காரை லாக் செய்துவிட்டு பிள்ளையுடன் அவன் வீட்டை நோக்கி நடக்க, அவள் அங்கேயே நிற்பதை உணர்ந்து திரும்பி பார்த்து, “என்ன?” எனக் கேட்டான்.

மறுப்பாகத் தலையை மட்டும் அசைத்து விட்டு, ஓரளவு சரியாகியிருந்த கால்களை நகர்த்தி அவனைப் பின் தொடர்ந்தாள்.

கால்சட்டையிலிருந்து சாவியை எடுத்து கதவை திறந்தவன், “உள்ளே வா…” என்றபடி முன்னே சென்றான்.

அன்று தான் திருமணம் முடிந்த புதுப்பெண் அவள். ஆனால், ஆரத்தி இல்லை. வரவேற்க வேறு உறவினர்கள் இல்லை. திருமணம் முடிந்த பூரிப்பு இல்லை‌. தன் நிலையை நினைத்து விரக்தி வந்தது.

அவள் உள்ளே சென்ற போது அங்கே யாருமில்லை. அவள் உள்ளே வருகின்றாளா என்று கூடக் கவனியாமல், அவளின் கணவன் அறைக்குள் சென்று மறைந்திருந்தான்.

அவள் அப்படியே நிற்க, அவன் மட்டும் மீண்டும் வெளியே வந்தான். “பேபி உள்ளே தூங்குறாள், பார்த்துக்கோ. நான் லக்கேஜ் எல்லாம் உள்ளே எடுத்து வைக்கிறேன்…” என்று சொல்லிவிட்டு வெளியே சென்றான்.

அவளுக்கு அந்த அறைக்குள் செல்ல தயக்கமாக இருந்தது. ஆனால், அவளுக்கு ஓய்வறையைப் பயன்படுத்த வேண்டிய தேவை இருக்க, உள்ளே நுழைந்தாள்.

அறையின் நடுவில் கிடந்த கட்டிலில் குழந்தையைப் படுக்க வைத்து, அவளுக்கு இரண்டு பக்கமும் தலையணையை அணைவாக வைத்துவிட்டுச் சென்றிருந்தான்.

தனுஷா நல்ல உறக்கத்தில் இருந்தாள். குழந்தையைப் பார்த்துவிட்டு குளியலறைக்குள் நுழைந்தாள்.

உபயோகப்படுத்தி விட்டு மீண்டும் வெளியே வந்தபோது, குழந்தையின் அருகில் கட்டிலில் அமர்ந்திருந்தான் அவளின் கணவன்.

அலமாரி அருகில் அவனின் பெட்டி மட்டும் இருக்க, தன்னுடையதை கண்களால் தேடினாள்.

அவளின் பார்வை புரிந்து, “உன் லக்கேஜ் பக்கத்து ரூமில் வச்சிருக்கேன். அந்த ரூம் யூஸ் பண்ணிக்கோ. இன்னைக்குப் பேபிமா என் கூட இருக்கட்டும். நாளையிலிருந்து என் ட்யூட்டி பொருத்து நீ பார்த்துக்கோ. இப்ப போய்ப் படு…” என்றவன், எழுந்து மாற்றுடையை எடுக்க ஆரம்பிக்க, அங்கிருந்து வெளியேறி பக்கத்து அறைக்குச் சென்றாள்.

அந்த அறையிலும் ஒரு கட்டில் இருந்தது. அது தவிர, சுவரோடு சேர்ந்த ஒரு அலமாரி மட்டுமே‌. வேறு பொருட்கள் எதுவுமில்லை.

விருந்தினர் அறை என்று புரிந்தது. அப்போது அவளும் விருந்தினர் தானா? என்று விரக்தியுடன் நினைத்துக் கொண்டாள்.

இல்லையே… தனக்கு இந்த வீட்டில் என்ன வேலை என்று காலையில் மணமேடையில் வைத்தே அவளிள் கணவன் பிள்ளையை அவள் கையில் கொடுத்து தெரிவித்திருந்தானே?

பிள்ளையைப் பார்த்துக் கொள்ளும் ஆயா வேலை பார்க்கத்தானே அவள் கழுத்தில் தாலி கட்டி அழைத்து வந்திருக்கிறான்.

