• Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • எழிலன்பு நாவல்கள் தளத்திற்கு செல்ல 👉 ezhilanbunovels.com/nandhavanam / நந்தவனம் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் nandhavanamnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வாழ்க்கை கவிதை வாசிப்போம் - 43

  • Thread starter Thread starter Deepa Babu
  • Start date Start date
  • Replies Replies 4
  • Views Views 182

Deepa Babu

Writer✍️
வீட்டிற்குள் நுழைந்ததும் உடை மாற்றி வர என கோபால் தன் அறைக்கு சென்றுவிட, மனைவியின் இடை வளைத்து தன்னோடு இழுத்தான் அருள்மொழி.

“உன் மனசுல என்ன நினைச்சிட்டு இருக்கே நீ?” என்றான் கடுகடுப்புடன்.

“இது என்ன கேள்வி டாக்டர், உங்களை தான் நினைச்சுட்டு இருக்கேன்!”

“ஏய்... என்னை சொல்லிட்டு, நீ அரதப் பழசை பேசாதே!”

“என்ன அமர் இப்படி சொல்லிட்டீங்க? இப்போ தானே நமக்கு கல்யாணம் முடிஞ்சு நான் இந்த மாதிரி புதுசா பேசறேன்!” என்று அப்பாவியாக கேட்டு, அவன் கழுத்தை சுற்றி மாலையாக கைகளை கோர்த்தாள்.

“ப்ச்...” என அலுப்புடன் முகத்தை சுளித்தான் அவன்.

“சரி... இப்போ என்ன பிரச்சனை?” என்று எம்பி அவன் நெற்றியை முட்டினாள்.

“நீ எதுக்கு தேவை இல்லாம நம்மளை சுத்தி அப்படி கூட்டத்தை கூட்டறே? நமக்கான ப்ரைவஸியே இல்லாம போச்சு!” என்றான் அதிருப்தியாக.

“ஓ... இது தான் என் குட்டிப் பாப்பாவுக்கு கோபமா? ஒரு விஷயம் யோசிச்சுப் பாருங்க டாக்டர், இன்னிக்கு சன்டே அப்படிங்கிறதால எல்லோரும் வந்துட்டாங்க. அதுவும் நாம போனது அஞ்சரைக்கு மேலே... பொதுவா நிறைய பேருக்கு ஓய்வு நேரமா இருந்து இருக்கும். ஆனா நாளைக்கு அந்த மாதிரி கூட்டம் இருக்கப் போறது இல்லை.

ஏன்னா நாம நாலரைக்கு எல்லாம் போயிட்டு, ஒரு மணி நேரத்துக்கு உள்ள திரும்பி வந்து ஹாஸ்பிடல் கிளம்பிடுவோம். அந்த நேரத்துக்கு ஸ்கூல், காலேஜ், ஆபிஸ்னு எதுவும் முடிஞ்சு யாரும் வந்து இருக்க மாட்டாங்க. அதேபோல வீட்டுல இருக்கவங்களும் அவங்கவங்க பிள்ளைங்க வந்த பின்னாடி அவங்களுக்கு ஏதாவது செஞ்சு கொடுத்துட்டு அஞ்சு மணிக்கு மேலே தான் வெளியே வருவாங்க. ஸோ... ப்ராப்ளம் சால்வ்ட்!” என்று கண்களை சிமிட்டினாள்.

மெல்ல முறுவலித்தவன், “நீ ஏன் என்னை குட்டிப் பாப்பா சொல்றே?” என்று தன் உடலை வளைத்து, அவள் தோளோடு சலுகையாக முகம் புதைத்தபடி கொஞ்சலாக விசாரித்தான்.

“ம்... கல்யாணம் முடிவானதுல இருந்தே அப்பப்போ உங்ககிட்ட வெளிப்படற சில விஷயங்கள் எனக்கு அப்படித்தான் தோண வைக்குது. என் மேலே ரொம்ப பொஸஸிவ்வா இருக்கறது, என்னோட அட்டென்ஷன் உங்ககிட்ட தான் அதிகமா இருக்கனும்னு நினைக்கறது, இதோ இப்போ இருக்க மாதிரி கஷ்டப்பட்டுனாலும் ஒட்டிக்கிட்டு இருக்கறது, இது எல்லாமே குட்டீஸ்ங்க தான் அவங்கவங்க அம்மா கிட்ட செய்வாங்க!” என்று கேலி செய்தாள்.

மருத்துவனிடம் அடுத்த சில நொடிகளுக்கு எந்த அசைவும் இல்லை என்றானதும், ‘அச்சச்சோ... எதுவும் கோவிச்சுக்கிட்டானா?’ என்று கீழுதட்டை கடித்தாள் சித்த மருத்துவர்.

