“ஒரு வாரம் புருஷன் கூட வாழ்ந்தும் ஏன் புள்ள வரலைண்டு கேட்குறாகடி தாமரை…” என்று சொல்லி முடிக்கும் போதே தேம்பிவிட்டாள்.

“என்ன?” என்று அதிர்ந்தாள் தாமரை.

அதே அதிர்வுதான் அவர்கள் பேச்சை கேட்டுக் கொண்டிருந்த அதிவீரனுக்கும் வந்தது.

ஒருவாரம் வாழ்ந்ததும் பிள்ளை வரம் எத்தனை பேருக்கு கிடைத்துவிடும்? சிலருக்கு வருடக் கணக்காகக் கூட ஆகும் போது இதென்ன இப்படி? என்றுதான் அவனுக்குத் தோன்றியது.

அவன் நினைத்ததையே தாமரையும் அவளிடம் கேட்டுக் கொண்டிருந்தாள்.

“அத்தை என்ன முழுசா லூசாவே ஆகிடுச்சா? அவனவன் பிள்ளை வரம் கேட்டு வருச கணக்கா தவம் கிடக்குறான். ஒரே வாரத்துல புள்ள வேணுமாக்கும் அந்த அத்தைக்கு?” என்று கடுப்பாகக் கேட்டாள்.

“மச்சானோட அவுக வம்சம் இல்லாம போயிடுச்சாம். உனக்கு ஏன் புள்ள தழையில? புள்ள வந்துருந்தா எம் மவன் முகத்தைப் பார்க்க முடியாத ஏக்கத்தைப் பேர புள்ள முகம் பார்த்து போக்கிருப்போமுண்டு சொல்றாகடி தாமரை. அவுக அப்படிச் சொல்லவும், எனக்கும் கூட அந்த ஆசை வந்துச்சு. எனக்குண்டு ஒரு புள்ள இருந்தா இந்த ஜென்ம பொறப்பை நான் எம் புள்ள முகம் பார்த்து வாழ்ந்துக்கிடலாமுண்டு நினைச்சேன். என் நினைப்புக்கு ஏத்த மாதிரி நான் தலைக்குக் குளிக்காம இருந்தேன்டி…” என்று அங்கை தயக்கத்துடன் சொல்ல,

“அக்கா…?” என்று தாமரை கூடச் சற்று ஆவலாகவே கேட்டாள்.

உதட்டை பிதுக்கி, மறுப்பாகத் தலையை அசைத்த அங்கை, “மச்சான் போன துக்கத்துல மன உளைச்சலில் இருந்ததால வூட்டுக்கு விலக்காகுறது தள்ளி போயிருச்சு போலடி. போன வாரம் குளிச்சிட்டேன்…” என்று ஏமாற்றத்துடன் சொல்ல, தாமரையின் முகமும் ஏமாற்றத்தை பிரதிபலித்தது.

****

“திரு இப்ப உசுரோட இருந்து, அங்கை அவென் கூடச் சந்தோசமா வாழ்ந்திருந்தா இதை எல்லாம் யார்கிட்டயும் சொல்ல வேண்டிய அவசியமே எனக்கு வந்திருக்காது…” என்று அதிவீரன் சொல்ல,

“அப்ப எம் மவன் எப்ப சாவாண்டு காத்துக்கிட்டு கிடந்தயோ?” என்று கோபமாகக் கேட்டார்.

அவரை வெறித்துப் பார்த்தவன், “அப்படிக் கேவலமான புத்தி எனக்கு இல்லை. அவுக ரெண்டு பேரும் நல்லா இருக்கணுமுண்டுதேன் நினைச்சேன். ஆனா, நடந்ததை இன்னும் என்னாலும் ஏத்துக்க முடியலை. இப்ப எல்லாம் நான் அடிக்கடி நினைக்கிறது என்ன தெரியுமா? ஒ உசுருக்கு பதிலா என் உசுரு போயிருக்கக் கூடாதாடா திரு-ண்டுதேன்…” என்றவனை அவர் சலனமே இல்லாமல் பார்க்க,

“விதி அவென் வாழ்க்கையை மட்டும் இல்லாம அங்கை வாழ்க்கையையும் முடிச்சிருச்சுண்டு நான் அழாத நாள் இல்லை. இப்ப கூட உங்க வூட்டுல அங்கை நிம்மதியா இருந்திருந்தா இப்படி உடனே உங்க முன்னாடி வந்திருப்பேனா தெரியாது. ஆனா, அங்கை உங்க வூட்டுல நிம்மதியா இல்லாதது மட்டும் இல்லாம, ஏன் உசுரோட இருக்கோமுண்டு அவ நினைக்கிற நிலைக்குக் கொண்டு வந்து விட்டுட்டீக…” என்று குற்றம் சாட்ட, அவனை அதிர்ந்து பார்த்தார் முத்துவேல்.

“இப்படியெல்லாம் அவ உங்கிட்ட வந்து சொன்னாளா என்ன?” என்று முகம் சிவக்க கேட்டார்.

