உதிரா நேசம் – முன்னோட்டம்
அடித்து ஊற்றிக் கொண்டிருந்தது பெருமழை! எங்கோ ஒரு மூலையில் பளிச்சென்று வெட்டியது மின்னல்! அதைத் தொடர்ந்து உறுமலாய் ஓர் இடிமுழக்கம்!
அம்மின்னல் வெளிச்சத்தில் தெரிந்தது ஓர் உருவம்!
அவ்வுருவத்தை ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தாள் ஒரு பெண்.
பெருமழையில் தொப்பல் தொப்பலாக நனைந்தபடி தனது இருசக்கர வாகனத்தின் மீது அமர்ந்திருந்த அந்த ஆடவனின் பார்வையும் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்த பெண்ணிலவின் மீது படிந்தது.
அப்பெண்ணிலவின் கண்களில் கலக்கமும், கோபமும் சரிவிகிதத்தில் கலந்திருந்தது.
ஆடவனின் கண்களில் எவ்வித உணர்வும் பிடிபடவில்லை என்று சொல்லலாமா? அல்லது அக்கண்களில் இருந்தது பிடிவாதம் என உரைக்கலாமா? என்று வரையறுக்க முடியா பார்வை அது!
அப்பெண்ணின் உதடுகள் மெல்ல அசைந்து ஏதோ முணுமுணுப்பதை உணர்ந்தான்.
அடுத்தச் சில நொடிகளில் கதவை திறந்து குடையைப் பிடித்துக் கொண்டு வெளியே வந்தாள்.
அவன் கண்களில் சிறிதும் சலனமில்லை.
மேலே தொடையளவு குர்தியும், கீழே முழங்காலளவு ஜீன்ஸூம் அணிந்திருந்தாள்.
மழையில் நனையாமல், குடைக்குள் தன்னைப் பாதுகாத்துக் கொண்டு விறுவிறுவென்று அவனை நோக்கி நடந்து அவனின் அருகில் வந்தவள், “இது உங்களுக்கே நல்லா இருக்கா? இப்ப எதுக்கு இப்படி மழையில் நனைஞ்சிட்டு நிக்கிறீங்க?” என்று கேட்டுக் கொண்டே அவனுக்கும் சேர்த்து குடைபிடித்தாள்.
குடையை விலக்கிவிட்டவன் மீண்டும் மழையில் நனைந்தான்.
“யுகேன்…” என அவள் சூடாக அழைக்க, அந்தச் சூடு எல்லாம் அவனை நெருங்கவே இல்லை.
“ஏன் இந்தப் பிடிவாதம் யுகேன்?” சலிப்புடன் கேட்டாள்.
‘ஏனென்று உனக்குத் தெரியாதா?’ என்று கேட்டது அவன் பார்வை.
அவளுக்குத் தெரியும் தான். ஆனாலும்… என்று நினைத்தவள், “பெரிய மழையா பெய்து யுகேன். இப்ப எப்படி முடியும்?” என்று இயலாமையுடன் கேட்டாள்.
அவனோ அவளின் முகத்தையே ஊடுருவி பார்த்துக் கொண்டிருந்தான்.
“நீங்க சரியில்லை யுகேன். இந்த மழையில் ஏன் தான் இப்படி ஒரு பிடிவாதமோ… இப்ப நீங்க வீட்டுக்கு போங்க. நாளைக்குப் பார்க்கலாம். ப்ளீஸ், சொன்னா கேளுங்க யுகேன்…” என்றாள் கெஞ்சலாக.
அவனின் முகத்தில் சிறிதும் மாற்றமில்லை. இருசக்கர வாகனத்தின் மீது இலகுவாக அமர்ந்திருந்தவன், இப்போது கைகளைக் கட்டிக் கொண்டு அழுத்தமாக அமர்ந்திருந்தான்.
அதுவே அவனின் பிடிவாதத்தின் அளவை சொல்ல, “அப்ப நீங்க இங்கிருந்து கிளம்ப மாட்டிங்க, அப்படித்தானே?” என்று கேட்டாள்.
