பேருந்து பின் எந்தச் சஞ்சலமும் இல்லாமல், சீராகச் சென்று கொண்டிருந்தது.

அதன் பிறகு ஸ்ரீவதனாவிற்கு உறக்கமே வரவில்லை. நடந்த அந்தச் சின்ன விபத்து அவளுக்குள் பதட்டத்தைத் தோற்றுவித்திருந்தது. தூங்கினால் எங்கே மீண்டும் முட்டிக் கொள்வோமோ? என்ற பயம் அவளுக்குள் இருந்தது.

நெற்றி காயமும் முணுக் முணுக்கென்று வலியைக் கொடுத்துக் கொண்டிருந்தது.

நெற்றியை லேசாகப் பிடித்துக் கொண்டு ஜன்னல் வழியாக வெளியே பார்த்துக் கொண்டு வந்தாள்.

பேருந்தில் அவளைப் போலச் சிலர் தவிர, மற்றவர்கள் மீண்டும் தூங்க ஆரம்பித்திருந்தனர்.

முழித்திருந்தவர்கள் முணுமுணுவென்று பேசிக் கொள்ளும் சத்தம் கேட்டது. அவளுக்கும் தன் பதட்டத்தைத் தணிக்க யாரிடமாவது பேசிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது.

அருகில் இருப்பவன் என்ன செய்கிறான் என்று திரும்பிப் பார்த்தாள். அவன் உறங்கிவிட்டிருந்தான் போலும். பேருந்தில் எரிந்து கொண்டிருந்த இரவு விளக்கின் ஒளியில், அவன் முகம் எந்தச் சலனமும் இல்லாமல் அமைதியாக இருந்தது.

அவளையும் மீறி, அவன் முகத்தில் அவள் பார்வை படிந்தது. சில நொடிகள் தொடர்ந்து பார்த்தவளுக்குத் தான் தவறு செய்து கொண்டிருப்பதாகத் தோன்ற, வேகமாகப் பார்வையைத் திருப்பிக் கொண்டாள்.

நேரம் கடந்தது. மூன்று மணியளவில் ஓய்விற்காகப் பேருந்து நிறுத்தப்பட்டது. பத்து நிமிடங்கள் நிற்கும் என்று நடத்துநர் அறிவித்துவிட்டு கீழே இறங்கிச் சென்றார்.

தூக்கத்தில் இருந்தவர்கள் விழித்தெழுந்து இறங்கிச் சென்றனர்.

ஶ்ரீவதனா அருகே அமர்ந்திருந்தவனும் எழுந்து செல்ல, அவளும் பின்னாலேயே இறங்கினாள்.

முதலில் இயற்கை உபாதைக்குச் சென்று வந்தவள், காஃபி கடைக்குச் சென்றாள்.

அப்போது இன்னொரு பேருந்தும் வந்து நின்றிருக்கக் காஃபி கடை கூட்டமாக இருந்தது. அதனால் கூட்டத்திற்குள் செல்ல முடியாமல் பின் தங்கி நின்றாள்.

“மே ஐ ஹெல்ப் யூ?” அவள் முதுகிற்குப் பின்னால் இருந்து குரல் கேட்க, அந்தக் குரலுக்குச் சொந்தக்காரன் யாரென்று திரும்பிப் பார்க்காமலே அறிந்து கொண்டாள்.

உதட்டில் ஒட்ட வைத்த சிறு புன்னகையுடன் அவன் புறம் திரும்பினாள்.

“காஃபி குடிக்கலாம்னு பார்த்தேன். கூட்டமா இருக்கு…” என்றாள் கண்களைச் சுருக்கி தயக்க குரலில்.

“நான் வாங்கிட்டு வர்றேன்…” என்றவன் கூட்டத்திற்குள் புகுந்து சென்று சில நொடிகளில் காஃபியுடன் வந்து அவளிடம் நீட்டினான்.

காஃபி சூடாக இருக்க, கையில் வாங்க தடுமாறினாள்.

