வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்! – முன்னோட்டம்
கருங்கற்களால் கட்டப்பட்டிருந்த அந்தப் பெரிய மண்டபத்தின் வெளியே வாசல் கதவிற்கு இருபுறமும் பெரிது பெரிதாக இரண்டு திண்ணைகள் இருந்தன.
அதில் வலது பக்கம் இருந்த திண்ணையில் பெரிய ஜமக்காளம் விரிக்கப்பட்டிருக்க, நாற்பது வயதிலிருந்து எம்பது வயதைத் தொட்டவர்கள் வரை பத்து ஆண்கள் வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும் அணிந்து அரைவட்டமாக அமர்ந்திருந்தனர்.
அவர்களுக்கு நடுவில் வெள்ளை வேட்டி, வெள்ளை சட்டைக்குள் தன் ஆஜானுபாகுவான உடலைப் புகுத்தி, மாநிறமாக இருந்த முகத்தில் கருகருவென்று இருந்த மீசையை இரண்டு பக்கமும் முறுக்கி விட்டு, கண்களில் கூர்மையையும், முகத்தில் இறுக்கத்தையும் சுமந்து சம்மணமிட்டு அமர்ந்திருந்தவன் மட்டும் முப்பது வயதைத் தொட்டவனாக இருந்தான்.
கூர்மையுடன் இருந்த அவனின் கண்கள் தன் எதிரே ஊரே கூடியிருந்த அந்தக் கூட்டத்திற்கு நடுவே ஜீன்ஸ் பேண்ட்டும், டீசர்ட்டும் அணிந்து கைகளைக் கட்டிக் கொண்டு, கண்களில் அலட்சியத்தைத் தாங்கி, முகத்தில் இறுக்கத்தைக் குடிபுக வைத்துக் கொண்டிருந்த அந்தக் கன்னிகையை மட்டுமே கண்டு கொண்டிருந்தன.
அவனின் கண்களிலிருந்த கூர்மையைச் சளைக்காமல் எதிர்கொண்டு நின்றிருந்தாள் கன்னிகை!
“இந்தப் புள்ளக்கு எம்புட்டுக் கொழுப்பு பாரேன். செய்றதும் செய்து போட்டு எம்புட்டு தைகிரியமா நம்ம நாட்டாமையையே முறைக்குது…” என்று அவளுக்குப் பக்கவாட்டில் நின்றிருந்த அந்த ஊர் பெண்ணொருத்தி இன்னொரு பெண்ணிடம் பகிரங்கமாகவே ரகசியம் பேசினாள்.
அந்தப் பெண்ணின் பேச்சு அங்கே கூடியிருந்த அத்தனை ஜனங்களின் காதிலும் விழுந்த போது நடுவில் நின்றிருந்த அவளின் காதில் விழாமல் இருக்குமா என்ன? மிக நன்றாகவே விழுந்தது.
ஆனாலும் அசராமல் அவனைப் பார்த்த படி தான் நின்றாள்.
“முறைக்காதே சக்தி…” கன்னிகையின் அருகில் நின்றிருந்த ஆடவன் அவளை எச்சரித்தான்.
“சும்மா பயந்து நடுங்காதே பிரேம். இவனுங்க நம்மளை என்ன செய்ய முடியும்?” சபை நடுவில் அமர்ந்திருந்த நாட்டாமை என்பவனைத் தெனாவெட்டாக ஒரு பார்வை பார்த்து விட்டுப் பக்கத்தில் எச்சரித்தவனிடம் அலட்சியமாகச் சொன்னாள்.
“இது ரொம்பவும் கட்டுப்பாடு பார்க்கும் ஊராம் சக்தி. தப்புச் செய்தவங்களுக்குத் தண்டனையைக் கொடுத்துட்டு தான் மறுவேலை பார்ப்பாங்களாம்…” என்று லேசாக நடுங்கிய குரலில் சொன்னவனைத் திரும்பிப் பார்த்து இப்போது அவனை முறைத்தாள்.
“நீயும், நானும் என்ன தப்பு செய்தோம்?” என்று பல்லை கடித்த படி பிரேமிற்கு மட்டும் கேட்கும் குரலில் சீறினாள்.
