நிகரில்லா நீ!
நிகரில்லா நீ! — Preview
அந்தக் கடையின் முன், ஒரு குட்டி யானை வண்டி நின்றிருக்க, அதிலிருந்து தையல் மிஷினை இறக்கி வைத்துக் கொண்டிருந்தனர்.
அவள் கடை வாசலில் நின்று பத்திரமாக இறக்கி வைக்கச் சொல்லியோ, என்னவோ சொல்லிக் கையை அசைத்துப் பேசி வேலை வாங்கிக் கொண்டிருந்தாள்.
‘தையல் கடையா?’ என்று நினைத்தபடி பார்த்து நின்றவன், மெல்ல நடந்து தந்தையின் கடைப் பக்கம் சென்றான்.
மகன் கடைப் பக்கம் வரவும் அதிசயமாகப் பார்த்தார் குமாரசாமி.
“இன்னைக்கு மழை பொத்துக்கிட்டு ஊத்தப் போகுது. கடைப் பக்கமே வராதவன் எல்லாம் வர்றான்…” என்று எகத்தாளமாக உரைத்தார் குமாரசாமி.
“ஊருக்குள்ள தண்ணிக்குப் பஞ்சமா இருக்காம். அதான் ஜனங்களுக்கு நல்லது செய்ய மழையை வரவைக்க வந்தேன்…” என்று பதிலுக்கு நக்கலாக உரைத்தவன் பார்வை என்னவோ எதிர்க்கடை பக்கம் தான் சென்றது.
இப்போது அவள் பேசுவது நன்றாகக் கேட்டது.
“பார்த்து பத்திரமா இறக்குங்க… மெஷின் டேமேஜ் ஆகிடாம…” என்று தையல் மிஷினை இறக்கி வைத்தவரிடம் உரைத்துக் கொண்டிருந்தாள்.
இரண்டு தையல் மிஷின்கள். ஒரு நீளமான மேஜை என்று ஆள்கள் இறக்கி வைத்தனர்.
“அதானே பார்த்தேன். எலி ஏன் அம்மணமா ஓடுதுன்னு இப்பத்தானே தெரியுது. டேய்… வயசுப் பிள்ளையைப் பார்க்கத்தான்… வாயைப் பிளந்துட்டுக் கடைப் பக்கம் வராதவன் வந்தியா?” என்று மகனிடம் அதட்டலாகக் கேட்டார் குமாரசாமி.
“பின்ன, இந்தக் கிழட்டு மூஞ்சியையா பார்க்க வந்தாங்க?” என்று அவரின் முகத்தில் இடிக்கப் போவது போல் கையை நீட்டினான்.
“அந்தக் கையை அப்படியே உடைக்கப் போறேன் பாரு…” என்று பல்லைக் கடித்தார்.
“முடிஞ்சா உடைங்க.” என்று அவரின் முகத்தின் முன் கையைச் சுற்றிச் சுழற்றி ஆட்டி ஆட்டிக் காட்டினான்.
“கையா இது? பாறாங்கல்லு…” என்று தலையில் அடித்துக் கொண்டார்.
“உங்களுக்கு இல்லையேன்னு பொறாமை…” என்றான் கிண்டலாக.
“எனக்கு இல்லை? சரிதான், இடத்தைக் காலி பண்ணுடா. கடை முன்னாடி நின்னு வியாபாரத்தைக் கெடுக்காதே…” என்றார்.
“ஆமா… சாமான் வாங்க இங்கப் பெரிய கூட்டம் நிக்கிதுல, வியாபாரம் கெடுறதுக்கு. ஆள் இல்லாத கடையில் ஈ ஓட்டுறது எல்லாம் ஒரு பொழப்பு…” என்று அவன் நக்கல் அடிக்க,
“இப்ப இங்க இருந்து போறியா… மேல தண்ணியை ஊத்தி விடவா?” என்று விரட்டினார்.
“யோவ் தகப்பா, இருய்யா… நம்ம கடைக்கு முன்ன ஒரு புதுக்கடை வந்திருக்கு. அது என்ன கடை, ஏது கடைன்னு பார்த்துட்டுப் போறேன்…” என்றான்.
