இன்னுயிராய் ஜனித்தாய்!
இன்னுயிராய் ஜனித்தாய்! — Preview
அவர்களும் இனியும் மற்றவர்களின் எந்தப் பேச்சுக்கும் இடம் தரக்கூடாது என்று நினைத்து விலகி இருந்தனர்.
குழந்தை வருணா தான் அவனைப் பார்க்கும் போதெல்லாம் தூக்கச் சொல்லி அழ ஆரம்பித்தாள். அது ரண வேதனையாகவே இருந்தாலும் நித்திலன் தன் விலகலிருந்து சிறிதும் பின்வாங்கவில்லை.
அன்று இரவு உணவகத்திற்குச் சென்று உணவு உண்டு விட்டு வீட்டிற்கு வந்து கொண்டிருந்தான் நித்திலன்.
அப்போது வாசலில் பாயை விரித்து அதில் சில பொம்மைகளைப் போட்டு குழந்தையை விளையாட விட்டிருந்தாள் துர்கா.
சற்று நேரம் வரை பேத்தியின் அருகில் இருந்த சபரிநாதன் கழிவறைக்குச் சென்று விட, நித்திலன் வந்து கொண்டிருந்த நேரம் துர்கா மகள் அருகில் நின்றிருந்தாள்.
அவளுக்கு உள்ளே வேலை இருந்ததால் தந்தை வரும் வரை மகளைப் பார்த்துக் கொண்டு நின்றாள்.
அப்போது தன் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்த நித்திலனை பார்த்ததும், அதுவரை அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த வருணா வேகமாக எழுந்து அவனிடம் தளிர்நடை போட்டு நடந்து வந்தாள்.
அவள் தன்னை நோக்கித்தான் வருகிறாள் என்று தெரிந்தாலும் நித்திலன் நிற்காமல் நடக்க, துர்காவோ வேகமாக மகளைத் தூக்கி பாயில் விட்டவள் “இங்கேயே உட்கார்ந்து விளையாடு கண்ணுமா…” என்றாள்.
நித்திலன் தூக்க மாட்டான் என்று அவளுக்குத் தெரியும் என்பதால் மகள் ஏமாந்து விடக்கூடாது என்று நினைத்தாள்.
ஆனால் துர்காவின் செய்கையில் நித்திலன் மனம் அடிப்பட்டுப் போனது.
அவனே விலகிப் போகிறவன் தான். ஆனாலும் விலக்கி வைப்பது போல் துர்காவின் செய்கையை உணர்ந்தான். அதேநேரம் நிதர்சனம் உறைத்ததால் மனதை தேற்றிக் கொண்டான்.
வருணாவோ தன்னை அவனிடம் போக விடாமல் அம்மா தடுத்துவிட்டாளே என்று அழ போகிறவள் போல் உதட்டை பிதுக்கினாள்.
அதனுடன் நித்திலனும் நிற்காமல் செல்ல, “பா…” என்று அவனை அழைத்தாள் வருணா.
அவள் அழைப்பு கேட்டு நித்திலன் சட்டென்று சிலை போல் நின்றான்.
என்ன சொல்லி அழைத்தாள்? என்ன சொல்லி அழைத்தாள்? என்று பரிதவித்தது அவனின் மனம்!
அவனுக்குப் பதில் சொல்வது போல் மீண்டும் அழைத்தாள் குழந்தை.
“பா… ப்பா…” என்று வருணா மீண்டும் அழைக்க ஆரம்பிக்க, அவள் புறம் திரும்பாமலே உறைந்து போய் நின்றிருந்தான்.
துர்காவிற்கும் திகைப்பு தான். தன் மகள் எப்படி அவனை அப்பா என்று அழைத்தாள்? அவளுக்குப் புரியவே இல்லை.
அவளும் ஒரு நொடி உறைந்து போனவள், பின் சட்டென்று தலையை உலுக்கிக் கொண்டு மகளை அதட்ட துர்கா வாயைத் திறந்த நேரம், அதுவரை சிலையாக நின்றிருந்த நித்திலன் உயிர் பெற்றது போல், படபடவென்று வேகமாகத் தன் வீட்டிற்குள் ஓடிச் சென்று கதவைப் படீரென்று அடித்துச் சாற்றினான்.
