற்பட்டு, மீண்டும் மீண்டும் கசிவு இருக்கு…” என்றார் மருத்துவர்.
“டாக்டர்… அப்போ அவ உயிருக்கு?” என்று நடுங்கிய குரலில் கேட்டார் ஜெயராமன்.
“இரத்தக் கசிவை கட்டுப்படுத்த தான் ட்ரீட்மெண்ட் போயிட்டு இருக்கு ஜெயராமன். சீக்கிரமே இம்ப்ரூமெண்ட் தெரியும்னு நம்புறோம். சோ, வெயிட் பண்ணுங்க…” என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றார் மருத்துவர்.
மருத்துவர் சொன்னதைக் கேட்ட மயூரனுக்கு மனம் வலித்தது. சற்றுமுன் வரை கூட இப்படி ஒரு செய்தியை கேட்க நேரிடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லையே.
அவனுக்கும் அவளுக்குமான திருமண வேலைகள் துரிதகதியில் நடந்து கொண்டிருக்க, அதன் விஷயமாகப் பேசவே ஜெயராமனை மாலை அழைத்தான். ஆனால், அவரின் கைப்பேசி தொடர்பு துண்டிக்கப்பட்டிருந்தது. அதனால் வீட்டு எண்ணுக்கு அழைக்க, இப்படி ஒரு தகவல் வேலையாள் மூலம் கிடைத்தது.
இப்போதும் கூடத் தன்னிடம் விஷயத்தைச் சொல்லாமல் மழுப்பும் பெரிய மனிதர்களிடம் என்ன பேசுவது என்று அறியாமல், உயிருக்கு போராடிக் கொண்டிருக்கும் மதுமதியைப் பற்றிய கவலை நெஞ்சை அரிக்க, அப்படியே தளர்ந்து நாற்காலியில் அமர்ந்தவன் கைகளால் முகத்தை மூடிக்கொண்டான்.

“மாப்பிள்ளை, கவலைப்படாதீங்க! மதுமதிக்கு ஒன்னும் ஆகாது…” என்று செல்வராஜ் தான் அவனுக்குச் சமாதானம் சொன்னார்.
ஜெயராமனுக்கு என்ன சொல்வதென்றே தெரியவில்லை. மகள் பற்றிய கவலை ஒரு புறம், வருங்கால மருமகனுக்குப் பதில் சொல்ல முடியாத நிலை மறுபுறம் என நிலைகுலைந்து போயிருந்தார் மனிதர்.
கைகளால் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டு, கையை விலக்கிவிட்டு நிமிர்ந்து அமர்ந்து எதிரே நின்றிருந்த ஜெயராமனை பார்த்த மயூரன், “எப்ப இப்படிப் பண்ணிக்கிட்டா?” என்று உயிர்ப்பில்லாமல் கேட்டான்.
“அது… வந்து மாப்பிள்ளை… விடியக்காலையில் தான் தற்செயலா திலகா பார்த்தா. உடனே ஹாஸ்பிடலுக்குத் தூக்கிட்டு வந்தோம்…” என்றார் வேதனையுடன்.
“காலைலேயே நடந்திருக்கு. ஆனால் எனக்கு ஏன் தகவல் சொல்லலை?” என்று ஆதங்கமாகக் கேட்டான்.
“அது… இதை எப்படிச் சொல்லன்னு தெரியாம…” என்று திணறினார் ஜெயராமன்.
“ம்ப்ச்…” என்று சலிப்புடன் உச்சுக் கொட்டினான்.
அதன்பின் அவரிடம் அவன் எதுவும் கேட்கவில்லை. பின்னால் சுவரில் தலையைச் சாய்த்துக் கண்களை மூடி அமர்ந்துவிட்டான்.
©nandhavanamnovels.com