நீளும் தூரம் நின்னோடு
நீளும் தூரம் நின்னோடு — Preview
அன்று வேலை முடிந்து முகிலினி பேருந்தில் சென்று கொண்டிருக்கும் போது, சாலையின் ஓரம் வண்டியை தள்ளிக்கொண்டு நடந்து சென்ற முகுந்தனைக் கண்டாள்.
‘என்னாச்சு, வண்டியை இப்படி உருட்டிட்டு போறார்?’ என்ற யோசனையுடன் ஜன்னல் வழியாகப் பார்த்தபடி கடந்திருந்தாள்.
முகிலினி வீடு வந்து மாடியில் ஏறும் போது, அவளின் அன்னையின் பேச்சு குரல் கேட்டுக் கொண்டிருக்க, யாரிடம் பேசுகிறார்? என்று யோசித்துக் கொண்டே சென்றவள், அவள் வீட்டின் முன் இருந்த நிழலில் அமர்ந்து விளையாடிக் கொண்டிருந்த வருணை பார்த்ததும் முகம் மலர்ந்தாள்.
பெயரனை நிழலில் அமர வைத்துவிட்டுப் பக்கவாட்டில் காயப் போட்டிருந்த துணிகளை எடுத்துக்கொண்டிருந்த நிர்மலாவிடம்தான் பர்வதம் பேசிக் கொண்டிருந்தார்.
பெரியவர்களின் பேச்சில் கவனத்தை வைக்காமல், ஒரு குட்டி காரை டுர்… டுர்… என்று சத்தமிட்டபடி உருட்டி விளையாடிக் கொண்டிருந்த வருணின் எதிரே சென்று நின்ற முகிலினி, “ஹேய் குட்டி பையா, கார் ஓட்டுறீங்களா?” என்று குனிந்து கேட்டாள்.
அவளை நிமிர்ந்து பார்த்தவன் தலையை மேலும் கீழும் ஆட்டி ஆமாம் என்றவன், “டுர்… டுர்…” என்று மீண்டும் சப்தமிட்டு, குனிந்து காரை உருட்ட ஆரம்பித்தான்.
“தங்கப் பையா சூப்பரா கார் ஓட்டுறீங்களே… உங்க கை சரியாகிடுச்சா?” என்று கேட்டாள்.
“போச்சு…” என்று தன் கையை ஆட்டிக் காட்டியவன், நெற்றிக் காயத்தையும் தொட்டு காட்டி, “ஷ்ஷ், ஆ… போச்சு” என்றான் பாவனையுடன்.
வலி போய்விட்டது என்று அவன் சொன்ன அழகில் அவனைத் தூக்கிக் கொஞ்ச வேண்டும் போல் இருந்தது அவளுக்கு.
வெளியே சென்று வந்தது கசகசவென்று இருந்ததால், அதனுடன் பிள்ளையைத் தூக்க முடியாமல், தன் ஆசையை அடக்கிக்கொண்டாள்.
“அட, வேலை முடிந்து வந்துட்டியாமா? அப்ப முகுந்தனும் வந்திருப்பானே. வீட்டை பூட்டிட்டு வந்தேன். தேட போறான்…” என்று நிர்மலா பதற,
“முகுந்தன் சார் இன்னும் வரலை ஆன்ட்டி. கீழே அவர் வண்டி இல்லை. நான் பஸ்ஸில் வரும்போது சார் அவர் வண்டியை தள்ளிட்டு போய்ட்டு இருந்தார். வண்டி எதுவும் பிரச்சினையான்னு தெரியலை…” என்று முகிலினி சொல்ல,
“அப்படியா? வண்டிக்கு என்னாச்சுன்னு தெரியலையே…” என்றவர், தன் இடையில் சொருகி வைத்திருந்த அலைபேசியை எடுத்து மகனுக்கு அழைக்கப் போக, அதற்குள் முகுந்தனே அழைத்திருந்தான்.
“சொல்லு முகுந்தா…” என்று எடுத்து பேசினார்.