“காஃபி தும்பப் பிசியாகிதே. ஜாக்ரதே…” என்றவன், “காஃபி ரொம்பச் சூடா இருக்கு. கவனம்னு சொன்னேன். ஸாரி, என்னையே அறியாம என் தாய் மொழி வந்திடுது…” என்றான் புன்னகையுடன்.

“தேங்க்ஸ் டாக்டர்!” என்று சொல்லி வாங்கிக் கொண்டாள்.

அவனும் தனக்கு வாங்கிய காஃபியைப் பருகினான். இருவரும் எதிரெதிரே நின்றிருந்தும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்ளவில்லை.

இருவருமே பார்வை பரிமாற்றத்தை கவனமாகத் தவிர்த்தது போல் இருந்தது.

அவள் காஃபியைக் குடித்து முடித்ததும் காலி கப்பை குப்பை தொட்டியில் போட்டுவிட்டு வந்து, காஃபிக்குரிய காசை அவனிடம் நீட்டினாள். எந்த மறுப்பும் இல்லாமல் வாங்கிக் கொண்டவன் பார்வை அவளின் நெற்றி காயத்தின் மீது படிந்தது.

“இன்னும் பெயின் இருக்கா?” என்று கேட்டான்.

தன் நெற்றி காயத்தைத் தொட்டுப் பார்த்துக் கொண்டவள், “ஆமாம், லேசா இருக்கு…” என்றாள்.

“ஜன்னல் கம்பியில் நீங்க முட்டிய இடம் கூராக இருந்திருக்கு. அதான் காரணம். எங்கிட்ட இப்போ பெயின்கில்லர் இல்லை. அதனால் தான் கட்டு மட்டும் போட்டு விட்டேன்…” என்றான்.

“இதுவே பெரிய உதவி தான் டாக்டர். ஆனால், எனக்கு ஒரு விஷயத்தில் ரொம்ப ஆச்சரியம்…” என்றாள்.

“ஏனு?” (என்ன?) நெற்றியை உயர்த்திக் கேட்டான்.

“நீங்க கன்னடம் மட்டும் தான் பேசுவீங்கன்னு நினைச்சேன். ஆனால், இவ்வளவு அழகா தமிழ் பேசுறீங்க…” என்றாள் வியப்பாக.

“நானு தமிழு மாதாடுத்தேனே…” என்று சொல்லி சிரித்தவன் அவள் புரியாமல் முழிப்பதை பார்த்து, புன்சிரிப்புடன், “நான் தமிழ் பேசுவேன்…” என்றான்.

தமிழ் பேசினாலும் அவனிடம் அவ்வப்போது கன்னடம் எட்டிப்பார்க்கவே செய்தது.

“அதான் எப்படி? உங்க அப்பா இல்லைனா உங்க அம்மா யாராவது தமிழா?” என்று கேட்டாள்.

“நோ! நாங்க கன்னட பேமிலி தான்…” என்றான்.

“ஹோ! அப்புறம் எப்படி?” என்று அவள் கேட்டுக் கொண்டிருக்கும் போதே, அவர்கள் செல்லும் பேருந்து கிளம்பத் தயாரானது.

“பன்னி ஹோகனா…”(வாங்க போகலாம்) என்று அவளை அழைத்துக் கொண்டு பேருந்தில் ஏறினான்.

இருவரும் பேருந்தில் ஏறி அமர்ந்த பிறகு பேச்சை தொடர்ந்தனர்.

“சின்ன வயதில் எங்க பக்கத்து வீட்டில் ஒரு தமிழ் பேமிலி இருந்தாங்க. அந்த வீட்டு பையன் என் ஃபிரண்ட். அவன் மூலமா நான் தமிழ் கத்துக்கிட்டேன். அவன் என்கிட்ட கன்னடம் கத்துக்கிட்டான். அப்படிப் பழகியது தான்…” என்றான்.

“இன்ரெஸ்டிங்!” என்றாள்.

அவளைப் பார்த்துப் புன்னகைத்தான்.