அவன் சென்ற வேகத்தைப் பார்த்துப் புரியாமல் மகளை அதட்டுவதை மறந்து விக்கித்து அவன் வீட்டு மூடிய கதவையே பார்த்தாள் துர்கா.
நித்திலன் உள்ளே சென்ற வேகத்தில் உள்ளே இருந்து ‘படீர்’ என்று எதையோ அறையும் சத்தம் வெளியே வரை கேட்க, திகைத்துப் போனாள் துர்கா. என்ன செய்கிறான்? என்ற கேள்வியுடன் கதவை வெறித்துக் கொண்டிருந்தாள்.
உள்ளேயோ நித்திலன் கதவை மூடிய வேகத்தில் கதவின் அருகிலேயே அப்படியே மண்டியிட்டு மடங்கி அமர்ந்தான்.
‘ப்பா…’ மீண்டும் வருணாவின் அழைப்பு காதிற்குள் ரீங்காரமிடுவது போல் இருக்க, தன் முகத்தை அழுந்த துடைத்துக் கொண்டவன், ஒரு வேகத்துடன் தரையில் ஓங்கி கையால் அடித்தான்.
பலமான அடி! கையே உடைந்து போனது போல் வலித்திருக்க வேண்டும். ஆனால் அவனுக்கு வலி உணர்வே இல்லை.
மனம் முழுவதும் ஒருவித பரவசம்!
என்னை எப்படி அழைத்தாள்? என்று நினைக்கும் போதே, ‘ப்பா…’ மீண்டும் வருணாவின் குரல் மனதிற்குள் எதிரொலித்தது!
“ஆஆஆஆ…” என்று வீடே அதிரும் வண்ணம் வாய் விட்டுக் கத்தினான்.
வாசலில் நின்றிருந்த துர்கா திடுக்கிட்டுப் போனாள்.
அவன் என்ன செய்கிறான் என்று புரியாமல் பயந்து போனாள். அவனின் சத்தத்தைக் கேட்டு மகளைக் கண்டிக்க வேண்டும் என்பதே அவளுக்கு மறந்து போனது.
இப்போது உள்ளே இருந்து, “ஹா…ஹா…ஹா…” என்று அவன் சிரிக்கும் சப்தம் பலமாகக் கேட்க, ‘அவனுக்கு என்ன பைத்தியம் பிடித்து விட்டதா?’ என்பது போல் குழம்பிப் போனாள் துர்கா.
அவன் ஏன் இப்படிச் செய்து கொண்டிருக்கிறான்? அவளுக்குப் புரியவே இல்லை.
ஏதோ வினோத நிகழ்வு நடந்து விட்டது போல் புரியாமல் குழம்பிப் போனாள் துர்கா.
அவள் குழப்பத்துடன் நின்று கொண்டிருந்த போதே உள்ளே சென்ற அதே வேகத்துடன் வெளியே வந்தான் நித்திலன்.
அவன் இருந்த கோலத்தைப் பார்த்து பயந்து ஒரு அடி பின்னால் எடுத்து வைத்தாள் துர்கா.
தலை கலைந்து, முகத்தில் வேர்த்துக் கொட்டிக் கொண்டிருக்க, கண்கள் சிவந்து காட்சி தந்தான்.
அவனின் கண்கள் இருந்த இருப்பே அவன் அழுதிருக்கிறான் என்பதைக் காட்டிக் கொடுத்தது.
‘ஏன் இப்படி இருக்கிறான்?’ துர்காவிற்குப் புரியவே இல்லை.
துர்காவின் அருகில் வந்தவன் அவளின் முகத்தை நிமிர்ந்து பாராமல் எங்கோ பார்த்துக் கொண்டு, “என்னை மன்னிச்சுடுங்க. ஒரே ஒரு முறை ப்ளீஸ்…” என்றான்.
அவன் என்ன செய்யப் போகிறான் என்று புரியாமல் பார்த்துக் கொண்டிருக்கும் போதே, கீழே அமர்ந்திருந்த வருணாவை கைகளில் ஆசையாக அள்ளிக்கொண்டு அவளின் பிஞ்சு கன்னத்தில் அழுத்தமாக முத்தமிட்டான்.