“நான் வீட்டுக்கு வர லேட்டாகும் மா. வண்டி ஸ்டார்ட் ஆகலை. இஞ்சினில் ஏதோ ரிப்பேர் ஆகிடுச்சுன்னு மெக்கானிக் சொல்றான். வண்டியை ரெடி பண்ண ஒரு மணி நேரம் ஆகுமாம். நான் இருந்து வண்டியை வாங்கிட்டு வர்றேன். நான் வரும்வரை நீங்க வருணை பார்த்துக்கோங்க…” என்றான் முகுந்தன்.
“சரி முகுந்தா, பார்த்துக்கிறேன். நீ வண்டியை வாங்கிட்டு வா…” என்று சொல்லி விட்டு வைத்தவர், “வண்டியில் ஏதோ ரிப்பேராம். வர லேட்டாகும்னு சொல்லியிருக்கான்…” என்று பர்வதத்திடமும், முகிலினியிடமும் பொதுவாகச் சொன்னார்.
“அப்ப கொஞ்ச நேரம் இப்படி உட்காருங்க. பிள்ளை விளையாடிட்டு இருக்கானே. இன்னும் கொஞ்ச நேரம் விளையாடட்டும். முகிலிக்கு காஃபி போட போறேன். அப்படியே உங்களுக்கும் போட்டு எடுத்துட்டு வர்றேன்…” என்றார் பர்வதம்.
“இல்லை, இருக்கட்டும்…” என்று நிர்மலா மறுக்க,
“சும்மா உட்காருங்க ஆன்ட்டி…” என்ற முகிலினி அவருக்கு இரண்டு பிளாஸ்டிக் நாற்காலிகளை எடுத்து வந்து, வெளியே இருந்த நிழலில் போட்டாள்.
அதற்கு மேல் மறுக்க முடியாமல், ஒரு நாற்காலியில் காய்ந்த துணிகளை வைத்து விட்டு, இன்னொரு நாற்காலியில் அமர்ந்து கொண்ட நிர்மலா, அப்படியே துணிகளை மடிக்க ஆரம்பித்தார்.
“பாத்தி… நான் டுர்… டுர் போதேன்… நீ வா…” என்று மழலையில் தன் பாட்டியையும் விளையாட அழைத்தான் வருண்.
“பாட்டிக்குத் தரையில் உட்கார முடியாதுடா பையா. நீ விளையாடு. பாட்டி துணி மடிக்கிறேன்…” என்றார் நிர்மலா.
“விளையாடணுமா உன் கூட? இரு, நான் உன் கூட விளையாட வர்றேன்…” என்ற முகிலினி, வேகமாகக் குளியலறை சென்று கை, கால்களைக் கழுவிவிட்டு வந்து, குழந்தையின் அருகில் அமர்ந்து கொண்டவள், அவனுடன் விளையாட ஆரம்பித்தாள்.
“இவனுக்குச் சமமா நம்மையும் விளையாட சொல்லுவான். இந்த வயசுக்கு மேல என்னால் அதெல்லாம் முடிய மாட்டிங்கிது…” என்று நிர்மலா முகிலினியிடம் சொல்ல, அவரைப் பார்த்து லேசாகப் புன்னகை மட்டும் புரிந்தாள் அவள்.
“உங்க மகனுக்குக் கல்யாணம் முடிஞ்சா ஒரு பொண்ணு வந்துடுவா. அப்புறம் உங்களுக்குக் கவலை இல்லையே… நேத்து ஒரு பொண்ணைப் பார்க்க செங்கல்பட்டுப் போவதாகச் சொன்னீங்களே… அது என்னாச்சு?” என்று காஃபியை போட்டு எடுத்து வந்து அவரிடம் ஒரு டம்ளரை கொடுத்துவிட்டு விசாரித்தார் பர்வதம்.
“அது அமையலை…” என்று வருத்தமாக உரைத்தார் நிர்மலா.
“ஏன், என்னாச்சு?” என்று மகளுக்குக் காஃபியை கொடுத்துவிட்டு, சின்னவனுக்குப் பாலை ஆற்றிக் கொண்டே கேட்டார் பர்வதம்.
