மெய் பிம்பம் நீயே..!
மெய் பிம்பம் நீயே..! — Preview
அன்று மாணவிகள் அனைவரும் சேலை கட்டுவதாக முடிவு செய்திருக்க, அன்னையின் சேலை ஒன்றை கட்டிக்கொண்டு வந்தாள் தாமரை.
சேலையை அழகாக மடிப்பு வைத்து கட்டி, தலைக்குக் குளித்து, கூந்தலை தளர்வாகப் பின்னி, மதுரை மல்லியை தலையில் சூடி, பவுடர் மட்டும் முகத்தில் அடித்து, நெற்றியில் சின்ன ஒட்டுப் பொட்டு மட்டும் வைத்து, அழகு பதுமையெனக் கிளம்பி வந்த தாமரையை விட்டு கதிரவனின் இமைகள் கூடச் சிமிட்ட மறந்து போயின.
“அடேய் கதிரவா… கொஞ்சமா ஊத்துடா உன் ஜொள்ளை. காலேஜூக்குள்ள போட் விட வச்சுடாதே!” என்று சுகுமாரும், குமரனும் அவனைக் கேலி செய்ய ஆரம்பித்தனர்.
அவர்களின் கேலியை கவனிக்கும் நிலையில் கதிரவன் இல்லை.
அழகு மயிலென ஒயிலாக நடந்து வந்துகொண்டிருந்தவளை நோக்கி அவனின் கால்கள் நகர ஆரம்பித்திருந்தன.
கண்கள் ஒளிர தன்னை நோக்கி வந்துகொண்டிருந்தவனைப் பார்த்து தாமரையின் கால்கள் அதற்கு மேல் நகராமல் திணறின.
அவனின் விழுங்கும் பார்வையில் அவளுக்கு நாணம் வந்தது.
“உன் பெயரை தேவதைன்னு வைக்காமல், ஏன் தாமரைன்னு வச்சாங்க?” என்று கேட்டபடி அருகில் வந்தவனை மெல்ல இமைகளை உயர்த்திப் பார்த்தாள் தாமரை.
கண்ணிற்கு அன்று தாமரை கண் மை வைத்திருக்க, அவள் அப்படி இமை உயர்த்திப் பார்த்ததில் சொக்கி போனான் கதிரவன்.
“ஐயோ! கொல்றயேடி என்னை… இப்பவே உன்னைத் தனியா எங்கேயாவது அழைச்சு போய் என்னைக் கிறுக்குப் பிடிக்க வைக்கிற, இந்தக் கண்ணு… கன்னம், உதட்டை எல்லாம் ஒரு வழியாக்கணும்னு தோனுதே…” என்று அவஸ்தையுடன் கிறங்கியவன் குரலில் ஏக்கமும், தாபமும் கொட்டிக் கிடந்தது.
“கதிர்…” என்று சிணுங்கலுடன் அழைத்தாள் தாமரை.
தன் மனம் கவர்ந்தவன், தன்னை ரசிக்கிறான் என்பதில் அவளின் பெண்மனம் உவகைக் கொண்டது.
“இந்தக் கூட்டத்திலிருந்து எங்கேயாவது எஸ்கேப் ஆகி போயிடுவோமா?” என்று ஆங்காங்கே கூட்டமாக நின்று பேசிக்கொண்டிருந்த மாணவர்களைச் சுட்டிக்காட்டி கேட்டான்.
“ச்சு, சும்மா இருங்க கதிர். வாங்க ஆடிட்டேரியம் போகலாம். பங்கஷனுக்கு நேரமாச்சு…” என்று சூழ்நிலை மாற்ற அவனுடன் சென்றாள்.
பிரிவு உபச்சார விழா முடிந்து, பிரிவை நினைத்து வருந்தி, நண்பர்கள் அனைவரும் கண்ணீருடன் பேசிக்கொண்டிருக்க, தனது நண்பர்களைப் பார்த்துவிட்டு மீண்டும் தாமரையின் அருகில் வந்த கதிரவன், “இந்தா தாமரை, இதை வச்சுக்கோ…” என்று ஒரு பார்சலை கொடுத்தான்.
“என்ன இது கதிர்?” உடனே வாங்காமல் தயக்கத்துடன் கேட்டாள் தாமரை.
“செல்போன். இதுவரை நான் கொடுத்த எதையுமே வாங்க மாட்டேன்னு சொல்லிட்ட. இதையாவது வாங்கிக்கோ…” என்றான் கதிரவன்.
