ஓதும் காதல் கீதம்!
ஓதும் காதல் கீதம்! — Preview
‘தாடி வச்ச கேடி!’ அவனுக்கு அவள் சூட்டிய பெயர்.
அவர்களின் அந்தரங்க நேரங்களில் அந்தக் கேடியின் தாடியை இழுத்து ஒரு வழி செய்துவிடுவாள்.
சுகவேதனையில் அலறி அவதிப்பட்டுப் போவான் பரிதிவேந்தன்.
அப்படி ஒன்றி, உறவாடி, தன் குழந்தையையும் அவளின் வயிற்றில் சுமந்து கொண்டு, என்னைப் பார்க்க பிடிக்கவில்லையாம்.
யாரிடம் சொல்கிறாள் கதை? அக்கதையை நான் நம்ப வேண்டுமாக்கும்?
முடியாதடி பெண்ணே! என்னை உனக்கு எவ்வளவு பிடிக்கும் என்று எனக்குத் தெரியும். அதற்குச் சாட்சியும் நீயேதான்.
நான் மறுத்த போதும், நீதான் வேண்டும் என்று பிடிவாதமாக இருந்து என்னை மணம் முடித்துக் கொண்டவள் நீ!
என்னை வேண்டும் என்று பிடிவாதம் பிடித்தவள் இப்போது வேண்டாம் என்கிறாள்.
நீ வேண்டும் என்ற போது உன்னைக் கரம் பிடிப்பதும், வேண்டாம் என்றதும் உன் கரம் உதறி விடுவேன் என்று நினைத்தாயோ?
இப்போதுதான் இன்னும் இறுக்கமாக உன் கரம் பற்ற தோன்றுகிறதுடி பெண்ணே!
மனதோடு நினைத்துக் கொண்டவன், அதை நிகழ்த்தியும் காட்டினான்.
அதுவரை தங்களுக்கு இடையே இடைவெளிக்கு அனுமதி தந்திருந்தவன், இப்போது அந்த இடைவெளிக்கு விடுமுறை அளித்துவிட்டு, மணிவயிற்றை வருடிக் கொண்டிருந்த அவள் கையின் மீது தன் கையை வைத்து, அவளுடன் சேர்ந்து தானும் தன் மகவுவை உணர்ந்தான்.
ஐந்து மாத கரு! அவர்களின் அன்னியோன்யமான தாம்பத்தியத்திற்குச் சாட்சியான குழந்தை. அக்கரு உருவான போது அவள் அதை எப்படிக் கொண்டாடினாள், எப்படித் தன்னிடம் தெரியப்படுத்தினாள் என்பதெல்லாம் அவனின் மனக்கண்ணில் ஓடியது.
மனைவியுடன், மகவுவையும் உணர்ந்து கொண்டே அந்தப் பொக்கிஷ நினைவுகளுக்குள் பயணப்பட முற்பட்டான்.
ஆனால், அதனுள் அவனைச் செல்லவிடாமல் தடை விதித்தாள் அவனின் மனைவி.
தன்னுள் உயிர் கொண்டுள்ள பிள்ளையை உணர்ந்து கொண்டிருந்தவளுக்கு, கணவனின் ஸ்பரிசத்தை உணர சில நொடிகள் தேவைப்பட்டன.
பழகிப்போன கணவனின் ஸ்பரிசம் என்பதாலோ என்னவோ, கூசி சிலிர்த்து போய் எந்த உணர்வுகளுக்குள்ளும் சிக்கி கொள்ளவில்லை அவள்.
தற்போது அவளுள் குடிகொண்டிருந்த கோபத்தில், அவனின் தொடுகை எரிச்சல் உணர்வைதான் தந்தது.
தன் பின்னால் அணைத்தாற்போல் நின்று, தன் கையையும், வயிற்றையும் தடவிக் கொண்டிருந்தவனின் கை மீது பட்டென்று ஒரு அடியைப் போட்டாள்.
மோனநிலையில் இருந்தவன் சட்டென்று தெளிந்து, “ஷ்ஷ், ஏன்டி?” என்று கையை உதறி கொண்டவன், மனைவியை இழுத்து அணைத்தான் இறுக்கமாக.
