Nithya Mariappan
Writer✍️
அத்தியாயம் 28
“ஓவர்-ரியாக்ட், எனக்குப் பிடிக்காத வார்த்தை... ஒருத்தர் அனுபவிக்கிற பிரச்சனையோட தீவிரத்தைப் புரிஞ்சிக்காம நம்மள்ல நிறைய பேர் பாதிக்கப்பட்டவங்களோட உணர்வுகளை ஓவர்-ரியாக்சன்னு ஒதுக்கித் தள்ளிடுறோம்... வெளிவர முடியாத பிரச்சனைக்குள்ள சிக்கி தவிக்கிறப்ப ஃபீலிங்சை மெச்சூரா ஹேண்டில் பண்ணுறதுக்குத் தோணாது... அந்த சிச்சுவேசன்ல அழணும்னு தோணுச்சுனா அழுவோம், சண்டை போடணும்னு தோணுச்சுனா சண்டை போடுவோம்... சாதாரணமான சூழல்ல நிதானமா நடந்துக்கிறவங்க எல்லாருமே பிரச்சனைனு வர்றப்ப உணர்ச்சிவசப்பட்டு கொந்தளிக்கத் தான் செய்யுவாங்க... நமக்கு அப்பிடி ஒரு பிரச்சனை வரல, அந்த சூழ்நிலைல நம்ம சிக்கித் தவிக்கலங்கிற ஒரே காரணத்துக்காக ஆல்ரெடி வருத்தப்படுறவங்களை ஏன் ஓவர்-ரியாக்ட் பண்ணுறனு கேட்டு இன்னும் வருத்தப்பட வைக்கிறது குரூரம்... கிட்டத்தட்ட காட்டுமிராண்டித்தனமும் கூட”
-நித்திலா
நித்திலா சொன்ன விசயத்தைக் கேட்ட பிறகு ஏனோ ஸ்ரீநயனியால் அமைதியாக இயங்க முடியவில்லை. தனது தமையனா இப்படி மோசமான வார்த்தையை உதிர்த்தவன் என்ற ஆற்றாமை அலையாய் எழுந்து அவளைச் சுருட்டிக்கொண்டது.
ஒரு பெண்ணின் உணர்வுகளை அலட்சியம் செய்வது எப்பேர்ப்பட்ட தவறு! அதைச் செய்துவிட்டு எதுவும் நடக்காதவனைப் போல எப்படி அண்ணனால் இருக்க முடிகிறது!
அவனுக்குக் காதல் மாதிரியான மெல்லுணர்வுகளில் நம்பிக்கை இல்லையென்றால் நித்திலாவை விட்டு விலகி நின்றிருக்கவேண்டும். ஒன்றாக குடும்பம் நடத்திவிட்டு ‘ஒன்-நைட் ஸ்டாண்ட்’ என்று அவமதிப்பது எவ்வளவு பெரிய கேவலம்?
அதை செய்தவன் அண்ணனே என்றாலும் அவன் அதற்காக வருந்தியே ஆகவேண்டும்.
ஏதோ தீர்மானித்தவளாக கிருஷ்ணராஜசாகரைத் தேடினாள் அவள்.
அவன் நூலகம் அமைந்திருக்கும் தளத்தில் இருப்பதாக நர்மதா கூறவும் அங்கே போய் நின்றாள்.
தீவிர யோசனையுடன் ஏதோ ஒரு புத்தகத்தைப் புரட்டிக்கொண்டிருந்தவன் தங்கையைக் கண்டதும் என்னவென்பது போல புருவத்தை உயர்த்தி பார்த்தான்.
“ஏன் அண்ணிய நீங்க மதிக்க மாட்றண்ணா?”
தங்கை கேட்ட கேள்வியில் கிருஷ்ணராஜசாகருக்குப் பெரிதாக ஆச்சரியம் எதுவும் எழவில்லை. தங்கைக்கு நித்திலாவை எவ்வளவு பிடிக்குமென அவனுக்கா தெரியாது? இப்போதைக்குத் தங்கைக்குத் தேவையான பதிலைக் கூறி அனுப்பி வைப்போமென தீர்மானித்தான்.
“மதிப்புங்கிறது ஒருத்தர் நடந்துக்கிற விதத்தை வச்சு குடுக்குறது நயனி... உன் அண்ணியோட நடவடிக்கை எதுவும் மதிப்பு குடுக்கிற மாதிரி இல்லயே”
தமையனின் பேச்சில் சிலிர்த்தெழுந்தாள் ஸ்ரீநயனி.
