உனதன்பில் உயிர்த்தேன்
உனதன்பில் உயிர்த்தேன் — Preview
“என்ன ராசு, என்னாத்துக்கு நீரு இப்படித் தலைதெறிக்க ஓடி வர்ரீரு?” என்று யோசனையுடன் கேட்டாள்.
‘வவ்… வவ்…’ என்று அவளைப் பார்த்துக் குரைத்த ராசு, அருகில் வந்து அவளின் சேலையைப் பிடித்து இழுத்தது.
“என்னய்யா ராசு. எதுக்கு என்னைய கூப்பிடுறீரு?” என்று கேட்டாள்.
ராசுவோ தொடர்ந்து அவளின் சேலையைப் பிடித்து இழுக்க, “சரிதேன், விடும். என்னத்தையோ கண்டுபோட்டீராக்கும்? முன்ன போரும். நா வாறேன்…” என்றதும் அவளின் சேலையை விட்டுவிட்டு வயலுக்குள் இறங்கி ஓடியது.
“அப்படி என்னத்தைக் கண்டானோ?” என்று புலம்பிக் கொண்டே துவைக்கும் கல்லில் பாத்திரத்தை வைத்து விட்டு, வீட்டு ஜன்னலில் வைத்திருந்த டார்ச் லைட்டை எடுத்துக் கொண்டு அதன் வெளிச்சத்தில் வயலுக்குள் இறங்கி நடந்தாள்.
அவள் வருகிறாளா என்று பின்னால் திரும்பிப் பார்த்துக் கொண்டே ஓடியது ராசு.
அது சென்ற பாதையில் சென்றவள், ராசு ஓர் இடத்தில் நின்று குரைக்கவும், “அங்கின என்ன?” என்றவள் டார்ச் லைட்டை அந்தப் பக்கம் திருப்பிப் பார்த்தாள்.
அந்த வரப்பில் ஓர் உருவம் குப்புற விழுந்து கிடப்பதை லைட் வெளிச்சத்தில் கண்டவள் “எவன் அவன், இங்கன வந்து கிடக்கான்?” என்று கேட்டுக் கொண்டே அருகில் சென்றாள்.
வாட்டசாட்டமாக இருந்த அந்த ஆணின் உருவத்தைச் சுற்றிலும் லைட்டை அடித்துப் பார்த்தாள். முகம் அந்தப் பக்கமாகத் திரும்பியிருக்க, அவளால் அவனின் முகத்தைப் பார்க்க முடியவில்லை.
உடலை சுற்றிலும் பார்த்தாள். வேஷ்டி, சட்டை அணிந்திருந்தான். அவனின் வேஷ்டியும் விலகிக் கோணல்மாணலாகக் கிடந்தது.
“கருமம் புடுச்சவன், எவன்டா நீ?” என்று கேட்டுக் கொண்டே சுற்றி வந்து அவனின் முகத்தில் லைட்டை அடித்துப் பார்த்தாள்.
அவனின் பாதி முகம் மண்ணில் அழுந்தி கிடக்க, பாதி முகத்தை மட்டுமே அவளால் பார்க்க முடிந்தது.
பார்த்ததுமே, ‘இவனாக்கும்?’ என்று நினைத்துக் கொண்டாள்.
“ஏ யாரது? தூங்கும் போது லைட்டை அடிக்கிறது? போ, அங்கிட்டு…” என்று தன் முகத்தில் லைட் வெளிச்சம் பட்டதும் கண்களைச் சுருக்கிக் கொண்டு குழறலாகச் சொன்னான் அந்த ஆடவன்.
“சரிதேன். குடிகாரப்பயலே. நீரு தூங்க ஏ வயலு வரப்பு தேன் உமக்குக் கிடைச்சதோ? எழுந்திருச்சு வூடு போயி சேரும்…” இன்னும் லைட்டை அவன் முகத்தில் நன்றாக அடித்துச் சத்தம் போட்டாள்.
“ஹாக், வரப்பா? அதுதேன் நம்ம கயித்துக் கட்டிலுல எவன்டா மண்ணு அள்ளி போட்டான்னு நெனச்சுப்புட்டேன் போல…” அந்தப் போதையிலும் குழறிக் கொண்டே கேட்டான்.