அதற்கு அவசியமே இல்லை என்பது போல், “ஏன்? அதுல என்ன தப்பு இருக்கு? ஒரு ஆணுக்கு அவன் பொண்டாட்டி தானே ஏ டு ஜெட்டா எல்லாமுமா இருக்கனும். அதோட ஒரு பொண்ணுக்கும் அவள் புருஷன் தானே முதல் குழந்தைன்னு சொல்வாங்க. அதுபடி பார்த்தா, நான் நடந்துக்கிறதுல எந்த தப்பும் இல்லை!” என்று அழுத்தமாக கூறினான்.

“என் சுகர் டாக்டரா கொக்கா... பேசி ஜெயிக்க முடியுமா?” என்றவள் குனிந்து அவன் உச்சியில் முத்தமிட, நாயகனின் முகம் மலர்ந்து ஒளி வீசியது.

“நான் வெளியே வரலாமா?” என்ற பெரியவரின் குரல் கேட்கவும், இருவரும் அவசரமாக விலகினர்.

“தாத்தா... மதியத்துல இருந்து எங்களை ரொம்ப ஓட்டறீங்க நீங்க, வெளியில வாங்க!” என்று அதட்டினாள் நதியா.

“இல்லைடா பாப்பா... உங்களுக்கு ஒரு சங்கடத்தை கொடுத்துட கூடாது இல்ல...”

“ஓஹோ... அப்போ ஒன்னு பண்ணுங்க. இனிமே டிக் டிக் யாரது விளையாட்டு போல, டிக் டிக் நான் வரப் போறேன்னு கதவை தட்டிட்டு வெளியே வாங்க. இப்படி ஸ்கூல் பையன் டீச்சர் கிட்ட பர்மிஷன் கேட்கிற மாதிரி நிக்காதீங்க!” என்றவள்,

“சரி... நானும் போய் டிரஸ் மாத்திட்டு வர்றேன். அதுக்குள்ள ரெண்டு பேரும் சின்ன வெங்காயம் கொஞ்சம் உரிச்சு வைங்க, நான் வந்து சட்டினிக்கு ரெடி பண்ணிட்டு இட்லி ஊத்தி வைக்கறேன்!” என கூலாக சொல்லி விட்டு உள்ளே போய் விட்டாள்.

“அடிப்பாவி...” என கணவன் மலைத்து நிற்க,

“பிள்ளை வந்த அப்புறம் தான்டா வீடே வீடு மாதிரி நல்ல கலகலப்பா இருக்கு!” என்று வாஞ்சையாக கூறும் தாத்தாவை செல்லமாக முறைத்து விட்டு, மனைவி சொன்ன வேலையை செய்ய சென்றான் அவன்.

இரவு உணவு முடிந்து சிறிது நேரம் கதை பேசி, நதியாவின் விருப்பமான விளையாட்டில் கொஞ்சம் பொழுதை கழித்து விட்டு, உறங்குவதற்கு என அவரவர் அறைக்கு கிளம்ப, முதியவர் பேத்தியிடம் சிறு விண்ணப்பம் வைத்தார்.

“பாப்பா... நீ என்னை தப்பா நினைக்க கூடாது!”

“ப்ச் தாத்தா... இப்படி எல்லாம் பேசினா எனக்கு பிடிக்காது!”

“அது இல்லைடா கண்ணு... என்ன இருந்தாலும், இது உங்க பெர்ஸனல்!” என்று மேலும் தயங்கினார்.

பேரன் தாத்தாவை குழப்பத்துடன் பார்க்க, பெண்ணும் அவரை புரியாது பார்த்து இருந்தாள்.

“ஒன்னும் இல்லை... கொஞ்சம் சீக்கிரமா எனக்கு ஏதாவது நல்ல செய்தியை சொல்றீங்களா, வர்ஷினி பாப்பா மாதிரியே நம்ம வீட்டுலயும் ஒரு குட்டி, சலசலன்னு பேசி ஓடி விளையாடிட்டு இருந்தா எவ்வளவு நல்லா இருக்கும்...” என்றார் ஆர்வமாக.

மெல்ல புன்னகைத்தவள், “இதுக்குத்தான் இவ்வளவு தயங்குறீங்களா... விடுங்க, பார்த்துக்கலாம்!” என நாசூக்காக பதில் கொடுத்து விட்டு, “ஓகே தாத்தா... குட்நைட்!” என்று தலை அசைத்து நடந்தாள்.

“பிள்ளைக்கு வெட்கம் வந்துருச்சு!” என அவர் ரசித்து சிரிக்க, அருள் பல்லைக் கடித்தான்.

