• Copyright ©️ 2019 - 2025 Nandhavanam Novels. All rights reserved. According to Copyright act of India 1957, no part of the stories in this site may be reproduced, or stored in retrieval system, or transmitted in any form or by any means, electronic, mechanical, photocopying, recording, or otherwise, without express written permission of the admin and the authors.
    - legal team, Nandhavanamnovels.com

  • எழிலன்பு நாவல்கள் தளத்திற்கு செல்ல 👉 ezhilanbunovels.com/nandhavanam / நந்தவனம் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் nandhavanamnovels@gmail.com என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

MNP 27

Nithya Mariappan

Writer✍️
அத்தியாயம் 27

“மனுசங்க கிட்ட இருந்து தான் உணர்வுகள் பிறக்குது... அந்த உணர்வுகளை மனுசனை ஆட்டிப் படைக்க விட்டுட்டு வேடிக்கை பாக்குறது கையாலாகாத்தனம்... வீ ஷுட் கண்ட்ரோல் யுவர் எமோசன்ஸ்... எந்த ஒரு எமோசனும் செண்டிமெண்டும் உங்களை வீக் ஆக்குதுனா முடிஞ்சளவுக்கு அதை மறைக்கிறதுக்கு ட்ரை பண்ணுங்க... அந்த எமோசன்ஸை உங்களுக்குள்ள உருவாக்கிற மனுசங்களை விட்டு விலகி நிக்க பாருங்க... விலக முடியலைனா atleast pretend to stay away from them... ஏன்னா இன்னைக்கு உங்களை பலவீனமாக்குற உணர்வுகள் ஒரு நாள் இல்லனா ஒரு நாள் உங்களோட தோல்விக்குக் காரணமா நிக்கும்... அப்ப வருத்தப்பட்டு பிரயோஜனமில்ல”

- கிரிஷ்

நித்திலாவும் ஸ்ரீநயனியும் சாகர் நிவாசுக்குத் திரும்பினர். இருவரும் வீட்டுக்குள் நுழைந்ததுமே நித்திலாவின் பார்வையில் அங்கே அதிர்ச்சியாக நின்றுகொண்டிருந்த நிஹாரிகா விழுந்தாள்.

அவளைக் கண்டதும் ஏனோ வெறுப்பு மண்டுவதை தடுக்க முடியவில்லை இருவராலும்.

ஸ்ரீநயனியும் நித்திலாவும் அவளெதிரே போய் நின்றனர்.

நித்திலாவின் பெயரைக் கேட்டதற்கே அதிர்ச்சியில் உறைந்து போனவள் நேரில் கண்டதும் அச்சத்தில் மூச்சடைத்துப்போனாள்.

அவளின் பயம் படிந்த கண்கள் நித்திலாவுக்குச் சந்தோசத்தைக் கொடுத்தது.

கிருஷ்ணராஜசாகர் ஏதோ விவகாரமாக கூறியிருப்பான் என ஊகித்தவள் “எப்பிடி இருக்க நிஹி? பாத்து ரொம்ப வருசம் ஆச்சுல்ல... கடைசியா நான் இந்த வீட்டை விட்டு போனப்ப என்னை வழியனுப்பி வச்ச... அப்ப பாத்தது” என்று கூற நிஹாரிகா திருடனுக்குத் தேள் கொட்டியது போல விழித்தாள்.

வீட்டினர் அனைவரும் அவளையே குறுகுறுவென பார்த்தனர்.

“நித்திலாவைக் காணுமா? நான் மானிங்ல இருந்து அவளைப் பாக்கவேல்லயே”

நித்திலா காணாமல் போன நாளன்று வீட்டினரிடம் இவ்வாறு கூறியிருந்தாள் அவள். சம்பந்தப்பட்டவள் வேறேதோ கூறுகிறாளே என அனைவரும் பார்க்க நிஹாரிகா வியர்த்து வழிந்தாள்.

எள்ளலான சிரிப்போடு அவளை அலட்சியப்படுத்தியபடி நின்றாள் நித்திலா.