“நாம தான் ஒரு தப்புமே செய்யலையே…” வேகமாகச் சொன்னவனின் குரலில் நடுக்கம் இருக்கத்தான் செய்தது.
“அப்போ வாயை மூடிக்கிட்டு கம்முன்னு இரு. இங்கே யார் என்ன பேசினாலும், என்ன சொன்னாலும் வாயை மூடிக்கிட்டு இருக்கணும். ஏதாவது உளறின…!” என்று பல்லைக் கடித்துக் கொண்டு கூறியவள், கடைசி வார்த்தையைச் சொல்லாமல் நிறுத்தி, ‘நான் என்ன செய்வேன்னு உனக்கே தெரியும்’ என்று பார்வையாலேயே அவனுக்குப் பயத்தைக் காட்டினாள்.
‘சக்தி’ என்ற பெயர் கொண்ட அந்த ராட்சசி என்ன செய்வாள் என்று அவனுக்குத் தான் நன்றாகத் தெரியுமே!
அவளைப் பற்றி நன்றாகத் தெரிந்தும் இனி வாயைத் திறப்பானா என்ன?
பசை போட்டு வாயை ஒட்ட வைத்தது போல் இறுக மூடிக் கொண்டான்.
‘அது!’ என்ற பார்வையை அவனின் புறம் செலுத்தி விட்டு, மீண்டும் நாட்டாமை நாயகனின் புறம் தன் பார்வை திருப்பினாள்.
“ஏம்மா, உங்க ரெண்டு பேரு மேல தான் பிராது வந்திருக்கு. ஊரே கூடிவந்து நிக்குது. ஊருக்கு முன்னாடி நிறுத்தி வச்ச பிறகும் இரண்டு பேரும் ரகசியமா கொஞ்சி பேசிட்டு இருக்கீக…” என்று மேடையில் அமர்ந்திருந்த ஒரு பெரியவர் அவளை அதட்டினார்.
‘யாரு நானும் இவளும் கொஞ்சிக்கிட்டோம்? அதை நீ பார்த்த?’ என்பது போல அந்தப் பெரியவரை பார்த்தான் பிரேம்.
‘இவளை பத்தி சரியா தெரியாம பஞ்சாயத்தில் நிறுத்தி வச்சுட்டீங்கய்யா. கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி என்னை மட்டும் தான் இவள் மிரட்டினாள். ஆனா இனி இந்த ஊரையே ஒத்த ஆளா நின்னு மிரட்ட போகிறாள்…” என்று நினைத்துக் கொண்டான்.
****
“இந்த ஊரு பெரியவங்க எல்லாம் வந்த பிராதை பற்றி விசாரிச்சுட்டீங்க. இப்போ நான் என் தீர்ப்பை சொல்லும் நேரமிது. நம்ம ஊர் வழக்கப்படி ஒரு ஆணும், பெண்ணும் தனியா ஒரே வீட்டில் தங்கியிருந்தால் அவங்களுக்கு இந்தப் பஞ்சாயத்து முன்னிலையில் கல்யாணம் செய்து வைப்பது தான் காலம் காலமா இந்த ஊர் வழக்கம். அதன்படி அந்தப் பொண்ணுக்கும், பையனுக்கும் இப்போ இங்கே கல்யாணம் நடக்கணும்…” என்று கணீரென்ற குரலில் நாட்டாமை சொல்ல,
அவனின் தீர்ப்பை கேட்டு “நோ…” என்று பிரேம் அலற,
சக்தியோ சிறிதும் அலட்டிக் கொள்ளவில்லை.
‘இந்தத் தீர்ப்பை தான் நீ சொல்லுவன்னு எனக்குத் தெரியும்டா…’ என்பது போல் நாட்டாமையை அலட்சியமாகப் பார்த்துக் கொண்டிருந்தாள் சக்தி.
அவளின் அலட்சிய பாவனையை ஒற்றைப் புருவத்தை ஏற்றி இறக்கி பார்த்த நாட்டாமை, “தாலி எடுத்துட்டு வாங்க…” என்று கூட்டத்தினரை பார்த்து உத்தரவிட்டான்.
