உயிரூற்றாய் வந்தாய்
உயிரூற்றாய் வந்தாய் — Preview
தன் உயிரானவளையே இழந்த உயிர் வேதனை மனம் முழுவதும் அண்டி கிடந்தாலும் தான்தான் அவளை எந்தக் குறையும் இல்லாமல் வழி அனுப்ப வேண்டும் என்பதால் தன் வேதனை, வலியை எல்லாம் தனக்குள்ளேயே முழுங்கி விட்டு நடமாடிக் கொண்டிருந்தான் விஷ்வமித்ரன்.
மகளைக் கூட அந்த நிமிடம் மறந்திருந்தான். அவன் நினைவில் நின்றது எல்லாம் மனைவி, மனைவி மட்டுமே!
அவனின் மனம் மௌனமாக விது… விது… என்று ஓலமிட்டதை அங்கிருந்த யாருமே அறியவில்லை.
விதுலா உடலை எடுக்கப் போகும் முன் தன் குழந்தையை வைத்திருந்த யதுநந்தினியிடம் வந்து மௌனமாக இறுகிய முகத்துடன் குழந்தையை வாங்கியவன், மனைவியின் உடல் அருகே கொண்டு வந்தான்.
அவன் செய்வதை அனைவரும் அமைதியாகப் பார்த்துக் கொண்டிருக்க, மனைவியின் உடல் அருகில் மகளுடன் மண்டியிட்டு அமர்ந்தவன், குழந்தையின் பிஞ்சு கையை எடுத்து விதுலாவின் கன்னத்தைத் தொடவைத்தவன், “உன் அம்மாடா ரூபிக்குட்டி… கடைசி முறையா தொட்டுக்கோ…” என்ற போது அவன் குரல் முற்றிலுமாக உடைந்து போக, அவனின் உடல் அழுகையில் குலுங்கியது.
அதுவரை இறுகிய மனதுடன் நின்றிருந்த அவனின் உறவினர்கள் கண்களில் கூடச் சட்டென்று கண்ணீர் துளிகள் பூத்தன.
“எப்பா, விஷ்வா…” என்று ஓடி வந்து கதறி மகனையும், பேத்தியையும் சேர்த்து வாரி அணைத்துக் கொண்டார் கவிதா.
“அம்மா…” என்று கதறலாக அழைத்தான் விஷ்வா.
மகனின் கதறலில் பெற்ற மனம் துடிக்க, மகனை அணைத்துக் கொண்டு கண்ணீர் விட்டார் கவிதா.
தாயின் அணைப்பில் தன் துக்கத்தை எல்லாம் கொட்டினான் மனைவியை இழந்த அந்த ஆண்மகன்.
*****
அவனிடம் ஏதோ கேட்டு விட்டு, சாலையின் புறம் கண்களைத் திருப்பிய நந்தினி சட்டென்று திடுக்கிட்டாள்.
“அத்தான் எதிரே ஒரு லாரி கண்ட்ரோல் இல்லாமல் வர்ற மாதிரி இருக்கு. கவனம்…” என்று அவள் சொல்லிக் கொண்டிருக்கும் போதே,
எதிரே வந்த ஒரு லாரி அவர்களின் காரை உரசுவது போல் வர, சுதாரித்து விஷ்வா வேகமாகக் காரை திருப்ப, அதை விட வேகமாக வந்த லாரி அவர்கள் கார் சென்ற பக்கமே வந்து, கடைசி நேரத்தில் லேசான உரசலுடன் சட்டென்று விலகி சென்றது.
“அத்தான்…” என்று பயந்து கத்தினாள் யதுநந்தினி.
காரை நன்றாக ஓரம் கட்டி நிறுத்திய விஷ்வாவிடமும், பதற்றம் தொற்றிக் கொண்டது.
பயத்தில் கண்களை மூடி நடுங்கிக் கொண்டிருந்த நந்தினியைக் கண்டவன், “நந்தினி, ஒன்னும் ஆகலை, ரிலாக்ஸ்!” என்றான்.