கிருஷ்ணராஜசாகர் அவர்கள் இருவரின் உடல்மொழியையும் கூர்ந்து கவனித்தான். இருவரையும் அவன் நம்பப்போவதில்லை. ஆனால் நித்திலா நேர்மையானவள். நிஹாரிகாவோ நேர்மை என்றால் கிராம் என்ன விலை என கேட்பவள்.

அதனால் அவனது நன்மதிப்பு பட்டியலில் நித்திலா நிஹாரிகாவை முந்திவிட்டாள்.

குடும்பப்பிரச்சனைகளை ஓரங்கட்டியவன் ஆனந்த்சாகரிடம் சாகர் குழுமம் பற்றிய அவரது முடிவை அறிவிக்கும்படி கூறினான்.

என்ன முடிவு என புரியாமல் நிஹாரிகாவும் சந்தீப்பும் விழித்தனர்.

ஆனந்த்சாகர் தானும் கிருஷ்ணராஜசாகரும் இயக்குனர்கள் போர்டுடன் கலந்தாலோசித்துவிட்டு எடுத்த முடிவை இளையமகனிடம் கூறினார்.

“உன்னோட மேனேஜ்மெண்டுக்குக் கீழ வர்ற சாகர் டெலிகம்யூனிகேசனையும் சாகர் மீடியாவையும் சாகர் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ்ல இருந்து பிரிச்சு தனி கம்பெனியா ஆக்கிடலாம்னு முடிவு பண்ணிருக்கேன் சந்தீப்”

“டாட்?”

அதிர்ச்சியாய் விழித்தான் சந்தீப். அவனது மனைவிக்கோ இன்று அடுத்தடுத்த அதிர்ச்சிகளால் நெஞ்சுவலி மட்டும் தான் வரவில்லை.

“எப்ப நீ மொத்த சாகர் இண்டஸ்ட்ரீசையும் பாதிக்கிற மாதிரியான முடிவுகளை தன்னிச்சையா எடுக்க ஆரம்பிச்சியோ அப்பவே நான் இந்த முடிவை எடுத்துட்டேன்... இனிமே சாகர் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ்கும் உனக்கும் எந்தச் சம்பந்தமும் இல்ல... அதோட ஸ்டேட் ஆப் அஃபயர்ஸ், பிசினஸ் டிசிசன்ஸ் எதுலயும் தலையிடுற அதிகாரம் உனக்குக் கிடையாது... இதுக்கான அபிஷியல் புரொசிஜர் சீக்கிரமே தொடங்கிடும்”

ஆனந்த்சாகர் பேச பேச நிஹாரிகா தனது திட்டத்தில் மண் விழுந்ததை எண்ணி மனம் நொந்து கொண்டிருந்தாள்.

வெறும் இரண்டு நிறுவனங்களை மட்டும் கட்டி மேய்க்கவா கணவனை அவள் தயார்ப்படுத்தினாள்? சாகர் குழுமம் என்ற பேரரசுக்கு முன்னே இந்த இரண்டு நிறுவனங்களும் சுண்டைக்காய்களாக தோற்றமளித்தன.

தனித்துச் செயல்படு என்றால் அத்தனை இலாபமும் நீ மட்டும் அனுபவி என்று அர்த்தமல்ல, வரப்போகிற நஷ்டத்தைச் சமாளிக்கவும் பங்குதாரர்களை எதிர்கொள்ளவும் தனித்து தயாராகு என்பதே அர்த்தம்.

சந்தீப்புக்குத் தந்தையின் இம்முடிவு அதிர்ச்சி தான். எப்போதுமே தந்தையிடமிருந்து தனக்கு வேண்டியதை பங்கு பிரித்து கேட்கவேண்டுமென அவன் எண்ணியதில்லை.

கிருஷ்ணராஜசாகரைப் போல தன்னிச்சையாக ஒரு தொழில் சாம்ராஜ்ஜியத்தை நிறுவும் மனோதைரியமும் அவனுக்குக் கிடையாது. அவனுக்குத் தெரிந்ததெல்லாம் மேலாண்மை நிர்வாகம் மட்டுமே.