படித்து, பட்டம் வாங்கி, ஒரு இடத்தில் வேலை பார்த்து தனக்கென ஒரு அங்கீகாரத்தைப் பெற்றிருந்த நிலையில், நீ எவ்வளவு பெரிய உச்சாணிக் கொம்பில் ஏறினாலும், கல்யாண சந்தையில் நாங்கள் ஆட்டுவிக்கும் பொம்மை தான் நீ என்று எப்படிப் பொண்ணை அனைவரும் தங்கள் கைப்பாவைகளாக மாற்றுக்கின்றனர்? காலம் எத்தனை நவீன யுகமாக மாறினாலும், ஒரு பெண்ணிற்கு இதுதான் நிலையா? என்று தன்னிரக்கத்துடன் நினைத்துக் கொண்டாள் நந்தனா.

காலையிலிருந்து தன் வாழ்வில் நடந்த திருப்பத்தைப் பற்றி யோசிக்கக் கூட நேரம் இல்லாமல் தவித்தவள், இப்போது கிடைத்த தனிமையில் விரக்தியுடன் நினைத்துக் கொண்டாள்.

தனக்கு ஏன் இப்படி நடந்தது? என்றுதான் அவளால் நினைக்க முடிந்தது.

வாய்விட்டு கதறி அழ வேண்டும் போல் இருந்தது. உதடுகளைக் கடித்து அடக்கிக் கொண்டாள். விவரம் தெரிந்த நாளிலிருந்து அவள் அப்படியெல்லாம் அழுததே இல்லை. அவளின் பெற்றவர்கள் தங்கள் பிள்ளைகளை அப்படி அழ விட்டதும் இல்லை. அப்படியெல்லாம் கண்ணும் கருத்துமாக வளர்த்துவிட்டு, இப்போது தன்னை இந்த நிலைக்குத் தள்ளிவிட்டார்களே… என்று ஒரு நொடி நினைத்தவள், உடனே தலையைக் குலுக்கிவிட்டுக் கொண்டாள்.

அவர்களும் சூழ்நிலை கைதி தானே? அவர்களும் இப்படியெல்லாம் நடக்கும் என்று எதிர்பார்த்தார்களா என்ன? அவர்களை மட்டும் குறை சொல்லி என்ன ஆகப் போகிறது?

பெற்றவர்களைப் பற்றி நினைத்த போதுதான் அவர்களிடம் இன்னும் பேசவே இல்லை என்பது நினைவில் வந்தது. தன்னை அனுப்பி வைத்துவிட்டு எப்படித் தவித்துப் போயிருப்பார்களோ? என்று தோன்றவும், உடனே தன் கைப்பையை எடுத்து அதிலிருந்த கைப்பேசியை வெளியே எடுத்தாள்.

காலையில் மணமேடைக்குச் செல்லும் முன் சைலண்டில் போட்டிருந்த கைப்பேசியைத் திறந்ததும் முதலில் கண்ணில் விழுந்தது என்னவோ அமரேந்திரனுடன் அவள் ஜோடியாக நிற்கும் புகைப்படம்தான்.

தீ சுட்டாற்போல் தன் கைப்பேசியை அந்தப் படுக்கையில் விட்டெறிந்தாள்.

முதல் நாள் இரவு நிச்சயம் முடிந்ததும் நிரஞ்சனாவால் எடுக்கப்பட்ட புகைப்படம் அது. உறங்க செல்வதற்கு முன் நிரஞ்சனா‌ தான் அந்தப் புகைப்படத்தைத் தமக்கையின் கைப்பேசியில் முதல் பக்கத்தில் வைத்துக் கொடுத்திருந்தாள்.

நேற்று அந்தப் புகைப்படத்தைப் பார்த்துப் புன்னகையில் விரிந்த நந்தனாவின் உதடுகள், இப்போது அழுகையில் பிதுங்கின.

இன்று காலையில் வரை இன்னொருவனுக்கு மனைவியாகப் போகிறவள் என்ற பூரிப்புடன் இருந்து விட்டு, இப்போது தான் வேறொருவனுக்கு மனைவி. அதிலும் தங்களை ஏமாற்றியவனின் அண்ணனையே மணம் முடித்திருக்கிறேன். அதுவும் இரண்டாம்தாரமாக.

நினைக்க நினைக்க அவள் மனம் ஆறவே இல்லை. அவள் அடக்க நினைத்த அழுகையை இப்போது அவளால் அடக்கவே முடியவில்லை.

