Nithya Mariappan
Writer✍️
அத்தியாயம் 26
“ஒவ்வொரு பொண்ணுக்கும் ஃபினான்ஷியல் இண்டிபெண்டன்ஸ் ரொம்ப முக்கியம்... கல்யாணத்துக்கு முன்னாடி பின்னாடிங்கிற ஆர்கியூமெண்டுக்கு இங்க இடமேயில்ல... நம்ம வீட்டுல இருக்குற ஆண்கள் எதுவும் வாங்கனும்னா கட்டாயம் நம்ம கிட்ட சஜசன் கேப்பாங்களேயொழிய பெர்மிசன் கேக்கமாட்டாங்க... பட் பொண்ணுங்க விசயத்துல பெர்மிசன் கிராண்டட்னு ஒரு ஆண் அனுமதி குடுக்கணும்... பல நேரங்கள்ல பொண்ணுங்களுக்கு முக்கியம்னு தோணுற விசயங்கள் ஆண்களுக்கு வீண்விரையம்னு தோணும்... இந்த மாதிரி நேரத்துல ஆசைப்பட்டதை வாங்க முடியாம அந்த ஆசைய மனசுக்குள்ள போட்டுப் புதைச்சிட்டு வாழுற பொண்ணுங்க அதிகம்... என் புருசன் நான் கேட்டதை எல்லாம் வாங்கித் தருவார்னு ஒரு பொண்ணு சொன்னா அவளோட புருசனை அவதார புருசனா இந்த உலகம் பாக்கும்... சப்போஸ் என் பொண்டாட்டி நான் ஆசைப்பட்டதை எல்லாம் வாங்கித் தருவானு புருசன் சொன்னா அவனுக்குக் கையாலாகாதவன், பொண்டாட்டிய நம்பி வாழுறவன்னு பட்டம் கட்டி அவனோட இன்செக்யூரிட்டிய தூண்டிவிட்டு வேடிக்கை பாக்கும் இந்த உலகம்”
-நித்திலா
நியூரி அப்பார்ட்மெண்ட்ஸ், நுங்கம்பாக்கம்...
ஜனார்தனனின் ஃப்ளாட் அழைப்புமணியை அழுத்திக்கொண்டிருந்தனர் நித்திலாவும் ஸ்ரீநயனியும்.
வெகுநேரமாகியும் கதவு திறக்கவில்லை என்றதும் ஒருவேளை வீட்டில் யாருமில்லையோ என்ற சந்தேகம் தோன்றிய அடுத்த கணம் கதவு திறந்தது.
திறந்தவரின் கண்கள் வெளியே தெறித்து வெளியே வந்துவிடுமளவுக்கு அதிர்ச்சியில் விரிய நித்திலா அவரைப் பெரிதுபடுத்தாமல் விலக்கி நிறுத்திவிட்டு ஃப்ளாட்டுக்குள் நுழைந்தாள்.
அவளை அதிர்ச்சியோடு பார்த்துக்கொண்டிருந்தவர் சைலைந்திரி. நித்திலாவின் செய்கை அவரை அவமானத்திற்குள்ளாக்கியது. ஆனால் அதை எல்லாம் யோசிப்பதை விட வெகு ஆர்வமாக இத்தனை நாட்கள் எங்கேயோ மறைந்திருந்தவள் இப்போது எப்படி வந்தாள் என்ற அதிர்ச்சியே பிரதானமாக இருந்தது அவரிடம்.
ஃப்ளாட்டுக்குள் வந்த நித்திலா தந்தையைத் தேடி சலித்துப் போனாள்.
“அப்பா எங்க இருக்கிங்க?” என அவள் அழைக்கவும் சமையலறையிலிருந்து வெளிப்பட்டார் ஜனார்தனன்.
நித்திலாவைக் கண்டதும் சந்தோசமா துக்கமா என பிரித்தறியா முடியாத வகையில் கலவையான உணர்வு அவரைச் செயல்படவிடாமல் தடுத்தது.
எந்தப் புலனும் வேலை செய்யாமல் இருந்தாலும் கண்கள் மட்டும் அதன் வேலையைச் சரியாக செய்தன.
ஆம்! இருவிழிகளும் கண்ணீர் கடலில் தத்தளித்துக்கொண்டிருந்தன.