“அண்ணியோட நடவடிக்கைய குறை சொல்லுறல்ல, நீ மட்டும் எப்பிடி நடந்துக்கிறண்ணா?”
உணர்வு மேலிட கத்திவிட்டாள்.
“நான் என்ன தப்பா நடந்துக்கிட்டேன்?” அலட்சியமாகத் தோளைக் குலுக்கினான் கிருஷ்ணராஜசாகர்.
“உனக்கும் அண்ணிக்கும் இடையில இருந்த ரிலேசன்ஷிப்பை ஒன்-நைட் ஸ்டாண்ட்னு சொல்லி அவமானப்படுத்திருக்க... எப்பிடிண்ணா உன்னால அந்த வார்த்தைய சொல்ல முடிஞ்சுது?”
கேட்கும் போதே கண்ணீர் நிரம்பியது அவளது விழிகளில்.
கிருஷ்ணராஜசாகரின் முகத்தில் ஒரு நொடி மட்டும் அதிர்ச்சி பரவியது.
‘ஒன்-நைட் ஸ்டாண்டா?’ சடுதியில் மூளையில் ஏதோ தோன்ற ஸ்ரீநயனி சொன்ன வார்த்தையை உச்சரித்த சந்தர்ப்பம் எதுவென புரிந்தது போல இருந்தது.
அதை நித்திலா கேட்டாளா? அப்படி கேட்டவள் என்னிடமல்லவா விசாரித்திருக்கவேண்டும்?
அவனது ஆற்றாமை வலியாக மாறியது. எங்கே அந்த வலியை வெளிக்காட்டி தடுமாறிவிடுவோமோ என்ற அச்சத்தில் திறமையாக அதை மறைத்தான் அவன்.
பின்னர் எதுவுமே நடக்காததை போல முகத்தை வைத்துக்கொண்டான். கிட்டத்தட்ட உணர்ச்சிகளை வெளிப்படுத்தாத முகம் அது!
ஆனால் குற்றவுணர்ச்சியில் தமையன் அமைதியாகிவிட்டானென ஸ்ரீநயனி எடுத்துக்கொண்டாள்.
கிருஷ்ணராஜசாகருக்குள் வலியையும் தாண்டி புகைந்து கொண்டிருந்த கோபத்தை பற்றி அவள் அறியவில்லை.
அதன் இலக்கு நித்திலா. எவ்வளவு திமிர் இருந்தால் என் தங்கையிடம் இப்படி கூறியிருப்பாள் அவள்? இவளது ஈகோவால் செய்த தவறுக்கு என்னைப் பலிகடா ஆக்கப்பார்க்கிறாள்.
‘ஒன்-நைட் ஸ்டாண்ட்’ என்ற வார்த்தையை இப்போது உச்சரிக்கும் போது அருவருப்பாய் இருந்தது. உள்ளுக்குள் இருந்த கோபம் வெளிவர துடித்தது.
கண்களை இறுக மூடி அப்போதைக்குக் கோபத்தைக் கட்டுப்படுத்திக்கொண்டான்.
“எந்த ஒரு ஸ்டேட்மெண்டுக்கும் ரெண்டு ஆங்கிள் இருக்கும் நயனி”
முகத்தைப் போலவே உணர்ச்சிகளுக்கு இடம் தராத குரல் அது.
“உன் அண்ணிக்கும் எனக்கும் இருக்கிற பிரச்சனைய சாக்கா வச்சு மறுபடியும் அமெரிக்காக்குப் போகப்போறியா?”
“நான் உன்னோட தங்கச்சி... எனக்கு ஃபேமிலியையும் பிசினஸையும் பிரிச்சுப் பாக்கத் தெரியும்ணா... பிசினஸ்ல ஒரு மென்டாரா நீ என்ன சொன்னாலும் நான் கேட்டுப்பேன்... ஒரு அண்ணனா நீ என் கிட்ட இனிமே எந்த உரிமையும் எடுத்துக்காத... ஏன்னா ஃபேமிலினு வர்றப்ப ரெண்டாவது தடவையும் நீ தோத்துட்ட”
சினத்தோடு சொல்லிவிட்டு இடத்தைக் காலி செய்தாள் ஸ்ரீநயனி.