“என்னத்தைச் சொல்ல? அந்தப் பொண்ணுக்கு எங்க மகனை பிடிச்சிருக்காம். ஆனால், இந்தச் சின்னப் பையனை முகுந்தன் வளர்ப்பது அவளுக்குப் பிடிக்கலை போல. இவனை அவனோட அம்மா வழி பாட்டி தாத்தாகிட்ட வளர்க்க விடணுமாம். இப்படி அந்தப் பொண்ணு இப்பவே கண்டிஷன் போடுது. அதான் வேணாம்னு சொல்லிட்டோம். இப்ப உள்ள பொண்ணுங்க எல்லாம் யாரும் நம்ம பேச்சை கேட்பதில்லை. அவங்க ரூல்ஸுக்கு நம்மை வளைக்க நினைக்கிறாங்க…” என்று ஆதங்க பெருமூச்சுவிட்டார் நிர்மலா.
“அதென்னவோ உண்மைதான். சரி விடுங்க, வேற நல்ல இடமா அமையும்…” என்று ஆறுதலாக உரைத்தார் பர்வதம்.
“எனக்கு மனசே விட்டு போச்சுங்க பர்வதம். முகுந்தனுக்குக் கல்யாணத்துக்குப் பார்க்க ஆரம்பிச்ச நாளிலிருந்து ஏதாவது ஒரு தடங்கல் மாத்தி மாத்தி வந்துட்டே இருக்கு. அவனுக்குன்னு ஒருத்தியை கொண்டு வர நாங்களும் படாதபாடு பட்டுட்டோம். ஆனால், எதுவுமே சரியா அமைய மாட்டிங்குது. அதுவும் இப்ப எல்லாம் வருணை காரணம் வச்சு பொண்ணுங்க மறுக்குறாங்க…” என்று நிர்மலா கவலையுடன் புலம்ப,
“இதென்ன அநியாயமா இருக்கு? பிள்ளை என்ன பண்ணுச்சு பாவம்!” பர்வதம் கேட்க,
“வருணை ஏத்துக்கிறதுக்கு எந்தப் பொண்ணும் தயாரா இல்லை. பிள்ளையைக் காரணம் காட்டியே இன்னும் எவ்வளவு நாளைக்கு முகுந்தன் கல்யாணம் தள்ளி போகுமோ தெரியலை. எனக்கு இப்ப எல்லாம் இந்தக் கவலைதான்…” என்று வருத்தமாக உரைத்தார்.
வருணை தூக்கி தன் மடியில் அமர வைத்து, அன்னை ஆற்றிக் கொடுத்த பாலை அவனுக்குச் சிறிது சிறிதாகப் புகட்டிவிட்ட முகிலினி, பெரியவர்கள் பேச்சை கேட்டபடி அமைதியாக இருந்தாள்.
“விவாகரத்து ஆன பொண்ணுங்க, புருஷனை பறிகொடுத்த பொண்ணுங்க கூடவா இப்ப எல்லாம் இவ்வளவு கண்டிஷன் போடுறாங்க?” என்று பர்வதம் கேட்க, நிர்மலாவின் முகம் லேசாக மாறியது.
“முகுந்தனுக்கு நாங்க விவாகரத்து ஆன பொண்ணுங்களையோ, விதவை பொண்ணுங்களையோ பார்க்கலைங்க பர்வதம். எல்லாம் கல்யாணம் ஆகாத பொண்ணுங்களைத்தான் பார்த்தோம்…” என்று நிர்மலா சொன்னதும், வருணுக்கு பாலை புகட்டிக் கொண்டிருந்த முகிலினி தலையை நிமிர்த்தி நிர்மலாவின் மாறிய முகத்தைப் பார்த்தவளுக்கு ஏதோ ஒரு உறுத்தல் தோன்றியது.
