Nithya Mariappan
Writer✍️
அத்தியாயம் 12
“சில்கி ஸ்மூத் பௌன்சியான ஹேர் யாருக்குத் தான் பிடிக்காது? எங்கம்மா இருக்குற வரைக்கும் என் ஹேர் அப்பிடி தான் இருந்துச்சு... வாரவாரம் ஊற வச்ச வெந்தயத்தோட செம்பருத்தி இலையும் ஆலோவேராவும் அரைச்சு ஹேர்பேக் போட்டுவிடுவாங்க... முடிய அலசி காய வச்சதுக்கு அப்புறம் வெந்தயத்தோட அரோமா ஹேர்ல தங்கிடும்... அப்ப முடிய தொட்டு பாத்தா அவ்ளோ ஸ்மூத்தா இருக்கும்... அம்மா போனதுக்கு அப்புறம் நானே இதெல்லாம் செஞ்சிக்க ஆரம்பிச்சேன்... என் ஹேர்ல வர்ற வெந்தய வாசம் எங்கம்மாவ ஞாபகப்படுத்தும்”
-நித்திலா
சாகர் நிவாஸ், போட் க்ளப் சாலை, சென்னை...
பணியாளர்கள் அவரவர் வேலையைக் கவனித்துக்கொண்டிருக்க வீட்டின் மேல்தளத்தில் இருக்கும் அறையில் ஆனந்த்சாகர் எவ்வித பரபரப்புமின்றி அமர்ந்து கிருஷ்ணராஜசாகரிடம் தொழில்பேச்சை பேசிக்கொண்டிருந்தார். அவரருகே இருந்த நர்மதாவுக்குத் தான் எக்கச்சக்க பதற்றம்.
ஏனெனில் கிருஷ்ணராஜசாகர் சிம்லாவில் நடந்த அனைத்தையும் கூறப்போகிறானே, அதற்கு கணவரின் எதிர்வினை எப்படியிருக்கும் என்ற கலக்கம் அந்தப் பெண்மணியின் உடலுள்ள ஒவ்வொரு அணுவுக்குள்ளும் பதற்றத்தை உண்டாக்கியிருந்தது.
அன்னையும் மகனும் சென்னைக்கு வந்த போது சிரஞ்சீவியும் ஆனந்த்சாகரும் தொழில்முறை பயணமாக ஹைதராபாத் சென்றிருப்பதாக ஆனந்த்சாகரின் காரியதரிசி மூலம் தெரிந்துகொண்ட பிறகிலிருந்தே இப்படி தான் பதறிக்கொண்டிருக்கிறார். காலையில் வீடு திரும்பிய ஆனந்த்சாகர் மைந்தனையும் மனைவியையும் பார்த்து புன்னகைத்ததோடு சரி வேறேதும் விசாரிக்கவில்லை.
ஆசுவாசமான மனிதரிடம் முக்கியமான விசயம் பேசவேண்டுமென மேல்தளத்தில் குடும்பத்தினர் வழக்கமாக ஒன்றாக அமர்ந்து பேசும் அறைக்கு அழைத்தவன் கிருஷ்ணராஜசாகரே. நர்மதாவையும் உடன் அழைத்தான் அவன்.
மூவரும் அந்த அறைக்குள் வந்து பத்து நிமிடங்கள் கடந்திருந்தது. முதல் ஐந்து நிமிடங்களில் பி.ஏவுடன் மொபைலில் பேசி கழித்தார் ஆனந்த்சாகர். மீதமிருக்கும் ஐந்து நிமிடங்களில் தந்தையும் மகனும் தொழில் சம்பந்தமாகப் பேசினர்.
“சேம்பர் ஆப் காமர்ஸ் மீட்டிங் நல்லபடியா முடிஞ்சுதா கிரிஷ்?”
“நல்லபடியா முடிஞ்சுது டாட்”
“கொரியன் பியூட்டி ப்ராண்ட் கூட டை-அப் வைக்கப்போறதா சொன்னியே... அந்த ப்ராசஸ் எப்பிடி போகுது?”
“நெக்ஸ்ட் மன்த் அந்த கம்பெனி சி.ஈ.ஓ இந்தியா வர்றாங்க... அப்ப கான்ட்ராக்ட் சைன் பண்ணப்போறோம் டாட்”
ஆனந்த்சாகரின் வதனத்தில் பெருமிதம் தெரிந்தது.
