விடியலின் நாதமாய்
விடியலின் நாதமாய் — Preview
“துளசிக்கு வளையல் போடு அகல்யா…” என்று ஒரு உறவு பெண்மணி சொல்ல, தட்டு நிறைய அடுக்கி வைத்திருந்த கண்ணாடி வளையல்களிலிருந்து எடுத்து நாற்காலியில் பட்டு சேலை கட்டி, கழுத்தில் மாலையுடன் அமர்ந்திருந்த துளசியின் கைகளில் வளையல்களை அணிவித்து விட்டாள் அகல்யா.
அவளுக்கு அடுத்ததாகத் துளசியின் முன்னாள் மாமியார் வளையல் போட வர, சற்று தள்ளி நின்றிருந்த சாமந்தி அதிப்தியுடன் பார்த்தார்.
“நீ ஏன் சாமந்தி அங்க நிக்கிற? வா… வந்து உன் மருமகளுக்கு வளையல் போட்டு விடு…” என்று வயதில் முதிய பெண்மணி அழைக்க,
“எல்லாரும் போடுங்க பெரியம்மா. நான் அப்புறம் போடுறேன்…” என்று மறுத்துவிட்டு வேலை இருப்பது போல் தள்ளி சென்றார் சாமந்தி.
துளசியின் முன்னாள் கணவன் வழி உறவுகளையும் கமலா அழைத்து வந்திருக்க, அந்தப் பெண்மணிகள் எல்லாம் துளசிக்கு வளையல் போட்டு விட்டனர்.
அனைத்தையும் ஒட்டாத்தன்மையுடன் பார்த்தார் சாமந்தி.
“நானு… நானு போடுவேன்…” என்று அனைத்தையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அமுதினி துள்ளினாள்.
மகளை மடியில் வைத்துக் கொண்டு ஒரு நாற்காலியில் ஆண்களுடன் அமர்ந்திருந்த அகத்தியன், “அது பெரியவங்க போடுவதுடா. நீ கிரியையும் கூட்டிட்டு போய் அவங்க கன்னத்தில் சந்தனம் மட்டும் வச்சுவிட்டு வந்துடு…” என்று மகளை இறக்கிவிட்டவன், தங்கையின் மகனையும் அவளுடன் அனுப்பி வைத்தான்.
அங்கே இருந்தபடியே அகல்யாவுக்குச் சமிஞ்சை காட்டினான்.
அவளும் பிள்ளைகளை அழைத்துச் சென்று துளசியின் கன்னத்தில் சந்தனம் தடவி விடச் சொல்ல, இருவரையும் பார்த்து சோபையுடன் சிரித்தாள் துளசி.
இங்கேயிருந்து கவனித்துக் கொண்டிருந்த அகத்தியன் துளசியின் முகத்தைப் பார்த்து நெற்றியை சுருக்கினான்.
துளசி சிரித்தாளே தவிர, அதில் உயிர்ப்பே இல்லை. கடந்த ஒரு வாரமாகச் சோர்வாகத்தான் தெரிந்தாள்.
பிரசவ தேதி நெருங்கி கொண்டிருப்பதால் அப்படி இருக்கிறாளோ என்று நினைத்திருந்தான்.
ஆனால், இன்றைய நிகழ்வில் இன்னும் சோர்வாகத் தெரிந்தவளை, யோசனையாகப் பார்த்தான்.
“என்னப்பா அகத்தியா… உன் பொண்டாட்டிக்கு நீ வளையல் போடலையா?” என்று அவனின் பாட்டி முறை முதிய பெண்மணி ஒருவர் குரல் கொடுக்க,
யோசனையை விட்டு வெளியே வந்தவன், அந்தப் பாட்டியைப் பார்த்து லேசாகப் புன்னகைத்தான்.
“சுதாகர் அண்ணா பிள்ளைக்காகத்தானே வளைகாப்பு நடக்குது. அவரை ஏன் கூப்பிடுறீங்க?” சுதாகரின் சொந்தக்காரப் பெண் ஒருத்தி பட்டென்று சொல்ல, அவ்விடம் சட்டென்று மௌனமானது.
துளசி வேகமாகத் திரும்பி அகத்தியன் முகம் பார்த்தாள்.