நித்திலா தந்தையின் மெலிந்த தோற்றத்தில் அதிர்ச்சியில் உறைந்தாள். எவ்வளவு கம்பீரமாக வலம் வந்த மனிதர். இவரை இப்படி காணவா ஆவலும் ஆசையுமாக அவள் இங்கே வந்தாள்?
ஆற்றாமை பெருக அது கோபமாக சைலேந்திரியின் மீது வெடித்தது.
“எங்கப்பாவை என்ன நிலமையில வச்சிருக்காங்க பாரு நயனி”
அவளது ஆதங்கமான கேள்வியில் சைலேந்திரிக்கு உணர்வு வந்தது.
நானா இந்த மனிதரைக் கவனிப்பதில்லை? இவள் காணாமல் போன தினத்திலிருந்து என்னை விரோதியாகப் பாவித்து ஒரே வீட்டில் இருந்தும் எந்தவிதம் ஒட்டும் உறவுமில்லாத மூன்றாவது மனுசியாக என்னை நடத்துபவர் இந்த மனிதர் தானே?
ஆவேசத்துடன் அவர் ஹாலுக்கு வரவும் ஜனார்தனன் “நித்திம்மா” என்று அழுகையோடு அழைக்கவும் சரியாக இருந்தது.
“நீ வந்துட்டியா? ஏன்டா அப்பா கிட்ட சொல்லாம இத்தனை வருசம் எங்கயோ போயிட்ட? இவளும் இவ மகளும் தான உன்னைத் துரத்துனாங்க... ஏன் அமைதியா நிக்கிற நித்தி? ஏதாச்சும் பேசும்மா”
அவர் கண்ணீர் உகுத்தார். சைலேந்திரியோ எதுவும் செய்யாமல் தன்னையும் நிஹாரிகாவையும் இந்த மனிதர் ஏன் இப்படி தூற்றுகிறார் என வேதனையோடு அவரைப் பார்த்தார். இத்தனை ஆண்டுகால மணவாழ்வில் இவருக்கு என் மீது நம்பிக்கையே வரவில்லையா? அல்லது வரும்படி நான் நடந்துகொள்ளவில்லையா?
“இவங்களையும் இவங்க மகளையும் நான் என்னைக்குமே ஒரு பொருட்டா நினைச்சது இல்லப்பா... இவங்களால நான் காணாம போகல” என்றுரைத்து நித்திலா சைலேந்திரியை நிம்மதியடையச் செய்தாள்.
உண்மையும் அதுதானே என்பது சைலேந்திரியின் எண்ணம். அவரது எண்ணத்தைப் பற்றிய கவலையின்றி மேலும் பேச ஆரம்பித்தாள் நித்திலா.
“இவங்களுக்கு என்னைப் பிடிக்காது... என்னோட கேன்சர் ட்ரீட்மெண்டுக்கு அப்புறம் இவங்க என்னை மதிச்சதே இல்ல... ஆனா கொடுமைப்படுத்துனதும் இல்லப்பா... இவங்களைப் பத்தி உங்க கிட்ட நான் எப்பவும் குறையா சொன்னதில்ல... ஏன்னா நீங்க இவங்க மேல ரொம்ப நம்பிக்கை வச்சிருந்திங்க... உங்க நம்பிக்கைய உடைக்க விரும்பல நான்... இவங்களையும் இவங்க மகளையும் நான் கரெக்டா டீல் பண்ணிட்டிருந்தேன்... நான் கோட்டை விட்டது இன்னொருத்தர் கிட்ட”
“என்னடாம்மா சொல்லுற? எதுக்காக எங்களை எல்லாம் விட்டுட்டுப் போன? இத்தனை வருசம் என்னைப் பாக்கணும்னு கூட தோணலையாடா?”
“சாரிப்பா... இதை தவிர என்னால வேற எதையும் உங்க கிட்ட சொல்லமுடியாது”
தந்தையை வேகமாக பரிசோதித்தன நித்திலாவின் விழிகள். அவரது சட்டையில் தெறித்திருந்த கறையை பார்த்தவள் “என்னப்பா இது?” என வினவ
“கேரட்டை துருவிட்டிருந்தேன்டா... நீ வந்த அவசரத்துல ஓடி வர்றப்ப ப்ளேட்டைத் தள்ளிவைச்சப்ப அதோட கறை சட்டைல பட்டுடுச்சு” என்றார் ஜனார்தனன்.
