“பாவம் சத்யா, ஸ்வீட் பொண்ணு ரொம்ப நடுங்குறா…” என்று கணவன் அருகில் அமர்ந்து அபிநயா புலம்பிக் கொண்டே வர, காரை ஓட்டிக் கொண்டே முன்னால் மடித்து வைத்திருந்த ஒரு துவாலையை எடுத்துப் பின்னால் நீட்டி, “இதைப் போர்த்திக்கோ…” என்று கொடுத்தான்.

வேகமாக வாங்கி அவள் தன்னை மறைத்துக் கொள்ள, “என்னாச்சு, நீ எப்படி இவனுங்ககிட்ட மாட்டிக்கிட்ட? யார் அவனுங்க?” என்று விசாரித்தான்.

அவள் நடந்ததை எல்லாம் திக்கி திணறி சொல்ல, “முட்டாளா நீ?” என்று கடுமையாகத் திட்டினான்.

அவனின் கடுமையில் மழுக்கென்று கண்ணீர் வந்தாலும், அவன் சொன்னதும் ஒன்றும் தவறில்லையே என்று நினைத்துக் கொண்டாள்.

“ஸ்வீட் பொண்ணைத் திட்டாதீங்க சத்யா…” என்று அபிநயா இடையிட, மனைவியைச் சூடாகப் பார்த்தவன், கண்ணாடி வழியாகப் பின்னால் இருந்தவளை பார்த்து, “தெரியாத பொம்பளை கூடப் போனதும் இல்லாமல், தூங்கினாளாம். புத்தி உள்ளவங்க யாராவது அப்படிச் செய்வாங்களா? அறிவே இல்லையா உனக்கு?” என்று இன்னும் திட்டினான்.

“உண்மைதான் சார். அறிவில்லாமல்தான் நடந்துகிட்டேன்…” என்று இனியா குலுங்கி அழ, கொஞ்சமும் இரக்கம் இல்லாமல் கண்ணாடி வழியாக அவளைப் பார்த்து முறைத்தான்.

“சும்மா இருக்க மாட்டீங்களா சத்யா? அவளே பாவம் அந்த அயோக்கிய ராஸ்கல்ஸ்கிட்ட இருந்து கஷ்டப்பட்டுத் தப்பிச்சு வந்திருக்கா. அவளைப் போய்த் திட்டிட்டு இருக்கீங்க…” என்று அபிநயா இனியாவின் அழுகையைப் பார்த்து கணவனைக் கடிந்து கொண்டாள்.

“செட் அப்! நீ கொஞ்சம் வாயை மூடுறீயா?” என்று மனைவியிடமும் வள்ளென்று விழுந்தான்.

“ஹான்… சார்…” என்று கப்பென்று அழுகையை நிறுத்தி இனியா திணறலுடன் கேட்க,

“ப்ச்!” என்ற சலிப்புடன் ஒன்றை கையால் தலையைக் கோதிக் கொண்டவனிடமிருந்து அதன்பிறகு எந்தப் பேச்சும் வரவில்லை.

அபிநயா அவனை நமுட்டுச் சிரிப்புடன் பார்க்க, மீண்டும் அவளைப் பார்த்து சூடாக முறைத்தான்.

அவள் இன்னும் பெரிதாகச் சிரிக்க, “சிரிக்காதேடி! அப்படியே அந்த உதட்டை கடிச்சு வச்சுருவேன்…” என்று பற்களைக் கடித்துக் கொண்டு மனைவியின் புறம் சாய்ந்து முணுமுணுத்தான்.

“அச்சோ சத்யா! ஸ்வீட் பொண்ணைப் பக்கத்தில் வச்சுக்கிட்டு என்ன பேச்சு பேசுறீங்க?” என்று கணவனைக் கடிந்து கொண்டாள்.

“அவளை வேணுமானால் காதை பொத்திக்கச் சொல்லு…” என்று மீண்டும் முணுமுணுக்க,

“சார்…” என்று தயக்கத்துடன் அழைத்தாள் இனியா.

“என்ன?” என்று கடுமையாகக் கேட்டான் சத்யா.

அவன் கடுமையில் அடுத்து பேச வராமல் இனியா வாயை மூடிக் கொள்ள, “ரொம்பப் பண்றீங்க சத்யா. அவளே எவ்வளவு பெரிய ஆபத்தில் இருந்து தப்பிச்சு வந்திருக்காள். அவளுக்கு ஆறுதலா பேசாமல் சும்மா கத்திக்கிட்டே இருக்கீங்க? இதெல்லாம் நல்லா இல்லை…” என்று கணவனுடன் சண்டைக்குத் தயாரானாள் அபிநயா.

“ஆபத்தில் போய் மாட்டிக்கச் சொல்லி நானா சொன்னேன்? அவளா போய் மாட்டிக்கிட்டா நானா பொறுப்பு? அப்படியும் நீ சொன்னன்னு தான் அவளைத் தேடி வந்து காப்பாத்தி கூட்டிட்டு போயிட்டு இருக்கேன். இதுக்கு மேலே எல்லாம் என்னால் ஆறுதல் சொல்ல முடியாது…” என்று இனியாவிற்குக் கேட்டு விடாமல் பற்களைக் கடித்து முனகினான்.