நிஹாரிகா சொன்னபடி தன்னை தந்தை சாகர் குழுமத்தின் சேர்மன் ஆக்கினால் ஏதேனும் பிரச்சனை வரும் போது அவரிடமோ கிருஷ்ணராஜசாகரிடமோ ஆலோசனை கேட்கலாம். ஆனால் இனி அப்படி எல்லாம் கேட்க முடியாதே!

நிஹாரிகா அவனுக்குப் பதிலாக பேச ஆரம்பித்தாள்.

“ஏன் இவ்ளோ பெரிய டிசிசனை எடுத்திங்க அங்கிள்? உங்க மூத்தமகனோட ஒய்பும் பையனும் வந்துட்டாங்கனு தானே?”

“இல்லம்மா... அமெரிக்கால நீங்க சைன் பண்ணுன டீல் பத்தி தெரிஞ்சுக்கிட்டதுக்கு அப்புறமா எடுத்த முடிவு இது... உன்னோட பேராசைக்கும் இவனோட கையாலாகாத்தனத்துக்கும் எங்கப்பா பாடுபட்டு ஆரம்பிச்ச சாகர் குரூப் பலியாகிட கூடாதேங்கிற ஆதங்கத்துல எடுத்த முடிவு... இனிமே இதை பத்தி நம்ம ஆர்கியூ பண்ணவேண்டாம்... எல்லாத்தையும் அபிஷியல் மீட்டிங்ல பேசிக்கலாம்”

இதோடு பேச்சுவார்த்தை முடிந்ததென அவர் கிளம்பி சென்றுவிட கிருஷ்ணராஜசாகர் சந்தீப்பிடம் வந்து நின்றான்.

“தப்பான லைஃப் பார்ட்னரை செலக்ட் பண்ணுனதோட விலைய நான் நாலு வருசமா இன்ஸ்டால்மெண்ட்ல பே பண்ணிட்டிருக்கேன்னு உன் ஒய்ப் சொன்னா... அன்பார்சூனேட்லி உன் தலையெழுத்துலயும் அது தான் இருக்கு... இவளுக்கு பிசினஸ் பத்தி எந்த நாலேட்ஜும் சுத்தமா இல்ல... இவ பேச்சைக் கேட்டு நீ டிசிசன் எடுத்தா இன்னும் ரெண்டே வருசத்துல பேன்க்ரப்ட் ஆகிடுவ... புத்தியோட பிழைச்சிக்க”

இதற்கு மேல் உன் இஷ்டமென அவன் நகரப்போக நிஹாரிகா அவனை எரிப்பது போல முறைத்தாள்.

“நீங்க எங்களை பழி வாங்கிட்டிங்கல்ல?”

“அடடா! இதையே இப்ப தான் நீ கண்டுபிடிக்கிறியா? பழிவாங்கிட்டேன்னு சொல்லுறதுலாம் ரொம்ப பெரிய வார்த்தை... நீயும் உன் புருசனும் என்னை பேசுனதுக்கான பதிலடியை வாயால சொல்லாம செயல்ல காட்டிட்டேன்... இதை நீ பழிவாங்குறதா எடுத்திக்கிட்டாலும் நோ அப்ஜக்சன்... என் கிட்ட மோதுனவங்களுக்கு அவங்க பாணியில பதில் சொல்லுறது எனக்கு ரொம்ப பிடிக்கும் நிஹாரிகா... அந்த விசயத்துல தம்பி, தம்பியோட ஒய்ப், என்னோட ஒய்ப்னு யாருக்கும் நான் தயவு தாட்சணியம் பாக்கமாட்டேன்”

நிஹாரிகாவுக்குப் பதில் சொல்லுவதை போல தன்னையும் குத்திக் காட்டியவனைப் பார்த்து பற்களைக் கடித்தாள் நித்திலா.

கிருஷ்ணராஜசாகர் யாரையும் பொருட்படுத்தாமல் ஸ்ரீநயனியை மட்டும் தன்னோடு வருமாறு அழைத்தான்.

அண்ணனும் தங்கையும் செல்ல அம்ரித்தும் அவர்களோடு ஓடினான்.