தந்தை ஏன் இந்த வேலைகளைச் செய்கிறார்? அடுத்த நொடி சைலேந்திரியை குற்றம் சாட்டின இரு பெண்களின் விழிகளும்.
சைலேந்திரி மலங்க மலங்க விழித்தார்.
“உங்களை நம்பி எங்கப்பாவ விட்டுட்டுப் போனதுக்கு இந்த நிலமைக்கு ஆளாக்கிட்டிங்களே?” என வெடித்தாள் நித்திலா.
ஸ்ரீநயனியும் சும்மா இல்லை.
“இந்தம்மாவும் இவங்க பொண்ணும் அங்கிளை காரணமா சொல்லி தான் சந்தீப் அண்ணா கிட்ட இந்த ஃப்ளாட்டை வாங்கி தரச் சொன்னாங்கண்ணி... ஆனா அங்கிளை வேலைக்காரன் மாதிரி வச்சிருக்காங்க பாருங்க” என்றாள் சைலேந்திரியை எரிக்கும்படி முறைத்தவாறு.
இரு பெண்களின் குற்றச்சாட்டும் அநியாயமென கணவர் கூறுவாரென காத்திருந்தால் தன்னை வார்த்தைகளால் இருவரும் கூறு போட்டுவிடுவார்கள் என வேகமாக தன்னை தற்காத்துக்கொள்ள பதிலளித்தார் சைலேந்திரி.
“நான் ஒன்னும் என் புருசனை வேலைக்காரனா நடத்தல... நீ சொல்லாம கொள்ளாம ஓடிப்போனதுக்கு நானும் நிஹாரிகாவும் காரணம்னு இவர் நினைச்சிட்டிருக்கார்... அதனால என் கையால சாப்பிடுறதில்ல... என் கூட பேச்சுவார்த்தை வச்சிக்கிறதில்ல... சொந்தவீட்டுல என்னை மூனாவது மனுசி மாதிரி நடத்துறார்... எல்லாத்துக்கும் நீ தான்டி காரணம்”
நித்திலாவைக் குற்றம் சாட்டினார் அவர்.
அவரது விரல் தன்னை நோக்கி நீண்டதும் அதை பட்டென தட்டிவிட்டாள் நித்திலா.
“நான் ஏன் ஓடிப்போனேன்னு உங்க பொண்ணைக் கேளுங்க... என் கிட்ட எகிறி பேசுற உரிமை உங்களுக்கு இல்ல”
ஜனார்தனனிடம் திரும்பினாள்.
“நீங்க என் கூட வந்துடுங்கப்பா... இவங்களுக்கும் இவங்க மகளுக்கும் காசு பணம் தான் முக்கியம்... உங்களை பாத்துக்க நான் இருக்கேன்”
“ஆமா அங்கிள்! இந்தப் பணப்பேய்கள் ரெண்டும் யாராச்சும் காசு குடுத்தா உங்களை ராத்திரியோட ராத்திரியா கொலை பண்ணக்கூட தயங்காதுகள்... ப்ளீஸ் எங்க கூட வாங்க... உங்களுக்காக உங்க பேரன் காத்திருக்கான்”
ஸ்ரீநயனி பேரன் என்றதும் ஜனார்தனனின் கண்களில் புத்தொளி பிறந்தது. அதற்கு மாறாக சைலேந்திரியோ நடக்கக்கூடாதது நடந்ததை போல பரிதவித்தார்.
“பேரனா?” இருவரும் ஒரே குரலில் கேட்டனர்.
“ஆமா! என் அண்ணாக்கும் அண்ணிக்கும் பிறந்த பையன்... அம்ரித் சாகர்”
ஸ்ரீநயனி விவரிக்கவும் ஜனார்தனனுக்குச் சந்தோசத்தில் மனம் பூரித்தது. கடவுளை இத்தனை ஆண்டுகள் திட்டித் தீர்த்ததற்காக வருந்தினார் மனிதர்.
“என் பேரனா? எனக்காக காத்திருக்கானா?” உணர்ச்சி மேலீட்டில் வார்த்தைகள் தடுமாறியது.
