Only logged in customers who have purchased this product may leave a review.
முள்ளில்லா முல்லைப்பூ
முள்ளில்லா முல்லைப்பூ — Preview
அன்னையின் நினைவு எழ, உறக்கம் வராமல் தவித்தவள், அறையில் இருந்தவர்கள் உறங்கிய பிறகு அறையை விட்டு மெல்ல வெளியே வந்தாள்.
வெளிக்காற்றுக்கு வந்ததும் அடைத்து வைத்திருந்தது எல்லாம் வெளியே வந்தது போல் தோன்ற, ஆழ்ந்த மூச்சை இழுத்துவிட்டு, மெல்ல நடந்து மேல் மாடிக்குச் செல்லும் படியில் சென்று அமர்ந்து கொண்டாள்.
அவள் வாழ்க்கையில் நடந்தது எல்லாம் மனக்கண்ணில் வந்து போக, நெஞ்சம் பாரமாகக் கனத்தது. அந்தக் கனத்தைத் தாங்க முடியாமல் கண்கள் கண்ணீரை பொழிந்தன.
விடிந்தால் தனக்குத் திருமணம் என்ற பூரிப்பு எல்லாம் அவளுக்கு வரவில்லை. ஏதேதோ நினைவுகள் மட்டும் விடாமல் அவளின் மனத்தை அலைக்கழித்தன.
அதே மனநிலையில் அவள் அமர்ந்திருந்த போது, யாரோ வரும் காலடி ஓசை கேட்க, அவளையும் மீறி வழிந்த கண்களைத் துடைத்தபடி வேகமாக எழுந்தாள்.
அவ்விடத்தில் சிறிது வெளிச்சம் மட்டுமே வந்து கொண்டிருந்தது. வருவது யாராக இருந்தாலும் யாரிடமும் பேசும் மனநிலை இல்லாததால் கண்களைத் துடைத்துக் கொண்டே அவள் அங்கிருந்து நகர, “யார், முல்லையா?” என்ற கேள்வி அவளை நிறுத்தியது.
அவனின் குரல்! விடிந்தால் தன் கணவன் ஆகப் போகின்றவனின் குரல்! அப்படியே நின்று அவன் பக்கம் திரும்பியவள், “ம்ம்” என்றாள்.
“இந்த நேரம் இங்கே என்ன பண்ற?” என்று கேட்டவனின் கண்கள் அவளின் முகத்தை ஆராய்ந்து பின், அவளின் கண்களைக் கூர்மையுடன் நோக்கின.
“அது… சும்மா…” என்று அவள் தடுமாற்றத்துடன் பதிலுரைக்க,
“அழுதியா?” அவன் கேள்வி அழுத்தமாக வந்தது.
அவள் பதில் சொல்லாமல் அமைதியாக இருக்க, “அழுதியான்னு கேட்டேன்…” என்று கேட்டவனின் குரலில் இருந்த இறுக்கம் அவளின் தொண்டையையும் இறுக்கியது.
“அ…து…” என்று பதில் சொல்ல திணறினாள்.
“ஏன் அழுத? என்ன காரணம்? இந்தக் கல்யாணம் பிடிக்கலையா? அதுதான் இங்க வந்து தனியாக உட்கார்ந்து அழுதுகிட்டு இருக்கியா? இந்தக் கல்யாணம் பிடிக்கலைனா முன்னாடியே சொல்லியிருக்க வேண்டியது தானே? கொஞ்ச நேரத்துக்கு முன் மோதிரம் போடும் போது கூட உனக்குச் சம்மதமான்னு கேட்டேனே… அப்ப மட்டும் சரின்னு சொன்ன? ஒருவேளை மத்தவங்களுக்காகச் சம்மதம் சொன்னியா?” என்று அவன் படபடவென்று கேள்விகளாகப் பொழிய,
அவனிடமிருந்து இத்தனை கேள்விகள் வரும் என்று எதிர்பாராமல் திகைத்தாள்.
“இந்தக் கல்யாணம் பிடிக்கலைன்னா அதை முன்னாடியே சொல்றதுக்கு என்ன?” என்று அவன் மீண்டும் ஆரம்பிக்க,
“அச்சோ! அப்படியெல்லாம் இல்லை…” என்று பதறினாள் முல்லைமலர்.
“அப்புறம் எதுக்கு எல்லாரும் தூங்கும் நேரத்தில் இங்கே தனியா உட்கார்ந்து அழணும்? என்ன பொய் சொல்றீயா?” என்று கடுமையாகக் கேட்டான்.