‘ஆமாம்’ என்று உரைப்பது போல் முகத்தை எங்கோ திருப்பிக் கொண்டான்.
மழை சத்தத்தையும் மீறி ஒலித்தது அவளின் பெருமூச்சின் சத்தம்.
அடுத்த நொடி, அவனின் தோளை பிடித்தபடி பைக்கில் அவனின் பின்னால் ஏறி அமர்ந்தாள்.
அப்பக்கம் திரும்பியிருந்தவனின் உதடுகளில் மென்புன்னகை ஒன்று தவழ்ந்தது.
“வண்டியை எடுங்க!” என்று அவள் சிடுசிடுப்புடன் உரைக்க, இருசக்கர வாகனத்தை எடுத்தவன் உதடுகளில் பூத்த புன்னகை குறையவே இல்லை.
மழையின் தீவிரம் அதிகமாக இருந்ததே தவிர, குறையவே இல்லை. குடையை இருவருக்கும் சேர்த்துப் பிடித்துக் கொண்டு வந்தாள்.
சாலையில் இரண்டு மூன்று கார்கள் சென்றனவே தவிர, வேறெந்த வாகனமும் இல்லை. மின்னல் வெட்டியதில் கண்கள் கூச கண்களை இறுக மூடிக்கொண்டாள்.
அவனோ கருமமே கண்ணாக வண்டியை செலுத்தினான். அடுத்த ஐந்தாவது நிமிடத்தில் ஒரு கடையின் முன் வண்டியை நிறுத்தினான்.
வண்டி நின்றதும் கண்களைத் திறத்தவள் அந்தக் கடையின் பெயரை பார்த்தாள்.
‘**** ஐஸ்கிரீம்’ என்று ஒரு புகழ் பெற்ற கடையின் பெயர் பலகை மின்னியது.
அதைப் பார்த்துக் கொண்டே பெருமூச்சுடன் பின்னாலிருந்து இறங்கினாள்.
குடையை மீறி தெறித்த மழைத்துளிகளின் புண்ணியத்தில் அவளும் இப்போது பாதி நனைந்திருந்தாள்.
பைக்கை நிறுத்திவிட்டு அவனும் இறங்கி, அவளின் கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு அந்த ஐஸ்கிரீம் கடைக்குள் நுழைந்தான்.
மழையால் கடையை மூடிவிட்டு கிளம்ப முடியாமல், மழை விடக் காத்திருந்த ஒரே ஒரு ஊழியன் உள்ளே வந்த இருவரையும் வியப்புடன் பார்த்தான்.
“என்ன சார் மழைக்கு ஒதுங்க வந்தீங்களா? நல்லா நனைஞ்சிட்டீங்களே… இப்படி உட்காருங்க சார், மழை விட்டதும் போகலாம்…” என்று அவர்கள் வந்த காரணத்தை தவறாக ஊகித்துக் கொண்டு உரைத்தான்.
“ஐஸ்கிரீம் வேணும். ஒரு பட்டர் ஸ்காட்ச், ஒரு பிஸ்தா…” என்று உரைத்தவளை அலங்க மலங்க பார்த்தான்.
வெளியே சோவென்று பொத்து ஊற்றிக் கொண்டிருந்த மழை. ஒருவன் தொப்பலாக நனைந்திருக்க, ஒருத்தி பாதி நனைந்திருந்தாள். இப்படி வந்து நின்று ஐஸ்கிரீம் கேட்ட ஒரே ஒரு… இல்லை… இல்லை… ஒரு ஜோடி இவர்கள் தான் என்று நினைத்தவன், அவர்களை வினோதமாகப் பார்க்க மாட்டானா என்ன?
“நீங்க ஆதி ஃபேமிலியா சார்?” என்று கேட்டவனின் குரலில் நிச்சயமாகக் கேலி இருந்தது.
