• Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • எழிலன்பு நாவல்கள் தளத்திற்கு செல்ல 👉 ezhilanbunovels.com/nandhavanam / நந்தவனம் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் nandhavanamnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MNP 29

Nithya Mariappan

Writer✍️
அத்தியாயம் 29

“எப்பேர்ப்பட்ட கல்லுளிமங்கனுக்கும் ஒரு பலவீனம் இருக்கும்... எதுக்கும் கலங்காத மனுசன் கூட சிலரோட நடவடிக்கையால கலங்கி அடுத்து என்ன செய்யுறதுனு புரியாம நிப்பான்... அந்த மாதிரி சிச்சுவேசன் எல்லாருக்கும் வரும்... அந்த மாதிரி சிச்சுவேசன்ல என்னை நிக்கவச்சவ நித்திலா... நிறைய நம்பிக்கை குடுத்து மலையுச்சிக்கு கூட்டிட்டுப்போய் மலையோட அழகை ரசிக்கிற நேரத்துல அங்க இருந்து தள்ளிவிட்டா எப்பிடி இருக்கும் உங்க மனநிலை? என்னை விட்டு அவ விலகுனப்ப என் மனநிலையும் அப்பிடி தான் இருந்துச்சு... மலையில இருந்து கீழ விழுந்தா கூட ஒரே ஒரு தடவை தான் சாவு... ஆனா எனக்குப் பொய்யான நம்பிக்கை குடுத்தவ கூட ரொம்ப தூரம் போறதுக்காக நான் கட்டி வச்சிருந்த கற்பனை கோட்டையில இருந்து தினந்தினம் நான் விழுந்து சாகுறேன்”


- கிரிஷ்

சாகர் நிவாஸ்...


நிஹாரிகா மொபைலில் தன் அன்னையிடம் மாமனார் எடுத்திருக்கும் தீர்மானத்தைப் பற்றி சந்தீப் அறியாதவண்ணம் மறைவாக நின்று பேசிக்கொண்டிருந்தாள்.

“இப்பிடி ஆகும்னு நான் கனவுல கூட நினைக்கலம்மா... அமெரிக்கா போயிட்டு வந்ததும் எங்க நிலமை ஓஹோனு ஆகிடும்னு நினைச்சா இங்க முதலுக்கே மோசமாகிடுச்சு... இதுல நித்திலா வேற வந்து பஞ்ச் டயலாக் பேசி என்னைக் கிண்டல் பண்ணுறா”

மறுமுனையில் பேசிய சைலேந்திரிக்கு இனி மகளின் வாழ்க்கை என்னவாகுமோ என்ற கவலை.

நடைபாதையோரங்களில் வீடுகளின்றி தற்காலிகமாக டெண்ட் அமைத்து வாழும் நாடோடிகளுக்குக் கூட அவ்வளவு கவலை இருக்காது, தமிழகத்தின் பணக்காரர்களில் மூன்றாமிடத்தில் உள்ளவரது இளையமகன் மருமகளைப் பற்றி அநியாயத்திற்குக் கவலைப்பட்டார் அந்த பெண்மணி.

என்னமோ ஒரு பைசா இல்லாமல் மருமகன் நடுத்தெருவில் நிற்கப்போவது போல இருந்தது அவர் விசாரித்த தொனி.

“நீ வருத்தப்படாத நிஹி... அந்த நித்திலா கிட்ட வாய் குடுக்காத... அவ கொஞ்சம் கூட மாறலடி... இந்த வயசுல என்னையும் உங்கப்பாவையும் பிரிக்க பாக்குறாடி அவ” என குமுறினார்.

நிஹாரிகா வாயடைத்துப்போனாள். சைலேந்திரிக்கு ஜனார்தனன் மீதிருக்கும் அன்பின் ஆழத்தை அறிந்தவள் அல்லவா!

“அவளை...” என பற்களைக் கடித்தாள் நிஹாரிகா.

“மறுபடியும் அவளைத் துரத்துனா தான் சரியா வருவா... அவ இருக்கிற வரைக்கும் எனக்கு இந்த வீட்டுல மரியாதை கிடைக்காது... அவ புருசனை என் மாமனார் தலை மேல தூக்கி வச்சு ஆடுவார்... என் சந்தீப்பை ஒப்புக்குச் சப்பாணியா ஆக்கிடுவார்”

மகளது பேச்சில் துணுக்குற்றார் சைலேந்திரி.