“ப்ரவுட் ஆப் யூ கிரிஷ்” என்றார் பூரிப்போடு.
“தேங்க்யூ டாட்... பட் நான் பேச வந்தது ராந்த்வா காஸ்மெட்டிக்ஸோட வளர்ச்சிய பத்தி இல்ல... சாகர் க்ரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ் பத்தி”
இவ்வளவு நேரம் பெருமிதமும் பூரிப்பும் ஆட்சி செய்துகொண்டிருந்த ஆனந்த்சாகரின் வதனத்தில் இப்போது பிடிவாதம் குடியேறியது.
“நான் சொன்ன மாதிரி கல்யாணம் பண்ணுற முடிவுக்கு வந்திருக்கியா கிரிஷ்?”
இல்லையென மறுப்பாய் தலையசைத்து அவரது இரத்த அழுத்தத்தை உயர்த்தினான் கிருஷ்ணராஜசார்.
அவர் கோபம் கொண்டு ஏதோ சொல்ல வர அதற்குள் நர்மதா ஆனந்த்சாகரின் கையைப் பற்றினார். அந்தக் கைப்பற்றுதலுக்கு அமைதியாக இருங்கள் என்பது அர்த்தம். மனைவி சொல்லே மந்திரமென நீண்ட நெடிய மூச்சுகளை எடுத்துவிட்டு தனது கோபத்தை மூச்சோடு சேர்த்து வெளியேற்றுவதாக எண்ணிக்கொண்டார் ஆனந்த்சாகர்.
சில நிமிடங்களில் கோபமும் குறைந்தது. எதிரே அமர்ந்திருந்த மூத்த மகனின் குணத்தை நன்கறிந்தவராக கிண்டலாகவே கேட்டார்.
“சாகர் குரூப்ஸ் ஆப் கம்பெனிஸை எங்கப்பா என் கிட்ட ஒப்படைச்சார்... நான் அதை இன்னும் வளர்த்து சாகர் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸா மாத்துனேன்... எனக்குப் பக்கபலமா மதியூக மந்திரியா என் ஒய்ப் இருந்தா... தொழில்ல சின்ன சின்ன சுணக்கம் வந்தப்ப துணையா நின்னா... இன்கம்டாக்ஸ் டிப்பார்ட்மெண்ட் பிரச்சனையில கிட்டத்தட்ட சி.பி.ஐ என்னை அரெஸ்ட் பண்ணுற ஸ்டேஜ்... அப்ப எனக்குப் பதிலா இந்த பிசினஸ் சாம்ராஜ்ஜியத்தை சாகர் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீசோட ஒன் ஆப் த ஷேர்ஹோல்டரா இருந்து சரியாம காப்பாத்துனா... உங்க மூனு பேரையும் பொறுப்பா வளர்த்தா... இதெல்லாம் ஏன் சொல்லுறேன் தெரியுமா?
எனக்கு நர்மதா துணையா நிற்குற மாதிரி உனக்குத் துணையா யார் நிப்பாங்க? என் காலத்துக்கு அப்புறம் சாகர் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீசை உன் கிட்ட ஒப்படைக்கிறேன்னு வச்சுக்க, உனக்கு அப்புறம் நீ யார் கிட்ட ஒப்படைப்ப? துணையா நிக்கிறதுக்குப் பொண்டாட்டியும் இல்லாம பிசினஸை ஒப்படைக்க வாரிசும் இல்லாம பிசினஸை வளர்த்து நீ என்ன செய்யப்போற கிரிஷ்? தனக்குனு குடும்பம் இல்லாம பிசினஸ் எம்பயரை வளர்க்குற எல்லாரும் ரத்தன் டாட்டா ஆகிட மாட்டாங்கடா”
கடைசி வார்த்தையில் உஷ்ணத்தைக் கொட்டிப் பேசி முடித்தவர் அவனிடம் பேச விருப்பமற்று மனைவியிடம் தனது முடிவை கூறினார். ஏற்கெனவே சொன்னது தான். மீண்டுமொரு முறை நினைவுறுத்தினார்.