தன்னிரக்கம் அவளை ஆட்கொள்ள வாய்விட்டு கதறி அழ ஆரம்பித்தாள்.


விரைவில் வீடு வருவதாகச் சொன்ன விஜயேந்திரன், வந்து சேர இரவு பத்து மணி ஆனது.

அப்பா வருவார் என்று எதிர்பார்த்து ஏமாந்து போய் உறங்கியிருந்தாள் குழந்தை.

நந்தனாவிற்குப் பாவமாகப் போனது. கணவன் சீக்கிரம் வீட்டிற்கு வந்திருக்கலாமே… என்ற கோபமும் வந்தது. உள்ளுக்குள் கனன்ற கோபத்துடன் தான் கதவை திறந்துவிட்டாள்.

“பேபிமா என்ன செய்றா?” என்று மகளைக் கேட்டபடிதான் உள்ளே நுழைந்தான்.

“தூங்கிட்டா…”

“ஓ…” என்றவன் தனது அறைக்குச் சென்று குழந்தையைப் பார்த்தான்.

அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்த மகளைச் சில நொடிகள் வாஞ்சையுடன் பார்த்தபடி நின்றான்.

பின் குளியலறை சென்று குளித்து உடை மாற்றி விட்டு வெளியே வந்தான்.

அதுவரை நந்தனா வரவேற்பறையில் தான் இருந்தாள்.

“சாப்பாடு இருக்கா நந்தனா? பேபிமா என்னைத் தேடினாளே… சாப்பிட்டு வந்தால் நேரமாகும்னு வெளியில் சாப்பிடாம வந்துட்டேன்…” என்றான்.

“குழம்பு இருக்கு. இட்லி எனக்கும் பாப்பாவுக்கும் மட்டும் தான் ஊத்தினேன். ஒரு‌ ஃபைவ் மினிட்ஸ் வெயிட் பண்ணுங்க. இட்லி ஊத்துறேன்…” என்றவள் வேகமாகச் சமையலறை சென்றாள்.

அவன் தொலைக்காட்சியைப் போட்டு செய்தி சேனலை பார்க்க ஆரம்பித்தான்.

அடுத்தப் பத்து நிமிடங்களில் சுடசுட இட்லியை வைத்து, குழம்பையும் சுட வைத்து, கொண்டு வந்து கொடுத்தாள்.

“தேங்க்ஸ்…” என்று சொல்லி வாங்கிச் செய்தியை பார்த்துக் கொண்டு உண்டான்.

நந்தனா அங்கேயே நிற்க, கேள்வியுடன் நிமிர்ந்து பார்த்தான்.

“பாப்பா உங்களை ரொம்பத் தேடுறாள். அந்த நேரம் எனக்குச் சமாளிக்கக் கஷ்டமா இருக்கு. நீங்க கொஞ்சம் சீக்கிரம் வீட்டுக்கு வந்தால் பரவாயில்லை…” வெகுநேரமாக அவனிடம் சொல்ல நினைத்ததைச் சொல்லிவிட்டிருந்தாள்.

சாப்பாட்டில் இருந்து கையை எடுத்துவிட்டு அவளைத் தீர்க்கமாகப் பார்த்த விஜயேந்திரன், “நான் என்ன வேலை பார்க்கிறேன்னு உனக்குத் தெரியுமா? தெரியாதா?” என்று கேட்டான்.

கத்தியைப் போல் அவன் கேள்வியில் இருந்த கூர்மை அவளைத் தாக்க, பேச முடியாமல் தடுமாறினாள் நந்தனா.

‘சொல்!’ என்பது போல் அவன் பார்வையே கேள்வி கேட்டது.

“தெரியும்!” முனகினாள்.

“பத்து டூ நாலு, பத்து டூ ஆறுன்னு டைம்க்கு பார்க்கிற ஜாப் நான் பார்க்கலை நந்தனா. எப்ப வேலை ஆரம்பிக்கும், எப்ப வேலை முடியும்னு பல சமயம் எனக்கே தெரியாது. அவள் குழந்தை என்னோட சூழ்நிலை தெரியாமல் கேட்கத்தான் செய்வாள். நீயும் அவளை மாதிரி பிகேவ் பண்ணாதே நந்தனா…” என்று அவன் முகத்தில் அடித்தது போல் சொல்ல, நந்தனாவின் முகம் ரத்தப்பசையை இழந்தது போல் வெளுத்துப் போனது.