நித்திலா, நிஹாரிகா, சந்தீப் மட்டுமே ஹாலில் நின்று கொண்டிருந்தனர்.

சந்தீப்பின் முகத்தைப் பார்க்க பாவமாக இருந்தது நித்திலாவுக்கு. கணவனின் தம்பி என்றாலும் கிருஷ்ணராஜசாகரின் அளவுக்கு ராஜதந்திரமோ பிடிவாதமோ இல்லாதவன். இளகிய மனம் கொண்டவன்.

அந்த இளகிய மனதை தான் நிஹாரிகா அடிக்கடி தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்கிறாள் போல! தந்தையைக் கேட்காமல் எந்த முடிவையும் எடுக்காத சந்தீப் இன்று அவரது அதிருப்திக்கு ஆளாகி நிற்பதை பார்த்தாலே அதை புரிந்துகொள்ள முடிகிறதே!

நிஹாரிகாவுக்கு நித்திலாவின் முன்னே தன்னை அவமானப்படுத்திவிட்டார்களே என்ற வெறுப்பு!

“அதான் சொல்லிட்டாங்கல்ல சந்தீப்... இதுக்கு மேல ஏன் இங்கயே நிக்கணும்? வாங்க” என்று சந்தீப்பை அழைத்துக்கொண்டு அவர்களின் அறையை நோக்கி சென்றுவிட்டாள்.

நித்திலாவும் அம்ரித் சாப்பிட்டானா இல்லையா என அறிய அவனைத் தேடி சென்றாள். அவன் கிருஷ்ணராஜசாகரோடு இருப்பான் என்று எண்ணியவள் ரஜீஷாவோடு அவன் விளையாடிக்கொண்டிருக்கவும் ஆச்சரியம்.

யாரும் அவளிடம் ரஜீஷா பற்றி இன்னும் கூறவில்லையே!

நித்திலாவைக் கண்டதும் “நித்திம்மா” என்றபடி ஓடி வந்து அணைத்துக்கொண்டான் அம்ரித்.

“நான் அம்ரித்தோட நானி மேம்” என ரஜீஷா அறிமுகமாகிக்கொண்டார்.

தன் பிள்ளைக்கு நானி எதற்கு என்ற கேள்வி நித்திலாவிற்குள். அதை வெளிக்காட்டாமல் சிரித்து வைத்தாள்.

எப்போதும் பிள்ளையுடனே இருப்பது சாத்தியப்படாது என்பதால் இந்த ஏற்பாட்டை கிருஷ்ணராஜசாகர் செய்திருப்பான் என்பது புரிந்தது.

என்னிடமிருந்து என் மகனைப் பிரித்து ஆள் வைத்து கவனித்துக்கொள்கிறான்! என்ன ஒரு வில்லத்தனம்!

“நீ ஆன்ட்டி கூட விளையாடு அம்ரு... நான் இப்ப வந்துடுறேன்” என மகனை ரஜீஷாவிடம் ஒப்படைத்துவிட்டு கிருஷ்ணராஜசாகர் ஸ்ரீநயனியோடு பேசிக்கொண்டிருக்கும் அலுவலக அறையை நோக்கி விரைந்தாள் நித்திலா.

அங்கே அண்ணனும் தங்கையும் பிசினஸ் பற்றிய பேச்சுவார்த்தையை முடித்திருந்தார்கள். கதவைத் தட்டாமல் கிருஷ்ணராஜசாகர் முன்னே வந்து நின்றாள் நித்திலா.

அவளைப் பார்த்ததும் ஏன் இங்கே வந்தாய் என்று கண்களால் வினவினான் கிருஷ்ணராஜசாகர்.

“அம்ரித்துக்குக் கவர்னெஸ் வச்சிருக்கிங்க தானே?”

“எதுக்கு கார்ட்ஸ் இல்லாம நீயும் நயனியும் உங்கப்பாவ பாக்க போனிங்க?”