தன்னைக் கண்டுகொள்ளாமல் சென்றவன் திரும்பி வந்து கொஞ்சியதும் மகிழ்ந்த வருணா, தானும் அவன் கன்னத்தில் தன் பிஞ்சு இதழ்களைப் பதித்து, “ப்பா…” என்றாள் மீண்டும்!
நித்திலனிடம் விவரிக்க முடியா உணர்வு!
அப்போது அவனின் மேனி சிலிர்த்து அடங்கியதை கண் கூடாகக் கண்டாள் துர்கா.
‘இவன் ஏன் இவ்வளவு உணர்ச்சிவசப்படுகிறான்?’ மகள் அவனை அப்பா என்று அழைத்ததை எல்லாம் பின்னுக்குத் தள்ளி இந்தக் கேள்வி தான் அவளுக்கு முதன்மையாகத் தோன்றியது.
வருணாவின் ‘அப்பா’ என்ற அழைப்பில் மேனி சிலிர்க்க, அவனின் கண்களிலிருந்து கடகடவெனக் கண்ணீர் இறங்கி வந்தது.
ஒரு ஆண்மகன் அழுவான் என்பதை அன்று தான் கண்கூடாகக் கண்டாள் துர்கா.
“பா, ஊ ஊ…” அவன் அழவும் அடிப்பட்டு விட்டதோ என்ற எண்ணத்தில் குழந்தை கேட்க, “ஹாஹா…” என்று வாய் விட்டுச் சிரித்தவன், மீண்டும் குழந்தையின் இரு கன்னங்களிலும் மாறி மாறி முத்தமிட்டான்.
“அப்பா வாடா? நான் அப்பா வாடா?” என்று குழந்தையிடம் மனமுருக கேட்டான்.
அவன் கேள்வி புரிந்தது போல் “ப்பா…” என்றழைத்து உறுதியளித்தாள் வருணா.
பரவசத்துடன் குழந்தையின் முகத்தைப் பார்த்தவன், “இந்த ஜென்மத்தில் நான் பிறந்த பலனை அடைந்து விட்டேன்டா குட்டிம்மா…” என்று கரகரப்பான குரலில் சொன்னவன் அவளைத் தன் தோளில் சாய்த்து அணைத்துக் கொண்டான்.
குழந்தையும் கொண்டாட்டமாக அவனின் தோளில் சாய்ந்து கொண்டாள்.
அப்போது எதிரே இருந்த துர்காவைப் பார்த்து தளர்ந்த நித்திலன், தயக்கத்துடன் வருணாவை கீழே இறக்கி விட்டான்.
வருணாவும் அவன் தன்னைத் தூக்கி விட்டான் என்ற மகிழ்வில் விட்ட விளையாட்டைத் தொடர ஆரம்பித்தாள்.
‘என்னடா நடக்குது இங்கே?’ ஒன்றும் புரியாமல் மலைத்துப் போய் நின்றிருந்தாள் துர்கா.
அவளின் முகத்தைச் சில நொடிகள் கூர்ந்து பார்த்த நித்திலன், அதற்கு மேல் அங்கே நிற்காமல் வீட்டிற்குச் செல்ல ஆரம்பிக்க, தன் மலைப்பை எல்லாம் புறம் தள்ளிவிட்டு, “நில்லுங்க!” என்று கோபத்துடன் அழைத்தாள் துர்கா.
***
நீண்ட மாதங்களுக்குப் பிறகு கிடைத்த அன்னை, தமையனின் அருகாமை அரவணைப்பில் குழந்தையாக உடைந்து தான் போனான் அந்த வளர்ந்த குழந்தை.
சற்று நேரம் அவனிடம் ஒன்றும் கேட்காமல் இருவரும் ஆதரவாக அமர்ந்திருந்தனர்.
நேரம் செல்ல, “நீ இப்படித் தவிச்சு போற அளவுக்கு என்ன நடந்ததுபா?” என்று மெல்ல மகனிடம் கேட்டார் செவ்வந்தி.
“அம்மா, இன்னைக்கு ஒரு சந்தோஷமான விஷயம் நடந்துச்சு மா…” என்று அவ்வளவு நேரமிருந்த வேதனையைப் புறம் தள்ளி அன்னையின் முகம் பார்த்து மகிழ்ச்சியுடன் சொன்னான் நித்திலன்.
