Howdy!! Welcome to Heaven Of Forum
Wanting to join the rest of our members? Feel free to sign up today.
Register Now
கதைகளைப் படிக்க தளத்தில் ரிஜிஸ்டர் செய்து கொள்ளுங்கள்!
  • New:
    Loading new threads...
  • Copyright ©️ 2019 - 2026 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • WARNING! கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதை காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com

Ezhilanbu
Staff member
Administrator
Joined
Sep 16, 2024
Messages
741
Reaction score
4,441
Points
93
கதையைத் திருடி PDF போடாதீர்! கதைக்கருவையோ கதைக் காட்சிகளையோ திருடாதீர்! Copyright ©nandhavanamnovels.com
அத்தியாயம் 17

"சந்திரனின் இயக்கத்தை அடிப்படையாகக் கொண்ட இந்துக் காலக் கணிப்பு முறையில், பதினைந்து நாள்களுக்கு ஒரு முறை சுழற்சி முறையில் வரும் ஒரு நாள் ஏகாதசி. அமாவாசை நாளையும், பூரணை நாளையும் அடுத்து வரும் பதினோராவது திதி தான் ஏகாதசி. இது விஷ்ணுவை வழிபடுவதற்கு உரிய மிக முக்கியமான நாள். இது மிக முக்கிய விரத நாளும் கூட. ஏகாதசி அன்று விரதம் இருந்தால் பெருமாளின் அருள் கிடைக்கும், பாவங்கள் நீங்கும், கஷ்டங்கள் விலகும், செல்வ வளம் பெருகும், வைகுண்ட பதவி கிடைக்கும் என்பது நம்பிக்கை"

"பொதுவாக விரதங்கள் அனைத்தையும் சூரிய உதயத்தின் போது துவங்கி, மாலையில் நிறைவு செய்வார்கள். ஆனால் ஏகாதசி விரதத்தை, ஏகாதசி திதி துவங்கும் போது விரதத்தைத் துவங்கி, துவாதசி திதியில் நிறைவு செய்ய வேண்டும். அதோடு கடுமையான விதிமுறைகளையும் பின்பற்ற வேண்டும்"

"பொதுவாக விரதங்கள் அனைத்திலும் நாம் வாழ்வில் கடைப்பிடிக்க வேண்டிய நன்னெறிகளே விதிமுறைகளாய் வகுக்குப்பட்டிருக்கின்றன. இவற்றை நாம் அன்றாடம் கடைப்பிடித்து வாழ்வியலாய் மாற்றும் போது, விரத நாளிலும் எவ்வித எச்சரிக்கை உணர்வும் இல்லாமல் இயல்பாய் இருக்கலாம்.

இறைவனை வணங்குவதற்கு உடல் தூய்மையுடன் மனத்தூய்மை மிக முக்கியம். அனைவரிடமும் சாந்தமாக நடந்து கொள்ள வேண்டும். மற்றவர்கள் மீது கோபப்படுவதோ, மற்றவர்களுக்குச் சாபம் வழங்குவதோ கூடாது. பிறரைத் துன்புறுத்தும், அவர்களின் மனம் வருந்தும்படியான எதையும் சொல்லவோ, செய்யவோ கூடாது.

என்னைக் கேட்டால் விரத வரைமுறையென வைத்திருக்கும் பல்வேறு விதிமுறைகளிலும் தலைமையானது என இதைத் தான் சொல்வேன்" என்று அந்தப் பூசாரி விளக்கம் அளித்திருந்தார்.

கோதைக்கு ஏகாதசி விரதமிருப்பது என்பது புதிதல்ல. நாராயணரை வழிபடும் குடும்பத்தில் பிறந்து வளர்ந்ததால் நினைவு தெரிந்த நாளிலிருந்து ஏகாதசி விரதமிருப்பவள் அவள்.

அன்று ஏகாதசி என்பதாலேயே அவ்விரதத்தைக் கடைபிடித்தவளாய் பூசாரியின் இந்தப் பாராயணத்தைக் கேட்க வந்திருந்தாள்.

தனது குடிலுக்கு வந்த கோதை அன்றிரவு தான் உண்ணாவிட்டாலும், தனது குடும்பித்தினருக்காகச் சமைத்து வைத்திருந்தாள்.

கருப்பண்ணனுக்கு இரவுணவைப் பரிமாறியவளாய் அருகில் அவள் அமர்ந்திருக்க, "அய்யனும் அம்மையும் உண்டு விட்டார்களா கோதை?" எனக் கேட்டான் அவன்.

