கடந்த ஐந்து நாட்களும் அவனின் இந்தச் செய்கை அவளுக்குப் பழகிப் போயிருந்தது தான். ஆனாலும் இன்று அவனின் அண்மையில் நெருப்பின் மேல் இருப்பது போல் தகித்துப் போனாள்.
“அப்புறம் இப்பத்தான் நம்ம மேட்டருக்கு வர நேரம் வந்தது. எங்கே சொல்லுப் பார்ப்போம்… அன்னைக்கு உன்னைப் பொண்ணு பார்க்க வந்த மேட்டர் என்னாச்சு?” என்று நிதானமாகக் கேட்டான் விக்ரம்.
“இன்னைக்கும் உனக்குப் பதில் வரப் போவது இல்லை. அப்புறம் எதுக்குத் தேஞ்ச ரெக்கார்ட் மாதிரி கேட்ட கேள்வியே கேட்டுட்டு இருக்க விக்கி?” என்று கேட்டாள் காவ்யா.
உதட்டை அவஸ்தையுடன் கடித்துக் கொண்டாள் மிருதுளா.
“அப்படியா சொல்ற காவ்யா? அப்போ இன்னைக்கும் எனக்குப் பதில் கிடைக்காதோ?” என்று கேள்வி அவளிடமிருந்தாலும், பார்வை என்னவோ மிருதுளாவை விட்டு அகலவில்லை.
“எனக்கு நம்பிக்கை இல்லை…” என்று தோளை குலுக்கினாள் காவ்யா.
“ம்கூம்… சரிதான், இருந்துட்டு போகட்டும். ஆனால், இது கூட நல்லாத்தான் இருக்கு. ஏன் தெரியுமா? நான் இப்படி அவங்க பக்கத்தில் உட்கார்ந்து இருப்பது மிருதுளாவுக்குப் பிடிச்சிருக்கு. அதான், நான் தினமும் இப்படி வந்து உட்காரணும் என்ற ஆசையில் என் கேள்விக்குப் பதில் சொல்ல மாட்டிங்கிறாங்க. என்ன சரிதானே மிருதுளா?” என்று ஆசை பொங்க கேட்டான்.
அதற்கு மேல் மிருதுளாவால் பொறுக்கவே முடியாமல் போக, தன் மௌன விரதத்தை முடித்துக் கொண்டாள்.
“இல்லை… இல்லை… அப்படி எதுவும் எனக்கு ஆசையில்லை…” என்று பதறி கத்தியிருந்தாள் மிருதுளா.
அடுத்த நொடி மூன்று ஜோடி கைகளிலிருந்து எழுந்த கரவோஷம், அந்த அலுவலகத்தின் மூலை முடுக்கெல்லாம் எதிரொலித்தது.
தான் பேசிவிட்டதை உணர்ந்து, தன் தலையில் கைவைத்தாள் மிருதுளா.
தான் விக்ரமிடம் பேசியதை, அங்கிருந்த மற்றவர்கள் கைதட்டிய பிறகு தான் உணர்ந்திருந்தாள்.
“சூப்பர் விக்கி!” என்று கூவினான் பரத்.
“டேய்! போதும்டா. பொண்ணு மிரளுது பார். அப்புறம் திரும்ப மௌன பூட்டுப் போட்டுக்கப் போகுது…” என்று அவனை அடக்கிய விக்ரம்,
“இதுக்கெல்லாம் எதுக்குச் சோகம் மிருது? நீ பேசியதில் எங்க எல்லாருக்கும் எவ்வளவு சந்தோஷம் பார். ஒருத்தரை சந்தோஷமா வச்சுக்கிறதே பெரிய விஷயம். இங்கே உன் பேச்சால் எங்க நாலு பேரை சந்தோஷப்படுத்தியிருக்க. இதுக்கு நீயும் சந்தோஷம் தான் படணுமே தவிர, வருத்தப்படக் கூடாது…” என்றான் மென்மையாக.
அவன் சொல்வது எல்லாம் சரிதான். ஆனால், தன் பேச்சு, அடுத்து என்ன கொண்டு வருமோ? என்ற பயம் தான் அவளை ஆக்கிரமித்தது.
“ம்ம், சொல்லு. அதான் பேசியாச்சே? அப்படியே என் கேள்விக்குப் பதிலையும் சொல்லிடு. நான் இங்கிருந்து எழுந்து போயிடுறேன்…” என்றான்.