‘சந்தோஷமான விஷயம் நடந்தால் ஏன் நீ இவ்வளவு வருத்தப்பட வேண்டும்?’ என்று மகனிடம் கேட்க துடித்த கேள்வியைத் தனக்குள் அடக்கிக் கொண்டார் செவ்வந்தி.
ஆனால் அவரின் பெரிய மகன் அடக்கி வைத்திருக்கவில்லை.
“சந்தோஷமான விஷயம் நடந்ததா? என்னடா சொல்ற? ஆனா கொஞ்ச நேரத்துக்கு முன்னாடி உன் முகத்தைப் பார்த்தால் அப்படி இல்லையே?” என்றான் நிரஞ்சன்.
“அது வேற அண்ணா, ஆனா அதுக்கு முன்னாடி நான் அவ்வளவு சந்தோஷமா இருந்தேன் ணா…” என்றவனின் முகம் மகிழ்ச்சியில் விகசித்து இருந்தது.
“என்ன நடந்துச்சுன்னு சொன்னால் தானே தெரியும்?” நிரஞ்சன் கேட்க,
“நான் அப்பாவாகிட்டேன் அண்ணா…” என்று நித்திலன் சொல்ல, தாய், தமையனின் முகங்கள் வெளிறிப் போயின.
“என்ன நித்திலா சொல்ற?” என்று அதிர்ந்த குரலில் கேட்டான் நிரஞ்சன்.
“நீ… நீ… என்னபா? எப்படி?” என்று மேலும் கேட்க முடியாமல் தடுமாறி நிறுத்தினார் செவ்வந்தி.
“ஆமாம்மா… உண்மையாத்தான் சொல்றேன். என்னையும் ஒரு குழந்தை அப்பான்னு கூப்பிட்டுச்சுமா. அப்ப நான் எப்படி உணர்ந்தேன் தெரியுமா?” என்று லயித்துக் கூறிய மகனை கலக்கத்துடன் பார்த்தார் செவ்வந்தி.
“நித்திலா, என்ன சொல்ற நீ? எந்தக் குழந்தை அப்படிக் கூப்பிட்டுச்சு?” என்று நிரஞ்சன் விசாரித்தான்.
‘எங்களுக்குத் தெரியாமல் திருமணம் செய்து, குழந்தையும் பிறந்து விட்டதா?’ என்று கோபம் கொள்ளவில்லை, குதிக்கவும் இல்லை.
நித்திலன் அப்படிச் செய்ய மாட்டான் என்று நன்கு அறிந்தவர்களாக நிதானமாகவே விசாரித்தனர்.
“வருணா கூப்பிட்டாள் ணா. என்னோட குட்டிம்மா அவள். என் மேல அவளுக்கு அவ்வளவு பிரியம்…” என்று அவன் ஆனந்தமாகக் கூற, செவ்வந்தியும், நிரஞ்சனும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.
“யார் பொண்ணுபா அது?” என்று செவ்வந்தி விசாரிக்க,
“பக்கத்து வீட்டில் இருக்கும் துர்காவோட பொண்ணுமா…”
“ஓ! அந்தக் குழந்தையோட அப்பா எங்கே?” என்று யோசனையுடன் கேட்டார்.
“வருணா பாவம் மா. அவளுக்கு அப்பா இல்லை. அவள் பிறக்கும் முன்னாடியே ஒரு ஆக்சிடென்ட்ல இறந்து போயிட்டார்…” என்று அவன் சொன்னதுமே துர்கா ஏன் மகனை திட்டிக் கொண்டிருந்தாள் என்பதின் காரணம் அவருக்குப் புரிந்து போனது.
கணவன் உயிரோடு இல்லாத நிலையில் தன் குழந்தை பக்கத்து வீட்டுக்காரனை ‘அப்பா’ என்று அழைத்தால் அவள் திட்டாமல் என்ன செய்வாள் என்று தான் அவருக்குத் தோன்றியது.