அவன் சம்பந்தமின்றி பேசுவதாகத் தோன்றியது நித்திலாவுக்கு. ஆனால் இவ்வளவு நேரம் பிசினஸ் பற்றி பேசியது மட்டுமன்றி பாதுகாப்புக்கு ஆளின்றி பெண்கள் இருவரும் ஜனார்தனனைக் காணச் சென்றதற்காக தங்கையைக் கிருஷ்ணராஜசாகர் கண்டித்தது அவளுக்குத் தெரியாதல்லவா!

“முதல்ல என்னோட கேள்விக்குப் பதில் சொல்லுங்க... கவர்னெஸ் வச்சு பாத்துக்குறதுக்காகத் தான் அவனை என் கிட்ட இருந்து பிரிச்சு கூட்டிட்டு வந்திங்களா சாகர்?”

கிருஷ்ணராஜசாகர் முன்நெற்றியில் பொறுமையிழந்தவனாகத் தட்டிக்கொண்டான்.

“பதில் சொல்லுங்க சாகர்”

நித்திலாவின் குரலில் உஷ்ணம் ஏறியது. அது நன்மைக்கான அறிகுறி அல்லவென அறிந்து ஸ்ரீநயனி அவளைப் பொறுமை காக்கும்படி கேட்டுக்கொண்டாள்.

“நான் ஏன் சைலண்டா இருக்கணும் நயனி? இந்த மனுசனால என் பிள்ளைய கவனிச்சிக்க முடியாதுனா ஏன் அவனை இங்க கூட்டிட்டு வரணும்?”

இப்ராஹிமின் எச்சரிக்கையால் வைத்திருந்த பாதுகாப்பு வளையத்தை உடைத்துவிட்டு வெளியே சென்றது மட்டுமில்லாமல் உப்பு சப்பற்ற காரணத்துக்காக சண்டை பிடிப்பவளைக் கண்டால் எரிச்சல் மண்டியது கிருஷ்ணராஜசாகருக்கு.

“ட்வென்டி ஃபோர் ஹவர்சும் நான் அம்ரித் கூடவே இருக்கணும்னா நானும் உன்னை மாதிரி காபி தான் ஆத்தணும்”

கடுப்பாகவே பதிலளித்தான் அவன்.

“அண்ணா ஏன் இப்பிடி பேசுற?”

“நான் என்ன தப்பா சொல்லிட்டேன் நயனி? இவளால என் பிள்ளைக்குப் பெஸ்டான எஜூகேசனை குடுக்க முடியுமா? நல்ல லைஃப்ஸ்டைலை குடுக்க முடியுமா? இந்த மகாராணியே மாசச்சம்பளத்தை நம்பி வாழுறா... இதுல என் பிள்ளைய எப்பிடி நல்லபடியா வளர்ப்பா?”

நித்திலா தன்னை ஒரேயடியாக அவன் அவமானப்படுத்தவும் பொறுமையிழந்தாள்.

“மாசச்சம்பளத்தை வாங்குறதுக்காக நான் உழைக்கிறேன்.. உங்களை மாதிரி சொந்த தம்பிக்குக் குழி வெட்டி அவர் கிட்ட இருந்து பிசினஸை பறிக்கல”

“தட் இஸ் நன் ஆப் யுவர் பிசினஸ்... இது எங்க குடும்ப விவகாரம்... எப்ப நீ இங்க இருந்து போனியோ அப்பவே உனக்கும் இந்தக் குடும்பத்துக்கும் இடையில இருந்த உறவு முடிஞ்சிடுச்சு”

“உறவே இல்லங்கிறிங்க... அப்ப நான் பெத்த பிள்ளைய மட்டும் ஏன் வச்சிருக்கிங்க?”

இருவரும் மாறி மாறி சண்டையிட்டுக்கொள்ள ஸ்ரீநயனி அவர்களைச் சமாதானம் செய்ய சிரமப்பட்டாள்.

