• Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • எழிலன்பு நாவல்கள் தளத்திற்கு செல்ல 👉 ezhilanbunovels.com/nandhavanam / நந்தவனம் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் nandhavanamnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

புதிராகும் பிரியங்கள் 13

Chithra Venkatesan

Writer✍️
புதிர் 13

அந்த பிரச்சனை நடந்து முடிந்து நாட்கள் அதுபாட்டிற்கு நகர்ந்து கொண்டிருந்தது. ஆனால் அந்த காலங்கள் தீபஞ்சனாவிற்கு நரக வாழ்க்கையை விட கொடுமையாக இருந்தது. அன்றிலிருந்து திரு தீபஞ்சனாவிடம் பேசுவதை நிறுத்தியிருந்தான். தமயந்தியோ நடந்ததை பேசி பேசி அவளை கஷ்டப்படுத்திக் கொண்டிருந்தார். திகழ் போக வர இருக்கும்போதெல்லாம் அவளை முறைத்தப்படி இருந்தான். திவ்யாவோ எப்போதும் விட்டத்தைப் பார்த்தப்படி அமர்ந்திருந்தாள். தினகரனும் வீட்டு முற்றத்தில் சாய்வு நாற்காலியை போட்டு அமர்ந்திருந்தார். யாரிடமும் தேவைக்கு மேல் பேசுவதில்லை.

திவ்யாவின் நிலையை நினைக்கும்போது இதை தீபஞ்சனா தனக்கு தண்டனையாக தான் ஏற்றுக் கொண்டாள். ஆனால் கணவன் சொன்ன அந்த விபரீத முடிவு அதுதான் அவளது மனதை உறுத்திக் கொண்டே இருந்தது. அந்த விபரீத முடிவு என்ன? அவளையும் வீட்டை விட்டு அனுப்புவதா? இன்னும் சிறிதுநேரம் கடந்திருந்தால் அதை அவன் வாயால் சொல்லியிருப்பான் போலும், அதை தயாளன் புரிந்து கொண்டவர்,

“இன்னும் ஏன் டா நிக்கற, முதலில் இந்த வீட்டை விட்டு கிளம்பு, இன்னும் இங்க நின்னு உன் தங்கச்சி வாழ்க்கையை மொத்தமா பாழாக்கிடாத, அதேபோல இனி உனக்கு அப்பா, தங்கைங்க இருப்பதையும் மறந்திடு, உன்னை மொத்தமா நாங்க தலை முழுகிட்டோம், இனி உனக்கும் எங்களுக்கும் எந்த உறவும் கிடையாது.” என்று சொல்லி, திலீபனை அவரே அந்த வீட்டை தரதரவென இழுத்து வெளியே தள்ளிவிட்டவர்,

“எல்லா தப்பும் என்னோடது தான், பிள்ளைங்க எதிர்காலத்தை யோசிச்சேனே தவிர, இன்னொரு பொண்ணு வாழ்க்கையை யோசிக்க தவறிட்டேன். என் வளர்ப்பு தப்பா போகாதுன்னு கர்வத்தில் இருந்துட்டேன். அவன் எனக்கு இனி பிள்ளையே இல்லை. அவன் செய்த தப்புக்கு அவனை கொன்னுப் போட்டா கூட பரவாயில்லை. அவனுக்காக கேட்க நாங்க யாரும் வரமாட்டோம், ஆனா இந்த விஷயத்தில் என் மகளை தண்டிச்சிடாதீங்க,” என்று அனைவரின் முன்னிலையில் கைகூப்பி மன்னிப்பு கேட்ட தயாளன் இளைய மகளை அழைத்துக் கொண்டு வெளியேறிவிட்டார்.

வீட்டை விட்டு துரத்தப்பட்ட திலீபனோ தீக்‌ஷனாவை தேடி சென்றிவிடுவான். ஆனால் அவனாலும் தயாளன் செய்த தவறாலும் பாதிக்கபபட்டது அவரது இரு பெண்களும் தான், இரண்டுநாள் கடந்திருக்க, திகழை தேவப்பிரதா அலைபேசியில் அழைத்தாள். ஆனால் அவனோ அழைப்பை ஏற்கவில்லை. தொடர்ந்து அவளும் விடாமல் அழைக்க, அதை ஏற்றவன், “போன் எடுக்கலன்னா ஏதோ வேலை இருக்கும்னு தெரியாதா? சும்மா தொந்தரவு செய்துட்டு இருக்க,” என்று எடுத்ததுமே அவன் எரிந்து விழ,

“முன்ன அடிக்கடி பேச மாட்டேங்குறன்னு சொல்வீங்க, இப்போ ஏன் தொந்தரவு செய்றேன்னு கேட்கறீங்க, அப்போ எல்லாம் முடிஞ்சுதா?” என்று அவள் பதிலுக்கு கேட்கவும்,

“இப்போ இருக்க நிலைமையில் இதான் ரொம்ப முக்கியமா?” என்று கேட்டான் அவன்,

அதுவே அவன் மனநிலையை எடுத்து சொன்னாலும், “எனக்கு முன்னமே திலீபன் அண்ணா விஷயம் தெரியாது திகழ், எனக்கும் அன்னைக்கு தான் தெரிய வந்தது. திலீபன் அண்ணா பக்கம் தான் தப்பு, நான் திவ்யா அண்ணிக்கு தான் சப்போர்ட் செய்வேன்.” என்று அவள் சொல்ல,

“யாருக்கு தெரிஞ்சா என்ன? யார் சப்போர்ட் செய்தா என்ன? இப்போ பாதிக்கப்பட்டு நிக்கறது என் தங்கை தானே, அவ வாழ்க்கையை பாழாக்கிட்டு இப்போ சமாதானம் செய்தா அதை ஏத்துக்க முடியுமா? இங்கப்பாரு எனக்கு நிறைய வேலை இருக்கு, இப்படி போன் செய்து தொந்தரவு செய்யாத,” என்று அவன் பட்டென்று அலைபேசி அழைப்பை அணைக்க, அவள் கதை முடிவுக்கு வந்துவிட்டதை அவளால் நன்றாக புரிந்து கொள்ள முடிந்தது.