“இல்லை… இல்லை… நான் பொய் சொல்லலை…” கையை ஆட்டி மறுத்தாள்.
“அப்புறம் ஏன் அழுத?” என்று கடுமை மாறாமல் கேட்டான். கடுமையுடன், அவனின் உடலே கோபத்தில் நடுங்குவதையும் அவளால் உணர்ந்து கொள்ள முடிந்தது.
தான் பதில் சொன்னால் மட்டுமே அவன் இயல்பாவான் என்பதை உணர்ந்தது போல், “அது… அம்மா ஞாபகம் வந்தது. அதான்…” என்றவளை நம்பாமல் தான் பார்த்தான்.
“நிஜமாவா? இல்லை, என்னை ஏமாத்த பார்க்கிறாயா?” நம்பிக்கை இல்லாமல் கேட்டான்.
“இல்லை, நிஜமாத்தான்…” என்றாள்.
ஆனாலும், அவனின் முகத்தில் நம்பிக்கை தெரியவில்லை.
“எதுவாக இருந்தாலும் இப்பவே சொல்லிடு. கடைசி நேரத்தில் என் கழுத்தை அறுக்க பிளான் எதுவும் போட்டுருக்கியா?” என்று கேட்டான்.
அவன் நம்பிக்கை இல்லாமல் கேட்க கேட்க அவளுக்கு உள்ளுக்குள் பதறியது. வெளியே வந்து அழுதிருக்கக் கூடாதோ? என்று நினைத்து தன்னையே நொந்து கொண்டாள் முல்லைமலர்.
உதயகீதனோ ‘என்ன செய்யக் காத்திருக்கிறாய்? எனக்குத் தெரிந்தே ஆக வேண்டும்!’ என்பதுபோல் அவளை அழுத்தமாகப் பார்த்திருந்தான்.
****
ஓய்வறை சென்றுவிட்டு வந்து அவன் இலகுவான உடைக்கு மாற, உடையை மாற்றாமல் அதே சேலையில் வந்த முல்லையோ அதன் மேல் மீண்டும் ஸ்வெட்டரை மாட்ட போனாள்.
“முல்லை, அது வேண்டாம். இங்க வா…” என்று கட்டிலில் அமர்ந்திருந்தவன் அழைக்க,
“குளிருதுங்க…” என்று ஸ்வெட்டரை கையில் வைத்துக் கொண்டு அவன் சம்மதத்திற்காகக் காத்திருந்தாள்.
“குளிராது, இங்க வா…” என்று கை நீட்டி அழைத்தான்.
அங்கே மட்டும் எப்படிக் குளிராமல் போகும்? என்ற யோசனையுடன் அவன் அருகில் வந்தாள்.
அவளின் கையைப் பிடித்துத் தன் அருகில் இன்னும் நெருக்கமாக இழுத்தவன், அவளைச் சுற்றி கையைப் போட்டு அணைத்து, அவளின் வயிற்றில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
அவ்வணைப்பை எதிர்பாராமல் அவள் நடுங்க, வயிற்றில் முகத்தைப் புரட்டினான். கூச்சத்தில் அவளின் கைகள் நடுங்கின. நடுக்கத்தைக் குறைக்கக் கணவனின் தலையில் கைவைக்க, தன்னிச்சையாக அவளை இன்னும் தனக்கு நெருக்கமாக இழுத்துக் கொண்டான்.
அவளால் தாள முடியாமல் போக, அவன் தலையில் வைத்த கையை இன்னும் அழுத்தினாள்.
“முல்லை…” என்று முனகியவன், தலையை உயர்த்தி அவள் முகத்தைப் பார்த்தான்.
அவள் கண்களில் மயக்கம் தெரிய, அதற்கு மேல் பொறுக்க முடியாமல், அவளை இழுத்துக் கொண்டு படுக்கையில் விழுந்தான்.
“சேலை வசதியாத்தான் இருக்கு…” என்று அவளின் காதில் முனகினான்.
முல்லை நாணத்துடன் சிரிக்க, “முல்லைப்பூ போலவே இருக்கு உன் சிரிப்பு…” என்றபடி அவளின் இதழில் தன் அதரங்களைப் பதித்தவன், மெல்ல மெல்ல அவளை ஆக்கிரமித்தான்.