“அவளைத் துரத்துறேன்னு எதையும் செஞ்சு வைக்காத நிஹி... நாலு வருசத்துக்கு முன்னாடி அவ ஓடிப்போனதுக்கு நம்ம தான் காரணம்னு உங்கப்பா கரிச்சுக் கொட்டுறார்... நம்ம ரெண்டு பேரும் ஒன்னுமே செய்யாம அந்த மனுசனோட கோவத்துக்கு ஆளாகிட்டோம்டி... நீ வேற அசட்டுத்தனமா எதையும் செஞ்சு வைக்காத”

பதறினார் அவர். ஜனார்தனனின் வெறுப்பும் ஒதுக்கமும் அவரைப் பதற வைத்தது.

ஆனால் காரியக்காரியான நிஹாரிகா குரூரமாகச் சிரித்தாள்.

“உனக்கு என்னைப் பத்தி தெரியலம்மா”

“எல்லாம் தெரியும்டி... ஓடிப்போனவளுக்குக் குடுக்குற மரியாதைய ஏன் உனக்குக் குடுக்க மாட்றாங்கனு கேட்டல்ல? அவ ஓடிப்போனாலும் புள்ளையோட திரும்ப வந்திருக்கா... நீயும் ஒரு குழந்தைய பெத்துக்க நிஹி... தானா அந்தக் குடும்பம் மொத்தமும் உன் பக்கம் திரும்பும்”

“ம்மா! அவ யாருக்கு பிள்ளைய பெத்தாங்கிறதே சந்தேகமா இருக்கு... இதுல நீ வேற அவளை உசத்தியா பேசாத”

“நிஹி..”

அதட்டலாக ஒலித்தது சைலேந்திரியின் குரல்.

“எனக்கு அவளைப் பிடிக்காது தான்... அதுக்காக அவளோட நடத்தைய தப்பா பேசாதடி... உங்கப்பா ரத்தம் தான் அவ உடம்புல ஓடுது... கனவுல கூட அவ ஒழுக்கம் தவறமாட்டா... இன்னொரு தடவை இந்த மாதிரி வார்த்தை உன் வாய்ல வரக்கூடாது”

அன்னையின் கண்டிப்பு நிஹாரிகாவுக்கு எரிச்சலைக் கொடுத்தது. நித்திலாவைப் பற்றி பேசினால் இவருக்கு என்ன வந்தது? மகளுக்குப் பிடிக்காதவள் நல்லவளாகவே இருந்தாலும் தன்னோடு சேர்ந்து அவளைக் கரித்துக்கொட்ட வேண்டியது தானே நல்ல அன்னையின் கடமை!

மனதில் தோன்றிய எண்ணங்களை அன்னையிடம் உரைக்கவில்லை. ஆனால் பேசிய வார்த்தைகளை மறக்காமல் மனதில் சேர்த்து வைத்தாள். கட்டாயம் இதே வார்த்தைகளை வைத்து நித்திலாவை அவமானப்படுத்தவேண்டுமென்ற எண்ணம் அவளுக்குள் வேர்விட ஆரம்பித்தது.

“என்னாச்சு நிஹி?”

“ஒன்னுமில்லம்மா... நான் நாளைக்கு வீட்டுக்கு வர்றேன்... மீதிக்கதைய அங்க பேசிக்கலாம்... என்னனு தெரியல, இங்க கார்ட்ஸ் வச்சு செக்யூரிட்டிய டைட் பண்ணிருக்காங்க”

“சரிடி நிஹி... நான் சொன்னதை மனசுல வச்சுக்க... சீக்கிரம் குழந்தை பெத்துக்க ரெடியாகு”

“சரிம்மா... நாளைக்குப் பாக்கலாம்”

அழைப்பைத் துண்டித்தவள் அறைக்குள் வந்த போது ஓய்ந்து போய் அமர்ந்திருந்த சந்தீப் அவளது பார்வையில் விழுந்ததும் ஓடோடி வந்து அவனைத் தோளோடு அணைத்துக்கொண்டாள்.