அவனின் முகம் இயல்பாக இருந்தது போல்தான் இருந்தது. ஆனால், வேறு பக்கம் நின்றிருந்த சாமந்தியின் முகம் மாறியதை அவள் கவனிக்கவில்லை. அவ்வளவு நேரம் இலகுவாக இருந்த அகல்யா கூட, அந்தக் கூட்டத்திலிருந்து சட்டென்று விலகி வந்தாள்.
“ஏய் ராஜி… வாயை வச்சுட்டு சும்மா இருக்க மாட்ட…” என்று ஒரு பெண்மணி அந்தப் பெண்ணை அதட்ட,
“உண்மையைத் தானே சொன்னேன் அத்தை…” என்று முனகினாள் அந்த ராஜி.
சாமந்தி கணவரை தான் முறைத்துப் பார்த்தார். இதெல்லாம் அவரால் வந்தது என்பதுபோல்.
*****
அன்று இரவு அகத்தியன் வீட்டிற்கு வந்தபோது துளசியிடம் ஏதோ சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தாள் அமுதினி.
“போ… நான் கோவிச்சிட்டேன்… உன் கூட டூ…” என்று சொல்லிவிட்டு அறையின் ஒரு மூலையில் சென்று அமர்ந்து கொண்டாள் அமுதினி.
“அமுதுமா… நான் பாவம் தானே… நாம பழம் விட்டுக்கலாம்…” என்று துளசி அவள் முன்னால் சென்று மண்டியிட்டு அமர்ந்து கெஞ்சிக் கொண்டிருக்க, அவர்களைப் பார்த்துக் கொண்டே அறைக்குள் வந்தான் அகத்தியன்.
“என்னாச்சு துளசி? எதுக்கு மண்டி போட்டு உட்கார்ந்திருக்க? எங்கயேயும் பிடிச்சுக்கப் போகுது. எழுந்துரு முதலில்…” என்றான்.
“அமுது குட்டி என்கிட்ட கோவிச்சுக்கிட்டாள் அத்தான். அவளை என்கிட்ட பேச சொல்லுங்க…” என்று எழுந்து கொள்ளாமலே துளசி சொல்ல,
“ஏற்கெனவே ஆப்ரேஷன் பண்ண இடத்தில் தையல் விட்டு, திரும்பத் தையல் போட்டுருக்காங்க. மறந்து போச்சா உனக்கு? நீ முதலில் எழுந்திரு. அப்புறம் நான் அவளிடம் என்னன்னு விசாரிக்கிறேன்…” என்று அதட்டினான்.
முகத்தை சுருக்கியபடி எழுந்து நின்றாள் துளசி.
அதன் பின்னே அவனின் கவனம் மகள் பக்கம் சென்றது.
“அமுதுமா… உனக்குத் துளசி மேல் என்னடா கோபம்? எதுக்கு அங்க போய் உட்கார்ந்திருக்க?” என்று மகளிடம் விசாரித்தான்.
“துளசி பேட் பா…” என்றாள் அமுதினி.
“பெயர் சொல்ல கூடாதுடா…” என்றான் வழக்கம் போல்.
“அப்ப எப்படிச் சொல்ல?” என்ற குழந்தையின் கேள்விக்கு அவன் வழக்கம் போல் உடனே பதிலுரைக்காமல் விஷயத்தை கேட்டான்.
“இப்ப எல்லாம் எனக்குப் பிரெஞ்ச் பிரை செய்யலை... ரோல் செய்யலை. பிரைட் சாண்ட்விச் செய்யலை.. ஹான்… கட்லட் செய்யலை…” என்று தொடர்ந்து இதுநாள் வரை துளசி அவளுக்காகச் செய்து கொடுத்த உணவு வகைகளைப் பட்டியலிட்டவள், “எல்லாம் தம்பி பாப்பா வீட்டுக்கு வந்ததிலிருந்து தான். இந்தத் தம்பி பாப்பா வேணாம். தூக்கி போட்டுடலாம்…”
“அமுதுமா…” அமுதினி பேசிக் கொண்டிருக்கும்போதே குரல் உயர்த்தி அதட்டியிருந்தான் அகத்தியன்.
குழந்தை அரண்டு போய்த் தகப்பனை பார்க்க, அவனின் சத்தத்தில் தொட்டிலில் உறங்கி கொண்டிருந்த சின்னவனும் விழித்து அழ ஆரம்பித்தான்.