“இதை என்கிட்ட சொல்லி இருக்க வேண்டியது தானே, அவளை ஏன் சங்கட படுத்துறீங்க?”

“நம்ம பிள்ளை தானேடா... அது எல்லாம் தப்பா நினைச்சுக்க மாட்டா. அவளுக்கே நம்ம வீட்டு சூழ்நிலை புரிஞ்சு இருக்கும், இருந்தாலும் நம்ம ஆசையை சொல்லி வைப்போம்னு தான் சொன்னேன்!”

மெல்ல பெருமூச்சு எடுத்துக் கொண்டவன், “சரி... நீங்க ரூமுக்கு போங்க. நான் லைட் எல்லாம் ஆஃப் பண்ணிட்டு போறேன்!” என்ற வேகத்தில் அடுத்து, “எப்பவும் கவனமா இருங்க. உடம்புல ஏதாவது சின்ன தொந்தரவோ, இல்லை வித்தியாசமாவோ தோணினா உடனே எனக்கு போன் பண்ணுங்க. மறக்காம எப்பவும் நைட்டுல போன் ஃபுல் சார்ஜ்ல இருக்க மாதிரி பார்த்துக்கோங்க!” என அறிவுறுத்த ஆரம்பித்து விட்டான்.

“சரிடா... கல்யாணம் முடிவானதுல இருந்து இதையே திரும்பத் திரும்ப எத்தனை முறை தான் சொல்வே? அதெல்லாம் நான் பார்த்துக்கறேன், சும்மா என்னை நினைச்சே புலம்பிட்டு இருக்காதே!” என அவனை அதட்டிவிட்டு, நடையை கட்டினார் அவர்.

அவரின் முதுகை ஒரு முறை முறைத்து விட்டு மின் விளக்கை அணைத்து ஆடவன் அறைக்குள் வரும்பொழுது, ஏதோ தீவிர சிந்தனையில் மூழ்கி இருந்தாள் பெண். அவளை ஒரு பார்வை பார்த்தவன் குளியலறை சென்று வர, அவள் விழிகள் அவனிடம் திரும்பியது.

இரவு விளக்கை ஒளிரூட்டி விட்டு அவள் அருகில் படுத்தவன், “என்ன யோசனை? எப்போ குழந்தை பெத்துக்கறதுன்னா...” என்று குறும்பாக கேட்டபடி, அவளை இழுத்து தன்னோடு சேர்த்து அணைத்துக் கொண்டான்.

“ம்... ஆமா. சரியா பத்து மாசத்துல பெத்துக்கலாமா, இல்ல... ஒன்பது மாசத்துல பெத்துக்கலாமான்னு கூட்டி, கழிச்சு பார்த்துட்டு இருக்கேன்!”

முகமெங்கும் பூ மத்தாப்பாய் புன்னகை சிதறிட, “எப்படி? கல்யாணத்துக்கு முன்னாடி முகூர்த்த நேரத்துக்கும், சாந்தி முகூர்த்த நேரத்துக்கும் கணக்கு போட்டு பார்த்துட்டு இருந்தியே, அப்படியா...” என்று விஷமமாக கேட்டு, அவளிடம் சில பல அடிகளை பரிசாக பெற்றுக் கொண்டான் நாயகன்.

“உங்களுக்கு எவ்வளவு கொழுப்பு இருக்கும்? அப்படி டபுள் மீனிங்க்ல என்கிட்ட பேசினதும் இல்லாம, ஆன்ஸரை வேற தனியா அனுப்பி வைக்கச் சொல்வீங்க!” என்று பாய்ந்து அவன் கன்னத்தை கடித்தாள்.

“ஹஹா... ஹேய் பட்டு... நீ தேறுவியா, இல்லையாங்கறதை அப்போ தானே என்னால சரியா தெரிஞ்சுக்க முடியும்!” என்று இன்னும் தன் கலாட்டாவை தொடர்ந்தான்.

“வேணாம் டாக்டரே... கன்னத்தோட சேர்ந்து எல்லா இடத்திலயும் மானாவாரியா என்கிட்ட கடி வாங்கிக்காதீங்க நீங்க!” என்று பலமாக எச்சரித்தாள்.

“ஆஹான்... அப்படி எங்கே எல்லாம் கடிச்சு வைப்பே நீ? சொல்லு, தெரிஞ்சுக்கறேன்!” என்றதும், அவள் முகம் சிவந்து போனது.

“சரியான அசைவ டாக்டர்டா நீ!” என்று அவனை கட்டிக்கொண்டு நெஞ்சோடு புதைந்தபடி முனகினாள் நாயகி.