“நம்ம கடையா? என் கடைடா இது. என் கடை முன்ன எந்தக் கடை வந்தா உனக்கு என்ன? அது ஒரு வயசுப் பிள்ளை வைக்கப் போற கடைன்னு தெரிஞ்சு தானே நாக்கைத் தொங்கப் போட்டு வந்து நிக்கிற. நீ பொண்ணுங்களை ரூட்டு விட என் கடை தான் கிடைச்சதா? இப்ப நீ இடத்தைக் காலி பண்ணலை…” என்று தந்தை குதிக்க, மகனோ அவரின் பேச்சை எங்கே காதில் வாங்கினான்?
அவனின் உடல் தான் அங்கே நின்றதே தவிர, மனதோ எதிர்க்கடையை நோக்கி அல்லவா ஓடியிருந்தது.
ஆள்கள், பொருள்களை இறக்கி முடித்திருக்க, அவர்களுக்குப் பணத்தை எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தாள்.
‘இவள் ஏன், எல்லாம் தனியாகச் செய்கிறாள்? அவளின் தந்தையோ… உடன்பிறந்தவனோ என்று யாரும் வரவில்லையே… ஒருவேளை இல்லையோ?’ என்று யோசித்துக் கொண்டிருந்தான்.
அவளின் கடையிலிருந்து ஆள்கள் சென்றிருக்க, புத்தம் புதிய தையல் இயந்திரங்கள் ஒவ்வொன்றின் முன்பும் நின்று, அதை ஆசையுடன் தடவிப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
அப்போது அவள் கண்களில் தெரிந்த ஜொலிப்பை அவனால் இங்கிருந்தே காண முடிந்தது.
“மலமாடு மாதிரி நிக்கிறான் பாரு… எருமை… எருமை…” என்று அவனின் தந்தை கத்திக் கொண்டிருக்க, காதைக் குடைந்து கொண்டான்.
“ஒருத்தன் அங்கிருந்து எவ்வளவு நேரமா கத்துறான்… ஏதாவது காதில் விழுதா? பொண்ணைப் பார்த்ததும் ஆஆன்னு வாயைப் பிளந்துட்டு நிக்கிறான். சுந்தரு, அப்ப இருந்து அங்கிருந்து கத்துறான். போய்த் தொலைடா…” என்று தந்தை எரிச்சலுடன் சொன்ன பிறகே ஆட்டோ நிறுத்தத்தின் பக்கம் பார்த்தான்.
அங்கிருந்து, “டேய் பாலா, வாடா… சவாரி வந்திருக்கு.” என்று கத்திக் கொண்டிருந்தான் சுந்தர்.
“இருடா வர்றேன்…” என்று பதிலுரைத்தவன் தந்தையின் பக்கம் திரும்பி, “யோவ் தகப்பா… அந்தப் பொண்ணு யாரு, பேரு என்னன்னு விசாரிச்சு வை…” என்றான்.
“நான் உனக்கு அப்பன்டா… மாமா வேலை பார்க்கச் சொல்ற…” என்று அவர் கடுப்பாகிக் கத்த,
“நீதானேயா எனக்குப் பொண்ணு பார்த்துக் கட்டி வைக்கப் போறன்னு சொன்ன… அப்ப மட்டும் மாமா வேலை பார்க்கிறது இல்லையோ…” என்று எகத்தாளமாகக் கேட்ட மகனைக் குமாரசாமி மானாவாரியாகத் திட்ட ஆரம்பிக்க, அவனோ எதையும் காதில் வாங்காமல் தன் பிழைப்பைப் பார்க்க ஓடினான்.
*******
ஒரு ஆண்மகன், தனியாக இருக்கும் அறைக்குள் செல்லத் தயங்கி, மெல்ல அவனின் அறைக்குள் நுழைந்தாள் கார்த்திகா.
உள்ளே அவன் படுத்திருந்த நிலையைப் பார்த்து அப்படியே அயர்ந்து நின்று விட்டாள்.
இப்பொழுதும் அவன் சட்டை போட்டிருக்கவில்லை. லுங்கி மட்டும் தான் கட்டியிருந்தான். தலையில் பேண்டேஜ் போட்டு அதைச் சுற்றிக் கட்டுப் போடப்பட்டிருந்தது. தையல் போட்ட இடத்தில், லேசாக ரத்தம் கசிந்த தடம் தெரிந்தது. அது மட்டுமில்லாமல், அவனின் உடலிலும் ஆங்காங்கே காயம் இருந்தது தான் அவளை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இரவில் மங்கலான வெளிச்சத்தில், அவனின் உடலில் ஏற்பட்ட காயத்தை அவள் கவனித்திருக்கவில்லை.