அவன் புன்னகை அவ்வளவு கவர்ச்சியாக இருந்தது. ஏற்கெனவே அவனில் ஈர்க்கப்பட்டவள், இப்போது இன்னும் அவன் முகத்தை விட்டு பார்வையை அகற்ற முடியாமல் பார்த்தாள்.

எவ்வளவு நேரமோ தெரியாது… “ஏனு?” (என்ன?) என்று அவள் முன்னால் கையை அசைத்துக் கேட்டான்.

‘ஹய்யோ! இப்படியா பார்த்து வைப்பேன்? எத்தனை முறை தான் இவன்கிட்ட பல்ப் வாங்குவது?’ என்று அவளுக்கு வெட்கிப் போனது.

*****

“அப்புறம் என் வொய்ப் பத்தி கேட்டீங்க போல?” என்று புருவத்தை உயர்த்தி மென் சிரிப்புடன் கேட்டான்.

உள்ளுக்குள் ஏற்பட்ட திடுக்கிடலுடன் அவனைப் பார்த்தாள். அவளின் உள்மனம் திக் திக்கென்று அதிர்ந்து முரசு கொட்டியது.

நிதானமாக அவளைப் பார்த்தவன், “வொய்ப் இருந்தால் நான் ஏன் இப்படித் தனியாகச் சுத்த போறேன்?” என்று கேட்டான்.

அவளுக்குள் அழுத்திக் கொண்டிருந்த பாரம் சட்டென்று அவளை விட்டு விலகியது போல் இருந்தது. வார்த்தைகளில் வடிக்க முடியா ஆசுவாசம் அவளிடம். அவளை அறியாமல் அவளின் கண்கள் ஒளிர்ந்தன.

மீண்டும் அவள் கண்களில் ஒளியைக் கண்டவனுக்கு அகம் மலர்ந்து போனது.

“நீங்க எங்கே வேலை பார்க்கிறீங்க?” என்று கேட்டான்.

“அது… அது எதுக்கு உங்களுக்கு?” என்று கேட்டாள்.

“ஏங்க? இன்னுமா என்னைப் பார்த்தால் உங்களுக்கு யாரோவாகத் தெரியுது? இவ்வளவு யோசிக்கிறீங்க? நீங்க உங்களைப் பற்றிச் சொல்ல யோசிக்கலாம். ஆனால், நான் எல்லாம் யோசிக்க மாட்டேன்…” என்றவன், “நான் *** ஹாஸ்பிட்டலில் பீடியாட்ரிக் டாக்டரா ஒர்க் பண்றேன். வீடு மடிவாலாவில் இருக்கு. சொந்தம்னு பார்த்தால் இப்போதைக்கு எனக்கு நானே தான் சொந்தம். எனக்குன்னு ஒருத்தி வந்தால் அவள் தான் எனக்கு எல்லாம்…” என்றான்.

“இப்ப எதுக்கு இதை எல்லாம் என்கிட்ட சொல்லிட்டு இருக்கீங்க?” என்று கேட்டாள் ஸ்ரீவதனா.

“என்னங்க இது, நாம இவ்வளவு தெரிந்தவங்களா போயிட்டோம். ஒருத்தரை ஒருத்தர் அறிமுகப்படுத்திக் கொள்வது தானே முறை. இப்பவாவது உங்களைப் பற்றி நீங்க சொல்லலாமே?” என்று கேட்டான்.

“ஆண் நீங்க ஈஸியா உங்களைப் பற்றிச் சொல்லலாம். என் ஃப்ரண்டும் அப்படிச் சொல்ல முடியுமா என்ன?” என்று கேட்டபடி அங்கே வந்தாள் ஜனனி. அவள் கையில் சுட்ட மக்காச்சோளம் இரண்டு இருந்தது.

அதில் ஸ்ரீவதனா கையில் ஒன்றை கொடுத்தவள், இன்னொன்றை தான் உண்ண ஆரம்பித்தாள்.

எதிரே அவனைப் பார்க்க வைத்துவிட்டு சாப்பிட முடியாமல் வெறுமனே கையில் வைத்திருந்தவள், பின் ஏதோ நினைத்துக் கொண்டது போல் பாதியை உடைத்து அவனிடம் நீட்டினாள் ஸ்ரீவதனா.