“டோண்ட் வொரி சந்தீப்... என்ன பிரச்சனை வந்தாலும் நம்ம ஃபேஸ் பண்ணிக்கலாம்”

“தேங்க்ஸ் நிஹி... நீ கூட இருக்கிறப்ப நான் ரொம்ப ஸ்ட்ராங்கா ஃபீல் பண்ணுறேன்”

மனைவியின் கையைப் பற்றி சந்தீப் முத்தமிட்டான். நிஹாரிகாவும் அவனது நெற்றியில் இதழ் பதித்தாள்.

“நம்மளும் குழந்தை பெத்துக்கணும் சந்தீப்... நிறைய பெத்துக்கணும்”

சந்தீப் ஆசையாய் சொன்னவளின் நெற்றியில் முட்டினான்.

“இப்ப தானே மெடிசின்ஸ் எடுத்துட்டிருக்க... சீக்கிரமா பெத்துக்கலாம்”

நிஹாரிகாவுக்குக் கருமுட்டை முதிர்வதில் பிரச்சனை உள்ளதாக அவளைப் பரிசோதித்த அமெரிக்க மருத்துவ நிபுணர் கூறியிருந்தார்.

நல்லவேளையாக நிஹாரிகாவுக்கு பி.சி.ஓ.எஸ் போன்ற பிரச்சனைகள் இல்லை. அவர் எழுதி கொடுத்த மருந்துகளை சரியாக உட்கொண்டாலே தீர்ந்துவிடக்கூடிய பிரச்சனை தான் என்றார்.

அதனால் தான் இருவரும் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை. இருப்பினும் நித்திலாவையும் அம்ரித்தையும் பார்த்த கணத்தில் நிஹாரிகாவின் மனம் ஆவலாய் பறந்ததென்னவோ உண்மை.

அதை வெளிப்படையாக காட்டிக்கொள்ளாமல் சமாளித்தவள் மருந்து மாத்திரைகள் மீது நம்பிக்கை வைத்து நிம்மதியானாள்.

மறுநாள் சாகர் குழுமத்தின் தலைமை அலுவலகத்தில் முக்கிய பங்குதாரர்கள் மற்றும் இயக்குனர் போர்ட் உறுப்பினர்களை வைத்து கூட்டம் ஒன்று நடைபெற்றது.

அதில் ஆனந்த்சாகரின் தீர்மானத்தின்படி சாகர் டெலிகம்யூனிகேசன் நிறுவனத்தையும், சாகர் மீடியா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனத்தையும் சாகர் குழுமத்திலிருந்துப் பிரித்து தனி நிறுவனங்களாக்கும் தீர்மானம் எடுக்கப்பட்டது.

இனி சாகர் குழுமத்தின் நிறுவனங்களோடு அவற்றிற்கு எந்தச் சம்பந்தமுமில்லை என முன்மொழியப்பட்டது.

புதிய இயக்குனர் போர்ட் உறுப்பினராக ஸ்ரீநயனியை அறிமுகப்படுத்தும் படலமும் நடந்தேறியது.

கூட்டம் முடியும் வரை சந்தீப் மூச்சு கூட விடவில்லை.

முடிவடைந்ததும் ஆனந்த்சாகர் இளைய மைந்தனிடம் கை குலுக்கினார்.

“சீக்கிரமே நீ சேர்மன் ஆகிடுவ... இப்ப சந்தோசமா?”

தந்தையின் வாழ்த்தைக் கேட்ட பின்னரும் சந்தீப்பின் கண்களில் உயிர்ப்பில்லை. அதை கண்டுகொண்டான் கிருஷ்ணராஜசாகர்.

“இனியாச்சும் உன் தொழில்ல நிஹாரிகாவோட தலையீடு இல்லாம பாத்துக்க”

தமையனுக்கு நிஹாரிகாவைப் பிடிக்காதென்பது சந்தீப்புக்குத் தெரியும். தந்தையுமா அவளை வெறுத்துவிட்டார் என்ற திகைப்பு அவனுக்குள்.

அவரிடம் கலந்தாலோசிக்காமல் கையெழுத்திட்ட ஒரு ஒப்பந்தத்துக்காக இவ்வளவு பெரிய முடிவை எடுக்க வேண்டுமா என்ன?

