சிந்தையில் பதிந்த சித்திரமே!
சிந்தையில் பதிந்த சித்திரமே! — Preview
“எனக்கு உங்களை ரொம்பப் பிடிச்சிருக்கு. உங்களைக் கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன்…” என்று சுற்றி வளைக்காமல் தன் மனதை சொன்னாள் நயனிகா.
எந்த வார்த்தைகளைத் தன்னிடம் அவள் சொல்லிவிடக் கூடாது என்று விலகி விலகிப் போனானோ அதே வார்த்தைகளைச் சொல்லியே விட்டிருந்தாள் நயனிகா.
அந்த வார்த்தைகளைக் கேட்க பிடிக்காதவன் போல் கண்களை இறுக மூடி திறந்தான். அவன் தாடையின் இறுக்கம் மட்டும் சற்றும் தளரவில்லை.
“நான் உன் லெக்சரர் நயனிகா? அது உனக்கு ஞாபகம் இருக்கா இல்லையா?” எனக் கடுமையாகக் கேட்டான்.
“சின்னத் திருத்தம். நீங்க என் லெக்சரரா இருந்தீங்க. ஆனா இப்ப இல்லையே? ஏதோ ஒரு காலேஜ் லெக்சரரை கல்யாணம் செய்து கொள்வது அவ்வளவு ஒன்னும் தப்பில்லையே?” என்றாள்.
“ம்ப்ச்…” என்று சலித்துக் கொண்டவன், “உனக்குச் சொன்னால் புரியாது நயனிகா. நான் யாரையும் கல்யாணம் பண்ணிக்கிற மனநிலையில் இல்லை. தேவையில்லாம ஆசையை வளர்த்துக்காம ஒழுங்கா படிக்கிற வழியை மட்டும் பார்…” என்றான்.
“நான் நல்லாத்தான் படிக்கிறேன். ஆனா நீங்க ஏன் கல்யாணம் பண்ணிக்க மாட்டீங்க? ஒருவேளை நீங்க கல்யாணம் பண்ணிக்கிற அளவுக்கு நான் அழகா இல்லையா?” என்று கேட்டாள்.
“நான் சொன்னதைக் காதில் வாங்கினயா இல்லையா? உன்னை மட்டும் இல்லை நான் யாரையுமே கல்யாணம் பண்ணிக்கிறதாக இல்லை. என் வாழ்க்கையில் காதல், கல்யாணம் எதுக்கும் இடமில்லை…” என்றான் உறுதியுடன்.
“ஏன்?” என்று அதிர்வுடன் கேட்டாள்.
“ஒரு பொண்ணோட வாழ்க்கையைக் கெடுக்க எனக்கு விருப்பமில்லை…” என்றவனைப் புரியாமல் பார்த்தாள்.
“புரியாத மாதிரி நடிக்காதே நயனிகா. உனக்கே காரணம் தெரியும். போதும்! இதுக்கு மேல நான் எதுவும் பேச தயாராக இல்லை. இடத்தைக் காலி பண்ணு…” என்று விரட்டினான்.
அவனைக் குழப்பத்துடன் பார்த்தவள், “நிஜமா எனக்கு என்ன காரணம்னு தெரியலை. சொல்லுங்க, ப்ளீஸ்…” என்று கேட்டாள்.
அவளைக் கோபத்துடன் பார்த்தவன் தன் கோபத்தை அடக்கும் பொருட்டுத் தனது இடது கையால் தலையைக் கோதி அழுந்த பிடித்து விட்டுக் கொண்டான்.
ஆனாலும் அவனின் கோபம் மட்டுப்படாமல் திமிறிக் கொண்டு வெளியே வந்தது.
“என்னடி… என்னடி உனக்குத் தெரியாது? எனக்கு ஒரு கை இல்லைன்னு உனக்குத் தெரியாது? தெரியாதுன்னு மட்டும் பொய் சொல்லாதே. உனக்குத் தெரியும்னு எனக்கும் தெரியும். வேண்டாம்! என்னை இன்னும் பேச வைக்காதே. போ… என் வீட்டை விட்டு போ…” என்று ஆத்திரமாகக் கத்தினான் கதிர்நிலவன்.
அவனின் கோபத்தில் அரண்டு கதவோடு போய் ஒட்டிக் கொண்டாள் நயனிகா.
அவளின் இதயம் அதிவேகமாகத் துடிக்க ஆரம்பித்தது.
அவனுக்கோ கோபத்தில் முகதசைகள் மட்டுமில்லாது தோள்களும் லேசாக ஆடி சிலிர்த்துக் கொண்டு நின்றன.
அவனின் அதீத கோபத்தைப் பயத்துடன் பார்த்த படி அப்படியே நின்று விட்டிருந்தாள்.