யுகேன் நெற்றியை சுருக்கி அவனைப் பார்க்க, “ஆக்டர் விஜய் படம் சார், ஆதி. அதில் அவரும் திரிஷாவும் மழையில் நனைஞ்சிட்டே ஐஸ்கிரீம் சாப்பிடுவாங்க. அதான் நீங்களும் அந்த ஃபேலிமியான்னு கேட்டேன்…” என்றவன் கிண்டலாகச் சிரிக்க,
“ஹான், நாங்க அவங்க பக்கத்து வீட்டு ஃபேமிலி…” என்று எரிச்சலுடன் உரைத்தாள் அவள்.
“கோபப்படாதீங்க மேடம், சட்டுன்னு தோனுச்சு, சொன்னேன். நீங்க உட்காருங்க. நான் ஐஸ்கிரீம் எடுத்துட்டு வர்றேன்…” என்று சமாதானமாக ஊழியன் சொல்ல,
“ஒரே ஈரம்… இதோட எப்படி உட்காருவது?” என்று எரிச்சலுடன் முணுமுணுத்தாள்.
அவனோ எதைப் பற்றியும் கவலைப்படாமல் சிறிய வட்டமேஜையின் முன் கிடந்த நாற்காலியில் சென்று அமர்ந்தான்.
அவனை முறைத்துக் கொண்டே எதிரே அமர்ந்தவள், “நினைச்சதை சாதிச்சுக்கிறீங்க?” என்று பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டாள்.
அவனோ பற்கள் தெரிய சிரித்தான்.
“எனக்கு வரும் ஆத்திரத்துக்கு அப்படியே அந்தப் பல்லை தட்டி கையில் கொடுக்கணும் போல இருக்கு…” என்றாள்.
தோளை அலட்சியமாகக் குலுக்கிக் கொண்டான்.
“உங்களை அப்படியே…” என்றவள், அவனின் கழுத்தை நெரிக்கக் கையைக் கொண்டு வந்தாள். அதற்குள் அவர்கள் கேட்ட ஐஸ்கிரீமுடன் கடை ஊழியன் வந்துவிட, தன் கையைக் கீழே இறக்கிக் கொண்டாள்.
ஆனாலும், கோபம் குறையாமல் தனது பட்டர் ஸ்காட்ச் ஐஸ்கிரீமை தொடாமல் இருந்தாள்.
‘சாப்பிடு!’ என்பது போல் கண்ணைக் காட்டியவன், தன்னுடைய பிஸ்தா ஐஸ்கிரீமை தன் பக்கம் இழுத்துக் கொண்டான்.
“இந்த ஈரத்தோட ஐஸ்கிரீம் சாப்பிட்டு நாளைக்குக் காய்ச்சல் வந்தது… உங்களைச் சும்மா விடமாட்டேன்…” என்று கறுவினாள்.
அதற்கும் அவனின் தோள் குலுக்கலே பதிலாகக் கிடைக்க, “இப்ப நான் என் ஐஸ்கிரீமை சாப்பிடலைனா என்ன செய்வீங்க?” என்று புருவத்தை ஏற்றி, இறக்கி கேட்டாள்.
பட்டென்று நாற்காலியிலிருந்து எழுந்தவன், வெளியே செல்ல முயன்றான்.
அவனின் கையைப் பிடித்து நிறுத்தியவள், “உடனே கோபம் பொத்துக்கிட்டு வந்துடுமே. சாப்பிட்டு தொலையிறேன், உட்காருங்க…” என்றாள் ஆத்திரத்தை அடக்கிக்கொண்டு.
அவன் மீண்டும் அமர்ந்து அவளையே பார்க்க, தனது ஐஸ்கிரீமை எடுத்து வேண்டா வெறுப்பாக உண்ண ஆரம்பித்தாள்.
அவன் விட்டு செல்ல மாட்டான் என்று தெரியும். ஆனால், மீண்டும் மழையில் சென்று நின்று ஆர்ப்பாட்டம் செய்வான் என்பதால், ஐஸ்கிரீமை அள்ளி தன் வாய்க்குள் திணித்தாள்.
அதன்பிறகே அவனும் உண்ண, “இதெல்லாம் எவ்வளவு பெரிய அராஜகம் தெரியுமா?” என்று கேட்டாள்.
