யுத்தம் செய்தாய் என்னுள்ளே – முன்னோட்டம்
கணவன் கிளம்பும் போது அழக்கூடாது என்ற வைராக்கியத்தை அவளுள் வரவைத்துக்கொண்டாள்.
நேரம் செல்ல, மாலை மணிவர்மன் கிளம்பும் நேரமும் வந்தது.
மகேஷ்வரனும், இந்துமதியும் வேலை முடிந்து வந்திருக்க, மகேஷ்வரன்தான் தம்பியை ரயில் ஏற்றிவிடச் செல்வதாக இருந்தான்.
மற்றவர்களிடம் சொல்லிக் கொள்ளும் முன், மனைவியைத் தனியாக அழைத்துச் சென்ற மணிவர்மன் மனைவியை இறுக்கமாக அணைத்துக் கொண்டான்.
அவளும் அவன் அணைப்பில் அப்படியே நிற்க, அவளின் முகத்தை நிமிர்த்தியவன், “கவனம் தனா. பார்த்து இருந்துக்கோ. உனக்கு இந்த வீடு புதுச் சூழல். கல்யாணமாகி மூனு நாளிலேயே இங்கே விட்டுட்டு கிளம்புறேன். அப்பா, அம்மா மட்டும் இல்லை… மகேஷும், அண்ணியும் கூட உன்னை நல்லா பார்த்துப்பாங்க.
ஆனாலும், நான் உன் கூட இருப்பது போல் வராதுன்னு தெரியும். இருந்தாலும் எனக்கு வேற வழி இல்லை. நாம இதைக் கடந்து வந்துதான் ஆகணும். நீ எப்படிச் சமாளிக்கப் போறன்னு தெரியலை. எல்லாரும் உனக்குச் சப்போர்ட்டா இருக்கும் போது நீ சமாளிச்சுடுவன்னு நம்புறேன். சமாளிச்சுடுவ தானே?” என்று மென்மையாகக் கேட்டான்.
அவள் ‘ஆமாம்’ என்று தலையை அசைக்க, “குட்…” என்று அவள் இதழில் அழுத்தமாக இதழ் பதித்தான்.
அவன் இதழ்களைப் பிரிக்க விடாமல் அவள் அழுத்தமாகப் பிடித்துக் கொண்டு, கசிய காத்திருந்த கண்ணீரை உள்ளிழுத்துக் கொண்டாள்.
மெல்ல அவளைத் தன்னிடமிருந்து பிரித்து, “தனாமா…” என்று அவன் உயிர் உருக அழைக்க, அதற்கு மேல் முடியாமல் அவன் மார்பில் சாய்ந்தே கண்ணீர் உகுத்தாள் கீர்த்தனா.
கணவன் முன் அழுது விடக்கூடாது என்ற அவளின் வைராக்கியம் எல்லாம் அந்த நொடி சுக்குநூறாக உடைந்து போனது.
“தனா… தனாமா…” என்று அழைத்தவனுக்கும் குரல் கரகரத்ததோ? தன்னை இறுக்கமாகக் காட்டிக் கொள்ள முயலும் அந்த ஆண்மகனும் கூட, அந்த நொடி சராசரி கணவன் ஆகியிருந்தான்.
“என்னடி, இப்படி அழற? இவ்வளவு நேரமும் அழாமல் சமத்தாதானே இருந்த…” தன் மார்பில் புதைந்து அழுதவளை தன்னிடமிருந்து பிரித்து, முயன்று குரலில் கடுமையைக் கொண்டு வந்து அதட்டினான்.
“நீங்க ஏன் தனாமா சொன்னீங்க? அதான் அழுகை வந்திருச்சு. நீங்கதான் காரணம்…” என்று அவள் வேகமாகக் கண்களைத் துடைத்துக் கொண்டு சொல்ல, அவனுக்குப் புன்னகை வந்தது.
“நம்பிட்டேன்…” என்று நக்கலாகச் சொன்னவன், “சரி, நான் கிளம்புறேன்…” என்றான்.
“நானும் உங்க கூட ஸ்டேஷன் வரை வர்றேனே…” என்றாள்.
“நோ… அங்கே வந்து நீ அழுதால் நல்லா இருக்காது. நீ வீட்டில் இரு…” என்றவனின் கன்னத்தைக் கடிப்பது போல் வந்தவள் சட்டென்று இதழ் பதித்தாள்.
அவன் வழக்கம் போல் அவளின் கன்னத்தைத் தட்டி சிரிக்க, அவனின் அந்தச் சிரித்த முகத்தைக் கண்களில் வாங்கி மனத்தில் நிரப்பிக் கொண்டாள் கீர்த்தனா.