கிருஷ்ணராஜசாகர் அவள் சென்றதும் தனது அறை இருக்கும் தளத்துக்கு வந்தவன் அங்கே தனக்கு முன்னர் நித்திலாவிடம் பேசிக்கொண்டிருந்த நிஹாரிகாவைக் கண்டதும் அப்படி என்ன தான் பேசிக்கொள்கிறார்கள் இருவருமென மறைந்து நின்று கவனிக்க ஆரம்பித்தான்.
“உனக்கு இப்ப சந்தோசமா இருக்குல்ல நித்திலா? என்னை ஜெயிச்சிட்டதா நினைச்சு சந்தோசத்துல துள்ளி குதிச்சிட்டிருப்பியே... ஆனா இது நிரந்தரமில்ல... என்னைக்கு இருந்தாலும் இந்த வீட்டுக்கு நான் மட்டும் தான் மருமகள்”
அவளது பேச்சைக் கண்டுகொள்ளாமல் நித்திலா அசட்டையாக உச்சு கொட்டினாள்.
“உன் கூட போட்டி போட்டு ஜெயிக்கிறதை விட எனக்கு ஆயிரம் பிரயோஜனமான வேலை காத்திருக்கு... எப்பவும் போல அடுத்தவங்களுக்குத் தெரியாம அவங்க முதுகுக்குப் பின்னாடி திட்டம் போடுவல்ல, அதை ஆரம்பி... திட்டம் போடுறதுக்கு உனக்கும் என் அம்மாக்கும் சொல்லியா குடுக்கணும்?”
நித்திலா உண்மையை வெளிப்படையாக கூறியதும் நிஹாரிகாவின் முகம் அவமானத்தில் கறுத்தது. அவளுக்குப் பதிலடி கொடுக்காவிட்டால் அது இன்னும் அவமானமென சிலிர்த்துகொண்டு பதிலளித்தாள்.
“நான் திட்டம் போடுறவளா? திட்டம் போட்டு காய் நகர்த்துறதுல நீ என்னை மிஞ்சிட்ட நித்திலா... டைம் பாசுக்கு உன் கூட வாழ்ந்தவனோட சேர்ந்து பிள்ளைய பெத்துக்கிட்டு மறுபடியும் இந்த ஃபேமிலில ஒட்டிக்கிட்டல்ல, உன் அளவுக்கு எனக்குத் திட்டம் போடத் தெரியாது... அன்னைக்கு நடந்த சம்பவத்துக்கு அப்புறமும் உன் பிள்ளையோட இங்க வந்து தங்குறதுக்கு உனக்கு உடம்பு கூசல?”
“ஹேய்! என்னடி நீ காமெடி பண்ணிட்டிருக்க? என் புகுந்தவீட்டுல வந்து தங்குறதுக்கு எனக்கு ஏன் உடம்பு கூசணும்? டைம் பாசுக்கு வாழ்ந்தமோ சீரியஸா வாழ்ந்தமோ, நானும் கிரிஷும் எங்களுக்குனு ஒரு வாரிசை பெத்துக்கிட்டோம்ல... ஆனா நீ?... ப்ச் ரொம்ப பாவம் நீ... உன்னை கல்யாணம் பண்ணுன பாவத்துக்கு சந்தீப்பும் இப்ப கஷ்டப்படுறார் பாரேன்... பை த வே, இது வெறும் ஆரம்பம் தான்... இன்னும் நீ கஷ்டப்படுறதுக்கு நிறைய இருக்கு செல்லம்... அதெல்லாம் லிஸ்ட் அவுட் பண்ணுனா இன்னைக்கு நைட் ஆகிடும்... என் பிள்ளை வேற பசி தாங்கமாட்டான்... அவனுக்குச் சாப்பாடு ஊட்டணும்... நான் இல்லாம என் பிள்ளைக்கு ஒரு வாய் கூட சோறு இறங்காது... நான் போய் அவனைக் கவனிக்குறேன்... நீ போய் சதி பண்ணுற வேலைய கண்டினியூ பண்ணு... டாட்டா”
பதில் எதிர்பாராமல் அறைக்குள் சென்று முகத்திலடித்தாற்போல கதவை அடைத்த நித்திலாவை நிஹாரிகா குரோதத்துடன் பார்த்துக்கொண்டிருப்பதை ஒளிந்து நின்று கவனித்துக்கொண்டிருந்தான் கிருஷ்ணராஜசாகர்.