நிறைவான மகிழ்ச்சியுடன் அவளை சுற்றி கைகளை வளைத்துக் கொண்டவன், அமைதியாக படுத்து இருந்தான். அப்பொழுதே அந்த யோசனை அவளுக்கு வர, கணவனிடம் மெதுவாக பேச்சை துவக்கினாள் மனைவி.

“அமர்...”

“ம்... சொல்லுடா!”

“சாயந்திரம் அம்மா பேசினாங்க, உங்ககிட்ட அதை சொல்லவே மறந்துட்டேன்!”

“ஓ... என்ன கெஸ்ட் எல்லாம் கிளம்பிட்டாங்களா? அவங்க ஃப்ரீ ஆனாங்களா, இல்லையா?” என்று விசாரித்தான்.

“இல்லைப்பா... சித்தப்பா, அத்தை பேமிலி அநேகமா நாளைக்கு தான் ஊருக்கு கிளம்பறாங்கன்னு நினைக்கறேன். அம்மாவுக்கு வீடு எல்லாம் ஒதுங்க வைக்க ஹெல்ப் பண்ணிட்டு கிளம்புவாங்க!”

மெல்லிய நெடுமூச்சு ஒன்றை வெளியேற்றியவன், “இப்படியும் சொந்தங்கள் இருக்கத்தான் செய்யறாங்க!” என்று தனக்கு உள்ளே முனகிக் கொண்டான்.

“ம்... ஆமா. என் அம்மாவோட உடன்பிறப்பு தான் அப்படி ஒரு வீணா போன கேரக்டர், மத்தபடி அவங்க கஸின்ஸ் எல்லாம் ரொம்பவே நல்ல டைப். அம்மாவுக்கு பயங்கர சப்போர்ட் கொடுப்பாங்க!”

பேசியபடியே அவன் முகத்தை உற்றுப் பார்த்து இருந்தவள், அதில் சட்டென்று பரவிய இறுக்கத்தை கவனமாக கவனித்தாள்.

பதிலின்றி அழுத்தமாக இருந்தவனை பார்த்தபடியே, “அப்புறம்... ஒரு வீக்கென்ட் அக்கா வீட்டுக்கு நாம விருந்துக்கு போகனும். அவள் மாமியார்... அது தான் அந்த அத்தை, சதீஷ் மாமாவும் தனியா கூப்பிட்டாங்க!” என்றாள்.

முகம் இயல்புக்கு திரும்ப, “ஓ... போகலாம், என்கிட்ட கூட அவர் பேசினார்!” என்று கூறினான்.

“ஹான்... சித்தப்பா, அத்தை எல்லாம் கூட கூப்பிட்டாங்க!”

“எத்தனை வீடு?” என்றான் அவன் சலிப்பாக.

“இதெல்லாம் ரொம்ப க்ளோஸ் ரிலேட்டிவ்ஸ்பா, அவாய்ட் பண்ண முடியாது!”

“உஃப்...” என உதட்டை குவித்து ஊதியவன், “ஓகே... நெக்ஸ்ட் மன்த்ல பார்க்கலாம்!” என்று ஒத்துப் பேசினான்.

“சரி, அப்புறம்...” என இழுத்து இன்னமும் அவன் மீது கவனத்தை அதிகரித்தபடியே, “என் தாய்மாமா வீட்டுக்கும் ஒரு தடவை போயிட்டு வரனும், அம்மா சொன்னாங்க!” என்றதும் அவன் முகம் அதீதமான எரிச்சலை பூசிக் கொண்டது.

“அங்கே எல்லாம் எதுக்கு? தேவையில்லை!” என்றான் வெடுக்கென்று.

“இல்லை... என்ன இருந்தாலும் தாய்மாமா வீடு...” என்றவள் நிறுத்த, பெண்ணிடம் காய்ந்தான் அவன்.

“என்ன பொல்லாத தாய்மாமா வீடு? அங்கே எல்லாம் போகனும்கிற நினைப்பு கூட என்னிக்கும் உனக்கு வரக்கூடாது. இத்தோட இந்தப் பேச்சை விடு, என்னை மேலே கடுப்பாக்காதே!”

முகத்தில் முற்களை கட்டி வைத்து இருப்பது போல் என்று ஒரு உவமை சொல்வார்களே, அதற்கு அத்தனை பொருத்தமாக இருந்தது அவளுடைய கணவனின் முகம்.