“அப்புறம் மேடம் இனி ஃப்ரீ பேர்ட்டா?” சன்ன சிரிப்புடன் கேட்டான்
“இல்லையா பின்ன? மாமியார், மாமனார் பிக்கல் பிடுங்கல் இல்லை. நாத்தனார் இல்லவே இல்லை. புருஷன் ஊருக்குப் போய்ட்டார். எவ்வளவு ஜாலியா இருக்கேன் தெரியுமா?” என்று அவள் உற்சாகமாகச் சொல்ல,
“அடியேய்!” என்று அதட்டினான்.
“என்னய்யா மிலிட்டரி மாம்ஸ், சவுண்ட் பலமா இருக்கு…” என்று அவளும் குரலை உயர்த்த,
“என்னய்யாவா? என்னடி கொழுப்பா?”
“நீங்க மட்டும் ‘டி’ சொல்றீங்க. நானும் ‘ய்யா’ சொல்லுவேன். அது என்னோட உரிமை…” என்று அவள் போர்க்கொடி தூக்க,
“வாய்க் கொழுப்பு கூடிப் போச்சு உனக்கு…” என்றான்.
“எல்லாம் என் புருஷன் பார்த்த வேலைதான். கடிச்சு கடிச்சு வச்சு கொழுப்பு கூடி போயிருச்சு…” வீராவேசமாக ஆரம்பித்தவள் முடிக்கும் போது குழைய,
“அடாவடி…” என்றவனும் அப்பக்கம் சிரித்தான்.
“வாயில் மட்டுமா?” என்று அவன் ரகசியமாகக் கேட்க,
“அச்சோ மாம்ஸ்! சென்சார்… சென்சார்… கட் பண்ணுங்க…” என்று கூச்சத்துடன் கணவனை அடக்கினாள்.
“சென்சார் எனக்கு மட்டும்தானா? உனக்கு இல்லையா? சரி, உன் கூட யார் தங்கியிருக்காங்க?” என்று விசாரித்தான்.
“யாரும் இல்லை மாம்ஸ். நான் மட்டும்தான். இது ரொம்பச் சின்ன ரூம். தனியா இருந்தால் ஓகேவான்னு கேட்டாங்க. நான் அதே எடுத்துக்கிட்டேன்…”
“அதான் என்கிட்ட ரொம்ப ஃப்ரீயா பேசுற போல…” என்று ‘ரொம்ப’ என்பதில் அழுத்தம் கொடுத்து சொல்ல,
“பேசத்தானே தனியா வந்தது…” என்று அவள் மெல்லிய குரலில் முணுமுணுத்துக் கொண்டது அவனுக்கும் கேட்டது.
“சரிதான்… தனியா இருக்கோம்னு அலட்சியமா இருக்காதே. வெளியே போகும் போதும் வரும்போதும் ரொம்பக் கவனமா போயிட்டு வரணும். பஸ்ஸில் டிராவல் பண்ணும் போது கவனமா இருக்கும்…” என்று அவன் அறிவுரையை ஆரம்பிக்க,
“இதெல்லாம் ஏற்கெனவே சொல்லிட்டீங்க மாம்ஸ். நான் ரொம்ப ரொம்ப ரொம்பக் கவனமா இருப்பேன். டோன்ட் வொர்ரி. நீங்க அறிவுரையை விட்டுட்டு ஆசையா ஏதாவது பேசுங்க….” என்றாள்.
“ஆசையா பேச என்ன இருக்கு? ஒன்னுமில்லை…” என்றான்.
“ஒன்னுமே இல்லையா? இது அநியாயம் மாம்ஸ்…”
“நீதான் சென்சார் போட்டீயே…”
“அது எப்போ? அது ஏதோ கனவு கண்டுட்டீங்க போல. நான் அப்படிப் போடவே இல்லை…”
“ஃப்ராடு. விட்டா என்னையே கெடுத்துடுவ நீ. வை போனை…” என்று அதட்டினான்.
“மாத்தி சொல்றீங்க…” அவள் குறும்பாகச் சொல்ல,
“தனா…” என்று குரலை உயர்த்தியவன் அங்கே சிரிக்கிறான் என்று அவளுக்கு நன்றாகவே புரிந்தது.
மனத்தின் உல்லாசம் குரலிலும் வழிந்தது. கணவன், மனைவி பேச்சுக்கும் கட்டுப்பாடில்லை. செயலுக்கும் இல்லை.