மறுக்காமல் வாங்கிக் கொண்டவன், “தேங்க்ஸ்…” என்றான்.

அவளைப் பார்த்துக் கொண்டே சோளத்தைக் கடித்தவன், “விவரம் தெரிந்தால் தான் ஃப்ரண்டா இருக்கலாம்னு எந்தக் கண்டிஷனும் எனக்கு இல்லை தான்…” என்றான் ஜனனியைப் பார்த்து.

“ஃப்ரண்ட்டா இருக்கத்தான் விவரம் கேட்டீங்களா என்ன?” சந்தேகத்துடன் கேட்டாள் ஜனனி.

“வேற எதுக்காக இருக்கும்னு நீங்க நினைக்கிறீங்க?” என்று அவளிடமே திருப்பிக் கேட்டான்.

ஜனனி அதற்கு உடனே பதில் சொல்லவில்லை. நமட்டு சிரிப்புடன் அவளைப் பார்த்தான் மாதவ் கிருஷ்ணா.

ஸ்ரீவதனா இந்தப் பேச்சிற்கும், எனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பது போல் நின்றிருந்தாள்.

“டீடைல்ஸ் ஷேர் பண்ண மனசு இல்லைனாலும், சோளம் ஷேர் பண்ற பெரிய மனசு இருக்கு. ம்ம்ம்…” என்று ஸ்ரீவதனாவிடம் கேட்டவன், அவளைக் கீழ் பார்வையாகப் பார்த்துக் கொண்டே சோளத்தைக் கடித்தான்.

அவனின் அந்தப் பார்வையை அவளால் எதிர்கொள்ள முடியவில்லை.

அவன் ஏதோ தனக்குக் குறிப்பு காட்டுவது போல் அவளுக்குத் தோன்றியது. ஆனால், என்ன என்று அவளால் புரிந்து கொள்ள முடியவில்லை.

இனியும் அங்கே நிற்க வேண்டாம் என்று நினைத்தவள், “நாங்க கிளம்புறோம் டாக்டர்…” என்று முனகியவள், “வா ஜனனி, போகலாம்…” என்று ஜனனியின் கையைப் பிடித்துக் கொண்டு அங்கிருந்து நகர்ந்தாள் ஸ்ரீவதனா.

சோளத்தைக் கடித்துக் கொண்டே, சென்று கொண்டிருந்தவளை கண்களில் மின்னிய சிரிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தான் மாதவ் கிருஷ்ணா.

அவனின் உதடுகள் மெல்ல முணுமுணுத்துக் கொண்டன.

“நன்ன சுந்தர வதனா…”

*******

வாயடைத்துப் போனாள் ஸ்ரீவதனா. தந்தை இப்படி ஒரு கோணத்தில் யோசிப்பார் என்று அவள் நினைக்கவே இல்லை.

“அப்போ அக்காவுக்குக் குழந்தை பிறந்திருந்ததுபா. அந்த நேரத்தில் டென்ஷன் வேண்டாம்னு தான் சொல்லலை. ஆனால், எப்ப இருந்தாலும் உங்ககிட்ட தான்பா முதலில் சொல்லியிருக்கேன்…” என்றாள் சமாதானமாக.

“காதலே தப்புன்னு சொல்லிட்டு இருக்கேன். அதை என்கிட்ட முதலில் சொன்னதில் பெருமை வேறயா உனக்கு?” என்று கோபம் துளிர்க்க கேட்டார்.

“அப்பா…” என்றவளால், அடுத்த வார்த்தை பேச முடியவில்லை.

“இந்தக் காதல் கல்யாணம் எல்லாம் நம்ம குடும்பத்துக்குச் சரி வராது. பேசாம அவனை மறந்துட்டு, நான் சொல்ற பையனை கல்யாணம் பண்ணிக்கிற வழியைப் பார்…” என்று சொல்லிவிட்டு எழுந்து சென்றுவிட்டார்.