அவளின் பயிற்சி விஷயமாக அவன் உதவுவதாக சொன்னதை பற்றி அவள் தோழி கேட்டபோது கூட, “இனி திகழ் உதவ மாட்டாங்க, நாமளே தான் ஏதாவது பார்த்துக்கணும்,” என்று கூற, பின் அவள் தோழிக்கு தெரிந்தவர் மூலமாக தென்னமுதன் மருத்துவமனைக்கு அவள் பயிற்சிக்கு சென்றாள். பின் படிப்பு முடிந்ததும் அங்கேயே தொடர்ந்து வேலைக்கு செல்லவும் ஆரம்பித்துவிட்டாள்.

மனதில் வலியிருந்தாலும் தேவப்பிரதாவால் அதை ஓரளவிற்கு கடந்து வந்தது போல இல்லை தீபஞ்சனாவின் நிலைமை. ஒரே வீட்டில் இருந்து கொண்டு கணவன் பேசாமல் இருப்பது அவளுக்கு கஷ்டமாக இருந்தது. தயாளன் மகளுக்கு அழைத்து அவவப்போது அவள் நலனை விசாரிக்க, “என்னன்னு சொல்றது ப்பா, முன்னமே சொல்லிடலாம்னு சொன்னேன். இப்போ எல்லோர் முன்னாடியும் ஒரு குற்றவாளி போல நிற்கிறேன். எப்போ வேணும்னாலும் நீ இந்த வீட்டில் இருக்கக் கூடாதுன்னு சொல்வாங்க போல, நடந்த விஷயத்துக்கு அதையும் ஏத்துக்கிட்டு தானே ஆகணும்,” என்று அவள் கூற,

“மாப்பிள்ளை அப்படியெல்லாம் செய்ய மாட்டார் தீபா ம்மா, மத்தவங்களுக்கு கண்டிப்பா உன்மேல கோபம் இருக்கும், என்ன செய்றது கொஞ்சம் பொறுத்துக்கோ, என்ன திவ்யாவை நினைச்சா தான் மனசுக்கு கஷ்டமா இருக்கு, அவன் இப்படி ரொம்ப சுயநலமா நடந்துப்பான்னு தெரிஞ்சிருந்தா இப்படி ஒரு கல்யாணத்தை நடத்தியிருக்கவே மாட்டேன். அந்த பாவம் மொத்தமும் என்னை வந்துதான் சேரும்,” என்று அவரும் கொஞ்சம் புலம்பிவிட்டு வைத்துவிட்டார்.

அந்தநேரம் திலீபன் அவரை காண வந்தான். எதற்கு வந்தான் என்று கூட அவர் கேட்கவில்லை. அவனை பார்த்ததும் அவருக்கு கோபம் வந்துவிட, “எதுக்குடா வந்த, அதான் உன்னை மொத்தமா தலை முழுகிட்டோமே, அப்புறம் எதுக்கு இங்க வந்த, மொத்தமா எங்களுக்கு சமாதி கட்டவா, அன்னைக்கு உன் தங்கச்சி வாழ்க்கைக்காக அத்தனை கெஞ்சினேனே, அதை கொஞ்சமாவது மனசுல யோசிச்சிருந்தா இப்படி நடந்துப்பியா டா, இப்போ தான் அவன் போன் செய்தா, எப்போ என்னை வீட்டை விட்டு துரத்துவாங்கன்னு தெரியல ப்பான்னு சொல்லி வேதனை பட்றா, அப்படி மட்டும் ஏதாவது நடந்தது அப்புறம் தான் டா இருக்கு உனக்கு, இதுக்கு மேலேயும் இங்க நின்ன உன்னை கொன்னுப் போட்ருவேன் பார்த்துக்க, முதலில் இங்க இருந்து கிளம்பு,” என்று அவனை விரட்டி விட்டார்.

அடுத்து அவனோ நேராக திருவை பார்க்க மில்லுக்கு செல்ல, அவனைப் பார்த்த திருவோ, “எதுக்கு டா இங்க வந்த, உன்னை யாரு உள்ள விட்டது?” என்று கோபப்படவும்,

“என்மேல எவ்வளவு வேணும்னாலும் கோபப்படுங்க திரு, ஆனா என்னை வச்சு என் தங்கச்சியை தண்டிச்சிடாதீங்க, அவளை வீட்டை விட்டு அனுப்பிடாதீங்க, என்னை நல்லவன்னு நான் சொல்லிக்கல, ஆனா திவ்யாவோட நான் வாழவே இல்லை. ஆனா நீங்களும் தீபாவும் அப்படியில்லை. நல்லப்படியா வாழ்ந்து ஒரு குழந்தையும் இருக்கு, நடந்த பிரச்சனையில் எங்க அவளை வீட்டை விட்டு அனுப்பிடுவீங்களோன்னு அவ பயப்பட்றா, அப்பாவிடம் சொல்லி அழுதுருக்கா, உங்க மேல எப்போதும் எனக்கு மரியாதை உண்டு. நீங்க அப்படி செய்ய மாட்டீங்க, ஆனாலும் கெஞ்சிக் கேட்டுக்கிறேன். என்னை தண்டிக்கறதா நினைச்சு அவளை தண்டிச்சிடாதீங்க,” என்று சொல்லிவிட்டு செல்ல, திலீபன் பேசியது கோபமாக தீபஞ்சனாவிடம் திரும்பியது.