யுகேனோ கண்டுகொள்ளாமல் ஐஸ்கிரீமை உண்டான்.
அவனின் இந்த முரட்டுப் பிடிவாதத்தை அறிந்தவள்தான் என்பதால், அதன்பின் எதுவும் பேசாமல் அமைதியாக ஐஸ்கிரீமை உண்டுவிட்டு எழுந்தாள்.
ஐஸ்கிரீமிற்கான பணத்தை யுகேன் கொடுத்துவிட்டு வர, அவனுடன் வெளியே வந்தவள் கடை வாசலில் நின்று, “இப்ப சந்தோஷமா? இனியாவது பேசலாமே?” என்று கேட்டாள்.
அவளுக்குப் பதிலுரைக்காமல் கடைக்குள் திரும்பி பார்த்தவன், கடைக்காரனின் கவனம் தங்கள் மீது இல்லை என்பதை அறிந்ததும், அவளின் புறம் திரும்பி உதட்டை குவித்துக் காட்டினான்.
“விளையாடாதீங்க யுகேன்… இங்கே எப்படி முடியும்?” என்று அதட்டினாள்.
சுற்றி முற்றி பார்த்தான். மழையால் ஒருவரும் சாலையில் நடமாடவில்லை. சில கடைகளும் மூடியிருந்தன. திறந்திருந்த கடைகளிலும் ஒருவரும் வெளியே இல்லை என்றதும், அவளின் கையைப் பிடித்து அருகில் இருந்த மூடியிருந்த கடையின் பக்கம் அழைத்துப் போனான்.
“யுகேன், யாரும் பார்த்தால் நல்லாருக்காது, வேண்டாமே!” என்று தயக்கத்துடன் உரைத்தாள்.
அவளைத் தன் எதிரே நிறுத்தி, கண்களையே தீர்க்கமாகப் பார்த்தான். சில நொடிகளில் அவளின் கண்களில் மறுப்புக் காணாமல் போயிருக்க, அவளின் கன்னத்தைப் பற்றி, தன் அருகில் நெருங்க வைத்து, மெல்ல தன் முகத்தைச் சாய்த்து, அவளின் இதமான இதழில், தனது முரட்டு அதரங்களைப் பதித்தான்.
அவ்வளவு நேரமிருந்த அவனின் மீதான அவளின் கோபம் காணாமல் போக, அவனிட்ட முத்தத்தில் கரைந்து கொண்டிருந்தாள் அவள்.
அன்று பதிவு திருமணம் செய்ய யுகேந்திரன் தன்னவளின் வரவிற்காகக் காத்திருக்க, அவளிடமிருந்தோ “ஸாரி யுகேன்” என்று ஆரம்பித்த வாட்ஸ்அப் செய்தி தான் அவனை வந்தடைந்தது.
அவள் “ஸாரி” என்று ஆரம்பித்ததிலிருந்தே அவள் தன் காலை வார போகிறாள் என்பது புரிந்து போக, அவனின் முகம் இறுகி கடுமைக்கு மாற, தொடர்ந்து அவள் அனுப்பியதை படிக்க ஆரம்பித்தான்.
“ஸாரி யுகேன்… ஸாரி யுகேன்… ஸாரி… ஸாரி… இன்னும் எத்தனை தடவை மன்னிப்புக் கேட்டாலும், நான் உங்களுக்கு நியாயம் செய்ததா ஆகாது. தப்பு… எல்லாம் தப்பு… என் முடிவு தப்பு! நான் உங்களைக் காதலிச்சது என் தப்பு! என் அப்பா பற்றி முழுசா தெரியாமல் நான் அவசரப்பட்டுக் காதலில் விழுந்தது நான் செய்த பெரிய தப்பு! நான்தான் உங்கள் வருங்கால மனைவி என்று உங்க ஆழ்மனத்தில் பதிய வைத்துவிட்டு இப்போ நான் இப்படிப் புலம்புவதும் கூட நான் செய்து கொண்டிருக்கும் பெரிய தப்பு!