"ம்ம்ம் உண்டப் பிறகு தான் ஏர்களத்தில் காவல் பணி செய்தவாறு அங்கேயே உறங்குவதாகக் கூறிச் சென்றனர் இருவரும்" என்றாள்.

"போதும் கோதை" பாதி உணவை மீதம் வைத்து விட்டு எழுந்தவனாய் கை கழுவ வீட்டின் பின்னே இருந்த அருவியின் ஓடையை நோக்கிச் சென்றான்.

சாம்பல் அருவி நீர், அவர்களின் குடிலுக்குப் பின்னே ஓடையாய் சலசலத்து ஓடிக் கொண்டிருந்தது.

அவன் உண்ட இலையை எடுத்தவள் அவன் பின்னாலேயே சென்றவளாய் மக்கும் குப்பைகளைச் சேகரிக்கும் உரைக்குழியில் போட்டு விட்டு அவனருகில் சென்று, "ஏன் பாதி உணவை வைத்து விட்டீர்கள் கண்ணா? நள்ளிரவில் பசிக்கப் போகிறது! நீராகாரமாய் ஏதும் அருந்துகிறீர்களா? சூடாகப் பால் ஆற்றித் தரவா?" என்று கேட்டாள்.

"வேண்டாம் கோதை" என்றவனாய் வீட்டின் பின்னே இருந்த அருவினோடையின் பளிங்கு நீரில் கைகளை அலம்பினான்.

கையில்லாத மார்பு கச்சையுடன் அவள் அணிந்திருந்த மெல்லிய நூலினாலான சேலை குளிரைப் பரப்ப, கைகளைச் சூடேற்ற தேய்த்தவளாய் நின்றவளின் வடிவழகை நட்சத்திர ஒளியில் ரசித்தவனாய் கூறியவனின் அருகே சென்றவளாய், "நான் விரதமிருக்கும் நாளெல்லாம் தாங்கள் சரியாகவே உண்பதில்லை கண்ணா. தாங்கள் வயிறார உண்ணும் போது தான் என் மனது நிறைகிறது. இதனாலேயே திருமணமான நாளிலிருந்து நான் விரதமிருக்கும் போதெல்லாம் உங்களின் வயிற்றையும் காய வைக்கின்றேனே என்று மனம் சஞ்சலப்படுகிறது கண்ணா" வருத்தத்துடன் உரைத்தாள்.

அவளிடையில் சொருகியிருந்த சேலை முந்தானையில் கைகளைத் துடைத்தவனாய், "நாம் இருவரும் ஒன்றாக அமர்ந்து உண்ணும் போது மனத்தில் உண்டாகும் நிறைவும் மகிழ்வும் வயிற்றையும் நிறைத்து விடும் கோதை! சாப்பிடும் அளவே தெரியாது உண்பேன். நீ விரதமிருக்கும் நாட்களில் இப்படித் தனித்து உண்ணுவதை என் வயிறும் மனமும் விரும்புவதேயில்லை. அதனாலேயே உணவும் இறங்குவதில்லை" மென்னகையுடன் உரைத்திருந்தான்.

"நான் சிறு வயதிலிருந்தே இந்த விரதத்தை மேற்கொள்கிறேனே கண்ணா" மேலாடையாய் துண்டும்‌ இடைக்கச்சையுடன் வேட்டியும் அணிந்திருந்தவனின் கழுத்தில் மாலைப்போல் தனது கைகளைக் கோர்த்தவளாய் அவள் சொல்ல,

"உன்னவருக்காக இருக்கும் விரதத்தை. உன்னவருக்காகவே கைவிடலாம் தானே" அவளை நோக்கிக் குனிந்து நெற்றியில் முட்டியவாறு குமிழ்ச்சிரிப்புடன் கேட்டிருந்தான்.

அவனின் கன்னக்குழியை ரசித்துப் பார்த்தவளாய் தலைக் கவிழ்ந்தவள், "என் விரதத்திற்கான நோக்கமே வேறு கண்ணா" சற்றுத் தயக்கத்துடன் உரைத்தாள்.

"ஓ இத்தனை நாட்களாய் இவையெல்லாம் எனக்காக என்று நான் தான் தவறாய் நினைத்து விட்டேனோ?" அவன் உள்ளம் சுணங்கிய போதும், "வேறென்ன நோக்கம் கோதை?" எனக் கேட்டிருந்தான்.

"சிறு வயதிலிருந்து நான் இந்த விரதத்தை மேற்கொள்ளும் நோக்கம் முக்தி மட்டுமே கண்ணா. வைகுண்டப் பதம் அடைந்து மீண்டும் இப்பூமியில் பிறவாத வரத்தினை வேண்டியே இந்த விரதத்தை மேற்கொள்கிறேன் " என்றாள்.