“அத்தான், லாரி… லாரி… ரொம்பப் பக்கத்தில…” என்று அவள் உதடுகள் நடுங்க உளற,
“குடிச்சிட்டு ஓட்டினான் போல… ராஸ்கல்! நமக்கு ஒன்னும் ஆகலை. நீ ரிலாக்ஸா இரு. நான் காரை பார்த்துட்டு வர்றேன்…” என்று இறங்கிச் செல்ல,
“இல்லை அத்தான், போகாதீங்க… வேண்டாம்…” என்று அவனைப் பதறி தடுத்தாள்.
“ஒன்னுமில்லைமா. இதோ வந்துடுறேன்…” என்று சென்று காரை பார்த்தான்.
லாரி உரசி சென்றதில் காரில் கோடுகள் விழுந்திருந்தன.
பற்களைக் கடித்து, லாரிக்காரனை திட்டிக் கொண்டே காரில் ஏறி காரை எடுத்தான்.
யதுநந்தினி அப்போதும் பயம் நீங்காமல் கண்களை உருட்டி நடுங்கிக் கொண்டிருக்க, காரில் இருந்த தண்ணீர் பாட்டிலை எடுத்துக் கொடுத்து அவளைக் குடிக்கச் சொன்னான்.
அவளும் வாங்கிக் குடிக்க, பயத்தில் தண்ணீர் சிதறி கழுத்தில் எல்லாம் வடிந்தது.
“பயப்படாதே நந்தினி. ஒன்னும் ஆகலை. நாம பத்திரமா இருக்கோம். இன்னும் கொஞ்ச நேரத்தில் வீட்டுக்கு போயிடலாம்…” என்று அவளுக்குச் சமாதானம் சொல்லிக் கொண்டே காரை எடுத்தான்.
அவன் என்ன சொன்னாலும், அவளின் பயம் நீங்கவில்லை. கண்கள் பயத்தில் உறைந்திருந்தன.
*****
இப்போது அவனை விரும்பி, அவன்தான் வேண்டும் என்று ஒருத்தி நிற்கும் போது அவளைக் கைவிட்டு விடவும் அவருக்கு விருப்பமிருக்கவில்லை.
“ஏன் கற்பகம், என் மகன் ஒருத்தியோட வாழ்ந்தவன்தான். ஆனால், அவன் இப்ப வாழ்க்கையை இழந்துட்டு நிற்கிறான். அவன் காலம் முழுவதும் தனியாக இருந்தால் உனக்குச் சந்தோஷமா? உன் பொண்ணை என் பையனுக்குக் கட்டி வைக்க மாட்டியா?” என்று நேரடியாக நாத்தனாரிடம் பெண் கேட்கவே செய்துவிட்டார்.
“அம்மா, நீங்க என்ன செய்றீங்க?” என்று விஷ்வா அதட்ட, நந்தினி முகத்தில் தோன்றிய புன்முறுவலுடன் பார்த்துக் கொண்டிருந்தாள்.
“அப்படி இல்லை அண்ணி. விஷ்வா இவ்வளவு பிடிவாதமாக இருக்கானே?” என்று தடுமாறியபடி சொன்ன கற்பகம், “அது மட்டுமில்லாமல், என் பொண்ணு விஷயத்தில் என் வீட்டுக்காரர் சம்மதமும் வேணும்…” என்று கணவரை பார்த்தார்.
“ஏன் அண்ணா? நீங்க விஷ்வாவுக்குப் பொண்ணு கொடுக்க மாட்டீங்களா? அவனைப் பற்றி உங்களுக்கு எல்லாம் தெரியும். குணத்தில் அவனை ஒரு குறையும் சொல்ல முடியாது…” என்று கவிதா, சோமசுந்தரத்திடம் சொல்ல,
“விஷ்வா பற்றி நீ சொல்லித்தான் எனக்குத் தெரியணுமா தங்கச்சி? விஷ்வாவை என் பொண்ணு விரும்புவாள் என்றே நான் நினைத்ததில்லை. இன்னைக்குத்தான் திடீர்னு இப்படிச் சொல்றாள். இப்பத்தானே விஷயத்தைச் சொல்லியிருக்காள். இன்னும் கொஞ்ச நாள் போகட்டும். யோசித்து முடிவு செய்வோம். அதுக்குள்ள விஷ்வா மனத்திலும் மாற்றம் வரட்டும்…” என்றார் சோமசுந்தரம்.