கனத்த மனதுடன் வீட்டுக்கு வந்தவனின் கண்களில் நர்மதா அம்ரித்துடன் பேசிக்கொண்டிருக்கும் காட்சி பட்டது.

அவர்களை நெருங்கினான் சந்தீப். இளைய மகனைக் கண்டதும் முகம் மலர்ந்த நர்மதா அலுவலகத்தில் கூட்டம் நல்லபடியாக முடிந்ததா என விசாரித்தார்.

“உங்களுக்கு இதுல வருத்தம் எதுவும் இல்லையாம்மா?”

மனம் தாங்காமல் கேட்டான் சந்தீப். நர்மதா என்ன பதில் கூறுவார்? அவருக்கு இரு மைந்தன்களும் சமம் தானே. அலுவல்ரீதியாக நடந்த பிரச்சனைகளுக்காக பெற்ற பிள்ளையை அவரால் ஒதுக்கிவைத்துவிட முடியுமா என்ன?

“வருத்தம் தான் சந்தீப்... ஆனா உன் அப்பா காரணமில்லாம எதையும் செய்யமாட்டார்னு நான் நம்புறேன்... நீயும் நிஹாரிகாவும் தனியா கான்ட்ராக்ட் சைன் பண்ணுறளவுக்கு வளர்ந்துட்டிங்க... இனிமே அவரோட நிழல்ல நீ இருக்கவேண்டாம்னு நினைச்சிருப்பார்”

அவர்கள் இருவரும் பேசுவதை முட்டைக்கண்களை உருட்டியபடி பார்த்துக்கொண்டிருந்தான் அம்ரித். சந்தீப் யாரென அவனுக்கு யாரும் அறிமுகப்படுத்தவில்லை இன்னும்.

நர்மதா அந்த வேலையைச் செய்தார்.

“என்னடா பாக்குற? உன்னோட சித்தப்பா தான்”

“சித்தப்பானா?”

எப்போதும் போல தலை சாய்த்து கேள்வி கேட்டான் அம்ரித். அவன் தலை சாய்த்து கேட்ட விதத்தில் அலுவலகத்தில் நடந்த அனர்த்தம் எல்லாம் மறந்துபோய்விடும் போல என்றெண்ணினான் சந்தீப்.

கண்ட நொடி முதல் காண்பவரின் கவனத்தைக் கவர்ந்து வேறெதையும் சிந்திக்கவிடாத குழந்தைகள் மெய்யாகவே மந்திரவாதிகள் தாம்!

அம்ரித்தின் உயரத்துக்கு முழங்காலிட்டு நின்றான் சந்தீப்.

அவனது குண்டு கன்னங்களை மெல்ல கிள்ளியவன் “சித்தப்பானா அப்பாவோட தம்பி... உங்கப்பாக்கு நான் தம்பில்ல, சோ நான் உனக்குச் சித்தப்பா” என்றான்.

“அப்ப உங்க நேம் சித்தப்பாவா?”

அடுத்த கேள்வி. அதை கேட்ட வெகுளித்தனமான முகத்தில் பதிலைத் தெரிந்துகொள்வதில் எத்துணை ஆர்வம்!

சந்தீப் சிரித்தபடி அவனைத் தூக்கிக்கொண்டான்.

“என் நேம் சந்தீப்... சந்தீப்சாகர்... சித்தப்பாங்கிறது ரிலேசன்ஷிப்போட நேம்”

“அப்பிடியா? ஹான், என் நேம் அம்ரித்சாகர்”

தன் நெஞ்சின் மீது கைவைத்து பெருமிதமாக அறிமுகமாகிக்கொண்ட அண்ணன் மகனின் கன்னத்தில் ஆசையாக முத்தமிட்டான் சந்தீப்.

“குட் நேம்... யார் குட்டிக்கு இந்த நேம் வச்சாங்க?”

“நித்திம்மா”

அம்ரித் பெருமையாகச் சொல்லிக்கொண்டிருக்கும் போதே நித்திலா அங்கே வந்து சேர்ந்தாள்.

சந்தீப்பைக் கண்டதும் புன்னகைக்க முயன்றாள்.

“எப்பிடி இருக்கிங்க சந்தீப்?”