“ஆமாய்யா, இது உம்ம வீட்டுக் கயித்துக் கட்டுலுன்னு நெனச்சீராக்கும்? இன்னும் செத்த நேரம் இங்கின கிடந்தா பாம்பு கடிச்சுத்தேன் சாவ போறீரு…” என்றாள்.
“பாம்பா? ஏ பாம்பு… எங்கன இருக்க? வா, என்னைய கடியும்…” என்று பாம்பை அழைத்துக் கொண்டே புரண்டு படுத்தான். அவன் புரண்டதும், வேஷ்டி இன்னும் விலகியது. தலையும் வரப்பை விட்டுக் கீழே இறங்கியது.
வரப்பில் பாதியும், வயலில் மீதியுமாகக் கிடந்தான். அது கூட அவனின் உணர்வில் இல்லை. தன் உணர்வே இல்லாமல் குடித்திருக்கின்றான் என்று நினைத்த தேன்மலர் அவனை முகத்தைச் சுளித்துப் பார்த்தாள்.
“சரிதேன், பாம்பு கடிச்சு சாவணும்னா உம்ம வயலில் போயி விழுந்து கிடக்க வேண்டியது தானே? இங்கன ஏன் வந்தீரு?” என்ற தேன்மலரின் பேச்சைக் கேட்டதும் புரண்டு கொண்டிருந்தவன் மெல்ல எழுந்து கொள்ள முயற்சி செய்தான்.
“இது ஏ வயலு இல்லையா? நா ஏ வயலுன்னுல நினைச்சுப்புட்டேன்…” என்றான்.
“நெனப்பீரு, நெனப்பீரு… ஏ ஆத்தால கட்டின பாவத்துக்கு ஏ அய்யன் வுட்டுப்போட்டுப் போனது இந்த வயலு ஒன்னுதேன். அதையும் சொந்தம் கொண்டாட வந்துட்டீரு. இப்ப எழுந்திருச்சு போறீரா? தண்ணியைக் கொண்டு வந்து உம்ம மூஞ்சில ஊத்தட்டுமா?” கடுப்பாகக் கேட்டாள்.
“எவ அவ? இந்தக் கத்து கத்துறா? போடி, உம்ம வயல நீயே வச்சுக்கோ. நா ஏ வயலுக்குப் போறேன்…” என்றவன் மெல்ல எழுந்து நிற்க முயற்சி செய்தான்.
அவன் நிற்க முயற்சி செய்ய, அவனின் வேஷ்டியோ அவன் இடுப்பில் நிற்காமல் நழுவி விழுந்தது.
சட்டையும், பட்டாப்பட்டி டவுசருமாக நிற்க முயன்றவனைப் பார்த்துத் தலையில் அடித்துக் கொண்டு திரும்பி நின்றாள்.
“யோவ், குடிகாரப்பயலே, உம்ம வேட்டியை எடுத்து கட்டும். அரையும் குறையுமா நின்னுக்கிட்டு, பாக்க சகிக்கலை…” என்று எரிச்சலுடன் கத்தினாள்.
“வேட்டியா? நா வேட்டி கட்டிக்கிட்டா வந்தேன்?” என்று கண்கள் சிவந்து சொருகியிருக்க, சட்டையெல்லாம் மண்ணாகி கசங்கியிருக்க, முகம், கை கால் எல்லாம் மண் ஒட்டியிருக்க, அவள் அடித்துக் கொண்டிருந்த லைட் வெளிச்சத்தில் காலின் அருகிலேயே கிடந்த வேஷ்டியை எங்கெங்கோ தேடிக் கொண்டிருந்தான்.
“சரிதேன், நீரு விட்டா அம்மணமா கூட வருவீரு. கட்டினவ கட்டைல போனா கள்ளச்சாராயமே கதின்னு கிடைக்கணும்னு எந்தக் களவாணிபய கத்துக் கொடுத்தானோ, கட்டைல போறவன்…” என்று நொடித்துக் கொண்டாள் தேன்மலர்.
“ஏய், நீ ஏ பொஞ்சாதியவா சொல்ற? உமக்குத் தெரியுமா? ஏ பொஞ்சாதி என்னைய வுட்டுப்போட்டுப் போயிட்டா. போயே போயிட்டா. ஆமா அவ ஏன் என்னைய வுட்டுப் போனா? உமக்குத் தெரியுமா? தெரிஞ்சா சொல்லு…” என்று தடுமாறி அவளின் அருகில் வந்து அவள் தோளில் கை வைத்துக் கேட்டான்.