“இல்லை, இல்லை… எங்களுக்குள்ள கல்யாணம் எல்லாம் சரி வராது…” என்று வேகமாக மறுப்புத் தெரிவித்தான் பிரேம்.
“ச்சு… பதறாதே பிரேம்…” என்று அவனை அடக்கிய சக்தி.
“நானும், பிரேமும் நல்ல ப்ரெண்ட்ஸ். அதைத் தாண்டி எங்களுக்குள் ஒன்னும் இல்லை. அதை நீங்க தப்பா புரிஞ்சுகிட்டுத் தப்பான தீர்ப்பு வழங்கினா அதுக்கு நாங்க கட்டுப்பட முடியாது…” என்று நாட்டாமையைப் பார்த்துத் தைரியமாக அறிவித்தாள்.
“ஏய் பொண்ணு, என்ன நீ எங்க ஊரு நாட்டாமையே எதிர்த்து பேசிட்டு இருக்குற?” என்று ஊருக்காரர்கள் அனைவரும் மொத்தமாகக் குரல் கொடுத்தனர்.
“ஷ்ஷ்… அமைதி!” என்று அவர்களை அடக்கிய நாட்டாமை, “இந்த ஊர் நாட்டாமையின் தீர்ப்புக்கு யாராக இருந்தாலும் கட்டுப்பட்டுத் தான் ஆகணும்…” என்று அழுத்தமாகச் சொன்னான் நாட்டாமை.
“கட்டுப்படலைனா?” என்று சாதாரணமாகக் கேட்டாள் சக்தி.
அவளிடம் சிறிதும் பதட்டம் இல்லை. பயம் இல்லை. ஆரம்பத்தில் அந்தக் கூட்டத்தில் வந்து நின்ற போது எப்படி நின்றாளோ, அந்தப் பாவனைச் சிறிதும் மாறவில்லை அவளிடம்.
அதை நாட்டாமையும் நன்றாகவே கண்ணுற்றான்.
“கட்டுப்படணும்… ஒன்னு உனக்கும், அந்தப் பையனுக்கும் கல்யாணம் நடக்கணும். இல்லைனா…” என்று அவன் சொல்ல,
“இல்லைனா…” என்று திருப்பிக் கேட்டாள் சக்தி.
“நான் கட்டும் தாலி உன் கழுத்தில் ஏறும்…” என்று இடி முழங்கியது போல ஓங்கி உயர்ந்து ஒலித்த அவனின் குரலில் ஒட்டு மொத்த ஊரே ஸ்தம்பித்துப் போனது என்றால், அதுவரை இருந்த அலட்சிய பாவனை முற்றிலும் தொலைந்து போக, தன் தலையில் நேரடியாக இடியை வாங்கியது போல் உறைந்து நின்றாள் சக்தி.
*****
அவங்களுக்கு ஏற்கனவே நாம அந்த ஊருக்குப் போனது பிடிக்கலை. அங்கிளுக்காகத்தான் அமைதியா இருந்தாங்க. இப்போ நீ அந்த ஊர் நாட்டாமையையே கல்யாணம் பண்ணிக்கிட்டன்னு தெரிஞ்சதும் இனி என்ன ஆகுமோன்னு அவங்களுக்குப் பயம்…”
“தேவையில்லாத பயம்னு சொல்லு பிரேம். சர்வேஸ் பார்க்கத்தான் முரடு. ஆனா அவர் குணம் அப்படி இல்லை. இங்கே எல்லாம் நான் சமாளிச்சுப்பேன்…” என்றாள்.
“நீ என்ன தான் சொன்னாலும் எனக்கும் கூடப் பயமாத்தான் இருக்கு சக்தி. உன்னைப் பத்தி அந்த ஊருக்கு முழு விவரமும் தெரியவரும் போது என்னாகுமோன்னு எனக்கு இப்பவே குலை நடுங்குது…” என்றவனின் குரலே நடுக்கத்தைப் பிரதிபலித்தது.