“எனக்கு அப்புறம் சந்தீப்புக்கு தான் என்னோட ஷேர்ஸ் அண்ட் பவர் எல்லாமே போகும்... ஹீ ரெஸ்பெக்ட்ஸ் ஃபேமிலி வேல்யூஸ்... இன்னைக்கு இல்லனாலும் அவனுக்குனு ஒரு வாரிசு வருங்காலத்துல வரும்... உன்னோட செல்லப்பிள்ளைக்கு புரிய வை நர்மு”
கிருஷ்ணராஜசாகர் தந்தையை ஆழ்ந்து நோக்கினான். மனைவியின் உண்மை நோக்கத்தை அறியாத சந்தீப் எனும் தலையாட்டி பொம்மைக்கு சாகர் குழுமத்தின் சேர்மன் பதவியைக் கொடுப்பதற்கு பதிலாக நிறுவனம் திவாலாவது எவ்வளவோ மேல் என எரிச்சலாக எண்ணியவன் தந்தைக்குப் பதிலடி கொடுக்கும்விதமாக சொல்ல வந்த உண்மையையும் சேர்த்தே கூற ஆரம்பித்தான்.
“என்னைக்கோ பிறக்க போற வாரிசு மேல வச்ச நம்பிக்கைய ஆல்ரெடி பிறந்து மூனு வயசுல வளர்ந்து நிக்கிற என் பையன் மேல வச்சிங்கனா நல்லா இருக்கும் டாட்”
ஆனந்த்சாகரால் அவரது காதை நம்ப முடியவில்லை. நர்மதாவைப் பார்த்தார். மீண்டும் மைந்தனிடம் அவரது பார்வை சென்றது.
“உனக்கு மூனு வயசுல பையனா? ஹவ் இஸ் இட் பாசிபிள்?”
குழம்பிப்போனார் மனிதர்.
கிருஷ்ணராஜசாகர் அமர்த்தலாகப் புன்னகைத்தான்.
“ஏன் பாசிபிள் இல்ல? நாலு வருசத்துக்கு முன்னாடி எனக்குக் கல்யாணம் ஆச்சு... நானும் என் ஒய்பும் இதே வீட்டுல வாழ்ந்தோம்... அப்புறம் ஏன் பாசிபிள் இல்ல டாட்?”
தனது மொபைலில் இருந்த அம்ரித்தோடு சேர்ந்திருக்கும் செல்பியைத் தந்தையிடம் காட்டினான்.
ஆனந்த்சாகர் அவனது மொபைலின் தொடுதிரையைப் பார்த்ததும் அவரது முகத்தில் அதிர்ச்சி ஆனந்தம் இன்னதென புரியாத குழப்பமென கலவையான உணர்வுகள் ஒன்று கூடி முற்றுகையிட பேச வார்த்தை வரவில்லை அவருக்கு.
தொடுதிரையில் கிருஷ்ணராஜசாகருடன் சிரித்துக்கொண்டிருந்த சிறுவன் இன்னும் இருபது வருடங்கள் கழித்து அவனுடைய ஜெராக்ஸ் காப்பியாக வருவான் என்று உறுதியாக கூறுமளவுக்கு சிறுவயது கிருஷ்ணராஜசாகரின் அச்சு பிரதியாகத் தெரிந்தான்.
ஆனந்த்சாகரின் கண்கள் கலங்கியது. உணர்ச்சி மேலீட்டால் பேச்சு வராமல் தவித்தார். மொபைலைப் பிடித்திருந்த கரங்கள் மெதுவாக நடுங்கின.
நர்மதா அவரது தோளை ஆதுரமாகத் தொடவும் “நர்மு... இவன்... இந்தப் பையன்... நம்ம...” என வார்த்தையை முடிக்க முடியாமல் கஷ்டப்பட்டார்.
“நம்ம பேரன் அம்ரித்... நித்திலாவோட மகன்”
“என்னோட மகன்” அவசரமாகத் திருத்தினான் கிருஷ்ணராஜசாகர். உடனே அன்னையின் முறைப்பையும் வாங்கி கட்டிக்கொண்டான்.
அன்னை மகனின் பார்வை பரிமாற்றத்தைக் கவனிக்கும் நிலையில் ஆனந்த்சாகர் இல்லை. அவரது கண்கள் இன்னும் மொபைலில் தொடுதிரையில் சிரித்துக்கொண்டிருந்த அம்ரித்தையே நோக்கியது.
மனம் சந்தோசத்தில் நிறைந்து போக கிருஷ்ணராஜசாகரைப் பார்த்தவர் “எவ்ளோ பெரிய சர்ப்ரைஸை குடுத்திருக்க நீ” என்றார் குரல் நடுங்க.