InShot_20250118_170008200.webp


அது தெரியாமல் இன்று எப்படியாவது கணவனிடம் பேசி அன்றைய தன் நிலையை புரிய வைக்க வேண்டுமென்று தீபஞ்சனா நினைத்திருந்தாள். அவன் வந்து சாப்பிட்டு முடித்து அவர்கள் அறைக்கு வந்ததும், குழந்தையை தூக்கிக் கொண்டு அவன் அருகில் வந்தவள், “அப்பா, இப்படியே எத்தனைநாள் கோபமா இருக்கப் போறாராம்னு கேட்டு சொல்லுங்க செல்லக்குட்டி. அம்மா தப்பு செய்துட்டேன் தான், இல்லைன்னு சொல்லல, ஆனா அப்போ விஷயம் கேள்விப்பட்டபோது எனக்கு என்ன செய்யன்னே தெரியல, கல்யாணம் நடந்தா என்னாகும்? நடக்கலனா என்னாகும்னு என்னால யோசிக்கவே முடியல, எங்க அப்பாவை பிரிய வந்துடுமோன்னு நான் பயந்துட்டேன் செல்லம்.” என்று குழந்தையிடம் சொல்வது போல் அவனிடம் சொல்லிக் கொண்டிருக்க,

“அதனால என் தங்கை வாழ்க்கையை பணயம் வச்சிட்டல்ல, என்மேல நீ வச்ச நம்பிக்கை அவ்வளவு தான் இல்லை. இப்போதும் அந்த நம்பிக்கை இல்லை. அதான் இந்த வீட்டை விட்டு துரத்திடுவாங்கன்னு உன் அப்பாவிடம் அழுதியா? உன் அண்ணன் வந்து என் தங்கையை தண்டிச்சிடாதீங்கன்னு கெஞ்சறான். எந்த தைரியத்தில் என்னிடம் வந்து அதைப்பத்தி பேசறான். உன்னைப்பத்தி கொஞ்சமாவது யோசிச்சிருந்தா அவன் அப்படி செய்திருப்பானா?

அவனை வீட்டை விட்டு துரத்தின அப்பவே உன்னையும் சேர்த்து துரத்தியிருந்தா அவன் என்ன செய்திருப்பான். ஆனா நான் அப்படி செய்ய மாட்டேன். நீ எனக்கு மனைவியா மட்டும் இல்லை. என் குழந்தைக்கு அம்மாவும் கூட, அது ஒன்னுக்காக மட்டும் தான் என் கோபத்தை அடக்கிட்டு இருக்கேன் புரியுதா?” என்று அவன் சொன்னதும், அப்படியே அதிர்ந்து அவள் கட்டிலில் அமர்ந்துவிட, அவனோ விறுவிறுவென அறையிலிருந்து வெளியே சென்றுவிட்டான்.

அவன் சொன்னது அவள் காதுக்குள் ரீங்காரமிட்டுக் கொண்டே இருந்தது. அப்படியானால் குழந்தை இல்லையென்றால் அவளையும் அப்போதே வீட்டை விட்டு அனுப்பியிருப்பானா? அந்த கேள்வியே அவள் மனதில் ஓடிக் கொண்டிருந்தது.

கோபத்துடன் வெளியே வந்தவன் கார் அருகே சென்றதும் காரில் தன் கைகளை கோபமாக குத்திக் கொண்டான். கோபத்தில் இப்படி ஏதாவது பேசிவிடுவோம் என்று தெரிந்து தான் கோபத்தை கட்டுப்படுத்திக் கொண்டிருந்தான். ஆம் அவளிடம் அவனுக்கு கோபம் மட்டும் தான், வெறுப்பு இல்லை. அப்போதும் சரி இப்போதும் சரி அவள் தன்னை நம்பவில்லையே என்ற கோபம் தானே தவிர, அவளை இந்த காரணத்திற்காக வெறுக்கவும் முடியாது. வீட்டை விட்டு அனுப்பவும் முடியாது. இன்னும் இங்கே இருந்தால் ஏதாவது பேசிவிடுவோம் என்று தெரிந்து தான் வெளியே வந்தவன் காரை எடுத்துக் கொண்டு சென்றுவிட்டான்.

திரும்ப வந்ததும் அவளை சமாதானப் படுத்தவில்லையென்றாலும் பரவாயில்லை. சுமூகமாக நடந்து கொள்ள முயற்சித்திருக்கலாம், ஆனால் அதை அவன் செய்யவில்லை. இத்தனைநாள் தன்னிடம் கணவன் பேசமாட்டானா? என்று ஏக்கமாக பார்த்துக் கொண்டிருந்த தீபஞ்சனாவும் அவன் அப்படி பேசியதில் கோபம் கொண்டு அவனிடம் மீண்டும் பேச முயற்சிக்கவில்லை. இவர்கள் இருவரும் பேசாமல் இருப்பதைக் கண்டு தமயந்திக்கு மனதிற்குள் ஒரு குரூர திருப்தி.

இப்படி இருக்கும்போது தான் திருமந்திரன் மீண்டும் வெளிநாடு போக வேண்டியிருந்தது. முன்னே சென்றது வேறு, இப்போது செல்வது வேறு நாடு. இந்த நேரத்தில் இந்த பயணம் மேற்கொள்வது அவனுக்கு பிடிக்கவில்லையென்றாலும் கண்டிப்பாக செல்ல வேண்டும், போனமுறை திலீபன் வந்திருந்தான். இந்தமுறை இவனும் திகழும் செல்லலாம் என்றாலும் வீட்டில் உள்ள நிலவரத்திற்கு இருவரும் செல்ல முடியாது என்பதால் அவன் மட்டும் செல்ல முடிவெடுத்திருந்தான்.