“ஆமாம்பா”
நித்திலாவின் கையைப் பற்றி அதில் தலையைப் பதித்த ஜனார்தனன் கண்ணீர் விடத் தொடங்கினார். பின்னர் என்ன தோன்றியதோ அவளைத் தன்னோடு தனது அறைக்கு அழைத்துச் சென்றார்.
அங்கே புகைப்படமாகத் தொங்கிய ஒரு பெண்மணியைக் காட்டினார்.
“பாத்தியா நிரு? நமக்குப் பேரன் இருக்கான்... அவன் பேர் அம்ரித்... நம்ம நித்திம்மாவோட மகன்”
அவர் பேச பேச நித்திலாவோ அந்தப் புகைப்படத்தை வெறித்தாள்.
அதில் இருந்தவர் நிருபமா. ஜனார்னனின் முதல் மனைவி. நித்திலாவை ஈன்றெடுத்த அன்னை. அவரது மரணத்துக்குப் பிற்பாடு ஜனார்தனன் சைலேந்திரியை மணந்தார்.
நித்திலாவின் கண்கள் நிருபமாவின் புகைப்படத்தில் நிலைத்திருந்தது.
“அப்பா இப்பிடி கஷ்டப்படுறதை நீ எப்பிடிம்மா பாத்துட்டிருக்க?”
ஹாலில் இருந்து அவர்களின் உரையாடலைக் கேட்டுக்கொண்டிருந்த சைலேந்திரிக்கு அவர்களின் பேச்சில் காந்தல் எடுத்தது.
செத்தவளிடம் உற்சாகமாகப் பேசுகிறார் இந்த மனிதர் என நிருபமாவின் மீது வழக்கம் போல வரும் பொறாமை இப்போதும் வந்தது.
நித்திலா ஜனார்தனனை முடிவாகப் பார்த்தாள்.
“நீங்க என் கூட வந்துடுங்கப்பா... இங்க கஷ்டப்பட வேண்டாம்”
ஜனார்தனன் மகளின் வேண்டுகோளை பணிவோடு மறுத்தார்.
“உன் புகுந்தவீட்டுல நான் இருக்கிறது சரிவராதுடா... இதோ இவளை காலம் முழுக்க கௌரவமா வாழவைக்கிறேன்னு ஒரு காலத்துல வாக்கு குடுத்து தொலைச்சிட்டேன்... இவளும் உன்னை பாசமா பாத்துப்பேன்னு சத்தியம் பண்ணுனா... இவ சத்தியத்தை மீறுன மாதிரி நானும் என் வாக்கை காத்துல பறக்கவிட்டுட்டா இவளுக்கும் எனக்கும் என்னடா வித்தியாசம் இருக்கு?”
“எனக்காக நீங்க ரெண்டு பேரும் கஷ்டப்படக்கூடாதுனு தான் நான் நாலு வருசத்துக்கு முன்னாடி உங்களை விட்டுட்டுப் போனேன்பா... உங்களை நிஹாரிகாவோட அப்பாவா மட்டுமே பாத்து ஒதுக்கி வச்சிட்டேன்... அதோட பலனை தான் பாத்துட்டேனே”
மனம் நொந்து பேசினாள் நித்திலா.
ஜனார்தனன் மகளின் மனதைப் புரிந்துகொண்டாலும் அவளோடு சாகர் நிவாசுக்கு வர சம்மதிக்கவில்லை. சம்பந்தி வீட்டில் தங்குவது மகளின் கௌரவத்தைப் பாதிக்கும் என்ற தயக்கம்.
நித்திலாவும் இப்போதைக்கு அவரை விட்டுப்பிடிக்க எண்ணினாள். அம்ரித்தும் அவளும் சிம்லாவுக்குத் திரும்பும் போது தன்னுடன் தந்தையை அழைத்துச் சென்றுவிடவேண்டுமென்ற முடிவில் மட்டும் அவள் தீர்மானமாக இருந்தாள்.
அதை வெளிப்படையாகச் சொன்னால் தானும் கிருஷ்ணராஜசாகரும் மீண்டும் பிரிந்துவிடுவோமோ என தந்தை வருந்துவார். அதற்கு மாறாக சைலேந்திரி அந்தப் பிரிவைக் கொண்டாடுவார். இரண்டுமே நித்திலாவைக் காயப்படுத்தும் என்பதால் தந்தையிடம் அதற்கு மேல் வாதிடவில்லை.