அது கொடுத்த உந்துதலில், “இதை நான் கேட்பதற்கு ஸாரி ஆன்ட்டி, விவாகரத்தான பொண்ணுங்க, விதவை பொண்ணுங்கன்னா மட்டமா என்ன? கல்யாணமாகி ஒரு குழந்தையோட இருக்கும் உங்க பையனுக்கு, அவங்க எந்த விதத்திலும் குறைச்சல் இல்லையே? அவங்களும் உங்க பையன் போலத்தானே. அப்ப உங்க பையனை போல, தன் வாழ்க்கையை இழந்த பொண்ணைப் பார்த்திருந்தால் உங்களுக்கு இப்படி ஒரு சூழ்நிலை வந்திருக்காது தானே…” என்று கேட்டுவிட்டாள்.
நிர்மலாவின் முகம் இப்போது இரத்தப்பசையே இல்லாதது போல வெளுத்துப் போனது.
***
தன் மனநிலை புரிந்து இலகுவாக விஷயத்தைப் புறம்தள்ளிய கணவனின் மீது அன்பு ஊற்றெடுக்க, தன் கன்னத்தை வருடிக்கொண்டிருந்த அவனின் கையைப் பற்றித் தன் உதட்டில் ஒற்றிக்கொண்டாள் முகிலினி.
முதல்முறையாக அவளே முத்தமிட்டதில் சிலிர்த்துப் போனவன், இன்னொரு கையால் அவளின் பிடரியை பிடித்துத் தன்னை நோக்கி இழுத்து, அவளின் உதட்டில் அழுந்த தன் அதரங்களைப் பதித்தான்.
அச்செயலை எதிர்பாராமல் திகைத்து விழித்தவள், ஒரு வினாடி அவனிட்ட முத்தத்திற்கு மயங்கவே செய்தாள். ஆனால், கதவு திறந்திருப்பது நினைவில் வர, கணவனிடமிருந்து மெல்ல விலகிக்கொண்டாள்.
“கதவு திறந்திருக்கும்போது என்ன இது?” என்றாள் கண்டிப்பை காட்டி.
“நீயும் கதவு திறந்திருக்கும்போதுதான் என் கையில் கிஸ் பண்ண…” என்றான் நமுட்டுச்சிரிப்புடன்.
தான் கையில் முத்தமிட்டதும், அவன் உதட்டில் முத்தமிட்டதும் ஒன்றாமா? அவள் முறைக்க…
“நியாயத்துக்கு நீதான் இங்க கிஸ் பண்ணியிருக்கணும்…” என்று தன் உதடுகளைச் சுட்டிக்காட்டியவன், “போயும் போயும் கையில் கிஸ் பண்ணி என்னை ஏமாத்திட்ட…” என்றான் குறையாக.
“இப்ப அதனால் என்ன குறைஞ்சிடுச்சாம்?” என்று கேட்டாள்.
“நீயா இங்க கிஸ் பண்ற மொமொண்ட் மிஸ்ஸாகிடுச்சு மிஸ்…” என்றான் சோகம் போல்.
“நான் இப்ப மிஸஸ்…”
“எனக்குள் மிஸ்ஸாகி போன மிஸஸ் என்னை இன்னும் ஒரு லிப் கிஸ் கூட அடிக்கலையே…”
“அதான் நீங்க கொடுத்தீங்களே…”
“மிஸஸ் முகுந்தன், என்னதான் நான் கிஸ் அடிச்சாலும், கிஸ் அடிக்கப்படும்போது கிடைக்கும் கிக்கே தனி. எனக்கு அந்தக் கிக் வேணும்…”
சிறுபையன் போல் அடம்பிடித்தவனை வியப்பாகப் பார்த்தாள் முகிலினி.
“என்ன பார்வை?”
“நீங்க இவ்வளவு சேட்டை பண்ணுவீங்களா? இந்தக் கணக்கு வாத்தியாருக்கு கணக்கு பண்ண தெரியாதுன்னு நினைச்சேன். ஆனால், நீங்க…”
அவன் செய்யும் அலும்பில் சிரிப்புடன் தலையை அசைத்தாள்.
