Only logged in customers who have purchased this product may leave a review.
இணையும் இதயமிதுவே
இணையும் இதயமிதுவே — Preview
“என்னம்மா கடையை அடைகிற நேரம் வந்திருக்கீங்க? ஆமா, உங்களை என்ன இரண்டு மூனு நாளா ஆளே காணோம்?” என்று அழகிரி யாரிடமோ கேட்க, கூடையைத் தூக்குவதை விட்டுவிட்டுப் பின்னால் திரும்பி பார்த்தான் சிவசக்திவேல்.
தயங்கி தயங்கி கடை வாசலில் வந்து நின்றிருந்தாள் உதயதாரா.
அவளை அந்த நேரம் எதிர்பாராமல் அதிர்ந்து பார்த்தான் சிவசக்திவேல். அதிலும் அவளின் தோற்றம்?
அவள் அணிந்திருந்த குர்தி கசங்கியிருந்தது. தலைமுடியும் ஒழுங்காக வாரப்படாமல் கலைந்திருந்தது. முகத்தில் அதீத சோர்வும், வாட்டமும் தெரிந்தது.
அவளை இப்படி ஒரு தோற்றத்தில் அவன் பார்த்ததே இல்லை. வேலை முடிந்து வரும்போது கூட, அவளின் முகத்தில் லேசான களைப்பு இருக்குமே தவிர, அவளிடம் ஒருவித நிமிர்வும், மிடுக்கும் எப்போதும் இருக்கும்.
ஆனால், இப்பொழுது ஆளே மாறிப் போனவள் போல் காணப்பட்டாள். தொடர்ந்து அவளைத் தான் இமை சிமிட்டாமல் பார்த்துக் கொண்டிருப்பதை உணர்ந்த சிவசக்திவேல் சட்டென்று சுதாரித்து, “சொல்லுங்க மேடம், என்ன வேணும்?” என்று வியாபாரியாகக் கேட்டான்.
அவள் அவனுக்குப் பதில் சொல்லாமல் தயக்கத்தோடு கடைக்குள் நின்றிருந்த அழகிரியைப் பார்த்தாள்.
“நாங்க சீக்கிரம் கடையை மூடிட்டு வீட்டுக்கு கிளம்பணும் மேடம். என்ன வாங்க வந்தீங்கன்னு சொன்னீங்கன்னா… எடுத்து கொடுத்துவிட்டு எங்க வேலையை நாங்க பார்ப்போம்…” என்று சிவசக்திவேல் கறாராகச் சொன்னான்.
அவளிடம் அவன் முன்பு பேசாத தோரணை அது!
அவனையும் மீறி அவளின் மீது ஒருவித கோபம் எழும்பியிருந்தது.
உதவி செய்தவனையே ஏதோ காமக்கொடூரனை விரட்டுவது போல் விரட்டிவிட்டு, இப்பொழுது எதுக்கு இங்கே வந்து நிற்கிறாள்? என்று அவனுக்கு அவனே சமாதானம் செய்து வைத்திருந்த அவனின் மனம் அவளைக் கண்டதும் முணுமுணுவென்று முனகியது.
“நான் எதுவும் வாங்க வரலை. உங்ககிட்ட கொஞ்சம் பேசணும், தனியா!” என்றவளின் பார்வை மீண்டும் அழகிரியின் பக்கம் சென்று வந்தது.
அழகிரி இருவரையும் வியப்புடன் பார்த்தார்.
அவரின் பார்வையைக் கண்டு அவனுக்குத்தான் சற்றுச் சங்கடமாக இருந்தது
“என்கிட்ட பேசுறதுக்கு என்ன இருக்கு மேடம்? சாமான் வாங்க வரலைன்னா ப்ளீஸ், கிளம்புங்க! எனக்கு வேலை இருக்கு…” என்றான் அவளிடம்.
“உங்களைத் தொந்தரவு பண்றதுக்கு ஸாரி. ஒரு ஐஞ்சு நிமிஷம் ப்ளீஸ், பேசிட்டு கிளம்பிடுவேன்…” என்றாள்.
அவர்களுக்குள் நடந்து கொண்டிருக்கும் பேச்சு வார்த்தை ஒன்றும் புரியவில்லை என்றாலும் அதற்கு மேல் அவர்களுக்கு இடையே நிற்க முடியாமல், “தம்பி, இன்னும் இரண்டு மூனு கூடைதான் இருக்கு. நீங்க தூக்கி உள்ள வச்சுருவீங்க தானே? நான் கிளம்பிடட்டுமா?” என்று கேட்டார்.
அவளை யோசனையுடன் பார்த்துவிட்டடு, “சரிங்கண்ணே, நீங்க கிளம்புங்க. நான் எடுத்து வச்சு கடையை மூடிட்டு கிளம்பிக்கிறேன்…” என்று சொல்லி அவரை அனுப்பி வைத்தவன், உதயாவை பார்த்தான்.