ஜனார்தனன் இத்தனை ஆண்டுகள் கழித்து வந்த மகளுக்கும் ஸ்ரீநயனிக்கும் காபி போடச் சென்றார்.
சைலேந்திரியோ நித்திலாவுக்கு ஆண் குழந்தை இருக்கிறதே என்ற வயிற்றெரிச்சலில் குமைந்தார்.
இரு பெண்களும் அறியாதவிதமாக மொபைலோடு இரகசியமாக நழுவினார்.
நிஹாரிகாவின் மொபைல் எண்ணுக்கு அழைத்தார். இன்று அவளும் சந்தீப்பும் அமெரிக்காவிலிருந்து திரும்பி வருகிறார்கள். மகளிடம் அம்ரித் பற்றிய செய்தியைக் கூறாவிட்டால் சைலேந்திரியின் தலை வெடித்துவிடும் போல இருந்தது.
நிஹாரிகா அழைப்பை ஏற்காமல் போகவும் “இந்தப் பொண்ணு வேற காலை அட்டெண்ட் பண்ணமாட்டேங்கிறாளே?” என சோககீதம் வாசித்தார் அவர்.
அதேநேரம் சாகர் நிவாசிற்குள் நுழைந்தது சந்தீப் – நிஹாரிகாவின் கார்.
விமானநிலையத்திலிருந்து வரும் வழியில் கணவனுக்கு மாமனாரையும் கிருஷ்ணராஜசாகரையும் எப்படி சமாளிப்பதென வகுப்பெடுத்தவாறு வந்தவள் அதற்கு இடையூறாக இருக்கக்கூடாதென மொபைலை சைலண்ட் மோடில் போட்டிருந்தாள்.
சந்தீப்பும் தலையாட்டி பொம்மையைப் போல அனைத்துக்கும் உம் கொட்டிக்கொண்டே காரிலிருந்து இறங்கினான்.
இருவரும் வீட்டிற்குள் அடியெடுத்து வைத்ததும் அவர்களின் கண்ணில் பட்டது ஆனந்த் சாகரும் கிருஷ்ணராஜசாகரும் ஒருவரோடு ஒருவர் இன்முகமாக உரையாடிக்கொண்டிருந்த காட்சி தான்.
அதை சந்தீப் பெரிதாக கருதவில்லை. ஆனால் நிஹாரிகாவோ பதபதைத்தாள். எப்படி கிருஷ்ணராஜசாகரும் மாமனாரும் ராசியானார்கள்? இதை தொடரவிடக்கூடாதே!
முகத்தைச் சிரித்தாற்போல வைத்துக்கொண்டவள் கணவனின் கையை அழுத்தினாள். அதற்கு அர்த்தம் நீயும் என்னைப் போல சிரி என்பது தான்.
சந்தீப்பும் சிரித்தபடி “குட்மானிங் டாட்” என்றவாறு அவரை நோக்கி சென்றான். அவனைத் தொடர்ந்த நிஹாரிகாவும் “ஹாய் அங்கிள்” என்க ஆனந்த்சாகர் எவ்வளவோ முயன்றும் அவரால் அவர்கள் மீதிருந்த அதிருப்தியைக் கட்டுப்படுத்த முடியாமல் போக, அவர்களுக்குப் பதில் வணக்கம் சொல்லாமல் இருந்தார்.
எப்போதும் கணவனிடம் உற்சாகமாகப் பேசும் மாமனாருக்கு என்னவாயிற்று என நிஹாரிகா மனதுக்குள் யோசிக்க சந்தீப்போ வாய் விட்டே கேட்டான்.
“எல்லாம் வழக்கம் போல நடக்குதா சந்தீப்? வழக்கத்தை மீறி அதிகப்பிரசங்கித்தனமா சில சம்பவங்களும் நடக்குதே”
இலைமறைக்காயாக சந்தீப் செய்த தவறைச் சுட்டிக்காட்டினார் ஆனந்த்சாகர்.
நிஹாரிகாவுக்கு அப்போதே எச்சரிக்கைமணி அடித்தது. எதுவோ சரியில்லை என ஊகித்தாள் அவள்.