“இல்லை கதிர், வீட்டில் தெரிந்தால் பிரச்சினை…” என்று தாமரை தயங்க,
“ம்ப்ச், அவங்களுக்குத் தெரியாம வச்சுக்கோ. யோசிக்காமல் வாங்கிக்கோ. ஸ்டெடி லீவில் நான் உன்கிட்ட பேச நினைச்சால் அதுக்கு போன் வேணுமே. உன்கிட்டதான் போன் இல்லையே… இது நம்ம பிரிவு துயரை தணிக்க. தினம் ஒரு முறை பேசினால் கூடப் போதும். உன்கிட்ட பேசாமல் என்னால் இருக்க முடியாது தாமரை. ப்ளீஸ், வாங்கு…” கெஞ்சினான் கதிரவன்.
அவளுக்கும் விடுமுறையில் கதிரவனிடம் பேசாமல் எப்படி இருக்கப் போகிறோம் என்ற தவிப்பு இருந்ததே. அவளின் பொருளாதார நிலையில், இப்போது கைப்பேசி வாங்குவது முடியாத காரியம். அவளின் சகோதரனின் போனிலிருந்து கதிரவனிடம் பேச முடியாது. அவனிடம் பேசத்தானே கொடுக்கிறான்… என்ற எண்ணத்துடன் அப்பரிசை பெற்றுக்கொண்டாள் தாமரை.
உடனே கதிரவனின் முகம் மலர்ந்தது.
அவனின் மகிழ்ச்சி அவளையும் தொற்றிக்கொண்டது.
அவனிடம் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு வீட்டிற்குக் கிளம்பினாள் தாமரை.
கதிரவன் வாங்கிக் கொடுத்த கைப்பேசியின் வழியாகத் தினமும் இருவரும் பேசிக்கொண்டனர்.
அன்னை இல்லாத வெறுமை மனத்தைத் தாக்கினாலும், குடியின் ஆதிக்கத்தினால் ஆர்ப்பாட்டம் செய்யும் தந்தையால் எரிச்சல் வந்தாலும், இரவு தங்க இடம் என்பதுபோல் மட்டும் இருந்த தமையனால் மனம் துவண்டாலும், அனைத்திற்கும் மருந்தாகத் தாமரைக்குக் கதிரவன் இருந்தான்.
தினமும் ஒரு முறை பேசலாம் என்று சொல்லி அதைச் செயல்படுத்தினாலும், தாமரையுடன் வாட்ச்அப்பில் அடிக்கடி உரையாடிக்கொண்டே இருப்பான்.
என்ன செய்கிறாள்? என்ன சாப்பிட்டாள்? படித்தாளா? என்று சாதாரணப் பேச்சுக்கள் இடையே, அதீதமான காதல் உணர்வுகள் தோன்றும்போது அத்துமீறிய வார்த்தைகளும் கதிரவனிடமிருந்து வரும்.
அதற்குப் பதில் சொல்ல முடியாமல் தாமரை திணறும் போது, “இப்படியெல்லாம் பேசினீங்கனா, அப்புறம் நான் மெசேஜ் பண்ண மாட்டேன் கதிர்…” என்றுரைத்து அவனை அடக்குவாள் தாமரை.
“நானும் உன்கிட்ட இப்படிப் பேசக் கூடாதுன்னு தான் நினைக்கிறேன் தாமரை. ஆனால், என்னால் முடியலை. உன்கிட்ட தினமும் பேசணும், உன்னை நேரில் பார்க்கணும், என் கைக்குள்ளயே உன்னை வச்சுக்கணும்னு ஆசையா இருக்கு. நீ எப்ப எனக்கு முழுசா கிடைப்பன்னு தவிப்பா இருக்கு…” என்று பிரிவு தந்த வேதனையில் அவன் பிதற்றும்போது, தாமரைக்கு உருகிவிடும்.
அவளுக்கும் அவனின் காதலில் முழுமையாக நனைய மனம் ஏங்கியது. ஆனால், அதை முடிந்தமட்டும் காட்டிக் கொள்ளமாட்டாள்.
தான் அடக்கி வைத்தே அவன் வார்த்தைகளால் அத்துமீற முயல, தானும் அவனுக்கு இசைவாகப் பேசினால், அவனைக் கட்டுப்படுத்துவது சிரமமாகிவிடும் என்று தன் உணர்வுகளை அவனிடம் காட்டாமல் மறைத்துவிடுவாள்.
கதிரவன் கொடுத்த கைப்பேசியை ஒளித்து, மறைத்து வைத்துக்கொண்டு தாமரை தன் காதலை வளர்க்க, இன்னொருவனும் காதலை வளர்த்து, கல்யாணத்தில் வந்து நின்றான்.
***
ஒருநாள் அவசரமாக வெளியே செல்ல வேண்டியது இருந்ததால் சீக்கிரமே குளித்து கிளம்பி உடையை மாற்றியிருந்தான். அப்போது காணொளியில் அழைத்த அஸ்வினியின் முகத்தில் பெருத்த ஏமாற்றம்.