எல்லாத்தையும் தாண்டி, அவசரமா என்னை நீங்க ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தே ஆகணும்னு உங்களுக்கு அழுத்தம் கொடுத்து, நீங்க ஆன்சைட் கிளம்ப வேண்டிய வேலையைக் கூட நிம்மதியா செய்ய விடாமல், உங்களை அலைக்கழித்து ரிஜிஸ்டர் மேரேஜ் செய்யத் தேவையான எல்லா ஏற்பாடும் செய்துவிட்டு, இப்ப கடைசி நேரத்தில் பின்வாங்குவது எல்லாத்தையும் விட மாபெரும் தப்பு! தப்பு! தப்பு! எல்லாமே நான் மட்டுமே செய்த தப்பு!
நான் செய்த இந்தத் தப்புக்கெல்லாம் மன்னிப்பே கிடையாதுன்னு எனக்குத் தெரியும் யுகேன். என்னையே என்னால் மன்னிக்க முடியாத போது நீங்க என்னை மன்னிக்கணும்னு நான் நினைப்பதும் தப்புதான்!
நீங்க என்னை மன்னிக்கக் கூட வேண்டாம் யுகேன். ஆனால், ம… மறந்துட்டுங்க. அதான் உங்களுக்கு நல்லது. நீங்க நல்லா வாழணும் யுகேன். நீண்ட ஆயுளோட சந்தோஷமா வாழணும். அதுக்கு ஒரே வழி நம்ம பிரிவுதான் யுகேன். நாம பிரிஞ்சிடலாம் யுகேன்… இதைச் சொல்வதற்கு ஸா…ஸாரி யுகேன். என்னை விட்டு போய்டுங்க. என்னை விட்டு மொத்தமா பிரிந்து போயிடுங்க...” என்றதோடு அந்தச் செய்தி முடிந்திருக்க, யுகேந்திரனுக்கு அவள் மீது கோபம் கட்டுக்கடங்காமல் எழுந்தது.
தன்னுடன் வந்திருந்த நண்பனிடம் சில வார்த்தைகள் பேசியவன், அடுத்த நொடி அங்கிருந்து கிளம்பி ஓவியா தங்கியிருந்த அறையை நோக்கி பைக்கை சீறவிட்டான்.
அவளை அழைத்து வர, அவனின் காரை அனுப்பியிருந்தான். அது ஓவியா இருந்த வீட்டு வாசலில் நின்றிருந்தது.
அதன் அருகில் பைக்கை நிறுத்திவிட்டு சென்று வீட்டின் கதவை படபடவென்று தட்டினான்.
கதவை திறந்த டெய்ஸி, “வாங்க யுகி…” என்றழைத்தாள்.
“அவளை எங்கே?” அவனின் கேள்வி உஷ்ணத்துடன் வர, பூட்டியிருந்த ஒரு அறையின் கதவை காட்டினாள் அவள்.
அந்த அறைக்குள் இருந்து படபடவென்று கதவு தட்டப்பட்டுக் கொண்டிருந்தது.
கூடவே, “டெய்ஸி, லீனா… கதவை திறக்க போறீங்களா இல்லையா இப்போ? ஏய், கதவை திறங்கடி… யுகேன் வர்றதுக்குள்ள நான் இங்கிருந்து போயாகணும்…” என்று கத்திக் கொண்டே அறையின் கதவை உடைப்பது போல் தட்டிக் கொண்டிருந்தாள் ஓவியா.
கோபத்தில் கண்கள் சிவக்க, பற்களை நறநறவென்று கடித்தான் அவன்.