இப்போதும் இருவர் மீதும் சமமான கோபம் அவனுக்கு. அதிகபட்ச கோபத்திற்கு இலக்கானவள் நித்திலா மட்டுமே!
ஸ்ரீநயனிடம் ‘ஒன்-நைட் ஸ்டாண்ட்’ என்று சொல்லியிருக்கிறாள். நிஹாரிகாவிடமோ ‘டைம்-பாஸ்’ என்றிருக்கிறாள். என்னைப் பார்த்தால் இவளுக்கு எப்படி தெரிகிறது?
நிஹாரிகா அங்கிருந்து சென்றதும் வேகமாக அறைக்கதவைத் தட்டினான் கிருஷ்ணராஜசாகர். விட்டால் கதவை உடைத்திருப்பான். நல்லவேளை, அதற்குள் நித்திலா திறந்துவிட்டாள்.
“உன் கிட்ட கொஞ்சம் பேசணும்”
கண்கள் இடுங்க புருவம் நெறிய சொல்லிவிட்டு அவன் உள்ளே வந்துவிட நித்திலாவும் கதவைத் தாழிட்டுவிட்டு அவனைத் தொடர்ந்தாள்.
ஏதோ நீதி பரிபாலனம் செய்பவனைப் போல குற்றம் சாட்டும் பார்வையோடு சோபாவில் அவன் கால் மீது கால் போட்டு அமர்ந்த விதம் நித்திலாவுக்கு எரிச்சலை உண்டாக்கியது.
பெரிய நீதிபதி இவன்! நான் மட்டும் ஏன் நிற்கவேண்டும்?
எதிர் சோபாவில் அவனைப் போலவே கால் மேல் கால் போட்டு அமர்ந்தாள் நித்திலா.
“என்னமோ பேசணும்னு சொன்னிங்க”
“ம்ம்... கேவலமான விசயத்தைச் சொல்லுறப்ப எனக்குக் கொஞ்சம் நாக்கு தடுமாறும்... சிலரை மாதிரி அதை அடிக்கடி சொல்லி பழக்கமில்ல பாரேன்”
இப்போது யாரை இவன் மறைமுகமாகக் குத்திக்காட்டுகிறான்? புரியவில்லை என்றாலும் என்னமோ சொல்லிக்கொள் என்பது போல கருவிழிகளைச் சுழற்றி மேலே பார்த்தாள் சலிப்பாக.
கிருஷ்ணராஜசாகர் அவளது பாவனையால் பொங்கிய சினத்தை அடக்கிக்கொண்டு முறுவலித்தபடி பேச ஆரம்பித்தான்.
“லைஃப் நமக்கு செகண்ட் சான்ஸ் குடுத்திருக்குனு தோணுது.. வாட்ஸ் யுவர் ஒபீனியன்?”
“எனக்கு அப்பிடி தோணல”
அலட்சியமாக உதட்டைச் சுழித்தாள் நித்திலா. அவனிடம் இதைப் பற்றி பேச அவளுக்குப் பிடிக்கவில்லை.
“ஒய் டோண்ட் வீ ஸ்டார்ட் அ நியூ லைஃப் அகெய்ன்?”
நித்திலா நிதானமாக கிருஷ்ணராஜசாகரின் வதனத்தை ஏறிட்டாள். அதில் புன்னகை வழிந்தது. உல்லாசப்புன்னகை வேறு!
குடித்திருப்பானா? மீண்டும் ஒரு முறை அவன் முகத்தை உற்றுநோக்கினாள்.
இல்லையே! குடித்தால் கண்கள் சிவக்குமென விக்ரம் கூறியிருக்கிறான். நிதானத்தில் இருக்கும் போது இப்படி எல்லாம் பேசுபவன் இல்லையே இவன்!
சற்று முன்னர் என்னையும் எனது வேலையையும் அவமதித்து துச்சமாகப் பேசிவிட்டு இப்போது இரண்டாம் வாய்ப்பு என உளறுகிறான். ஒருவேளை, சாகர் நிவாசில் போதிமரம் எதுவும் இருக்கிறதா என்ன? இருந்தால் நிரந்தரமாக அதன் அடியில் இவனை உட்கார வைத்துவிடலாம். அப்படியாவது தன்னையும் அம்ரித்தையும் பிரிப்பது பாவமென்பது மண்டையில் உறைக்கும்.