மனைவியின் அருகில் இன்னும் நெருங்கி அமர்ந்து, அவளின் தோளைச் சுற்றிக் கையைப் போட்டு பக்கவாட்டில் அணைத்துக்கொண்டவன், “உங்களுக்கு ஒரு விஷயம் புரியலை டீச்சரம்மா. ஒவ்வொரு மனுஷனுக்கும் இரண்டு விதமான முகம் இருக்கும். நான் சொல்வது நல்லவன், கெட்டவன் என்ற முகம் இல்லை. நான் சொல்வது, சாதாரண மனுஷனா வெளியுலகிற்கு அவன் காட்டும் முகம் ஒன்று, தன் துணையிடம் காட்டும் முகம் வேறு. ஒருத்தர் தன்னோட அந்தரங்க உள்ளத்து உணர்வை எல்லாம் எல்லார்கிட்டயும் வெளிச்சம் போட்டு காட்ட முடியாது. தன் துணைக்கிட்ட மட்டும்தான் சில உணர்வுகளை வெளிக்காட்டிக்கொள்ள முடியும்.
திருமணத்திற்கு முன்னாடி நீ பார்த்தது, ஒரு சராசரி மனுஷன் முகுந்தன். அவன் உன் ஹவுஸ் ஓனர் மகன், வருணின் அப்பா, ஸ்கூலில் மேக்ஸ் டீச்சர். அவனோட முகம் வெளியே அப்படித்தான் இருக்கும். அதைத்தான் எல்லார்கிட்டயும் காட்டுவான். இப்ப உன் முன்னால் இருப்பது மிஸ்டர் முகிலினி. உன்னோட முகுந்தன், அவனோட முகம் உன்கிட்ட இப்படித்தான் இருக்கும். கொஞ்சலா, குழைவா, நேசமா, காதலா, ரொமான்டிக்கா என்னால் உன்கிட்ட மட்டும்தான் நடந்துக்க முடியும்...” என்று அழுத்தமாகச் சொன்னவன், அவளின் நெற்றியோடு தன் நெற்றியை இலேசாக முட்டினான்.
அவளுக்குப் புரிந்தது. அவளுக்கும் அதேபோல்தான் உணர்வுகள் வெளிப்படுகின்றன. அவனின் அருகில் அவள் வேறொரு ஆளாகத்தானே இருக்கிறாள். அவனிடமே மட்டுமே கொஞ்சி, குழைந்த, நேசத்தையும், காதலையும் காட்டி அவள் காட்டும் இன்னொரு முகம் அவனிடம் மட்டும் தானே. தனக்குள் இப்படியும் உணர்வுகள் இருக்கிறதா என்று அவளே அவனின் அண்மையில்தானே அறிந்துகொள்கிறாள். என்ன அவள் முடிந்தவரை தன் உணர்வுகளை வெளிக்காட்டாமல் கட்டுப்படுத்த முயலுகிறாள். ஆனால், முகுந்தன் தன் உணர்வுகளுக்குக் கடிவாளம் போடாமல் காட்டாற்று வெள்ளமாய் அவளிடம் காட்டுகிறான். அதுதான் அவளுக்கு ஒரு புதியவனைப் பார்க்கும் உணர்வு எழுகிறது.
இந்தப் புதியவன் அவளுக்கானவன். அவளின் அண்மையில் மட்டும் மிளிர்பவன்! அவளவன்!
நினைக்கும்போதே தித்தித்தது அவளுக்கு.
கணவனின் தாடையை இரு கைகளாலும் தாங்கியவள், அவனின் நெற்றியில் தன் இதழ்களை அழுத்தமாகப் பதித்தாள்.
கண்களைப் பெரிதாக விரித்து மனைவியை அதிசயமாகப் பார்த்தான் முகுந்தன்.
அவளிட்ட நெற்றி முத்தம் பிடித்ததுதான் என்றாலும், இப்பொழுதும் அவள் தன் அதரங்களைத் தீண்டாதது அவனுக்குக் குறையே!
அவன் அதைத் தன் கண்களில் பிரதிபலிக்க, அவனின் மனத்தைப் படித்தவள், அவனின் உதட்டில் ஒற்றை விரலால் இலேசாகத் தட்டினாள்.