“என் பிள்ளை சந்தோசமா இருக்க நான் என்ன வேணும்னாலும் செய்வேன் நயனி... என்னை கொஸ்டீன் பண்ணுற அதிகாரம் இவளுக்கு இல்லனு சொல்லி வை... இவளால முடிஞ்சா அம்ருவ கூட்டிட்டுப் போக சொல்லு... நான் ஒன்னும் அவனைக் கட்டாயப்படுத்தி இங்க தங்க வைக்கல... எனக்கு அவன் மேல எவ்ளோ பாசம்னு அம்ருக்கு நல்லா தெரியும்... அவன் இவ கூட வரமாட்டான்னு இவளுக்கும் நல்லா தெரியும்... எந்தக் காலத்துலயும் இவ கூட போனு நான் அம்ரு கிட்ட சொல்லமாட்டேன்... அண்ட் ஒன் மோர் திங், இவ கூப்பிடுறானு இனிமே கார்ட்ஸ் இல்லாம வெளிய போகாத... இன்னைக்குப் போனது கடைசியா இருக்கட்டும்”

தனது நிலைப்பாட்டைச் சொன்னதோடு தங்கையை எச்சரித்துவிட்டு இடத்தைக் காலி செய்தான் கிருஷ்ணராஜசாகர்.

ஸ்ரீநயனி நித்திலாவைச் சமாதானம் செய்ய ஆரம்பித்தாள். ஆனால் அவளோ கொந்தளிப்பின் உச்சத்தில் இருந்தாள்.

“உன் அண்ணனை விட வேற யாராலயும் என்னை இந்தளவுக்கு அவமானப்படுத்த முடியாது நயனி... எப்பவுமே இவர் என்னை மதிச்சது இல்ல”

“அப்பிடிலாம் இல்லண்ணி”

“உனக்குத் தெரியாது நயனி... இந்த வீட்டுக்குள்ள எப்பவுமே நான் எனக்காக வந்தது இல்ல... முதல் தடவை நான் உனக்காக வந்தேன்... இப்ப என் அம்ருக்காக வந்திருக்கேன்... உன் அண்ணன் எப்பவுமே என் பாயிண்ட் ஆப் வியூவை யோசிக்கவேமாட்டார்... அப்ப உனக்காக என்னை கல்யாணம் பண்ணுனார்... இப்ப அம்ருக்காக என்னை இந்த வீட்டுல விட்டு வச்சிருக்கார்”

“அண்ணாவோட பேச்சு தான் அப்பிடி இருக்கும் அண்ணி... பட்”

போதுமென்பது போல கையுயர்த்தினாள் நித்திலா.

“உன் அண்ணா உன்னோட குடும்பத்துக்கும் அம்ருவுக்கும் மட்டும் தான் நல்லவர்... எனக்கு இல்ல நயனி... நான் அவரோட வாழ்ந்த கொஞ்சகாலத்துலயே அவரை புரிஞ்சிக்கிட்டேன்னு தப்புக்கணக்கு போட்டுட்டேன்... என்னை கேர் பண்ணுனதை, எனக்காகப் பரிஞ்சு பேசுனதை எல்லாம் வச்சு என் புருசனுக்கு என் மேல லவ் வந்துடுச்சுனு நினைச்சேன்... ஆனா... ப்ச்... யூ ஆர் அன்மேரீட்... உன் கிட்ட ஒரு எல்லைக்கு மேல என்னால எதையும் சொல்ல முடியாது நயனி”

அப்படி என்ன தான் பிரச்சனை இவர்களுக்குள்? ஸ்ரீநயனிக்கு அதை தெரிந்துகொண்டே ஆகவேண்டுமென்ற உறுதி.

நித்திலாவின் கையைப் பிடித்து நிறுத்தியவள் என்னவென கேட்டாள். அவளுக்கோ தயக்கம்.

“என் மேல சத்தியம் அண்ணி... நீங்க நடந்ததை சொல்லணும்” என்று தன் தலை மீது கைவைத்து சத்தியம் கேட்டாள் ஸ்ரீநயனி.

ஸ்ரீநயனியின் பிடிவாதத்தை நன்கறிந்த நித்திலா கண்களை இறுக மூடிக்கொண்டாள். எப்படி அந்த வார்த்தையைத் தன் வாயால் சொல்லுவாள் அவள்?

