• Copyright ©️ 2019 - 2024 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • எழிலன்பு நாவல்கள் தளத்திற்கு செல்ல 👉 ezhilanbunovels.com/nandhavanam / நந்தவனம் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் nandhavanamnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

வாழ்க்கை கவிதை வாசிப்போம் - 12

  • Thread starter Thread starter Deepa Babu
  • Start date Start date
  • Replies Replies 4
  • Views Views 185

Deepa Babu

Writer✍️
“அந்த பொண்ணு யாருன்னு தெரியுதா? நம்ம கணேசன் பொண்ணு, சித்தா டாக்டரா இருக்கு!”

“என்ன? அப்படியா... பார்க்க லட்சணமா, அழகா இருக்காளே. சேகர் பையனுக்கு முறை வருமோ...”

“எல்லாம் முறை தான்... அதனால தான் உங்க கிட்ட பொண்ணை காண்பிச்சேன்!”

“ரொம்ப சந்தோசம்... அவங்க வீட்டுல என்ன முடிவுல இருக்காங்க? எதுவும் பேசி பார்க்கலாமா...”

“ஆங்... சாவித்திரி கிட்டயே நேரா பேசலாம். மூத்தவளுக்கு கல்யாணம் முடிச்சு நாலு வருஷம் ஆச்சே... கேட்டா கொடுப்பாங்கன்னு தான் நினைக்கறேன்!”

உணவருந்தி முடித்து வீட்டிற்கு கிளம்ப தயாரான கோபாலை உடன் வந்து இருந்த உறவுக்கார பெரியவர், தான் யாரிடமோ விடைபெற்று விட்டு வருவதாக கூறி ஓரிடத்தில் அமர வைத்து விட்டு சென்றிருக்க, அப்பொழுது அவருக்கு பக்கவாட்டில் இருந்து ஒலித்த அந்த இரண்டு பெண்களின் பேச்சில் ஏகத்திற்கும் கடுப்பானார் அவர்.

எதிரே மணமேடையில், பளிச்சென்ற புன்னகையுடன் புகைப்படத்திற்கு நின்று இருந்த பெண்ணை நிமிர்ந்து ஒரு பார்வை பார்த்தவர், பின்பு திரும்பி அருகில் இருந்த பெண்களை அலட்சியமாக பார்த்தார்.

“நீங்க மேடையில நிக்கற நதியா பொண்ணை பத்தி தானே பேசறீங்க?”

திடீரென்று தங்கள் இடையே குறுக்கிடும் அந்த அந்நிய மனிதரை யோசனையோடு பார்த்த பெண்மணிகள் பதில் ஏதும் கூறவில்லை.

“அந்தப் பொண்ணை பத்தி தான் பேசறீங்கன்னா... அவளுக்கு ஏற்கனவே கல்யாணம் முடிவாகிடுச்சு, நீங்க வேற பொண்ணு பார்த்துக்கோங்க!”

பெரியவரின் அழுத்தமான பேச்சில் திகைத்த பெண்களில் ஒருவர், “நீங்க யாரு... உங்களுக்கு எப்படி தெரியும்?” என படபடத்தார்.

“ம்... நான் தான் அவங்க வீட்டுல சம்பந்தம் செய்ய போறேன். என் பேரனுக்கு தான் நதியாவை கல்யாணம் பண்ணி கொடுக்கறாங்க. அதோட அவனும் ஒரு டாக்டர் தான்!” என்றார் நிமிர்வாக.

“ஓ... சரி சரி, எங்களுக்கு தெரியாது. நீங்க எதுவும் தப்பா எடுத்துக்காதீங்க!”

அவசரமாக சமாதானம் கூறும் பெண்ணிடம் அமைதியாக முறுவலித்தவர், “அதனால என்ன பரவாயில்லை... விவரம் தெரியாம தானே பேசுனீங்க!” என்று இலகுவாக சொல்லும் பொழுதே அப்பெரியவர் வந்து விட்டார்.