“வருணான்னா எனக்கும் ரொம்பப் பிடிக்கும் மா. அவ்வளவு சுட்டி அவள். என்கிட்ட வந்தால் அவளோட அம்மாகிட்ட கூடப் போகமாட்டேன்னு அடம்பிடிப்பாள். நான் அவளுக்குச் சாப்பிட கொடுத்தால் என்கிட்ட சமத்தா சாப்பிடுவாள்…” என்று அவன் குழந்தையைப் பற்றிப் பேசிக் கொண்டே போக, மீண்டும் மூத்த மகனும், அன்னையும் பார்வையைப் பரிமாறிக் கொண்டனர்.
“அவள் இன்னைக்கு என்னை அப்பான்னு கூப்பிடும் போது அப்படியே என் நாடி நரம்பெல்லாம் ஆடிப் போச்சுமா. இந்த வார்த்தையைக் கேட்கத்தான் நான் இன்னும் உயிரோட இருக்கேன் போல…” என்று குரல் கரகரக்க சொல்ல,
“நித்திலா…” என்று இருவரும் அதிர்ந்து குரல் கொடுத்தனர்.
“நான் சொன்னது உண்மை தான்மா? ஒரு வருஷத்துக்கு முன்னாடியே இந்த உயிர் போயிருக்க வேண்டியது. ஆனா என் உயிர் போவதை ஏன் அந்த ஆண்டவன் விரும்பலைன்னு கொஞ்ச நாளைக்கு முன்னாடி கூட வருத்தப்பட்டிருக்கேன். ஆனா இன்னைக்குத் தான் அந்த ஆண்டவன் என்னை ஏன் உயிரோட வச்சுருக்கானே புரிந்தது…” என்று லேசாகக் கலங்கிய கண்களுடன் சொன்னான் நித்திலன்.
“என்னடா இது இப்படி எல்லாம் பேசிட்டு இருக்க? என்னமோ வாழ்ந்து முடிச்ச கிழவன் போல…” என்று நிரஞ்சன் கடிந்து கொள்ள, செவ்வந்தியோ மகனின் பேச்சை கேட்டு வாய் விட்டே அழ ஆரம்பித்தார்.
“அம்மா, எதுக்கு இப்ப அழறீங்க? நான் இப்ப சந்தோஷமாத்தானே இருக்கேன். அழாதீங்க…” என்று அன்னையைத் தேற்றியவன்,
“வாழ்ந்து முடிச்ச கிழவன் சாவை பற்றிப் பேசுறது போல, வாழவே லாயிக்கில்லாத நானும் பேசலாம் ணா…” என்று நித்திலன் வரண்ட குரலில் கூற,
“டேய், என்ன பேச்சு பேசுற? இப்படியெல்லாம் பேசக் கூடாதுன்னு உன்கிட்ட சொல்லிருக்கேன்ல…” என்று நிரஞ்சன் அதட்ட,
விரக்தியான சிரிப்பை மட்டும் பதிலாகத் தந்தான் நித்திலன்.
மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
கணவனை இழந்து பெண் குழந்தையுடன் பிறந்த வீட்டில் தந்தையுடன் வசிக்கும் நாயகி!
பக்கத்து வீட்டில் வசிக்கும் நாயகன்!
நாயகியின் குழந்தையின் மீது நாயகனுக்கு ஏற்படும் பிணைப்பு அவனின் மனத்தை தடம் புரள செய்கிறது.
அவன் தன் குழந்தையுடன் நெருங்க கூடாது என்று நாயகி விலகி நிற்க சொல்ல, அவளின் தந்தையோ அவனுக்கே அவளை மணம் முடித்து வைக்க நினைக்கிறார்.
தந்தையின் ஆசையை நிறைவேற்றுவாளா நாயகி?
திருமணமாகாத நாயகன் குழந்தையுடன் இருக்கும் நாயகியை திருமணம் செய்து கொள்வானா? என்பதைக் கதையில் தெரிந்து கொள்ளலாம்.
கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை தளத்தில் ரிவ்யூ & ரேட்டிங் மூலம் பகிர்ந்து கொள்ளவும்!
Related products
-
ஜீவசுரபி
Rated 5.00 out of 5 -
யுத்தம் செய்தாய் என்னுள்ளே
Rated 5.00 out of 5


Reviews
There are no reviews yet.