அவரை இகழ்ச்சியாகப் பார்த்தவன், “அவ தனியா வேற சொல்லணுமாக்கும்? அதான் வூருக்கே தெரியுறது போலத்தானே உம்ம பொஞ்சாதி மருமவளை நடத்துறாக…” என்றான்.

அவருக்கு வாயடைத்துப் போனது. உடனே எதுவும் பேச முடியாமல் மௌனமானார்.

அவரை வாயடைக்க வைத்து விட்டாலும், “அங்கைய மட்டும் தப்பா நினைச்சுடாதீக. அவ அப்பவே என்னைய வேணாமுண்டுதேன் சொன்னா. இப்ப மட்டும் வேணுமுண்டு சொல்லிடுவாளா என்ன?” அங்கையை அவர் எதுவும் தவறாக நினைத்து விடக்கூடாது என்று வேகமாகச் சொன்னான்

*****

“நீதேன் அவனைப் பொண்ணு கேட்டு வர சொன்னியா? அப்படியா உனக்கு ஆம்பளை சுகம் கேட்குது? எம் மவன் எப்ப சாவாண்டு காத்திருந்தியோ? எம் மவனைக் கல்யாணம் பண்ணிக்கிறதுக்கு முன்னாடியே அவனுக்கும் உனக்கும் தொடுப்பு இருந்ததோ?” என்று வாய்க் கூசாமல் கேட்டார்.

கேட்டவளுக்குத்தான் காதும், மனமும் கூசிப் போனது.

“இல்லை அத்தை… அப்படி எல்லாம் இல்லை…” என்று கதறியவளின் கதறல் வள்ளியின் காதுகளைச் சென்றடையவே இல்லை.

“இல்லாமதேன் ரூட்டா வந்து அவளை என்கிட்டயே கொடுத்துடுங்கண்டு அவென் கேட்டானோ? எம் மவன் சாகும் போது அவென்தேன் கூட இருந்தியான். ஒருவேளை நீயும் அவனும் சேர்ந்துதேன் எம் மவனைக் கொல்லத் திட்டம் போட்டீகளோ? இல்ல, நீ போட்டுக் கொடுத்த திட்டத்தை அவென் முடிச்சு வச்சானா?” என்று வள்ளி கேட்க,

“அத்தை…” என்று அதிர்ந்து கூவினாள் அங்கை.

“என்னடி அத்தை? நான் என்ன இல்லாததையா சொல்லிப்புட்டேன்? எனக்கு என்ன நாட்டு நடப்பு தெரியாதுண்டு நினைச்சுட்டு இருக்கியா? புருஷனை கள்ள புருஷனை விட்டு கொன்னு போடுறதை எல்லாம் கேள்விப்பட்டுத்தேன இருக்கேன்.

அதுபோல நீ அந்த வீரா பயலை வச்சு எம் புள்ளைய கொன்னுட்டு, இப்ப அவனைக் கல்யாணம் பண்ணிக்கத் திட்டம் போட்டுருக்க மாட்டண்டு என்ன நிச்சயம்?” என்று கையால் தரையில் அடித்துக் கேட்டார்.

“ஐயோ! என்னைய நம்புங்க அத்தை. நான் அப்படி எல்லாம் செய்யலை. மச்சான் கூட முழு மனசாத்தேன் வாழ்ந்தேன். எம் மனசுல வேற எவனும் இல்லை. அவென் என்கிட்ட கேட்ட போதே புடிக்கலைண்டு சொல்லி விரட்டி விட்டுட்டேன். அவனா வந்து கேட்டா, அதுக்கு நான் என்ன பண்ண முடியும் அத்தை?” என்றாள்.

“இந்தப் பசப்பு சோலிய எல்லாம் என்கிட்ட காட்டாதடி. அண்ணன் மவ-ண்டு உன்னைய ஏ வூட்டுக்கு கூட்டிட்டு வந்ததுக்கு, ஏ வம்சத்தையே கருவறுத்திட்டியே…” என்று அநியாயமாகக் குற்றம் சாட்ட, துடித்துப் போனாள் அங்கை.

*****

அவளின் கண்கள் இறுக மூடியிருந்தன. எதற்கோ பயந்து கொண்டிருப்பவள் போல் அவளின் உதடுகள் நடுங்கிக் கொண்டிருந்தன.

நிதானமாக அவளைப் பார்த்துக் கொண்டே அவளின் அருகில் சென்ற அதிவீரன், “குயிலம்மா…” என்று மென்மையாக அழைத்தான்.