“ஸாரி…” என்று தயக்கத்துடன் பேச்சை ஆரம்பித்த உதயா, “அன்ட் தேங்க்ஸ்…” என்றாள்.
அவன் அமைதியாக அவளைப் பார்க்க, “உங்களுக்கு நிச்சயம் என் மேல கோவம் இருக்கும். உதவி செய்தவரையே அப்படி விரட்டிவிட்டது என்னோட தப்புதான்! ஸாரி… அன்னைக்கு நான் இருந்த மனநிலை அப்படி. ஏதோ ஒரு நினைவில் நான் உங்ககிட்டையும் அந்த மாதிரி பிகேவ் பண்ணியிருக்கக் கூடாது. ஸாரி…” என்றாள் மீண்டும்.
“அட, விடுங்க மேடம். எனக்குப் புரிந்ததுதான். ஆனாலும், என்னையும் தப்பா நினைச்சிட்டீங்களோன்னு தான் எனக்குக் கொஞ்சம் வருத்தம்…” என்றான்.
“அச்சோ! கண்டிப்பா இல்லை. உங்களை நான் தப்பா நினைச்சு அப்படி நடந்துக்கலை. என்னமோ ஒரு மாதிரி மைண்ட் டிஸ்டர்பாகி…” என்றவள், அவனுக்குத் தெளிவான விளக்கம் சொல்ல முடியாமல் தடுமாறினாள்.
“புரியுது மேடம், விடுங்க…” என்றான்.
“தேங்க்ஸ். அன்னைக்கு நீங்க செய்தது பெரிய உதவி…”
“அந்த இடத்தில் யார் இருந்தாலும் பார்த்துட்டு சும்மா இருக்க முடியுமா மேடம்? இன்னும் கூட எனக்குக் கொதிக்கிது. எனக்கே அப்படி இருக்கும்போது, உங்க மனநிலையை என்னால் புரிஞ்சிக்க முடியுது. ஆனாலும், சொல்றேன்னு தப்பா எடுத்துக்காதீங்க மேடம். எதிர் வீட்டிலேயே அப்படி ஒருத்தன் இருந்திருக்கான். நீங்க கொஞ்சம் சுதாரிப்பா…” என்றவனைத் தீர்க்கமாகப் பார்த்தாள்.
“அவன் என்கிட்ட தப்பா நடந்துகிட்டது தப்பில்ல. நான் சுதாரிப்பா இல்லாததுதான் தப்புன்னு சொல்ல வர்றீங்களா?” என்று கேட்டாள்.
*****
“சக்தி சார், அவன்… அந்த விமலன் என் வீடு எதிரே காலியா இருந்த வீட்டுக்கு குடி வந்திருக்கான் சார்…” என்று அவள் பதற்றத்துடன் சொன்னதைக் கேட்டு அவனுக்கும் அதிர்ச்சிதான்.
“என்ன மேடம் சொல்றீங்க? அடிச்சு விரட்டிய பிறகும் அங்கே வந்திருக்கான்னா அவனுக்கு எவ்வளவு திமிர் இருக்கணும்? அவன் உங்ககிட்ட எதுவும் பிரச்சினை செய்தானா மேடம்?” என்று கேட்டான்.
“இல்லை, ஆனால்…” என்றவள் விமலன் பேசியதை சொல்ல, முஷ்டியை கோபத்துடன் இறுக்கினான் சிவசக்திவேல்.
“நீங்க கவனமா இருங்க மேடம். நான் இங்கே ஹாஸ்பிட்டலில் இருக்கேன். நான் சீக்கிரம் வந்து என்னன்னு பார்க்கிறேன்…” என்றான்.
அப்போதுதான் நினைவு வந்தது போல், “ஸாரி… ஸாரி சக்தி சார், நீங்க ஹாஸ்பிடல் போயிருப்பது நினைவு இல்லாம, நான் பாட்டுக்கு… நீங்க அங்கே பாருங்க…” என்று சொல்லிவிட்டு அழைப்பை துண்டித்தாள் உதயா.
அவள் அதீத பயத்திலும், பதற்றத்திலும் இருக்கும்போதுதான் நிதானத்தில் இருப்பதில்லை என்று சிவசக்திவேலுவும் உணர்ந்து கொண்டிருந்தான்.
அவளிடம் சொல்லிவிட்டு வந்துமே மறந்திருக்கிறாள் என்றால், அவள் இப்பொழுது எப்படிப்பட்ட மனநிலையில் இருப்பாள் என்பதை அவனால் புரிந்துகொள்ள முடிந்தது. உடனே கிளம்ப அவனின் மனம் பரபரத்தது தான். ஆனால், இங்கே தங்கையைக் கவனிக்க வேண்டுமே… என்று நினைத்தவன் தன்னைக் கட்டுப்படுத்திக் கொண்டான்.