“ஆர் யூ ஓகே?” கூடலின் முடிவில் அவளின் முகத்தை ஆராய்ச்சியாகப் பார்த்தபடி கேட்டான்.
இன்னும் முழுதான இன்ப மயக்கத்திலிருந்து மீளாமல் இருந்த முல்லை, “ம்ம்…” என்று முனகிக் கொண்டே அவனின் வெற்று மார்பில் முகத்தைப் புதைத்து அவளையும் மீறி அவன் மார்பில் முத்தமிட்டாள்.
சிலிர்த்துப் போனவன், வேகமாக அவளின் இதழை சிறை செய்து விடுவித்து, “தேங்க்ஸ்…” என்றான்.
கனமான போர்வைக்குள் இருவரும் ஒருவர் அணைப்பில் ஒருவர் அடங்கி இருக்க, சில நொடிகளுக்குப் பிறகு, “ஏங்க…” என்று தயக்கத்துடன் அழைத்தாள் முல்லைமலர்.
“ம்ம்…” அவளின் கழுத்தில் முகத்தைப் புதைத்தபடி கேட்டான்.
“நா… நான் ஒன்னு கேட்கலாமா?” அவன் என்ன சொல்வானோ என்று தயங்கியே கேட்டாள்.
“கேளு முல்லை…” என்றான்.
“ஏன் தேங்க்ஸ் சொல்றீங்க?” என மெல்ல கேட்டாள்.
தலையை நிமிர்த்தி அவள் கண்களைப் பார்த்தான்.
அவனின் பதிலுக்கு அவள் காத்திருக்க, எதுவும் சொல்லாமல் மீண்டும் அவளின் கழுத்தில் முகத்தைப் புதைத்துக் கொண்டான்.
ஒன்றும் புரியாமல் குழம்பி போனாள் முல்லைமலர். அதிலும் அவள் கண்களைச் சந்தித்த அவன் கண்களில் தெரிந்த வலி! ஏன் அப்படி? தான் கேட்டது பிடிக்கவில்லையோ? என்று குழம்பி போனாள்.
“ஏங்க… நான் சும்மா தெரிஞ்சிக்க…” என்று தயங்கி சொல்ல, அவளின் கழுத்தில் முகத்தைப் புரட்டியவன், பற்களால் லேசாகக் கடித்து வைத்தான்.
“ஷ்ஷ்!” என்று முனகியவள், “கோபமா?” என்று கேட்டாள்.
அதற்குப் பதில் சொல்லாமல் தலையை நிமிர்த்தி, அவளின் இதழ்களைப் பேச விடாமல் சிறை செய்தான்.
அதன்பின் அந்தப் பேச்சை அவன் வளர விடவில்லை. அவனுக்குத் தான் கேட்டது பிடிக்கவில்லை என்று நினைத்து முல்லையும் அதைப் பற்றிக் கேட்கவில்லை.
ஆனால், ஏன் என்ற கேள்வி அவளுக்குள் நெருஞ்சியாய் உறுத்திக் கொண்டிருந்தது.
மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
சந்தேகம் என்பது மிகப் பெரிய நோய்!
இங்கே நாயகன் தன் புத்தம் புதிய மனைவியின் மீது வீசிய சந்தேக வார்த்தைகள் அவர்கள் வாழ்க்கையைச் சூறாவளியாகச் சூழற்றிப் போடுகிறது.
அவனின் சந்தேகம் ஏன்? எதனால்?
குளிர் நிலவாகவும், சுடும் நெருப்பாகவும் மாறும் நாயகனின் மாற்றத்தின் பின்னணி என்ன?
அவன் வாழ்க்கையில் வந்த முல்லைப்பூ முள்ளாகக் குத்தினாளா? பூவாக மணம் வீசினாளா? என்பதைக் கதையில் காணலாம்.
இந்தப் பக்கத்தில் உள்ள கதை / புத்தகம் ©Ezhilanbu அவர்களின் முழு காப்புரிமைக்கு உட்பட்டது.
❌ அனுமதி இல்லாமல் நகலெடுக்க, Screenshot எடுக்க, PDF / Audio / Video வடிவில் பகிர கடுமையாகத் தடை செய்யப்படுகிறது.
⚖️ மீறல் கண்டறியப்பட்டால், Copyright Act படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Related products
-
மனதோடு உறவாட வந்தவளே
Rated 5.00 out of 5


Reviews
There are no reviews yet.