“அதுக்குள்ள குளிச்சு கிளம்பிட்டீங்களா? அப்போ முன்னாடியே எனக்கு வீடியோ கால் போட்டிருக்கலாம் தானே?” என்று அவனிடம் உரிமையாக கோபப்பட்டாள்.
“அடடே… அனி மேடமுக்கு நான் குளிச்சிட்டு வந்து தரிசனம் தரலைன்னு கோபம் போலிருக்கு. விட்டால், நான் குளிக்கும்போதும் வீடியோ காலில் பேசணும்னு சொல்வ போலயே?” என்று கேலியாக கேட்டான்.
“போடுங்களேன். நான் வேணாம்னு சொல்ல மாட்டேன்…” அவன் கண்களைச் சந்திக்காமல் சதிராடியபடி அவள் சொல்ல, அவன் அட்டகாசமாக சிரித்தான்.
அதில் அவனின் கன்னத்தில் அழகாகக் குழி விழ, அதைக்கூட அவள் கவனித்தாளா எனத் தெரியவில்லை. ஒருநாள் கூட அவனின் கன்னக்குழியை அவள் இரசித்ததுபோல் அவனுக்கு நினைவில் இல்லை.
காணொளியில் அழைத்தாலும் அவளின் பார்வை தன் முகத்தில் நிலைத்ததுபோலும் அவனின் நினைவில் இல்லை. அவளின் கண்கள் அலைபாய்ந்துகொண்டே இருக்கும்.
அவள் கொஞ்சலும், சிணுங்கலுமாகப் பேசினாலும், ஏதோ ஒன்று குறைந்தது அவனுக்கு.
இப்போது என்னவென்றால், இன்று தானாகக் காணொளியில் அழைத்தும், அவன் எதற்கு அழைத்தான் என்று கூடக் கேட்காமல் அழைப்பைத் துண்டித்தது அவனின் மனத்தில் மேலும் நெருடலை உண்டாக்கியது.
அதன்பின் அவள் இரண்டு முறை அழைத்தபோதும் அவனுக்கு அழைப்பை ஏற்கத் தோன்றவில்லை.
தான் பார்த்து தனக்குப் பிடித்ததுபோல் இருந்த சில பத்திரிகை வடிவமைப்புகளைப் புகைப்படம் எடுத்து அவளுக்குப் புலனத்தில் அனுப்பி வைத்தவன், ‘இதில் உனக்கு எது பிடிச்சிருக்குன்னு டிசைட் பண்ணி வாட்சப்பில் சொல்லு. நான் இன்னைக்கு பிஸி. எனக்கு கால் செய்ய வேண்டாம்’ என்ற குறுஞ்செய்தியை அஸ்வினிக்கு அனுப்பிவிட்டுக் காட்டேஜிற்கு கிளம்பிச் சென்றான்.
“ஹேய் என்னப்பா, கால் பண்ணினா எடுக்க மாட்டிங்கிறீங்க? கோபமா?” என்று அஸ்வினி அனுப்பி வைத்த குறுஞ்செய்தியைப் பார்த்துவிட்டாலும், அவன் பதில் அனுப்பவில்லை.
காட்டேஜுக்கு சென்றவன், சில கணக்கு வழக்குகளைக் கவனித்தான். அதன்பின் அவனுக்குப் பெரிதாக வேலை எதுவும் இல்லாமல் இருக்க, ஓடையின் பக்கம் சென்று அங்கிருந்த மர இருக்கையில் அமர்ந்துவிட்டான்.
தன் திருமணம் குறித்து, அஸ்வினியைக் குறித்து என்று மனத்தில் ஏதோ இனம் புரியாத தடுமாற்றம்!
***
“உண்மை கசக்கும் என்றாலும் இதான் நடக்கும் தாமரை. இன்னும் கொஞ்சம் உனக்குச் சரியான பின்னால் வேலைக்குப் போவதை பற்றி யோசிக்கலாம். அதுக்குப் பதில் நம்ம விஷயத்தை நீ யோசிக்கலாமே?” என்று புருவம் உயர்த்திக் கேட்டான்.
எதைப்பற்றி அவன் பேசிவிடக் கூடாது என்று நினைத்தாளோ அதையே அவன் பேசவும் அவன் முகம் பார்ப்பதை தவிர்த்தாள்.
“அமைதியானால் என்ன அர்த்தம் தாமரை?” விடாமல் கேட்டான்.
“அது… நா…ன்… அது வேண்டாமே சார். என் மேல் இரக்கப்பட்டு நீங்க…”
“என்னோட விருப்பம் இரக்கத்தில் வந்ததில்லைன்னு உனக்கு எத்தனை தடவை சொல்வது தாமரை? அப்படி ஒருத்திக்கு நான் இரக்கம் காட்டினால், பணம், உதவின்னு ஏதாவது செய்வேனே தவிர, அவளுக்கு நான் என்னையே தூக்கிக் கொடுக்க மாட்டேன். புரியுதா நான் சொல்வது?” என்று குரலை உயர்த்திச் சொன்னவனைத் திகைத்துப் பார்த்தாள் தாமரை.