“என்ன அத்தான் நீங்க… சின்னப் பிள்ளை அவள். அவளைப் போய் மிரட்டுறீங்க…” என்ற துளசி குனிந்து அமுதினியை தூக்கிக் கொள்ள, அகத்தியன் விரைந்து சென்று பையனை தூக்கினான்.
“ஒன்னுமில்லைடா பையா… பயந்துட்டியா?” என்று பிள்ளையைத் தூக்கி சமாதானம் செய்தவன், துளசி மகளைத் தூக்கி வைத்திருப்பதைக் கண்டு, “என்ன பண்ணிருக்கத் துளசி? அவளை இறக்கிவிடு…” என்று அதட்டினான்.
அமுதினி இன்னும் பயந்து அழ, “நீங்க பண்றது சரியில்லை அத்தான். அமுதுமா பயப்படுறா பாருங்க…” என்று அவனைக் கடிந்து கொண்டாள் துளசி.
“அதெல்லாம் அப்புறம் பேசலாம். முதலில் நீ அவளை இறக்கி விடு… குழந்தை பிறந்து இருபது நாள் தான் ஆகுது. வெயிட்டா இருப்பா அவ. கீழே இறக்கு…” என்றவன் அவளின் அருகில் வந்து, “நீ இவனைப் பிடி… நான் அவளைத் தூக்குறேன்…” என்று சொல்லி பிள்ளைகளைக் கைமாற்றினார்கள்.
தகப்பனிடம் வர மாட்டேன் என்று அமுதினி பிடிவாதம் பிடிக்க, “சரி… சரி… அப்பாகிட்ட அப்புறம் கோபப்படலாம்…” என்று மகளைத் தாஜா செய்து அவளைத் தூக்கிக் கொண்டான்.
துளசி மகனை சமாதானம் செய்ய ஆரம்பித்தாள்.
“போ… போ… நீ என்னைத் திட்டின…” என்று தந்தையின் முகத்தைப் பிடித்துத் தள்ளிவிட்டு அவனின் கைகளிலிருந்து இறங்க முயன்றாள் அமுதினி.
*****
“அப்பா…”
“ப்பா…”
“அப்பா…”
“ப்பா…”
பிள்ளைகள் இருவரும் உறங்கி கொண்டிருந்த தகப்பனை மாறி மாறி அழைத்து எழுப்பினர்.
“அப்பா உறங்கட்டும். எழுப்பாதீங்க…” என்று துளசி பிள்ளைகளை அடக்கப் பார்க்க, அவர்களுக்கோ அவளின் பேச்சே காதில் ஏறவில்லை.
“இன்னும் கொஞ்ச நேரம்டா…” என்று அரை உறக்கத்தில் அகத்தியன் முனக,
“அப்பா, தலையில் அடிபட்டிருக்குபா. எழுந்துருப்பா…” என்று அமுதினி சொல்ல,
“உப்ப்… உப்ப்…” என்று தந்தையின் நெற்றிக் காயத்தை ஊதி விட்டுக் கொண்டிருந்தான் அகிலன்.
பிள்ளைகளின் ஆர்ப்பாட்டத்தில் மெல்ல கண்விழித்துப் பார்த்தான்.
தன் மீது பாதிச் சாய்ந்து கவலையை முகத்தில் காட்டி அமர்ந்திருந்த மகளையும், தன் மீது ஏறி அமர்ந்து தன் முகத்தில் ஊதிக் கொண்டிருந்த மகனையும் புன்னகையுடன் பார்த்தான் அகத்தியன்.
நெற்றி காயம் சுரீரென்று வலித்துக் கொண்டிருந்தாலும், மனதோ பிள்ளைகளைப் பார்த்து இதமாக உணர்ந்தது.
“அப்பாவுக்கு ஒன்னும் இல்லைடா. சின்னக் காயம்தான். இரண்டு நாளில் சரியாகிடும்…” என்று இரு பிள்ளைகளின் முதுகிலும் தட்டிக் கொடுத்துச் சமாதானம் செய்தான்.