கிளம்பும்போது கூட மனைவியிடம் ஒருவார்த்தை சொல்லவில்லை. அங்கே சென்றும் கூட அன்னை, தங்கை, குழந்தை இவர்களிடம் மட்டும்தான் பேசிக் கொண்டிருந்தான். அவனது செயல் தீபஞ்சனாவை மிகவும் காயப்படுத்தியது. இதற்கு மேலும் இந்த வீட்டில் இருக்க வேண்டுமா? என்று அவளுக்கு தோன்ற ஆரம்பித்துவிட, அதற்கேற்றார் போல் ஒரு பிரச்சனையும் நடந்தது.

முன்பெல்லாம் மூன்று பெண்களும் வேலையை பகிர்ந்து செய்வார்கள். திலீபன் பிரச்சனைக்குப் பின் திவ்யா அவளது அறையிலேயே முடங்கி கிடப்பாள். தமயந்தியும் தீபஞ்சனா மீது உள்ள வெறுப்பில் முக்கால்வாசி வேலையை அவள் தலையில் கட்டிவிடுவார். தீபஞ்சனாவும் பொறுமையாக அனைத்தையும் செய்துவிடுவாள்.

அன்று தமயந்தியின் தங்கை அவரை காண வீட்டுக்கு வந்திருந்தார். பிரச்சனைகள் நடந்து முடிந்து இரண்டு மாதங்கள் ஓடியிருக்க, இப்போது வந்து ஆறுதல் சொல்வது போல் தீபஞ்சனாவிற்கு எதிராக தமயந்தியை தூண்டி விட்டுக் கொண்டிருந்தார்.

“நம்ம பொண்ணு வாழாமலேயே வாழாவெட்டியா விதியேன்னு உட்கார்ந்திருக்கு, அதுக்கு காரணமானவளை துரத்தாம வீட்டுக்குள்ள வச்சுக்கிட்டு இருக்கீங்க, இந்த அநியாயம் வேற எங்கேயாவது நடக்குமா? என்று அவர் தன் தமக்கையுடன் அறைக்குள் பேசுவது அந்த பக்கமாக வந்த தீபஞ்சனாவின் காதில் விழுந்து அதற்கு அவள் வருத்தப்பட்டாலும் அதை கண்டும் காணாமல் தனது வேலயை பார்க்கச் சென்றாள்.

இட்லிக்கு மாவரைக்க வேண்டும், இப்போது தான் பிள்ளைக்கு தாய்ப்பால் கொடுத்து அவனை உறங்க வைத்துவிட்டு வந்தாள். வீட்டின் வரவேற்பறையிலேயே திவ்யா அமர்ந்து தொலைக்காட்சியை பார்த்துக் கொண்டிருந்தாள். அதாவது அதுபாட்டிற்கு ஓடிக் கொண்டிருக்க, அவள் ஏதோ சிந்தனையில் அமர்ந்திருந்தாள்.

முன்பானால் பிள்ளை தூங்குவதால் தொலைக்காட்சியை நிறுத்த சொல்லி அவளிடம் உரிமையாக சொல்லலாம், திவ்யாவே அப்படி சொல்ல அவசியமில்லாதது போல் தான் புரிந்து நடந்து கொள்வாள். ஆனால் இப்போது திவ்யாவின் மனநிலை எப்படி இருக்கிறது என்பது தெரியாததால் எதுவும் சொல்லாமல் அறையை சாத்தவும் முடியாது என்பதால் விட்டுவிட்டு தீபஞ்சனா தனது வேலையைப் பார்க்க சென்றாள்.

கிரைண்டர் ஓடும் சத்தத்தில் வெளி சத்தங்கள் அவ்வளவாக கேட்கவில்லை. அப்படியே மற்ற வேலைகளையும் சேர்த்துப் பார்த்தவள், வேலை முடிந்ததும் வெளியில் வந்து பிள்ளை உறங்குகிறானா என்று பார்க்க, அறையில் பிள்ளையை காணவில்லை என்பதால் பதறி, வெளியே வந்து தேடியவள், கொள்ளைப் புறத்தில் வந்து பார்க்க, அங்கே புகழ் கிணற்றுக்கு அருகில் வாளியில் தண்ணீர் இருக்க அதில் விளையாடிக் கொண்டிருந்தான்.

அந்த கிணற்றிலிருந்து தான் மோட்டார் மூலமாக தண்ணீர் எடுத்துக் கொண்டிருக்கின்றனர். இருந்தாலும் அவசர தேவைக்கு அப்படியே தண்ணீர் எடுத்துக் கொள்வதற்காக கிணற்றை முழுதாக மூடியிருக்கவில்லை. பிள்ளை இப்போது தான் கொஞ்சமாக தத்தி தத்தி நடக்க ஆரம்பித்திருக்கிறான். தொலைக்காட்சி சத்தத்தில் விழித்துக் கொண்டவன், கட்டில் தாழ்வாக இருக்கவே, இறங்கி அன்னையை தேடியபடி இங்கு வந்துவிட்டான் போலும், அங்கு தண்ணீர் இருக்கவும் அதில் விளையாட ஆரம்பித்துவிட்டான்.

பிள்ளை கிணற்றுக்கு அருகில் இருக்கவும், தீபஞ்சனா பதறயபடி வந்து அவனை தூக்கியவள், வீட்டிற்குள் வர, திவ்யா இன்னும் வரவேற்பறையில் தான் அமர்ந்திருந்தாள். பிள்ளை அவளை தாண்டி தான் பின்பக்கம் சென்றிருக்க வேண்டும், கேட்க வேண்டாம் என்று நினைத்தாலும், ஏதாவது விபரீதம் நேர்ந்திருந்தால் என்ற நினைப்பே கேட்காமல் இருக்கவும் முடியவில்லை.