"ஓஹோ அப்பொழுது நீ இல்லாது நான் மட்டும் இந்தப் பூமியில் பிறந்தால் யாரை நான் மணம் செய்து கொள்வது கோதை? எனக்காக நீ மீண்டும் பிறவி எடுக்க மாட்டாயா என்ன?" சிரிப்புடன் விளையாட்டாகக் கேட்டிருந்தான்.

சிறுவயதில் இருந்தே மறுபிறவி இல்லா வாழ்வு வாழ வேண்டுமெனச் சொல்லி சொல்லியே வளர்க்கப்பட்டதினால், 'மீண்டுமொரு பிறப்பு' என்றவன் சொன்னதும், 'எங்கே நடந்து விடுமோ' என்று இவளின் உள்ளம் அச்சம் கொண்டது.

'அய்யோ வேண்டவே வேண்டாம்' என்று எண்ணியவளாய் அவனை விட்டு தள்ளி நின்றவள், "வேறு யாரை வேண்டுமானாலும் மணம் செய்து கொள்ளுங்கள். உங்களுக்காக இந்தப் பூமியில் நான் திரும்பவும் பிறப்பெடுக்க மாட்டேனப்பா!" என்றாள்.

அவளின் இந்தப் பேச்சில், 'என்னை யாருக்கு வேண்டுமானாலும் விட்டுக் கொடுத்து விடுவாயா? அவ்வளவு தான் என் மீதான உனது அன்பா?' என்று கோபம் கொண்டவனாய்,

"ஒரு வேளை எனக்கு முக்தி கிடைத்து, நீ மட்டுமே பூமியில் பிறந்தாயானால் வேறொருவரை மணந்து கொள்வாயா கோதை?" சற்றுக் காட்டமாய்க் கேட்டிருந்தான்.

அவனின் கேள்வியில், 'நாராயணா!' என்று செவியை மூடிக் கொண்டவளாய், "ஏன் இவ்வாறு கேட்டு என் மனத்தை வதைக்கிறீர்கள்?" அவள் கண்களில் கண்ணீரே வந்து விட, "அப்படியெல்லாம் நடக்கவே நடக்காது" என்றாள்.

'வேறொருவரை மணம் செய்வதைப் பற்றிக் கேட்டாலே இவளுக்கு மனம் வதைப்படுகிறது என்றால் எனக்கு மட்டும் எப்படி இருக்குமாம்?' என்று நினைத்தவனாய்,

"நடந்தால்" கோபத்துடன் அவளை உசுப்பேற்றவெனவே அழுத்திக் கேட்டான்.

அவன் கேள்வியில் மிகுந்த கோபமுற்றவளாய் அவனருகில் சென்று தீயாய் முறைத்தவாறு, "நடந்தால் என் பெற்றொர் சொல்லும் வரனை மணம் செய்து கொள்வேன். போதுமா! இதோடு நிறுத்துங்கள் இப்பேச்சை" குரல் தழுதழுக்க, அழுகையின் விம்மலுடன் உரைத்திருந்தாள்.

அவளின் பேச்சில் சிரித்தவனாய் தன்னருகே அவளை இழுத்துக் கண்களைத் துடைத்தவன், "என் மீது இத்தனை அன்பை வைத்துவிட்டு ஏன் அவ்வாறு கூறுவானேன். பின் கூறியதற்காக இப்படி வருந்துவானேன்" அவளைத் தன்னோடு சேர்த்தணைத்து அமைதிப்படுத்தினான்.

இவர்களின் இந்த உரையாடலுக்குச் சாட்சியாகிப் போனது அருவியோடை நீரும் நட்சத்திரங்களும்.

அரைகுறைத் தூக்கத்தில் இக்கனவினைக் கண்டவளாய்ப் படுத்திருந்த தாமரை, பட்டெனக் கண்களைத் திறந்தாள்.

'இதுலாம் அநியாயம். விளையாட்டா பேசின பேச்சுக்கு, இப்படி ஒரு தண்டனையா?' அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. நெஞ்சம் குமுறிக் கொண்டு வந்தது.

அவளின் மனசாட்சியோ, 'நீ விளையாட்டாய் பேசியது குத்தமல்ல! விரதம் மேற்கொள்ளும் போது பேசியது தான் குற்றம்' என்று இடித்துரைத்தது.

தாங்கள் அன்று விளையாட்டாய் பேசியது தான் இன்று வினையாய் மாறி இருவரும் வேறொருவரை மணந்து பிரிந்து வாழும் சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டிருந்ததாகக் காண்பித்ததை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை.