இப்போது மீண்டும் மௌனமானாள் அந்த மௌனப்பாவை!
என் மனம் நீ அறிவாய்
உந்தன் எண்ணமும் நானறிவேன்
இன்னமும் ஊமையைப் போல்
மௌனம் ஏனடி தேன் மொழியே
என்று பாடி அவளின் மௌனத்தைக் கலைக்க முயன்றான் விக்ரம்.
அப்போதும் அவள் அழுத்தமாக இருக்க, “சோ, நான் சொன்னது சரிதான். நான் உன் பக்கத்தில் இருப்பது உனக்குப் பிடிச்சிருக்கு அப்படித்தானே?” என்றான் மீண்டும்.
அவன் கண்கள் நகைத்து நகையாடின.
அதற்கு மேலும் மௌனமாக இருந்தால், அது தான் என்று முடிவே கட்டிவிடுவான் என்று நினைத்தவள், “அப்படி ஒன்னும் எனக்கு ஆசையில்லை. பிளீஸ்! இங்கிருந்து எழுந்து போங்க…” என்றாள் கெஞ்சலாக.
‘அப்படி வா வழிக்கு’ என்பது போல் அவளைப் பார்த்தவன், “நான் கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லு, போயிடுறேன்…” என்றான்.
“ம்ப்ச்!” என்று சலித்துக் கொண்டாள் மிருதுளா.
“அட! ரொம்பத்தான் சலிப்பா இருக்கு? அப்படி என்ன கேட்டுட்டேன்னு இப்படிச் சலிச்சுக்கிற? ஒரு கேள்வி, ஒரே ஒரு கேள்வி! அதுவும் ரொம்பச் சாதாரணக் கேள்வி. அதுக்குப் பதில் சொல்ல இத்தனை சலிப்பு?” என்று அலுத்துக் கொண்டான்.
“என்னை ஏன் இப்படித் தொந்தரவு பண்றீங்க? அதைத் தெரிந்து நீங்க என்ன செய்யப் போறீங்க?” என்று எரிச்சலுடன் கேட்டாள்.
“இப்போதைக்கு இங்கிருந்து எழுந்து போயிடுவேன்…” என்றவன் கண்கள் சிரித்தன.
அவனின் கண்களைக் கண் நோக்காதவள், அவன் இங்கிருந்து சென்றால் போதும் என்று நினைத்து, “எனக்குக் கல்யாணத்தில் இஷ்டமில்லைன்னு சொல்லி என் தங்கையைப் பொண்ணா கொண்டு போய் நிறுத்திட்டேன். அவங்க பொண்ணு மாறியது பிடிக்காமல் எழுந்து போயிட்டாங்க. போதுமா? இப்ப இடத்தைக் காலி பண்ணுங்க…” என்று அவனை விரட்டினாள்.
“வாரே வாவ்!” என்று உற்சாகமாகச் சொன்னவன்,
அய்யய்யயோ ஆனந்தமே
நெஞ்சுக்குள்ளே ஆரம்பமே
என்று உற்சாகமாகப் பாட ஆரம்பித்தான்.
“சரிதான், நம்ம விக்கி போலத்தான் கல்யாணத்தில் விருப்பமில்லாதவங்க போல. அது புரியாம, இவன் சந்தோஷப்படுறான் பாரு…” என்ற பரத் தலையில் அடித்துக் கொண்டான்.
“நம்ம விக்கி போல அவங்களும் மாறுவாங்கன்னு நினைச்சுருப்பான்…” என்றாள் காவ்யா.
“நம்ம விக்கி மாறவே இவ்வளவு நாள் ஆகியிருக்கு. இனி மிருதுளா மாற எத்தனை நாள் ஆகுமோ?” என்று பெருமூச்சு விட்டான் பரத்.
அவர்களுக்குள் மெல்லிய குரலில் பேசிக் கொண்டிருக்க, அதை எல்லாம் கவனிக்காமல், விக்ரமும், மிருதுளாவும் ஒவ்வொரு மனநிலையில் இருந்தனர்.
விக்ரமிற்கு அவளுக்குத் திருமணம் நிச்சயம் ஆகவில்லை என்ற மகிழ்ச்சி.
மிருதுளாவிற்குத் தன் மௌனத்தை உடைத்து விட்டானே என்ற வருத்தம்.
மேலும் படிக்க பிரீமியம் பிளான் வாங்கவும்.
Reviews
There are no reviews yet.