“திவ்யா, புகழ் தூக்கத்திலிருந்து விழிச்சு பின்பக்கம் வரைக்கும் போயிருக்கான். கிணறு வேற திறந்திருக்கு, நீ இங்க தானே இருக்க, அவன் வெளியில் போனதை கவனிக்கலையா?” என்று கேட்க,

“நானே என்னோட விதியை நினைச்சு உட்கார்ந்திருக்கேன். இதையெல்லாம் எங்க கவனிக்க, நீங்க ஏன் கதவை திறந்து வச்சிட்டுப் போனீங்க, சாத்தி வைக்கறது தானே, இல்லை கூடவே இருக்க வேண்டியது தானே,” என்று திவ்யா பதிலுக்கு கேட்கவும்,

“அவனே துறுதுறுன்னு இருக்கான். சாத்தி வச்சா உள்ள தாழ்ப்பாள் போட்டுப்பான். அதான் திறந்து வச்சிட்டுப் போனேன். அதான் நீ இருக்கியே அவன் அழுதாளோ இல்லை வெளியே வந்தாலோ கவனிப்பேன்னு நினைச்சேன். மத்த வேலையும் இருக்குல்ல, நான்தானே தனியா பார்க்க வேண்டியிருக்கு,” என்றவள்,

“நான் சொல்றேன்னு தப்பா நினைக்காத, எத்தனைநாள் இப்படியே இருக்கப் போற, உனக்கு நடந்தது வருத்தமான விஷயம் தான், ஆனா அவன் என் அண்ணனா இருந்தாலும் உன்னை வேண்டாம்னு சொல்லிட்டுப் போய் அவன் அந்த பொண்ணோட சந்தோஷமா தானே இருக்கான். நீ இப்படியே வருத்தமா உட்கார்ந்து உன் வாழ்க்கையை அழிச்சிக்கப் போறியா? உன்னை, உன்னோட அன்பை உதாசீனப்படுத்தினவன் முன்ன நீ நல்லப்படியா வாழ்ந்து காட்ட வேண்டாமா?” என்று தீபஞ்சனா கூற,

“என் வாழ்க்கை இந்த நிலைமைக்கு வர காரணமாகிட்டு இப்போ ரொம்ப நல்லவங்க மாதிரி அட்வைஸ் செய்றீங்களோ, நீங்க நினைச்சிருந்தா அன்னைக்கே இதை தடுத்திருக்கலாம், ஆனா அப்போ அதை செய்யாம, உங்க வாழ்க்கைக்காக சுயநலமா யோசிச்சிட்டு இப்போ உங்களை யாரு இதெல்லாம் சொல்ல சொல்லி கேட்டா, அதான் இவ்வளவு நடந்தும் உங்களுக்கு இதில் ஏதும் பாதகம் வரலையே, பேசாம போங்க,” என்று அதற்கு திவ்யா கோபப்படவும்,

“எனக்கு பாதகம் நடந்தா எல்லோருக்கும் சந்தோஷமா இருக்கும் அப்படித்தானே, அதான் இப்பவே உங்க அண்ணன் என்னிடம் பேசறதை சுத்தமா நிறுத்திட்டாரு, இன்னும் வேற என்ன எதிர்பார்க்கறீங்க?” என்று தீபஞ்சனாவும் கோபமாக கேட்டுவிட்டாள்.

“என்ன சொல்ல வரீங்க, நான்தான் இப்போ உங்க வாழ்க்கையில் பிரச்சனையா இருக்கேன்னு சொல்றீங்களா? என்னை காரணமா வச்சு தான் அண்ணன் உங்களோட பேசலையா? எனக்கு நடந்ததுக்கு நான் வேதனைப்படவோ அழவோ கூடாதா? அதுக்கு கூட எனக்கு இந்த வீட்டில் உரிமை இல்லையா?” என்று திவ்யாவும் கோபமாக கேட்டதற்கு,

“இது உன்னோட வீடு, இங்க நீ எது செய்யவும் உரிமை இருக்கு, அதுக்கான உரிமை இல்லைன்னு என்னால சொல்ல முடியுமா?” என்று அதற்கு தீபஞ்சனாவும் பதில் கூற,

“என்ன நீங்க சொல்றதே குதர்க்கமா இருக்கு, என்ன இருந்தாலும் இது உனக்கு சொந்தம் கிடையாது. இன்னொரு வீட்டுக்கு போயிருக்க வேண்டியவ, போகாம இங்க இருக்க, உனக்கு என்ன இங்க உரிமை இருக்குன்னு சொல்லாம சொல்றீங்களா?” என்று கேட்டாள் திவ்யா.

“என்ன பேசற நீ, அப்படி என்னைக்குமே நான் நினைச்சதில்லை. நான் இருக்க உண்மையை தானே சொன்னேன். நீ இப்போ எந்த சூழ்நிலையில் இருக்கன்னு என்னால புரிஞ்சிக்க முடியாதா? எல்லாத்தையும் குதர்க்கமா எடுத்துக்கறதும், பேசறதும் நீதான் திவ்யா,” என்று தீபஞ்சனாவும் பதில் பேச,

அந்தநேரம் அங்கே வந்த தமயந்தியும் அவரின் தங்கையும், “என்னம்மா திவி?” என்று மகளைப் பார்த்து கேட்டப்படி வர,

“அம்மா, என் நிலையை நினைச்சு இங்க எனக்கு வேதனைப்படவோ அழவோ கூட உரிமை இல்லையா? நான் இங்க இருந்துக்கிட்டு எல்லோருக்கோம் கஷ்டத்தை கொடுக்கிறேனா ம்மா,” என்று அன்னையை பார்த்ததும் திவ்யா அழுதாள்.

“என்ன அப்படின்னு இவ சொன்னாளா?” என்று அதற்கு தமயந்தி தீபஞ்சனாவை பார்த்தப்படி கேட்க,

“இவளை இங்க விட்டு வச்சிருக்கறதே பெரிய விஷயம், இதில் இவ உன்னை பேசுவாளா?” என்று தமயந்தியின் தங்கை கேட்டார்.