“யோவ், இந்த மேல கை வைக்கிற சோலியை எல்லாம் வேற எவகிட்டயாவது வச்சுக்கோ. கைய எடுய்யா…” என்று அவனின் கையைத் தட்டி விட்டாள்.
“ஹா, நானும் ஏகபத்தினி விரதனாக்கும். எம்ம பொஞ்சாதியைத் தவிர எவளையும் தொட மாட்டேன். ச்சே, ச்சே… உம்மைப் போய்த் தொட்டுப்புட்டேனே…” என்று வேகமாகத் தன் கையைத் தன் சட்டையில் துடைத்துக் கொண்டான்.
“இந்தா, உம்ம பகுமானம் போதும்! போய்த் தொலையும். போவும் போது வேட்டியை எடுத்து கட்டிட்டு போரும்…” என்றவள், “ராசு, குடிகாரப்பய போயிருவான், நீரு வாரும், நாம போவலாம்…” என்ற தேன்மலர், அவனைக் கண்டு கொள்ளாமல் நடக்க ஆரம்பித்தாள்.
அவள் நடந்து கொண்டிருக்கும் போதே தொப்பென்று ஏதோ சப்தம் கேட்க, திரும்பிப் பார்த்தாள்.
அவன் தான் வரப்பில் இருந்து வயலில் விழுந்து கிடந்தான்.
“அட! கருமம் புடுச்சவனே! இன்னைக்கு நீரு வூடு போயி சேர்ந்த மாறித்தேன்…” என்று தலையில் அடித்துக் கொண்டவள் அவனை நோக்கி சென்றாள்.
“என்னைய விட்டுப் போயிட்டா. போயே போய்டா. ஏன்டி போன? என்னையவும் கூட்டிட்டுப் போ…” என்று புலம்பிக் கொண்டே சகதிக்குள் உருண்டு கிடந்தான்.
“யோவ், உம்ம பொஞ்சாதி கூடப் போயி தொலையணும்னா ஏதாவது மருந்தை குடிச்சுப் போட்டுச் சாவு. இல்லையா, இருக்கவே இருக்கு ஒரு முழ கயிறு. நாண்டுக்கிட்டு சாவானா… அதை வுட்டுப்போட்டு ஏ வயலில உருண்டு புரள வந்துட்டிரு…” என்று அவனைப் பார்த்துக் கத்தினாள்.
“ம்கூம், நா சாவ மாட்டேன். நா ஏன் சாவணும்? ஏ பொஞ்சாதி செத்துப் போனதை நினைச்சு, நா அழுவணும். கதறணும், அவ நினைப்புல ஏ மனசு இந்த நெஞ்சுலயே சுருக்கு சுருக்குன்னு குத்தணும். வலிக்கோணும். எமக்கு வலிக்கோணும். வலிச்சு… வலிச்சு, துடிதுடிச்சு அப்புறமேட்டுக்குத்தேன் நா சாவணும்…” என்று முகம் வேதனையில் சுருங்க, குழறலாகப் புலம்பித் தள்ளினான் அவன்.
மேலும் படிக்க ப்ரீமியம் பிளான் வாங்கவும்.
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
தோட்ட வீட்டில் அன்னையுடன் ஊரை விட்டு ஒதுங்கி வாழும் நாயகி!
மனைவியை இழந்து அவளின் நினைவில் குடிகாரனாய் மாறிய நாயகன்!
தினமும் குடித்துவிட்டு தன் தோட்டத்தில் வந்து விழுந்து கிடக்கும் நாயகனை வீட்டில் விட நாயகி உதவி செய்ய, அவள் செய்யும் உதவியே பல இக்கட்டுகளை உண்டாக்குக்கின்றன.
அதனால் எதிர்பாராமல் கணவன் மனைவியாகும் நாயகனும் நாயகியும் அந்தச் சூழ்நிலையை எப்படி எதிர்கொள்கிறார்கள்? அவளுக்கு வரும் இக்கட்டை நாயகன் எப்படி சரி செய்தான் என்பதை கிராமத்து மொழி நடையில் சொல்லும் கதையே உனதன்பில் உயிர்த்தேன்!
கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை ரேட்டிங், ரிவ்யூ மூலம் தளத்தில் தெரிவியுங்கள்.


Bawani Baskaran –
Good