“அப்பா, கட்டிலில் படுத்துருக்கப்பா…” என்று அமுதினி ஆச்சரியமாகச் சொல்ல,
“ஏன்டா, அப்பா கட்டிலில் படுக்கக் கூடாதா?” என்று புன்னகையுடன் மகளிடம் கேட்டான்.
“நீதான் மெத்தைல படுக்கணும்னு சொன்ன…” என்றாள் மகள்.
“அம்மாதான்டா அப்பாவை கட்டிலில் படுக்கச் சொன்னா. நீ அவகிட்டயே கேளு…” அவர்களின் பேச்சை கேட்டபடி நின்றிருந்த மனைவியின் புறம் கையைக் காட்டினான் அகத்தியன்.
‘நானா? என்ன இது?’ என்பது போல் துளசி அவனைப் பார்க்க, அவனோ உதட்டினோரம் ஒளித்து வைத்திருந்த புன்னகையுடன் அவளைப் பார்த்தான்.
துளசி அவனை முறைக்க முயல, “ஏன் துளசிமா?” என்று கேள்வி எழுப்பி அவளின் கவனத்தைத் தன் புறம் திருப்பினாள் அமுதினி.
“ஹான்” என்று முழித்த துளசி, “அப்பாவுக்கு அடிபட்டிருக்கே அமுதுமா. அதனால்தான்…” என்றாள் சமாளிப்பாக.
“அப்படியாப்பா?” என்று உறுதிப்படுத்திக் கொள்ளத் தந்தையிடம் கேட்டாள் மகள்.
மனைவியை ஒரு பார்வை பார்த்துவிட்டு, மகளின் புறம் திரும்பியவன், “அப்பா, அம்மா, பாப்பா, தம்பி எல்லாம் ஒரே பேமிலியா? வேற வேற பேமிலியா?” என்று கேட்டான்.
“பேமிலி ட்ரீல(Tree), தாத்தா, பாட்டி, அப்பா, அம்மா, அக்கா, தம்பி, தங்கை எல்லாரும் ஒரே பேமிலின்னு எங்க டீச்சர் சொல்லிக் கொடுத்தாங்கப்பா…” என்றாள் மகள்.
“நாம எல்லாம் இப்ப ஒரே வீட்டில் தானே இருக்கோம்?” தகப்பன் கேட்க,
“ஆமாம்…”
“தாத்தா, பாட்டி தனிதனியா இருக்காங்களா?”
“இல்லை, தாத்தாவும், பாட்டியும் ஒரே கட்டிலில் படுப்பாங்க…” என்றாள்.
“அப்போ அப்பாவும், அம்மாவும் எப்படிப் படுப்பாங்க?” தகப்பன் கேட்க, நாடியில் கை வைத்து யோசித்தவள், “ஒரே கட்டிலில்தான் படுக்கணும். ஆனா, ஏன்பா இத்தனை நாள் நாம தனியா படுத்தோம்? இப்ப மட்டும் இங்கே படுத்திருக்க?” என்று கேட்டாள்.
“அதுவா… இவ்வளவு நாள் தம்பி குட்டி பையனா இருந்தான்ல, அதான். இப்பதான் அவன் வளர்ந்துட்டானே… அதான் அப்பா கட்டிலுக்கு வந்துட்டேன்…” என்று விலாவாரியாக விளக்கினான் அகத்தியன்.
புரிந்தும், புரியாமலும் தலையை ஆட்டினாள் மகள்.
மேலும் படிக்க ப்ரீமியம் பிளான் வாங்கவும்.
புதிய கதை பற்றிய அறிவிப்பை மின்னஞ்சல் மூலம் அறிந்துகொள்ள Follow செய்து கொள்ளுங்கள்.
📘 Description
மனைவியை இழந்து 4 வயது குழந்தையுடன் நாயகன்,
கணவனை இழந்து அவனின் கருவை சுமந்து நிற்கும் நாயகி....
இருவரும் திருமண வாழ்க்கையில் இணைய நேர்ந்தால்... தங்கள் துணையை மறந்து புது வாழ்க்கையை ஏற்றுக்கொள்வார்களா?
கதையைப் படித்துவிட்டு உங்கள் கருத்துக்களை ரேட்டிங், ரிவ்யூ மூலம் தளத்தில் தெரிவியுங்கள்.
Related products
-
ஜீவசுரபி
Rated 5.00 out of 5


Reviews
There are no reviews yet.