“கிளம்பலாமாப்பா?” என்றவரிடம் தலை அசைத்து விட்டு எழுந்தவர், அப்பெண்களை அர்த்தமாக பார்த்து விட்டு விலகி நடந்தார்.


***

ஒரு வாரம் கழித்து, தன்வந்திரி சித்த வைத்தியசாலை.

தன்னருகில் அமர்ந்து இருந்த நடுத்தர வயது பெண்ணின் நாடியை பிடித்து பரிசோதித்த நதியா, “சளி, இருமல் ரொம்ப ஜாஸ்தியா இருக்குங்களா?” என்று விசாரித்தாள்.

“ஆமா மேடம்... நானும் வீட்டுல என்னென்னவோ கை வைத்தியம் செஞ்சு பார்த்துட்டேன். ஆனா கேட்கத்தான் மாட்டேங்குது, ஊரையே கூட்டுற மாதிரி விடாம இருமல் வருது, நைட்ல படுத்து நிம்மதியா தூங்க கூட முடியலை!” என்றாள் வெறுப்புடன்.

“ம்... ஒன்னும் பிரச்சனை இல்லை, சரி பண்ணிடலாம்!” என்றவள் அதற்கான சூரணத்தையும், மருந்தையும் எடுத்து தரச் சொல்லி மீராவிடம் பணித்து விட்டு அப்பெண்ணிடம் திரும்பி புன்னகைத்தாள்.

“எந்த ஒரு சின்ன உடல் தொந்தரவையும் ஆரம்பத்துலயே சரி செஞ்சுட்டா, அதோட பாதிப்புகள் உங்களை கடுமையா தாக்காது!”

“ஆங்... என்ன மேடம்?”

“வீட்டுல எடுத்துக்கிட்ட கை வைத்தியம் ரிசல்ட்டே தரலைன்னு நீங்க வருத்தப் பட்டீங்களே, அதைச் சொல்றேன்!”

“ஓ... அப்போ என்ன பண்ணனும்?”

“எந்த ஒரு கிருமித்தொற்றும்... அது கொரோனாவா இருந்தா கூட சரி, அதிகமா நம்ம மூக்கு, தொண்டை வழியா தான் ட்ராவல் பண்ணி உள்ள போய் தன் வேலையை காண்பிக்கும்!”

“சரி...” என்றவள் தலை அசைக்க,

“முதல்ல நம்ம வீட்டு குழந்தைகள்ல இருந்து பெரியவங்க வரை தினமும் நைட்டு படுக்குறதுக்கு முன்னாடி வாய் கொப்பளிக்கற பழக்கத்தை கொண்டு வரனும்...”

“ஹான்... எங்க வீட்டுல எல்லாருமே நைட்டு மறக்காம ப்ரஷ் பண்ணிட்டு தான் தூங்குவோம்!”

“நல்ல விஷயம் தான், அது வாய் சம்பந்தப்பட்ட பலவித பிரச்சனைகளை வராம தடுக்கும்!” என மெலிதாக சிரித்தவள், “ஆனா... கிருமித் தொற்றுக்கு எல்லாம் பெருசா பலன் கொடுக்காது!” என்று குறுக்காக தலை அசைத்தாள்.

“அப்படியா... காகுல் பண்றது தான் நல்ல எஃபெக்ட் கொடுக்கும்னு சொல்றீங்களா?”

“ஆமா... நான் ஏற்கனவே சொன்ன மாதிரி நம்ம உடம்புக்கு உள்ள தொற்று நுழையற வழி பாதையே தொண்டை தான். அதை நாம சரியா பராமரிச்சுட்டு வந்தா சின்னதுல இருந்து, ஏன்? சில பெரிய நோய் வரைக்கும் கூட சுலபமா தப்பிக்கலாம்.

இப்போ உதாரணத்துக்கு சளியையே எடுத்துப்போம், அதை நம்மால நல்லா ஃபீல் பண்ண முடியும். ஏன்னா அதுக்கான முதல் அறிகுறியே நம்மோட தொண்டையில ஒரு மாதிரி கரகரப்பு தோணும். எதையும் சாப்பிட பிடிக்காது, எந்நேரமும் குமட்டல் இருந்துட்டே இருக்கும்.