“கதவு திறந்திருக்கு. அக்கா பசங்க எந்த நேரம் வேணுமானாலும் இந்தப்பக்கம் வரலாம். நீங்க வருண் கூடப் படுத்து கொஞ்ச நேரம் ரெஸ்ட் எடுங்க. நான் போய் அம்மாவுக்கு ஹெல்ப் செய்துட்டு வர்றேன். தனியா கஷ்டப்படுவாங்க…” என்றபடி படுக்கையிலிருந்து எழுந்துகொண்டாள்.
அவனும் தடுக்கவில்லை.
“ஓகே முகிமா. போய்ட்டு வா. குட்டி எழுந்துட்டான்னா என்னாலும் அப்புறம் ரெஸ்ட் எடுக்க முடியாது…” என்று சொல்லி மகனின் அருகில் படுக்கையில் சாய்ந்துகொண்டான்.
முகிலினி சமையலறைக்குச் சென்றபோது, பேத்திகளை எங்கேயும் செல்லவிடாமல், பிடித்து அமர வைத்தபடி தனியாளாக விருந்து சமைத்துக்கொண்டிருந்தார் பர்வதம்.
“என்ன முகிலி இங்க வந்துட்ட? போய் மாப்பிள்ளை கூட பேசிட்டு இரு…” என்றார் பர்வதம்.
“அவர் ரெஸ்ட் எடுக்கிறார்மா. நான் உங்களுக்கு ஹெல்ப் செய்றேன். இந்த வாண்டுங்க ஏன் இங்க உட்கார்ந்திருக்கு?” என்று அக்காவின் மகள்களைப் பற்றிக் கேட்டாள்.
“அவளுங்களுக்கு வருண் கூட விளையாடணுமாம். பிள்ளை தூங்குறானே. அதான் இங்கயே இருங்கன்னு உட்கார வச்சுட்டேன்…” என்றார்.
முகிலினி பிள்ளைகளைப் பார்த்துச் சிரிக்க, “சித்தி, வருண் எப்ப எழுவான்? அவன் கூட நாங்க விளையாடணும்…” என்றாள் மூத்தவள்.
“வருண் நல்லா தூங்குறான் மலர். அவன் எழுந்ததும் விளையாடலாம். இப்ப நாம பாட்டிக்கு பூண்டு உரிச்சு கொடுக்கலாம்…” என்று அவர்களுடன் அமர்ந்தாள் முகிலினி.
சிறிது நேரத்தில் அங்கே வந்த மதிவதினி அவர்கள் எல்லாம் வேலை செய்வதைப் பார்த்துவிட்டு, முகிலினியின் எதிரே வந்து அமர்ந்தாள்.
“ஏன்டி முகிலி, உன்கிட்ட ஒரு விஷயம் பேசணும்னு நினைச்சேன். உனக்கொரு விஷயம் தெரியுமா?” என்று நீட்டி முழங்கி மதிவதனி பேச ஆரம்பிக்க,
என்னவென்று கேட்காமல் முகிலினி அமைதியாகத் தன் தமக்கையைப் பார்த்தாள்.
“இப்ப என்ன சொல்லி உன் தங்கச்சியைக் குழப்பி விடப்போற நீ?” என்று வெடுக்கென்று கேட்டார் பர்வதம்.
“என்னம்மா என்கிட்ட என்னவோ விரோதி போலவே பேசிட்டு இருக்கீங்க? நான் ஏன் முகிலியை குழப்பிவிடணும்? நீங்க பார்த்த மாப்பிள்ளை குடும்பம்தான் சரியில்லை. அதைச் சொல்ல வந்தால் நான் குழப்பி விடுறேனா? கல்யாணம் பண்ண மாப்பிள்ளை வீட்டுக்காரங்க பணம் கேட்கலைன்னு இவளைப் பிடிச்சுத் தள்ளிவிட்டீங்களே ஒரு குடும்பத்தில்… அந்தக் குடும்பத்தோட இலட்சணம் தெரியுமா உங்களுக்கு?” என்று படபடவென்று பொரிந்தாள் மதிவதினி.