சில நொடிகளில் தன்னை நிதானத்திற்குக் கொண்டு வந்தவள், “உங்களுக்குத் தான் இரண்டு கையும் இருக்கே? அப்புறம் என்ன?” என்று மெல்ல கேட்க,
அவனின் கோபம் உச்சத்திற்கு ஏற ஆரம்பித்தது.
“என்ன என்னைக் கேலி பண்றீயா?” என்று ஆத்திரத்துடன் கேட்டான்.
“நிஜமாத்தான் சொல்றேன். நான் ஏன் உங்களைக் கேலி பண்ணனும்? உங்களைக் கேலி செய்தால் அது நான் என்னையே கேலி செய்வது போல் தான்…” இப்போதும் அமைதியாகவே வந்தது அவளின் பதில்.
முன்பு அவனின் கண்களைப் பார்க்க தயங்குபவள், இப்போது நேருக்கு நேராக அவன் கண்களைக் காதலுடன் பார்த்துக் கொண்டே தான் பேசினாள் நயனிகா.
அவளின் காதல் பார்வையை ஏற்க முடியாமல் இப்போது முகத்தைத் திருப்பிக் கொண்டவன் என்னவோ கதிர்நிலவன் தான்.
அவளின் பின்பாதி பேச்சை காதில் வாங்காமல், “நீ பண்றதுக்குப் பேரு கேலி இல்லாம வேற என்ன? இது… இதுவா என் கை? நல்லா பார்த்து சொல்லுடி… இதுவா என் கை?” என்று கோபத்துடன் கேட்டவன், தன் வலதுகையை மறைத்துக் கொண்டிருந்த முழு நீள கை சட்டை துணியை மடக்கி விட்டான்.
“இது மரக்கட்டை டி. வெறும் மரக்கட்டை. இந்த மரக்கட்டைக்கு உயிர் கிடையாது. உணர்வுகள் கிடையாது. ரத்தம், சதை, நரம்பு எதுவுமே கிடையாது…” என்று அவனின் முழங்கையிலிருந்து மாட்டப்பட்டிருந்த செயற்கை கையை அவளின் முகத்திற்கு நேராகத் தூக்கி காட்டி ஆத்திரத்துடன் சொன்னான் கதிர்நிலவன்.
***
அவனை நிமிர்ந்து கூடப் பார்க்காமல் விரக்தியுடன் அமர்ந்திருந்தாள் நயனிகா.
“அக்கா…” என்று மெல்ல அழைத்தான்.
“கதிர் சார்கிட்ட பேசி பார்த்தியா? பேசாம அவரை வந்து உன்னைக் கூட்டிட்டுப் போகச் சொல்லுக்கா. அப்பா அப்போ என்ன செய்றார்னு பார்ப்போம்…” என்று ரகசியமாகச் சொல்லிய தம்பியை வேதனையுடன் பார்த்தாள்.
“ஏன்கா?” தமைக்கையின் பார்வை புரியாமல் கேட்டான்.
“அப்பா என்னை வீட்டை விட்டு வெளியவே போக விடலைன்னு உனக்கே தெரியுமேடா…” என்றாள்.
“அது எனக்குத் தெரியாதாக்கா? போன்ல பேச வேண்டியது தானே?” என்று கேட்டான்.
“போனை எடுத்தா கேட்க மாட்டேனா?” என்று விரக்தியுடன் கேட்டாள்.
“என்னக்கா சொல்ற?”
“ம்ம்… அப்பா சொன்னதைத் தான்டா அவரும் சொன்னார். அவருக்குக் கை இல்லாததால் என்னைக் கல்யாணம் பண்ணிக்க மாட்டாராம். இதை என்கிட்ட அவர் எப்பவோ சொல்லிட்டார். அன்னைக்கு அதைப் பத்தி பேசிட்டு வரும் போது தான் அப்பா பார்த்துட்டார். அதுக்குப் பிறகு இங்கே நடந்ததை அவரிடம் என்னால் சொல்ல முடியலை.
என் போன் நம்பரை பார்த்தாலே எடுக்க மாட்டேங்கிறார். அவர் ஆதரவு இருந்தாலாவது அப்பாவை இன்னும் நான் எதிர்த்திருப்பேன். ஆனா… அவரும் என்னை விலக்கி நிறுத்தத்தான் நினைக்கிறார். அப்படி இருக்கும் போது நான் என்ன செய்வது?” என்றவள் உடைந்து போய் அழ ஆரம்பித்தாள்.
தன் காதல் இப்படி ஒரு தலை காதலாகிவிட்டதே என்று அழுதாளா? அல்லது மனம் நிறைய ஒருவனைச் சுமந்து கொண்டு இப்பொழுது இன்னொருவன் முன்னால் நிற்க வேண்டிய நிலை வந்து விட்டதே என்று அழுதாளா? இல்லை, தன் காதல் தன்னோடு மட்டுமே புதைந்து போய் விடுமோ என்று நினைத்து அழுதாளா? ஏதோ ஒன்று அவளால் அழுகையைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை.