அந்த ஸ்டேஜ்லயே நீங்க சுதாரிச்சு சூடு பொறுக்கற வெதுவெதுப்பான தண்ணில ஒரு ஸ்பூன் கல்லு உப்பு, ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் போட்டு நல்லா வாய் கொப்பளிக்கலாம். எப்படின்னா... நம்ம தொண்டைக்கு உள்ள அந்த தண்ணி போய் அலசிட்டு திரும்ப வெளிய வரனும். இப்படி மூனு வேளை செஞ்சீங்கன்னா இதுலயே மேக்ஸிமம் சளி சரியா போயிடும்.

அந்த நேரத்துல மிளகு, மஞ்சள் தூள் போட்டு இளஞ்சூட்டுல பாலும் குடிச்சிக்கலாம். அப்படி இல்லாம சோம்பல் பட்டுட்டு அலட்சியமா விட்டா, அடுத்த ஸ்டேஜ் ரன்னிங் நோஸ் ஆகும். அதாவது மூக்குல இருந்து தண்ணியா ஒழுக ஆரம்பிக்கும், அப்போ ஆவி பிடிக்க ஆரம்பிக்கனும்.

உங்களுக்கு கிடைக்குற வேப்பிலை, துளசி, நொச்சி, யூகலிப்டஸ் இலைகள் இப்படி ஏதாவது கூட கொஞ்சம் மஞ்சப் பொடியும் தண்ணியில சேர்த்துக்கனும். சளியோட தீவிரத்தை பொறுத்து ஒரு நாளைக்கு ரெண்டு, மூனு தடவை பிடிச்சுக்கலாம்.

அதோட கண்டிப்பா அந்த நேரத்துல வெந்நீர் குடிக்க வேண்டியதும் அவசியம். ஏன்னா நம்ம தொண்டையில இருக்கற வலிக்கும், வீக்கத்துக்கும் அது தான் இதமா இருக்கும். கற்பூரவல்லி இலை, வெத்தலை, மிளகு, கொஞ்சம் கொத்தமல்லி விதை இப்படி போட்டு கஷாயம் வச்சு குடிச்சாலும் நல்லப்பலன் கிடைக்கும்.

அப்புறம் சுக்குமல்லி காப்பி, சின்ன இஞ்சி துண்டோட துளசி சேர்த்து சாப்பிடறது, ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை கூட நாலைஞ்சு மிளகு கலந்து சாப்பிடறதுன்னு இன்னமுமே நிறைய வீட்டு வைத்தியம் இருக்கு...” என்று நதியா கூறும் பொழுதே வேகமாக இடையிட்டாள் அப்பெண்.

“ஐயோ... நான் தான் இதையெல்லாம் சரியா செஞ்சேனே...”

“எப்போ செஞ்சீங்க? சளி நல்லா தீவிரமா பிடிச்சு, நெஞ்சுல கெட்டியான பின்னாடி செஞ்சு இருப்பீங்க!”

“அது... ஆமா... ஆரம்பத்துல கொஞ்சம் கேர்லஸா இருந்துட்டேன்!” என அசடுவழிந்தாள் அவள்.

“ஹஹா... நீங்கன்னு இல்லை, நம்மள்ள பல பேர் அப்படித்தான் இருக்கோம். முன்னே விட்டுட்டு பின்னே நிவாரணம் தேடித் தவிப்போம், பட்... அப்படி இருக்க கூடாது. சாதாரண சளி தானேன்னு நாம நினைக்கறது சில நேரம் நிமோனியா, ஆஸ்துமா வரை கொண்டு போய் விட்டுடும்!”

“புரியுது... இனிமே வெறும் சளி தானேன்னு அலட்சியமா இல்லாம, ஆரம்பத்துலயே நீங்க சொன்ன மாதிரி சரி செஞ்சுக்கறேன்!”