“நேத்து வரை எங்களை எல்லாம் உங்க ரிஜிஸ்டர் மேரேஜ்க்குச் சாட்சி கையெழுத்து போட கூப்பிட்டுக் கொண்டிருந்தவள், இன்னைக்கு ரிஜிஸ்டர் ஆபிஸுக்குக் கிளம்பாமல், ஊருக்குப் போகப் பேக் பண்ணிட்டு இருப்பது தெரிந்தது. என்னன்னு காரணம் கேட்டால், சொல்லாமல் அழறாள். எதுவாக இருந்தாலும் உங்ககிட்ட பேசி முடிவெடுக்கச் சொன்னால், உங்ககிட்ட பேசினாலும் நீங்க விட மாட்டிங்கன்னு கிளம்ப ரெடியா இருந்தாள். நீங்கதான் எதுக்கும் அவள் மேல் ஒரு பார்வை வைத்திருக்கச் சொன்னீங்களே யுகி… அதுதான் அவளை வெளியே விடாமல் லாக் பண்ணி வச்சிட்டேன்…” என்றாள் டெய்ஸி.
“அவளுக்குப் பிடிக்கலைனா விட்டுடலாமே பிரதர்?” என்று லீனா சொல்ல,
“என்னை அவளுக்கு ரொம்பப் பிடித்ததால்தான் விடணும்னு நினைக்கிறாள் சிஸ்டர். இப்படி ஒருத்தியை என்னால் எப்படி விட முடியும்?” என்று ஆதங்கமாகக் கேட்டான்.
“அவங்க இரண்டு பேரும் பேசி ஒரு முடிவுக்கு வரட்டும் லீனா…” என்று டெய்ஸி சொல்ல, லீனாவும் அதற்கு மேல் எதுவும் பேசவில்லை.
வெளியே தாழிட்டிருந்த ஓவியாவின் அறை கதவை திறந்து உள்ளே சென்றான் யுகேந்திரன்.
“ஏன்டி, இப்படிக் கதவை மூடினீங்க?” என்று கோபமாகக் கத்திய ஓவியா, உள்ளே வந்தது யுகேந்திரன் என்றதும், சட்டென்று உடைந்து கண்ணீர் விட ஆரம்பித்தாள் ஓவியா.
அவளை முகம் இறுக பார்த்தவன், “இதுக்கு என்ன அர்த்தம்?” என்று தன் கைப்பேசியை அவளின் முகத்திற்கு நேராக நீட்டி பற்களைக் கடித்துக் கொண்டு கேட்டான்.
“நான்தான் அதில் தெளிவா சொல்லியிருக்கேனே… அப்புறம் ஏன் இங்கே வந்தீங்க?” அழுது கொண்டே கேட்டாள் ஓவியா.
“இல்ல, எனக்குப் புரியலை. இதுக்கு எனக்கு முழுசா அர்த்தம் வேணும்…” என்று அழுத்தமாகக் கேட்டான் அவன்.
“அதான் சொன்னேனே…” என்று ஆரம்பித்தவளை ஆக்ரோஷமாய்ப் பார்த்தவன்,
“என்னை என்ன பைத்தியக்காரன்னு நினைச்சிட்டு இருக்கியாடி? நீ சொல்ற எல்லாத்துக்கும் நான் தலையாட்டுவேன். ஆனால், கடைசி நேரத்தில் நீ என் காலை வாருவ? அதானேடி உன் புத்தி. உன்னோட அந்தப் புத்தி தெரிந்ததால்தான், உன் ஃபிரண்ட்கிட்ட முன்னயே சொல்லி வச்சிருந்தேன். இல்லைனா, இந்த நேரம் என் கழுத்தை மொத்தமா அறுத்துட்டு நீ பறந்து போயிருப்ப தானேடி?” என்று அவளின் தோள்களைப் பிடித்து உலுக்கி கேட்டான்.
“அப்படிச் சொல்லாதீங்க யுகேன். நான் உங்க கழுத்தை அறுக்கலை. நா… நான்… உங்க நல்லதுக்காகத்தான் சொல்றேன். எ…என்னை விட்டு போயிடுங்க. அதான் உங்களுக்கு நல்லது…” என்றாள் கதறலுடன்.