“ஃபைன் அண்ணி... நீங்க எப்பிடி இருக்கிங்க?”

“நாட் பேட்”

நாசூக்கான சிற்சில வார்த்தைகளுடன் உரையாடலை முடித்துக்கொண்டனர் இருவரும்.

உரையாடல் முடிந்த நேரத்தில் ஆனந்த்சாகர், கிருஷ்ணராஜசாகர், ஸ்ரீநயனி மூவரும் வீட்டுக்கு வந்து சேர்ந்தனர்.

சந்தீப் அம்ரித்தைத் தூக்கிக்கொண்டு நின்ற காட்சி அவர்களின் மனதை பிசைந்தது. நல்லவன் தான்! ஆனால் அவனது நற்குணத்தைச் சாதகமாகப் பயன்படுத்தும் மனைவியை அறிந்துகொள்ளும் அளவுக்குப் புத்தி இல்லையே!

அலுவலகத்தின் இறுக்கம் வீட்டிற்குள் வர அனுமதிக்காதவர் ஆனந்த்சாகர். அன்றைய தினம் இளையமகனுக்கு அளித்த அதிர்ச்சிக்குக் கைமாறாக இன்முகத்தோடு அவனிடம் பேசினார்.

“அம்ரு குட்டி உன்னையும் விட்டுவைக்கலையா? பாத்துடா, ரொம்ப பாசமா பழகுவான்... அப்புறம் என் கூட சேர்ந்து கேம் விளையாடா வானு நிப்பான்” என்றான் பேரனைப் பார்த்தபடி.

அம்ரித்தின் கண்கள் உடனே ஒளிர்ந்தது.

“ஐய்! அப்ப நீயும் விளையாட வருவியா சித்தப்பா?” என ஆசையாக அவன் கேட்க

“நீங்க வருவிங்களானு கேக்கணும் அம்ரு” என திருத்தினாள் நித்திலா.

“இருக்கட்டும் அண்ணி... இவன் வாயால சித்தப்பானு கூப்பிடுறதை கேக்கவே எவ்ளோ சந்தோசமா இருக்கு... இதுல மரியாதையெல்லாம் எதுக்கு?”

மைந்தனிடம் இளையசகோதரன் பேசுவதைக் கண்டு நெகிழத் துவங்கியது கிருஷ்ணராஜசாகரின் உள்ளம்.

அவன் அன்பாய் ஏதோ சொல்ல வரும் போது “என்ன பண்ணுறிங்க சந்தீப்?” என கிறீச்சிட்டது நிஹாரிகாவின் குரல்.

சைலேந்திரியைப் பார்த்துவிட்டுத் திரும்பி அப்போது தான் வீட்டுக்குள் நுழைந்தாள் அவள். முகமெங்கும் அசூயையின் சாயல். கண்களோ டன் கணக்கில் வெறுப்பை உமிழ்ந்தது.

விறுவிறுவென சந்தீப்பை நெருங்கியவள் “முதல்ல இவனை இறக்கிவிடுங்க... யாரைத் தூக்கணும்னு ஒரு தராதரம் இல்ல உங்களுக்கு?” என வெடித்தாள்.

அவளது வெறுப்பான குரலில் மொத்த குடும்பமும் அதிர கிருஷ்ணராஜசாகரோ சினத்தில் சிவக்க ஆரம்பித்தான்.

நிஹாரிகாவின் கோபப்பேச்சில் அம்ரித் மருளவும் நித்திலா அவனை வாங்கிக்கொள்ள சந்தீப்பை நெருங்கினாள்.

“அம்ருவ குடுங்க சந்தீப்”

அவனருகே வந்து கை நீட்டினாள் நித்திலா. அதில் நித்திலாவின் கரத்தில் சந்தீப்பின் கரம் பட்டுவிட உடனே அவளைப் பார்வையால் எரித்தாள் நிஹாரிகா.

“ஏய்! என் புருசன் கிட்ட தொட்டுப் பேசுற வேலை வச்சுக்காத”

அவள் சொன்ன அர்த்தத்தில் நித்திலா கலங்கிப்போனாள். சந்தீப்போ மனைவியை அதிர்ச்சியாய் நோக்கினான்.