“ஒரு பிள்ளைய பெத்து மூனு வயசுல வளர்த்து அவனுக்கு அம்ரித்சாகர்னு பேர் வச்சு என் முன்னாடி நிறுத்தி நித்திலா குடுத்தாளே ஒரு சர்ப்ரைஸ், அதுக்கு முன்னாடி இதுல்லாம் எந்த மூலைக்கு வரும்பா?”
கிருஷ்ணராஜசாகரின் குரலில் கசப்பு பரவியது.
ஆனந்த்சாகர் அதையும் கவனிக்கும் நிலையில் இல்லை. பேரன் என்ற உறவு கிடைத்த ஆனந்தத்தில் அவர் மனம் திளைத்திருந்தது.
“இவனை நான் பாக்கணும் கிரிஷ்... மருமகளையும் இவனையும் எப்பிடியாச்சும் இங்க அழைச்சிட்டு வந்துடு” என ஆர்வமாகக் கூறினார் அவர்.
“அதுக்கான வேலையில இறங்கிருக்கேன்பா... சீக்கிரமே அம்ரித் நம்ம கூட இதே வீட்டுல இருப்பான்”
எந்த நம்பிக்கையில் இப்படி வாக்களிக்கிறாய் என கேட்க நர்மதாவின் நாக்கு துடித்தது. ஏற்கெனவே கணவருக்கும் மூத்த மகனுக்கும் சிறு சிறு உரசல்கள் நேர்ந்திருந்ததால் சிம்லாவில் நிலவும் சூழ்நிலையை அவர் முன்னிலையில் சுட்டிக்காட்டினால் மீண்டும் முட்டிக்கொள்வார்களோ என்ற தயக்கம்.
எனவே அமைதி காத்தார். ஆனால் மகனிடம் கண்டனப்பார்வையை வீச தயங்கவில்லை. அவனா அந்தப் பார்வையை சட்டை செய்பவன்?
தந்தையின் நெக்குருகிப் போன நிலையைத் தனக்குச் சாதகமாகப் பயன்படுத்திக்கொள்ள அவனுக்குள் இருந்த தந்திரசாலி தூண்டிவிட்டான்.
உடனே மொபைலை எடுத்தவன் அம்ரித்திடமிருக்கும் டேபின் எண்ணுக்கு அழைத்தான். வீடியோ கால் தான்.
அம்ரித்துக்கு அழைப்பை ஏற்கத் தெரியாது. யாராவது உதவி செய்வார்கள் என்ற நம்பிக்கை. ஒருவேளை நித்திலா அழைப்பைப் பார்த்து துண்டித்து விட்டால்?
அந்தக் கேள்விக்கு அவசியமே இல்லாமல் அழைப்பு ஏற்கப்பட்டது. எடுத்ததும் அம்ரித்தின் முகம் தெரிந்தது.
“டாடி”
மழலையின் இறுதிப்பருவத்தில் இருப்பவனின் பேச்சு சற்று திருத்தமாகவே இருக்க ஆனந்த்சாகருக்குச் செவியில் தேன் பாய்ந்தது.
குழலிசை யாழிசையை விட மழலை சொற்கள் இனிதென வள்ளுவர் சும்மா ஒன்றும் எழுதிவிடவில்லை! அதை அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரியும்.
“குட் மானிங் அம்ரு குட்டி”
“குட் மானிங் டாடி... நீங்க எப்ப வருவிங்க?”
“நான் இப்ப தான் சென்னைக்கு வந்திருக்கேன்... வீக்கெண்ட்ல உன்னை பாக்க வருவேன்... அம்ரு கிட்ட தாத்தா பேசணுமாம்”
ஆனந்த்சாகரைப் பார்த்ததும் யாரென புரியாமல் அம்ரித் குழம்பினான்.
“இது யாரு டாடி?”
“இவர் உனக்குத் தாத்தா”
“டாத்தானா யாரு? தேவ் டாத்தாவா?”
குழந்தைகளுக்கே உரித்தான கேள்வி கேட்கும் குணம். ஆனந்த்சாகருக்கு அவனது பேச்சைக் கேட்க கேட்க தெவிட்டவில்லை.
“நோ... அவரில்ல.... உனக்கு நான் டாடி.. எனக்கு இவர் டாடி”
அம்ரித்துக்குப் புரியும்படி விளக்கினான் கிருஷ்ணராஜசாகர்.