“ச்சு, விடுங்க… விடுங்கன்னு சொல்றேன்ல…” கணவனின் பிடியிலிருந்து முயன்று தன்னை விடுவித்துக் கொண்டாள்.
“இப்படிக் கட்டிப்பிடித்ததும் கரைந்து போயிடுவேன்னு நினைச்சீங்களோ? அது இனி என்கிட்ட நடக்காது. எட்டு மாதம் நான் வாழ்ந்த வாழ்க்கையை எல்லாம் பொய்யாக்கியவர் நீங்க. இனி உங்ககிட்ட நான் பேசுவதே வீண்…” என்றவள் மூலையில் முடங்கிக் கிடந்த பயணப்பெட்டியை நோக்கி செல்ல முயன்றாள்.
அவளைச் செல்லவிடாமல் தடுத்து, அவளின் கையைப் பற்றிக் கொண்டவன், “அப்படி என்ன நான் நாம வாழ்ந்த வாழ்க்கையைப் பொய்யாக்கினேன்னு சொல்லிட்டு போ அனலி. சும்மா, காரணமே இல்லாமல் கோவிச்சுட்டு அம்மா வீட்டுக்கு போறேன், டிவோர்ஸ் கொடுன்னு ஆர்ப்பாட்டம் பண்ணாதே!” என்றான் கண்டிப்புடன்.
“சொன்னால்? சொன்னால் மட்டும் உங்களுக்குப் புரிந்துவிடுமா என்ன? உங்களுக்குப் புரியவே செய்யாதுங்க. புரியாத ஒன்றை பேசுவதே வீண்தான். அந்த வீணான காரியத்தைச் செய்ய நான் தயாராக இல்லை…” என்றவள், தன் கரத்தை பிடித்திருந்த அவனின் கையில் நறுக்கென்று கிள்ளினாள்.
“ராட்சசி! ஏன்டி இப்படிக் கிள்ற? நைட் தான் எப்பவும் இப்படி அடிச்சி, கிள்ளி அராஜகம் பண்ணுவ. இப்ப பகலிலும் ஆரம்பிச்சிட்டியா?” என்றவன் கையைத் தேய்த்து விட்டுக் கொண்டாலும், கண்கள் என்னவோ மனைவியைக் குறும்புடன் வருடியது.
அவனின் சுட்டிக்காட்டல், அவளின் முகத்தை லேசாக மாற வைத்தது.
“சொல்லிக் காட்டுறீங்களா?” என்று கடுமையுடன் கேட்டாள்.
“ஏன் சொல்லிக் காட்டினால் என்ன தப்பு? ஒரு பொண்டாட்டியா நீ நடந்ததைப் புருஷன் நான்தானே சொல்ல முடியும்…” என்று நமுட்டுச் சிரிப்புடன் கேட்டான்.
“சகிக்கலை, உங்க பேச்சு. உங்ககிட்ட மனுஷி பேசுவாளா?” என்று கோபமாகச் சொன்னவள், இனி நிற்க மாட்டேன் என்பது போல் பெட்டியை எடுத்துக் கொண்டு வாசலை நோக்கி நடந்தாள்.
ஏதோ புரியாத கோபம், குறும்பாகப் பேசினால் மாறிவிடுவாள் என்ற அவனின் நினைப்பை பொய்யாக்கி, அவள் வீட்டை விட்டு வெளியே செல்ல போகவும், பரிதிக்குப் பதறிப் போனது.
“முட்டாள்! என்ன பண்ற?” என்று கதவை திறக்க விடாமல் வாசலை மறைத்துக் கொண்டு நின்றான்.
“வழியை விடுங்க…” பல்லை கடித்தாள் அவள்.
“விட முடியாது அனலி. உனக்கு என் மேல் ஏதோ கோபம்னு புரியுது. அது என்னவாக இருந்தாலும் என்கிட்ட பேசி சரி பண்ண பார்க்காமல், இப்படி நீ வீட்டை விட்டு போவது சரியில்லை. உள்ளே போ. பொறுமையாகப் பேசுவோம்…” என்றான் நிதானத்தை வரவைத்துக் கொண்டு.