பெரியவர்களின் பேச்சு இப்படித் திரும்பும் என்று எதிர்பார்க்காத விஷ்வா, அதிர்ச்சியும், எரிச்சலுமாக அவர்களைப் பார்த்தான்.
“என்ன பேசிட்டு இருக்கீங்க நீங்க எல்லாம்? என்னைப் பற்றி என்ன நினைச்சிட்டு இருக்கீங்க? நினைத்தபோது எல்லாம் மனத்தை மாற்றிக்கொள்கிற ஆள் என்றா? அப்படி ஒரு எண்ணம் உங்க மனத்தில் இருந்தால் அதை அழித்துவிடுங்க. என் மனம் என்னைக்கும் மாறாது. இவள்தான் அறிவில்லாமல் பேசிட்டு இருக்கிறாள் என்றால் நீங்களுமா?” என்று கேட்டவன் நந்தினியை கடுமையாக முறைத்தான்.
யதுநந்தினியின் முகம் மெல்ல மாறியது.
“அப்போ நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்களா அத்தான்?” என்று உணர்ச்சிகள் இல்லாமல் கேட்டாள்.
“இல்லை… இல்லை… அது என்னைக்கும் நடக்காது…” என்றான் உறுதியுடன்.
“அப்போ நிஜமாகவே என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்களா அத்தான்? நிஜமாவாக? நிஜமாவாக?” என்று வெறி வந்தவள் போல் திடீரெனக் கத்தினாள்.
“நீ எத்தனை தடவை கேட்டாலும், இல்லை… இல்லைதான்…” என்று அவன் நெஞ்சை நிமிர்த்திக் கொண்டு சொல்ல,
“பண்ணிக்க மாட்டீங்களா? பண்ணிக்க மாட்டீங்களா?” என்று கேட்டவளின் கண்கள் பரபரவென்று எதையோ தேடி அலைந்தன.
அவள் வெறி வந்தவள் போல் பேசுவதை மற்றவர்கள் புரியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, தேடியவளின் கண்களுக்கு அங்கிருந்த பழம் வெட்டும் கத்தி அகப்பட, அதை விரைந்து எடுத்தவள், “நீங்க என்னைக் கல்யாணம் பண்ணிக்கலைனா இந்த நிமிஷமே செத்துடுவேன் அத்தான்…” என்று சொல்லி முடிக்கும் முன்பே, செயல்படுத்துபவள் போல், சட்டென்று கையை வெட்டிக் கொண்டாள் யதுநந்தினி.
“ஏய், என்ன பண்ற?” என்று விஷ்வா தடுக்க முயலும்முன், யதுநந்தினி நடத்திக்காட்டி விட,
“யது…” என்று பெரியவர்கள் அதிர்ந்து கத்தினர்.
மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
முதல் மனைவியின் மர்மமான இறப்பின் வலியிலிருந்து நாயகன் முழுதாக மீளும் முன், அவனைக் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்ளும் நாயகி.
முதல் மனைவி எப்படி இறந்தாள் என்பதை நாயகன் தெரிந்து கொண்டானா? நாயகி ஏன் அவனைக் கட்டாயக் கல்யாணம் செய்துகொள்கிறாள் என்பதைக் கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தளத்தில் ரேட்டிங் & ரிவ்யூ மூலம் தெரிவிக்கவும்.
இந்தப் பக்கத்தில் உள்ள கதை / புத்தகம் ©Ezhilanbu அவர்களின் முழு காப்புரிமைக்கு உட்பட்டது.
❌ அனுமதி இல்லாமல் நகலெடுக்க, Screenshot எடுக்க, PDF / Audio / Video வடிவில் பகிர கடுமையாகத் தடை செய்யப்படுகிறது.
⚖️ மீறல் கண்டறியப்பட்டால், Copyright Act படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Related products
-
மனதோடு உறவாட வந்தவளே
Rated 5.00 out of 5 -
ஞாபகம் முழுவதும் நீயே
Rated 5.00 out of 5 -
என்னிதய தாள லயமாய் நீ
Rated 5.00 out of 5


Reviews
There are no reviews yet.