அந்நேரம் பார்த்து “டாடி ரஜீஷா ஆன்ட்டிக்கு ப்ளே ஸ்டேசன்ல விளையாடவே தெரியல” என்றவாறு ஓடிவந்து கிருஷ்ணராஜசாகரின் கழுத்தைக் கட்டிக்கொண்டான் அம்ரித்.
டாடியா? அதிர்ந்தே போயினர் சந்தீப்பும் நிஹாரிகாவும். யார் இந்த சிறுவன்? இவன் ஏன் தமையனை டாடி என அழைக்கிறான் என சந்தீப் குழம்ப நிஹாரிகாவோ துடித்துப்போனாள்.
இவனை டாடி என அழைக்கிறான் என்றால் ஒருவேளை இந்தச் சிறுவனைச் சட்டப்படி தத்தெடுத்து தனது வாரிசாக வளர்க்க கிருஷ்ணராஜசாகர் எண்ணுகிறானோ என அவளது மூளை யோசித்தது.
தம்பியும் அவனது மனைவியின் அம்ரித்தை விழுங்குவது போல பார்ப்பதை கண்ட கிருஷ்ணராஜசாகர் ரஜீஷாவிடம் கண் திருஷ்டி கழிக்கத் தெரியுமா என கேட்டான்.
“தெரியும் சார்”
“அப்ப முதல்வேளையா என் பையனை கூட்டிட்டுப் போய் திருஷ்டி கழிங்க... பாக்கக்கூடாத கண்ணுல்லாம் அவனைப் பாக்குது”
அவன் தங்களைத் தான் சொல்கிறானென சந்தீப்பும் நிஹாரிகாவும் புரிந்துகொண்டனர்.
சூடாக அவனுக்குப் பதிலடி கொடுக்கும் முன்னர் கிருஷ்ணராஜசாகர் இவ்வளவு அன்பு காட்டும் இச்சிறுவன் யாரென தெரிந்துகொள்ளும் அவசரம் அவர்கள் இருவருக்கும்.
“இந்தப் பையன் யாருண்ணா?”
சந்தீப் சாந்தமாக கேட்டான்.
“என் மகன்டா”
“உங்க மகனா?” அதிர்ந்தவள் நிஹாரிகா.
“ஏன்? எனக்கு மகன் இருக்கக்கூடாதா?”
ஏளனமாக கேட்டான் கிருஷ்ணராஜசாகர்.
“உங்களுக்கு எப்பிடி பையன்?”
நிஹாரிகாவின் தடுமாற்றத்தைக் காண காண கிருஷ்ணராஜசாகருக்குச் சந்தோசம் தாங்கவில்லை.
“நான் என்ன பீஷ்மர் மாதிரி பிரம்மச்சரியா இருப்பேன்னு சத்தியமா பண்ணுனேன்? எனக்கும் கல்யாணம் ஆச்சுல்ல... என் பொண்டாட்டியோட இந்த வீட்டுல நான் வாழ்ந்திருக்கேனே... அதெல்லாம் மறந்துடுச்சா?”
எள்ளலாக வினவினான் இருவரிடமும்.
“அண்ணா... இந்தப் பையன் உனக்கும்...”
“இவன் எனக்கும் நித்திலாவுக்கும் பிறந்தவன்... பேர் அம்ரித்சாகர்... அண்ட் ஒன்மோர் திங், நான் இப்ப தனிமரமில்ல... உன்னை மாதிரி நானும் குடும்பஸ்தன் சந்தீப்... ஒரு பையனுக்குத் தகப்பனும் கூட”
இருவரிடமும் விளக்கம் கொடுப்பவன் போல மட்டம் தட்டி தனக்கு அவர்களால் நேர்ந்த அவமானத்திற்கு பழிதீர்த்துக்கொண்டான் கிருஷ்ணராஜசாகர்.
நிஹாரிகாவோ நித்திலா என்ற பெயரைக் கேட்டவுடன் இடியோசை கேட்ட நாகம் போல மிரண்டு விழித்தாள். அங்கிருந்த சூழலில் யாரும் அவளைக் கவனிக்கவில்லை, கிருஷ்ணராஜசாகர் உட்பட.