இப்போது அவளின் உதடுகளுக்கு இணையாகக் கைகளும் போட்டி போட்டு நடுங்க ஆரம்பிக்க, அதை உணர்ந்தாலும் அவளை அழுத்தமாகப் பார்த்தவன், “இப்ப நீ என் பொஞ்சாதி. தெரியும்ல? தெரிஞ்சிருக்கும். நான் உங்-கழுத்துல தாலி கட்டும் போது உனக்கு உசாரு இருந்துச்சு. அதுக்குப் பொறவுதேன் மயக்கம் போட்டண்டு எனக்குத் தெரியும். எம்புட்டு நாளைக்கு இப்படிக் கண்ணை மூடிட்டு இருப்ப? எப்ப இருந்தாலும் இந்த முகத்தை நீ பார்த்துதேன் ஆவணும் குயிலம்மா…” என்றான் மென்மையாக.

அவன் பேச பேச இன்னும் நடுங்கியவள், “போய்டுங்க… போய்டுங்க… இங்கிருந்து போயிடுங்க…” என்று நடுங்கிய உதடுகளுடன் முணுமுணுத்தாள்.

அவன் முகம் ஒரு நொடி இறுகி பின் இயல்பானது.

“போவலாம். உனக்குச் சரியானதும் நாம ரெண்டு பேரும் சேர்ந்தே இங்கிருந்து போவலாம்…” என்றான் இலகுவாக.

அவள் திகைத்து அடுத்து பேச வார்த்தைகளைத் தேட, அதற்குள் அவனே முந்திக் கொண்டான்.

“அரளி விதையை அரைச்சு உன்னைய பேசுன பொம்பள வாயில் ஊத்தாம, நீயே ஊத்திக்கிட்டயே… அம்புட்டு கோழையா நீ?” என்று கோபத்துடன் கேட்டான்.

****

“மாமா, போதும் நிறுத்துங்க…” என்றார் சிவகாமி.

“நீ என்ன சொல்ல போறவ? அவென் ரொம்பப் பேசுறியான். அவனை அடக்காம வேடிக்கை பார்க்க சொல்றீயா? நீங்க அவனைத் தூக்கி போட்டு மிதிங்கண்ணே…” என்றார் துரைப்பாண்டி.

கணவரை முறைத்த சிவகாமி, “இப்ப அந்தத் தம்பி நம்ம அங்கையோட புருஷன். அவரைப் போய் அடிங்க, மிதிங்கண்டு இருக்கீக? கொஞ்சமாவது யோசனையோடதேன் பேசுறீகளா?” என்று கடிந்து கொண்டார்.

“புருஷனா? ஒரு கயித்தை கழுத்துல கட்டிட்டா புருஷனா ஆகிடுவானா?” என்று கோபத்துடன் கேட்டார் முத்துப்பாண்டி.

“அந்தக் கயிறுதேன் மாமா உங்க பொஞ்சாதியை உங்க கூட வாழ வச்சது. என்னைய உங்க தம்பி கூட இம்புட்டு வருஷம் குடும்பம் நடத்த வச்சுட்டு இருக்கு…” என்று அழுத்தமாகச் சிவகாமி சொல்ல,

“ஏய், என்ன அண்ணன்கிட்டயே மருவாதை இல்லாம பேசுறவ?” என்று மனைவியை அடிக்க வந்தார் துரைப்பாண்டி.

அசராமல் நின்ற சிவகாமி, “இப்படி நீங்க கை ஓங்குற உரிமையைக் கூட இந்தக் கயிறுதேன் கொடுத்திருக்கு…” என்று தன் கழுத்தில் கிடந்த தாலியைச் சுட்டிக்காட்டி சொன்னவர்,

“இப்ப நான் வளர்த்த பொண்ணுக்காகப் பேசிட்டு இருக்கேன். அவ நல்லா இருக்கக் கூடாதுண்டு நினைச்சா நீங்க என்னை அடிங்க. கொன்னு கூடப் போடுங்க…” என்றார்.

அண்ணன் மகள் நன்றாக இருக்கக் கூடாது என்று எப்படிச் சொல்வார்? துரைப்பாண்டி ஓங்கிய கையை இறக்கியபடி அடங்கி நின்றார்.

“நீங்க சொன்ன சாதாரணக் கயிறை இழந்துட்டுதேன் உங்க தங்கச்சி வாயில அங்கை விழுந்தா மாமா. அப்பவே சொன்னேன், அவளை நம்ம வூட்டுக்கு கூட்டிட்டு வந்திடலாமுண்டு. ஆனா, நீங்க கட்டி கொடுத்த பொண்ணு புகுந்த வூட்டுலதேன் இருக்கணுமுண்டு என் வாயை அடைச்சீக.

நீங்க மட்டும் அப்பவே அங்கைய நம்ம வூட்டுக்கு கூட்டிட்டு வந்திருந்தா, இப்ப அவ இந்தச் சாகுற முடிவை எடுத்திருக்க மாட்டா. பேசி பேசியே நீங்களும், மதினியும் அவளை இந்த நிலைக்குக் கொண்டு வந்து விட்டது போதாதா மாமா? இன்னும் அந்த நரகத்திலேயே அவளைப் புடிச்சு தள்ளணுமுண்டு துடியா துடிக்கிறீக…” என்று முத்துப்பாண்டியிடம் கேட்டார்.