“நீங்க உங்க டாடி கூட இருக்கிங்க... நான் மட்டும் தனியா இருக்கேன்”
உதட்டைப் பிதுக்கி அவன் பரிதாபமாகக் கூறவும் மனம் வலித்தது மூவருக்கும். அப்படியே அள்ளிக் கொஞ்சவேண்டும் போல இருந்தது ஆனந்த்சாகருக்கு.
“சீக்கிரமே உன் டாடி உன்னையும் உன் மம்மியையும் இங்க கூட்டிட்டு வந்துடுவான்டா கண்ணா”
வணிகவுலகில் சிம்மச்சொப்பனமாக விளங்கும் ஆனந்த்சாகர் பேரனுக்கு இணையாக கொஞ்சல்மொழியில் பேச கிருஷ்ணராஜசாகருக்கு எதுவோ புரிந்தது போல இருந்தது.
“இல்லா டாத்தா... நித்திம்மாக்கு டாடிய பிடிக்காது”
சோகமாக கூறினான் அம்ரித். ஏன் என்று ஆனந்த்சாகருக்குத் தெரியாதல்லவா! அனைத்தும் கிருஷ்ணராஜசாகரின் திருவிளையாடலால் வந்த வினை என்று நர்மதாவுக்கும் அவனுக்கும் மட்டும் தானே தெரியும்.
“நித்திம்மாக்கு டாடி மேல கோவம் டாத்தா... வரமாட்டாங்க... என்னை விடமாட்டாங்க”
“உன் டாடி எவ்ளோ பெரிய ஆள் தெரியுமா? அம்மாவ சமாதானப்படுத்துவான்”
ஆனந்த்சாகர் உறுதியளிக்கவும் அம்ரித்தின் முகம் மலர்ந்தது. அவர் தொடர்ந்து அவனது டாத்தாவை தாத்தா என திருத்தி அழைக்கவைத்தார்.
பேசிக்கொண்டிருக்கையில் நித்திலாவின் குரல் கேட்டது.
“நித்திம்மா வர்றாங்க... நான் அப்பறமா பேசட்டுமா?” என்று சொல்லிவிட்டு அவன் விக்ரமை அழைத்தான்.
அப்போது தான் அவனை கிருஷ்ணராஜசாகர் கவனித்தான்.
“அப்புறம் பேசலாம் அம்ரு” என்றபடி அவன் அழைப்பைத் துண்டித்தான்.
ஆனந்த்சாகர் அவனை யாரென வினவ “நித்திலாவோட ஃப்ரெண்ட்பா” என்றான் கிருஷ்ணராஜசாகர். மற்றபடி வேறெதையும் அவன் சொல்லவில்லை.
என்ன தான் ஆரியக்கூத்தாடினாலும் காரியத்தில் கண்ணாக சாகர் குழுமத்தில் ஆனந்த்சாகருக்கு இருக்கும் பங்கை பற்றிய பேச்சை எடுத்தான்.
“இப்ப சொல்லுங்கப்பா... சாகர் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீசோட ஷேர்ஸ் பத்தி பேசலாமா?”
நர்மதாவுக்குச் சிரிப்பு வந்தது. விடாக்கண்டனான மகனுக்கும் கொடாக்கண்டனான கணவருக்கும் இடையே நடைபெறப்போகும் வாக்குவாதங்களை காணும் பொறுமை அவருக்கு இல்லை.
“நீங்க பேசிட்டிருங்க... எனக்கு டயர்டா இருக்கு” என அங்கிருந்து ஜகா வாங்கினார் அவர்.
அவர் சென்றதும் தந்தையும் மகனும் பேச ஆரம்பித்தார்கள்.
“நீங்க என் கிட்ட ஷேர்ஸை ஒப்படைக்கலைனாலும் நயனிய கன்சிடர் பண்ணுங்க... சந்தீப் ஷேர்ஹோல்டரா இருக்க கூட எலிஜிபிளிட்டி இல்லாதவனா ஆகிட்டான்”
“உனக்கு ஏன் அவன் மேல இவ்ளோ கோவம் கிரிஷ்?”
ஆனந்த்சாகருக்குக் கடந்த நான்காண்டுகளாக இருக்கும் சந்தேகத்தைக் கேட்டேவிட்டார்.