“இங்க என்ன நடந்துச்சுன்னே தெரியாம ஏன் இப்படி பேசறீங்க, ஏன் இங்க எதை சொல்லவும் எனக்கு உரிமை இல்லையா? நான் இந்த வீட்டு மருமக தானே, இப்படியே எவ்வளவுநாள் இருக்கப் போறேன்னு தான் கேட்டேன். அதை திவ்யா தப்பா புரிஞ்சிக்கிட்டு பேசினா, நீங்களும் அதை உண்மைன்னு நினைச்சுப் பேசறீங்க,” என்று கேட்கவும்,

“அப்படியே என் பொண்ணு மேல அக்கறை தான், அவ வாழ்க்கை இப்படியானதுக்கு நீதான் காரணமே, இதில் அவ முன்னாடி வந்து பேசி ஏன் அவளை இன்னும் வேதனைப்படுத்தற,” என்று கேட்டார் தமயந்தி.

“விஷயம் தெரிஞ்சதுமே இவளை வீட்டை விட்டு துரத்தாம விட்டது இவளுக்கு திமிறு கூடிப் போச்சுப் போல,” என்று தமயந்தியின் சகோதரி பேசவும்,

“நீங்க யாருங்க, என்னை வீட்டை விட்டு அனுப்பணும்னு சொல்லிட்டு இருக்கீங்க, நான் ஏன் போகணும்?” என்றாள் தீபஞ்சனா.

பேச்சு சத்தம் கேட்டு தினகரனும் திகழும் அங்கு வந்தவர்கள், “என்ன இங்க சத்தம்?” என்று கேட்க,

“நம்ம திவ்யா இவளுக்கு தொல்லையா இருக்காளாம், இவ சொல்லியிருக்கா, யாருங்க இவளுக்கு இப்படி பேச தைரியத்தைக் கொடுத்தது.” என்று தமயந்தி கூற,

“இவ்வளவு நடந்தும் உன்னை இங்க விட்டு வச்சதுக்கு இதுவும் பேசுவ, இதுக்கு மேலேயும் பேசுவ, அவளை இவ்வளவு நாள் கஷ்டப்படுத்தினது பத்தாதுன்னு இன்னும் கஷ்டப்படுத்துவியா?” என்று தினகரன் கேட்டார்.

“அவ வருத்தத்தில் இருந்தா உங்களுக்கு என்ன வந்துச்சாம், அவளை போய் எதுக்கு சீண்டறீங்க,” என்று திகழும் கேட்கவே,

“என்ன நடந்துச்சுன்னே தெரியாம என்னமோ தப்பு என் பக்கம் என்பதுபோல பேசறீங்க, ஒரு அக்கறையில் தான் அவளிடம் பேசினேன்.” என்று தீபஞ்சனா கூற,

“அக்கறையாம் அக்கறை, உன் அக்கறையால அவ பட்டது எல்லாம் போதும், இதுக்கும் மேல அக்கறை காட்றேன்னு இன்னும் அவளை என்ன கஷ்டப்படுத்த இருக்க,” என்று தமயந்தி கூற,

“இந்த வீட்டில் இதுக்கு மேலேயும் நீ இருக்கணும்னா எந்த பிரச்சனையுமே செய்யாம இருந்துக்க, அதுதான் உனக்கு நல்லது.” என்றார் தினகரன்.

அந்த பேச்சில் தீபஞ்சனாவின் தன்மானம் தலை தூக்க, “அதை நீங்க சொல்லாதீங்க, என் புருஷன் வந்து சொல்லட்டும், நான் இந்த வீட்டில் இருக்கணுமா? வேண்டாமான்னு சொல்லும் உரிமை அவருக்கு தான் இருக்கு,” என்று அவள் கூறவும்,

“அவன் இடம் கொடுத்ததில் தானே நீ இவ்வளவு ஆட்ற,” என்றார் தமயந்தி,

“திரு வந்ததுக்குப் பிறகு இதுக்கு ஒரு முடிவு கட்டுங்க க்கா, அப்போ தான் இவ திமிறு குறையும்,” என்று தமயந்தியின் தங்கையும் கூற, அந்தநேரம் திவ்யாவின் அலைபேசி இசைத்தது.

இந்த நேரத்தில் தினமும் தங்கைக்கு அழைத்து ஆறுதலாக பேசிவிட்டு அப்படியே அன்னை மற்றும் மகனிடம் பேசுவது தான் திருவின் வழக்கம். அதேபோல் இன்றும் அழைக்க,

திவ்யாவோ அந்த அழைப்பை ஏற்று ஸ்பீக்கரில் போட்டவள், “அண்ணா, நான் இங்க இருந்து உங்களுக்கெல்லாம் தொல்லயா இருக்கேனா?” என்று எடுத்ததுமே அழுதபடி கேட்க,

திருவிற்கோ ஒன்றும் புரியவில்லை. தங்கை அழுவது கஷ்டமாகிவிட, “என்ன திவிம்மா, நீ நம்ம வீட்டு இளவரசி டா, யாரு உன்னை அப்படி நினைப்பா சொல்லு,” என்று கேட்க,

“இங்க சிலர் அப்படி நினைக்கிறாங்களே,” என்று திவ்யா அழவும்,

“யார் அப்படி சொன்னது? உன்னோட அன்ணியா?” என்று அவன் கேட்க, அதிலேயே தீபஞ்சனா பாதி உடைந்துவிட்டாள்.

ஏதோ சாதாரண குடும்ப பிரச்சனை, திலீபன் மீதுள்ள கோபத்தில் திவ்யா ஏதாவது பேச போய் தீபஞ்சனா பதிலுக்கு பேசிவிட்டாள் என்று தான் அவன் நினைத்தான்.