“ம்ப்ச், பயந்து சாகாதே பிரேம். எல்லாரும் மனுஷங்க தான். அதோட நம்ம மேலே எந்தத் தப்பும் இல்லைங்கும் போது எதுக்குப் பயந்து சாகணும் சொல்லு?” என்று கேட்டாள்.
“நம்ம மேலே தப்பு இல்லைன்னு நாம சொல்லிக்கிட்டா மட்டும் போதுமா? அந்த ஊர்காரங்களும் அப்படி நினைக்கணுமே? அதோட சர்வேஸுக்கே எல்லாம் தெரிய வரும் போது உன் வாழ்க்கையிலும் கூடப் பிரச்சனை வரலாம்…” என்றான்.
“சர்வேஸுக்கு எல்லாம் தெரியும்ன்னு தான் நினைக்கிறேன்…”
“என்ன சொல்ற சக்தி, தெரியுமா?” என்று அதிர்ந்து கேட்டான் பிரேம்.
“ம்ம், தெரிஞ்சே தான் கல்யாணம் பண்ணிருக்கார். அதான் ஏன்னு தெரியலை…” என்றாள்.
“அதுதான் உங்களுக்கு ரிஜிஸ்டர் மேரேஜ் முடிஞ்சிருச்சுன்னு சொன்னியே. ஏற்கனவே சட்டப்படி மனைவி ஆகிட்ட. இப்போ தாலி கட்டுவது தப்பு இல்லைன்னு நினைச்சுருப்பார். ஆனா எனக்கு ஒரு விஷயம் புரியவே இல்லை சக்தி.
சர்வேஸ் இங்கே இருக்கும் போது நீங்க இரண்டு பேரும் லவ் செய்தீங்கன்னு தெரியும். அடுத்து உங்க அப்பாக்கிட்ட லவ் விஷயத்தைச் சொல்லணும் தானே சொல்லிட்டு இருந்தீங்க? அந்த நேரத்தில் தான் ட்ரைனிங் போனேன். நான் போன பிறகு என்ன நடந்தது? எதுக்கு உடனே ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தீங்க? அப்படி என்ன அவசரம்?” என்று கேள்விகளை அடுக்கினான்.
‘என்ன அவசரம்?’ என்று நினைத்தவளுக்குப் பழையது எல்லாம் ஞாபகம் வந்தது.
அவனிடம் மெல்லிய குரலில் சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டாள்.
“இவ்வளவு நடந்துருச்சா? ஆனா அந்த நேரத்தில் நீ கொஞ்சம் பொறுமையா இருந்து இருக்கலாம்…” என்றான் பிரேம்.
“ம்ம், அப்போ அப்பா மேல தான் தப்புன்னு தப்பா நினைச்சுட்டேன்…” என்று வருத்தமாகச் சொன்னாள் சக்தி.
“எல்லாம் காதல் படுத்தும் பாடு. சர்வேஸூக்கு அப்போ இருந்த கோபம் எல்லாம் கொஞ்சம் குறைந்து விட்டதுன்னு தான் நினைக்கிறேன். அதான் நீ யாருன்னு தெரிஞ்சும் உன்னைக் கல்யாணம் பண்ணியிருக்கார். அதனால் நாம கவலைப்படத் தேவையில்லை…” என்றான்.
“சர்வேஸுக்கு என் மேல இன்னும் காதலும் இருக்கலாம். என்னை விட்டுவிடக் கூடாதுன்னு கல்யாணமும் பண்ணிருக்கலாம் பிரேம். ஆனா இனி தான் நாம கவலைப்பட்டே தீரணும். ஏன்னா நான் இந்த ஊருக்கு வந்த விஷயத்தில் அவங்க அப்பாவோட கௌரவமும் அடங்கி இருக்கு. அதை அவ்வளவு சீக்கிரம் அவர் விட்டுக் கொடுத்துவிட மாட்டார். நான் ரொம்பவே போராட வேண்டியது இருக்கும்…” என்றாள் சக்தி.