அவளின் திகைப்பின் பிரதிபலிப்பில் கண்கள் பெரிதாக விரிய, அதில் தெரிந்த தவிப்பை காண முடியாமல், பிடரி உரோமத்தை கையால் நீவியபடி வேறு பக்கம் திரும்பிக்கொண்டான்.
அவள் அப்படியே அசையாமல் நிற்க, அவளின் பக்கம் திரும்பியவன் அவளை நெருங்கி வந்தான்.
நகர்ந்து செல்லக்கூட மறந்து அதே இடத்தில் உறைந்து நின்றிருந்தாள் தாமரைப் பெண்.
மிக நெருங்கி அருகில் வந்தவன் அவளின் இரண்டு கன்னங்களையும் கையால் தாங்கி, அவளின் கண்களை ஊடுருவி பார்த்தவன் “உன் மேல் எனக்கு இருப்பது இரக்கமோ, பரிதாபமோ கிடையாது தாமரை. என்னில் பாதியா… உன்னை நான் நினைக்கிறேன். என்னை முழுசா உன்னிடம் ஒப்படைக்க ஆசைப்படுறேன் தாமரை. நீயும் முழுசா எனக்கே எனக்கு வேணும். என்னோட மெய்யான பிம்பமா…” என்றவன், அவளின் முகத்தை அருகில் இழுத்து அவள் நெற்றியில் தன் மீசை உரோமங்கள் உரச, தன் அதரங்களைப் பதித்தான்.
மந்திரத்திற்குக் கட்டுப்பட்டவள் போல் நின்றிருந்தவளின் விழிகள் விரிந்து உறைய, தங்கள் பின்னால் கேட்ட காலடி சத்தத்தில் அவளை விட்டு விலகி நின்றான்.
“நீங்களும் நடக்க வந்தீங்களா? அம்மாவும், விஷூவும் என்ன செய்றாங்க?” என்று கேட்டபடி கணவனுடன் வந்துகொண்டிருந்தாள் பைரவி.
“உண்ட மயக்கத்தில் அசந்து தூங்குறாங்கக்கா. போய் எழுப்பி விட்டு வீட்டுக்கு கிளம்ப வேண்டியதுதான்…” என்றபடி அவர்களுடன் இணைந்து கொண்டான் தரணிதரன்.
அவர்களின் பேச்சுச் சத்தத்தில் தெளிந்து அவர்களுடன் அமைதியாக நடக்க ஆரம்பித்தாள் தாமரை. அவளின் வலது கை உயர்ந்து மெல்ல அவன் முத்தமிட்ட இடத்தை வருடியது.
அவளிடம் பைரவி ஏதோ பேச்சு கொடுக்க, கையைக் கீழே இறக்கியவள் பைரவிக்கு முயன்று பதில் சொல்லியபடி தாமரை அவளுடன் செல்ல, சற்று பின்தங்கிய ஆனந்தன், தரணியைப் பிடித்து நிறுத்தி, “என்ன மாப்பிள்ளை இன்னும் தாமரை சம்மதமே சொல்லலை. அதுக்குள்ள கிஸ்ஸெல்லாம் அடிக்கிற?” என்று கிசுகிசுப்பாகக் கேட்டான்.
“அதெல்லாம் அப்படித்தான் மாமா” கண்ணைச் சிமிட்டி குறும்பாகச் சிரித்தான்.
“அது சரி! உன் அக்கா எல்லாம் பார்த்தும் பார்க்காத போலச் சகஜமா பேசி சமாளிக்கிறாள். நீ ஒரு மார்க்கமாவே சுத்துற. குடும்பமே ஒரு தினுசாத்தான்டா இருக்கீங்க…” கீழ் உதட்டை வளைத்து ஆனந்தன் சொல்ல,
“நீங்களும் இதே குடும்பம்தான் என்பதை மறந்துட்டு பேசாதீங்க மாமா…” என்று கிண்டலாகப் பேசியபடி நடந்தான் தரணிதரன்.
மேலும் படிக்க ப்ரீமியம் பிளான் வாங்கவும்.
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
குடும்பத்தில் நிம்மதியின்மை நிலவ, தென்றலாக அவளின் வாழ்வில் அன்பை வாரி வழங்க வருகிறான் ஒருவன்.
அவனின் பிம்பம் உண்மைதானா? அவனை நம்பிய நாயகிக்கு கிடக்க போவது என்ன? கதையில் தெரிந்து கொள்வோம்.
கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை ரேட்டிங், ரிவ்யூ மூலம் தளத்தில் தெரிவியுங்கள்.


Reviews
There are no reviews yet.