“என்ன பேசுற நிஹி?” கண்டனமாய் குரல் எழுப்பினான் அவன்.

“உங்களுக்கு இவளைப் பத்தி தெரியாது சந்தீப்... இவ சரியான ஆள்மயக்கி... இவளோட புருசன் சரியில்லனு உங்களை வளைச்சுப்போட பாத்தவ....”

அவள் முடிக்கும் முன்னர் ஸ்ரீநயனியின் கரம் நிஹாரிகாவின் கன்னத்தில் பதிந்தது.

அறைந்த கரத்தை அருவருப்போடு உதறிக்கொண்டாள் அவள்.

அதிர்ச்சியோடு நின்ற நிஹாரிகாவை மேலும் கீழுமாகப் பார்த்தவள் “யார் ஆள்மயக்கி? இந்த வார்த்தைய உன்னைய நீயே கண்ணாடில பாக்குறப்ப சொல்லிக்க... என் அண்ணிய பத்தி பேச உனக்கு என்ன தகுதி இருக்கு?” என்று அதட்டினாள்.

ஆனந்த்சாகர் அதிர்ச்சியோடு நின்ற நர்மதாவிடம் அம்ரித்தை அங்கிருந்து அழைத்துச் செல்லும்படி பணித்தார்.

நர்மதா சென்றதும் தன் குடும்பத்தை ஒரு முறை ஊன்றி பார்த்தார். மூத்த மருமகள் அவமானத்தில் கூனிக் குறுகி நின்ற விதம் அவரது மனதை அசைத்தது. அவளுக்காக பரிந்து பேசிய மகளை எண்ணி பெருமிதம் கொண்டார்.

ஆனால் ஷூவிலிருந்து வேர் முளைத்து மண்ணில் ஊன்றியது போல நின்று கொண்டிருந்த கிருஷ்ணராஜசாகரைப் பார்க்கும்போது தான் ஆச்சரியமாக இருந்தது. கோபத்தை அடக்க அவன் சிரமப்படுவதை கண்டுகொண்டார் ஆனந்த்சாகர்.

அடுத்த நொடி மீண்டும் நிஹாரிகாவின் கிறீச்சிட்ட குரல் மீண்டும் கேட்டது.

“உன் அண்ணிய பத்தி உண்மைய சொன்னா உனக்கு வலிக்குதா? அவ ஆள்மயக்கி தான்... இந்தக் குடும்பத்து வாரிசுனு ஒரு பையனை கொண்டு வந்திருக்காளே அவன் உன் அண்ணனுக்குப் பிறந்தவனா இருக்க வாய்ப்பேயில்ல... இவங்க ரெண்டு பேரும் கல்யாணத்துக்கு அப்புறம் சேர்ந்து வாழவேயில்ல... ஒரே ஒரு நாள் மட்டும்... அப்புறம் எப்பிடி பிள்ளை? இவ யாரோ கள்ளக்காதலன் கூட ஓடிப்போய் வயித்தை நிரப்பி பிள்ளைய பெத்துக்கிட்டா... உன் அண்ணனும் கொஞ்சம் கூட யோசிக்காம அவனைத் தூக்கிட்டு வந்து...”

“சந்தீப்”

இடியாய் முழங்கினான் கிருஷ்ணராஜசாகர். இதுவரை கோபத்தில் அவனது குரல் உயர்ந்ததில்லை, அரிதான சில சந்தர்ப்பங்களைத் தவிர.

முகமெல்லாம் சிவக்க அவன் ரௌத்காரத்தோடு நின்ற கோலத்தில் நித்திலாவிற்கே வியர்த்தது என்றால் நிஹாரிகா எம்மாத்திரம்?

“உன் பொண்டாட்டிய இப்பவும் தட்டிக்கேக்க மாட்டியாடா?”

சந்தீப் தான் அவமானத்தில் தலை குனிந்திருந்தானே. எங்கிருந்து தமையனுக்குப் பதில் சொல்வான் அவன்!

கிருஷ்ணராஜசாகர் நித்திலாவின் அருகே வந்தவன் வெகு உரிமையுடன் அவளைத் தோளோடு அணைத்துக்கொண்டான்.

நிஹாரிகாவை வெறுப்போடு பார்த்தது அவனது விழிகள்.