“என்ன சக்தி இப்படிச் சொல்ற?” என்று பிரேம் கவலையாகக் கேட்க,
“நடக்கப் போறதை சொல்றேன். அதோட அவரோட அம்மா எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கன்னு தெரியலை. இன்னொரு பக்கம் ஊர்காரங்க? எல்லோரையும் சமாளிக்கணும்…” என்றாள்.
“அதை நினைச்சாத்தான் எனக்குக் கவலையா இருக்கு சக்தி. ஒவ்வொருத்தரும் கெடா மீசைகாரங்களா இருக்காங்க…” என்று அவன் லேசான பயத்துடன் சொல்ல,
“அடேய்!” என்று பல்லைக் கடித்த சக்தி, “விட்டா நீ என்னையும் நடுங்க வைப்ப. பயந்தாங்கொள்ளி பக்கோடா. போனை வைடா…” என்றவள் அழைப்பை துண்டித்தாள்.
*****
அவளின் பின்னால் சென்று நின்றவன் “சக்தியாருக்கு திடீர்னு என்ன என் மேல அக்கறை?” என்று கேட்டான்.
“அது அக்கறைன்னு யார் சொன்னா? நீங்க சீக்கிரம் வெளியே கிளம்பி போகட்டும்னு தான்…” என்று அவனின் புறம் திரும்பாமலேயே பதில் சொன்னவள் தோளில் கை வைத்து தன் புறம் திருப்பினான்.
“அது தானே பார்த்தேன். என்னடா நம்ம பொண்டாட்டிக்கு நம்ம மேல திடீர்னு அக்கறை வந்துடுச்சேன்னு. அது சரி, நான் சீக்கிரம் வெளியே கிளம்பி போனதும் என்ன செய்யலாம்னு இருக்க?” என்று கேட்டான்.
“என்ன செய்யப் போறேன்னு உங்ககிட்ட எல்லாம் சொல்ல முடியாது. நீங்க எங்க போறீங்க? மில்லுக்கா? வயலுக்கா?” என்று கேட்டாள்.
“நீ சொல்ல மாட்ட. நான் மட்டும் சொல்லணுமா என்ன?” என்று பதிலுக்குத் திருப்பிக் கேட்டவனைப் பார்த்து உதட்டை சுழித்தாள்.
“சொல்லாட்டி போங்க. எனக்கென்ன? ஆனா எனக்குத் தெரியாதா என்ன? தெருவில் இறங்கி நீங்க எந்தப்பக்கம் போறீங்கன்னு பார்த்தாலே வயலுக்குப் போறீங்களா? இல்ல மில்லுக்குப் போறீங்களான்னு தெரிய போகுது…” என்றாள் அசட்டையாக.
“ஓஹோ! அப்போ நான் போற பக்கத்துக்கு ஆப்போசிட்டா நீ போகப் போற? சரிதான். நீ என்ன செய்யப் போறன்னு நானும் பார்க்கிறேன்…” என்றவன் அவள் எடுத்து வைத்திருந்த உடையை எடுத்து உடுத்தினான்.
தன் முன்பே அவன் உடை மாற்ற ஆரம்பிக்கவும் சக்தி மீண்டும் தன் பார்வையை ஜன்னல் பக்கமாகத் திருப்பினாள்.
அவளின் முதுகை நமட்டு சிரிப்புடன் பார்த்தவன், “அச்சோ சக்தி! என்ன இது இப்படிச் செய்து வச்சுருக்க?” என்று அலறினான்.
‘என்னவோ?’ என்று பதறி வேகமாக அவன் பக்கம் திரும்பிய சக்தி அவன் நின்ற கோலத்தைப் பார்த்து ஆவென்று வாயை பிளந்தாள்.
சட்டையைப் போட்டுவிட்டுப் பட்டனை மாட்டாமல் திறந்து விட்டிருந்தவன், வேஷ்டியை எடுத்துக் கட்டாமல் டவுசருடன் நின்று கொண்டிருந்தான்.
“ச்சீ, என்ன இது இப்படி நிற்கிறீங்க? கொஞ்சம் கூட வெட்கம் இல்லாம…” என்றவள் வேகமாக முகத்தைத் திருப்பிக் கொள்ள, “ஹாஹா…” என்று சப்தமாகச் சிரித்தான்.
