அவனை ரசித்துப் பார்த்துக் கொண்டே அவள் பின் தொடர, “ஹலோ, மேடம்… என்ன கனவு கண்டுட்டே வர்றீங்களா? வந்து கதவை திறங்க…” அவள் வீட்டு வாசலில் நின்றபடி துருவன் அழைக்க, விரைந்து வந்து கதவை திறந்தாள்.
“உள்ளே வாங்க துருவ். உட்காருங்க, நான் இதோ ஒரு நிமிஷத்தில் வந்துடுறேன்…” என்று சொல்லிவிட்டு படுக்கையறைக்குள் நுழைந்தவள், முகம், கை, காலை கழுவிவிட்டு துடைத்துக் கொண்டே வந்தாள்.
“நீங்களும் ரெஸ்ட் ரூம் யூஸ் பண்ணனும்னா பண்ணிக்கோங்க துருவ். நான் போய்த் தோசையை ஊத்துறேன்…” என்றபடி சமையலறைக்குச் சென்றாள்.
“நானும் கை, காலை கழுவிட்டு வர்றேன்…” என்று சொல்லி விட்டு படுக்கையறைக்குள் சென்றவனுக்கு அப்போதுதான் அவனின் புகைப்படம் அங்கே இருப்பது நினைவு வந்தது. அன்று அவளிடம் பேச வேண்டிய விஷயத்தில் கவனமாக இருந்ததால் புகைப்படத்தை மறந்து விட்டிருந்தான்.
ஓய்வறை சென்றுவிட்டு வந்தவன், திரும்பி வரும்போது அந்த மேஜையில் இருந்த அவனின் புகைப்படத்தையும் எடுத்துக் கொண்டு வெளியே வந்து சமையலறையில் தூரிகா என்ன செய்கிறாள் என்று பார்த்தான்.
அந்தப் பக்கம் திரும்பி சட்னிக்கு தயார் செய்து கொண்டிருந்தாள் அவள்.
அவள் தன்னைப் பார்க்கவில்லை என்பதை உறுதிப்படுத்திக் கொண்டு தன் புகைப்படத்தைத் தன்னுடைய அலுவலகப் பையில் திணித்து வைத்துவிட்டு கிச்சன் பக்கம் சென்றான்.
“என்ன செய்ற தூரிகா? நான் தோசை ஊத்தட்டுமா?” என்று கேட்டான்.
“காலையில் சாம்பார் வச்சி சாப்பிட்டேன் துருவ். சாம்பார் மீதம் இருக்கு. இப்ப கொஞ்சம் தேங்காய் சட்டினி மட்டும் அரைக்கப் போறேன். அரைச்சுட்டு நானே தோசை ஊத்துறேன்…” என்றாள்.
“நான் மட்டும் சும்மா இருக்கவா? நான் ஊத்துறேன். நீ சட்னியை அரை…” என்றவன், அவள் ஓரமாகச் சாற்றி வைத்திருந்த தோசை கல்லை எடுத்து அடுப்பில் வைத்தான்.
“ஓகே, உங்க இஷ்டம்…” என்றவள், குளிர்சாதன பெட்டியில் இருந்த மாவை எடுத்துக் கொடுத்தாள்.
அவன் தோசையை ஊற்ற, இவள் சட்டினியை வைக்க என்று அலுவலகம் பற்றி ஏதேதோ பேசிக் கொண்டே வேலையை முடித்து, இருவரும் சாப்பிட்டு முடித்தனர்.
“சாம்பார் நல்லா இருந்தது தூரிகா…” என்றான்.
“என் அம்மா வைக்கும் ஸ்டைல் துருவ். அப்பாவுக்கும் நான் சாம்பார் வச்சால் ரொம்பப் பிடிக்கும். அம்மா போலவே வைக்கிற பாப்பான்னு சொல்லி ஆசையா சாப்பிடுவார்…” என்றாள் சிலாகிப்புடன்.
சிறு புன்னகையுடன் அவள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்தவன், அவள் ‘பாப்பா’ என்றதும், பக்கென்று சிரித்தான்.
“ஹோய்… நான் என்ன காமெடியா சொன்னேன்? சிரிக்கிறீங்க…” என்று அவள் சிலிர்த்து எழ,
“ச்சேச்சே… நான் அதுக்குச் சிரிக்கலை. நீ பாப்பான்னு சொன்னதுக்குச் சிரிச்சேன். பாப்பா? நீ?” என்று கேட்டவன் மீண்டும் சிரித்தான்.
“ம்ம்… அது அப்பா அப்படித்தான் கூப்பிடுவார். கேலி செய்யாதீங்க துருவ்…” என்று அவள் சிணுங்க,
“உன் அப்பா இன்னும் உன்னைப் பச்சை பிள்ளையாவே நினைச்சிட்டு இருக்கார் போல. இந்தப் பாப்பா இங்கே என்னன்ன வேலை பார்க்குதுன்னு அவருக்குத் தெரியலை, பாவம்!” என்றான் கிண்டலாக.