“எனக்கு என்னமோ நீயும் நானும் தேவையில்லாம அல்ப காரணத்துக்காக பிரிஞ்சிட்டோமோனு தோணுது... லெட்ஸ் ஸ்டார்ட் அவர் லைஃப் அகெய்ன்”
எவ்வளவு இலகுவாக கூறுகிறான்! என்ன வார்த்தை பேசினான்? இப்போது மீண்டும் வாழ ஆரம்பிக்கலாம் என்கிறான். இவனை என்ன தான் செய்வது?
அவள் மனதுக்குள் பட்டிமன்றம் நடத்திக்கொண்டிருந்த போதே கிருஷ்ணராஜசாகர் பேச்சினிடையே எழுந்தான். நித்திலா புரியாமல் மலங்க மலங்க விழிக்கும் போதே அவளை நெருங்கியவன் தனது கரங்களில் அள்ளிக்கொண்டான்.
நித்திலா அவனது அதிரடியில் திகைக்க அவளது முகத்தை நெருங்கியவன் “நியூ லைஃபை இப்பவே ஸ்டார்ட் பண்ணலாமா?” என்று கேட்டான்.
அவனது ஆழ்ந்த குரலும், மனதை இழுத்துப் பிடிக்கும் பார்வையும், அவளைத் தாங்கிய வலிய கரங்களில் அழுத்தமும் நித்திலா நான்காண்டுகளாய் மறந்து போன மெல்லிய உணர்வுகளை அவளுக்குள் கட்டவிழ்க்க விட்டன.
மூளை யோசிக்க மறந்து ஸ்தம்பித்துப்போனது. அந்தளவுக்கு அவனது குரல் என்னென்னமோ யோசிக்கவைத்தது.
ஒரே ஒரு நொடி நான்காண்டுகள் வெறும் கனவாகிவிடக்கூடாதா என்று யோசித்தவள் நெருக்கமாகத் தெரிந்த கிருஷ்ணராஜசாகரின் இதழ்க்கடையில் முகிழ்த்திருந்த முறுவலில் ஒளிந்திருந்த குயுக்தியைக் கண்டுகொண்டாள்.
மெஸ்மரிசத்திலிருந்து விடுபட்டவளைப் போல சுதாரித்துக்கொண்டாள்.
‘இவனை நான் நம்பக்கூடாது. இதுவும் இவனது புதிய நாடகமாக இருக்கலாம்’
அதற்கு மேலும் அவனது நெருக்கத்தில் இருப்பதை விரும்பாமல் கிருஷ்ணராஜசாகரின் கரத்திலிருந்து திமிறி இறங்கிக்கொண்டாள்.
மெல்லிய பதற்றம் அவளுக்குள். கூடவே அவமான உணர்ச்சியும். சற்று முன்னர் தான் தன்னை இவன் மட்டம் தட்டினான். அதை மறந்து இப்படியா உணர்ச்சிவசப்படுவது?
தன்னை இப்படி தடுமாறவைத்து விட்டானே என்ற கடுப்பில் அவனை முறைத்தாள்.
“உங்களுக்கு பைபோலார் டிசீஸ் எதுவும் இருக்கானு செக் பண்ணிக்கங்க சாகர்”
“ஒய்ப் மேல உள்ள லவ்ல தூக்கிக் கொஞ்சுனா, அதை நீ வியாதினு சொல்லுறியே ஸ்வீட் ஹார்ட்”
“இனாஃப்” காதுகளைப் பொத்திக்கொண்டாள் நித்திலா.
கிருஷ்ணராஜசாகரையும் அவளது கோபம் தொற்றிக்கொண்டது. கண்களில் இருந்த கனிவு, குரலில் இருந்த உருக்கம், உடல்மொழியில் இருந்த நெகிழ்ச்சி அனைத்தும் மாயமானது.
அவன் காதுகளில் ஒலித்தது எல்லாம் ‘ஒன் நைட் ஸ்டாண்ட்’ என்ற வார்த்தை மட்டுமே! பின் கோபம் வராமல் என்ன செய்யும்?
பொத்துக்கொண்டு வந்த கோபம் அதன் இலக்காய் நின்ற நித்திலாவின் மீது வகைதொகையில்லாமல் பாய்ந்தது.