“குட்... அப்படியே மறக்காம தினமும் வாய் கொப்பளிக்கற பழக்கத்தையும் உங்க குடும்பத்துக்கு பழக்கி விடுங்க!”

“ஷ்யூர் டாக்டர்... தேங்க் யூ!” என தனக்கான மருந்துகளை பெற்றுக் கொண்டு விடைபெற்றாள் பெண்.


***

அன்று இரவு சாவித்திரிக்கு சரியான உறக்கமே இல்லை. சிறிது நேரம் புரண்டுப் புரண்டு படுத்து பார்த்தவர், பின் மெல்ல எழுந்து அமர்ந்து அருகில் திரும்பி பார்த்தார்.

கணேசன் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தார். சின்னதான பெருமூச்சுடன் கட்டிலை விட்டு இறங்கி வரவேற்பறைக்கு வந்தவர், மகளின் அறைக்கதவை மெதுவாக திறந்து பார்க்க, அவளும் தன் தகப்பன் நிலையிலேயே இருப்பதை கண்டு நிம்மதியாக உணர்ந்தவர், கதவை சாற்றி விட்டு வந்து சோபாவில் அமர்ந்தார்.

கடந்த சில நாட்களாகவே அவரின் மனம் ஒரு நிலையில் இல்லை. தன் மச்சினர் வீட்டுத் திருமணத்தில் ஏதோ ஒரு வகையில் சுற்றி வளைத்து பெரியவர் கோபால் தங்களுக்கு உறவு ஆகிறார் என்று அறிந்து வியந்து போனதை விடவும், தற்பொழுது அவரை மிகவும் மன உளைச்சலுக்கு ஆளாக்கி விட்டார் அம்மனிதர்.

ஆம், மண்டபத்தில் இருந்து அவர் கிளம்பும் நேரம் இரண்டு பெண்மணிகள் பேசி கொண்ட விஷயத்தில் சற்று கடுப்படைந்து, அவர்களது எண்ணத்தை முறியடிக்க வேண்டும் என்பது ஒன்றே குறிக்கோளாக, என் பேரனுக்கு அந்தப் பெண்ணை பேசி முடித்து விட்டோம், நீங்கள் வேறு பெண் பார்த்துக் கொள்ளுங்கள் என்று அதிரடியாக எச்சரித்து விட்டு கிளம்பி இருந்தார் அல்லவா...

அது வார்த்தை மாறாமல் அப்பெண்களின் மூலமாக சாவித்திரியின் செவிகளுக்கு சென்று அடைந்து விட்டது.

முதலில், ‘என்னது? எங்கள் மகளுக்கு திருமணத்தை உறுதி செய்து விட்டோமோ!’ என புரியாத திகைப்பில் நின்றவர் பின்பே சுதாரித்து, ‘இது என்ன வீணான புரளி?’ என்று அவர்களிடம் இருந்து நாசுக்காக விஷயத்தை அறிய முயன்றார்.

“அது... உங்களுக்கு யார் சொன்னாங்க அண்ணி?”

“வேற யாரு... பையனோட தாத்தா தான். உறவுன்னு இருந்தும் நீதான் ஒரு வார்த்தை என்கிட்ட சொல்லலையே...”

அவர் லேசாக நொடித்துக் கொள்ள, வெளியே சங்கடத்துடன் புன்னகைத்தவர், உள்ளுக்குள் வேக வேகமாக யார், என்ன என்று சில கணக்கீடுகளை செய்து பார்க்க, விடையாக முதலில் கோபாலே வந்தார்.

ஆனால் அவர் ஏன் அப்படி சொல்லப் போகிறார் என அதை ஒதுக்கித் தள்ளி விட்டு, வேறு மார்க்கத்தில் விடையை தேடி அவர் உழன்று இருக்கும் பொழுது, அப்பெண்மணியே பளிச்சென்று அடுத்த விபரத்தையும் போட்டு உடைத்தார்.

“பையன் வேற உன் பொண்ணுக்கு பொருத்தமா டாக்டரா இருக்கவும், பட்டுன்னு பேசி முடிச்சிட்டீங்களா?”