எப்போதும் பொறுமையாக இருக்கும் தீபாவிற்கு என்ன ஆனது? திவ்யாவின் நிலை தெரிந்தும் அவளிடம் ஏன் இப்படி நடந்து கொள்கிறாள் என்று மனைவியின் மீது கோபம் உண்டாக, தங்கையின் நிலை குறித்து அவளை சமாதானப்படுத்துவது இப்போது அவனுக்கு முக்கியமாக பட, போன் ஸ்பீக்கரில் போட்டிருப்பதோ, மனைவி அதை கேட்டுக் கொண்டிருப்பதோ தெரியாமல்,

“நான் உனக்கு முக்கியமா? இல்லை உன் அண்ணியா? அவ சொல்லிட்டான்னு நீ இப்படி நினைச்சுப்பியா?” என்று அவன் தங்கையிடம் கேட்க,

“இவ்வளவு நடந்தும் உனக்கு அவங்க முக்கியமா போனதால தானே, அவங்க இன்னும் இங்க இருக்காங்க,” என்று திவ்யா பதிலுக்கு கேட்டாள்.

“அப்படி இல்லம்மா, புகழை யோசிச்சுப் பாரு, அம்மா ஒருபக்கம் அப்பா ஒருபக்கம்னு இருந்தா அது அவன் எதிர்காலத்திற்கு நல்லதா சொல்லு, அவனுக்காக தான் நான் பார்க்கிறேன். அதை புரிஞ்சுக்கோ, அவ என்னோட மனைவியா மட்டும் இருந்திருந்தா கண்டிப்பா அவள் செய்த தப்புக்கு தண்டனை கொடுத்திருப்பேன்.” என்ற அவனது பேச்சைக் கேட்டு தீபஞ்சனா முற்றிலும் உடைந்து போனாள்.

முன்பே அவளிடமும் அதையே தான் கூறினான். அது அவளுக்கு வேதனை அளித்தாலும், அது கோபத்தில் சொன்னது என்று மனதை தேற்றிக் கொண்டாள். ஆனால் இன்று அனைவரின் முன்னிலையிலும் அதையே கூறி அவளை அனைவரின் முன்னும் விட்டுக் கொடுத்துவிட்டான். இதற்கு மேலும் அவளால் இந்த வீட்டில் எப்படி இருக்க முடியும்? என்று அவள் மனம் தீவிரமாக நினைக்க ஆரம்பித்துவிட்டது.

அது தெரியாமல், “இங்கப்பாரு தேவையில்லாம ஏதாவது யோசிச்சு வருத்தப்படாத, உன்னை நாங்க எப்போதும் விட்றமாட்டோம், இதோட உன் வாழ்க்கை முடிஞ்சிடல, இப்போ எனக்கு வேலை இருக்கு, முடிச்சிட்டு வந்து பேசறேன்.” என்று சொல்லி அலைபேசி திரு அழைப்பை அணைக்க,

அதுவரை அமைதியாக இருந்த தமயந்தியோ, “கேட்டீயா என் மகன் பேசினதை, நீங்க இருக்கறதுக்கு காரணமே உன் பிள்ளை தான், அதுக்காக தான் இங்க உன்னை விட்டு வச்சிருக்கான். அப்படி மட்டும் இல்லன்னா உன் அண்ணனை துரத்தினப்பவே உன்னை துரத்தி விட்ருப்பான். இது தெரியாம என் புருஷன் சொல்லட்டும்னு உரிமையை நிலைநாட்றீயா?” என்று பேசவும்,

“இப்போ என்ன நான் இந்த வீட்டை விட்டுப் போகணும், அதானே உங்களுக்கெல்லாம் வேணும், நான் போயிட்றேன் போதுமா?” என்று தீபஞ்சனா கூறினாள்.

அதுவரை அமைதியாக வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்த திகழோ, பிரச்சனை தீவிரமாகி கொண்டிருப்பதை உணர்ந்து, “அண்ணி, இப்போ உங்களை யாரும் வீட்டை விட்டு போகச் சொல்லல, எதுவா இருந்தாலும் அண்ணா வந்தா பேசிக்கலாம், நீங்க உங்க ரூம்க்கு போங்க,” என்று கூற,

“போகறதுன்னா போகட்டும் டா, இவளை பார்க்கும்போதெல்லாம் என் பொண்ணு வாழ்க்கையை தொலைச்சிட்டு நிக்கறா, அதுக்கு காரணமானவ இங்க உரிமையா வலம் வந்துட்டு இருக்காளேன்னு பார்த்து பார்த்து என் வயிறு எரியுது.” என்று தமயந்தி கூறினார்.

“அம்மா, அண்ணன் சொன்னதை கேட்டீங்க தானே, எதுவா இருந்தாலும் அவன் வந்ததும் பேசிக்கலாம் ம்மா,” என்ற திகழ்,

“அப்பா, எதுக்கு ப்பா அமைதியா இருக்கீங்க, அம்மாக்கு எடுத்து சொல்லுங்க,” என்று தந்தையிடம் கூற,

“நாமளா வீட்டை விட்டுப் போக சொல்லலையே, உன் அம்மா சொன்னது தான் டா எனக்கும், போறதுன்னா போகட்டும்,” என்றார் தினகரன்.

“கழுத்தைப் பிடிச்சு தள்ளி வெளியே போன்னு தான் சொல்லல, மத்தப்படி எல்லோர் மனசிலும் என்ன இருக்குன்னு நல்லா புரிஞ்சுது, இனி நானும் என் பிள்ளையும் ஒரு நிமிஷம் கூட இங்க இருக்க மாட்டோம்,” என்று தீபஞ்சனா கூற,

“போறதா இருந்தா நீ மட்டும் போ. இவன் இந்த வீட்டு வாரிசு, இவனை எங்க கூட்டிட்டுப் போற, அப்பாக்கு பிள்ளை மேல இருக்க பாசத்தை நல்லா தெரிஞ்சு வச்சிக்கிட்டு, பிள்ளையை கூட்டிட்டுப் போனா, பின்னாடியே உன் புருஷன் வந்து பிள்ளையை காரணமா வச்சு உன்னை கூட்டிக்கிட்டு வந்துடுவான் என்பது தானே உன் எண்ணம். அதுகூட எங்களுக்குப் புரியாதா?” என்று தமயந்தியின் தங்கை கூறினார்.