அந்த எண்ணத்தோடே மீண்டுமாய் உறக்கத்திற்குள் ஆழ்ந்தவளுக்கு அவர்களின் அந்த உரையாடலே வேறொரு சாபத்தினால் நிகழ்ந்தது எனக் கனவாய்க் காண்பித்திருந்தது இப்பிரபஞ்சம்.

"சபிக்கிறேன் உன்னை! எம் மகளுக்கானவன் அல்லன் நீ! இனி எப்பிறவியிலும் எம் மகளுக்கு நீ மணாளனாக மாட்டாயெனச் சபிக்கிறேன்" கனவில் ஆங்காரத்துடன் முதியவர் ஒருவர் அவளின் கண்ணனான கருப்பண்ணனைச் சபிப்பதைக் கண்டு, 'இல்லை' என்று அலறியவளாய் பதறிக் கொண்டு எழுந்திருந்தாள் தாமரை.

கண்களில் நில்லாது கண்ணீர் வழிந்தோட, 'இல்லை.. என் கண்ணா.. என் கண்ணா.. அவருக்கு சாபம் கொடுத்தாரா என் அப்பா! இல்லவே இல்லை! என்று ஆழ்மனம் அரற்றிட, நெஞ்சம் நடுங்கிக் கொண்டிருந்தது அவளுக்கு‌.

சரியாய் அச்சமயம் வீட்டின் அழைப்பொலி ஒலிக்க, பித்துப் பிடித்தவளாய் சுற்றத்தை மறந்து அமர்ந்திருந்தவள், யார் எவர் என்றும் யோசிக்காது, நேரத்தையும் பார்க்காது, எழுந்து சென்று கதவைத் திறந்தாள்‌.

அங்கே மாதவன் நின்றிருப்பதைக் கண்ட மறுநொடி, "கண்ணா" என்று அவனைத் தாவி அணைத்தவாறு கதறி அழுதிருந்தாள் தாமரை. அவளின் குரல் பேரமைதியான அவ்வனமெங்கும் எதிரொலித்து அடங்க,

விடியற்காலை நான்கு மணியைக் குறிக்கும் விதமாய் இருட்டிக் கொண்டிருந்த வானத்தையும், தன்னைக் கட்டிக் கொண்டு அழும் தாமரையையும், சுற்றத்தையும் பார்த்தவனாய் அவளைத் தோளோடு அணைத்து உள்ளே நகர்த்தி வந்து கதவைச் சாற்றினான் மாதவன்.

கதவைச் சாற்றியவன் அப்படியே அதில் சாய்ந்து நிற்க, அவன் மார்பில் சாய்ந்து அழுதவள், அவன் முகத்தினைக் கையினில் ஏந்தியவளாய், "நான் தான்.. நான் தான் காரணம் கண்ணா. நாம சேர்ந்து வாழாம போனதுக்கு என்னோட அப்பாவோட சாபம் தான் காரணம். நான் பார்த்தேன்.. கனவுல பார்த்தேன். இனியும் என்னால உங்களைப் பிரிஞ்சி வாழ முடியாது. எனக்கு வாழ்வு தருவீங்களா கண்ணா?" அழுகையினூடே உரைத்தவளின் கண்களை வேதனையுடன் பார்த்திருந்தான் மாதவன்.

முந்தைய நாள் இரவு சக்தீஸ்வரனிடம் பேசிய பிறகு உறக்கம் வராது இருந்தவன் விடியற்காலையே தாமரையுடன் பிரகலாதப் பெருமாள் கோவிலுக்குச் செல்லலாம் என்றெண்ணி வண்டியை எடுத்துக் கொண்டு வந்திருந்தான்.

முன்பே மாதவன் தாமரையின் சொந்தக்காரனாய் வனக்காவலர்களுக்கு அறிமுகமாகியிருந்ததால், அவனைச் செக் போஸ்ட்டின் உள்ளே அனுமதித்திருந்தனர். அக்கோவிலுக்குச் சென்று தங்களது வாழ்வின் பிறவிப் பயனைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென ஆவல் மேலிட உறக்கத்தை விடுத்து வந்திருந்தான் மாதவன்.

ஆனால் இவள் இவ்வாறு அழுது கரைந்தவாறு இருப்பாள் என்று அவன் துளியும் நினைத்திருக்கவில்லை. அவளின் இந்த அழுகை அவனுக்கு வேதனையளித்தது.

தன்னைப் போலவே அவளும், தாங்கள் இருவரும் ஏன் முதல் திருமணமாய்ச் சேரவில்லை என்று நினைத்து வேதனைக் கொண்டிருக்கிறாள் என்று புரிந்தது அவனுக்கு.