ஆனால், இப்பொழுது தோள்பட்டை, நெஞ்சு, வயிறு என்று ஆங்காங்கே ரத்தக் காயங்கள் இருக்க, அதில் மருந்து பூசப்பட்டு இருப்பதும் தெரிந்தது. அதைவிட ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவனின் இடது கையில், அவனின் கைப்பேசி இருந்தது. அதை இறுக்கமாகப் பிடித்திருந்தான்.
தான் ஆபத்து என்றால், எப்போது வேண்டுமானாலும் அழைக்கக் கூடும் என்ற முன்னெச்சரிக்கையில் தான், உறக்கத்தில் கூட அவன் அப்படிக் கைப்பேசியைக் கையில் வைத்திருக்கிறான் என்பது புரிய, கார்த்திகாவின் கண்ணிலிருந்து கடகடவென்று கண்ணீர் வெளியேறியது.
அவனின் இந்த அபரிமிதமான அன்பு அவளைக் கலங்க வைத்தது.
அவளையும் மீறி, அவளின் தொண்டைக்குள் இருந்து சிறு கேவல் எழுந்து விட, அந்தச் சத்தத்திற்கே பட்டென்று விழித்து விட்டான் பாலச்சந்திரன்.
விழித்த அவனின் விழிகளில் முதலில் அவள் விழ, பதறி எழுந்து அமர்ந்தவன், “என்ன? என்னாச்சு? இன்னும் பிரச்சினையா? அந்தக் கார்மேகம் திரும்ப வந்து பிரச்சினை பண்றானா? கையை உடைச்சு விட்டும் அடங்கலையா அவன்?” என்று படபடப்பாகக் கேட்டான்.
“இல்ல, அதெல்லாம் இல்லை பாலா. நான் உங்களைப் பார்த்துட்டுப் போகத் தான் வந்தேன்…” என்று கார்த்திகா வேகமாக அவனைச் சமாதானப்படுத்த, ஆசுவாசப் பெருமூச்சு விட்டவனுக்கு அப்பொழுதுதான், நெற்றிக் காயம் வலித்தது போலும். நெற்றியை லேசாகத் தடவி விட்டுக் கொண்டான்.
“ரொம்ப வலிக்குதா பாலா? ஸாரி… எல்லாம் என்னால்தான்…” என்று வருந்தினாள்.
“நீ என்ன செய்வ? விடு…” என்றவன் எழுந்து ஹேங்கரில் மாட்டியிருந்த சட்டையை எடுத்தான்.
“உடம்பெல்லாம் காயமா இருக்கே பாலா. சட்டை உரசி வலிக்கப் போகுது…” என்றாள் அக்கறையுடன்
“உனக்குச் சங்கடமா இருக்குமேன்னு பார்த்தேன்…” என்றவன் பார்வை அவளின் கண்களைச் சந்திக்க,
“அப்படியெல்லாம் எதுவும் இல்லை பாலா. நீங்க ஃப்ரீயா இருங்க. எனக்கு என்னால் உங்களுக்கு இப்படி ஆகிருச்சேன்னு தான் வருத்தமா இருக்கு.” என்றாள்.
அவன் சட்டையை எடுக்கத் திரும்பும் போது, முதுகிலும் அடிபட்டிருந்ததைக் கவனித்திருந்தாள்.
நான்கைந்து பேரை இவன் ஒருவனாகத் தானே சமாளித்தான். அவர்களை விட இவனுக்கு அடி அதிகம் பட்டிருக்குமே… இன்னும் எங்கெல்லாம் அடியோ? என்று அவளின் உள்மனம் பதறியது.
“ஏன் நின்னுட்டே இருக்க? இப்படி வந்து உட்கார்…” என்று ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டான்.
“பரவாயில்லை பாலா, உங்களுக்கு வேற… வேற எங்கேயும் அடிபட்டிருக்கா?” என்று தயக்கத்துடன் கேட்டாள்.
“ஏன்? மருந்து போட்டு விடப் போறியா?” என்று கேலியாகக் கேட்டான்.
“பாலா…” என்று அவள் திடுக்கிட,
“எத்தனைக் காயம் இருந்தாலும், அதில் எனக்கு வலியே தெரியலை கார்த்தி. ஏன்னா… இது உனக்காகப் பட்ட அடி…” என்று அவன் உருக்கமாகப் பேச, அவனை விழி விரியப் பார்த்தாள்.