அவர்கள் பேச்சை கேட்டபடி நின்று கொண்டிருந்த மஞ்சுளாவும் உள்ளே சென்றுவிட, கலங்கிய கண்களுடன் உறைந்து போய் அமர்ந்திருந்தாள் ஸ்ரீவதனா.

தன் மீது பாசமான தந்தை தன் விருப்பத்திற்குச் சம்மதிப்பார் என்று அவள் கட்டி வைத்திருந்த கனவு கோட்டை எல்லாம் அவளின் கண்முன், சலசலவென்று சரிந்து விழுந்தது.

அடுத்து என்ன செய்வது என்ற சிந்தனை கூட இல்லாமல் அவள் மனமும், மூளையும் மரத்துப் போயிருந்தது.

மரத்த மூளையைத் தட்டி எழுப்பியது அலைபேசியின் அழைப்பு.

அவளின் அறைக்குள் இருந்து தான் சத்தம் கேட்டது. எழுந்து சென்று பார்த்தாள். மாதவ் கிருஷ்ணா தான் அழைத்துக் கொண்டிருந்தான்.

அவனின் பெயரை தொடுதிரையில் பார்த்ததும், அதுவரை அடக்கி வைத்திருந்த கண்ணீர் பொங்கியது.

அவனிடம் இப்போது தன்னால் பேச முடியும் என்று தோன்றவில்லை. ஆனால், பேசாமல் இருந்தாலும் அவன் தவித்துப் போவான் என்று அறிந்தவள், கண்களைத் துடைத்துக் கொண்டு குரலை சாதாரணமாக வைத்துக் கொண்டு அழைப்பை ஏற்றாள்.

“ஹலோ மாதவ்…” என்ற போது அவளையும் மீறி குரல் கரகரத்து விட,

“டேய், சுந்தரப் பெண்ணே… ஏனம்மா? ஏனாயித்து?” பதறி போய்க் கேட்டான்.

வேகமாகத் தொண்டையைச் செருமி சரி செய்து கொண்டவள், “அது… ஒன்னுமில்லை மாதவ். தொண்டை கட்டுற மாதிரி இருக்கு…” என்று சமாளித்தாள்.

ஒரு நொடி அந்தப் பக்கமிருந்து பேச்சே வரவில்லை.

“நான் உன்னை உங்க வீட்டில் விட்டுட்டு வந்து த்ரீ ஹவர்ஸ் தான் ஆகுது…” என்றான் அழுத்தமாக.

அதிலேயே அவள் சொன்ன பொய்யை அவன் நம்பவில்லை என்று புரிந்து விட, உதட்டை கடித்துக் கொண்டாள். தன்னை அணு அணுவாகப் புரிந்து வைத்திருப்பனை நினைத்து துளிர்த்த நீரை, அழுத்தமாகத் துடைத்துக் கொண்டாள்.

“நீவு எல்லிதிரா? (நீ எங்க இருக்க?)” என்று கேட்டான்.

“என் ரூமில்…” என்று முனகினாள்.

அடுத்த நொடி அழைப்பை துண்டித்துவிட்டு வீடியோ காலில் அழைத்தான்.

தயக்கத்துடன் தான் அழைப்பை என்றாள்.

அப்படியும் தன் முகத்தை உடனே காட்ட முடியாமல் கேமிராவில் சீலிங்கை காட்டிக் கொண்டிருந்தாள்.

“இப்ப உன் முகத்தைக் காட்டலைனா… நேரில் வந்தே பார்ப்பேன்…” என்று அவன் குரல் கடினமாக ஒலிக்க, வேகமாகத் தன் முகம் காட்டினாள்.

அவளின் கலங்கி போன கண்களையும், முகத்தையும் பார்த்தவன், “என்ன சொன்னார் உன் அப்பா?” என்று கேட்டான்.

அவள் பதில் சொல்ல முடியாமல் இமைகளைச் சிமிட்டி உதட்டைக் கடிக்க, “அப்போ நான் நேரில் வந்தே நன்ன மாவாகிட்டயே (என் மாமனார்) பேசி தெரிந்து கொள்ளட்டுமா வதனா?” என்று கேட்டான்.