கிருஷ்ணராஜசாகர் கோணலாகச் சிரித்தவன் “அவன் மேல எனக்கு என்ன கோவம் டாட்? சொந்தமா யோசிக்காம யாரோ ஆட்டிவைக்கிறதுக்கு ஆடுறவன் மேல எனக்குப் பரிதாபம் தான் வருது... அவனை ஆட்டிவைக்கிறவ நிஹாரிகா... யூ.எஸ்கு அவங்க ட்ரீட்மெண்டுக்காக போகலப்பா” என்றான்.
ஆனந்த்சாகர் அதிர்ந்து போனார். சற்று முன்னர் கூறியிருந்தால் நம்பியிருக்கமாட்டார். பேரனைக் கண்ணில் கண்ட மகிழ்ச்சியில் இருப்பவருக்கு மூத்தமகனின் வார்த்தைகள் மீது நம்பிக்கை பிறந்தது.
“எப்பிடி சொல்லுற கிரிஷ்? உன் கிட்ட சந்தீப் பேசுனானா?” என வினவினார்.
“அவன் கிட்ட தேவையில்லாம பேசலப்பா... நயனிய பாக்குறதுக்காக அவனும் அவன் ஒய்பும் அவளோட வீட்டுக்குப் போனப்ப அந்தப் பொண்ணு லூஸ் டாக் விட்டுட்டா... அதை நயனி எனக்குக் கால் பண்ணி சொன்னா”
“என்ன சொன்னா நிஹாரிகா?”
“சாகர் குரூப் ஆப் இண்டஸ்ட்ரீஸ்கு சந்தீப்பை ராஜா ஆக்குறதுக்கு அவ போராடுறாளாம்... அதுக்குத் தான் யூ.எஸ் வந்தோம்னு பேச்சுவாக்குல உளறிட்டானு நயனி சொல்லுறாப்பா... நீங்க என்னை நம்பலைனா பரவால்ல, நயனிய நம்புவிங்க தானே?”
ஆனந்த்சாகர் நெற்றியின் தசைகள் சுருங்க புருவங்கள் சுழிக்க யோசனையில் ஆழ்வதைப் பார்த்துவிட்டு கொளுத்திப்போட்ட விவகாரம் மெதுவாக பற்றி எரியப்போகிறது என்று மனதிற்குள் சிரித்துக்கொண்டான் கிருஷ்ணராஜசாகர். உணர்ச்சிப்பூர்வமாகப் பேசும் போதும் காரியம் சாதிக்க நினைக்கும் போது மட்டும் ‘டாட்’ இல்லாமல் ‘அப்பா’ என்பான் அவன்.
யோசிக்கட்டும்! யோசித்து சாகர் குழுமத்திற்கு தலைமை தாங்க ஏற்றவன் யாரென முடிவெடுக்கட்டும்! எப்படியும் தனக்குச் சாதகமாகத் தான் அவர் முடிவெடுக்கவேண்டும்!
இறுமாப்பும் கர்வமுமாக எண்ணிக்கொண்டான் கிருஷ்ணராஜசாகர். அதற்காக இன்னும் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வதற்கு அவன் தயார். இதோ அம்ரித்திடம் வாரயிறுதியில் சிம்லாவுக்கு வருவதாக வாக்களித்தான்.
ஆனால் அவன் செல்லப்போவதில்லை. அவனை அம்ரித் தேடவேண்டும். தேடி நித்திலாவை தொந்தரவு செய்யவேண்டும். அந்தத் தொந்தரவு விஸ்வரூபம் எடுக்கும் போது தந்தையுடன் செல்ல அனுமதிக்காத நித்திலா மீது கோபமாக உருவெடுக்கவேண்டும். அப்போது தானே அவன் போட்டிருக்கும் திட்டங்கள் ஒவ்வொன்றாக நிறைவேறும்.
மைந்தனின் மனம் ஏமாற்றத்தில் தவிக்குமே என பாசக்காரத்தந்தையின் மனசாட்சி அறிவுறுத்தியது.
அந்த தந்தையின் ராஜதந்திர மூளையோ “ஆண்பிள்ளை ஏமாற்றத்தைப் பழகிக்கொள்வது நல்லது தான்; அதிகாரம் கைக்கு வரவேண்டுமாயின் செண்டிமெண்டைத் தூக்கி ஓரமாக போடு” என ஆணையிட்டது.
இறுதியில் மூளையின் ஆணைக்குக் கட்டுப்பட்டான் பிசினஸ்மேனான கிருஷ்ணராஜசாகர்