வாய் விட்டு கதறி அழும் அக்காவை பார்த்த தயாவின் கண்களிலும் கண்ணீர் சரம் கோர்த்துக் கொண்டு நின்றது.
தன் கண்களை மெல்ல துடைத்துக் கொண்டவன், அறையை விட்டு எழுந்து சென்றான்.
கடைக்குப் போவது போல் வெளியே சென்றவன், தந்தைக்குத் தெரியாமல் கதிர்நிலவன் வீட்டுக் கதவை தட்டினான்.
அவன் வந்து கதவை திறக்க, வேகமாக உள்ளே சென்று கதவை அடைத்தவன், “ஏன் சார்… ஏன் என் அக்காவை இப்படி அழ வைக்கிறீங்க? அவள் உங்களை லவ் செய்ததைத் தவிர வேற என்ன தவறு செய்தாள்?” என்று வீட்டிற்குள் நுழைந்ததும் நுழையாதுமாகக் கோபமாகப் பொரிந்த தயாவை புரியாமல் பார்த்தான் கதிர்நிலவன்.
“உங்களை அவள் லவ் பண்ற விஷயம் எங்க அப்பாவுக்குத் தெரிஞ்சி போயிருச்சு. எங்க வீட்டில் ஒரு வாரமா சண்டையும், அழுகையும் தான்…” என்றவனை இப்போது கதிர்நிலவன் எந்தத் திடுக்கிடலும் இல்லாமல் சலனமே இல்லாமல் பார்த்தான்.
“அப்பா உடனே அவளுக்குக் கல்யாண ஏற்பாடு பண்ணிட்டார். இன்னைக்குப் பொண்ணு பார்க்க வர்றாங்க. அங்கே என்னோட அக்கா உயிரே போற மாதிரி அழுதுட்டு இருக்காள்…” என்று சொல்லும் போதே அவனின் கண்கள் கலங்கி விட, லேசாக விசும்பிய படி கண்களைச் சிறு பையன் போல் துடைத்துக் கொண்டான் தயா.
கதிர்நிலவனிடம் எந்த எதிர்வினையும் இல்லை. ஏதோ பிடித்து வைத்த பொம்மை போல் ஆடாமல் அசையாமல் நின்றிருந்தான்.
“உங்களுக்குக் கை இல்லைன்னு என் அக்காவே பெருசா எடுத்துக்கலைன்னும் போது அவள் காதலை ஏற்றுக் கொள்வதில் உங்களுக்கு என்ன சார் கஷ்டம்? உங்களை உயிரா நினைக்கும் என் அக்காவுக்கு இவ்வளவு தான் உங்களிடம் மதிப்பா? உங்களை ரொம்ப நல்லவர்ன்னு நினைச்சேன் சார். ஆனா என் அக்காவை அழ வச்சு இப்படி வேடிக்கை பார்க்கிறீங்களே. இது உங்களுக்கே நியாயமா இருக்கா?” என்று தான் சரியாகத்தான் அவனிடம் கேள்விகள் கேட்கிறோமா என்ற புரியாத பாவனை அவனிடம் இருந்தாலும், தன் அக்காவின் அழுகையை நிறுத்த வேண்டும் என்றே தனக்குத் தோன்றியதை கேட்டான்.
தன் கேள்விக்கு ஏதாவது பதில் சொல்வானா என்பது போல் கதிர்நிலவனைப் பார்க்க, ‘பேசிவிட்டாயா? அவ்வளவு தானே?’ என்பது போல் பார்த்துக் கொண்டு நின்றான் அவன்.
இப்படி மரம் போல் நிற்பவனிடம் மேலும் என்ன கேட்பது என்று அவனுக்கே தெரியவில்லை.
“உன் அக்காவை உங்க அப்பா பார்க்கிற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிக்கிட்டுச் சந்தோஷமாக இருக்கச் சொல்…” என்று மெல்ல உதிர்ந்தது கதிர்நிலவன் வாயிலிருந்து வார்த்தை என்னும் முத்துக்கள்.
அப்படிச் சொன்னவனை நம்பவே முடியாமல் பார்த்த தயா, அடுத்த நிமிடம் அங்கே நிற்காமல் விருட்டென்று வெளியே சென்றுவிட்டான்.
“உன் காதலை பத்தி கொஞ்சமும் புரிஞ்சுக்காத மனுஷனுக்காக இன்னும் ஏன்கா இப்படி அழுதுட்டு இருக்க?” மீண்டும் தமைக்கையிடம் சென்று கோபமாகத் தயா கேட்க, தம்பியை மெல்ல நிமிர்ந்து பார்த்தாள்.