“என் பொண்டாட்டி முன்னாடி இப்படி நிக்க நான் ஏன் வெட்கப்படணும்? என் பொண்டாட்டியை வெட்கப்பட வைக்க வேணும்னா செய்யலாம். என்னை இப்படிப் பார்க்க வெட்கப்பட்டுத் தானே நீ அந்தப் பக்கமே திரும்பி நின்னுகிற. உன்னை எப்படி என்னைப் பார்க்க வச்சேன் பார்த்தியா? இப்ப திரும்பவும் முகத்தைத் திருப்பிக்கிட்ட. அதனால் அடுத்து என்ன செய்யலாம்னு யோசிக்கிறேன்…” என்றான் கேலியாக.
“நீங்க ஒன்னும் செய்ய வேண்டாம். பேசாம போங்க…” என்றாள் கோபமாக.
“பேசாம வேணா போகலாம். ஆனா…” என்றவனின் குரல் அவளுக்கு மிக அருகில் கேட்க அவளின் மயிர்கால்கள் கூசி சிலிர்த்தன.
அவளின் பின்னால் அவளை உரசியும் உரசாமலும் நின்றவன், பின்னங்கழுத்தில் மெதுவாக ஊதினான்.
‘ஷ்ஷ்’ என்று உள்ளுக்குள் சிலிர்த்தவள் வெளியே உடலை விறைத்துக் கொண்டு நின்றாள்.
“இப்ப முழுசா ட்ரெஸ் பண்ணிட்டுத்தான் நிற்கிறேன். இப்ப திரும்பலாம்ல?” என்று அவளின் தோளில் கை வைத்துக் கேட்டான்.
“திரும்ப முடியாது…” என்று தன் தோளில் இருந்த கணவனின் கையை எடுத்து விட்டாள்.
“ஏன்?” என்றவன் மீண்டும் சக்தியின் தோளில் கையை வைத்து தன் பக்கம் வலுவாகத் திருப்பினான்.
இன்னும் அரைகுறை உடையுடன் நிற்பானோ என்று தயங்கிய சக்தி கண்களை இறுக்கமாக மூடிக் கொண்டாள்.
அவளின் செய்கையில் அவனின் சிரிப்பு விரிந்தது.
“நான் தான் ட்ரெஸ் பண்ணிட்டேன்னு சொன்னேன்ல. இன்னும் என் மேல சக்தியாருக்கு நம்பிக்கை வரலையோ?” என்றவன் அவளின் மூடிய இமைகளின் மீது மென்மையாக முத்தமிட்டான்.
அடுத்த நொடி அவளின் விழிகள் பட்டென்று திறந்து கொண்டன.
அடுத்து அவளின் கன்னத்தில் தன் அதரங்களைக் கொண்டு அச்சாரமிட, சக்தியின் விழிகள் விரிந்து கொண்டன.
மெல்ல அவனின் அதரங்கள் அவளின் இதழ்களை நோக்கி நகர, அவனின் நோக்கம் புரிந்து சக்தியும் அவனை விட்டுப் பின்னால் நகர்ந்தாள்.
“ப்ளீஸ் சர்வேஸ், என்னை டெம்ப்ட் பண்ணாதீங்க…” என்றாள்.
சக்தியின் முகத்தைக் கூர்ந்து பார்த்தான் சர்வேஸ்வரன். அவளின் முகத்தில் ஆதங்கமோ, தவிப்போ, ஏதோ ஒன்று இருந்தது.
அதற்கு மேல் அங்கே நிற்காமல் அவளை விட்டு விலகியவன் வெளியே சென்று விட்டான்.
கணவனின் ஆசையும், தவிப்பும் சக்திக்கு நன்றாகவே புரிந்தது. அவளுக்கும் அவனின் மீது அதே அளவு ஆசையும் இருந்தது.
ஆனாலும் தன் ஆசைகளை அடக்கிக் கொண்டு அடுத்த அடி எடுத்து வைக்க முடிவு செய்தாள் சக்தி.