‘என்னது டாக்டரா?’ என்று அவரின் மனது அதிரும் பொழுதே, சந்தேகத்திற்கு இடம் இல்லாமல் அப்பெரியவரின் வேலை தான் இது என்பது தெளிவாக புரிந்து போனது நாயகியை பெற்றவருக்கு.

தனக்கு முன்பு இருக்கும் பெண்ணை முதலில் சமாளிக்க வேண்டும் என்று அப்பொழுதைக்கு மேம்போக்காக பதில் கொடுத்தார் சாவித்திரி.

“இன்னும் எதுவும் உறுதி ஆகலை அண்ணி. இப்போ தான் ஜஸ்ட் ஒரு பேச்சு ஆரம்பிச்சு இருக்கு, பார்ப்போம்!” என்று முடித்துக் கொண்டார்.

“ஆனாலும் அவர் பேச்சு ஒன்னும் அப்படி இல்லையே, ரொம்பவும் உறுதியா இல்ல சொன்னார். அதுவும் எங்க வீட்டுக்கு வரப் போற பொண்ணை நீ அந்த மாதிரி எல்லாம் பார்க்காதேன்னு ஒரு பலமான எச்சரிக்கை போல இருந்தது!”

“ஓ...” என்று இழுத்த சாவித்திரி எதையோ ஒன்று பேசி சமாளித்து, அவரிடம் இருந்து மெதுவாக கழன்று கொண்டார்.

லேசாக நெற்றிப் பொட்டில் முணுமுணு என்று வலி எடுக்க தொடங்க, விரல்களால் மெல்ல அழுத்திக் கொண்டவர் பின்னால் சாய்ந்து அமர்ந்து சோர்வுடன் கண்களை மூடினார்.

அப்பெரியவரை குறித்து மகள் பகிர்ந்து இருந்த அத்தனை விஷயங்களும், இந்த ஒரு வார காலமாக அவர் இதயத்தில் விடாமல் முட்டி மோதிக் கொண்டு தான் இருக்கிறது.

அவரை சேர்ந்த ஒவ்வொரு நிகழ்வுகளும் தன் பெண்ணின் வாழ்க்கையில் புதிய அனுபவங்கள் தான்.

பத்தோடு, பதினொன்றாக அவளது மருத்துவனைக்கு வருகை தந்தவரின் பேச்சும், கலகலப்பான சுபாவமும் அவளை சுலபமாக கவர்ந்து இழுத்ததில் தன் விதிமுறைகளை தளர்த்திக் கொண்டு, வயதானவருக்காக என இரக்கத்துடன் அவரின் பேரனை சந்திக்க வெளி இடத்திற்கு தனியாக கிளம்பிச் சென்றாள்.

அத்தோடு அது முடிந்து விடும் என பார்த்தால், உன் மகளின் வாழ்வில் நான் சிறுகதை அல்ல தொடர் கதை என்பதை நிரூபிக்கும் விதமாக, அடுத்து மருத்துவமனைக்கு அவளின் அனுமதியோடு சிகிச்சைக்கு என்று இல்லாமல், தனிப்பட்ட முறையில் பொழுதை போக்குவதற்கு என வார நாட்களில் அவர் தொடர்ந்து வந்து செல்கிறார் என அறிந்து சாவித்திரிக்கு பலத்த அதிர்ச்சி.

இன்று காலமும், சமுதாயமும் இருக்கின்ற அழகிற்கு யாரென்றே அறிமுகம் இல்லாத ஒரு தனி மனிதனுக்கு முக்கியத்துவம் தருவது போல் ஏன் இப்படி முட்டாள்தனமாக நடந்து கொள்கிறாய் என இவர் மகளை கடிந்து கொள்ள, அவளோ அதே சமுதாயத்தை உதாரணம் காட்டி அதில் உயர்ந்த இடத்தில் இருப்பவர்கள், நல்ல மனிதர்கள் இல்லையா என்று இவரிடம் பதிலுக்கு வார்த்தையாடினாள்.