“என் பிள்ளையை விட்டுட்டுப் போக மாட்டேன். கொஞ்சநேரம் அவனை விட்டுட்டு வேலை பார்க்க போனதுக்கே கிணத்துக்கிட்ட போய் நிக்கறான். அதை கேட்கப் போய் தான் இத்தனையும், இதில் அவனை விட்டு என்னால போக முடியாது. இங்கப்பாருங்க இவ்வளவும் நடந்தப்பிறகும் எனக்கும் கொஞ்சம் தன்மானம் இருக்கு, இனி இந்த வீட்டு வாசப்படியை நான் மிதிக்க மாட்டேன். நான் செய்த தப்புக்கு தண்டனை கொடுக்க நினைச்சா என்னை வீட்டை விட்டு அனுப்பறதோட நிறுத்திக்கோங்க, பிள்ளையை என்னிடமிருந்து பிரிக்காதீங்க,” என்று தீபஞ்சனா கூற,

“நீ சொல்லலாம், ஆனா திரு அப்படி நினைக்க மாட்டானே, எப்படியும் பிள்ளைக்காக வருவான்.” என்று அவர் கூற,

“என் தங்கச்சி சொல்றது உண்மை தான், இவன் எங்க வீட்டு வாரிசு. திரு வந்ததும் பஞ்சாயத்தைக் கூட்டி உன்னை விலக்கி வச்சிட்டு அப்போ இந்த குழந்தைக்கு ஒரு முடிவு செய்யலாம், இப்போ பிள்ளையை உன்னிடம் தர முடியாது.” என்று தமயந்தியும் கூறியவர், பிள்ளையை அவள் கையில் இருந்து வாங்கிக் கொண்டார். அதில் பிள்ளையோ அழுதான்.

“ஏன் இப்படி செய்றீங்க, அவன் இன்னும் பால் கூட மறக்கல, அவனை அனுப்ப மாட்டேன்னு சொல்றது அநியாயம்.” என்று தீபஞ்சனா கூற,

“அதான் ஒரு வயசு ஆகிடுச்சுல்ல, அதெல்லாம் ரெண்டு நாளில் மறந்துடுவான். நாங்க அநியாயம் செய்றோமா? பிடிக்காதவனுக்கு எங்க பொண்ணை கட்டி வச்சு, அவ வாழ்க்கையை நாசமாக்கின உங்களைவிடவா நாங்க அநியாயம் செய்துட்டோம், அவ வாழ்க்கை மட்டும் நல்லப்படியா இருந்திருந்தா இந்நேரம் அவளுக்கும் ஒரு குழந்தை இருந்திருக்கும், அவ வாழ்க்கையை பாழாக்கிட்டு நீ மட்டும் புருஷன், பிள்ளைன்னு வாழ நினைக்கறீயே, அது உனக்கு நிலைக்குமா?” என்று தமயந்தியின் தங்கை சாபம் விடுவதுபோல் பேச, தீபஞ்சனா அதில் முற்றிலும் நிலைகுலைந்து போனாள்.

அவளின் கணவனும் பிள்ளையும் அவர்களின் மகனும் பேரனும் தானே, அது நிலைக்குமா? என்றால் என்ன அர்த்தம், அவர் அப்படி சொன்னதற்கு தினகரனும் தமயந்தியும் அமைதியாக இருந்தார்கள்.

திகழ்பரதன் தான், “சித்தி என்ன பேச்சு இது?” என்று பதறினான். ஆனால் அதை கேட்க கூட தீபஞ்சனா அங்கு நிற்கவில்லை. அவளின் உடமைகளை கூட எடுத்துப் போகவில்லை. அந்த பேச்சுக்குப் பின் பிள்ளையையும் வாங்க தோன்றாமல் அப்படியே வீட்டிலிருந்து வெளியேறினாள்.

புதிர் விலகும்…
 
புதிராகும் பிரியங்கள்...!
எழுத்தாளர்: சித்ரா வெங்கடேசன்
(அத்தியாயம் - 13)


அச்சோ..! இப்படி உசுப்பேத்தி, உசுப்பேத்தியே எல்லாரும் தீபஞ்சனாவை வீட்டை விட்டு போக வைச்சிட்டாங்களே...?
அதுவும் குழந்தையை பிடுங்கிட்டு..?


இதுக்கு தீபஞ்சனா, திவ்யா கிட்ட வாய் கொடுக்காமலே இருந்திருக்கலாம் போல.


😀😀😀
CRVS (or) CRVS 2797
 
திலீபன் பண்ணினதை அவ்வளவு சீக்கிரம் யாராலும் மறக்க முடியாது கோபம் எல்லாம் அவன் தங்கச்சி மேல திரும்புறது யதார்த்தம் தான்... அப்படி இருக்கப்போ தீபா கொஞ்சம் பொறுமையா இருந்திருக்கலாம்.....
திவ்யாகிட்ட பேசியிருக்கவே வேண்டாம்..... எல்லார் மனசுக்குள்ளயும் புகைஞ்சுகிட்டு இருந்தது சண்டையா வெடிச்சுடுச்சு.....
இதுல பாவம் குழந்தையும் பாதிக்கப் பட்டுட்டான்..... 😔😔😔
 
அடப்பாவி, இந்த சித்தி காரி பிரச்சனையை பெருசாக்கி பிரிச்சி விட்டுடுச்சே
 

Latest threads

Back
Top Bottom