“இப்படியெல்லாம் உருக்கமாய் பேசி உன்னை மயக்கணும் போலத்தான் இருக்கு. ஆனால், நீ இதுக்கெல்லாம் மயங்குவியா என்ன?” என்று கேட்டுப் புருவத்தை உயர்த்தினான்.
கார்த்திகாவிற்கு, என்ன பதில் சொல்லுவதென்றே சட்டென்று புரியவில்லை. அவள் அமைதியாக இருக்க உதட்டைப் பிதுக்கியவன், “உடம்பை உரம் போட்டு இவ்வளவு கட்டுக் கட்டா வச்சிருக்கேனே… இதனால் எதுவும் பிரயோஜனம் இருக்கான்னு அப்பப்ப நினைச்சுப்பேன். இப்ப உனக்குப் பிரயோஜனப்பட்டிருக்குன்னு சந்தோஷப்படுறேன். ஏன் நின்னுட்டே இருக்க? முதலில் உட்கார்…” என்றான்.
அவளும் அமர்ந்து கொள்ள, “எம்மாவ்… கார்த்தி நம்ம வீட்டுக்கு முதல் முறையா வந்திருக்கா. அவளுக்கு உன் புருஷன் ஒரு காப்பி கூடப் போட்டுக் கொடுக்க மாட்டாரா?” என்று அறை வாசலிலிருந்து கத்தினான் பாலச்சந்திரன்.
“வர்றேன்னு சொல்லுடி உன் பிள்ளைகிட்ட. என்னவோ ஹோட்டல் கடையில் ஆர்டர் போடுவது போல ஆர்டர் போடுவான் உன் மகன்…” என்று குமாரசாமி குரல் கொடுக்க,
“வயசாகிப் போச்சுமா உன் புருஷனுக்கு. எந்த வேலையையும் சட்டுபுட்டுன்னு செய்யறது இல்லை.” என்று அன்னையிடம் புகார் வாசித்துக் கொண்டே கட்டிலில் போய் அமர்ந்தான்.
கார்த்திகாவோ, அலங்கமலங்க விழித்துக் கொண்டிருந்தாள். ‘இவர்கள் என்ன பேசிக் கொள்கிறார்கள்? அவனின் அன்னை உயிரோடு இல்லை என்று தானே சொன்னான். ஆனால், இப்போது?’ புரியாத குழப்பம் அவளுள்.
மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
பெரிதாக எந்தக் குறிக்கோளும் இல்லாமல், ஆட்டோ ஓட்டுவதும், தந்தையிடம் வழக்காடுவதும் என்று வாழ்நாளை ஜாலியாகக் கடக்கும் நம் நாயகனின் வாழ்வில், தென்றலாய் மனம் வருட வருகிறாள் நாயகி.
அவளைக் கண்டதும் நாயகன் காதலில் விழ, நாயகிக்கோ குடும்பப் பாரத்தைச் சுமக்கும் கடமை மட்டுமே கருத்தில் இருக்கிறது.
அவளின் பாரத்தை அவனும் ஏற்றுப் பகிர நினைக்கும்போது, அவர்கள் சந்திக்கும் பிரச்சினை! அதிலிருந்து மீண்டார்களா? அவனின் காதலை அவள் ஏற்றுக் கொண்டாளா? என்பதைக் கதையில் காணலாம்.
கதையைப் படித்து உங்கள் கருத்துக்களை தளத்தில் ரேட்டிங் & ரிவ்யூ மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.
இந்தப் பக்கத்தில் உள்ள கதை / புத்தகம் ©Ezhilanbu அவர்களின் முழு காப்புரிமைக்கு உட்பட்டது.
❌ அனுமதி இல்லாமல் நகலெடுக்க, Screenshot எடுக்க, PDF / Audio / Video வடிவில் பகிர கடுமையாகத் தடை செய்யப்படுகிறது.
⚖️ மீறல் கண்டறியப்பட்டால், Copyright Act படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Related products
-
ஞாபகம் முழுவதும் நீயே
Rated 5.00 out of 5 -
நீளும் தூரம் நின்னோடு
Rated 5.00 out of 5 -
உனதன்பில் உயிர்த்தேன்
Rated 5.00 out of 5


Reviews
There are no reviews yet.