“வாய் புளிச்சுதுன்னு என்னத்தையாவது பேசாதே மதி. நீ இப்படி எல்லாம் பேசிட்டுத் திரியுறதால்தான் உன் மேல் எனக்குக் கோபம் வருது. மாப்பிள்ளையும் மாப்பிள்ளை வீட்டுக்காரங்களும் தங்கமானவங்க. இதை உனக்கு நான் பலமுறை சொல்லிட்டேன். அப்புறமும் ஏதாவது அவங்களைப் பற்றிப் பேசிட்டே இருக்க நீ. இங்க இருக்கும் எங்களுக்குத் தெரியாதது… ஊரிலிருந்து வந்த உனக்கு மாப்பிள்ளை வீட்டாரை பற்றித் தெரிஞ்சிடுச்சாக்கும்?” என்று பர்வதம் கோபமாகக் கேட்க,
“தெரிஞ்சதால்தானே சொல்றேன். எனக்கு என்ன இல்லாததும் பொல்லாததும் சொல்லி என் தங்கச்சி வாழ்க்கையைக் குழப்பிவிடணும்னு ஆசையா?” சூடாகக் கேட்டாள் மதிவதனி.
“நீ செய்தாலும் செய்வ…” என்று தயவுதாட்சணம் பாராமல் சொன்னார் பர்வதம்.
“அம்மா…” என்று மதிவதனி குரலை உயர்த்திக் கத்த,
“சும்மா கத்தாதேடி. நீயும், உன் புருஷனும் ஊரிலிருந்து வந்ததிலிருந்து செய்றதை எல்லாம் கவனிச்சுட்டுத்தான் இருக்கேன். சொந்த தங்கச்சி கல்யாணத்துக்கு வந்தது போலவாடி நீ நடந்துக்கிட்ட? மூனாவது மனுஷி மாதிரி தள்ளி இருந்துகிட்ட. இப்ப வந்து இல்லாததும் பொல்லாததுமா மாப்பிள்ளை வீட்டை பத்தி பேசுற. உன் புருஷன் என்னன்னா புது மாப்பிள்ளைகிட்ட முகத்தைத் திருப்புறார். இரண்டு பேரும் உங்க மனசில் என்னடி நினைச்சிட்டு இருக்கீங்க?” என்று கோபமாகக் கேட்டார் பர்வதம்.
முசுமுசுவென்று மூச்சை இழுத்துவிட்டு அன்னையைப் பார்த்த மதிவதனி, “என்னவோ எங்களைக் கேட்டு முகிலிக்கு மாப்பிள்ளை பார்த்துக் கல்யாணம் செய்து வச்ச மாதிரி பேசுறீங்க. மூனாவது ஆளுக்குச் சொல்லிவிட்ட மாதிரிதானே எனக்கும், என் புருஷனுக்கும் தகவல் சொன்னீங்க. அப்ப நாங்க மூனாவது மனுசங்க மாதிரிதான் தள்ளி நிப்போம்…” என்றாள்.
“என்னை அப்படித் தகவல் சொல்ல வச்சது நீயும், உன் புருஷனும் தானே… தங்கச்சி நகையைப் பறிச்சு அடைமானம் வச்சு, அந்தக் காசில் வீடு கட்ட புருஷனும், பொண்டாட்டியும் பிளான் போட்டுருக்கீங்க. நான் மட்டும் சுதாரிப்பா இல்லைனா அன்னைக்கு முகிலியோட மொத்த நகையையும் ஆட்டையைப் போட்டுருப்பீங்க. அப்படி ஒரு காரியத்தைச் செய்ய எப்படிடி உனக்கு மனசு வந்துச்சு? நீயெல்லாம் என் பொண்ணா?” என்று பர்வதம் ஆதங்கமாகக் கேட்க,
மதிவதனிக்கு சுறுசுறுவென்று ஏறியது.