சொல்லாவிட்டாலும் நயனி விடமாட்டாளே! எச்சிலை விழுங்கியவள் கடைசியில் தன் மனதை அறுத்துக்கொண்டிருந்த சம்பவத்தைச் சொல்லியே விட்டாள்.

“நானும் உங்கண்ணாவும் உண்மையான காதலால சேர்ந்தோம்னு நினைச்சேன்... ஆனா உங்கண்ணா அந்த உறவை ‘ஒன் நைட் ஸ்டாண்ட்’னு சொல்லி கேவலப்படுத்திட்டார் நயனி”

வாய் விட்டுச் சொல்லிவிட்டாள். ஆனால் ஸ்ரீநயனியின் முகத்தைக் கண்கொண்டு நோக்க சங்கடமாக இருந்தது நித்திலாவுக்கு. கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டாள். இதற்கெல்லாம் காரணமானவன் மீது இன்னும் ஆத்திரம் பொங்கியது.

“அண்ணி?”

ஸ்ரீநயனி நித்திலா சொன்னதைக் கேட்டு அதிர்ச்சியில் ஸ்தம்பித்துப்போனாள். தன் அண்ணனா அப்படி கூறினான்? எப்படி அவனால் அவ்வாறு கூற முடிந்தது?

நித்திலாவின் மூடிய இமைகளின் வழியே ஒரே ஒரு துளி கண்ணீர் மட்டும் வெளியே எட்டிப் பார்த்தது. அந்த ஒரு துளி கண்ணீர் நான்காண்டு கால வலியை சொன்னது போல இருந்தது ஸ்ரீநயனிக்கு.

ஆவேசத்துடன் நித்திலாவின் தோளைத் தொட்டாள் அவள்.

“அவரை நீங்க ஏன் சும்மா விட்டிங்க? நறுக்குனு நாலு கேள்வி கேக்கவேண்டியது தானே?”

“எந்த மூஞ்சிய வச்சிட்டு கேக்க சொல்லுற நயனி? நான் தான் உன் அண்ணனை லவ்.... நேசிச்சேன்... அவர் எப்பவுமே எங்க ரிலேசன்ஷிப்பை ஒரு கோட்டுக்கு வெளிய தான் நிறுத்தி வச்சிருந்தார்... அவர் என்னை நேசிக்கலங்கிற விசயம் தெரிஞ்சப்பவே நான் உடைஞ்சிட்டேன்... அவர் அடிக்கடி என் கிட்ட நீ எப்பவும் என் லைஃபை விட்டுட்டு விலகிப்போயிடாத நித்திலானு சொல்லுவார்... அதை நான் லவ்னு தப்பா நினைச்சிட்டேன் நயனி... நான் தான் தப்பு பண்ணிட்டேன்... இப்பவும் சாகருக்கும் எனக்கும் இடையில அம்ரு இல்லனா பிரச்சனையே வந்திருக்காது... நாங்க சாதாரணமா ஹாய் ஹலோனு கேசுவலா பேசிட்டுப் பிரிஞ்சு போயிருப்போம்... இவ்ளோ மேலோட்டமா தான் எங்களுக்குள்ள கணவன் – மனைவி உறவே இருந்துருக்கு பாரேன்... என்னோட கற்பனை, அர்த்தமில்லாத ஆசையால நான் ஏமாந்தேன்... அதுக்காக உன் அண்ணன் கிட்ட அழுது ஆர்ப்பாட்டம் பண்ணி காரியம் சாதிக்க தோணல... இப்பவும் எனக்கு அந்த எண்ணம் இல்ல”

தெளிவாகப் பேசுபவளைப் போல பேசி இறுதியில் ஸ்ரீநயனியைக் குழப்பிவிட்டு கண்ணீரோடு அங்கிருந்து சென்றுவிட்டாள் நித்திலா.

நியாயவாதியான ஸ்ரீநயனி தன் அண்ணன் எப்படி அண்ணியுடைய காதலை பயன்படுத்திக்கொண்டு அவமானப்படுத்தலாமென உள்ளுக்குள் குமுற ஆரம்பித்தாள்.​
 

Latest threads

Back
Top Bottom