“நீ தான் இப்படி அவரையே நினைச்சுட்டு அழுதுட்டு இருக்க. ஆனா அவர்…” என்றவன் சொல்ல முடியாமல் தயக்கத்துடன் தடுமாறினான்.
“டேய் தயா, அவரைப் பார்த்தியா?” என்று ஆர்வமாகக் கேட்டாள்.
அவளின் ஆர்வம் அவனை வலிக்க வைத்தது.
‘ஆமாம்’ என்று மெல்ல தலையை மட்டும் அசைத்தான்.
“என்ன சொன்னார்?” என்று பரபரப்பாகக் கேட்டாள்.
அவன் சொல்லாமல் அமைதியாக இருக்க, “சொல்லுடா, என்ன சொன்னார்?” என்று தம்பியின் சட்டையைப் பிடித்து உலுக்கினாள்.
“அப்பா பார்க்கிற மாப்பிள்ளையைக் கல்யாணம் பண்ணிட்டு நீ சந்தோஷமா இருக்கவாம்…” என்று அவள் முகம் பார்க்காமல் வருத்தத்துடன் அவன் சொல்ல, தன் தம்பியின் சட்டையைப் பிடித்திருந்தவளின் கை மெல்ல நழுவ, அவளின் கண்கள் உயிர் போகும் வலியை பிரதிபலித்தன.
“அப்படியா சொன்னார்?” என்று உயிரே இல்லாதவள் போல் கேட்டாள்.
தயா வேதனையுடன் தலையை அசைக்க, தன் கண்களை வேகமாகத் துடைத்துக் கொண்டாள் நயனிகா.
“சரிதான். அவர் சொன்னால் செய்துட வேண்டியது தான். நீ வெளியே போ தயா. மாப்பிள்ளை வீட்டுக்காரங்க வர்ற நேரம் ஆச்சு. நான் கிளம்புறேன்…” என்ற தமக்கையை வியப்பாகப் பார்த்தான்.
‘என்ன சொல்கிறாள் இவள்? இவ்வளவு நேரம் அவள் அழுத அழுகை என்ன? இப்போது இப்படிச் சொல்கிறாளே?’ என்று நினைத்தவண்ணம் அவளைப் பார்த்தான்.
“போ தயா…” என்று அவள் பிடிவாதமாகச் சொல்ல, எழுந்து வெளியே வந்தான்.
ஆனால் இன்னும் அவளின் பேச்சை அவனால் நம்ப முடியவில்லை. ‘அது எப்படி அவளால் சட்டென்று தன்னை மாற்றிக் கொள்ள முடியும்?’ என்று நினைத்தவனுக்கு மனதில் ஏதோ ஒரு உறுத்தல் உண்டானது.
‘அக்கா வேற எதுவும் யோசிக்கிறாளோ?’ என்று குழம்பி தவித்துப் போனான்.
அவனின் உறுத்தல் சரிதான் என்று அடுத்தச் சில மணிநேரத்தில் நிரூபணம் ஆனது.
மாப்பிள்ளை வீட்டுக்காரர்களும் வந்து பொண்ணை அழைத்து வர சொல்ல, அபிராமி மகளின் அறை கதவை தட்ட, நயனிகாவோ கதவை திறக்கவே இல்லை.
“என்னாச்சு? பொண்ணு ஏன் கதவை பூட்டிட்டு வெளியே வர மாட்டேங்குது?” என்று வந்தவர்கள் கேள்வி கேட்க ஆரம்பித்தனர்.
அறைக்குள்ளோ மணிக்கட்டில் வெட்டிய காயத்திலிருந்து ரத்தம் வடிந்து தரையில் சிறு குளமாகத் தேங்கியிருக்க, நயனவிழிகள் மேல் நோக்கி சொருகி கொள்ள, உயிர்நாடியின் துடிப்பை சிறிது சிறிதாக இழந்து கொண்டிருந்தாள் நயனிகா.
மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்!
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
நாயகியின் கல்லூரி பேராசிரியராக இருக்கும் நாயகன்.
அவளுக்கு அவன் மீது காதல் வர, நாயகனோ மறுக்கிறான்? அதன் காரணம் அறிந்தும் அவளின் காதல் சிறிதும் மாறாமல் இருக்க, நாயகனோ தன் பிடிவாதத்தை சிறிதும் தளர்த்தவில்லை.
நாயகன் தன் பிடிவாதத்தை விட்டு இறங்கி வந்தானா? நாயகியின் காதலை ஏற்றுக் கொண்டானா? என்பதைக் கதையில் காணலாம்.
கதையைப் படித்து உங்கள் கருத்துக்களை தளத்தில் ரேட்டிங் & ரிவ்யூ மூலம் பகிர்ந்து கொள்ளுங்கள்.


Reviews
There are no reviews yet.