“இதெல்லாம் சரியில்லைம்மா. என்னை என்னவோ திருடி ரேஞ்சுக்கு பேசுறீங்க. வீடு கட்டணும்னு ஆசையில் முகிலி நகையை அடைமானத்துக்குத்தான் கேட்டேன். கொஞ்ச நாளில் திருப்பிக் கொடுத்துடலாம்னுதான் நினைச்சேன். வீடு கட்டன்னு கேட்டால் நீங்க என்ன சொல்வீங்களோ… நீங்களே வாடகை வீட்டில் இருக்கீங்க. அதனால் நகையைத் தர சம்மதிக்கலைனா என்ன பண்றதுன்னு தான் தொழிலை பெருக்கப் பணம் வேணும், அதுக்கு நகையை அடைமானம் வைக்கக் கொடுங்க கேட்டேன். நான் அந்தப் பொய் சொன்னது வேணா தப்பா இருக்கலாம். ஆனால், நான் ஒன்னும் முகிலி நகையை வாங்கி உங்களை ஏமாத்த நினைக்கலை. அதைப் புரிஞ்சுக்கோங்க முதலில்…” என்று மேல் மூச்சுக் கீழ் மூச்சு வாங்க ஆவேசமாகச் சொன்னாள் மதிவதனி.
அவர்கள் பேச்சை ஆரம்பித்தபோதே நிமலன் கடையிலிருந்து வந்திருந்ததால் குழந்தைகளை அவனுடன் வெளியே அனுப்பி வைத்திருந்தாள் முகிலினி.
அன்னையும், தமக்கையும் செய்யும் வாக்குவாதம் தடித்துக்கொண்டே போக, “சரி விடுக்கா. அம்மா அமைதியா இருங்க…” என்று இருவரையும் அடக்க முயன்றாள்.
“என்னடி விடுக்கா? நீயும் சேர்ந்துட்டுதானே என்னைத் திருடி மாதிரி அம்மாக்கிட்ட சொல்லி வச்சிருக்க. அப்படி என்னடி நான் உனக்குக் கெடுதல் பண்ணிட்டேன்?” என்று வெடுக்கென்று தங்கையிடம் கேட்டவள், “சொல்லப்போனா அம்மாதான் உனக்குக் கெடுதல் பண்ணி வச்சிருக்காங்க. மாப்பிள்ளை வீட்டை பற்றிச் சரியா விசாரிக்காம உன்னை அங்க தள்ளி விட்டுருக்காங்க. அது தெரியுமா உனக்கு?” என்று ஆத்திரமாகக் கேட்டாள்.
“போதும் நிறுத்துக்கா! நானும் பார்த்துட்டே இருக்கேன். என் புகுந்த வீட்டை பத்தி தப்பாவே பேசிட்டு இருக்க. அப்படி அவங்க என்ன பண்ணினாங்கன்னு நீ இந்தக் குதி குதிக்கிற?” என்று முகிலினியும் பொறுமை பறந்து கோபமாகக் கேட்க,
“உன் புருஷனோட தம்பி ஒருத்தன் செத்துப் போனானே… அவன் செய்த காரியம் தெரியுமா?” என்று கேட்டாள் மதிவதனி.
மேலும் படிக்க ப்ரீமியம் பிளான் வாங்கவும்.
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
இரண்டு வயது ஆண் குழந்தை இருக்கும் நிலையில் திருமணத்திற்கு தயாராகும் நாயகன். அந்தக் குழந்தையையே திருமணத்திற்கு தடைக்கல்லாக நினைக்கும் பெண் வீட்டினர்.
நாயகனுக்காக நாயகி அவன் இருக்கும் இடமே தேடி வர, அவனுக்கும், அவளுக்குமான பந்தம் உருவானதா? கதையில் தெரிந்து கொள்வோம்.
கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை ரேட்டிங், ரிவ்யூ மூலம் தளத்தில் தெரிவியுங்கள்.
Related products
-
உனதன்பில் உயிர்த்தேன்
Rated 5.00 out of 5


Reviews
There are no reviews yet.