அவர்களின் வாக்குவாதத்தில் கணேசனால் எந்த ஒரு முடிவிற்கும் உறுதியாக வர முடியவில்லை. மகளின் நலமும், எதிர்காலமும் அவருக்கு மிக முக்கியம் அல்லவா... அதனால் இம்முறை அவளை உற்சாகப் படுத்தாமல் அமைதியாக இருந்தார்.

இறுதியில் அவளே பகலில் பல பேர் வந்து செல்லும் ஒரு பொது இடத்திற்கு பெரியவர் வந்து போவதால் ஒன்றும் பாதகமில்லை, நான் பார்த்துக் கொள்கிறேன் என முடித்து விட்டாள். சாவித்திரி தான் மனம் கேட்காமல் மீராவை ரகசியமாக அழைத்து, அந்த பெரியவரின் மீது ஒரு கண் வைத்து கொள்ள சொன்னார்.

அன்று அஷ்டலட்சுமி கோவிலில் தாத்தாவையும், பேரனையும் முதன்முதலில் சந்தித்து பேசிய பின்னர் அவருக்கும் சிறிது நிம்மதியாக தான் இருந்தது.

இளைஞனின் பார்வை அவள் புறம் பெரிதாக திரும்பவில்லை எனினும், தாத்தனின் பார்வையும், பேச்சும் தன் பெண்ணை சுற்றியே இருந்ததை கவனிக்க தவறவில்லை அவர். ஆனால் அதில் தெரிந்த கண்ணியமும், அவள் மீதான அன்பும், கனிவும் அவரை மெல்ல அமைதிப் படுத்தியது.

மகள் சொல்வது போல் தன் தனிமை துயரை போக்கிக் கொள்ள, அவளோடு வார்த்தையாடுவதில் ஆர்வம் காட்டுகிறார் போலிருக்கிறது என்று கொஞ்சமாக மனதை சமாதானப்படுத்தி கொண்டார். அதற்கும் ஆயுள் குறைவு தான் என்பதை சென்ற வாரம் நிகழ்ந்த சம்பவம் அவருக்கு உறுதிப்படுத்தி விட்டது.

தங்கள் உறவினர் மூலம் பெண்ணுக்கு அறிமுகம் ஆகிறார், அதோடு அவளை விடாமல் தொடர்கிறார், அனைத்திற்கும் சிகரம் வைப்பது போல் தன் பேரனுக்கு அவள் என்று தங்களது உறவினர்களிடமே அழுத்தமாக சொல்லிச் செல்கிறார்.

அந்தப் பெரியவர் எந்த எண்ணத்தோடு தங்கள் பெண்ணிடம் பழகுகிறார் என்று ஆயிரமாவது முறையாக குழம்பித் தவித்த சாவித்திரி, இன்னமும் தன் கணவனிடமோ, மகளிடமோ இவ்விஷயத்தை பகிரவில்லை.
 
சூப்பரான மாப்பிளை அமைந்து இருக்கு என்று நினைத்து, நதிக்கு பார்ப்பதை விட்டு விட்டு ...ஏன் நதிஅம்மா குழப்பிக்கிறாங்க..?
 
சாவித்திரிக்கு இதில் குழம்பும் படி என்ன கெட்ட விஷயம் இருக்கிறது என்று தெரியவில்லை
 
சூப்பரான மாப்பிளை அமைந்து இருக்கு என்று நினைத்து, நதிக்கு பார்ப்பதை விட்டு விட்டு ...ஏன் நதிஅம்மா குழப்பிக்கிறாங்க..?
பெண் கேட்டு நேரடியாக வராமல் தாத்தா அவளை சுற்றி வருவதில் தான் அவங்களுக்கு குழப்பம்.
 
சாவித்திரிக்கு இதில் குழம்பும் படி என்ன கெட்ட விஷயம் இருக்கிறது என்று தெரியவில்லை
கெட்ட விஷயம் என்று இல்லை... பெண்ணிடம் ஏன் நேரடியாக சுற்றி வர வேண்டும் என குழப்பம்.
 

Latest threads

Back
Top Bottom