நேரம் ஆக ஆக, அவனது இதயத்தின் அமைதி பறிபோவது பெண்ணிற்கு கண் கூடாக தெரிய, கை முஷ்டிகளை இறுக்கியும், பின்னங்கழுத்தை அழுந்த தடவியும் என்று அவன் அவஸ்தைபடுவதை கண்டு, இந்தப் பேச்சை நாம் எடுக்காமலே இருந்து இருக்கலாம் என வருத்தத்தோடு பார்த்து இருந்தாள் அவள்.

சில கணங்களுக்கு மேல் பொறுக்க முடியாமல் எழுந்து அமர்ந்தவன், “நீ தூங்கு நதி... எனக்கு தலை வலிக்கிற மாதிரி இருக்கு, நான் வெளியே பால்கனியில கொஞ்சம் நேரம் காத்தாட உட்கார்ந்து இருக்கேன்!” என்று கட்டிலை விட்டு இறங்கி கதவை திறந்து வெளியேறினான்.

தானும் வேகமாக எழுந்து கொண்டவள், ‘அப்போ... கண்டிப்பா என் மாமா கூட தான் இவங்களுக்கு ஏதோ பிரச்சனை. என்னவா இருக்கும்? இத்தனை டென்ஷன் ஆகறார். தாத்தாவும் அன்னிக்கு பயங்கர அப்செட் ஆனவரு, இன்னிக்கு சும்மா அவரை வச்சு வாங்கி இருக்காரு. ஏதாவது சொந்தத்துல பகை வந்து இருக்குமோ... எப்படி அதை தெரிஞ்சுக்கறது?’ என்று குழம்பினாள்.

இரவின் குளுமையில் அந்த சாய்வு நாற்காலியில் கண்களை மூடி சாய்ந்து இருந்தவனின் இதயமோ, பெரும் உலைக்களமாய் கொதித்து கொண்டிருந்தது.

‘அவர்கள் வீட்டிற்கு நான் விருந்துக்கு செல்வதா? என்ன நினைத்து கேட்டாள் அந்த முட்டாள் பெண். அவர்களின் முகத்தில் விழிப்பதே பல நூறு ஜென்மங்களில் நான் சேர்த்து வைத்து இருக்கும் பாவ மூட்டைகளின் கணக்கோ, என்னவோ என்று நானே மனம் வெதும்பி போய் இருக்கிறேன். இதில் அங்கே போக வேண்டுமாம், சாப்பிடவும் வேண்டுமாம்... அதற்குப் பதில் உன் உயிரை விட்டு விடு என்று சொன்னால் கூட ரொம்பவே சந்தோசமாக உயிர் துறப்பேன்!’

முகத்தை பல விதமாக சுளித்தபடி, தனக்குள் கடுஞ்சீற்றத்தில் உழன்று இருந்தவனின் நெற்றி இலவம்பஞ்சினும் மெல்லிய மிருதுவான விரல்களால் மென்மையாக அழுத்தப்பட, பட்டென்று இமைகளை பிரித்தான் அவன்.

அழகாக முறுவலித்தவள், “என்ன ஆச்சு? திடீர்னு தலைவலி வந்துருச்சு. நான் மசாஜ் பண்ணி விடறேன். இப்படி மெல்ல மெல்ல நெத்திப் பொட்டுல அழுத்தம் கொடுத்துட்டே இருந்தா, வலி எல்லாம் வந்த வழியில திரும்பி பார்க்காம ஓடிப் போயிடும்!” என்றபடி தன் கை வேலையை தொடர்ந்தாள்.

அவன் விழிகள் அவளையே அசையாமல் பார்த்து இருக்க, “என்ன பார்வை?” என்று உதட்டை சுழித்தவள், குனிந்து அவன் நெற்றியில் அழுத்தமாக முத்தம் ஒன்றை பதித்தாள்.

“இப்படி செஞ்சா... இன்னும் சீக்கிரம் ஓடிப் போயிடுமாம்!” என்று அலட்டியபடி கணவனின் முகம் தாங்கி, ஒவ்வொரு இடமாக சின்ன சின்ன முத்தங்களை வைத்தவாறே இதழ் வலம் வர ஆரம்பித்தாள் மனைவி.

நாயகனின் இதழ்கள் மெதுவாக புன்னகையை பூசிக் கொண்ட நேரம், அவன் கரங்களோ அவளை வளைத்து தன் மடி மீது ஆசையாக அமர்த்திக் கொண்டது.
 
நதியா தாய்மாமா தான் பிரச்சனையா அப்படி என்ன பண்ணியிருப்பார்?
 
ஜி ...🙏சீக்கிரமா ப்ளாஷ்பேக்கை சொல்லிவிடுவீங்க என்று , நம்பிக்கையுடன் இருக்கேன் 🙏
 

Latest threads

Back
Top Bottom