"உன் அப்பா கொடுத்த சாபத்தை நீ தானே சரி செய்தாகனும் தாமரை" என்று மாதவனாய் ஆரம்பித்தவன், "என்னை மணம் செய்து கொண்டு அந்தச் சாபத்தை நீக்குவாயா கோதை" என்று கருப்பண்ணனாய் முடித்திருந்தான்.

கண்ணீருடன் ஆமெனத் தலையசைத்தவளாய், "இது நாள் வரை உயிர்ப்பற்று வாழ்ந்திருந்த இக்கோதை தங்களின் மனையாளாய் மகிழ்வுற்று வாழப் போகும் நாளுக்காய்க் காத்திருக்கிறேன் கண்ணா" என்றாள்.

"நானும் காத்திருக்கிறேன் கோதை" என்றவனாய் மகிழ்வின் எல்லையில் கண்ணீருடன் அவளின் கன்னங்களைப் பற்றி முத்தமிட்டவன், அவளைத் தன்னோடு சேர்த்து இறுக அணைத்திருந்தான்.

அவனது அணைப்பில் தாயின் மடியைத் தேடியடைந்த கன்றாய் இளைப்பாறிக் கிடந்தவள், கொஞ்சம் கொஞ்சமாக அந்தக் கனவின் தாக்கத்தில் இருந்து விடுபட்டுத் தன்னுணர்வு பெற்ற நொடி, பட்டென அவன் அணைப்பில் இருந்து வெளி வந்தாள். அவள் அவ்வாறு விலகவுமே மாயவலை மாயமாய்ப் போக, தனது சுயத்திற்கு வந்திருந்தான் மாதவன்.

ஆனால் இம்முறை முகத்தைத் திருப்பிக் கொண்டு செல்லாமல், சங்கோஜத்துடன் அவனது அணைப்பினால் நெகிழ்ந்திருந்த நைட்டியை மார்பிலிருந்து மேலேற்றி விட்டவளாய் திரும்பி நின்றவள், "வாங்க மாதவன்! உட்காருங்க! இதோ வந்துடுறேன்" என்றவாறு அறைக்குள் சென்றிருந்தாள்.

கனவின் தாக்கத்தில் நிகழ்ந்தவை ஆயினும் தன் உடலுக்கும் உயிருக்கும் என்றென்றுமே உரிமையாளன் இவன் என்கின்ற நிதர்சனத்தை மனம் முழுதாய் ஏற்றுக் கொண்டதினால் அவனை வேற்றாளாய் நினைக்கவில்லை அவள்.

மாதவனைத் தனது உயிராய் உணரத் தொடங்கியிருந்தாள் தாமரை. அவன் மீதான தனது நேசத்தை உணரத் தொடங்கியிருந்தாள். அதன் பொருட்டே இந்நிகழ்வை அமைதியாகக் கடந்திருந்தாள்.

இத்தனை நேரமாய் அரற்றிக் கொண்டிருந்த மனம், எப்பொழுதும் போல் மாதவனின் அண்மையில் எடையற்று மகிழ்வாய் மாறிப் போன விந்தையை எண்ணியவாறு, நைட்டியின் மேலேயே ஒரு ஸ்வெட்டரை அணிந்து கொண்டு வெளியே வந்து அவன் முன் அமர்ந்தாள்.

மேலும் ஏதும் பேசி, இருக்கும் இலகு நிலையைக் கெடுக்க விரும்பாமல், நேரடியாக விஷயத்திற்கு வந்தான் மாதவன்.

"நேத்து சக்தி சார் வந்து பேசினாரு" சக்தீஸ்வரன் கூறியதைச் சொல்லியவனாய், "கிளம்பு தாமரை! நாம ரெண்டு பேரும் சேர்ந்து பிரகலாதப் பெருமாள் கோவிலுக்குப் போவோம். அங்க தான் நம்ம பிரச்சினைக்கான தீர்வு இருக்கு" அவன் சொன்னதைக் கேட்டு தலையசைத்தவளாய்,

"வெயிட் பண்ணுங்க. கிளம்பி வரேன். போகலாம்" என்றவளாய் அடுத்த அரை மணி நேரத்தில் குளித்துத் தயாராகி வந்தாள்.

மாதவன் எடுத்து வந்த விடுதியின் ஜீப் வண்டியில் பயணித்தவர்களாய், காலை ஐந்து மணியளவில் பிரகலாதப் பெருமாள் கோயிலை அடைந்தனர்.
 

Latest threads

Top Bottom