“கோவம் வருதா உனக்கு? என் தங்கச்சி கிட்ட என்னை பத்தி தப்பு தப்பா சொன்னப்ப சந்தோசமா இருந்துச்சா? நீ சொன்ன வார்த்தைய நம்பி அவ என் கிட்ட சண்டை போட்டப்ப எனக்கும் இப்பிடி தான் கோவம் வந்துச்சு”
ஸ்ரீநயனி தனக்காக இவனிடம் சண்டை போட்டிருக்கிறாள் போல. அந்தக் கோபத்தில் தான் இப்படி நடந்துகொள்கிறான் என்பது புரிந்தது.
“என்ன சொன்ன நீ? ஒன் நைட் ஸ்டாண்ட்... அசிங்கமா இல்ல, அவ கிட்ட இந்த வார்த்தைய சொல்லுறதுக்கு?”
நித்திலாவுக்கு அவனது கோபம் அநியாயமாகத் தோன்றியது.
“நீங்க என் கிட்ட சொன்னதை தான் நான் உங்க தங்கச்சி கிட்ட சொன்னேன்... நியாயப்படி என் கூட ஒன்னா இருந்துட்டு அதை ஒன் நைட் ஸ்டாண்ட்னு சொல்லி என்னை அசிங்கப்படுத்துனதுக்கு நான் தான் உங்க மேல கோவப்படணும்... பட் அந்தக் கோவத்துக்கு கூட நீங்க தகுதியான ஆள் இல்ல சாகர்... உங்களை மாதிரி சந்தர்ப்பவாதி கிட்ட மயங்குன தப்புக்கு உங்க சங்காத்தமே வேண்டாமேனு நாலு வருசமா நான் ஒதுங்கி இருந்தேன்... என்னையும் அம்ருவையும் பிரிச்சு பழைய குப்பையைக் கிளறுனது நீங்க தான் சாகர்”
கிருஷ்ணராஜசாகர் புருவம் சுருக்கினான். நான்காண்டுகளுக்கு முன்னர் அவனும் அவளும் இறுதியாய் உரையாடிய தருணம் ஞாபகத்துக்கு வந்தது. எதைப் பற்றி நித்திலா கூறுகிறாள் என்பதை சில நிமிடங்கள் செலவளித்துப் புரிந்துகொண்டவனுக்கு ஏனோ நித்திலாவிடம் விளக்கம் அளிக்க விருப்பமில்லை.
அவனது உரையாடலுக்குள் இடையில் நுழைந்து அரைகுறையாய் எதையோ கேட்டுவிட்டு அதற்காக அவனை விட்டு விலகியவளிடம் ஏன் விளக்கம் அளிக்கவேண்டுமென பிடிவாதம் பிறந்தது கிருஷ்ணராஜசாகருக்கு.
நித்திலா சொல்லாமல் கொள்ளாமல் தனது வாழ்க்கையை விட்டுப் போனதை விட அதற்கு சொன்ன காரணம் அவனை இன்னும் ஆத்திரக்காரனாக்கியது.
இவளுக்கு நான் ஏன் விளக்கமளிக்க வேண்டும்?
எந்தச் சூழ்நிலையில் அவன் அந்த வார்த்தையைக் கூறினான் என்று கேட்க கூட பொறுமையின்றி பிரிந்து சென்றவளுக்கு விளக்கம் கேட்பதற்கான தகுதியே இல்லை. இவள் என்ன நினைக்கிறாளோ அப்படியே நினைத்துக் கொள்ளட்டும்.
கிருஷ்ணராஜசாகர் கர்வத்தோடு அவளைப் பார்த்தான்.
“நம்ம பிரிஞ்சதுக்கு நீ சொன்ன காரணம் உண்மை தான்... இப்பவும் சொல்லுறேன், நமக்குள்ள நடந்ததுக்குப் பேர் ஒன்-நைட் ஸ்டாண்ட் தான்... இதை போய் அம்மா கிட்ட சொல்லப்போறியா? சொல்லிக்க... இல்லனா ஊர் முழுக்க ஸ்பீக்கர் வச்சு அனவுன்ஸ் பண்ணப்போறியா? ஐ டோண்ட் கேர்... நீ நாலு வருசத்துக்கு முன்னாடி யார் கிட்டவும் சொல்லாம வீட்டை விட்டுப் போய் என்னை பைத்தியக்காரன் மாதிரி தேட வச்சியே, அப்ப போன மரியாதைய விட இப்ப ஒன்னும் அதிகமா போயிடாது... பை த வே, இனிமே நீ சிதைக்கிறதுக்கு என் கிட்ட மரியாதைனு ஒன்னு மிச்சமில்ல... கோ அஹெட்”
அலட்சியமாக மொழிந்துவிட்டு மீண்டும் சோபாவில் ஜம்பமாக அமர்ந்துகொண்டான்.