ஆத்திரம் பொங்க சட்டென்று அவளைப் பிடித்து அங்கிருந்த படுக்கையில் தள்ளிவிட்டவன், “நல்லதா? எதுடி நல்லது? நீ வான்னா வர்றதுக்கும், போன்னு சொன்னால் போறதுக்கும் என்னை என்ன உன் பின்னால் சுத்தும் நாய்க்குட்டின்னு நினைச்சியா? பேசாமல் இருந்தவனை உடனே ரிஜிஸ்டர் மேரேஜ் செய்தே ஆகணும்னு உசுப்பேத்தி விட்டுட்டு, கடைசி நேரத்தில் பேக்(back) அடித்தால், நான் தலையை ஆட்டிட்டு அமைதியா போயிடுவேன்னு நினைச்சியா? இப்ப நீ கிளம்பி வந்தாகணும்… இல்லைனா…” என்று விரல் நீட்டி எச்சரித்தான்.
மறுப்பாகத் தலையை அசைத்தவாறு படுக்கையிலிருந்து எழுந்து நின்றவள், “இல்லை, நான் வர மாட்டேன். வரவே மாட்டேன்!” என்று ஆவேசமாகக் கத்தினாள் அவள்.
“ஷ்ஷ்! உனக்கு நான் சாய்ஸ் கொடுக்கலை. செய்தே ஆகணும்! டாட்! கிளம்பு…” என்றான் அதிகாரமாக.
“நான்தான் வர மாட்டேன்னு சொல்றேன்ல… என்னால் வர முடியாது யுகேன். நீங்க முதலில் இங்கிருந்து போயிருங்க. அதுதான் உங்களுக்கு நல்லது. சொன்னால் கேளுங்க…” என்று ஆத்திரத்துடன் கத்தினாள்.
“எதுடி நல்லது? எது நல்லது? அப்படி என்ன நல்லது? சொல்லித் தொலைடி… “ என்று அவன் குரலை உயர்த்த,
“நீங்க உயிரோட இருக்கணும்னா என்னை விட்டு போயிருங்க யுகேன்…” என்று ஆங்காரமாகக் கத்தினாள்.
“என்ன சொல்ற நீ?” கண்களைச் சுருக்கி பார்த்தான் அவன்.
“நீங்க உயிரோட ரொம்ப வருஷத்துக்கு வாழணும்னு நினைக்கிறேன் யுகேன். நீண்ட ஆயுளோட நீங்க வாழணும். அதுக்கு நாம பிரிந்தே ஆகணும். ப்ளீஸ்… போயிடுங்க… என்னை விட்டு மொத்தமாகப் போயிடுங்க…” என்று கைகளால் முகத்தை மூடிக் கொண்டு கதறி அழுதாள்.
குறுஞ்செய்தியிலும் இதுபோல்தான் ஏதோ அனுப்பியிருந்தாள். இப்போதும் அதையே சொல்கிறாள் என்றதும் குழம்பிப் போனான் யுகேந்திரன்.
“இதுக்கு என்ன அர்த்தம்?” என்று கேட்டான்.
“நீங்க என்ன கல்யாணம் பண்ணிக்கிட்டால் உங்க உயிருக்கு ஆபத்துன்னு அர்த்தம். நான் சொல்றது உங்களுக்குப் புரியுதா இல்லையா? ப்ளீஸ், புரிஞ்சுக்கோங்க யுகேன். முதலில் நீங்கள் இங்கே இருந்து போங்க…” என்று விரட்டினாள் அவள்.
“ஏய், என்னடி போ போன்னு விரட்டிக்கொண்டு இருக்கிற? அதெல்லாம் போக முடியாது. முதலில் நீ ஏன் இப்படிச் சொல்லிட்டு இருக்க? காரணத்தைச் சொல்லு…” என்று அதட்டினான்.
“ஐயோ! மதுமதி அக்காவோட லவ்வர் விக்ரமை கொன்னுட்டாங்க. உங்களுக்கும் அதே நிலைமை வந்துட கூடாதுன்னு தான் சொல்றேன். இப்பவாவது நான் சொல்றது புரியுதா உங்களுக்கு?” என்று கதறலும் திணறலுமாக உரைத்தவளை அதிர்ந்து பார்த்தான் யுகேந்திரன்.
“வாட்! கொன்னுட்டாங்களா? என்ன சொல்ற நீ?”