“மாதவ்…” என்று இயலாமையுடன் அழைத்தாள்.

“என்ன நடந்தது? நன்ன மாவா என்னை மறந்திட சொன்னாரா?” என்று கேட்டதும், ஒரு சொட்டுக் கண்ணீர் சட்டென்று அவளின் கன்னத்தில் வந்து விழுந்தது.

“சோ, அது தான் இல்லையா? என்னை மறந்திட சொன்னால் நீயும் மறந்திடுவியா?” என்று கேட்டான்.

“என்ன மாதவ், நீங்களும்…” என்றாள் உதடுகள் நடுங்க.

“எனக்குப் பதில்! என்னை மறந்திடுவியா?” என்று மீண்டும் அழுத்தமாகக் கேட்டான்.

“அப்போ என் மூச்சு நின்னிருக்கும் மாதவ்…” என்றாள் உணர்ச்சிப் பிழம்பாக.

“ஹோ! இந்தக் கதைகள், படத்தில் எல்லாம் வருவது போல், மூச்சு நின்ன பிறகும் என் ஆத்மா கூட உங்களை மறக்காதுன்னு வசனம் பேச மாட்டியா?” என்று உதட்டை வளைத்துக் கேலியாகக் கேட்டான்.

“மாதவ்…” என்ற அதட்டலுடன் விழிகளை விரித்து அவனை முறைத்தாள்.

“என்ன மாதவ்? இதே டைலாக்கை உன் அப்பாகிட்ட சொல்ல வேண்டியது தானே? அதை விட்டுக் கண்ணைக் கசக்கிட்டு இருக்க. கண்ணைத் துடை முதலில்!” என்று அதட்டினான்.

கண்களை அவள் வேகமாகத் துடைத்துக் கொள்ள, “குட்!” என்றான்.

“அது… அது அப்பா இப்படிச் சொல்லுவார்னு நான் எதிர்பார்க்கவே இல்லை மாதவ். அக்காவை விடக் கொஞ்சம் ஸ்பெஷலா தாங்குவார். ஆனால், இன்னைக்கு என்னைப் பாசமா கூடப் பார்க்கலை மாதவ். ஏதோ விரோதியைப் பார்க்கிற மாதிரி பார்த்தார். என்னால் அந்தப் பார்வையைத் தாங்கவே முடியலை மாதவ்…” என்றவள் குரல் மீண்டும் கரகரக்க ஆரம்பித்தது.

“ஷ்ஷ்! ரிலாக்ஸ்டா சுந்தரப் பெண்ணே! அப்பாக்கள் எல்லாம் அப்படித்தான். காதல்னு வந்திட்டால் வில்லனா மாறிடுவாங்க. அதுக்காக அழுதால் எல்லாம் சரியாகிடுமா? நீ தான் அவருக்கு உன் மனதை புரிய வைக்கணும்…” என்றான்.

“எப்படிப் புரிய வைக்கப் போறேன்னே தெரியலை மாதவ். அப்பாவை பார்த்து நான் என்னைக்குமே பயந்தது இல்லை. ஆனால் இப்ப பயமா இருக்கு…” என்றாள்.

“உங்க அப்பா இன்னைக்கு வீட்டில் இருப்பாரா, வெளியே போவாரா?” என்று கேட்டான்.

“வீட்டில் தான் இருப்பார்னு நினைக்கிறேன். ஏன் மாதவ்?” என்று கேட்டவளுக்குப் பதில் சொல்லாதவன், அன்று மாலை நேரில் வந்தே பதில் தந்தான்.

அவன் வரவை அவள் மட்டுமல்ல, சுரேஷும் எதிர்பார்க்கவில்லை. அவனின் திடீர் வருகை, இன்னும் அவரை உக்கிரம் கொள்ள வைக்கப் போகிறது என்பதை அறியாமல் வந்து நின்று, அவரை நேருக்கு நேர் சந்தித்தான் மாதவ் கிருஷ்ணா.