தனது நிலையை யோசிக்காதவளை காயப்படுத்தும் வெறி சற்று தணிந்தது போல உணர்ந்தான்.
நித்திலா அவன் தன்னிடம் விளக்கமளிப்பான் என்றெல்லாம் எதிர்பார்க்கவில்ல. குறைந்தபட்சம் அந்த வார்த்தைக்காக மன்னிப்பு கேட்பானென எண்ணினாள்.
இவ்வளவு ஏன்! நான் கூறியதை நீ தவறாகப் புரிந்துகொண்டாய் என்றாவது கூறுவான் என யோசித்திருந்தாள்.
இந்த திமிர் பிடித்தவனை பற்றி அவ்வாறெல்லாம் எண்ணலாமா நீ என மனசாட்சி நறுக்கென மண்டையில் குட்டிய பிறகு புத்தி தெளிந்தாள்.
அவனது வார்த்தை வழக்கம் போல அவளைக் காயப்படுத்தியதில் தன்னைத் தேடி அவன் அலைந்ததாகச் சொன்னதை நித்திலா கவனிக்கவில்லை.
என்னையா குத்திக் காட்டுகிறாய்? பதிலுக்கு நானும் பேசுவேனென பதிலடி கொடுப்பதில் அல்லவா அவள் ஆர்வமாகி இருந்தாள்.
“நான் யார் கிட்டவும் இன்னொரு தடவை நீங்க சொன்ன கேவலமான வார்த்தைய சொல்லமாட்டேன் சாகர்... பர்ட்டிகுலரா உங்கம்மா கிட்ட சொல்லமாட்டேன்... உங்களை நல்லவிதமா வளர்த்திருக்கிறதா அவங்க நினைச்சிட்டிருக்காங்க... அந்த நினைப்பு பொய்னு தெரிஞ்சா எவ்ளோ வருத்தப்படுவாங்க? அதோட நான் அதை மறக்கணும்னு நினைக்கிறேன்”
அவனைப் போலவே கர்வத்தோடு உரைத்துவிட்டு அம்ரித்தைக் காண சென்றுவிட்டாள் நித்திலா.
அவள் சென்றதும் கிருஷ்ணராஜசாகரின் மனதில் இயலாமையும், ஆற்றாமையும் குடிபுகுந்தது. அவன் நினைத்தால் நித்திலாவிடம் விளக்கம் கொடுத்திருக்கலாம். அவர்களுக்குள் இருக்கும் கருத்துவேறுபாடு, அதற்கு காரணகர்த்தா யாரென அப்போதே பேசி தீர்த்திருக்கலாம்.
ஆனால் மனிதர்களுக்குள் இம்மாதிரியான சூழலில் உண்டாகும் ஈகோ அவனையும் பிடித்துகொண்டது.
தன்னை நம்பாதவளிடம், தனது குணத்தைப் பற்றி தெரிந்தும் இவ்வளவு கீழ்த்தரமாக அதை சந்தேகித்தவளிடம் விளக்கமளிக்க அவனது ஈகோ இடம் கொடுக்கவில்லை. நித்திலா சொன்ன காரணம் நர்மதாவின் வளர்ப்பையும் கிருஷ்ணராஜசாகரின் நடத்தையையும் அல்லவா தவறென காட்டுகிறது! ஒரு ஆணாக அதை கிருஷ்ணராஜசாகரால் சீரணிக்க முடியவில்லை.
ஆனால் கெட்டதிலும் ஒரு நல்லது நடந்ததை போல, தங்களது பிரிவுக்குக் காரணம் நித்திலாவின் ஈகோ என அவன் இத்தனை ஆண்டுகள் நினைத்தது தவறென தெரிந்துவிட்டது. அந்தமட்டில் கிருஷ்ணராஜசாகருக்குச் சந்தோசமே!