“இனி உங்ககிட்ட பேச எனக்கு ஒன்னுமில்லை. இப்படி எனக்காக உருகுவது போல் ஆக்டிங் கொடுக்காம, போங்க அந்தப் பக்கம்…” என்றாள் அனலிக்கா.
“ஆக்டிங்கா?” என்று கோபத்துடன் முகம் மாறியவன், “என்னைப் பார்த்தால் ஆக்டிங் பண்றவன் மாதிரியா இருக்கு? கோபத்தில் வார்த்தையை விடாதே அனலி. அது நம்ம இரண்டு பேருக்குமே பாதிப்பைத்தான் கொடுக்கும்…” என்றான்.
“பாதிப்பு இனிமேல்தானா வரணும்?” என்று கேட்டவள், வெளியே செல்வதில்தான் குறியாக இருந்தாள்.
அவனோ அவளைச் செல்லவிடாமல் தடுப்பதில் தீவிரமாக இருந்தான்.
அவள் பேச்சு வேறு அவனுக்குப் புரியவே இல்லை. தமிழ் தெரிந்தவனுக்கு அவள் தமிழில் பேசியும் புரியத்தான் இல்லை.
எதுவாக இருந்தாலும் பேசி சரி செய்து கொள்ளலாம் என்று நினைத்தவனுக்கு, இப்போது அவளை வீட்டை விட்டுச் செல்லவிடாமல் தடுப்பதே முதன்மையாக தெரிந்தது.
“உன்னோட பாதிப்பு! பரிதவிப்பு! எல்லாவற்றைப் பற்றியும் பேசலாம். நிறையப் பேசலாம். பொறுமையாகப் பேசலாம். ஆனால், அதைப் பேசுவதற்கு நீ இங்கே இருக்கணும். அதனால், உள்ளே போ…” என்றான் பொறுமையாக.
“இந்தப் பிரைன்வாஷ் பண்ற வேலை எல்லாம் என்கிட்ட வேண்டாம். அதுக்கெல்லாம் நான் மசிய மாட்டேன். வழியை விட்டால் நான் போயிட்டே இருப்பேன்…” என்றாள்.
“வெளியே மழை வர்ற மாதிரி இருக்கு அனலி. எப்படிப் பயங்கரமா இடி விழுது பார்!” அப்போது படீரென்று விழுந்த இடியைச் சுட்டிக்காட்டி தடுக்க முயன்றான்.
“இந்த இடி என்னை என்ன செய்துவிடும்?” என்று அலட்சியமாகக் கேட்டவள், அவன் அசந்து நின்ற நேரம் விருட்டென்று வீட்டை விட்டு வெளியேறியிருந்தாள்.
“அனலி… அனலிக்கா…” பரிதி தவிப்புடன் அவளின் பின்னால் ஓட, அதற்குள் அப்போது தெருவில் வந்து கொண்டிருந்த ஆட்டோவை நிறுத்தி ஏறி சென்றே விட்டாள் அவனின் மனைவி.
மேலும் கதையைப் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
கணவனின் பிள்ளையைக் கருவில் சுமந்து கொண்டிருக்கும் நிலையில் அவனிடம் விவாகரத்து கேட்கும் மனைவி!
விவாகரத்து கொடுக்க மறுக்கும் கணவன்!
அதனால் அவர்களுக்குள் ஏற்படும் பூசல்கள்!
நாயகி ஏன் விவாகரத்து கேட்கிறாள்? கதையைப் படித்து தெரிந்துகொள்ளுங்கள்.
கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தளத்தில் ரிவ்யூ & ரேட்டிங் மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்!
இந்தப் பக்கத்தில் உள்ள கதை / புத்தகம் ©Ezhilanbu அவர்களின் முழு காப்புரிமைக்கு உட்பட்டது.
❌ அனுமதி இல்லாமல் நகலெடுக்க, Screenshot எடுக்க, PDF / Audio / Video வடிவில் பகிர கடுமையாகத் தடை செய்யப்படுகிறது.
⚖️ மீறல் கண்டறியப்பட்டால், Copyright Act படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Related products
-
என்னிதய தாள லயமாய் நீ
Rated 5.00 out of 5


Nithya shree –
Gud