“என் பொண்டாட்டியும் நானும் எப்பிடியெல்லாம் வாழ்ந்தோம்னு எனக்கு நல்லா ஞாபகம் இருக்கு... ஒரே ஒரு நாள்ல பிள்ளை வர்றது எப்பிடி சாத்தியம்னு கேக்குற உனக்கு உன் பாணியில பதில் சொல்ல எனக்கு ரொம்ப நேரம் ஆகாது... ஆனா நான் அதை செய்யமாட்டேன்... ஏன்னா நான் நாகரிகமானவன்... எங்களுக்குள்ள இருந்த கணவன் மனைவி பந்தத்தை பேசுபொருளாக்கி எதையும் நிரூபிக்கவேண்டிய அவசியம் எனக்கு இல்ல...

இன்னொரு விசயம், இதை எல்லாரும் கேட்டுக்கோங்க... என் பொண்டாட்டி ஒன்னும் ஓடிப்போகல... நாங்க நயனிக்காக மேரேஜ் பண்ணுனோம்... அவளுக்கு ஆபரேசன் முடிஞ்சதும் டிவோர்ஸ் பண்ணிக்கலாம்னு முடிவெடுத்தோம்... அந்த முடிவால தான் அவ இங்க இருந்து போனா... உன்னை மாதிரி இல்ல, நித்திலா சுயமரியாதை உள்ளவ... அதான் அம்ருவ காரணம் காட்டி இங்க வரல... நானே கண்டுபிடிச்சு கூப்பிட்டப்ப கூட வரமாட்டேன்னு சொன்னவ இவ... இதெல்லாம் ஏன் உன் கிட்ட சொல்லுறேன் தெரியுமா? இன்னொரு தடவை என் பொண்டாட்டிய பத்தி தப்பான வார்த்தை உன் வாய்ல வரக்கூடாதுனு ஞாபகப்படுத்துறதுக்காக தான்... தப்பி தவறி அவளை நீ ஹர்ட் பண்ணுனனு தெரிஞ்சுதுனா, சந்தீப் விடோயர் ஆனாலும் பரவால்லனு என் லைசென்ஸ்ட் கன்னை யூஸ் பண்ண வேண்டியதிருக்கும்... ஜாக்கிரதை”

நித்திலாவின் மனம் அவனது வார்த்தைகளில் குளிர்ந்து போனது. அதில் பொய் இருந்தாலும் அவளின் மானத்தைக் காப்பாற்ற தானே பொய் கூறுகிறான். மனம் குளிர்ந்ததும் கண்கள் கண்ணீரை உகுக்க ஆரம்பித்தது.

நிஹாரிகா கிருஷ்ணராஜசாகர் விடுத்த எச்சரிக்கையில் தொண்டை உலர்ந்து நின்றாள்.

கிருஷ்ணராஜசாகர் இந்தளவுக்கு நித்திலாவுக்காக பேசுவான் என அவள் எதிர்பார்க்கவில்லை. கடந்த காலங்களில் அவள் பார்த்தவரைக்கும் நித்திலாவை ஒரு எல்லைக்கு அப்பால் விலக்கி நிறுத்திவிடுவானே! அவனா இப்படி பேசுகிறான் என்ற ஆச்சரியம்! கூடவே உரிமம் பெற்ற அவனது துப்பாக்கியை எண்ணி பயம்!

அவள் அருகே நின்ற சந்தீப் தலைகுனிந்தபடி நித்திலாவிடமும் கிருஷ்ணராஜசாகரிடமும் கரம் கூப்பினான்.

“என்னை மன்னிச்சிடுங்கண்ணி... நீயும் மன்னிச்சிடு கிரிஷ்... என்னால வேற எதுவும் செய்ய முடியல... நான் கையாலாகாதவனா நிக்குறேன்... ப்ளீஸ், என்னை மன்னிச்சிடுங்க”

அவனது பேச்சில் நித்திலா கண் கலங்கும் போதே ஆனந்த்சாகர் தனது சிம்மக்குரலில் சந்தீப்புக்கு அடுத்த அதிர்ச்சியை அளித்தார்.​
 
நயனி செம. சாகர் சூப்பர். சந்தீப் பாவம்.
 

Latest threads

Back
Top Bottom