“இவ்வளவு கல்நெஞ்சமா இருக்காதீங்க சத்யா…” என்று கணவனைக் கண்டிக்க,

அவள் புறம் திரும்பி அவளை மேலும் கீழும் பார்த்தவன், “நீ என்ன நினைச்சு இப்படிப் பேசிட்டு வர்றன்னு எனக்குத் தெரியும்டி. உன் பப்பு என்கிட்ட வேகாது. வாயை மூடிட்டு வா. இல்லனா அவளை இங்கேயே இறக்கிவிட்டுடுவேன்…” என்றதும், கப்பென்று வாயை மூடிக் கொண்டாள் அபிநயா.

அதன்பிறகு காருக்குள் அமைதி நிலவ, இனியா தனக்குள்ளேயே மருகி கொண்டு வந்தாள்.

“நீ ஆட்டோவில் ஏறிய விஷயத்தை வீட்டுக்கு தகவல் சொன்னியா?” என்று விசாரித்தான் சத்யா.

“ஹான், இல்லை சார்…” என்று சொல்லி முடித்த நொடி மீண்டும் அவனின் கோபம் உச்சத்தில் ஏறியது.

“படிச்ச முட்டாள். நைட் டிராவலில் தனியா கிளம்பியவள் வீட்டுக்கு தகவல் சொல்ல வேண்டாமா? இப்ப நாட்டில் என்னென்னவோ நடக்குது. அதுக்கு ஏத்த மாதிரி உஷாரா இருக்க வேண்டாமா? இதெல்லாமா ஒவ்வொருத்தரும் சொல்லிக் கொடுத்துக் கொண்டே இருப்பாங்க?” என்று எரிச்சல் மேலிட கத்தினான்.

அவன் சொன்னது சரிதான். தான்தான் அதிகக் கவனத்துடன் இருந்திருக்க வேண்டும். ஆனால், அந்தப் பெண் பேசிக் கொண்டே வர, அவளுக்குப் பதில் சொல்லிக் கொண்டு வந்தவள் வீட்டிற்குத் தகவல் சொல்ல மறந்து போனாள்.

சொல்லப்போனால் ஆட்டோவில் செல்வதால் வழக்கமான நேரத்தை விட விரைவில் வீடு சென்று விடலாம் என்ற நினைப்பில் சற்று அலட்சியமாகத்தான் இருந்துவிட்டிருந்தாள்.

அவளின் சிறு அலட்சியமே ஆபத்தில் கொண்டுவந்து விட்டதைக் காலம் கடந்து உணர்ந்து கொண்டாள்.

“இப்பவாவது போன் பண்ணி நீ வீட்டுக்கு வந்துட்டு இருக்குற தகவலைச் சொல்லு…” என்றான் சத்யா.

“என்னோட போன், பேக் எல்லாம் ஆட்டோவில் போயிருச்சு சார்…” என்றாள் மெல்லிய குரலில்.

“சரிதான்…” என்று தலையை அசைத்துக் கொண்டவன், “இந்தா, இதில் பேசு…” என்று தன் போனில் லாக்கை எடுத்துவிட்டு அவள் கையில் கொடுத்தான்.

அவள் வாங்கித் தம்பிக்கு அழைத்து மெதுவான குரலில் தகவல் சொன்னாள். வீட்டுக்கு வந்து கொண்டிருப்பதாக மட்டும் சொல்லி தொடர்பை துண்டித்தாள்.

கிளை சாலையை எல்லாம் சுற்றி விட்டு வந்ததால் வீடு செல்ல சற்று நேரமாகிற்று.

வீடு வந்தும் சாலையில் வண்டியை நிறுத்தியவன், “இறங்கி போ…” என்றான்.

“என்ன சத்யா இது? அவளைத் தனியா போகச் சொல்றீங்க? நீங்களும் இறங்கி அவளை வீட்டில் விட்டுட்டு வாங்க…” என்றாள் அபிநயா.

“நீ வாயை மூடுடி. என்ன செய்யணும்னு எனக்குத் தெரியும்…” என்று அவன் மனைவியைக் கடிந்து கொள்ள, அவள் முகம் சுருங்கிற்று.

கார் நின்றதும் கதவை திறந்த இனியா, சுற்றுமுற்றும் ஆட்கள் இருக்கிறார்களா என்று பார்த்தாள். ஆட்கள் நடமாட்டம் தெரியாமல் போக, துவாலையால் நன்றாகப் போர்த்திக் கொண்டே மெல்ல இறங்கியவள், “தேங்க்ஸ் சார்…” என்று சொல்லிவிட்டு, விறுவிறுவென்று தனது வீட்டை நோக்கி சென்றாள்.

அவள் பக்கமே சிறிதும் திரும்பாமல், “நீங்க செய்வது சரியே இல்லை சத்யா…” என்று கடிந்து கொண்ட மனைவியின் வார்த்தையையும் காதில் வாங்காமல், தன் வீட்டின் முன் சென்று காரை நிறுத்திவிட்டு, வீட்டிற்குள் சென்று கதவை அடைத்துக் கொண்டான் சத்யப்ரியன்.