அன்னையுடன் சென்று மீண்டும் மருத்துவரிடம் பேசிப் பார்த்தான். அவர் இப்பொழுது இந்திராவின் பிரசவத்தில் இருக்கும் சிக்கலை சொல்லி சிசேரியன்தான் வழி என்று உறுதியாகச் சொல்லிவிட்டார்.
மீண்டும் தங்கையின் கணவனுக்குத் தொடர்பு கொள்ள முயன்று, போராடி தொடர்பு கிடைத்ததும் பேசி அவனை வரச் சொன்னான்.
கணேசன் வந்ததும் அவனின் ஒப்புதலையும் வாங்கி, இந்திராவிற்குச் சிசேரியன் ஆரம்பிக்கப்பட்டது.
இங்கே பரபரப்பாக இருந்தாலும் சிவசக்திவேலின் மனம் உதயாவைத் தேடி ஓடியது.
இப்போது எப்படி இருக்கிறாளோ என்று நினைத்து தள்ளிச் சென்று அவளுக்கு அழைத்தான்.
உறங்காமல்தான் விழித்திருந்தாள் உதயா. இவன் அழைத்ததும் உடனே அழைப்பை ஏற்றாள்.
“அங்கே எதுவும் பிரச்சினை இல்லையே மேடம்?” என்று சிவா கேட்க,
அதற்குள் சற்று நிதானித்திருந்த உதயா, “அதெல்லாம் எதுவும் இல்லை சக்தி சார். நான் பத்திரமா இருக்கேன். மிட்நைட் ஆகிருச்சே… குழந்தை பிறந்துடுச்சா?” என்று கேட்டாள்.
“இல்லை மேடம், இப்பதான் சிசேரியன் பண்ண இந்திராவை உள்ளே அழைச்சுட்டு போயிருக்காங்க…” என்றான்.
“ஓ ஓகே, என்னைப் பத்தி கவலைப்படாதீங்க சார். நீங்க முதலில் அங்கே கவனிங்க. நான் வேற தேவையில்லாம உங்களை டிஸ்டர்ப் பண்ணிட்டேன். ஸாரி…” என்றாள்.
“என்ன நீங்க. இதுக்கெல்லாம் ஸாரி சொல்லிட்டு… நீங்க என்கிட்ட சொல்லலைனா தான் வருத்தப்பட்டிருப்பேன். அந்த வீணாப் போனவன் ஏதோ திட்டத்தோட தான் அங்கே வந்திருக்கான் போல. நீங்க ரொம்பக் கவனமா இருங்க. கதவை நல்லா லாக் பண்ணிக்கோங்க. அவன் கதவைத் தட்டினா திறக்காதீங்க. எதுவும் அவசரம்னா உடனே எனக்குப் போன் போடுங்க. கவனம் மேடம்!” என்றான் அக்கறையுடன்.
அவன் அவளுக்காகப் பதறி அக்கறையுடன் பேச, அவனின் வார்த்தைகள் ஒவ்வொன்றையும் இமைகளை மூடி செவிமடுத்து கொண்டிருந்திருந்தாள் உதயதாரா.
அவளையும் மீறி அவளின் இமையோரம் நனைந்தது.
“மேடம்?” அவளிடமிருந்து சத்தமே வரவில்லை என்றதும் அழைத்தான்.
கரகரத்த தொண்டையைச் செருமிக் கொண்டவள், “நான் பத்திரமா இருப்பேன் சக்தி சார். எனக்குத் தூக்கம் வருது. நான்…” என்று முனகினாள்.
“தூங்குங்க மேடம், நான் வைக்கிறேன்…” என்று அழைப்பை துண்டித்துவிட்டான்.
மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
குடும்பப் பாரத்தை சுமக்கவும் நாயகன்! தன் முந்தைய வாழ்க்கையை முற்றிலும் துறந்துவிட்டு தனித்து வாழும் நாயகி!
காய்கறிக் கடைக்காரனான நாயகனின் தடைபடும் திருமண யோகம்!
அவனுக்கு திருமணம் கை கூடி வந்ததா? நாயகியின் முன் கதை என்ன? கதையைப் படித்து தெரிந்து கொள்ளுங்கள்.
இந்தப் பக்கத்தில் உள்ள கதை / புத்தகம் ©Ezhilanbu அவர்களின் முழு காப்புரிமைக்கு உட்பட்டது.
❌ அனுமதி இல்லாமல் நகலெடுக்க, Screenshot எடுக்க, PDF / Audio / Video வடிவில் பகிர கடுமையாகத் தடை செய்யப்படுகிறது.
⚖️ மீறல் கண்டறியப்பட்டால், Copyright Act படி சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
Related products
-
ஞாபகம் முழுவதும் நீயே
Rated 5.00 out of 5 -
வல்லினமாய் நீ! மெல்லினமாய் நான்!
Rated 5.00 out of 5


Reviews
There are no reviews yet.