“வேண்டாம் துருவ், கேலி பண்ணாதீங்க…” தூரிகா விரல் நீட்டி எச்சரிக்க,
“சரி பாப்பா…” என்றான் கேலிச் சிரிப்புடன்.
“துருவ், பாப்பா சொல்லாதீங்க…” என்று அவள் மீண்டும் மிரட்ட,
“ஓகே பாப்பா…” என்றான் சிரிப்பை அடக்கிக் கொண்டு.
“வேண்டாம் துருவ்…” என்றவளுக்கும் சிரிப்பு வந்தது. ஆனாலும், முகத்தை உர்ரென்று காட்டினாள்.
“சரி சரி… இனி பாப்பா சொல்லலை பாப்பா…” என்று அவன் சீண்ட,
“சொல்லாதீங்கன்னு சொல்றேன்ல…” என்றபடி அவனின் கையிலும், தோளிலும் அடிக்க ஆரம்பித்தாள்.
முதல் இரண்டு அடிகளைச் சிரித்துக் கொண்டே வாங்கியவனுக்கு அப்போது தான் அவளின் நெருக்கமும், ஸ்பரிசமும் தன்னை நெருங்குவதை உணர்ந்தான்.
அவளின் சூடான மூச்சுக் காற்று அவனின் முகத்தில் மோத, அவனின் உடல் அதனை உணர்ந்து உள்வாங்கித் தடுமாறியது.
மூளை விழித்துக் கொள்ள, விளையாட்டு விபரீதம் ஆவதை உணர்ந்து சட்டென்று சுதாரித்துக் கொண்டவன், அவளின் கையைப் பற்றித் தடுத்து, “ஓகே தூரிகா, நேரமாச்சு… நான் கிளம்புறேன். நீ ரெஸ்ட் எடு!” என்றவாறு எழுந்து நின்றான்.
அவன் சட்டென்று அப்படிக் கிளம்பவும் தூரிகா புரியாமல் மலங்க விழித்தவள், பின் சுதாரித்துக் கொண்டு, “ஓகே துருவ், பை! மார்னிங் மீட் பண்ணலாம்…” என்றாள்.
“காலையில் ரெடியா இரு தூரிகா, பிக்கப் பண்ணிக்கிறேன்…” என்றவாறு தன் பையை எடுத்துக் கொண்டு விடைபெற்றுச் சென்றான்.
தூரிகா படுக்கைக்குச் சென்ற போதுதான் துருவனின் புகைப்படம் அங்கே இல்லாததைக் கண்டாள்.
‘துருவ்…’ என்று பல்லைக் கடித்து முனகியவள், படுக்கையில் அமர்ந்தபடி உடனே அவனுக்கு அழைத்தாள்.
அவன் அழைப்பை ஏற்காமல் போக, “துருவ், போனை எடுங்க…” என்று வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பினாள்.
“எதுக்கு?” உடனே அவனிடமிருந்து பதில் வர,
“துருவ், என் பெட்ரூமில் இருந்த போட்டோவை ஏன் எடுத்துட்டு போனீங்க?” என்று வினவினாள்.
“எனக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டது, உனக்குத் தெரியாமல் எடுக்கப்பட்டுவிட்டது…” என்று அவன் பதில் அனுப்ப,
“துருவ், ப்ளீஸ்! எனக்கு அந்தப் போட்டோ வேணும்…” என்றாள் கெஞ்சலாக.
“உனக்கு உரிமை இல்லாதது உன்கிட்ட எதுக்குத் தூரிகா? போட்டோவை மட்டும் இல்லை, மறந்துடு எல்லாத்தையும்!” என்றான் ஆழ்ந்த குரலில்.
‘எப்படி முடியும் துருவ்? என் மனசு முழுக்க உங்களைச் சுமந்துட்டு இருக்கும் போது எப்படி மறக்க முடியும்? என்னால் அது கண்டிப்பா முடியாது துருவ்!’ என்று தனக்குள் முனகிக் கொண்டாள் தூரிகா.
அவர்கள் இருவருக்கும் இடையே ஒரு கண்ணாமூச்சி ஆட்டம் நடந்து கொண்டிருக்க, பழைய ஆட்டமே இன்னும் முழுதாகக் களையவில்லை என்று சொல்வது போல், மறுநாள் காலையில் துருவனும், தூரிகாவும் ஒரே வண்டியில் சென்று அலுவலகத்தில் இறங்கிய போது, அவர்களை முறைப்புடன் பார்த்துக் கொண்டே அவர்களின் அருகில் வந்தாள் துருவனின் முன்னாள் காதலி பவிதா.
மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
Reviews
There are no reviews yet.